Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Friday, 7 October 2016

விட்டு விடுதலையாகி

பதினைந்தே வயது புதுப்பெண் புருஷனுடன் அந்த கிராமத்திற்கு வருகிறாள். மனதுக்குள் மலைப்பு பெரிய உருண்டையாக.புருஷனும் சின்ன வயதுதான். அந்த ஊர் நடு நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர். பேசும் மொழி தெலுங்காக எழுது மொழி தமிழாகக் கலந்து களி நடனம் புரியும் இடம் அது. அவளும் கிராமத்துப்பெண்தான். ஆனால் அவள் ஆங்கிலமும் கற்றுக்கொள்ள வேண்டும் என கொஞ்சம் வருடங்களுக்கு டவுண் படிப்பிற்கு மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.வகுப்பில் 'ஏபிசீடீ தெரியாத பட்டிக்காட்டாள்' என்ற ஏளனம் அவள் பாம்பு காதுகளுக்கும் விழ மூன்றே மாதங்களில் அம்மொழியில் வித்தகம் கண்டு சிஸ்டர் பிரின்சிபால் ஒவ்வொரு வகுப்பாக அவள் கை பிடித்து அழைத்துச்சென்று 'உழைப்பும் வெறியும் கொண்டால் கிடைக்கும் பலனைப் பாருங்கள்' என்ற வெற்றியைத் தன் உடமையாக்கிக்கொண்டவள்! ஆனால் "வயசுக்கு வர்ரதுக்கு மின்னாடியே புள்ள ஊட்டுக்குள்ள வந்துடணும்" என்ற கணக்கில் அவள் படிப்பு கழித்தலாகத்தான் போயிற்று. ஆனாலும் புத்தகங்கள் மேல் அவளுக்கிருந்த மட்டில்லா காதல் மட்டும் பொங்கிப்பெருகிய ஆற்றோட்டமாய்..........பெஸ்கி என்கிற வீரமாமுனிவரது 'தேம்பாவணி'யின்' பல படலங்கள் காண்டங்கள் அவளுக்கு அத்துப்படி!
கிராமத்தில் அறுப்பு முடிந்துவிட்டால் அவள் வீட்டுத்திண்ணையை அடைத்து ஆட்கள் இரவு நேர கதைக்காக கூடிவிடுவார்கள். சிறு வயதிலிருந்தே கதைபடிப்பது இவளுக்கும் இவள் அண்ணனுக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு. கணீரென்ற குரலில் அரிச்சந்திர சரித்திரத்தை இவள் வாசிக்கையில் உருகிப்போன கூட்டம் அலேக்காக அவளை அப்படியே தோளில் தூக்கி வைத்துக்கொண்டாடும்.
ஆனால் இந்த ஊரிலோ அரவத்தையே காணோம். கோயில் மாப்பில் கூடிப்பேசும் வழக்கமும் இங்கில்லைபோல ஊர்க்கோயில் அவள் கிராமத்தியதைவிட பெரியது. ஆனாலும் சாமியை கவனித்துக்கொள்ளத்தான் உபதேசியார் இருக்கிறாரே என்று ஒரு ஏனோ தானோ வழிபாட்டில் மக்கள். ஆண்கள் விவசாயத்தில் ஈடுபட்டுக்கிடக்க வீட்டு வேலையை முடித்துக்கொண்ட பெண்கள் கதையடிப்பதிலும் மும்மரமாக தாயம் விளையாடுவதிலும் லயித்துப்போயிருந்தனர். பெண்பிள்ளைகளின் படிப்பு ஐந்தாம் வகுப்போடு முடிந்து அவர்களும் இந்த ஜோதியிலேயே ஐக்கியமாகிப்போனார்கள்.
அந்த  சின்ன வயசு தலைமை ஆசிரியரை அந்த ஊரின் மொழியில் "பெத்த ஐயோரு" என்று படிப்பிற்கும் தகுதிக்கும் மரியாதை கொடுத்து அழைத்தனர். பெத்த ஐயோரின் மனைவிக்கும் மரியாதைதான்.
"வறுத்தகடல கொண்டாந்திருக்கேன், நீங்க இதெல்லாம் திம்பிங்களா என்ற வினவல் இடிச்ச கம்பு கேவுரு களி என வளர்ந்து பெத்த ஐயோரின் வீட்டின் போக்கு வரத்து நெரிசல் அதிகமாகத்தான் ஆகிப்போயிற்று.
 இப்படி பொருட்கள் வழியே நுழைந்த நெருக்கம்  புதுப்பெண்ணின் தெலுங்கு மொழி ஆர்வமாக உருக்கொண்டு வளர, மதிய நேரத்து தாயத்தை மறந்த பெண்கள் அவளது கருத்தான புத்தக வாசிப்பில் வேதாகமத்தின் கதைகளில்  மயங்க ஆரம்பித்தனர்.
ஒரு நாள் கும்பலாக உட்கார்ந்து வேதாகமம் கேட்டுக்கொண்டிருக்கையில் திடீரென சரமாரியாக சாணி உருண்டைகள் வீட்டுக்குள் !
"நாளையிலிருந்து நாம் படிக்கவேணாம்" அம்மாக்களைக் கட்டிப்பிடித்து பயந்து நின்ற குழந்தைகள்.
"இடுக்கண் வருங்கால் நகுக" என உணர்ந்தவளின் முயற்சிமட்டும் தளரவில்லை.  சாமியாரின் வசவுகளால் சாணி உருண்டைகளும் நின்று போயின!
"இண்ணைக்கி நீ படியேன் நாங்கள்ளாம் கேக்குறோம்."
"ஐய்யய்ய நான் தட்டு தடுமாறில்ல வாசிப்பேன்...."
"பரவாயில்ல....... நான் திருத்தி உடுரேன்.."
கூசிக்கூசி ஆரம்பித்த வாசிப்பு முன்னேற்றங்கண்டு "நான் படிக்கட்டுமா நீ படிக்கட்டுமா" என்ற தர்க்கம் வலுவான போட்டாபோட்டியில் போய் நின்றது!
 'எங்களுக்கும் நாலு எழுத்து சொல்லிக்குடேன்' என தற்குறிப் பெண்களும் களத்தில் குதிக்க வீட்டின் உள் முற்றம் மணல் பரப்பப்பட்டு( ஆனா ஆவன்னா எழுதத்தான்!!) மினி பள்ளிக்கூடமாய் மாறிப்போனது!
கூட வந்த சின்னப்பிள்ளைகள் சும்மா விடலாமா என்ன? அரிய கருத்துக்களோடு அவர்களுக்கு சிறு நாடகங்கள் உருக்கொண்டன. ஆர்மோனியப்பெட்டி தூசி தட்டப்பட்டது. புது பாட்டுகள் மெட்டு கொண்டன.
கோயிலிலும் புதுப்பாட்டுகள்
தையல் தெரிந்தவர்கள் ஆசைப்பட்டவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்.  படித்தவர்கள் புத்தகங்களை வாசிக்க சொல்லிக்கொடுத்தார்கள்.
அவர்கள் கண்டிராத தன்னம்பிக்கை, கூடி வாழும் இயல்பு அவர்கள் குடும்பங்களிலும் மாற்றங்களைக் கொண்டுதான் வந்தன.
"நமக்கென்று ஒரு குழு அமைத்தால் என்ன? ஒரு சின்ன தொகையை ஒவ்வொருவரும் கொடுக்கலாம். ஒரு வருடம் ஒருவர் தலைமைப்பொறுப்பை  ஏற்று நடத்தட்டும். ஒருவர் பொருளாராக இருக்கலாம்."
"வருஷா வருஷம் அது சுத்தில் வரலாமே? அப்ப எல்லாருக்கும் பொறுப்பு வரும்"
இப்படியாக குட்டி போட்டு குட்டி போட்டு சிந்தனைகள் மலர மலர இவளும் மகிழ்ந்தாள். பிறந்த நாட்களும் கல்யாண நாட்களும் வாழ்த்துக்களாலும் பரிசுகளாலும் மனசுக்கு நிறைவைத் தந்தன !
பள்ளியின் ஆண்டு விழா நடனங்களும் நாடகமுமாக குதூகலித்தது. 
ஒரு நாள் பக்கத்து காட்டிற்கு பிக்னிக் போக முடிவு பண்ணி தினு தினுசாய் பலகாரமாய் தயாராயனது.."பெண்களும் குழந்தைளும்" மட்டுமே அடங்கிய இந்த பிக்னிக்கில் சுதந்திரப்பறவைகளாய் வயது வரம்பு பார்க்காமல் பெண்கள் பழைய பாட்டிற்கெல்லாம் கும்மி அடித்து ஆலா சோலை ஆடி கும்மாளமிட்டார்கள்!
 ஆடி 'அவரைக்காய் அறுத்த' பின் வீட்டிற்கு சும்மா திரும்பிப் போறதா என்ன!? தலை குளிக்க உசிலம் இலை, ஊறுகாய்க்கு கிளாக்காய் ருசியான நரி நவ்வாப்பழம் சமயத்தில் கிடைக்கும் பலாப்பழம் இத்யாதியோடு கூட்டமாய் 'பெத்த ஐயோரு' வீட்டிலே திரும்பக்கூடி  சிறப்பான பங்கிடு வேலை தொடரும்!
தூங்கிக்கிடந்த ஊர் ஒரு உத்வேகம் கொண்டது
இந்த அதிசய ஜோடியின் அரவணைப்பில் பிரிந்த பல குடும்பங்கள் சேர்ந்தது உண்மை! பல வீடுகள் மகிழ்ச்சி கொண்டது உண்மை! பெண் பிள்ளைகள் பள்ளிக்குத் தொடர்ந்து போனது உண்மை! அவர்களும் வேலைக்குப்போகலாம் என மனது விரிந்ததும் உண்மை! இன்றைக்கும் அவர்களில் ரிடையர் ஆகி பென்ஷன் வாங்கும் பலர் அவர்கள் இல்லாது போனால் எங்களுக்கு இவ்வளவு சுதந்திரமான சுகமான வாழ்க்கை இல்லவே இல்லை என அறுதியிட்டுக் கூறிக்கொண்டிருப்பதும் உண்மையிலும் உண்மை!!
உயர் படிப்பிற்காக அவள் அந்த நாட்டில் நுழைகையில் அவள் வயது இருபத்தி ஒன்று. முதல் முறையாக.... சுகமான.... கவலையே அற்ற  வீட்டை விட்டு வெளியே வேறொரு கலாச்சாரத்தின் நுழைவு அவளுக்கு பிரமிப்பாக இருந்தது. சிறிது நாட்களில் படிப்பு விஷயங்கள் பிடிபட்டுப்போனபின் வேறு ஏதாவது செய்ய மனதிற்குள் ஒரு சின்ன அரிப்பு. நட்புகள் நெருங்கிவர மனசில் தைரியமும் பெருக "நாம் ஒரு இந்தியன் ஃபேஷன் ஷோ பண்ணலாமா?"என ஆரம்பித்த கேள்வி, "இந்த நிகழ்ச்சிக்கு ஒரு இந்திய நடனம் பொருந்தி வருமே" என தன் அரிய கலைக்கு பிள்ளையார் சுழி போட்டுஆரம்பித்த அவள் "உங்களுக்கு நான் சுலபமான ஸ்டெப்களை சொல்லிக்கொடுக்கிறேன் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு ப்ரோகிராம் பண்ணலாமா? என்ற உற்சாகம் எல்லோரையும் பற்றிக்கொள்ள முதன் முறையாக அகில உலக பெண்கள் சங்கத்தில் ராமாயணத்தின் சீதையை தூக்கிச்செல்லும் பகுதி நான்கே பெண்களோடு பெருங்கை தட்டலோடு அரங்கேறியது!
"எந்நாட்டின் இந்த அருமையான பரதத்தை  நான் அனுவித்து மகிழ்ச்சியடைவது போல் நீங்களும்  அனுபவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு வேறு எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி அலுப்புமின்றி நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். திறம் படக்ககற்றுகொள்வது மட்டுமே உங்கள் ஒற்றை நோக்காக வேண்டும்"
"தப்பு பண்றமேண்ணு தயங்கி நிண்ணுடாதிங்க......பண்ணிகிட்டே இருங்க அது தானா வந்துரும்."
"அருமையான லட்சியம் கொண்ட ஒரு அருமையான ஆசிரியைப் பெற்றது எங்கள் பேறு" என  நாட்டியப்பிரியா குழுவே பெருமையில் பூரிக்கிறது.
அந்த குக்கிராமத்தில் காட்டிற்கு பிக்னிக் போனதைப்போல் இக்குழு மட்டும் வருடம் ஒருமுறை வாரக்கடைசியின் இரண்டு நாட்களும் புதுப்புது இடங்களுக்குப்போய் ஒன்றாகக் கூடி ஆடிப்பாடி கூடி சமையல் செய்து மகிழ்ந்து போகிறார்கள்.
நகர மேயரின் வருடாந்திர ஊர்வலத்தில் நடனங்களாக, மாதாக்கோயில் ஒன்றின் பக்தர்களுக்காக, இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் அழைப்புகளாக  இந்தியத் திருமணங்களின் சிறப்பு விருந்தினராக தீபாவளிக்கு நடனங்களாக வருடத்திற்கு ஒருமுறை புதியதொரு நாட்டிய நாடகம் உருக்கொண்டு பணங்கொடுத்து மக்கள் பார்க்கும் ஒரு நிகழ்வாக பல்கிப்பெருகி கிளைத்து செழுமை கொண்டு நிற்கிறது அவளுடைய சிறியதொரு தொடக்கம்! 
இவ்விரண்டு கதைகளும் என் வாழ்வின் ஒரு பகுதியே.
பதினைந்து வயது புதுப்பெண்ணாக அந்த குக்கிராமத்தில் புரட்சியை விளைவித்தது என் அருமை அம்மா! சின்னஞ்சிறுசாய் அண்ணாந்து பார்த்து அவர்களை வியந்து நின்ற  நாட்கள் பல. இன்று இங்கிலாந்திலும் என் கலையை கலைக்காகவே கொடுக்கிறேன் என புரட்சி பண்ணிக்கொண்டிருப்பது என் அருமைப்பெண்! இந்த வருடம்  அவளது நாட்டியப்பிரியா குழு இருபது ஆண்டுகளைப் பூர்த்தி செய்ய புதியதொரு நாட்டிய நாடகத்தால் சிறப்பித்த அன்று பால்கனியெல்லாம் நிரம்பி வழிந்த மக்களை நோக்குகையில் நாங்கள் இருவரும் நெஞ்சுருகித்தான்போனோம். அந்த கணத்தில் என் அம்மா (அப்பாவும்) குக்கிராமத்தில் செய்த புரட்சி மனதிற்குள் வர என்பெண்ணின் பரத நாட்டியப்புரட்சியும் அங்கிருந்து உருவான எண்ணங்களின் பிரதிபலிப்பே என்ற நினைவில் மனம் பூரித்து  மலர்ந்தோம்!

1 comment :

  1. இரு பெண்மணிகளின் சீரிய, அறிய முயற்சியை எண்ணி எண்ணி , கண்கள் குளமாயின . அம்மாவின் கலைப்பணியை அனு தூர தேசத்தில் தொடர்ந்து செய்வது நம் குடும்பத்திற்க்கு பெருமை.

    ReplyDelete