சூப்பர்
மார்க்கெட்டுகளைவிட எனக்கு மளிகைக்கடையே பிடித்தமானதாக இருக்கிறது. இங்கே அநாவசியமாய் எல்லாப்பொருட்களையும் பாலிதின்
பைகளில் அடைப்பது கிடையாது. வீட்டிலிருந்து பைகளை எடுத்துக்கொண்டு போய் சாக்கு மூட்டைகளிலோ
அல்லது பாலிதின் மூட்டைகளிலோ இருக்கும் சாமான்களை வாங்கி வரலாம். பாலிதின் பைகளைப்
பிரித்து பிரித்து நம் குப்பைக்கூடையை பிரயோஜனப்படாத பிளாஸ்டிக்கவர்களால் நிரப்ப வேண்டியதில்லை.
பசுமை விரும்பியான எனக்கு இது பிடித்தமான ஒன்றாய் அமைந்திருக்கிறது. பின்னும் சின்ன
வயசிலே நாய்க்கர் கடையில் உபரியாகக் கிடைத்த
பொட்டுக்கடலையும் நாட்டு சர்க்கரையின் ருசி மனசின் ஏதோ துளி அணுவில் அச்சேறிக்
கிடந்தது. இந்த சத்தான உபசரிப்பின் காரணமாக
இன்றைய மளிகைக்கடைகள் ஒன்றுமே கொடுக்காவிட்டாலும்கூட ஏதோ இதுகள் மேல் எனக்கு
நல்லதொரு அபிப்ராயம்! இதைத்தான் பூர்வ ஜென்மத்துப்புண்ணியம் என்று சொல்லுவார்களோ? மளிகைக்கைடையில்
இன்னொரு சவுகரியமும் உண்டு. கொஞ்சம் அவதியாக இருந்தால் கடைக்காரர் புரிந்து கொண்டு
சட்டென்று பைசாவை வாங்கிக்கொண்டு நம்மை பைசல் பண்ணி விடுவார். தலையையே தூக்கிப்பார்க்காத
சூப்பர் மார்கெட் பெண் பிள்ளைகளிடம் பைசா கட்டுவதற்கு நீண்ட க்யூவில் நிற்க வேண்டாம்!
அன்று
வீடு நிறைய விருந்தாளி. அவதி அவதியாக மளிகையை முடித்தேன்..... சாமான் பைகளைத் தூக்க
முயல்கிறேன்...ம்ஹூம்... நல்ல கனம்.... இதைப் பார்த்த கடைக்கார அம்மா உள்ளே வேலை செய்து
கொண்டிருந்தவர் ஒருவரைக்கூப்பிட்டு காத்துக்கொண்டிந்த ஆட்டோவில் பைகளை வைக்கச்சொன்னார்.
தூக்க
முடியாமல் தூக்கிக்கொண்டு வந்து ஆட்டோவில் வைத்த அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கடைக்கார
அம்மா கண்ணில் படாத வகையில் அவர் கையில் 5 ரூபாய் நாணயத்தை அமுக்கி “வச்சுக்கப்பா”
என்றேன்.
“வேணாம்மா”
“இவ்வளவு
சாமான்களைக்கொண்டு வந்திருக்கிறோம் அல்பமா 5 ரூபாய்......ம்ம்ம்ம்...கோபப்பட்டிருப்பாரோ...?
பத்து ரூபாயா குடுத்திருக்கலாமோ?” அதற்குள் கடைக்குள்போய்விட்டார் அவர்.
இல்லை
கடைக்கார அம்மா நல்ல சம்பளம் கொடுப்பார்களோ? டிப்ஸ் வாங்கும் அவசியமே இல்லாமல் வேலை
செய்பவர்களை அருமையாக வைத்திருக்கிராறோ......? இல்லை கடையின் வியாபாரத்தைப்பெருக்க
இது ஒரு தரமான வியாபாரத் தந்திரமாய் இருக்கலாமோ? எது எப்படி இருந்தாலும் இதையெல்லாம்
யோசனை செய்து செயல்படுத்தும் பெண்மக்கள் எண்ணிக்கை உயர வேண்டும் வளர வேண்டும்.....மனதார
வாழ்த்தினேன்.
கொஞ்ச
நாட்களாய் ஓனர் அம்மாவை நான் கடையில் பார்க்கமுடியவில்லை. அடுத்தமுறை “என்னங்க கடப்பக்கமே
வரக்காணாம் என்றேன்”
“அதயேன்
கேக்கிறிங்க போங்க.... பைக்கில ஏறினா இவுருக்கு கண்ணு மண்ணு தெரியறதில்லை. ஏரோப்ளேன்ல
பறக்கிறதா நெனப்பு. கால முறிச்சிகிட்டு 10 நாளா ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமா அலஞ்சிகிட்டுல்ல
கெடந்தேன். நேத்துதான் வீட்டுக்கு வந்தோம்........ வீட்டுக்கு வந்தவரு செவனேண்ணு இருக்காரா என்னா...
பொழுதன்னைக்கும் பிலாக்கணதான்... அங்குட்டு வலி இங்குட்டு வலிண்ணு வீட்ல எல்லாத்தையும்
அலங்க மலங்க அடிக்கிறாரு...... ஒரு தல வலி வந்தாவே ஊர கூட்டுற சாதி.... இப்ப கதைய கேக்குணுமா.......?
“இப்ப
கொஞ்சம் பரவாயில்லங்க... கட்டு மட்டும் கொஞ்ச நாளைக்கி இருக்குணுமாம்” நான் கேட்குமுன்னே
ஒரு நாள் கடைக்கார அம்மா விவரம் சொன்னார்கள்.
இன்னொரு
நாள் கடைப்பக்கம் போகையில் கடைக்கார அம்மா ஆட்டோவிலிருந்து ஒருவரைக் கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு
கல்லாவில் உட்கார வைத்தார்கள். “அங்கன இங்கன ஓடாம ஒக்காந்திருங்க...எல்லாத்தையும் பாத்துகிறதுக்கு
ஆளுங்க இருக்காங்க.....என்னா.... சரியா......?. முருகையா...... கொஞ்சம் அவுர பாத்துக்க.....
இல்லாட்டி மனுசன் தாண்டவம் ஆடிக்கிட்டேதான் இருப்பாரு. இந்தா ஒரு ஜோலி இருக்கு முடிச்சிட்டு ஒடியாந்திடுறேன்.”
"நல்லா இருக்கிங்களா" என்று ஒரு சிறு விசாரணை செய்ய எண்ணி கல்லா அருகில் சென்ற எனக்கு தூக்கி வாரிப்போட்டது! வெள்ளை வெளேர் வேட்டி சட்டையோடு கல்லாவில்
உட்கார்ந்திரு ந்தவர் வேறு யாருமல்ல..... என்னுடைய தூக்க முடியாத பைகளைத் தூக்கிக்கொண்டு
வந்து ஆட்டோவில் வைத்தாரே....... அவர்......அவரேதான்!
அன்று
கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு பலசரக்கு நெடியோடு
வந்த அவரும் இவரேதான்....... உழைப்பாளியான அந்த கடை சொந்தக்காரரை நான் எவ்வளவு மட்டமாக எடை போட்டுவிட்டேன்?
அவருக்கே 5 ரூபாய் டிப்ஸ் கொடுக்க என்ன மாதிரியான
தெனாவட்டு இருந்திருக்க வேண்டும் எனக்கு....!? அதை பெரிது படுத்தாமல் “வேண்டாம்
மேடம்” என்ற கண்ணியத்தோடு சென்ற அவரது செயல்
எவ்வளவு உயரியது?!!!