போன ஜென்மத்தில் நான் ஒரு மோப்ப நாயாக இருந்திருக்கலாம். இந்த ஜென்மத்தின் முக்தியிலும் விட்ட குறை தொட்ட குறையாக ஏதோ ஒரு பழைய குணம் தொற்றிக் கொண்டிருக்கிறது. மார்ச் மாசத்தொடக்கம்......சாய்ங்கால டீயைத்தூக்கிக்கொண்டு வழக்கம் போல மொட்டைமாடிக்குப் போகிறோம்.
"நல்ல வாசன வருதுப்பா" மோப்பம்!!
" வெள்ளிக்கிழம... யார் வீட்டிலயாச்சும் ஊதுவத்தி கொளுத்தியிருப்பாங்க..." இவர் சொல்லுகிறார்.
பேசிக்கொண்டே மாடியின் கடைசிக்கு நடக்கிறோம்....... பின் வீட்டு வேப்ப மரக்கிளை புத்தம் புதிய நட்சத்திரப் பூக்களோடு வளைந்து எங்களுக்கு வணக்கம் கூறியது. இது தொடக்கந்தான்.......... வெறியேற்ற வைக்கும் வாசனையோடு ஏப்ரல் கடைசியில் வேப்பம் பிஞ்சு எடுக்கும் வரை இதுகளின் கொண்டாட்டம் எமக்குந்தான்!
பல வருடங்களுக்கு முன் டெல்லி சென்றிருந்தோம்.அது மே மாதம்.
ஏர்போர்ட்டிலிருந்து ஹோட்டலுக்கு வாடகைக்கார். போகும் வழியில் காரின் ஏசி நின்று போனது. ஆஹா டெல்லியின் வரட்டு உஷ்ணத்தில் மாட்டிக்கொள்ளப்போகிறோம் என்ற கிலேசத்தோடு காரின் சன்னல்கள் திறக்கப்படுகிறது. ஆனால் எந்த மாமன்னன் அச்சாலையின் இருமருங்கிலும் வேப்ப மரங்களை நட்டு வைத்து புண்ணியம் கட்டிக்கொண்டானென்று தெரியவில்லை வெளி வெப்பத்துக்குமேல் வேப்பம் பூக்களின் மணம் கிறங்க வைத்த சுகத்தில் கிலோமீட்டர் கணக்கில் அது தொடர்ந்து வேறே
வந்ததில் வெயிலாவது வெப்பமாவது........!! இறக்கிவிட்ட கார் டிரைவர் " வாடகையில் கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்... ஏசியில்லாமல் நீங்கள் பயணம் செய்ய வேண்டியதாய் போயிற்று என்று கைகட்டிக் கூறினார். ஆனால் வாடகைக்கு மேல கிடைத்த போனசை அவரால் செரிமானம் பண்ண முடியவில்லை.ஒரு சின்ன விவரம் தந்ததில் அவர் புருவம் வில்லாய் வளைந்து போனது........ ஆஹா.... இப்படிகூட சில பிரகிருதிகளா!!!!
அதே டெல்லியில் நண்பர் ஒருவர் காலை வாக்கிங்கிற்கு எங்களை புத்த ஜெயந்தி பார்க்கிற்கு கூட்டிப்போனார். நம்ம ஊரில் பவழமல்லி மரம் பார்த்திருப்பீர்கள் குட்டை மரத்தில் வெள்ளைப்பூக்கள் சிகப்பு ஆரஞ்சு காம்போடு........ அது சாயங்காலமே வாசனையை அள்ளி வீச ஆரம்பித்துவிடும்..... வீட்டுக்கு ஒரு மரந்தான் நம் நியதி...... பூக்கள் பூசைக்கு ஆகும். ஆனால் பார்க்கிற்குள் நுழைந்த அந்த நொடியிலிருந்து பவழமல்லியின் தாக்குதல் எங்களைத் திக்குமுக்காட வைத்தது....... வேலி வேலியாக... படல் படலாக.... நின்றிருந்த பவழமல்லி மரங்களின் அணி வகுப்பு.......... உள்ளே நுழைபவரெல்லாம் சுகமே பெற்று வாழ வேண்டும் என வாழ்த்துதல்களை வழங்கி...... மலர்கம்பளம் வேறே விரித்து சுகம் பரப்பி நின்றன!!
எங்கள் வீட்டிலும் ஒரு பவழ மல்லி மரம்......அது இரவெல்லாம் மணம் பரப்பி நிற்கும் பெரும் ஊதுவத்தி... விடிந்து விட்டாலோ என் மாமனாரின் கலைப்பொருள்...... பூக்களை சேர்ப்பதிலிருந்தே அது ஒரு கலைதான்.. ரெண்டுபேர் ஒரு துணியை மரத்திற்குக்கீழ் விரித்துப்பிடித்துக்கொள்ள மற்றொருவர் உலுக்கிவிட பூக்களின் குவியல் அவர்கள் கைவசம். பிறந்த நாள், கலியாணம், கலியாண நாள் இப்படியாக எல்லா விசேஷங்களுக்கும் அப்பூக்கள் சாமி மாடத்தில் வாழ்த்துதல் கூறி நிற்கும்... மாமாவின் சொந்தமும் சுற்றமும் மிகப்பெரிய வட்டமாதலால் வருடம் முழுவதும் எங்கள் சாமி மாடம் கலியாண வீட்டின் முகப்புதான்!!
2015 சென்னை வெள்ளத்தைத் தாங்க முடியாமல் அது பட்டுப்போனது எங்களுக்குப்
பெரிய சோகந்தான்.
இதே கால கட்டத்தில் வீட்டிலிருந்து ஞாயிறு காலை கோயிலுக்கு நடக்கையில் பெசண்ட் நகரின் எம்.ஜி ரோட்டின் வேப்பம் பூக்கள் மட்டுமல்ல, முடி போன்ற வெள்ளை ரோஸ் நிற வாகை மரப் ( தூங்கமூஞ்சி மரம்)பூக்களின் மணமும் கூடே சேர் ந்துகொண்டு கிறங்க வைக்கும். இந்த கிறங்கல் பெரிய பிளாட்பாரத்தை அடைத்துக்கொண்டு நிற்கும் ஆட்டோ கார் மற்றும் டிரான்ஸ்பார்மர்களின் இடைஞ்சல் மற்றும் சென்னை நகரப் பேருந்துகள் கக்கும் புகை நாற்றம் அனைத்தையும் மறக்க வைக்க வல்லது என்பது நிஜத்திலும் நிஜம்!
மழைக்காலம்...... திருச்சியில் நம் பள்ளியில் இறங்குகிறோம்....... மரமல்லிப்பூக்கள் மணத்தால் கட்டியம் கூறின.....( மரப்பிரியர் தங்கை கணவருக்கு நன்றி) குஞ்சும் குளுவான்களும் வெராண்டாவை நிறைத்து 'கருமமே கண்ணாயினார்' என வழக்கமான குட்மார்னிங் கூட சொல்லாமல் காரியத்தில் லயித்துப்போயிருந்தன! கேஜியின் அந்த ஒவ்வொரு குழந்தையின் பக்கத்திலும் மரமல்லியின் சிறு குவியல்கள். அதுகள் இஷ்டத்திற்கு பூவில் டிசைன் பண்ணிக்கொண்டிருந்தன!..... ஊம்.. குடுத்து வைத்த குளுவான்கள்...!! கை கட்டி ஏபிசிடி மற்றும் ஒன் டு ஹன்ரட் ஒப்பிக்காமல்...... பா பா பிளாக் ஷீப் பாடாமல் சொந்தத் திறமையின் வாய்க்காலில் அன்று சுகமே நீந்திக்கொண்டிருந்தன!
!
கோடை விடுமுறை.. மே மாதம்.... இடங்கண்ணி போயிருந்தோம்... வெயிலடித்தாலும் வேர்க்குரு அள்ளிக்கொட்டினாலும்,,,,,, அதுவே எங்கள் ஊட்டி,,,,, சொந்தம் சுற்றம் கூடும் நன்மாதம். கோயில் நிறைய...கூட்டம் இருக்கும் சமயம் .... சேர்ந்து பாடும் அழகான மாதா பிரார்த்தனை.... குண்டானை நிறைத்து பீடத்திற்கு முன்னால் வைக்கப்படும் பயிரு வகையறா ஒவ்வொரு வீட்டின் தினசரி உபயத்தின் வாசனை .. கோயில் மாப்பு.... சிறு அரட்டை..... ம்ம்ம்ம்ம்........
போன அன்று இரவு ஓட்டின வலி தீர டிரைவர் மீரான் தெக்கித்து காத்து சுகம் வேண்டி திண்ணையிலேயே கட்டையை நீட்டிவிட்டார்.
அடுத்த நாள் காலை " மேடம் ஒங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்..."
ஒடம்பு கிடம்பு சரியா இல்லியோ?
"மேடம் வீட்டுக்குள்ள பேய் இருக்குங்க........"
"அப்பா... சந்தன மாதா பேய் பிசாசு ஒண்ணும் ஒங்கள அண்டாம இருக்குமுண்ணு எங்க பூட்டன் பூட்டிக்கு வாக்கு குடுத்துருக்காங்க... அந்த சேதி ஒனக்குத்தெரியுமா..?"
" மேடம் கண்ணால பாத்தங்க... நடுச்சாமத்துல கண்ண முழிக்கிறன்..... ஒரே மல்லியப்பூ வாசன..... அப்ப சடக்குண்ணு ஒரு வெள்ள உருவம்....... வீட்டுக்குள்ளேருந்து பாஞ்சு வெளிய ஓடுது..... எனக்கு பிராணனே பொயிருச்சு... விடியிற முட்டும் தலயோட இழுத்துபோத்திகிட்டு அந்த மல்லியப்பூ வாசனயோட நான் அப்டியே ஒறஞ்சு போயி கெடந்தது அந்த சந்தன மாதாவுக்குத்தான் தெரியும்."
யோஜனை செய்கிறேன்...... இட்டுக்கட்ட வேண்டிய அவசியமே இல்லை.....சொல்லுவதில் ஏதோ விஷயம் இருக்குமோ....?
திக்கித்து போவதற்கு பதிலாக என்னிடமிருந்து சிரிப்பு......
"பொய் சொல்றண்ணு நினைக்கிறிங்களா..மேடம்?
" ச்சேச்சே.... நீங்க எதுக்குங்க பொய் சொல்லுணும்...? நேத்து ராத்திரி வெளிய கட்டில்ல காத்து வாங்கிட்டு நாங்க படுக்கறத்துக்கு போம்போது இவுரு தம்பி பையன் எங்ககிட்ட படுத்துகிணுமுண்ணு கூடயே ஒட்டிக்கிட்டு ஒடியாந்தானே.... கவனிச்சிங்களா........ நீங்க...?.."
"ஆமா மேடம் சந்தோஷமா எனக்கு குட் நைட் கூட சொன்னான்."
"அவனேதான்... நடுச்சாமத்துல பையனுக்கு அம்மா நெனப்பு வந்துருச்சு... எங்காதுல குசுகுசுத்துட்டு ஒரே ஓட்டம்...... அவன் என்னா சட்ட போட்டுருந்தான் பாத்திங்களா..?
"தெரியிலிங்களே..."
"வெள்ள சட்ட......இப்ப எல்லாம் புரியுதா ஒங்குளுக்கு......?"
"அது சரி மேடம்........." தலையைச்சொறிந்த அவர் "இந்த மல்லியப்பூ வாசன.......சுத்தி ஒரு மல்லியப்பூ செடியோ கொடியோ இல்ல பாருங்க......."
" அண்ணாந்து பாருங்க மீரான்......"
உயரமாக வளர்ந்து கிடந்த நொணாமரம்... அழுத்தமான குட்டி நட்சத்திரப்பூக்களோடு சிரித்து நின்றது.......!!
" ரொம்ப ஒஸ்தியான மல்லிகைப்பூவையெல்லாம் தூக்கி அடிக்கிற வாசன நம்ம கிராமத்து நொணா மரத்துகிட்ட இருக்குங்க..... என்னா ஒண்ணு....... இதப்பறிச்சு கட்டி தலையில வச்சுக்கத்தான் முடியாது...... பறிக்கிறதுக்குள்ள பூ அழிஞ்சு பொயிரும்..."
அன்று இரவு அதே திண்ணையில் தெக்கித்தி காத்தோடு நொணாவின் மல்லியப்பூ மணத்தில் அருமையான கனவுகளோடு மீரான் நிம்மதியாக தூங்கினார்!

No comments :
Post a Comment