மார்ச் மாதக்கடைசியில் பத்திரிக்கைகளில் வந்த தமாஷான இந்த செய்தி உள்ளில் பூட்டிக்கிடந்த பல சுவாரசியமான செய்திகளை வெளிக்கொணரும் கருவியாகும் என நான் நினைக்கவேயில்லை. மும்பையில் நடந்த அந்த செய்தி இதுதான்:
44 வயதான பிரேம்லதா என்ற பெண்மணி டிக்கெட் வாங்காமல் உள்ளூர் ரயிலில் பயணியத்தபோது பரிசோதகர் அவருக்கு ஃபைன் போட்டார். அவரோ "நீங்கள் போய் ஆயிரக் கோடிக்கணக்கில் கடன் வைத்திருக்கும் மல்லையாவிடம் பணத்தை வசூலித்து வாருங்கள், நான் என் ஃபைன் தொகை 260 ரூபாயை கட்டுகிறேன் என்றாராம். கணவரும் மற்றவரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் நான் ஜெயிலுக்கு போனாலும் போவேனே தவிர ஃபைன் கட்டவே மாட்டேன் என்று 7 நாள் சிறையிலே இருந்திருக்கிறார்!
டிக்கெட் வாங்காமல் பயணிப்பதை இந்தியர்கள் நாம் பெரிய தப்பாகவே எடுத்துக்கொள்வதில்லை. அப்படி செல்வதில் எதையோ ஒன்றை ஜெயித்த மாதிரி ஒரு அல்ப சந்தோஷம். 1980களில் என் கணவர் நண்பர்களோடு பாரிசில் சில நாள் தங்க வேண்டிய சூழ் நிலை. முதல் நாள் மெட்ரோ பயணம். நண்பர்கள் இவருக்கு மட்டும் டிக்கெட் வாங்கினார்கள்.
"நம்ம ஊர் மாதிரி இங்கேயும் சீசன் டிக்கெட் இருக்கிறதோ?"
"ஆமாமாம்.." என்று சிரித்துக்கொண்டே சொன்னது நண்பர் குழாம்
இறங்குமிடம் வந்தது என் கணவர் அவரது டிக்கெட்டை மெஷினுக்குள் விட அதை விழுங்கிவிட்டு அது வெளி செல்லும்('சொர்த்தி') கேட்டை அவருக்குத்
திறந்துவிட்டது. இவர் நண்பர்கள் வரப்போவதை வேடிக்கைப்பார்த்துக்
கொண்டிருந்தார். நண்பர்களின் டிக்கெட்டின் ஒரு ஓரத்தில் ஒரு நூல் கட்டப்பட்டிருந்தது. நூலைப்பிடித்து லேசு பாசாக அவர்கள் டிக்கெட்டை மெஷினுக்குள் விட்டு எடுத்த மாத்திரத்தில் வெளி செல்லும் கதவு திறந்து கொண்டது... மெஷின் முழுங்காத டிக்கெட்டும் அவர்கள் கைவசம்!! தினப்படி பயணம் எப்போதோ வாங்கின ஒரே டிக்கெட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது!
ஐயத்துடன் தலையைச்சொறிந்த இவரது தோளில் கை போட்ட நண்பர்கள்
"இந்த பிரஞ்சுக்காரர்கள் பாண்டியில் நமது சொத்துக்களை எவ்வளவு தின்னுருப்பானுக.... அதையெல்லாம் பார்த்தா நாங்க செய்யறது சும்மா ஜுஜுபிதாம்ப்பா... ஒண்ணும் ஒர்ரி பண்ணாத"
ஆறுதலான அவர்கள் வாதம் பிரமாதம்! ஆனால் இந்த டிஜிட்டல் யுகத்தில்
' இந்த ஏமாற்று வித்தையெல்லாம் எல்லாம் இனி செல்லுபடியாகாது நைனா' என டிக்கெட் முறையெல்லாம் ஸ்மார்ட் ஆகிப்போயல்லவா நிற்கின்றது!
லல்லுபிரசாத் யாதவ் ரயில்வே மந்திரியாய் இருந்தபோது பீகாரிலிருந்து கன்னியாகுமரிக்கு தெய்வதரிசன சுற்றுலாவுக்கு வந்த மக்கள் கூட்டம் ஒன்று டிக்கெட் வாங்கவே மறுத்துவிட்டது."எங்க பெரிய ஐயா மந்திரியா இருக்காரு ரயிலெல்லாம் அவுருக்கு சொந்தம். அப்டி இருக்கையிலே நாங்க எதுக்கு டிக்கெட் வாங்கணும்?" டிக்கெட் பரிசோதகருக்கு அவர்களது காரசாரமான பதில்!!
எங்கள் அம்மா சொல்லும் இந்த சம்பவத்தை திரும்பத்திரும்ப கேட்டு ரசிப்பதில் பிள்ளைகள் எங்களுக்கு பெரிய சந்தோஷம்! 1920களில் நடந்த சமாச்சாரம் இது. கிராமத்துக்கு வந்த மாமா தன் அக்கா பிள்ளைகளை கொஞ்ச நாளைக்கி திருச்சியில் இருந்த அவர்கள் வீட்டிற்குக் கூட்டிப்போக கும்பகோணம் வந்து ரயில் ஏறுகிறார்கள். ரெட்டை மாட்டு வில் வண்டி ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு வந்து இறக்கி விட்டு போய்விட்டது. பிள்ளைகளுக்கு ரயில் பயணம் புதிது. அப்போது எங்கள் அம்மாவுக்கு ஐந்து வயது இருக்குமாம்.
"சித்தாடைய அவுத்துரு ஆயி." ஸ்டேஷனுக்குள் நுழைந்தவுடன் மாமா பிரியமாக அம்மாவுக்கு கட்டளை போட்டார்களாம். எதிர்த்தாற்போல் நின்றிருந்த மாமா பெண் ஏதோ இது ஒரு கை வந்த கலைபோல் சித்தாடையை அவிழ்த்து அது அம்மா கையில் கொடுத்தது.
"மாமா நான் எதுக்கு சித்தாடையை அவுக்கணும்?"
"ஆயி சித்தாடய அவுத்துட்டு ரயில்ல ஏறுனோம்ணு வச்சுக்க ஒனக்கு டிக்கிட்டு வாங்க வேணாம்..... எறங்கையில திரும்ப கட்டிக்கிலாம்."
" அப்ப எனக்கு டிக்கிட்டு வாங்கிருங்க."
தெள்ளத்தெளிவான பதில்!!
ஐய்யய்ய... எவனாவது ரயிலுக்கு அநாவசியமா காசு குடுப்பாங்களா என்னா......?
அந்தப்பெண் பதில் எதுவும் சொல்லாமல் ஏவிஎம் சரவணன் சார் போல கட்டின கை பிரிக்காமல் நின்று கொண்டிருந்தது.
"ஆயி நல்ல பிள்ள இல்ல.... மாமா ஒன்ன பிரபாத் தியேட்டர்ல மாட்டினி சினிமாவுக்கு கூட்டிகிட்டுப்போறேன். ப்ரோட்டா கொத்துகறி வாங்கித்தாரேன்... செல்லமுல்ல... சித்தாடைய அவுரு தாயி....
"மாமா எனக்கு ஒரு டிக்கிட்டு வாங்குங்க." ஒடஞ்ச ரெக்கார்டு கெட்டது!!
இது சரிப்பட்டு வராது என்று மாமா அத்தையிடம் கண்சாடை காட்டிவிட்டு தன் கெட்டியான பிடிமானத்தில்அம்மாவை பிடித்துக்கொள்ள அத்தை சித்தாடை முடிச்சில் கைவைக்க இந்த எதிர்பாராத தாக்குதலால் அம்மா வேட்டு வைத்த பொங்க மாடாக சித்தாடையை ஒரு கையில் பிடித்துக்கொண்டு பெருங்கூச்சலுடன் சுற்றி சுற்றி ஓட ஸ்டேஷனின் மொத்த ஜனங்களும் அங்கு கூடிப்போனது!
கூட்டத்திற்கு பதில் சொல்லி பெருத்த அவமானத்தை தேட விரும்பாத மாமா கடைசியில் ஒரு அரை டிக்கிட்டை காசு கொடுத்து வாங்கித்தான் தொலைத்தார்!
மும்பையின் ரயில் பயணி ப்ரேம்லதா ஒரு பெரியதொழிலபதிபரை தாக்கினார் என்றால் அதே மும்பையின் ரயில் பயணிகள் பலர் சிறு தொழில் அதிபர்கள் அநேகருக்கு ஆதரவு அளித்து அவர்கள் வங்கி நிலுவையை லட்சக்கணக்கில் செழிக்க வைத்தது முன்னதை விட சுவரசியமான ஒன்று:
1980களில் நடந்த கதை இது.... நமது லைஃப் இன்சூரன்சு போலவே ரயில் பயணிகளுக்கு இது ஒரு இன்சூரன்சு திட்டம். ஆனால் ஒரு பெரிய வித்தியாசம் என்னவென்றால் நம் இன்சூரன்சு ஆபிசர்களைப்போல் இல்லாத பொல்லாத டாக்குமெண்ட்டுகளையல்லாம் கேட்டு தொந்தரவு செய்யாத ஆபிசர்களைக் கொண்ட ஒரு திட்டம் இது . ஜனங்களுக்கு சவுகரியமாக ஸ்டேஷன்களின் அருகாமையிலேயே அவர்கள் ஆபீஸ் இருந்தது. பயணிகள் செய்ய வேண்டியதெல்லாம் இவ்வளவுதான். அவர்கள் பெயரையும் முகவரியையும் அங்கிருக்கும் ஆபீசருக்குக் கொடுக்கவேண்டும்..... வீட்டில் வந்து இதெல்லாம் உண்மையா என்று சரி பார்க்கும் வேலையெல்லாம் அங்கு கிடையாது... நம்பிக்கையில் தானே தொழில் நடத்த வேண்டும்! இதற்காக செலுத்தவேண்டிய வருடத்திய பிரிமியம் தொகை பத்து ரூபாய். இதை செலுத்திய மாத்திரத்தில் உங்களுக்கு ஒரு கார்டு வழங்கப்படும்.. இந்த கார்டை கைவசம் வைத்துக்கொண்டு பயணிகள் மும்பையின் மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணம் செய்யலாம்.
இது எப்படி எப்படி என்று சாதாரண ஜனமாகிய நாம் மண்டையைப் பிராண்டிக்கொள்ளலாம்... ஆனால் இந்த சிறு தொழில் அதிபர்களோ மனோதத்துவ ரீதியில் கில்லாடிகள்!
தொங்கிக்கொண்டும் ஊஞ்சலாடிக்கொண்டும் செல்லும் மும்பயின் மெட்ரோ ரயில் கூட்டத்தில் மெட்ரோ ரயிலின் டிக்கெட் சோதனை செய்யும் அலுவலர்களும் பயணிகளைப்போலவே நெறிபட்டு மிதிபட்டு அசந்து .. நாறிப்போயிருப்பார்கள்.. அதில் எந்த டிக்கெட்டை எந்தப்பக்கம் அவர்கள் பரிசோதனை செய்ய...? வெகு பல சமயங்களில் டிக்கெட்டுகளை சோதனை பண்ணுவது இயலாத ஒரு காரியம். இந்த சின்ன தத்துவந்தான் இந்த ரயில் இன்சூரன்சின் அடித்தளமாய் ஆகிப்போயிற்று.
இந்த இன்சூரன்சுப் பயணிகள் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒரு முறை டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டிக்கொள்ள நேர்ந்தால் வாயைப்பொத்திகொண்டுஃபைனுக்கான பணத்தை பரிசோதரிடம் செலுத்தி ரசீதைப்பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த ரசீதைக் கொண்டு வந்து இன்சூரன்சு ஆபீசில் காட்டினால் கேள்வி எதுவும் கேட்காமல் ஃபைன் தொகை முழுவதையும் பயணிக்குக்கொடுத்துவிடுவார்கள். அவர்கள இன்சூரன்சு அட்டையில் இதை குறித்துக்கொள்வார்கள்.
அதோடு கூடவே இலவச இணைப்பாக டிக்கெட் செக்கரிடம் மாட்டிக்கொள்ளாதிருப்பது எப்படி என்பது குறித்து ஒரு சின்னஅறிவுரையும் கொடுப்பார்கள். ஒரு வருடத்திற்கு அதிகபட்சம் மூன்று முறை மாட்டிக்கொள்ளலாம். அதற்கு மேல் போனால் இன்சூரன்சு கம்பனி பொறுப்பேற்காது.
இப்படி டிக்கெட் இல்லாமல் பயணிப்பது பொதுவாகவே பயணிகளுக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது. சிடுமூஞ்சி பயணிகள் கூட ஒருவருக்கொருவர் சிரித்து பேசிக்கொள்ளும் சூழ் நிலை ரயில் பெட்டிகளில் நிலவியது. ஆத்துல போற தண்ணிய நீ குடி நாங்குடி வரப்புல ஓடுற நாய் குடிங்கிற பழமொழியை அறிந்த பல பயணிகள் இந்த இன்சூரன்சு திட்டத்தில் வீட்டில் இருந்த எல்லா நபர்களையும் சேர்த்துவிட்டிருந்தனர்.வெளியே குடும்பத்தோடு போவ கொள்ள,
ஓலா கேப் விளம்பரம் மாதிரி பிள்ளைகளுக்கு தாராளமாய் வாங்கி கொடுக்க இந்த சேமிப்பு உதவி புரிந்தது. இந்த இன்சூரன்சு பாலிசிதாரர்கள் லட்சக்கணக்கில் பெருகி நின்றனர். ஒரு கட்டத்தில் டிக்கெட் வாங்கி பயணம் செய்பவர்களைவிட பாலிசியில் பயணம் செய்தவர் தொகை அதிகம் என்றது ஒரு கணிப்பு. இதனால் இந்த சிறு தொழிலதிபர்களின் தொழிலில் நல்லதொரு முன்னேற்றம். வங்கி சேமிப்பும் ஏறு முகத்திலேயே!
ஆயினும் எல்லாத் தொழிலிலும் இறங்கு முகம் என்றும் ஒன்று இருக்கிறதல்லவா?
அந்த சூழ் நிலையை இச்சிறு தொழிலதிபர்கள் சந்திக்க வேண்டிய சூழ் நிலை ஒரு நாள் வந்துதான் சேர்ந்தது.
ஒரு நாள் நம் இன்சூரன்சு பயணி ஒருவர் டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டிக்கொண்டார். டிக்கெட்டைக்காட்ட சொன்ன மாத்திரத்தில் அவருக்குக்கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
"இன்சூரன்சு பண்ணியிருக்கும் என்னிடம் ஒருவன் டிக்கெட் கேட்பதாவது....."
" என்னிடம் டிக்கெட்டும் கிடையாது, காசும் கிடையாது" என்ற அவர் தனது இன்சூரன்சு கார்டை எடுத்து முகத்தில் எறியாத குறையாய் அவரிடம் கொடுக்கிறார்.
மலைத்துப்போனார் டிக்கெட் பரிசோதகர்... போன மீட்டிங்கில் ஏன் ரயில்வே வருமானம் சில காலமாய் குறைந்து கொண்டே இருக்கிறது என்ற கேள்விக்கு அவர் பதில் தெரியாமல் முழித்தது ஞாபகத்திற்கு வந்தது. ஆஹா...... இவ்வளவு பெரிய இன்சூரன்சுத் திட்டம் நம் கண்ணில் படாது போனது எப்படி....?! விசாரணை நடத்தியதில் சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு பயணிகள் பாலிசி எடுத்திருப்பது வெட்ட வெளியாயிற்று...
அப்புறம்......? அப்புறம் என்ன.....? சிறு தொழில் மன்னர்களெல்லாம் ஜெயிலுக்குப்போக பழைய குருடி கதவைத்திறடி என்ற கணக்கில் பயணிகள் டிக்கெட் வாங்கிக்கொண்டு கோபதாப வருத்தங்களோடு ரயிலில் நெருக்கியடித்து பயணிக்க ஆரம்பித்தனர்!!