"எம்பொண்ணுக்கு நல்ல வேல அமைஞ்சு போச்சு.
ஆசுபத்திரி செலவல்லாங் கூட கம்பனிகாரன் குடுத்துடுரானாம். மவராசனா இருக்குட்டும். வயசான
காலத்துல இடுக்கு முடுக்கு இல்லாத ஏசி ரூம்பு சொகமானபடுக்க, சிரிச்சுகிட்டே மருந்து குடுக்கும்
நர்சு. மகளை படிக்க வச்சு அது பிரதி உபகாரமா என்னா சொகம் குடுக்குது பாரு! கல்லு ரொம்பிப்போன பித்தப்பைய எடுக்க கேவுர்மேண்ட்டு ஆசுபத்திரியில
நாத்தத்துக்கு நடுவுல கூட்டத்தோடு கூட்டமா அல்லாடிப்போயில்ல கெடந்தேன்."
மெடிக்கல் இன்சுரன்சுக்கு இப்படியும் சுகமான
ஒரு முகமா!? மார்கெட் போன சமயம் காற்றில் வந்து காதில் விழுந்ததில் நான் சிலிர்த்தேன்.
அன்றைக்கு
முகப்புத்தகத்தைத் திறக்கையில் இதே விஷயத்தைக்குறித்து நெருங்கிய சொந்தம் ஒன்று எழுதிருந்தது."இடுப்பு
எலும்பு மாற்று ஆப்பரேஷன் நல்ல படியாக நடந்தது. டாக்டர்களும் திறமைசாலிகள் அருமையான
கவனிப்பு. மெடிக்கல் இன்ஸ்சூரன்சு கைவசம். வலி வேதனைக்களுக் கிடையே இவை நன்றாக அமைவது
ஆறுதல் தரும் விஷயங்கள். டாக்டர் பச்சைக்கொடி காட்டிவிட்டார். வீட்டிற்குப் போக வேண்டியதுதான்.
ஆனால் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக பெரியதொரு இன்ஸ்சூரன்சு தொகையையும் தாண்டி செலவாகி ஐம்பது சதம் துண்டு விழுகிறது! இந்த சிக்குகளை
அவிழ்க்க பலா திசைகளிலும் பேசிப்பேசி தொண்டை
தண்ணி வீணாகியது ஒரு பக்கமென்றால் மணிக்கணக்கில் கிளம்புவோமா மாட்டோமா
என்ற திரிசங்கு சொர்க்கத்தில் கிடந்தது இன்னொரு அவஸ்தை. மேலே ஐம்பது சதத்தைக்கட்டிய
பிறகே நான் கட்டவிழ்க்கப்பட்டு விடுதலையானேன்!! ஆஸ்பத்திரியும் இன்ஸ்சூரன்சும் இதில்
கூட்டுக்களவாணிகளா? இல்லை.....இது எனக்கு மட்டும் நடந்த ஒன்றா? என்ற கேள்வியோடு முடித்திருந்தார்
"என் அருமை நண்பரே நீங்கள் கூறியிருப்பது உண்மையிலும் உண்மை. இந்த
இன்ஸ்சூரன்சில் ஒரு தினுசில் இல்லை பலா வகையில்
மாட்டிக்கொண்டு தவித்தவர்கள், தவித்துக் கொண்டிருப்பவர்கள் அனுபவங்களில் உங்களதையும் பத்தோடு பதினொன்றாக சேர்த்துக்கொள்ளுங்கள்.சிக்காமல்
வெளியே வருபவர்கள் வெகு சொற்பமே!!"
வியாபாரத் தொடர்பில் வந்த நட்பு இது.சென்னையில்
செல்வாக்குபெற்ற குடும்பம். ஒரு பிரதான சாலை கூட அவர்கள் மூதாதையர் பேரில் இருக்கிறது. ஆப்பரேஷன் ஆகி வீட்டில் இருக்கும் அந்த நண்பரின் நலம் விசாரிக்கச் சென்றிருந்தோம்.
" எல்லாம் நல்லபடியா நடக்கணுமுண்ணு ப்ரே
பண்ணிகிட்டோங்க. ஆஸ்பத்திரியும் பேர் போனதாச்சே."
அனுசரணையுடன் சொன்னோம்
"ரொம்ப நன்றிம்மா..." என்றவர்
"கொண்ட நெறைய மல்லியப்பூ....... உள்ள இருக்குமாம் ஈரும் பேனும்." என்று சொல்லி
விரக்தியாகச் சிரித்தார்.
வினாக்குறியுடன் பார்த்தோம். "அது ஒண்ணும்
இல்லம்மா.." என்ற அவர் மனைவி " ஆப்பரேஷன் எல்லாம் நல்லபடியாத்தான் நடந்துச்சு.... கவனிப்பில
எல்லாம் கொற ஒண்ணும் இல்ல. "இனிமே நீங்க வீட்ல போய் ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதான்...
ஆஸ்பத்திரி பக்கம் தலை வச்சே படுக்கவேணாம்." டாக்டர் சிரிச்சுகிட்டே சொல்லவும் பணத்தையெல்லாம்
கட்டி முடிச்சிட்டு நிக்கிறோம். "பெரிய ஆக்சிடென்ட் பக்கத்துல ஆகிஇருக்குங்க.......
ஐயாவுக்கு ஆம்புலன்சே கெடக்கில. ஒண்ணு பண்ணுங்க நீங்க..... நைட்டு இங்கயே தூங்கிட்டு காலமற காட்டியும் ஐயா கெளம்பட்டும் ரோட்லயும் அப்ப கூட்டம் இருக்காது." டாக்டர் சொன்னார்
அதுவும் நல்ல யோசன தாண்ணு மூட்ட முடிச்சு
எல்லாத்தையும் அள்ளி வண்டியில போட்டுகிட்டு இவுருக்கு ஒத்தாசையா இருந்த ஆள முட்டும் தொணைக்கு வச்சிட்டு நாங்கள்ளாம் வீட்டுக்கு
கெளம்பிட்டோம்.
அடுத்த நா காலையில ஆஸ்பத்திரி ஆபீஸ்லருந்து
ஒருபில்ல தொணைக்கி இருந்த பையன் கிட்டகுடுத்து பணத்த கட்டிடுங்க, ஆம்புலன்ஸ் தயாரா இருக்குங்கிறாராங்ளாம். அவனுக்கு
என்னாண்ணே புரியில.அம்மாதான் தெளிவா பணம் எல்லாம் கட்டியாச்சுப்பா..... ஐயாவ கூட்டிகிட்டு வர வேண்டியதுமட்டுந்தான் ஓன் வேலண்ணு சொன்னங்களே. அவன் கையில மொதல்ல அவ்வளவு
காசும் இல்ல. வீட்டுக்கு பொயிட்டு பணம் எடுத்துக்கிட்டு
வர்ரங்கண்ணு சொல்லிபாத்துருக்கான் பணத்த கட்டிபிட்டு பேஷண்ட்ட கூட்டிகிட்டு போங்கண்ணு
கறாரா சொல்றாங்களாம்.இவனும் ஆஸ்பத்திரி போன்லேருந்து வீட்டுக்கு அடிச்சி அடிச்சி பாக்குறான்
லைனே கிடைக்கிலியாம்.(உங்கள் ஞாபகத்திற்கு வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் செல்போனை
நோண்டாமல் முகம் பார்த்துப்பேசிய "செல்போன்
இல்லாத" சுகக் காலம்அது!") ஐயா பேர அவுரு செல்வாக்க எல்லாம் சொல்லியிருக்கான்.
ம்ஹூம்.... அவுங்க எதுக்கும் மசியில. இதுக்கு
நடுவுல இவுரு காத்தில்லாத வெராண்டாவுல ஆம்புலன்சுக்காக
காத்துகிட்டு ஸ்டெச்சர்ல படுத்துகெடக்காரு. இந்த பய இவ்வளவு நேரம் என்னாத்ததான் பண்றான்?
சமயத்துல மக்கு மாரிதான் இருக்கான். இவுருக்கு எரிச்சலான எரிச்சல். பசி ஒரு பக்கம்
காத்து இல்லாத டஞ்சன் வேற. ஐயாகிட்ட விஷயத்த எப்படி சொல்றதுண்ணு அவன் தயங்கி தயங்கி விவரத்த
சொல்றான். லட்ச லட்சமா கொட்டிகுடுத்திருக்கோம்... இந்த சொல்ப காசு பொறமாட்டமா
இல்ல குடுக்கமாட்டமா? கத்தன கத்துல இவுருக்கு
பிரஷர் ஏறிப்போச்சு.. எமர்ஜென்சி டாக்டரருக ஓடியாராங்களாம். இவுரு தொட உடுலியாம்.
அதுக்குள்ளே தெரிஞ்சவர் ஒருத்தர் அங்க வந்தவரு ஐயாவ சமாதானப்படுத்தி எல்லாத்தையும்
செட்டில் பண்ணிட்டு வழியில இன்னொரு ஆஸ்பத்திரியில கொண்டு போய் சேத்து ..... ஒரே கூத்துதான்
போங்க" அவங்க சொன்னதைக்கேட்டு இப்டி கூட
நடக்குமாண்ணு அசந்துதான் போனோம்!
பணந்தான் முக்கியம் என்று மருத்துவமனைகள்
செயல் படுவதை நாங்கள் கண்கூடாகக் கண்ட ஒரு சம்பவம் நம்ப முடியாத ஒன்றாக இன்றும் மனசுக்குள்
நிற்கிறது. ஒரு பிரபல தமிழ் எழுத்தாளர். எங்கள் தெருவில். அவரது புத்தகங்களை எனக்கு
பரிசளித்த நண்பர். ஒரு நாள் கார் ஒட்டிக்கொண்டு போகையில் ஒரு விபத்தில் மாட்டி ரத்தக்காயங்களுடன் மயக்கமாகிவிட்டார். போலிஸ் வருவதற்குள் அவர் பர்ஸ்
காணாமல் போக விவரம் ஒன்றும் அறியாமலேயே பக்கத்தில் இருந்த கார்ப்பரேட் மருத்துவ மனைக்கு
அனுப்பியிருக்கிறார்கள். இந்த நிறுவனங்களில் மனித உயிரைவிட அப்ளிகேஷன் பூர்த்தி செய்வதுதனே
வெகு முக்கியமான விஷயம்! அதற்கான விவரங்கள்
கிடைக்காமல் காமா சோமா வைத்தியத்தோடு அவர் ரத்த வெள்ளத்திலேயே கிடக்க விஷயம் அறிந்து சொந்த பந்தங்கள் மருத்துமனைக்கு வருவதற்குள்உயிர் பிரிந்து போனது.
வலுத்துப்போன சண்டையில் மருத்துவமனை பக்கமிருந்து வந்த பதிலின் சாராம்சம் இதுதான்.
"அட்ரஸ் இல்லாத இவருக்கு எப்படி ஆப்பரேஷன் செய்வது? மருத்துவ செலவை யார் கொடுப்பார்கள்?"
" என் ராஜாவ அநாதப்பொணமா போட்டு வச்சிருந்தானுகளே..................."
பல் வேறு வார்த்தைகளால் அவர்கள் மனைவி மருத்துவ மனைக்குக் கொடுத்த வசவு ஜென்மத்துக்குப்
போதுமானது.
தங்கை மருத்துவ மனையில்.அவளது பையன் நல்லவேலையில்
இருந்ததால் மருத்துவ இன்சுரன்சும் பலமாகவே. "பெரியம்மா..... அம்மா தினமும் மூணு
வேளை போட வேண்டிய மாத்திரை ஆஸ்பத்திரி பார்மசியில் ஸ்டாக் இல்லையாம். நீங்க வெளியேருந்து
வாங்கிட்டு வரமுடியுமா?" பையன் செல்லில் கூப்பிட்டான். மாத்திரையோடு போனேன்.
"ஜாலியா வெல போட்டுருப்பானுகளே?"
சொல்லிக்கொண்டே என் கையிலிருந்து பில்லை வாங்கிப்பார்த்தவன்
அசந்து போய்விட்டான். அதே மாத்திரை அவன் பில்லில் மூன்று மடங்கு விலை!
மருத்துவ இன்சுரன்சு கையில் இருப்பதை அறிந்தால்
" பைசா நீயா குடுக்குற? சொகமாக்கி வீட்டுக்கு
அனுப்புறமா? அத முட்டும் பாரு." இது மருத்துவ மனை சொல்லாமல் சொல்லும் மூதுரை!
முப்பது ஆண்டுகளுக்கு முன்னேயே மனைவி/கணவன் குழந்தைகள் என்ற சின்ன வட்டத்திற்கு
மட்டும் இந்த மருத்துவ இன்சுரன்சு பண்ணாமல் தாய் தந்தையரையும் இதற்கடியில் கொண்டு வந்த
ஒரு மனிதாபிமான நிறுவனத்தின் மனித வளத்துறையில்
நான் இருந்தபோது இன்சுரன்சு கம்பனி நேரிடையாக
மருத்துவ மனைக்கு பணம் செலுத்தாது. வேலை செய்யும் நிறுவனத்தின் வழியாகவே செக்காக
உரியவரை வந்து அடையும்
இன்சுரன்சு இருக்கிறது என்று அறிந்தால் மருத்துவமனைகள் அதிகமாக
கணக்கு காட்டி விடுவார்கள். இந்த பணம் பிடுங்கும் வித்தையில் மாட்டிக்கொண்டு முழித்த
நாங்கள் இதை எப்படி முறியடிப்பது என யோசனை
செய்தோம். மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுபருக்கு வேண்டிய தொகையை முன்பணமாகக் கொடுத்துவிடுவது மருத்துமனையில் இன்சுரன்சு
இருப்பதாகவே காட்டிக்கொள்ளக்கூடாது எல்லா பில்லையும்
கொடுத்தால் சரிவர மருத்துவ மனையில் வாங்கி
வேலை செய்யும் நிறுவனத்தில் கொடுத்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தோம்,
இந்த பில்களை இன்சுரன்சு நிறுவனத்திற்கு அனுப்பி அந்த நபருக்கு தொகை வருகையில் அவர் முன் பணத் தொகையை நிறுவனத்திற்கு கொடுத்து
விடுவார். பேராசைக்கரர்களின் பிடியிலிருந்து
எங்கள் மருத்துவ இன்சுரன்சு சுகமே சென்றது!
ஆனால் இப்போது இன்சுரன்சு முறையே வேறு வகையாக இருக்கிறது
இன்னொரு கொடுமையும் சில மருத்துமனைகளில் நடை
பெறுகிறதாம். இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் இருக்கும் வயதானவர்களை, பெரிய
தொகை மருத்துவ இன்சுரன்சு வைத்திருப்பவர்களை
மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் அருமையான
மருத்துவ மொழிகளில் திறம் படப்பேசி கண்ட கண்ட
மெஷின்களில் ஏற்றி இன்சுரன்சு தொகை தீரும்வரை முதியோரை பணம் பண்ணும் கருவிகளாய்..........!! மனிதாபிமானம்
எங்கேதான் போயிற்று?
"கையில கொள்ளைக்காசு வாயில தோசை" எல்லா ஆஸ்பத்திரிகளுக்கும் உரித்தாகும் ஒற்றைப்
பொன்மொழி. இன்சுரன்சு தவிரவும் கை கவசம் பணம் வைத்துக்கொள்வது எரிச்சலை நீக்கவல்ல அருமருந்து.
என்னதைப்படிக்கும் ஒவ்வொருவர் கைவசமும் இந்த
சுழலில் சிக்கிக்கொண்ட அனுபவம்கட்டாயம் என்னதைவிட சிக்கலானதாகக் கூட இருக்கலாம். ஆனாலும்
இப்போது நான் பகிர்ந்து கொள்ளப்போகும் வெளி நாட்டு அனுபவம் இந்தியர் நம்மை
"சொர்க்கமே ஆனாலும் அது நம்ம ஊர போல
ஆகுமா?" என்று பாடவைக்க வல்லது!
முதுகு வலியால் அவதிப்பட்டுகொண்டிருந்த நண்பர் ஒருவரை இங்கிலாந்தில்
சந்திக்க நேர்ந்தது. "ஏன் ஆஸ்பத்திரிக்கு போகவில்லையா? நவீன மருத்துவம் எல்லாம்
உங்களிடம் இலவசமாகவல்லவா இருக்கிறது?"
என்றோம்
முதுகை தலையணையில் முட்டுக்கொடுத்த அவர் "நீங்கள் சொல்வது சரிதான்....... NHS என்ற
முறை எங்கள் அனைவருக்கும் எவ்வளவு பெரிய பிரச்னையானாலும்
மருத்துவ வசதிகளைக் இலவசமாகத்தான்
அளிக்கிறது. ஆனால் அவசர சிகிச்சையைத்தவிர மற்றதுக்கெல்லாம் நீங்கள் க்யூவில்தான்
காத்துதான் நிற்க வேண்டியிருக்கும். நானும் அந்த க்யூவில் நிற்கும் ஒரு பேர்வழிதான்
ஒங்க ஊரு எவ்வளவோ பரவாயில்லை ."என்றார்.
"வெளி நாட்டிலெல்லாம் அருமையான சிகிச்சை என்னத்த இங்க பண்றாங்க?"
என்று அங்கலாய்த்துக்கொள்ளாதிர்கள். " இக்கரைக்கு அக்கரை பச்சை." அதே கதைதான் அங்கேயும்! முதுகு வலியால்
முட்டி வலியால் அவஸ்தைப்பட்டுக்கொண்டு எண்ணைக்கி
நம்மள கூப்புடப்போறானோ தெரியிலியே என்ற திரிசங்கு சொர்க்கத்தில் உளைந்து போகாமல் இன்றைக்கு முடிவு பண்ணி மறுநாளே மருத்துவ மனையில் ஆஜராகி விடலாம் நம்ம ஊரிலே!!
"சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல
ஆகுமா?"
சரிதானே!!?