“எப்டி இருக்கிங்க சித்தி,
இப்பதான் படிச்சேன்....... பாருங்க இந்த தொளசி செடியும் அரச மரமும் 24 மணி நேரமும்
ஆக்சிஜனை குடுத்துகிட்டே இருக்குமாம்” அக்கா பெண் ராணி........ என்னைப்போலவே ஒரு பசுமை
விரும்பி.....பச்சிலை சமையல் விரும்பியும்...!
சூரிய வெளிச்சம் இருக்கும்போதுதான்
மரங்கள் பொதுவாக ஆக்சிஜனைக் கொடுக்கும். இந்த அரச மரமும் துளசிச் செடியும் 24 மணி நேர ஆக்சிஜன் வழங்குதல் வெகு ஆச்சரியமான ஒன்றுதான்!
ராணி அனுபவித்த ஆச்சரியத்தைப் போலவே மற்றுமொரு ஆச்சரியத்தை நாங்கள் சிங்கப்பூர் போன
புதுசில் ஒரு நாள் பேப்பர் படிக்கும்போது நான் அனுபவித்தேன்
“மரங்களை வெட்டியவர் மீது அரசுநடவடிக்கை” என்ற தகவலின்
கீழ் சில மரங்களை வெட்டிய அவருக்கு இரண்டரை லட்ச ரூபாய் அபராதத்தொகையும் வெட்டிய மரங்களுக்கு ஈடாக அதைப்போல்
இருமடங்கு மரங்களை வேறொரு இடத்தில் நடுவதற்கும் அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது!!
“மரம் வெட்டினவனுக்குத்தான் இங்கன பைசா குடுப்பாங்க....
வெட்டினதுக்கு எவனாச்சும் அபராதம் குடுப்பானா என்ன?”என்பது நம்மூரின் பொது நியதி
நம்ம ஊரில் தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் மாதிரி
கோடாலியை எடுத்தவனெல்லாம் மரத்தை வெட்டலாம் என்ற நிலை.
‘எக்கேடு கெட்டால் நமக்கென்ன?”
என்று பொதுவாக ஒதுங்கிவிடுபவர்கள் தான் மெஜாரிட்டி
என்னை மாதிரி யாராவது ஒன்றிரெண்டு
கேனங்கள் “ என்னாப்பா ஏன் மரத்த வெட்டுற யாரு ஒனக்கு அதிகாரம் குடுத்தா” என்று துணிந்து
கேட்டுவிட்டால் போயே போச்சு....... வாய் நிறைய கெட்ட வார்த்தையுடன் “இன்னாம்மே இது
ஒன் அப்பன் ஊட்டு சொத்தா....... போய் வேலயப்பாப்பியா....... நாயம் பேச
வந்துடுச்சு பாரு....... போ....போ போ” என்ற புத்தி மதியோடு நடு ரோட்டில் அவமானப்படுத்தப்
படுவது நிச்சயம்
மரங்கள்....!!!! அவை கர்ணக்கொடை
வள்ளல்களே. ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு ஆக்சிஜனை சுவாசிப்போம்? 3 சிலிண்டருக்கு மேலே!!
ஒவ்வொரு ஆக்சிஜன் சிலிண்டர் விலை குறைந்தது ரூ. 700. அப்படியானால் ஒரு நாளைக்கு ரூ 2,100 ! ஒரு மாதத்திற்கு
கணக்குப்பார்த்தால் ரூ. 63,000, வருடத்திற்கு ரூ. 756,000. மனிதனின் சராசரி வயது
70 என்று வைத்து கணக்குப்போட்டுப்பாருங்களேன்.......... வாழ் நாள் பூராவுக்கும் நாம்
சம்பாதிக்க முடியாத ரூ 52,920,000 ஒரு தொகை இயற்கையின் இலவசம் நமக்கு!.......... நம்
ஒவ்வொருவருக்கும்..........!!!
மரங்கள் மீது விழிப்புணர்வு
கொண்டிருப்பவர்களைப்பார்த்தால் என்னுள் சந்தோஷம் பெருகித்தான் போகிறது.
சமீபத்தில் அந்த சந்தோஷம் நெருங்கிய
நண்பர்கள் ஏற்காட்டில் கட்டியிருந்த வீட்டிற்குப்போகையில் கிடைத்தது. ஏரியும் காடுமாய்
இருந்த ஏற்காட்டை கட்டிடங்களும் பேருக்கு நடுவில் ஒரு ஏரியுமாய்த்தான் நண்பர்களோடு
சென்ற ஒரு பிக்னிக்கின் போது பார்த்திருக்கிறேன். நம் நண்பர்களும் அவர்கள் பங்கிற்கு
ஒரு கட்டிடத்தை ஏரிகாட்டிற்கு அன்பளித்திருப்பார்களோ........ மனதிற்குள் ஒரு சின்னதாய்
ஐயம்.....
ஆனால் அவர்கள் வீடோ 56 ஏக்கர்
கொண்ட "ஒயில்டு ஆர்கிட்" என்ற இடத்தில் அமர்ந்திருந்தது
56 ஏக்கர் கொண்ட அந்த ஒயில்டு
ஆர்கிட்டை கற்பனை செய்தவர் ஒரு லட்சியவாதி என்பதில் எனக்கு சந்தேகம்எதுவுமில்லை!
அங்கு இடம் வாங்குபவர்ளும்
அரிய பிறவிகளாகத்தான் இருக்கமுடியும். இல்லாவிடில்
முண்டு முடுக்கெல்லாம் சேர்த்து வீடாக்கிக்காட்டும் இந்தக்காலத்தில் நீங்கள் வாங்கும்
10,000 சதுர அடியில் நான்கில் ஒரு பங்கு நிலத்தில்தான் வீடு கட்டலாம் மீதி முக்கால்
பங்கில் மரம் செடி கொடி வளர்க்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்படுவார்களா என்ன? இந்நிபந்தனைக்கு
உட்பட்டு இடத்தைவாங்கி மேம்படுத்தி மரங்களை நட்டு அழகிய முன் தோட்டம் ஒன்றை கண்ணுங்கருத்துமாய் வளர்த்து வளப்படுத்தி ரசித்து
நிற்கும் எங்கள் நண்பர்கள் ராம் பிரபாவுக்குத்தான் எவ்வளவு உயர்ந்த சிந்தனை!!
மரங்கள் மீது நீங்காப்பற்றுடைய
இந்த இளைஞன் விற்றது போக மற்ற இடங்களில் மரங்கள் இன்னும் மரங்கள்........ இன்னும் செடிகள்.......
புதுமைகள் செய்வதை நிறுத்துவதாக
அவருக்கு உத்தேசம் ஒன்றும் இல்லை!!
தொங்கும் தோட்டம் போட முயன்ற
அவரது முயற்சி அழகான ஒன்றாய் உருவெடுத்து சரித்திர காலத்து நெபுச்சார் நெசாரின் தொங்கும்
தோட்டத்தை நம் நினைவில் நிறுத்துகிறது! எல்லா நவீன வசதிகள் இருந்தும் இயற்கை அன்னையின்
பசுமையான மடியில் படுத்திருப்பது போன்ற உணர்வைமட்டுமே கொடுக்கவல்லது அந்த ஆச்சரியமான
ஒயில்டு ஆர்கிட்!
சில வருடங்களுக்குமுன் இங்கிலாந்தின் நார்விச்சில் தங்கியிருந்தோம். நாங்கள் இருந்த ப்ளூ
பெல் தெருவின் இருமருங்கிலும் ஹார்ஸ் செஸ்னட் மரங்கள்.... காய்க்கும் காலத்தில் மரத்தின் இடுப்பு ஒடிந்து போகுமளவிற்கு மரங்கொள்ளா காய்கள்! கீழேவிழும் காய்களை பள்ளி மாணவர்கள்
பொறுக்கி தூக்கியெறிந்து விளயாடுகையில் அந்தக்காய்கள் ரோட்டில் செல்லும் வாகனங்கள்
மீது விழ ஓட்டுனர்கள் “வண்டி ஓட்டுகையில் எங்கள் கவனம் சிதறிப்போகிறது இதனால் விபத்துக்கள்
நேர வாய்ப்புகள் அதிகம். ஆகவே நகர கவுன்சில்
இந்த மரங்களையெல்லாம் வெட்டிவிட வேண்டும்” என்ற வேண்டுகோளை முன் வைத்தனர். சீர் தூக்கிப் பார்த்த
நகர கவுன்சில் மரங்களை வெட்ட முடிவு செய்து ஒரு நல்ல நாளில் ஆள் படை ஆயுதங்களோடு தெருவிற்கு
வந்தவிட்டனர். சேதி அறிந்த தெரு மக்கள் ஒருவர் ஒருவருக்கு செய்தியைத்தெரிவித்து மரங்களை
சுற்றி ஒருமிக்க கூடி நின்று தடுத்தனர். “மரங்கள் காய்த்து நிற்பது அவற்றின் செழுமையை
காட்டுகிறது. மாணவர்கள் எறிகிறார்கள் என்றால் அது ஒழுங்கு குறித்த ஒரு விவகாரம். இந்தப்
பிரச்சினையை பள்ளிக்கு எடுத்துச்சென்று முடிவு காணுங்கள். இதற்காக எங்கள் மரங்களைக்
கொல்லாதீர்கள்.” என ஓரே குரலில் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். இந்த எதிர்ப்புக்குமுன்
வெட்ட வந்த குழு திரும்பித்தான் போக வேண்டியிருந்தது!
அவர்கள் தெருவின் அழகான மரங்கள்
இன்னும் காய்த்து குலுங்கி இன்றும் களி நடனம் புரிந்து கொண்டேதான் இருக்கின்றன!!
2014 நவம்பர் மாதத்தில் கடும்
மழை காற்று. இதன் காரணமாக சென்னை உயர் நீதி மன்றத்தின் முதன்மை நீதிபதியின் வீட்டு
காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்துவிட்டது. பாதுகாப்பை முன்னிட்டு பொதுப்பணித்துறை
உடனடியாக வேலையைத்தொடங்க ஆரம்பித்தது காம்பவுண்டு சுவற்றை கட்ட வேர் ஓடிய ஆறு மரங்களை
எடுக்க வேண்டிய சூழ் நிலை. இந்தத் தகவலை அறிந்த நீதிபதி அவர்கள் “இங்கு நிற்கும் மரங்களில்
ஒரு மரம் கூட வெட்டுபடக்கூடாது.அந்த
மரங்ளைச்சுற்றி காம்பவுண்டு எழுப்புங்கள் அது கொஞ்சம் கோணலாய் இருப்பதால் பாதகம் ஒன்றுமில்லை”
எனத் தெளிவாகக் கூறிவிட்டாராம்!!
“ஐயா உங்களைப்போல் உயர் பதவியில்
இருப்பவர்கள் மரங்களின் மீது ஈடுபாடு காட்டினால் அச்செய்தி விளம்பரப்படுத்தப்படும்.
உங்கள் முன்னுதாரணத்தை பலரும் பின் பற்ற இது ஏதுவாக இருக்கும் நன்றி ஐயா” மனதிற்குள் சத்தமாய் சந்தோஷமாய் சொல்லிக்கொண்டேன்
எங்கள் பள்ளி கிரியாவுக்குச்செல்கையில்
நான் பிள்ளைகளுக்கு மரங்களைப்பற்றிய புள்ளி விவரங்களைக் கூற மறப்பதேயில்லை.
”கட்டிடம் தெரியாமல் மரங்கள்
இப்பள்ளியில் இருக்க வேண்டும்” என அங்கு பணிபுரியும் நிர்வாகப்பொறுப்பாளர் ஜான் பீட்டர்
வெறியாகவே நிற்கிறார். ஞாயிறு மதியத்திற்கு மேல் நீங்கள் பள்ளிப் பக்கம் சென்றால் அவர்
செடி நட்டுக்கொண்டு இருப்பதை கட்டாயம் பார்க்கமுடியும்!
தமிழில் ஒரு பழமொழி உண்டு,
“ஒரு பொய்யைச்சொல், அதைத் திரும்பத் திரும்பச் சொல், அது மெய்யாகிவிடும்”
நானோ “மரங்களைப்பற்றிய உண்மையைச் சொல்லுவேன், அதைத்
திரும்பத் திரும்பச்சொல்லுவேன் நாம் அனைவரும் மரப்பிரியர்கள் ஆகும் வரை சொல்லிக்கொண்டேதான்
இருப்பேன்!!!”

மழை என்ற தன் சிசுவை வயிற்றில் சுமந்து செல்லும் கருத்தமேகங்கல்
ReplyDeleteகுழந்தையை பூமிக்கு ஈர்க்க வரும் படிகள்தான் மரங்கள்
என்பதை ஒரு காட்டு வாசி கூறுவான்...
சூல்கொண்ட மேகங்கள்
கால் கொண்டு இறங்கிவர
மரங்களே மரகதப் படிகளாம்.
வைரமுத்துவின் அழகு கவிதை! இந்தப் பகிர்வுக்கு நன்றி ராம்!
ReplyDeleteமரங்களைப் பற்றிய ஓர் அருமையான கட்டுரை. எங்கள் பெருமை மிகு WILD ORCHID பற்றி கூறியதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteவாங்கிய நிலத்தின் நடுவே மரங்கள் இருந்தால் ஒரு மரம் கூட வெட்டப்படாமல் வீடு கட்டப்பட வேண்டும் என்பது Wild Orchid ன் அன்பு கட்டளை. ஒரு வீட்டின் கூடத்தின் நடுவில் அழகான ஒரு மரம் இருக்கும்.
மரம் வெட்டுபவர்களைக் கண்டால் பொது மக்கள் வெகுண்டெழ வேண்டும்.
1996ல் நாங்கள் சென்னை புறநகர் பகுதியில் நாங்கள் வீடு கட்டும் போது அனைவரும் தேக்கு மரங்கள் நட்டால் 25 வருடங்கள் கழித்து வெட்டிக் கொடுத்தால் நல்ல பணம் கிடைக்கும் என்றனர்.
25வருடங்கள் குழந்தை போல வளர்த்து விட்டு அதை வெட்ட எப்படி மனசு வரும். அதனால் தேக்கு மரம் வேண்டாம் என்று எங்கள் 10 வயது மகன் கூறியதை மதித்து தென்னை மரங்களும் மாமரங்களும் மட்டுமே நட்டோம். அவை இன்றும் உள்ளன.
அனைவரையும் மரப்பிரியர்கள் ஆக்குவதற்கு வாழ்த்துக்கள்.
மரங்களைப்போற்றும் அருமையான கட்டுரை .
ReplyDeleteசில மரமண்டைகளுக்கு உறைத்தால் நலமாக இருக்கும் .
மேடம் நீங்கள் குறிப்பிட்ட இடங்களின் சில புகைப்படங்களை இணைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் .