Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Sunday, 5 March 2017

வீடும் நிர்வாகமும் சில உள் சிக்கல்களும்

இன்றைய கால கட்டத்தில் மனித வளத்துறையை நிர்வகிப்பது சுலபமான ஒன்று அல்ல. எப்படி மனித வளத்தை மேம்படுத்தி ஆக்க பூர்வ சக்திகளை ஒருமுகப்படுத்தி செயல் வேண்டும் திறமையானவர்களை எப்படி தக்க வைத்துக்கொள்ள வேண்டும் சாம தான பேத தண்ட முறைகளில் எதை யாருக்கு எப்போது கையாள வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்.
இது இப்படி என்றால் எதிலும் கட்டுக்குள் வராத வீட்டு நிர்வாகத்தைப்பற்றி சொல்லவே வேண்டாம். இன்றைக்கிருப்பவர் நாளை திரும்ப வருவார்களா என்ற தற்காலிக நிலைதான் உறுதியான ஒன்று. இவர்களோடு கூட  வீட்டில் பெரியவர்களைக்(அத்தை மாமா, கணவரின் பெற்றோர்கள்) கண்காணிக்க வரும் நர்சுகளையும் உதவியாளர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வீடே களேபாரந்தான்!
ஆனால் நர்சுகளையும் உதவியாளர்களையும் எங்களுக்கு கொடுப்பதையே வேலையாகக் கொண்டிருந்த ஏஜண்ட் ('007') படு கில்லாடி! யாராவது ஒருவர் ஷிஃபிட்டிற்கு வரவில்லையென்று ஃபோன் செய்தோமானால் " கவலப்படாதிங்க மேடம்..... ஃப்ர்ஸ்ட் க்ளாஸ் ஆளோடு இன்னும் அஞ்சு நிமிஷத்துல நானே  அங்க வர்ரேன்" என நம்மை ஆசுவாசப்படுத்தும் அபூர்வி!
ஆனால் அந்த ஃப்ர்ஸ்ட் க்ளாஸ் ஆள் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத ஆழ் உறக்கத்தில் இரவு முழுவதும் இருந்திருக்கிறார் என்று விடிந்த பின்புதான் நமக்குத்தெரிய வரும்! மேலே தூங்கும் எங்களுக்கு எமர்ஜென்சிக்கு அமுக்க மணி இருக்கிறது. ஆனால் பெரியவர்களுக்கு இந்த அல்ப காரியத்திற்கு பிள்ளைகளின் தூக்கத்தைக்கெடுப்பதா என்ன என்ற அக்கறை!
அடுத்த நாள் கிடைக்கும் டோஸில் அந்த வாரம் அவரிடமிருந்து சூப்பர் சர்வீஸ் கிடைக்கும்!
இவ்வாறாக பலதரப்பட்ட மக்கள் வந்து போகும் ஒரு இடத்தை நிர்வகிப்பது வாழ்க்கை அனுபவத்தைக்கொடுத்தாலும் அன்றாட பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பது  ஒரு கழைக்கூத்தாடி கம்பி மேலே நடப்பது போன்ற ஒருபெருங்கலை! இதில் சிலவற்றை இன்று உங்களோடு கூட.......
மூன்றாம் உலக யுத்தம் தண்ணீரிலேதான் ஆரம்பிக்கப்போகிறது என்பதற்கு முன்னோடி எங்கள் வீடுதான்!
ஆஃபீசில் இருந்து வருகையில் மணி சாயங்காலம் 6.30.
"அம்மா.. டயர்டா இருக்கிங்களா...? சமையல் அக்கா
இந்த முன்னுரை எனக்குப் பரிச்சயமான ஒன்று!
"புயலுக்கு முன்னே வரும் அமைதி..."
"ஜோரா இருக்கேன்........ நீங்கெள்ளாம் எப்படி இருக்கிங்க..?" பொதுக்குசலம் விசாரிக்கிறேன்
"அம்மா ஒங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்...... ஒருத்திய தட்டு கழுவச்சொல்லுறது தப்பாம்மா..?
"'ஒருத்திய'ண்ணு சொல்லும்போதே  இது விவகாரந்தான் என பிடிபடுகிறது
"எல்லாரும் அவங்கவங்க தட்ட கழுவி வைக்கிறதுதான்  மொற... அதுதான் எல்லாருக்கும் நல்லது."
"அதத்தான் சொன்னம்மா அந்த பொண்ணுகிட்ட ..... தட்ட சுத்தமா கழுவுண்ணேன். அதுக்குண்ணு கொழாய முழுசா தொறந்துவுட்டுகிட்டு பத்து நிமிஷம்... பத்து நிமிஷம்மா..... அந்த தட்ட அழிச்சாட்டியமா கழுவுது..... பெரிய ஐயா முட்டும் பாத்துருந்தாருண்ணா என்ன கன்னா பின்னாண்ணு வஞ்சிருப்பாரு.... பாத்திரங்கழுவுற தண்ணியையே அவுரு அடியில டப்பு வச்சிபுடிச்சி செடிக்கு ஊத்தச்சொல்லுராரு.... இவ அடத்துக்குண்ணு இந்த வேல பண்ணுறா..... நீங்க கண்டிசன் பண்ணணும்....."
எட்டிப்பார்க்கிறேன்... அத்தை ரூமில் மும்மரமான வேலையில் இருந்தது அந்தப்பெண்
"பிஸியா இருக்கும்மா அப்பறம் கூப்புட்டு விசாரிக்கிறேன்.,."
செமத்தியா அது வாங்கிக்கட்டிக்கிறத பாக்கணுங்கிற  ஆசையில இருந்த அவர்களுக்கு சப்பென்று ஆயிப்போயிற்று... மூஞ்சியைத்தூக்கிக்கொண்டு உள்ளே போய்விட்டார்கள்.
 பேசாம அது அதுக வீட்டிலேருந்து டிபன் பாக்ஸ்ல சாப்பாடு கொண்டாந்துட்டா பிரச்சனையே இல்லை. ஆனா மாமாவுக்கு தாராள மனசு....... வீட்டுக்குள்ள வந்தவங்களெல்லாம் சாப்பிடுணும்ங்கிற கிராமத்திய தத்துவத்தை சென்னையிலும் செயல் படுத்தும் பரந்த மனசு... ஷிஃப்டிற்கு ஏற்றமாதிரி சாப்பாடோ டிபனோ இந்த குழுவிற்கு உண்டு.
"ஏழ பிள்ளைகம்மா.....நம்ம வீட்ல சாப்புட்டு போவட்டுமே...." 
அடுத்த வழக்கை சுத்தம் செய்வர்கள் என் முன் வைத்தார்கள்.
"இந்த நர்சுங்க அட்டகாசம் பண்ணுதுங்கம்மா...... பெரிய ஐயா தூங்குற சமயமாப்பாத்து ஐயா பாத் ரூம்புலயே குளிக்கிறாளுக. ஆத்துல குளிக்கிறாமாரி ஒரே அலம்பலு! அந்த வாஸ் பேசினு முழுக்க எச்சியத்துப்பி வச்சிருக்காளுக... தலய சீவுன முடியப்பூரா ப்லசுக்குள்ள போடுறளுக. நானும் குத்தி குத்தி பாக்குறேன்....... ப்லசு இண்ணைக்கி அடைச்சுகிட்டு கெடக்கு..... வேலக்காரங்களுக்குத்தான் ஒரு கக்குசு கட்டிவச்சிருக்கிங்கள்ள..?இதுக அங்க போ வேண்டியதுதானே.......? இதுக முட்டும் என்ன பெசலுங்கிறேன்..?கடசீல தண்ணிய நீயி நொம்ப செலவு பண்றண்ணு பெரிய ஐயா கிட்ட வசவு வாங்குறது நாந்தான்........ இம்புட்டையும் நானு பெரிய ஐயா  அம்மாவுக்கோசரந்தான் பொறுத்து போறேன்... நீயி அத்த சரி பண்ணுலண்ணா வேற ஆளு பாக்க வேண்டியதுதான்......"
மொதல்ல ஃப்ளஷை சரி பண்ண ஆள கூப்புடுறதா, நர்சுகள கண்டிஷன் பண்றதா இல்ல கைவசம் இருக்க ஆள  நச்சியம் பண்ணி தக்க வச்சிக்கும் வழி முறைகளப்பாக்குறதா..? தலையப்பிராண்டிக்கொண்டேன்
தண்ணீரை டாங்கரில் வாங்கி ஊற்றிய தண்ணீர்ப் பஞ்ச காலம் அது. அரை வாளித்தண்ணீர் ஒருவர் குளிப்பதற்கு போதுமானது என்று மாமா ஒரு கணக்கு வைத்திருந்தார்கள். எப்போதாவது வரும் வெளி நாட்டு மற்றும் உள் நாட்டு விருந்தினர்களுக்கு மாமா இந்த ஞான உபதேச வகுப்பு எடுக்கத் தயங்குவதில்லை. உள் நாட்டு விருந்தினர் சிலர் 'என்னா இப்படி மூஞ்சியில அடிச்சமாதிரி சொல்றாரே' என்று கோபத்தோடு போயிருக்கிறார்கள். வெளி நாட்டவர்க்கு இது வினோதமான ஒன்றாய் இருந்தது." கல்கத்தாவுல நான் மதர் தெரசா கூட வேல பண்ணினப்ப 'பக்கெட் பாத்' எடுத்திருக்கேன்.... இது இன்னும் புதுசால்ல இருக்கு?! 'ஹாஃப் பக்கெட் பாத்'....ம்ம்ம்ம்....... முயற்சி பண்ணி பாக்கலாமே!!
தண்ணீரால் வந்த தலைவலிகள் ஒரு பக்கமென்றால் வேலை பார்த்த ஜனங்களும் கூட சேர்ந்து கும்மியடித்தார்கள்.
ஒரு நாள் இரவு ஷிஃப்டிற்கு வந்த நர்சிங்அசிஸ்டெண்ட் காலையில் கண்ணீரும் கம்பலையுமாக நின்று கொண்டிருந்தது. விஷயம் இதுதான்.தான் போட்டிருந்த பவுன் தோட்டையும் ஜிமிக்கையையும் ஜன்னல் அருகில்  அவிழ்த்து வைத்திருந்ததாகவும் நடுச்சாமத்தில் கருப்பாக ஒரு உருவம் அதை எடுத்துக்கொண்டு ஓடியதாகவும் சத்தியம் செய்கிறது. கருப்பாக இருப்பவர் வீட்டு வாச்மேன்தான். வருஷக்கணக்கில் கூடவே இருக்கும் வாச்மேன்
" நீ பாக்கும்போதே சத்தம் குடுக்க வேண்டியதுதானே?"
"அம்மா எந்திரிச்சுக்குவாங்களே"
ஏதோ ஒரு காரணம்
மாமாவோ "பாவம்........ அது மாதிரி ஒண்ணு வாங்கிட்டு வந்து குடுத்துடு... இல்ல அத கடைக்கி கூட்டிகிட்டு போய் வாங்கிக்குடுக்குறியா." என்றார்கள். உண்மையா பொய்யா என்று தெரியாத ரெண்டுங்கெட்டான் நிலமையே உண்மையாய் இருக்க கூட்டிக்கொண்டு போய் வேறே வாங்கிக் கொடுப்பதா...? அரை மனசாக ஒரு தொகையை கையில் கொடுத்துவிட்டேன், அன்றையிலிருந்து எந்தப் பொருளையும் பத்திரமாக வைத்துக்கொள்வது உங்கள் பொறுப்பு,காணாமல் போனால் நாங்கள் ஜவாப்தாரியல்ல என்று வீட்டிற்குள் நுழையும் போதே நர்சிங் குழுமத்திற்கு தெளிவுபடுத்தினேன்!
இன்னொரு நர்ஸ்...... அருமையாக அத்தை மாமாவைப் பார்த்துக் கொண்டாள். சிரித்த முகம்.... சந்தோஷமான பொழுதுகள்....... ஒரு நாள் டெம்பரேச்சர் எடுத்து முடித்தவுடன் மெர்க்குரியை உதறியவள் கைதவறி தெர்மாமீட்டர்  கீழே விட்டு விட அதை பிடிக்கிறேன் பேர்வழி என்று தங்கச் சங்கிலியோடு அதை அணைக்க மெர்க்குரி உடைந்து தங்கச் சங்கிலி வெள்ளியாய் உருக்கொண்டது!
"பாவம் பிள்ளை.....  இது திருடு போன கேசைவிட  பரிதாபத்துக்குரிய ஒன்று...... இதற்கு என்ன ஈடு செய்யலாம் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கையில் அவள் 'ரத்னா'விற்கு வருவதையே நிறுத்திவிட்டாள்!
ஒரு நாள் ஷெல்ஃபை சுத்தம் செய்து கொண்டிருந்த நான் கதவு இருப்பதை உணராமல் தலையை மேலே தூக்கியதில் மடாரென்று இடித்து நெற்றி ஜிவ்வென்று  புடைத்துப்போனது. ஃபிரிஜ்ஜை நோக்கி ஓடுகிறேன். இரண்டு ஐஸ் டப்பும் காலியாகக் கிடந்தது.
"ஐஸ் வைக்கிலியா என்னா"  நானாக புலம்பிக்கொண்டு தலையைப்பிடித்துக்கொண்டு ஹாலுக்கு வந்தேன் நான் பேசியது புதிதாகவந்திருக்கும் நர்சிங்க் அசிஸ்டெண்ட் காதில் விழுந்திருக்க வேண்டும்
" மேடம் .. மேடம்.....  நாந்தான் ஐஸை எடுத்தன் மேடம். ஒங்ககிட்ட சொல்லாம எடுத்தது தப்புதான்... மன்னிச்சுக்குங்க... இண்ணைக்கி மதியத்திலேர்ந்து நான் விரதம். தண்ணி ஜூசு இததாங்க குடிப்பேன் நாளைக்கி மதியம் சர்ச்ல சர்வீஸ் முடிஞ்சப்பறந்தான் சாப்பிடுவேன்......"
"அதுக்குண்ணு ரெண்டு டப் ஐஸா!!?"
"இந்த கூல் டிரிங்க்ஸ்ல நெறயா ஐஸ் போட்டு குடிச்சா பசியே தெரியாதுங்க" என்று பெயரில்லாத ஒரு பெரிய பாட்டிலைக்காட்டியது.
"கடவுள் இதையெல்லாம் ரொம்ப பாக்கமாட்டாரும்மா..... நல்ல மனசுதான் முக்கியம். சரி சரி நான் மேலஃபிரிஜ்லண்ணா போயி பாக்குறேன் " போற போக்குல ஒரு தத்துவத்தை உதிர்த்தேன்!
அந்த ராத்திரி எனக்கு சிவராத்திரிதான்... நெத்தி விண் விண்ணென்று தெரித்தது ஒரு பக்கம் என்றால் கீழேயிருந்து வரும் இருமல் சத்தம் கடுமையாக இருந்தது. அத்தையா இல்ல மாமாவா ? எப்படி இருந்தாலும் டாக்டருக்கு நாளைக்குக் காலையிலேயே ஃபோன் பண்ணிவிட வேண்டும். மனதில் குறித்துக்கொண்டேன்.
என் காலை வேலைகள் முடிந்த பின் கீழே போகிறேன்.... வெள்ளை வெளேரென்ற வாயில் புடவை அதே வெள்ளைக்கு நிகரான ஃபுல் ஹேண்ட் ப்ளவுஸ், நீராடி முடிந்த கூந்தல், துணைக்கு கன ஜோரான இருமலுடன் நர்சிங்  அசிஸ்ட்டெண்ட்!
"அம்மாவுக்கு எல்லாம் முடிச்சிட்டேம்மா அடுத்த ஷிஃட் ஆளுக்கு வெயிட் பண்ணிகிட்டு இருக்கேன்."
"கடவுளே......! இந்த பொம்பள ராத்திரி பூரா அத்தைக்கில்ல இருமல அள்ளி வழங்கிகிட்டு இருந்திருக்கு!
அந்த சமயம் உள்ளே நுழைந்த சமையல் அக்கா  இந்த பெண்ணைப்பார்க்கவும்  பேயறைந்தது போல திடுக்கிட்டு நின்றதை என்னால் உணர முடிந்தது. இந்த 'வெள்ளையும் சொள்ளையுமான மேக் அப்' அப்படி திகைக்க வைத்திருக்குமோ!  அதோடு அவர்கள் அடுப்பாங்கரைக்குப் போய் விட்டார்கள்.....
ஷிஃப்ட் மாறியாகிவிட்டது
"அம்மா இங்க செத்த வர்ரீங்களா.." சமையல் அக்காதான்
"என்னாம்மா...?"
"ஏம்மா இந்த பொம்பளையெல்லாம் வேலைக்கி வக்கிறீங்க?"
"ஏஜண்ட் குடுக்குறதுதானெம்மா, நம்மளா போயி ஆளத்தேடுறோம்.....?"
"அவன் நாசமாப் போவ..... இந்த பொம்பள ஒரு ஆறேழு மாசத்துக்கு மின்னாடி அம்மன் கோயிலுல மஞ்சளையும் குங்குமத்தையும் அப்பிகிணு மஞ்ச பொடவயில எரியிற கல்பூரத்த முழுங்கிட்டு குறி சொல்லிக்கிணு கெடந்தவம்மா....... இப்ப கிறிஷ்டியனா பொயிருக்கா...... நாளைக்கி இன்னா கூத்தடிப்பாளோ ஆரு கண்டது....? வயசானவங்கள பாத்துக்க  அந்த கூறு கெட்டவன் இவளயாம்மா அனுப்புவான்... ஒண்ணு கெடக்க ஒண்ணு பண்ணக்கூடியவம்மா இவ......." பொரிஞ்சு தள்ளிவிட்டார்கள்!
எல்லா கடவுளர்க்கும் எரிச்சல் மூட்டும்  அளவுக்கு சடங்கு சம்பிரதாயங்களை ஒரு கை பார்க்கும் இந்தப்பெண்  'நர சேவை நாராயணன் சேவை' என்பதை மறந்து ஒரு இரவு முழுவதும் வயதான ஒருவரை தன் இருமலால் கொடுமைப்படுத்தியது எப்படி?

இன்னும் சின்ன சின்னதாய் அனுபவங்கள் குமிந்து கிடக்கின்றன. இப்படி தினுசு தினுசான மனிதர்களை பார்த்து கணக்குத் தீர்த்த நான் ஆஃபீஸ்  நிர்வாகத்தை ஒரு கை பார்த்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை!!

1 comment :



  1. . ஆமாம் அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை . நன்தான் கூட இருந்து பார்த்திருக்கிறேனே. கான்டீன் காண்ட்ராக்ட்லிருந்து , காதல் ஜோடிகள் துப்பறிந்தது ,வெஸ்டர்ன் டாய்லெட் போவதற்கு சொல்லித்தந்த வரை எத்தனை MTL அனுபவங்கள்.

    ReplyDelete