Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Thursday, 15 February 2018

வேர்கள்

கோடைக் கால விடுமுறைகளில் எங்கள் ஊருக்கு வரும்   கடற்கரை வாசிகள் கடலில் அவர்கள் அடிக்கும் கும்மாளத்தைப்பற்றி பிரஸ்தாபிக்கையில் கிராமத்து பாப்பா கொளத்து  வாசிகளாகிய கொளத்தை ரெண்டு பண்ணும் கொட்டமெல்லாம் (கடல் விளையாட்டுக்கற்பனையில்) கால் தூசியாக காட்சியளிக்கும்! வளர்ந்து படித்து முடித்து குடியும் குடித்தனமுமாய்  சென்னையில் குடியேற்றம் ஆன பிற்பாடு   கடல் எங்கள் குடும்ப அங்கத்தினராக ஆகிவிட ஊரிலிருந்து ஆசையாக பீச்சு தேடி வருபவர்கள் வரும் வரை   வங்கக் கடலின் அருமை நமக்குத்தெரிவதில்லை!
நான் சொல்லப்போகும் கதையும் இதுமாதிரிதான். அமெரிக்க வாசியாகி விட்ட நண்பர் ஒருவர் பல ஆண்டுகளுக்குப்பின் வேர்களைத்தேடி இந்தியா வருகிறார். அவர் சிறு வயதில் படித்த பள்ளியைப்பற்றி எழுதிய பதிவைப்பார்த்தவுடன்  எனக்கு நாவில் எச்சில் ஊறத் தொடங்கியது. இவர் பள்ளியைப் போலவே  தொடக்கப்பள்ளியில் எனக்கு  நிறைய நிறைய அனுபவங்கள் இருக்கிறதே இந்தியாவிலேயே அதுவும் தமிழ் நாட்டிலேயே உட்கார்ந்து கொண்டு இவ்வளவு நாள் அதைப்பற்றி  நான்  யோசனை கூட செய்யவேயில்லையே...? அமெரிக்காவைப்பற்றி...... இத்தாலியைப்பற்றி........ எழுதுகிறேன்......... என் தொடக்கப்பள்ளியை நினைக்கக்கூட இல்லையே?!
உள்ளூர் மாடு விலைக்குப்  போகாதோ.......?  என்னையே நொந்து கொண்டேன்.
என் தொடக்கப்பள்ளியில் எல்கேஜி யூகேஜி....... சமாச்சாரம் என்னாண்ணே தெரியாது.
 ஒண்ணாங்கிளாசுலதான் சேர்க்கை....... இந்தக்காலம் மாதிரி பிறப்பு சான்றிதழ் வருமான சான்றிதழ் சமாச்சாரங்களும் கிடையாது.....
" என்னாங்கய்யா பேரனுக்கு என்னா வயசு....?
"பையனுக்கு மகாமக வருசத்திலதாங்க  கண்ணாலம் முடிச்சோம்........ அஞ்சு வருசம் கோயிலு கொளமெல்லாம் சுத்தி ஆறாம் வருசம் மளாய அமாவாச அண்ணைக்கு இந்த பேராண்டி பய பொறந்தானுங்க. மளாய அமாவாசயில பொறந்ததுனால எங்கப்பாரு பிச்சாண்டி  பேரய வச்சிட்டோமுங்க..பயலுக்கு  அஞ்சு இல்ல ஆறு வயசு இருக்குங்க..." தாத்தா கைகட்டி பவ்யமாக  வாத்தியாருக்கு கதை சொன்னார்.
இந்த பேரவச்சிக்கிட்டு இந்தப்பய பையன்கள் கிட்ட என்னா பாடுபட போறானோ யோசித்த வாத்தியார்
 " ஐயா..... பையன் பேர பிச்சுமணிண்ணு கொஞ்சம் மாத்தி எழுதுட்டாய்யா?"  பிச்சாண்டியை கொஞ்சம் டீசன்ட் ஆக்கினார்
" ஐயா  விருப்பத்துக்கு பண்ணுங்க சாமி..."
பையனுக்கு காப்பரிசி வகையறா இல்லாமல் பேர் வச்சு  பிறந்த நாள் குறிப்பதும் வாத்தியார் தயவால் இனிதே நடந்தேறியது!!  
 கோட விடுமுறையெல்லாம் முடிஞ்சி பள்ளிக்கூடம் போறோம். அண்ணைக்குத்தான் ஒண்ணாங்கிளாசிலிருந்து ரெண்டாங்கிளாசுக்கு ப்ரமோஷன்!
"ஒண்ணாம் வகுப்பில இருக்கவங்கள்ளாம் சம்மணம் போடுங்க......
போட்டுட்டிங்களா.......
போட்டுட்டோம் சார்
இப்ப கைய காலுகிட்ட குறுக்க கொண்டு போங்க பாக்கலாம்  இப்ப கை வெரல்களால கால் கட்ட வெரல்கள கெட்டியா புடுச்சுக்குங்க பாக்கலாம்......" கண்ணாடி வாத்தியார் எங்களுக்கு செஞ்சு காட்டிகிட்டே உத்தரவு போட்டார்
புடுச்சிகிட்டோம் சார்
கிளாசெல்லாம் தரையில்தான்
.   வாத்தியார் புதுசா என்னுமோ சொல்லிக்குடுக்குறதில  எங்குளுக்கெல்லாம் ஒரே சந்தோஷம்... வாத்தியார் செஞ்ச  மாதிரியே  பண்ணிட்டு  அடுத்தாப்புல என்னா நடக்கப்போவுதுண்ணு கண்ண விரிச்சி அவுரையே பாக்குறோம் அப்ப ரெண்டாங்கிளாஸ் வாத்தியார் எங்க கிளாசுக்கு வர்றாரு.
"ஆரம்பிக்கலாமா  ...?" ரெண்டு வாத்தியாரும் சொல்லிகிட்டே சிரிக்கிறாங்க.
ஆனந்துதான் மொத பையன்.
ஏலேய் கட்ட வெரல கெட்டியா புடுச்சிக்கிட்டியாடா ...?
புடுச்சுகிட்டேங்க..... சார்
கண்ணாடி வாத்தியாரும் ராயப்ப வாத்தியாரும் ஆனந்தோட அக்கிள்ள கைய குடுத்து அப்படியே அலேக்கா தூக்கி கிட்டு போயி ரெண்டாங்கிளாசுல  உக்கார வச்சாங்க........ எங்குளுக்கெல்லாம் ஒரே சிரிப்பு...!!
 வாத்தியார்களின் இந்த பல்லாக்கில் நாங்கள் சந்தோஷமாக சுகமே இரண்டாம் வகுப்பில்!!!
இந்த ஸ்டைல் ப்ரமோஷன் ஒண்ணாங்கிளாசுக்கு மட்டுமே உரித்தானது! ரெண்டாங்கிளாசிலேருந்து எல்லாரும் எந்திரிச்சி ஓட்டமா ஓடி அடுத்த கிளாசுல உக்காந்துக்கவேண்டியதுதான்! இந்த அழகான பல்லாக்கு கிடைக்காமல் ஏமாந்துதான் போனோம்!
மூணாங்கிளாசுல ரெண்டு ப்ரமோஷன் எங்களுக்கு!  ரெண்டாங்கிளாசிலேருந்து மூணாங்கிளாசுக்கு போறது ஒரு ப்ரமோஷண்ணா மூணாங்கிளாசு ரூம சுத்தி 'பா'னா ஷேப்ல கட்டியிருக்கும் சிமெண்ட் பெஞ்சுல ஜாலியா உக்காந்து ரெண்டாம்  ப்ரமோஷன் பெற்று   ஒசந்து போனோம்!!
ஹய்யா........ இனிமே தரையில உக்கார வேண்டியதில்லையே!!
மூணாங்கிளாசு வாத்தியார் பேரு பரிசுத்த வாத்தியார்.... சிரிச்சுகிட்டே இருக்க கண்ணாடி வாத்தியாருக்கு எதிர்மாறு. அவுருக்கும் விக்டர்ங்கிர பையனுக்கும் ஆவவே ஆவாது. ஒரு நாளைக்கி வீட்டுப்பாடம்  பண்ண மாட்டான்...... பக்கத்தில இருக்கவன வம்புழுப்பான்....... பள்ளிக்கூடத்துக்கு..... கால பாத்ரூம் மணி அடிச்சப்பறம் வருவான்.... ஒவ்வொரு நாளைக்கி வரவேமாட்டான்....... பரிசுத்த வாத்தியாருக்கு அவன பாக்காட்டி எப்ப எப்பண்ணு இருக்குமோ என்னாண்ணு தெரியில அவன் மூஞ்சியப்பாத்த ஒடன  " வாங்க மைனர் சார்  ரெண்டு பெரப்பம் பழம்  சாப்பிடுங்க......". கைய காட்டச்சொல்லி பெரம்பால விளாசித்தள்ளிடுவாரு. இது பத்தாதுண்ணு
"என்னா பெரப்பம் பழம்  தின்னுட்டிங்களா சார்? நல்லாருந்துச்சா? இப்ப போயி   கொக்கு புடிங்க பாக்கலாம்  ." ண்ணு முதுவுல பெரம்பால ஒரு வீசு வீசி அந்த பெரியரூம் நடுவுக்கு காத புடிச்சு இழுத்துகிட்டு போவாரு.
கொக்கு புடிக்கும் சாங்கியம் இப்படித்தான்:
இடது காலை கீழே வைத்துக்கொண்டு வலது காலை மேலே தூக்கி வலது கை ஆள்காட்டி விரலால் இடது கட்டை விரலைத் தொட்டுக் கொண்டு தலையை அண்ணாந்து மோட்டு வளையைப்பார்த்து கிட்டே நிக்கணும். பரிசுத்த வாத்தியாரின் விருப்பத்தைப்பொறுத்து ஒரு பிரியட் அல்லது    
அதற்கு மேலும் இந்த கொக்கு பிடித்தல் நீண்டு கொண்டே செல்லும் வாய்ப்புகள்  விக்டருக்கு அதிகமாகவே இருந்தது.
  வீட்டில் போய் கொக்கு பிடித்தலை பண்ணிப் பார்க்கும்போதுதான்  'எப்பா இந்த விக்டர் பய  நல்ல பலசாலிதான் செத்த நேரம் நமக்கு கொக்கு புடிக்க முடியில அவன் அவ்வளவு நேரம் இந்த  தண்டனய அனுபவிச்சிட்டு சிரிச்சுகிட்டே போறான் பாரு..! மனசுக்குள் பெரிய ஆச்சரியம்!
." கருப்பன கட்டி போட்டு அடிச்சா வேலன் வேலியமுறிச்சிகிட்டு ஓடுவான்" ங்கிரமாதிரி  பொம்பள பிள்ளைக  நாங்க பரிசுத்த வாத்தியார் கிளாசுல சர்வ ஜாக்கிரதையா இருப்போம். அதிக பட்சமா எங்குளுக்கு எப்பாவது பெரப்பம் பழம் இல்ல ஜோடி தோப்புக்கரணந்தான்!
மழக்காலத்துல  பாவாடையை தூக்கி சொருகிக்கிட்டு  விரிந்த மேனியா  இருக்கும்   தாழங்குடையை புடிச்சிகிட்டு   புஸ்தகப்பைக்குள் அம்மாவுக்குத் தெரியாம ஊசி நூல திணிச்சிகிட்டு போற வழியில பிரண்டு சரஸ்வதியைக் குடைக்குள்ள அன்யோன்யமா அணச்சிகிட்டு பள்ளிக்கூடத்துக்கு ஒட்டமாஓடுவோம் மகிழம் பூ பொறுக்கறதுக்கு!
நனஞ்சுகிட்டே  பொறுக்குன பூவையெல்லாம் வெராந்தாவில கொட்டி மரக்கலருல இருக்கிற  மகிழம்பூ வாசனைய புடுச்சுகிட்டே ஊசி நூலால மடமடண்ணு கோப்போம் வாழ நாரால கட்ட முடியாத பூ ஒண்ணு இருக்குன்னா அது இந்த மகிழம்பூ தான்!.. பிரண்டுக எல்லாத்துக்கும் அளவு பாத்து பல்லால் கடிச்சி கடிச்சி முடிச்சு போட்டு சரம் சரமா வச்சுட்டு எங்குளுக்கு முட்டும் சட நீளத்துக்கு  வச்சுக்கிறோம் . காஞ்சு போனாலும் கலரும் வாசனையும்  மங்காத அந்த மகிழம்பூ ரெண்டு மூணு நாளைக்கி எங்க தலையில!! ஒருத்தர்  ஒருத்தருத மோந்து மோந்து பாத்துக்குவோம்!!
அஞ்சாம் வகுப்பு வரைக்குந்தான் இது கலப்பு பள்ளி. அதுக்கப்பறம் பொம்பள பிள்ளைக நாங்கள்ளாம் செயின்ட் ஜோசஃப் பெண்கள் உயர் நிலைப்  பள்ளிக்கு போயிருவோம்.
நான் அங்க படிச்சிகிட்டிருந்தப்ப என் தொடக்கப் பள்ளியிலேர்ந்து ஒரு நல்ல சேதி எங்க  வீட்டுக்கு  வந்தது ஒரு நாள் உயர் நிலைப்பள்ளி ஹெட்மாஸ்டர் மூன்றாம்  வகுப்பில் நுழைந்திருக்கிறார். மாணவர்களை  இங்கிலிஷிலும்  கணக்கிலும் கேள்விகள் கேட்க ஒரு பையன் எல்லா கேள்விகளுக்கும் பளிச் பளிச்சென்று பதில்  சொன்னானாம்...வியந்து போன அவர் அவனுக்கு உடனடியாக ட்ரிப்பிள் ப்ரமோஷன் கொடுத்து ஆறாம் வகுப்பிற்கு கூட்டிகிட்டு பொயிட்டாராம். பள்ளிக்கூடத்திலேர்ந்து சாயங்காலமாக நான் வீட்டுக்கு வந்தப்ப அங்க ஒரே கொண்டாட்டம்!! ப்ரமோஷன் வாங்கினது என் தம்பியில்ல!!? ( ஆனா எஸ் எஸ் எல் சியில அரசாங்க பரிட்சை எழுதறத்துக்கு வயசு பத்தாம அப்பா அல்லல் பட்டது இன்னொரு கதை!) 
நான் தொடக்கப்பள்ளியில படிச்சிகிட்டிருந்தப்ப நம்ம இந்தியாவின் சரித்திரத்தில முக்கிய கட்டம். 1950 ஜனவரி மாதம் 26ந் அது ஒரு குடியரசு நாடானது. அந்தத் திருநாளின் கும்பகோணத்தில ரொம்ப பெரிய  கொண்டாட்டம்.அதுல     நானும் ஒரு பாகமாக இருந்தேநுண்ணு இப்ப நெனச்சா பெருமையா இருக்கு. கும்பகோணம்  டவுண்ஹாலில் பெரிய விழா. எங்கள் பள்ளியில் அஞ்சாம்கிளாஸ் ஆரோக்கியசாமி வாத்தியார்தான் பாட்டு டான்ஸ் எல்லாத்துக்கும் இன்சார்ஜ்! பள்ளிகூடத்திற்குப்பக்கத்தில் இருக்கும் அவர் வீட்டிற்கு சாயங்காலமாக கூட்டிகிட்டு போயிடுவாரு. அவங்க அவுரும் அவுரு மனைவியும் எங்களுக்கு டான்ஸ் பிராக்டிஸ் குடுப்பாங்க
"சந்தோஷ நாளாம் இன்று கூடியுள்ளோர்க்காமே
அது இன்று தர்பார் தானே ஆனந்தமே தாமே
குடியரசு நாடும் நேரு அவர்கள் ஆட்சியும் அகிலமோற்பு    
வானமும் ஆனந்தமாய் பாடுதே!" 
இப்படியான  பாட்டுக்கு டான்ஸ்
"நல்ல நாள் வந்தது நம் மனம் மகிழ்ந்தது வாருங்கள் தோழியரே"  என்று தொடங்கும் இன்னொரு பாட்டுக்கும் டான்ஸ் கற்றுக்கொண்டோம்
 1950 ஜனவரி  26 ந்தேதி பட்டுப்பாவாடை கட்டிக்கொண்டு நடைபயணமாக டவுன் ஹாலுக்குப்போகிறோம். போகிற வழியில் ஆரோக்கியசாமி வாத்தியார் எங்களுக்கு பஸ்ஸ்டாண்டின் பெரிய ஹோட்டலில் மெது பக்கோடா வாங்கிக்கொடுத்தார். ஹோட்டலே என்னாண்ணு தெரியாத எங்களுக்கு மெது பக்கோடாவும் தேங்கா சட்டினியும் அமிர்தம் போல இருந்தது! டவுண்ஹால் போகுமட்டும் அதன் ருசியை  எதுக்களித்து  எதுக்களித்து மாடு மாதிரி அசை போட்டுக்கொண்டே நடந்தோம்!!
இந்த சுதந்திர தாகம் கும்பகோணத்தார்களுக்கு குறையாமல் இருந்த அந்த தினங்களில் பள்ளி மாணவர்களுக்கு பாரதியார் பாட்டுப்போட்டி ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள்  ஒரு பள்ளிக்கு  இரண்டு பேர்தான். எங்கள் ஆஸ்தான பாட்டு மாஸ்டர் தயவால் நானும் போட்டியாளியானேன்!! இந்த முறை சரஸ்வதி பாடசாலா என்ற பள்ளியில் போட்டி.. போட்டியன்று வாத்தியார் எங்களை மெது பக்கோடா விருந்திற்கு கூட்டிப்போகாமல் நேரடியாக போட்டி இடத்ததை சென்றடைந்ததில் எங்களுக்கு பெருத்த ஏமாற்றம்!
அதற்கு மேலே பெரிய அதிர்ச்சி எங்களுக்கு அங்கே காத்திருந்தது. பாட்டுப்பாட வந்த அத்தனை பேரும் முறையாக பாட்டுக் கற்றுக் கொண்டிருப்பவர்கள் போலும்! சம்மணம் போட்டு உட்கார்ந்து தாளம் போட்டு சாஸ்திரியமாகப்பாடினார்கள்! ஒரு பெண் " வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள்" என்ற பாட்டை சுதி சுத்தமாக இனிமையான குரலில் பாடுகையில் எனக்கு சர்வ நாடியும் ஒடுங்கிப்போயிற்று. என் கூட வந்த போட்டியாளர் சொல்லவே வேண்டாம். வயிறு கலங்கிப்போய் சும்மனாச்சுக்கும் மயக்கம் வருதுண்ணு மூலையில போய்  படுத்து விட்டாள்.
ஆரோக்கிய சாமி வாத்தியார் இந்த போட்டியை சரியாகப்புரிந்து கொண்டாரா என்று எனக்கு மனசுக்குள் இப்போது பெரிய சந்தேகம் வந்து விட்டது.
எங்கள் ஊருக்கு வரும் சர்க்கஸில் மயிர் கூச்செறியும்  வித்தையெல்லாம் பண்ணும் ஆண்கள் பெண்களைப்போல கூடியிருந்த போட்டியாளர்கள் எனக்குத் தோற்றமளிக்க நான் குறுக்கும் நெடுக்கும் ஓடும் பஃபூன் மாதிரி பேந்த பேந்த நிற்கிறேன்.
என் பெயரைக்  கூப்பிடுவது என் காதில் விழுகிறது . தலைக்கு மேல் போய்விட்டது சாண் போனாலென்ன முழம் போனாலென்ன..? குருட்டு தைரியத்தில் மேடையில் ஏறுகிறேன்... உலகமே உட்கார்ந்து பாடிய இடத்தில் நான் மட்டும்  நின்று கொண்டே பாட்டை ஆரம்பிக்கிறேன்.
"ஒளி படைத்த கண்ணினாய் வா வா" என்று எதிர்த்தாற்போல் இருப்பவர்களை அபிநயத்தோடு கூப்பிடுகிறேன்.....   வா வா என்ற பாரதியாரின் எல்லா  அழைப்பையும்  ஆடிப்பாடி எல்லோருக்கும் விடுத்துவிட்டு    மேடையிலிருந்து வெட்கத்தோடு இறங்கினேன். வாத்தியார் மேல் கடுங்கோபம்.... இப்படி என்னை அவமானப்பட வைத்து விட்டாரே என்று.
"வீட்டுக்குப் போலாமா சார் ?" அவர் கையைப்பிடித்து இழுக்கிறேன். " கொஞ்ச நேரம் இரும்மா."  ப்ரைஸ் கிடைக்குமென்கிற நப்பாசையோ ... ? சட்டங்களுக்கு உட்பட்டு நீங்கள் பண்ணவில்லை என்று திட்டை அவர் கேட்டுவிட்டுத்தான் போகணும் போல.... 
" பாரதியார் பாட்டுப்போட்டி முடிவை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம் . முதல் பரிசை தட்டிச்செல்பவர் பாணாதுறை தொடக்கப்பள்ளி கமலினி...... வெள்ளைத்தாமரை பூவிலிருப்பாள் என்ற  பாட்டை தன் இனிய குரலில்  பாடிய பெண்! கரவொலி  நிறையவே
இரண்டாம் பரிசு........  மூன்றாம் பரிசு....... ஆறுதல் பரிசுகள் 
ஊகூம்... வாத்தியார் ஏமாந்துதான் போயிருக்க வேண்டும்.
கடைசியாக பாட்டுப்பாடுகையில் ஆட்டம் ஆடிய பெண்ணைப்பற்றி.........
எனக்கு சகலமும் இருண்டு போய்விட்டது...... சட்டத்துக்கு உட்பட்டுதான் பாட வேண்டும் என்ற அறிவுரை எந்த ரூபத்தில் கிடைக்கப்போகிறதோ
கவிஞர்   பாரதி இன்றைக்கு இந்த மேடையில் பாடியிருந்தால் இந்த சின்ன பெண் மாதிரி ஆடிப்பாடி குதித்து உணர்ச்சியுடன்தான் பாடியிருப்பார் 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா என்று எல்லா பெண்குழந்தைகளையும் மேடையில் ஏற்றி ஆட வைத்திருப்பார். அந்த வகையில் சிறப்பு பரிசாக  லிட்டில் ஃளவர் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த மார்கரட் ரொசாரியோ...... என்ற குழந்தைக்கு அளித்து  மகிழ்கிறோம்."

என் தோழியைப்போலவே எனக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. மேடையில் ஏறி மூன்று புத்தகங்களைப் பரிசாகப் பெறுகிறேன்  வாத்தியார் என்னை அணைத்துக் கொண்டார்... அவரை மனசுக்குள் வைததெல்லாம் மறந்துதான் போனது !