Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Friday, 29 September 2017

தமிழ் தேசத்தில் ஆரிய படையெடுப்பின் சரித்திரம்

மணிக்லால் ஜெயினோ சுக்ராம் அடகுக் கடையோ இல்லாத ஊரை  தமிழகத்தில்  நாம் கண்டிருக்கவே மாட்டோம். அது போலவே சென்னை மொத்த வியாபாரத்தின் சௌகார்பேட்டை மின்ட் பகுதிகள் வட இந்தியர்களின்  சொர்க்க பூமி. பல நூற்றாண்டுகளுக்கு முன் வியாபாரம் செய்யும் நோக்குடன் வந்தவர்கள்தாம் இவர்கள். வந்த எல்லோர்க்கும் இடம் கொடுத்து வாழ வைக்கும் பூமியல்லவா இந்த தமிழ் தேசம்!
இது ஒரு பக்கம் என்றால் இன்னும் வடக்கேயிருந்தும் ஒரு படையெடுப்பு நம் அன்றாட வாழ்க்கையில். நேப்பாளத்தில்  இருந்து வந்து தங்கள் இரவு நேர விசில்களால்  நம் இரவுகளை  சுகானுபவமாக மாற்றும் வித்தகர்கள்  நாம் செல்லமாக அழைக்கும் கூர்க்காக்களே!      சென்னையில் முதல் முதலாக  ஒரு சீன டாக்டரை  பார்த்தது கும்பகோண வாசியான எனக்கு பெரியதொரு அதிசயம்! பல் டாக்டரிடம் போக வேண்டும் என்று சொன்னவுடன் "பாய்க்கடையில ஒரு சீன டாக்டர் இருக்கிறார். அருமையான வைத்தியம்  பர்சையும் கடிக்காது" என்ற மாமனார் அறிவுரையின் படி  டாக்டர் சுங் சுயி (பெயர் சரியாக ஞாபகத்தில் இல்லை) மருத்துவ மனையை சென்றடைந்தோம். மருத்துவ மனை.....வெராந்தாவில் ஒரு பெஞ்சு ஒத்தை அறையில்  பல் வைத்திய நாற்காலி டாக்டர் நாற்காலி. பின்னால் ஒரு தடுப்பு   என சிக்கனமாக இருந்தது. செல்புகளில்    
அவருக்கு வேண்டிய கருவிகள் மருந்துகள் இன்ன பிற சமாச்சாரங்கள் சீன பாணியில்  வெகு தெளிவாக அடுக்கப்பட்டிருந்தனதடுப்புக்கு அந்தப்பக்கம்  என்ன வைத்திருப்பார் என்று நான்  யூகித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் இந்தப்பக்கம் டாக்டர் வேலையில் கண்ணும் கருத்துமாய் ஆகியிருந்தார். சற்று நேரத்திற்குள் என் கணவர் சிரித்துக்கொண்டே பர்சை எடுக்கையில் டாக்டரின் சுறு சுறுப்பை திறமையை  என் மாமனார் சரியாகத்தான் கணித்திருக்கிறார் என எனக்குத்  தெளிவானது.
எழுபதுகளில்  விநோதப்பெயர் கொண்ட சீன உணவகங்களும் அதில் உணவு  படைத்த சீனர்கள்ர் கையால் சாப்பிட்டதும்  நூதன அனுபவமாகவே  நமக்கு இருந்தது.
அகண்ட காவேரி போன்ற முகமும் அதில் அமர்ந்த சின்ன மூக்கும் வெள்ளைத்தோலுமாக பிசுக் பிசுக்கென்று தமிழ் பேசி நம் பெண்களது அழகுக்கு மெருகேற்றி அலங்கார பூஷிதைகளாக ஆக்கிய தேவதைகளும் அந்த ஆரியக்குடும்பத்தை சார்ந்தவர்தான்!
இந்த மாதிரி அவரவர் வேலையை அவரவர் பார்த்துக்கொண்டு சுமுகமாக வாழ்ந்த சூழ்நிலை தலைகீழாக மாறிப்போக  தமிழ் நாட்டை நோக்கி ஒரு பெரும் படையெடுப்பு காத்திருக்கிறது  என நான் கனவிலும்  கருதவில்லை!  
எப்போதாவது ஒரு முறைசெல்லும் இனிப்புக்கடைதான் அது. விற்கும் இடத்தில் அன்று   நம் ஜாடையே இல்லாத ஒரு வெள்ளை முகம்       "வாங்கம்மா நல்லாருக்கிங்களா" என்ற முகமன் சொல்லாத ஒரு முகம்சாடையிலும்  ஏதோ ஒரு தமிழிலும்  அவன் என்ன வேண்டும் என என்னைக்கேட்க குனிந்து நானும் எனக்கு வேண்டிய இனிப்பை சுட்டிக்காட்ட எவ்வளவு வேண்டும் என அவன் சாடைகாட்ட நிமிட நேரத்தில் எங்கள் வியாபாரம் முடிவடைந்தபோது எனக்கு சப்பிட்டுப்போயிற்று! "அம்மா புதுசா ஸ்வீட் போட்டிருக்கோம்... அம்மா சாப்பிட்டு பாத்து சொல்லுங்க ...பாதியைப்பிட்டு ஒரு பட்டர் பேப்பரில் வைத்து  என்னிடம்  நீட்ட சுவைத்ததில் அரை கிலோ பில்லில் ஏற கூடவே கலோரிகள் ஏறுவதையும் பொருட்படுத்தாமல் சப்புக்கொட்டிக்கொண்டே வெளியே வரும் சுகானுபவம் கிடைக்காமல் இனம் தெரியாத ஏமாற்றத்தோடுதான் அன்று வெளியே வந்தேன்!
                 வீட்டிற்கு எதிர்த்தார்ப் போல் மூன்றரை கிரவுண்டு காலி மனை. பிளாட் கட்டுபவர்கள் கையில் ஏகமான அரிப்பு. அதிர்ஷ்டம் அடித்தவர் சுற்றி தகரம் அடிக்க ஆரம்பித்துவிட்டார். மனசு நிறைய எரிச்சலுடன்  இன்னும் ஒரு ஒண்ணரை வருஷத்திற்கு இந்த தூசி சத்தம் வகையறாக்களை தாக்குப்பிடிக்க வேண்டிய தலையெழுத்தை நொந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறோம். கும்பல் கும்பலாக குடும்பங்கள் வந்து இறங்குகின்றன. நமது ஜனங்கள் கிஞ்சித்தும் இல்லை. என்ன ஆயிற்று நம் சொந்த மேஸ்திரிகளுக்கும், கொத்தனார்களுக்கும் பெரியாளுக்கும் சித்தாளுக்கும்.........!? எல்லாம் வடக்கேயிருந்து இறக்குமதி! ஏன் ஏன்  ஏன் ஏன் பலா கேள்வியாய் மனசு.
அடுக்கு மாடிக் கட்டிடங்கள்  பல்கிப்பெருகி ஊரை அடைத்துக்கொள்ள ஆரம்பித்த நேரத்தில் நமது ஊர்ர்க்காரர்களுக்கு ஏகமாக டிமாண்ட். அதனால் அவர்களுடைய கண்டிஷன்களும் ஏகமாகிப்போயிற்று காலையில் தொடங்கப்பட வேண்டிய வேலை  நிதானமாக ஆரம்பிக்கப்பட சாயங்காலமும் சுருக்காக முடிக்கப்பட்டதுகூலித்தொகை எதிர்பார்ப்போ  ஏறிப்போய் நின்றது.
வேலை காரணமாக வடக்கே சென்ற ஒரு சில  தமிழர்கள் அங்கே கட்டிட வேலை செய்பவர்களின் நிலமையைப்பார்த்து அசந்துதான் போனார்கள். அடிமைகளைப்போல் நடத்தப்பட்ட அவர்களுக்கு நேரா நேரத்தில் சம்பளம் கிடைப்பதில்லை. அந்த சம்பளமும் வெகு சொற்பத்தொகையே. தமிழ் நாட்டுக்கு அவர்களை அழைத்து வந்த முன்னோடிகள் அவர்களே!
வந்த அந்த ஆரிய மக்களுக்கு தமிழ் நாட்டில் வேலை செய்வது சொர்க்கமாகிப்போனது தங்குவதற்கு கொட்டாய் போட்டுக்கொடுத்தார்கள். மரியாதையாகப்பேசினார்கள். கையில் காசு இங்கே வாயில தோசைங்கிறது போல பணப்பட்டுவாடாவில் எந்தக்குறையும் வைப்பதில்லை. விடிந்த உடனேயே அவர்கள் வேலை தொடங்கும் பாங்கை அவர்கள் வெகுவாக மதித்தார்கள். ஆக மொத்தத்தில்  இந்த நல்ல செய்தியை ஊருக்கு உறவினர்களுக்கு செல்போன் மூலம் ஒலி பரப்ப இந்த ஆரியப்படையெடுப்பு நேஷனல் ஜெக்ராபிக் சானலில் வரும்  ஆப்பிரிக்க வயல்களை சர்வத்துக்கும் மேயும் வெட்டுக்கிளிகளைபோல  தமிழகத்தின் பல துறைளை நீக்கமற நிறைத்தது!
திருவான்மியூர் மார்கெட்டில் நுழைகிறேன். 'தக்காலி இருப்பத்து  ரூப்பா' வினோத குரல் என்னை வரவேற்றது. விற்பது மட்டுமல்ல உருளைக்கிழங்கு   வெங்காய மூட்டைகளை சுமந்து சென்றதும் இந்த ஆரிய இளைஞர்களே. இந்த வேலையை  நான் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற உறுதி அவர்கள் செயலில் வெளிப்பட்டது! இவர்கள் நம் மொழியை தப்பும் தவறுமாக கற்றுக்கொண்டு பேசியது ஒரு புறம் இருக்க நம் ஆட்களும் கடையில்  வாங்க வரும் ஆரியப்பெருமக்களை அவர்கள் மொழியிலேயே அசத்த வேண்டும் என்ற பெரும் நோக்கோடு " ப்பீ......தோ கேஜி ஆச ரூபாதான்" (பட்டாணி இரண்டு கிலோ எண்பது ரூபாதான்) என மொழிகளை  ஆலா சோப்பில் துவைத்துதான் எடுத்தனர்! 1965ல் நடந்த வெகு தீவிர ஹிந்தி போராட்டக்காரர்கள்  இதைக்கேட்டிருந்தால்.......  என்ன நடந்திருக்கும்........?!  என்னால் கணிக்கத்தான் முடியவில்லை!
கிராமத்தில் நூற்றாண்டு  பழமையான எங்கள் சிறு கோயிலை செப்பனிடும் பணி எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று பார்க்க ஒரு நடை பயணம் சென்றோம். சாயங்கால ஜெபம் முடிந்தபின் கோயில் மாப்பில் (முகப்பில்) உக்காந்து சும்மா ஊர்க்கதை பேசி சிரிப்பது தொன்று தொட்ட வழக்கம் அன்றும் அப்படித்தான். திடிரென்று "தீ தீ கேமோன் ஆச்சேன்?" ( அக்கா எப்டி இருக்கிங்க?) என்ற குரல் கேட்டவுடன் ஷணம்  தாமதிக்காமல் "பாலோ தோ துமி கேமோன் ஆச்சோ?" ( நல்லாருக்கேன் நீ எப்டி இருக்க?) நாற்பது வருடங்களுக்கு முன்பு பேசிய வார்த்தை  தன்னிச்சையாக வாயிலிருந்து விழுந்ததுஎன் பக்கத்தில் ஒரு இளைஞன்..... நாங்கள் கல்கத்தாவில் பத்து வருடம் வாழந்ததை எதோ ஒரு சொந்தம் இவனிடம் சொல்லியிருக்க வேண்டும். அது கிடக்கட்டும்  இந்த பெங்காலிப் பையன் இங்கே என்ன பண்ணுகிறான்? மனசுக்குள் கேள்வி. கோயில் செப்பனிடும் பணியில் வேலை செய்ய வந்திருக்கிறானாம்!
 பெங்காலிகள் பொதுவாக புத்தகங்கள் நிறைய வாசிக்கும் இனம். உலகில் எழுதப்படும் மிகச்சிறந்த புத்தகங்கள் இந்தியாவில் பெங்காலி மொழியில்தான் முதல் முதலாக மொழிபெயர்க்கப்படும்! உடலை  வருத்தி வேலை செய்ய வணங்காத ஒரு மன நிலை  அவர்களது தனித்தன்மை. தெரு முக்கில் உட்கார்ந்து அட்டா அடிப்பது பெங்காலி இளைஞர்களுகே உரித்தான ஒன்று. கால்பந்து போட்டிகளும் கார்ல் யுங்கும் அவர்கள் பேச்சில் அடிபடும். இந்தப் பையன் எப்படி உடம்பு வணங்கி கட்டிட வேலை செய்ய
வந்திருக்கிறான்? காலேஜில் முதல் வருடம் படித்துக்  கொண்டிருந்த இவனை  வீட்டு சூழ் நிலை   இங்கே தள்ளியிருக்கிறது. வேலையில் ஈடுபாடு இருக்கிறதா என்ன?
சுறுசுறுப்பான பையன்....... சிரிச்ச மூஞ்சி..... தெளிவான வேலை தொடங்கிய வேலையை முடிக்கும் வரையில்  நேரத்தை பார்க்கமாட்டான். ஊர்க்காரர்களின் ஏகமான சர்ட்டிபிகேட்டுகள் என்னை ஆச்சரியப்பட வைத்தன! எதோ ஒரு பெங்காலி பண்டிகைக்கு அவனு மூன்று செங்கல் வைத்த அடுப்பிலேயே என்னமோ ஸ்விட் செய்து
எல்லோருக்கும் கொடுத்தானாம்! இன்று அவன் ஊர்க்காரர்களின் செல்லப்பிள்ளை!
காலையில் எழுந்து தெருவாசல் படிக்கு வருகிறேன். எப்போதும் இருக்கும் மாவுக்கோலத்திற்கு பதிலாய் அங்கே வண்ணங்களில் ஒரு தாமரைப்பூ
வீற்றிருக்கிறது. அதற்கு மேலே வெல்கம் (நல்வரவு) என ஆங்கில வார்த்தைகள்....... அவர்கள் மொழியில்  பேசியதற்காக அவனது பரிசு எனக்கு!  
ஒரு கடை கூட இல்லாத என் குக்கிராமத்தில் ஒரு ஆரியன்! இது எங்கு போய் நிற்கப்போகிறதோ? தமிழ் நாட்டுப்பணம் எவ்வளவு வடக்கே
செல்லப்போகிறது? மனசுக்குள் சின்ன உறுத்தல்
இந்த பணப் பறிமாற்றத்திற்கு ஒரு பரிகாரம் போல  இன்னொரு வகையான ஆரிய படையெடுப்பு நடந்துகொண்டிருப்பதை நான் கண் கூடாகக் கண்டேன். இந்த படை எடுப்பே  அலாதியானது. வட  இந்தியாவில் பல பெரிய ஊர்களில் கூட மருத்துவமனைகள்  சிறப்பாக செயல் படுவதில்லை அதை நாங்கள் உங்களுக்கு அருமையாகக் கொடுக்கிறோம் என வரிந்து கட்டிய நம் மருத்துவமனைகள் இந்த ஆப்பிரிக்க வெட்டுக்கிளிகளைப்போலவே ஆரிய மக்களை நம் பால் இழுக்கிறது! உடம்புக்கு ஒன்று என்கையில் எப்படியாவது பணத்தைப் புரட்டிவிடும் மனோநிலைதான் எல்லோரிடமும். ஆகையால் முந்தைஆரிய படையெடுப்பால் லட்சங்களில் வெளியே செல்லும் பணம் தமிழ் நாட்டிற்கு கோடிக்கணக்கில் திரும்ப வருவது  பெரும் உண்மை. இதோடு கூட பல இளைஞர்களுக்கு மருத்துவத்தைத் தவிர இன்னொரு துறையிலும் சிறந்த வேலை வாய்ப்பு! வெளியே இருந்து வருபரின் மொழிகளை இவர்கள் கற்றுக்கொண்டு  அவர்கள் மொழியிலேயே பேசி வியாதிக்காரர்களுக்கும் கூட வரும் சொந்தங்களுக்கும் மன  நிறைவான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கிறார்கள்.
ஒரு விரலை நகர்த்தாமலேயே தமிழர் நடத்தும் இந்த படைஎடுப்பைப்பற்றி நீங்கள் என்ன

நினைக்கிறீர்கள்?!!