கிராமத்து திருநாள்...
சித்தப்பா பையனோடு பேசிக்கிகொண்டிருந்தேன்.
லாரி ஓட்டுபவர்.........
"சந்தோஷம்ப்பா......பொம்பள பிள்ளைக ரெண்டையும் நல்லா படிக்க வச்சிட்ட...
நல்ல வேலையும் கெடைச்சிருச்சு......
அடுத்ததும் நல்லதுதான் நடக்கும்...."
"அக்கா ஒத்த சம்பளத்துல முக்கி மொணவிதான் சமாளிச்சோம்.....
சமயத்துல காய்கறி வாங்ககூட காசு இருக்காது...
சம்சாரம் வாய் தொறக்காது...
முருங்கக்காயிலயும் முருங்கக் கீரையிலையும் சமாளிச்சு முடிச்சுருவோம்......
ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்ட...."
"கவலப்படாத.....
இனிமே எல்லாம் வளமாவேதான்..."
தட்டிக்கொடுத்தேன்
கோட காலத்துல கிராமத்துக்கு வர்ரப்பயெல்லாம் முருங்கக்கீர பருப்புகொழம்பு, முருங்கக்கீர வதக்கல், முருங்கத்தண்ணி, முருங்கக்கீர வாழப்பூ பொரியல், முருங்கக்கீர வறுத்த கடலைத்தூள், முருங்கக்கா கத்திரிக்கா பொரியல் முருங்கக்கா மொளகு கறி முருங்கக்கா கடலப்பருப்பு தக்காளி சட்னி முருங்கக்கா ஆட்டுக்கறி பொரியல் என எங்களையெல்லாம் தாத்தா அம்மாச்சி முருங்க மரத்திலேயே ஏற்றி விட்ட கொடுமை ஞாபகத்துக்குவர அவனுக்காக மனசு கொஞ்சம் பரிதாபப்பட்டது நிஜமே!
கல்கத்தாவில் இருந்த சில வருடங்களில் ஆச்சரியமான சில விஷயங்கள் காலையில் ஐந்தரை ஆறுமணிக்கெல்லாம் திறக்கும் மீன் காய்கறி மார்கெட்டுகளும், பாலிதின் பையைத்தேடாமல் மீனுக்கென்று இருக்கும் ஒரு கோணிப்பையைத்தூக்கிக்கொண்டு படையெடுக்கும் ஆண்கள் கூட்டமும்தான்!
அங்கே ஆண்கள்தான் மீன் செவிள் சிவப்பு பார்த்துஅமுக்கி ஆராய்ந்து பேரம் நடத்துவார்கள்.
இதைத்தவிர அங்கு குமிந்து கிடக்கும் முருங்கைப்பூகுவியல்களும் தவப்பிஞ்சு முருங்கைப்பிஞ்சுகளும்.
மீன்களுக்கு நிகராய் இவைகளுக்கும் அங்கே இருக்கும் டிமாண்டு என்னை வியக்க வைக்கும்!!!
திரும்ப சென்னைவாசியாகிவிட்டோம்.
வெட்டுவாங்கேணியிலிருந்த புனித அன்னம்மாள் மடத்துக்கு ஒரு வேலை விஷயமாகச்சென்றிருந்தோம்.
மதர் காபி குடிக்க எங்களை உள்ளே கூட்டிச்சென்றார்கள்.
சாப்பாட்டு அறை மேசையின் நடுவே ஒரு குண்டான் நிறைய சுட சுட கலங்கலாக தண்ணீர் போல ஒரு வஸ்து.......
எட்டிப்பார்க்கிறேன்.
"முருங்கத்தண்ணிம்மா.....
ஒடம்புக்கு நல்லது...."
மதர் விவரம் அளித்தார்கள்.
ஓட்டமும் நடையுமாக வேர்க்க விறு விறுக்க சிஸ்டர்கள் பள்ளியிலிருந்தும் டிஸ்பென்சரியிலுமிருந்து 11 மணி சிறு இடைவேளையில் வருகிறார்கள்.
"நல்லா போஷாக்கா ஒரு ஜூஸ் கீசு குடுக்கமாட்டாங்களா என்னா...
அப்படியென்னா ஒரு கஞ்சத்தனம்...? மனசுக்குள்ள மடத்த கரிச்சுக் கொட்டினேன்.
ஒரு நாள் வெளியே போன நான் வர வழியில் இருக்கும் தோழி வீட்டை எட்டிப்பார்க்கிறேன்.
அவளுடைய சின்னப்பெண் யூனிபாஃர்ம் கூட மாற்றாமல் தட்டு நிறைய சாம்பாரிலிருந்த முருங்கைக்காய் துண்டுகளை சுவைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
ஸ்கூலிலிருந்து வந்திருக்கும் பிள்ளைக்கு ஏதாவது டிபன் பண்ணிக்குடுக்க வேண்டியதுதானே...
பாவம் பிள்ளைக்கு எக்கச்சக்க பசி......
சவுஞ்சு சவுஞ்சு திங்கிது....
வாய்க்கு வந்த வார்த்தை முகத்தாட்சணியம் காரணமாக மனசுக்குள்ளேயே ஒட்டிக்கொண்டது.
ஆனால் இந்த முருங்கையின் மகிமையை உணருவதற்கு
"தனக்கு வந்தாதானே தெரியும் தலவலியும் திருகுவலியும்"
என்ற கதைதான் எனதாகிப்போனது.
வருடத்திற்கு மூன்றுமுறை நடக்கும் இரத்தப்பரிசோதனை இந்நாள் வரை ஒரு சம்பிரதாய சடங்குதான்.பிரமாதமான வேறுபாடுகளை பெரிதாகக் கண்டதில்லை.
ஆனால் இந்த முறை சிவப்பு இரத்த அணுக்கள் ஏகத்துக்கும் குறைந்திருக்க மனசில் கிலி.
ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவ நண்பருடன் இதைப்பகிர்ந்து கொள்கையில்
"அட உள்ளங்கயில மருந்த வச்சிகிட்டு ஊருபூரா தேடுறிங்களே........
தினமும் முருங்கக்கீர சூப் குடிங்க எண்ணைக்காவது ஒரு நாள் அவுத்திக்கீர சூப் குடிங்கண்ணு அறிவுறுத்த ஒரே வாரத்தில் இரத்த அணுக்கள் கூடிப்போய் நின்ற அதிசயத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் முடிவுதான் இன்றைய கதையாக உங்கள் முன்!
மொரிங்கா ஒலிபெஃரா என்ற தாவரப் பெயர் நம் முருங்கைக்காயிலிருந்து இடம் பெயன்ற ஒன்றுதான் இமாயாலயத்தின் தெற்கு அடிவாரத்தில்
பிறந்த இந்த முருங்கை இந்தியா முழுவதிலும் தழைத்து நிற்கிறது.
92 ஊட்டச்சத்துக்கள் 46ஆண்ட்டி ஆக்சிடெண்டுகள் 36 வீக்கம் குறைக்கும் ஏஜண்டுகள் வைட்டமின் ஏ பி1பி2 ப்3 பி4 பி7 சி டி ஈ கே ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த முருங்கை உடம்பை எப்போதும் ஏர்கண்டிஷன் போல குளு குளு வென்று வைத்திருக்கும் வலிமை கொண்டது.
உடம்பில் கால்சியம் குறைவா? நமக்கு தினசரித் தேவையில் 125 சதத்தை முருங்கை இலைகள் தருவதற்குத்தயார்!
மங்கனீசு..? ம்ம்ம்ம்ம். அதுவுந்தான்!
61சதம் அதன் கைவசம்!!
கால்சியமும் மாங்கனீசும் ஜீரணத்திற்கும் எலும்பு மற்றும் பற்களின்ஆரோக்கியத்திற்கு மிக அவசியமானவைகள்!
இவ்வளவுதானா...
சொச்சம் மிச்சம் உண்டா.......?!
பொறுங்க.......
பொறுங்க...
கீரைகள்ள இரும்புச்சத்து இருக்கிறது நமக்குத் தெரிஞ்ச விஷயந்தான் ஆனா முருங்கக்கீரையில.........? எந்த கீரையையும் விட 24 மடங்கு கூட இரும்புச்சத்துங்க....!
வாழ்வாதார மரம்,அம்மாவின் உற்ற தோழி, அதிசய மரம், சுபசகுன மரம் என பல அடைமொழிகள் நம் முருங்கைக்கு!!
சென்னையில் நான் மட்டுமல்ல நீங்களும் இதைப் பார்த்திருக்கக்கூடும்.
குப்பங்களின் முருங்கை மரங்கள் காய்க்கும் பருவத்தில் சடை சடையாகக் காய்களோடு அலங்கார மங்கையாய் காட்சியளிக்கும்.
அவ்வளவு காய்ப்பு மற்ற இடங்களில் காணவே முடியாது.
இயற்கை தன் சத்தூட்டஉணவை இரு கைகளால் அள்ளி அள்ளி வழங்கி இந்த மக்களின் தேவைகளை ஈடு செய்கிறாளோ?!
உள்ளூர் மாடும் உள்ளூர் மாப்பிள்ளையும் உள்ளூரில் விலை போகாது என்ற ஒரு சொல் வழக்கு நம்மிடையே உண்டு...
இது நம் முருங்கைக்கு ரொம்பவே பொருந்தும்...
"ஒண்ணுமில்லாட்டி இருக்கவே இருக்கு முருங்கைக்கீரை"
என நாம் உதாசீனப்படுத்தும் நம் முருங்கைக்கு ஒரு பெரிய வெளி நாட்டு ரசிகர் இருக்கிறார்."2012ல் என் வயிற்றில் என்ன நோய் எனத் தெரியாமல் கான்சராக இருக்குமோ என்று நான் அவதிப்பட்டு நொடித்து நின்ற நேரத்தில் இந்தியாவின் அதிசயமான முருங்கைதான் என்னை குணமாக்கியது"
என அவர் அறுதியிட்டுக்கூறுகிறார்.
சமீபத்தில் காலமான க்யூபா அதிபர் ஃபிடல் கேஸ்ட்ரோதான் அந்த முருங்கையின் விசிறி.
அவர் கேரளா மற்றும் தமிழ் நாட்டிற்குத் தன் பிரதிநிதிகளை அனுப்பி முருங்கை விதைகளை தன் நாட்டிற்கு எடுத்துச்சென்று பயிர் செய்கிறார்.
அமினோஆசிட் நிறைந்த இந்த முருங்கை 'ஏழைகளின் உற்ற தோழன்' என்கிறார் அவர்!
வீட்டுக்கு ஒரு முருங்கை வேண்டும் என்ற நம் முன்னோர்களின் ஞானம், அதுவே நம் ஆயூர் வேத சித்த மருத்துவங்களில் பிரதிபலிக்கிறது.
அந்த ஞானத்தை இன்றைக்கும் எடுத்துச்செல்லும் வெட்டுவாங்கேணி மடத்து மதரும் என் தோழியும் நல்லதொரு பாடமளித்து நெஞ்சை நிறைக்கிறார்கள்.
இப்போது என் வீட்டுத்தோட்டத்தில் நிற்கும் முருங்கை மரங்களும் ஆரோக்கிய வாழ்வின் திரவியமாய் உயர்ந்ததொரு இடத்தையல்லவா பிடித்திருக்கின்றன!
பி.கு.:
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் இந்த அபூர்வ முருங்கையையும் அளவோடு உபயோகிப்போம்.
இன்னொரு முக்கிய விஷயம்.
சில பேர் முருங்கக்காயை அறுக்கும்போது சுத்தம் பண்ணுகிறேன் பேர்வழி என்று மேல் தோலை சீவுகிறார்கள்.
ஆனால் அந்த வெளித்தோல்தான் குழம்புக்கோ பொரியலுக்கோ வளமையையும் ருசியையும் அள்ளித் தரும் ஊக்குவி!