Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Saturday, 9 July 2016

சீம்பாலும் சீஸும்

எடங்கண்ணியில மாடு கண்ணு போடுறத பாக்குறது கொளத்துல குளிக்கிற மாதிரி ஒரு சுவாரசியமான விஷயம்... அப்பல்லாம் வீட்டுக்கு வீடு ஆடும் மாடும் கண்ணும் கொட்டாய் நெறயா கெடக்கும். ஒரு வாண்டுக்கு சேதி கெடச்சிட்டா போதும் ஊரே டமாரந்தான்! டாண்ணு அந்த வீட்டுக் கொட்டாயில ஆஜராயிடுவோம்! கிடேரி கண்ணு போட்டுட்டா அந்த வீடே கலகலப்பாயிரும்.... அடுத்த பசுமாடு தயாராயிடுச்சில்ல..! காள கண்ணு...? பரவாயில்லதான்..... வயலுக்காச்சும் ஆவும்! இந்த கண்ணு போடுற நிகழ்ச்சியில நான் பாதியோட அம்பேல் ஆயிருவேன். கசகசண்ணு  தட்டுத்தடுமாறி கிட்டு நிக்கிற கண்ணுக்குட்டிய கண்டவொடனே கண்காணாத எடத்துல போயி ஒளிஞ்சிடுவேன்.ஏண்ணா கண்ணு போட்டவொடன கறக்குற சீம்பால கடுவம் பண்ணி பிள்ள குட்டிகளுக்கெல்லாம் குடுக்குறது  அங்க ஒரு பழக்கம். அம்புட்டும் சத்தாம்! நல்ல மாட்டுக்கு ஒரு சூடுண்ண மாதிரி கட்டியும் முட்டியுமா இருக்க அந்த சீம்பாலக்குடிச்சிட்டு  நான் வாந்தி எடுத்து பட்ட பாடு எனக்கில்ல தெரியும்.
கும்பகோணத்துல அப்பா ஸ்கூல்ல  வாத்தியாரா இருந்தாங்க. பள்ளிகூடத்துல ஏதும் பிரச்சனைண்ணா 'கூப்பிடு மெக்கேல்சாமி வாத்தியார' என்ற அளவுக்கு சீர் தூக்கி இருந்தவங்க. அவுங்க கொணத்தக்கேள்விப்பட்ட கர்மேல் மடத்து அம்மாங்க (மடத்துக்குள்ளயே வசிக்கிறவங்க) அப்பாவ ஒரு ஆத்திர அவசரத்துக்குக்கு வெளிய போவணும் கொள்ளுணுமுண்ணா கூப்புட்டுக்குவாங்க. அப்ப தலமையா இருந்த அம்மாங்க  பெல்ஜியத்துக்காரங்க. கொஞ்ச நாளிலயே அப்பா அங்க இன்றிமையாத நபரா ஆயிட்டாங்க. அப்பா இந்த வேலைகள கடவுளுக்குச் செய்யிற தொண்டாதான் நெனச்சாங்க. பெல்ஜியத்திலேருந்து அப்ப மடத்துக்கு திங்கிற சாமான் நெறையா கப்பல்ல வரும். சூயஸ் கால்வாய் தொறந்திருந்த அந்த சமயத்துல கப்பல் போக்குவரத்து துரிதமா இருக்கும். சாமாங்களும் கெட்டுப்போவாம சீக்கிரம் கைக்கு வந்துரும். அதுல ஒரு பங்கு பெரிய குடும்பமான எங்களுக்கும் வர ஆரம்பித்தது. சாக்லேட்டே என்னாண்ணு தெரியாத அந்த வறுத்த மள்ளா கொட்டை காலத்தில்  நீட்டு நீட்டா சாக்லேட், பால் பவுடர் பல்கர் போன்றவை அப்பாவின் சேவையை முன்னிட்டு வரும். ஃபிரிஜ் இல்லாம ஏற்கனவே கொழகொழண்ணு வந்திருக்க அந்த ஒஸ்தி சாக்லேட்ட ஒடனடியா ஒரு வழி பண்ணிடுவோம். தீனி இல்லாத நாட்கள்ல பால் பவுடரை கையில கொட்டி நக்கிற வேண்டியதுதான்! ஒரு நாள் அப்பா இந்த மாதிரி தெரிஞ்ச அயிட்டங்களோடு இன்னொரு அயிட்டமும் கொண்டாந்தாங்க. நல்லா கெட்டியா லேசான மஞ்ச கலர்ல........வெள்ளத்தாள்ல சுத்தி........  நீண்ட சதுரமா இருந்துச்சு.  வெண்ணையா இருக்குமோ யோஜன பண்ணிப்பாத்தோம்..... இல்ல... ஏதாவது பால் ஸ்வீட்டோ ......? லேசா வாயில வச்சுப்பாக்கிறேன்......  ஒரே உப்பு..... கூடவே ஒரு சீம்பால் நாத்தமும்...... எடங்கண்ணியிலயாச்சும் சீம்பாலோட நாட்டு சக்கரைய போட்டு குடுப்பாங்க. அந்த ஊர்ல சீம்பாலோட உப்பு போட்டு கடுவம் பண்ணுவாங்களோ....? யப்பா... இந்த தொந்தார்த்தமே நமக்கு வேணாம்... ஆனா மதர் நமக்கு  நல்ல பொருளத்தான் அனுப்பிச்சிருப்பாங்க... இத குப்பயிலயும் தூக்கி போடக்கூடாதுண்ணு நாங்க கொழம்பி போயிருக்கையில தெய்வமே சொன்ன மாதிரி தெருவிலேருந்து ராப்பிச்சக்காரன் சத்தம்..... நாங்க ஒரே மனசா வெள்ல பேப்பர்ல சுத்தி வந்த அந்த உப்பு சீம்பால அவுருகிட்ட பவ்யமா குடுத்துட்டோம்! இருந்தாலும் அவுரு அத என்னா பண்ணுராண்னு பாக்க மனசு அடிச்சிக்குத..... எங்க வீடு தெருவில கடைசி வீடு. கொஞ்சம் தள்ளி ஒரு வாய்க்கா ஓடும் அங்கதான் ராப்பிச்சை உக்காந்து சாப்பிடுவாரு..... அண்ணந்தான் எங்க கும்பல்ல துணிஞ்ச ஆளு... மொள்ளமா அவுரு பின்னாலயே போயி ஒளிஞ்சி நிண்ணுகிட்டாங்க..... ராப்பிச்சை ரொம்ப ஆவலா பொட்டணத்த பிரிச்சாராம்... பிச்சு பாத்து, மோந்து பாத்து வாயில வச்சவரு காரித்துப்பிபிட்டு அந்த பொட்டணத்தை தண்ணிக்குள்ள கடாசி எறிஞ்சிட்டு  நம்மள எல்லாம் திட்ட ஆரம்பிக்கவும்  பயந்து போன அண்ணன் இருட்டோட இருட்டா ஒண்டிகிட்டு வீட்டுக்கு ஒடியாந்துட்டாங்க!
இந்த உப்பு சீம்பால ஒட்டிய இன்னொரு சம்பவம்.
இங்கிலாந்தில் ஒரு நண்பர் வீட்டில் விருந்து முடிந்தவுடன் ஒரு தட்டு கொள்ளாமல் வெவ்வேறு வகையான சீஸ். (இப்போதுதான்  சீஸ் எங்கிற ஒரு ரொம்ப உயர்ந்த  வஸ்து உலகெங்கும் போற்றப்படுவது என்பதை நான் தெரிந்து கொண்டேன். கும்பகோணத்தில் எங்களுக்கு வந்த அந்த உப்பு சீம்பால் மிக உயர்ந்த சீஸ் என்று ரொம்ப காலத்திற்குப்பிறகுதான் எங்களுக்குத் தெரிய வந்தது.) அந்த தட்டு வந்த ஒடனே உக்காந்திருந்தவர்களெல்லாம்(இவரையும் சேர்த்துதான்!) ஒரே ஆகா... ஓகோ தான்!! ம்ம்ம்....  என்னத்த குடுக்குறாங்க போங்க........நைஜெல்லா வெண்ணையையும் க்ரீமையும் கொழச்சு கொழச்சு டிவி யில கேக் பண்றாங்களே அது மாதிரி ஒண்ண குடுக்கமாட்டாங்களாண்ணு என் மனசுக்குள்ள ஒரு ஏக்கந்தான்!
ஒரு தடவை என் பிரிய தோழி என் பெண் நான் ஆகிய மூவரும் இத்தாலியை ஊர் சுற்றிப்பார்க்க போயிருந்தோம். தொடக்கம் வெனீசிலிருந்து........ கொண்டோலா படகு சுகம் அனுபவித்து, துக்குளியோண்டு சூடான கண்ணாடிக் கூழில் அற்புதமான உருவங்களைப்படைக்கும் விற்பன்னர்களுக்கு கை தட்டி, ஊரையே ரொப்பிக்கிடக்கும் முகமூடிகளில் சில வாங்கிக்கொண்டு சாப்பாட்டு சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைந்தால் செவப்பு செவப்பாக பெரிய பெரிய ஆப்பிள்கள்  கண்ணைப் பறித்தன! அட இது என்னா மாதிரி ஹைப்ரிட் ஆப்பிள்.... என நான் வியந்துபோய் நிற்கையில் என்னைத் தரை இறக்கினார் என் தோழி.
"மாகி இது சீஸ்...... கெட்டுப்போகாமல் இருக்க மேலே மெழுகு......ம்ம்ம்... அருமையாக இருக்கும்..." சப்புக்கொட்டினார் அவர்....... நாம் சீம்பால் கட்சி என்பதை உணராதவராய்!!
அன்று ராத்திரி இத்தாலிய நாட்டின் முதல் சாப்பாடு....... முதலில் வந்தது ஆலிவ் எண்ணையில் பொறித்த முழு கத்தரிக்காய். வங்காளத்து விருந்துகளில் மங்களகரமான ஐட்டம் எண்ணெய் கத்தரிக்காய்தான் ஆகையால் முதலில் இலையில் விழுவது கடுகெண்ணையில் பொரித்த கத்தரிக்காயே. அந்த விருந்துகளை மனசில் நினைத்தவுடனேயே நாக்கில் எச்சில் ஊற்றெடுத்தது.....ஆகா என சுபமான ஆரம்பம்...!! இத்தாலியருக்கும் வங்காளத்தாருக்கும் போன ஜென்மத்து விட்ட குறை தொட்ட குறை எதுவும் இருக்குமோ?!
சப்பு கொட்டிக்கொண்டே அடுத்தது என்னவாயிருக்கும் என்ற சுகத்தில் ஆழ்ந்திருந்த எனக்கு  கோப்பை நிறைய வெள்ளையாக  சுடச் சுட வைக்கப்பட்ட ஒரு அயிட்டம்..... தலையை சொறிய வைத்தது. கொண்டு வந்து வைத்த சர்வர் மேஜையிலிருந்த ஒரு சிறு  ஜாடியை எடுத்து அதில் இருந்த துளை வழியே நம் தட்டின் மேல் இருக்கும் அயிட்டத்தில் பவுடர் அடிப்பது போல ஒரு வெள்ளைப்பவுடரை(பார்மசான் சீஸ் அது) சளும்பர ஸ்டைலாகத் தூவினார். ஏற்கனவே வெள்ளைக்காரியாய் இருந்த அந்த அயிட்டம் இப்போது வேஷாதாரியாக உருக்கொண்டது! தன் தூவல் கைவேலையில் மகிழ்ந்து போன அவர் சந்தோஷமாக சாப்பிடுங்கள் என்று எங்களுக்கு வாழ்த்துக்கூறி உள்ளே போய்விட்டார்.
ஸ்பூனால் துளாவி  வாயில் கொண்டு சென்ற அந்த அயிட்டம், நான் வாயைக்கெட்டியாகப்பிடித்துக்கொண்டு எக்ஸ்கூயூஸ் மி சொல்லி விட்டு  நாலு கால் பாய்ச்சலில் ஓடிய அந்த  வேகத்தில்  பயந்துதான் போயிருக்கவேண்டும்... ச்சீ இந்த மனுஷியிடம் யாராவது குப்பை கொட்ட முடியுமா என்ற முடிவோடு அது வெளியே கிளம்பி குடலையும் சேர்த்துக்கொண்டு ஓ... என்ற இரைச்சலோடு  வாஷ் பேசினில் போய் விழுந்து தன் முக்தியைத் தேடிக்கொண்டது!
"ஒரே தலை வலி" தலையைப்பிடித்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன்
" இந்த மைக்ரேனே இப்படித்தான், எப்போது வரும் என்றே சொல்ல முடியாது."
கனிவுடன் நண்பி.
"சாப்பிட முடியாது என்று நினைக்கிறேன்." அடுத்த பொய் தயாராகக் கைவசம்
இருவரும் கவலைப்பட ஆரம்பித்தனர். ஆனால் நான் கடைசியில்
வந்த ஐஸ் கிரீமை சாப்பிட்ட வேகத்தையும் " நான் கொஞ்சம் தரட்டுமா ? என்ற இருவரின் வேண்டுகோளையும் தட்டாது ரொம்ப வழிந்த என்  கிண்ணத்தையும் பார்த்து அவர்கள் கவலையைக் கைகழுவிவிட்டனர்!
இத்தாலி முழுவதும் இந்த சீம்பால் வாசனை நீக்கமற நிறைந்திருப்பதாக என் உடம்பு எனக்குச்சொல்லியது. நீலத்த நல்லூர் பஸ்ஸில் பயணிக்கையில் மட்டும் வாந்தி எடுக்கும் நான்  அந்த ஊரில் நினைத்த  நேரமெல்லாம் நினைத்த இடத்திலெல்லாம் வாந்தி எடுத்து கொண்டிருந்தேன்  சூப்பர் மார்கெட்டுக்குள் அவர்கள் இருவரும் நுழைந்தால் நான் வெளியே உயர்ந்து உயர்ந்து நிற்கும் பைன் மற்றும் சைப்ரஸ் மரங்களோடு பேச்சு வார்த்தையில் ஈடுபாடாகிவிடுவேன். சாப்பிடுவதற்கு ஹோட்டலுக்குள் சென்றால் வெராண்டா எனக்கு சரணாகதி அளித்தது. எல்லாமே சீஸ் மயமான அந்த சாப்பாட்டுக்கலாச்சாரத்தில் அந்த ஊரில் ஆங்காங்கே இருக்கும் ஜெலடேரீ(ஐஸ்கிரீம் கடை) தான் எனக்கு ஜெலாடா(ஐஸ்கிரீம்) அருளி சரணாகதி அளித்தது!
இந்த வாந்தியெடுக்கும் ரொட்டீன் ஆர் இந்தியா மகாராஜாவிடம்  நான் சரணடையும் வரையில் என்னை சிக்கெனத் தான் பிடித்து வைத்திருந்தது! நம்ம சோத்தையும் கொழம்பையும் பார்த்தவுடன்தான் மனசுக்குள் தெம்பு ஏறிற்று!
இன்றைக்கும் வீட்டில் பிசா ஆர்டர் பண்ணினால் நம் அருமையான தயிர் சோற்றிற்கு இணையில்லை என்று அந்தப்பக்கம் நகர்ந்து விடுவேன். அந்த மசரெல்லோ சீஸ் சளி மாதிரி மேலே எழும்புகையில் எனக்கு இத்தாலியின் பத்து நாள் வாசமும் உருண்டு திரண்டு வருவதைப்போல் ஒரு பிரம்மை.
உலகமே போற்றும் இந்த அருமையான பொருளை நாம் மட்டுமே வெறுக்கிறோமோ என்று என்னையே நான் சோதித்துக்கொள்கையில்  நம்
 சொந்தக்கார இளைஞன் அடிக்கடி வெளி நாடு செல்பவன்(தம்பி மருமகன்) 'நானும் அப்படித்தாங்க' என்றவுடன்  நான் புளங்காகிதம் அடைந்து போனேன்! என்னைப்பொறுத்தவரை  ஜனங்கள் சீஸ்மேலே ஆசைப்பட்டால் நம்ம துளியோண்டு அமுல் சீஸ் கட்டி இருக்கிறதே அதை மட்டும் எல்லையாக வைத்துக்கொள்ள வேண்டும்!
டிவியில் எனக்குப் புரியாத சயின்ஸ் புரோகிராமை இவர் போட்டால் கூட புரிந்து கொள்ள முயற்சிசெய்து கொண்டாவது தூங்கி வழிவேன். ஆனால் நேஷனல் ஜியாகிரபிக் வரும் சீஸ் டிராவல் சானலை இவர் பிரியமாக தட்டிவிட்டால் போதும் "கொம்புளதற்கு ஐந்து முழம், குதிரைக்குப் பத்துமுழம், வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே, வம்பு செய் மாந்தர் தம் கண்ணில் படாத தூரத்து விலகி நிற்பதே நல்ல நெறி" என்ற செய்யுளுக்குப் பணிந்து நடையைக் கட்டிவிடுவேன்!

இந்த ப்ளாகை நான் முடித்துவிட்டு இன்றைய தினசரியைக் கண்ணோட்டம் விட்ட போது முதல் பக்கத்தில் என் கட்சி சார்பாக கேரளாவிலிருந்து ஒரு அருமையான செய்தியைக் கண்டேன். பிட்சா பர்கர் போன்ற வஸ்துக்கள் மேலே அந்த அரசு 14.5% 'கொழுப்பு வரி' போட தீர்மானித்திருக்கிறதாம். சின்ன வயசிலேயே  தொந்தியைத்தூக்கிக்கொண்டு திரியும் பிஞ்சுகளுக்கு இது ஒரு பெரிய எச்சரிக்கை மட்டுமல்ல.. வாங்கிக்கொடுக்கும் பெற்றோர்களுக்குமான அறிவுரை இது.... 

வாங்க வாங்க நம்ம பக்கம் வந்துடுங்க... ஆரோக்கியமா இட்லி தோசையோட சுகம் பெறுங்க!

No comments :

Post a Comment