Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Tuesday, 31 October 2017

நவயுக கொலம்பசும் அந்த பெருந்தேடலும்

அமெரிக்கா  சென்றிருந்த நண்பர்கள்  சாக்லேட் சகிதம்  குசலம் விசாரிக்கவந்தது எங்களுக்குபெரிய ஆச்சரியம்  ஆறு மாசமல்லவா அவர்கள் பிளான்!
ஒடம்பு ஏதும் சரியாயில்லையோ.......? குளுரு ஒத்துக்கிலியோ?"
 “அந்தக் கதைய எதுக்கு கேக்குற போம்மா .......  மொத தடவ போறமே  வெளிய போவ வர சுத்தி பாக்க வேணாஒங்க பிரண்டு வெளியவே கெளம்பு வேணாங்குது......
என்ன அண்ணன்  என் பிரண்ட பத்தி   அப்டி சொல்லிட்டிங்க...... கால்ல சக்கரம் கட்டிகிட்டு சுத்தறவங்கண்ணு எங்க ரெண்டு பேத்தையும்  கலாட்டா பண்ணுவீங்க.......!
பாரத தர்ஷன் ரயில்ல போயி வடக்க பூரா சுத்தியிருக்கோம் பிரண்டு வீட்டுக்கு கல்கத்தா போயி பந்தலான பந்தல  சுத்தி வளச்சு  பாத்துட்டு மூணு தினுசான சாட்ட ரோட்டுல வாங்கி தின்னவங்க நாங்க..... அடுத்தது சாந்தி நிகேதன் ட்ரிப் பண்ணாலமுண்ணு யோஜன பண்ணிகிட்டிருக்கப்பதான் பையன் டிக்கெட் எடுத்துட்டு  கூப்புட்டாண்ணு அமெரிக்காவுக்கு ஓடிப்போயிட்டிங்க. இப்ப  போன மச்சான் திரும்பி வந்தான்  பூமணத்தோடங்ற மாதிரி  சாக்லட்ட கையில புடிச்சிகிட்டு வந்து சேந்துட்டிங்க.
என்னா பண்ண சொல்றம்மா? செட்டி நாடு ஸ்டைலுல அரக்க பரக்க ஒரைக்க மசாலாவப்போட்டு வக்கணையா திண்ண வாயாச்சா....... இந்த அம்மாவுக்கு. அமெரிக்காவுல போற இடத்தில் எல்லாம் இந்த மாரி காரசார மொத நாமா  கெடைக்குமா என்னா!?
போன ஒடனே  “ அம்மா இண்ணைக்கி நைட்டு வெளிய சாப்புடுறோம் ... வெளிய சாப்புடுறோம் மீனுதானே ஒங்குளுக்கு புடிச்சமானது.பையன் சொன்னதும் அம்மாவுக்கு காரைக்குடி அமராவதி ஹோட்டலாம் மனசுக்குள்ள ஜொள்ளுவழிய வைக்க பலமாத்தான்  தலைய ஆட்டுச்சு!
ரொம்பதான் இவுரு பண்றாரு போஎன் பிரண்டு புள்ளி வைத்தது. நீயே சொல்லு....... சாப்புட போனா அங்க தொட்டிக்குள்ள இருக்க மீன வலையால புடுச்சி குடுக்கச்சொல்றானுங்க! என்னா மாதிரி  கூத்து இது... தொட்டி பக்கம் போறதுக்கே எனக்கு அரோசியமா இருந்துச்சு... எதயாச்சும் புடுச்சு குடுப்பா... நல்லா பொரிச்சு குடுக்கச்சொல்லுண்ணு பிள்ளைகிட்ட சொல்லிபுட்டு நான் தள்ளி போயி நிண்ணுகிட்டன் ......  இவன் எப்ப மீன புடுச்சி தேச்சு செதில எடுத்து அலசி கழுவி   எப்ப மசாலாவப் போட்டு எப்ப ஊற வச்சு எப்ப  பொரிச்சு குடுக்கப்போறாண்ணு யோஜன பண்ணிக்கிட்டு உக்காந்துருக்க அந்த  நிமிஷத்துல  ஒரு பெரிய தட்டுல எல தழ தக்காளிப்பழம் உருளக்கெழங்கு சகிதமாஒரு  முழு  மீனு கண்ண முழுச்சுகிட்டு  என் முன்னாடி நிக்கிது !!!! ஒரு பக்கமா மீன போர்க்கால குத்தி வாய் கிட்ட கொண்டுகிட்டு  போனேன் பாரு...... பெருங்கொடலும் சிறு கொடலும்சேந்து  வாய்க்கு ஒடியாந்திருச்சு
பாத்ரூம எங்கருக்கு  செத்த சொல்லுய்யாண்ணு....... ஓட்டமா உள்ள ஓடுனவதான் ஒரே ஓமட்டலு வாந்தி......."
அடுத்தாப்புல பயணமா போய்கிட்டு இருக்க வழியில அம்மா இங்க நல்ல ஆட்டுக்கறி இருக்கும். கொஞ்சமா டேஸ்ட் பண்ணுங்க ... ஒங்குளுக்கு புடிச்சிருந்தா அமெரிக்கா பூராவுயும் நம்ம ஜாலியா போவலாமுண்ணான்.
"மார்கண்டம் சாப்ஸ் மா…….எனக்கு என்னுமோ கறி நல்லா பதமாத்தான் இருந்துச்சு. மேல முட்ட தொவச்சு  பொரிச்சிருந்தான். அதப்பாத்த ஒடன " இது மாட்டுக்கறிப்பா... சாப்ஸ் எத்த தண்டி இருக்கு தெரியுதா ஒனக்கு?"
பையன்எடுத்து சொல்றான் இங்க ஆடெல்லாம் நல்லா வளப்பமா இருக்கும்மா அந்த மாரி குல்மாலெல்லாம் பண்ணினா கவர்மென்ட் அவன் ஹோட்டலுக்கு சீல் வச்சிருவான்
 சரிபையன்இவ்வளவு சொல்றானாண்ணு ஒன்பிரண்டு கொஞ்சோண்டு வாயில வச்சுது "மொச்ச நாத்தம் கொடலப்புடுங்குதுன்னுஅப்படியே தள்ளி வச்சுட்டா.... சாலட யாச்சும் சாப்புடுண்ணா இதயெல்லாம்ஆடு மாதிரி என்னாலதிங்கமுடியாதுங்குது. காய்கரியையாச்சும் சாப்புடுண்ணா நான் என்னா காச்சகாரியா வெவிச்ச கைய திங்கரத்துக்குங்குது.   உள்ளூர்லயே சாப்பாட்டு  விஷயத்துல சிங்கநாதந்தான். அந்தபோடு போடுவா..... அமெரிக்காவ பத்தி என்னத்த நான் சொல்றது? கல்யாணம் காச்சியில பிரியாணி சாப்புட்டுவந்தா " மூஞ்சியில அடிக்கிறமாதிரி மாடு மாடா கறியப்போடுறான்  மூங்கி குச்சி மாதிரி நீட்டு நீட்டாசோறு ஒண்ணோட ஒண்ணு ஒட்டாம..... ஒரு வாய் அள்ளி வச்சா வாய் மணக்க வேணாமா…? சீரக சம்பாவுல பொடிசா வெள்ளாட்டுக்கறிய அரிஞ்சி போட்டு வெங்காயம் தக்காளி பச்ச மொளவா பட்ட கிராம்பு ஏலம் தாளிச்சி தேங்காபால ஊத்தி ஒரு தம் போட்டு எறக்குதில்ல பிரியாணி.......ண்ணு அவ திருச்சி புராணம் பாடாட்டி கலியாணத்துக்கு போயிட்டு வந்த திருப்தியே இருக்காது போங்க......"
" நீ காலேஜ் படிச்சு என்னா பிரயோஜனம் .... நாலு தினுச ரசிக்க வேணாமா? படிச்சு படிச்சி நான் சொல்லிக்கிட்டேதான் கெடப்பன்
"ஆனா அவுங்க பிரியாணியே தனி ருசிதான்...... இன்னம் கொஞ்சம் வைக்க மாட்டாங்களாண்ணுன்னு நாக்கில எச்சி ஊறும்....." என் கணவர்
" சொல்லுங்கண்ண நல்லா மனசுல ஏறுரமாதிரி சொல்லுங்க " என் நண்பி
" நீ வேற கதைய முழுசாக்கேளு. ஊர் ஊரா சுத்திகாட்ட பிள்ளை வேல மெனக்கெட்டு லீவு போட்டுருக்கான். என்னுமோ கொலம்பசு இந்தியாவ கண்டுபிடிக்க கடலெல்லாம் சுத்தி வந்து அமெரிக்காவ கண்டுபுடிச்சமாதிரி  மாதிரி  நம்ம ஊருசரவணபவன்  ஹோட்டல கண்டு புடிக்கத்தான்  இந்தியாவிலேர்ந்து அமெரிக்கா வந்துருக்கறதா இவ நெனப்பு !! எங்கிட்டு போனாலும் பிள்ளைகிட்ட "ஐயா ஒரு சாப்புடுற எடம் பாத்துருய்யாண்ணு" காலையில சாமி கும்புடறமாதிரி எந்திருச்ச ஒடனே ஒரு விண்ணப்பம்...... நட்ட நடு அமெரிக்கா... மோட்டல்ல ராத்தூக்கம்...... இந்த புள்ள தமிழன் ஊட்டு  ஒட்டல எங்க தேடித்தொலைவான்?!
" கொலம் பச பத்தி சொன்னிங்கள்ள அவுரு இந்தியா மசாலா  சாமாங்கள ஸ்பெயினுக்கு அள்ளிகிட்டு போறதுக்குத்தான்  கடல் வழியா ஒரு பாத கண்டு புடிக்க வந்தாரு. அதே மசாலாவத்தான் என் பிரண்டு அமெரிக்காவுல கண்டு புடிக்க முயற்சி பண்ணியிருக்கு. ஆக ரெண்டு பேர் தேடுனதும் ஒண்ணுதான்."  நான் சொல்ல எல்லோரும் வாய் விட்டுதான் சிரித்தனர்!
இதுக்கு ரொட்டியும் புடிக்கில.... ஆனா ஆவக்கா ஊறுகாய மூணுவேளையும்... ரொட்டியில  தடவித்தின்னது சாப்பாட்டு ப்ரச்னைய ஒரு அளவுக்கு தீத்துச்சு. ஆனா வழிச்சு வழிச்சு தின்ன   ஜோர்ல வயிறு புட்டுகிச்சு.  எவ்வளோ ஐஸ் கிரீம சாக்லேட்ட  பிஸ்கட்டுகள திங்கறது...? ஒரு கட்டத்துல அதுக்கும் வாந்தி.... "வாய் புளிக்கிதுங்க" அசந்து போய் சொல்லுச்சு. நான் பாத்தேன்.. இது ஒண்ணும்சரிப்பட்டு வராதுண்ணு  பிள்ளைகிட்ட  சொன்னேன் "அப்பா ஊரு சுத்துனதுபோதும் ....... ஆறுமாசத்த இங்க கழிக்கிறத்துக்குள்ள ஒங்கம்மா எலும்பு துரும்பா போயிரும் போலருக்கு.......... செலவப்பாக்காத..... திரும்ப போறதுக்கு வாங்குன  டிக்கெட்ட கேன்சல் பண்ணிட்டு அடுத்த வாரத்துக்கே நாங்க ஊருக்கு போற வழியப்பாருண்ணேன்    
அம்மா ஜாலியா ஊர் சுத்தி பாக்க ஆசப்படுரவங்களாச்சேண்ணு பையனுக்கு வருத்தமான வருத்தம்...... என்னா பண்றது?டிக்கெட்ட மாத்தி வாங்கிக் குடுத்துட்டான் ......
ஏர்போர்ட்டுல கொண்டாந்து உட்டவன்அம்மா கைய புடிச்சிகிட்டேதான் நிண்ணான்.... அம்மாஒரு பக்கம்  அழுவுது "ஐயா நீ இங்க சம்பாரிச்சத்து போதும்..ஊருலையும் இப்ப சம்பளமெல்லாம் நெறயா தர்றான்...... சோத்துக்கு ஏங்கிப்போயி எதுக்கு அமெரிக்காகாரங்கிட்டகெடந்துஅல்லாடுற" ண்ணு சொல்லிட்டு தேம்புது
அம்மா இதைச்சொன்னவுடன் பையன் குபுக்குண்ணு  சிரிச்சிபுட்டான்.... "அம்மா எங்க கம்பெனிய வந்து பாருங்க  அசந்து போயிடுவிங்க .... தமிழ்ல பேசலாம்......தமிழ்ல ஜோக் அடிக்கலாம்... அமெரிக்கர் உள்ள வந்தா "யாரோ  பாரினர் வர்றாருப்பா....யாராவதுபோயி என்னாண்ணு கேளுங்கண்ணு ஜோக் அடிப்போம். தீவாளிக்கு லீவு...... பொங்கலுக்கு லீவு... இன்னம் சொல்லப்போனா பூணுல் மாத்துற ஆவணி அவிட்டத்துக்கூட ரெஸ்ட்ரிக்கட் லீவ் எடுக்கலாம். தமிழ் சாப்பாட்டுக்குக்கொறச்சலே இல்ல. யார் வீட்ல இருந்தாச்சும் எதாச்சும் வந்துகிட்டுதான் இருக்கும். அதுவும் பேச்சிலர்களுக்கெல்லாம் ஒரு தனி கவனிப்புதான் பண்டிகண்ணா கேக்கவே வேணாம் ஒருத்தர் வீ ட்ல எல்லாரும் டேரா போட்டுட்டு...... ஜாலியா இருக்கும் போங்க. "
அப்ப சரிண்ணு சொன்ன அம்மாக்காரி சேந்து  சிரிக்க ஆரம்பிசிட்டா...... அடுத்த லீவுல பிள்ளைக்கு நல்ல பொண்ணா பாத்துருவோங்க ....
சந்தோஷமா பிள்ளைக்கி பை சொன்னோம் ...  அமெரிக்கா கதை இப்பிடியா சுமுகமா ரத்னா சுருக்கமா முடிஞ்சிப்போச்சு...... சரி  நாங்க கெளம்புறோம்  சாக்லேட்ட பிரிஜ்ல வச்சிருந்து சாப்புடுங்க... வெளிய கெடந்தா உருவிப்போவும் ..... எங்கயாச்சும் நல்ல பொண்ணாஇருந்தாவும் காதுல போடுங்க.....படிச்ச பிள்ளையாவும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்றதாவும்...... மனைவியிடமிருந்து விலாவில் லேசா குத்து வாங்கிய நண்பர் சிரித்துக்கொண்டே நண்பியின் கையைப்பிடித்துக்கொண்டு  கிளம்பினார்.