Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Monday, 8 August 2016

மனதில் உறுதி (வெறி) வேண்டும்

'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' பார்த்துக்கொண்டிருந்தோம். நிகழ்ச்சியின் தொகுப்பாளர்  நடிகர் அரவிந்தசாமி.
போட்டியாளர் ஒருவர் "உங்களிடம் பெர்சனலாக ஒரு கேள்வி கேட்கலாமா" என்றார்
"கேளுங்கள்" என்றார் அரவிந்தசாமி
"உங்களிடமுள்ள ஒரு தனித்தன்மை அல்லது ஒரு அரிய குணம் என்ன?"
கொஞ்ச நேரம் யோசித்த அவர் " நடிப்புத்துறையே எனக்கு என்ன என்று தெரியாது... அப்பா ஒரு தொழிலதிபர்.....பொதுவாக அந்த வழிதான் மகனுக்கும் அமையும். ஆனால் எதிர்பாராதவிதமாய்  ஒரு வாய்ப்பு கிடைத்தபோது ஒரு சவாலாக எடுத்துகொண்டேன். இப்போது கூட பாருங்கள் எனக்குத் தமிழில் பெரிய புலமை கிடையாது. கல கலப்பான ஆளும் கிடையாது.ஆனாலும் இந்த நிகழ்ச்சிக்கு  நான் அழைக்கப்பட்டபோது அதையும் ஒரு சவாலாகவே எண்ணி இன்று உங்கள் முன்....... இத்தனை பேருடன் சகஜமாகப் பேசிப் பழகி " என சொல்லி சிரித்தார்.
எதைத் தொட்டாலும் அதில் வெறி பிடிக்க வேண்டும் என்பதற்கு இவர் நமக்கு முன்னோடி.
இவரது பதில் என்னை  அருமையான நண்பர் ஒருவரை நினைவுக்குக்கொண்டு வந்தது.  அரசாங்கத்தில் மனதிற்குப் பிடித்தமான பெரிய பதவி. அணைத்துச்செல்லும் மனப்பாங்கு. இதைத்தவிர வேறொன்றுமே தெரியாமல் வாழ இவருக்கு அதிர்ஷ்டமான துணைவி.  எந்தகாலுக்கு எந்த ஷூ என்பதைக்கூட அறியாமல் அவரை சுகம் காண வைத்தவர். யாருக்கு என்ன செய்யவேண்டும் எந்த நிகழ்ச்சிக்கு என்ன அணிய வேண்டும், ஷர்ட்டில் பேனா இருக்கிறதா பேனாவில் இங்க் இருக்கிறதா பேண்ட் பாக்கெட்டில் கைகுட்டை இருக்கிறதா, கையில் வாட்ச் இருக்கிறதா, கண்ணில் கண்ணாடி உள்ளதா  என சப் ஜாடாவும் அம்மாதான்! ஓய்வு பெற்ற பின்னும் இக்கதையில் மாறுதல் ஏதுமில்லை. அவருண்டு அவர் புத்தகங்கள் உண்டு அவர் எழுத்துக்கள் உண்டு......அன்பு மனைவி அணைத்துக்கொள்ள உண்டு.....என சுகமே வாழ்ந்தார். அந்த ஒரு நாள் அவர் வாழ்க்கையில் எதிர்பாராத ஒன்று. வாழ்க்கையையே ஸ்தம்பிக்க வைத்துவிட்ட அந்த அருமைப்பெண்மணி மறைந்துதான் போனாள்.
அழக்கூட தெரியாத அப்பாவியாக வாய் திறவாமல் பல நாட்கள் அமர்ந்திருந்த அவருக்கு ஏதோ ஆகிவிடும் முன்  மூன்று மகன்களும் ஒன்று கூடி" அப்பா எங்களில் யாராவது ஒருவரோடு வந்து விடுங்கள். அம்மாவைப்போல் எங்களால் முடியாவிட்டாலும் உங்களைக் கட்டாயம் சந்தோஷமாக வைத்திருப்போம். யாரிடம் போகப்போகிறீர்கள் என நீங்களே முடிவு செய்யுங்கள்... இல்லை எல்லோரிடமும் சில மாதங்கள் தங்குவதிலும் எங்களுக்கு சம்மதந்தான்" மகன்களும் மருமக்களும் ஒரு மனதோடு சொன்னார்கள்.
"கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நான் தனிமையில் யோஜனை செய்யவேண்டும்"
அரை மனதோடுதான் அவர்கள் சம்மதம் வந்தது. ஒன்றுமே தெரியாதவர் என்னத்த யோஜனை செய்து என்னத்த முடிவெடுக்கப்போகிறார்?
எல்லோருடைய மனதிலும் பெரிய கேள்விக்குறிதான்!
அந்த நாளும் வந்தது.
"நான் தனியாக இருப்பதாக முடிவு செய்திருக்கிறேன்."
"அப்பாவுக்கு மூளை கலங்கித்தான் போய்விட்டது." மூன்று குடும்பமும் ஒரு மிக்க அதிர்ந்து உறைந்து போயின!
 "நம் வீட்டுத்தோட்டத்தைப் பார்த்துக்கொள்ளும் தோட்டக்காரர் மனைவி வீட்டோடு தங்கி என்னைப்பார்த்துக் கொள்வதாக சொல்லியிருக்கிறார். அவர்களும் அகதிகளாய் வந்த குடும்பம். அவர்கள் பிள்ளைகள்  படிப்பிற்கு நான் உதவி செய்யலாம்.என்னை பண விஷயத்தில் இவர்கள் ஏமாற்றிவிடுவார்கள் இல்லை என்னடைய திறமையற்ற தன்மையை அவர்களுக்கு சாதகமாக்கிக்கொள்வார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். பரவாயில்லை நான் ஒண்ணாம்வாய்ப்பாட்டிலிருந்து கற்றுக்கொண்டு பட்டப்படிப்பு செல்லவே ஆசைப்படுகிறேன். நானும் விழுந்து எழுந்திரிக்க வேண்டும், எதிர் நீச்சல் போட கற்றுக்கொள்ள வேண்டும் அப்படி முடியாமல் போனால் தோற்றுப்போய்விட்டோமே என வெட்கப்படாமல் உங்கள் அன்பையும் ஆதரவையும் கட்டாயம் கேட்பேன். சரிதானே?"
"என்னா இவ்வளவு பெரிய படிச்ச முட்டாளா இருக்காங்க அப்பா? இது பெரிய ரகளையிலதான் போயி முடியப்போவுது."
"பரவாயில்லப்பா... கொஞ்சம் பண நஷ்டம் ஆனாலும் ஆவுட்டும் அவுங்க இஷ்டத்துக்கு  கொஞ்ச நாள் விட்டுப்புடிப்போம்.வழிக்கி வந்துவாரு பாரு"
சாப்பாட்டிற்கு வாராந்திர அட்டவணை போட்டார்
வரவு செலவு கணக்கெழுதினார்.
தோட்டக்காரர் பிள்ளைகளை தினசரி ஆங்கில நாளிதழை படிக்கச்சொல்லி கேட்டார்.
விருந்துகளை வரவேற்றார். வீட்டிற்கு முன்னிருந்த கும்குவாட் மரத்திலிருந்து புத்த புதிய பழங்களின் குளிர் பானம் கொடுத்து உபசரித்தார்.
வாழ்க்கையை 'கெய்சன்' முறைக்குக் கொண்டு போனார்.( ஜப்பானிய தொழிற்சாலைகளிள் கடைப்பிடிக்கும் முன்னேற்றம் தினம் தினம் முன்னேற்றங்கள்) ஒரு கட்டத்தில் அவர்கள் குடும்பத்தாரே மூக்கில் விரல் வைக்கும் வகையில் விருந்து கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
" நீங்க எப்ப வேணுமென்றாலும் இந்த வீட்டுக்கு வாங்கப்பா... அம்மா இருக்கிறதாவே நினச்சுக்குங்க." பிள்ளைகளுக்கு அதிர்ச்சி தந்த ஆனாலும் சுகம் கொடுத்த வார்த்தைகள்!
இந்த மனிதன் சிறுவனாயிருக்கையில் வீட்டிலேயே மக்கு இவன் ஒருவன் தான் எனப் பெயர் எடுத்தவன். இவன் அம்மாவின் வேண்டுதல் இது ஒண்ணுதான் "சாமி என் மத்தபிள்ளைகளெல்லாம் படிப்பில் ஜே ஜேண்ணு கொடி கட்டுதுக. இந்தப்பையன நீ எப்புடியாவது எஸ் எஸ் எல் சி பாஸ் பண்ண வச்சு கெவுர்மெண்டுல ஒரு கிளார்க் உத்தியோகம் வாங்கிக்குடுத்துடுப்பா."
 தட்டுத்தடுமாறி எஸ் எஸ் எல் சி பாஸ் பண்ணினவன் அண்ணன்களாட்டம் நானும் காலேஜ் போவேண்ணு அடம் புடிக்க சரி போவுட்டும் எனப் பெற்றோரும் அனுப்பி வைக்க நடந்த கதை திசையில்ல மாறிப்போச்சு. காலேஜ் போனவன கையில புடிக்க முடியில.  மேல மேல படிச்சி ஸ்காலர்ஷிப் வாங்கி அமெரிக்காவுக்கு மேல் படிப்பிற்கு போய் ஜெயிச்ச அந்தப்பையந்தான் இண்ணைய கதையின் நாயகன் டாக்டர் B.W.X. Ponnaiah!

அங்கிளின் சொந்த வாழ்க்கை அனுபவ பகிர்வைத்தான் இன்று நான் உங்களுக்கு அளித்துள்ளேன். நமக்கு அருகில் நடக்கும் சில விஷயங்கள் நம்மில் ஏற்படுத்தும் தாக்கம் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களில் வரும் அரிய பெரிய  விஷயங்களைவிட உந்துதல்   நிறைந்தது ஊக்குவிக்க வல்லது. அங்கிளின் வாழ்க்கைப்பயணமும் எங்களுக்கு அவ்வாறு அமைந்தது எங்கள் அதிர்ஷ்டமே!