ஆமாங்க....
வெகு அவசியங்க!!
அந்த தினசரியில் வந்த செய்தி இப்படியும் கூடவா நடக்கும் என என்னை வியக்க வைத்தது!
வீட்டில் ஏசி இருக்கிறது......ஃபிரிஜ் ஓடுகிறது.....
தண்ணீரைக்கொதிக்க வைக்கும் மெஷின்கள் இயங்குகின்றன கேஸ் அடுப்பு எலக்ட்ரானிக் அவன்கள் சமையலறையில்…… கராஜில் கார் நிற்கிறது..........
"வசதியான வீடுதானே? இதிலென்ன வியப்பு வேண்டியிருக்கிறது?"
"ஆனால் வீட்டில் டாய்லெட் மட்டும் கிடையாது"
அந்த பீஹார் மாநிலம் கசியாப்பூரின் 200 வீடுகளிலும் டாய்லெட் வசதி கிடையாது.
இன்னமும் சொம்பைத்தூக்கிக்கொண்டு ஆண்கள் அவர்கள் பகுதிக்கும் பெண்கள் அவர்களுக்குண்டான இடத்திற்குந்தான் செல்கிறார்கள்!!
"எதற்காக இந்த முடிவு? ஊர் வேண்டுதலோ.....? எவ்வளவு நாட்களுக்கு?"
" காலத்துக்குந்தான் சாமி!
இருபத்து ஒன்பது வருஷங்களுக்கு முன்னே வீட்டிலே டாய்லட் கட்ட முனைந்த ஒருவர் வீட்டில் சின்னப்பையன் காரிய காரணமில்லாமல் இறந்து போய்விட்டானாம்.
இந்த மூட நம்பிக்கைதான் இந்த ஊர் மக்களை ஒன்று சேர்த்து டாய்லட் கட்ட விடாமல் அடிக்கிறது!
இதனால் ஊர் இளைஞர்களுக்கு வெளியூர்க்காரர்கள் பெண் கொடுக்க தயங்குகிறார்களாம்!
திருச்சியின் பழைய பகுதிகள் காசியாப்பூருக்கு ஒரு படி மேல்.
அங்கு வீட்டுக்கு வீடு டாய்லட் வசதி உண்டு.ஆனால் ஒரு சங்கடம்.
நுழைந்தவுடன் வீட்டுத் திண்ணை ஓரத்திலேயே அதற்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.
அதன் கழிவு வீட்டிற்கு முன் ஓடும் திறந்த சாக்கடையில்தான் சங்கமாகும்!
நாங்கள் சின்னப்பிள்ளைகளாய் இருந்த போது வயல் வழி ஒதுங்குவதிலிருந்து முன்னேறி தோட்டத்துப்பக்கத்தில் கட்டப்பட்ட வசதிகளுக்கு முன்னேறினோம்.
ஆனால் இரவு நேர அவசர ஆத்திரத்திற்கு பேயாட்டம் ஆடும் மரங்களுக்கு இடையே அப்பாயிகள் சொல்லியிருந்த பிசாசுக்கதைகளும் சேர்ந்து கோரஸ் பாட நம்மைப்போலவே உதறலில் இருக்கும் அக்கா அல்லது தங்கையோடு போய் வருவது மகாப்பெரிய சாதனைதான்!
பெரிய அக்காவிற்கு கல்யாணம் முடிந்து சென்னை வாசியாகி விட்டிருந்தபோது அக்காவைப் பார்க்கும் சாக்கில் சென்னையை சுற்றிப்பார்க்க வந்திருந்தோம்.
அக்கா அப்போது மூன்று குடித்தனத்துக்குள் ஒரு போர்ஷனில் இருந்தார்கள்.
ஆனால் எல்லாக் குடித்தனங்களுக்கும் சேர்த்து ஒரே டாய்லட்டுதான்.
அதுவும் மாடிப்படிக்குக்கீழ் இருந்த இடத்தில்!
உள்ளே நுழைந்து கதவை சாத்திவிட்டு பழையசுவர்களிலிருந்து வரும் நாற்றத்தோடு பீடி நாத்தமும் சேர்ந்து கொள்ள வெளியே வருவதற்குள் எனக்கு மூச்சு முட்டிப்போயிற்று!
(நிறைய பேர் ஆண் பெண் பேதமின்றி பீடி குடித்து தங்கள் காலை அலுவல்களை திருப்திகரமாக முடித்துக்கொண்டார்கள் என்பது இன்னொரு சுவையான சமாச்சாரம்!)
மரங்களுக்கு இடையே இருந்த எங்களது இடம் எனக்கு சொர்க்கமாகவே தோன்றியது!
நல்லவேளைஅக்கா அந்த இடத்திலிருந்து வெகு சீக்கிரமே அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள்.
அறுபதுகளின் கடைசியில் எங்களுக்குக் கல்யாணம் ஆன கையோடு ஆந்திராவின் ராஜமுந்திரிக்குத்தான் சென்றோம்.
அங்கிருந்த பேப்பர் மில்லில் இவர் எஞ்சினியர்.
சினிமாவைத்தவிர வேறொன்றையும் அறியாத சிறு நகரம் அது.
எங்கள் அதிர்ஷ்டம், தெலுங்கு படங்களைத்தவிர அவ்வப்போது ஆங்கிலப்படங்களும்போடுவார்கள்.
எங்கள் முதல் படமே ஜெரி லூயிசின் தமாஷ் படம்.
திரைக்குப்பக்கத்தில் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள்.
அவர்கள் ஆங்கிலத்தை தெலுங்கில் சொல்லும் மொழி பெயர்ப்பாளர்களாம்.(பாஷை தெரியாத நம்மை எரிச்சலூட்டுபவர்கள்)
படம் முடிந்து லைட்டுகள் போடப்பட்டன.
எழுந்து வெளியே நடக்க ஆரம்பித்த நான்
"ஐயோ ரத்தம் ரத்தம் என்று கூச்சலிட்டேன்.” "எங்கே எங்கே"
என்று தேடிய இவர் சிரிக்க ஆரம்பித்தார்.ஜெரிலூயிசின் தமாஷ் படத்தை தெலுங்கு மொழியிலேயே கண்டு கேட்டு மயங்கிய ஜனங்கள் அந்த சுகானுபவத்தில் அந்த தியேட்டரையே வெற்றிலை பாக்கு எச்சில் பணிக்கமாய் மாற்றிவிட்டிருந்தனர்! அதுதான் ராஜமுந்திரியின் எங்கள் முதலும் கடைசியுமான சினிமா!
இரண்டாயிரம் பிறப்பதற்கு முன்வரை பெங்களூர் ஒரு மிதமான பச்சைப் பசேலென்று சுகம் தரும் இடம்.
ஐடி கட்டிடக்காடுகள் இல்லாத காலம்.
பெங்களூர் பங்களூருவாக மாறாத நேரம். வருடத்திற்கு ஒருமுறை டீசல் கலப்பிடமில்லாத பசுங்காற்றை சுவாசித்துக்கொண்டு நாங்கள் நடந்த நாட்கள் . கப்பன் பார்க்கில் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருக்கையில்
"புதியதாக ஒரு இண்டோர் ஸ்டேடியம் கட்டியிருக்கிறார்கள்.
அங்கே ஒரு கண்காட்சியும் இப்போது நடந்து கொண்டிருக்கிறது போவோமா?" என்று இவர் கேட்டவுடன் ஜாலியாகக் கிளம்பிவிட்டோம்.
அழகான நிபுணத்துவம்....
தினுசான விளையாட்டுகளுக்கு தனித்தனி இடம்.....
உலக அளவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடிய வசதிகள்!
கண்ணை விரித்துப்பார்த்து எல்லாவற்றையும் உள் வாங்கியபின் அப்பாடா என்று முடிவுக்கு வந்த அந்த கட்டத்தில் தாங்கமுடியாத நாற்றம் குடலைப்பிடுங்கியது.
சற்றே சென்று பார்க்கிறோம் வரிசையாக கழிப்பிடங்கள்.
அங்கிருந்தே இவ்வளவு துர்நாற்றமும்!
கோடி கோடியாய் பணத்தைக்கொட்டி பெங்களூரையே பெருமைப்பட வைக்கும் ஒரு புதுமையை உருவாக்கியவர்கள் இந்த இடத்தை அழகாக நிர்வகிக்க முடியாதவர்களா என்ற ஆதங்கம் மனசைப்பாதித்தது.
ஆனால் நான் சொல்லும் விஷயம் இருபது ஆண்டுகளுக்கு முற்பட்டது.
இன்றைய சென்னை தியேட்டர்கள் போல தலைகீழாய் மாறியிருக்கலாம்.
இருபது வருடங்களுக்கு முன் சென்னை தியேட்டர்களில் எல்லாம் வேண்டாத வாடை நீக்கமற நிறைந்திருக்கும்.
அதுவும் இடைவேளைக்குப்பிறகு கேட்கவே வேண்டாம்.
ஆனால் இப்போதோ குட்டி குட்டி தியேட்டர்களாக.....
சினிமாவுக்குப்போவதே ஒரு அழகான அனுபவமாக இருக்கிறது.
ஆனால் என்ன புதியதாக விதிக்கப்பட்டிருக்கும் வரியோடு சேர்த்து டிக்கெட் விலை கொண்டேமுட்டியான் கணக்கிலல்லவா போய் நிற்கிறது?!
வேலை விஷயமாக தேனி சென்றிருந்த என் மருமகள் ஒரு சின்ன விஷயத்தை என்னோடு வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார்கள்.
சவகாசம் கிடைத்த ஒரு சமயத்தில் அங்கிருக்கும் பல அருவிகளில் ஒன்றில் குளிக்கச்சென்றார்களாம்.
கந்தல் துணிகள் தூக்கி எறியப்பட்ட தின்பண்டங்கள் உணவுப்பொருட்கள் பிளாஸ்டிக் பைகள் நம் பக்கத்தை அலங்கரிக்க அந்தப்பக்கம் இருந்த கேரள எல்லையின் அருவி அப்பழுக்கின்றி காட்சி அளித்ததாம்!
இந்தக் கடிதம் ஒரு பிரபல ஆங்கில தினசரியின் ஆசிரியருக்கு ஒரு வாசகரால் எழுதப்பட்டது.
"ஐயா நான் நிறையவே பயணம் செய்பவன்.
நிறைய இடங்களுக்கு நிறைய நாடுகளுக்குச் சென்று வருகிறேன்.
ஆனால் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் போது சரி திரும்பி வரும் போது சரி அங்குள்ள கழிப்பிடங்களின் துர்நாற்றந்தான் அதன் பெரும் அடையாளமாக இருக்கிறது."
என்று மிக வருத்தமாக சொல்லியிருந்தார்.
அவ்வப்போது செல்லும் நாங்களும் அவருடைய கருத்தை வெகுவாகவே ஆமோதிக்கிறோம்.
விடிவு காலம் எப்போது எனவும் ஏங்குகிறோம்!
கேரளாவில் ஒரு தியான மையம்.
அந்த ஒருவார தியானத்தில் பங்குபெற எனது அக்கா போயிருந்தார்கள்.
போனவுடன் மைக்கில் அறிவிக்கப்பட்ட ஒரு செய்தி அவர்களை வெட்கத்தால் தலை குனிய வைத்ததாம்."தமிழ் நாட்டிலிருந்து வந்திருப்பவர்கள் அவர்கள் டாய்லட்டை தயவு செய்து சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
தண்ணீருக்கு இங்கு ஒரு குறைவுமில்லை!"
மாதம் ஒரு முறை செல்லும் திருச்சி பயணத்தில் காலை உணவு ஒரு சின்ன ஹோட்டலில்தான்.
டாய்லெட் சுத்தமாக இருக்கும்.
தண்ணீருக்கும் பஞ்சமில்லை.
ஆனால் நம் மக்களுக்கு இதை அடுத்தவர்கள் உபயோகிக்க வேண்டுமே என்ற உணர்வு மரத்துதான் போயிருக்க வேண்டும் இல்லாவிட்டால் தங்கள் வேலை முடிந்ததா கதையும் முடிந்து போனது என்ற சுய சுகத்தில் அதை அழுக்காக விட்டு விட்டு வெளியே வருவார்களா என்ன?யாராவது ஒருவர் இந்த நல்ல காரியத்தை ஆரம்பிக்க வேண்டுமே ? அண்ணல்
காந்தியின் அடிச்சுவற்றில் நான் ஃப்ளஷை அடித்துவிட்டு கை ஷவரால் செருப்பு பதித்த அழுக்குகளை அகற்றி சுத்தம் செய்த பின்தான் உபயோகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்!
இப்போது நாம் பகிர்ந்து கொண்ட பல சம்பவங்களுக்கு முத்தாய்ப்பு வைக்க கூடிய ஒன்றைப்பகிர்ந்து கொண்டு நான் இந்த அத்தியாயத்தை கொண்டு இதைப்படிக்கும் பலரின் மனதில் நம் வீட்டின் டாய்லட்டுகள் எப்படி வைக்கப்பட்டிருக்கின்றன என்ற ஆக்க பூர்வமான சிந்தனைக்கு அடித்தளமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
மூன்று நாளைய அகில இந்திய பெண்கள் மாநாட்டுக்கு அந்த பசுமை சிந்தும் இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.முந்தின நாளே மாலையே பெண்கள் கூட்டம் ஜே ஜே என்று கூடிவிட்டது.
முதல் நாள் அமர்வுக்குப்பின் எல்லோரும் தேனீருக்கு கூடியிருந்த நேரத்தில் மைக் வழியாக ஒரு அறிவிப்பு.
அன்று இரவு ஒரு அவசரக்கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாகவும், எல்லோரும் அதில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். என்னவாக இருக்கும் என யூகிக்க முடியாமல் பெண்கள் ஆவலோடு அமர்ந்திருந்தனர்.
அப்போது மேடையில் ஏதோ ஒரு நாடக பாணியில் மாநாடு அமைப்பாளர்களும் தலமைக்கமிட்டிஉறுப்பினர்களும் மெம்பர்களும் கையில் வாளி துடைப்பம் பினாயில் சகிதமாக காட்சி தந்தனர்.
"அன்புள்ள உறுப்பினர்களே உங்களுடன் இந்த செய்தியைப்பகிர்ந்து கொள்ள நான் வெட்கப்படுகிறேன்.
இடத்தின் சொந்தக்காரர்கள் மகாநாடாவது ஒன்றாவது இடத்தை உடனடியாக காலிபண்ணுங்கள் என ஒரே பிடியாய் நிற்கிறார்கள்.
படித்த பெண்களின் கூட்டம் இப்படியா நடந்து கொள்வார்கள் என நம் அடிப்படை சுகாதாரப் பழக்கங்களைக் குறித்து ஏளனம் பேசுகிறார்கள்.
அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி "நாளைக்கு உங்கள் இடம் நீங்கள் கொடுத்த போலவே இருக்கும்."
என சத்தியம் பண்ணிக்கொடுத்திருக்கிறோம்.
இனி மகாநாடு நடப்பதுவும் நடக்காததும் உங்கள் கையில்தான்.
என சொல்லி துடைப்பத்தோடு குனிந்து கும்பிடு போட்டுவிட்டு கீழே இறங்கினர்.
இந்த சின்ன சங்கேதம் நம் பெண்களுக்குப் போதுமானதாயிருந்தது.
மூன்று நாள் மகாநாடும் இனிதே நடந்து முடிந்தது.
நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருக்கும் போது வீட்டின் சாமி மாடத்திற்கு இரண்டு பக்கத்திலும் அப்பா பூக்களாலும் சம்மனசுக்களாலும் அலங்கரிக்கப்பட்ட சட்டம் கட்டிய படத்தில் அழகான வார்த்தைகளை மாட்டி வைத்திருப்பார்கள்.
அன்றைய அந்த வார்த்தைகள் இந்த ப்ளாகிற்கு கட்டாயம் வெகு பொருத்தமாய் இருக்கும்!
“சுத்தமான சூழ்நிலையே ஒரு வீட்டின் வரம்!
அழகான தோழமையே ஒரு வீட்டின் உயர் மாண்பு!
தெய்வீகத்தன்மையே ஒரு வீட்டின் அருள்!
மகிழ்வுமிக்க உற்சாகமே ஒரு வீட்டின் செழுமையும் சொத்தும்!”
அ ந்த வரத்தில் வீட்டின் எல்லாப்பகுதிகளையும் நிறைவாக சேர்த்துக்கொள்வோம்!