அப்பாவுக்கு
உடம்பு சரியில்லை. அதற்காக கடமையை விட்டு விட முடியுமா என்ன? வெளியூர் சென்றே ஆக வேண்டிய
சூழ்நிலை. இந்த ஒரு வேலையை முடித்துவிட்டால் ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு அவர் பக்கத்திலேயிருந்து
கவனித்துக்கொள்ளலாம்.
அதற்கெல்லாம்
அவசியம் இல்லை என்பதை உணர்த்த வீடு திரும்பிய
அவருக்கு அங்கு கூடியிருந்த பெருங்கூட்டம்
பிரகடனப்படுத்தியது. மனசு நிறைந்த துக்கத்தை தாங்கமுடியாமல்உள்ளே நுழைகையில் அடித்து பிரண்டு கொண்டு வந்த குருக்கள் கூட்டம்
அவரை சூழ்ந்து கொள்ள அவர்களது தள்ளுபிடிக்குள் அவரது ஒன்பது வயதுப் பையனைக் கண்டபோது அவர் அதிர்ந்து
போனார்!
“பார்த்தியோடா....
உன் பையன் பண்ணின அதிகப்பிரசங்கி
தனத்த?
இதெல்லாம் பெரியவா எடுக்க வேண்டிய முடிவுண்ணு எவ்வளவோ சொல்லிப்பாத்தோம். தோப்பனார்
வந்துருட்டுமுடாண்ணு கெஞ்சிப் பார்த்தோம். அதுக்கெல்லாம் நேரம் கெடையாதுண்ணுட்டான் மொளச்சு மூணு எலவுடல...... எங்களையெல்லாம் எப்டி
தூக்கி எரிஞ்சி பேசிட்டாங்கிற...? அவுரு முழிய நோண்டிண்ணா எடுத்துட்டான்! நன்னா நாலு கேள்வி கேட்டு மொத்து பூச குடு.... ஆங்காரத்தின்
உச்சியிலிருந்தது அந்தக்கூட்டம்!
கூட்டத்திலிருந்த
பையனை கைப்பிடித்து அறைக்குக் கூட்டிப்போனார் அவர்.
“அப்பா........
தாத்தா இறந்த ஒடனே ஒன்ன காண்ட்டாக்ட் பண்ண முடியாதுண்ணு எனக்குத்தெரியும் (செல்போன்
இல்லாத நாட்கள் அவை ) அதனால உன் போன் டயரியில
கண் தானத்துக்கு நீ குறிச்சி வச்சருந்த நம்பருக்கு போன் பண்ணி விவரங்கள சொன்னேன். நாலு
மணி நேரத்துக்குள்ள கண்ண தானம் பண்ண குடுத்துடுணுமுண்ணு நீ எப்பயோ சொன்னது ஞாபகத்துக்கு
வந்துது. சரி நீ இருந்தாலும் இதத்தான் பண்ணியிருப்பண்ணு..... அம்மாகிட்ட பேசிட்டு இந்த
முடிவ நான்தான் எடுத்தேன்... தப்பாப்பா?அந்த மாமால்லாம் என்ன ரொம்பவே திட்டிபிட்டா.....
பையனது கண்கள் நிறைந்து வழிந்தன!
அவர்கள்
இருவரும் வெளியே வருகையில் கூடியிருந்ததவர் மத்தியில் என்ன நடக்கப்போகிறதோ என்ற பதஷ்ட்டம்
அதிகமானது.
“
எவ்வளவு அருமையான காரியத்தை எம்பையன் செஞ்சிருக்கான் பாருங்க?! நானே அவன் வயசில இந்த
முடிவ எடுத்துருப்பனாங்கிறது சந்தேகந்தான் ...... ரெண்டு பேருக்கு கண் குடுக்குற புண்ணியத்தல்ல
இவன் செஞ்சிருக்கான்.....! அப்பாவுக்கு காத்திருப்பதுல பிரயோசனம் இல்லண்ணு அவனுக்குத்
தெரிஞ்சிருந்தது பூர்வ ஜென்மத்துப் புண்ணியந்தான்.
ஏண்ணா கண் தானம் எறந்த நாலு மணி நேரத்துக்குள்ள பண்ணிடணும்.” பையனை அப்படியே கட்டி
அணைத்துகொண்டார் அப்பா! கசிந்து உள்ளுருகி வந்தஇச்சொற்களுக்கு கூட்டத்தாரிடையே பதில் இல்லாமல்தான் போயிற்று! இந்தஅருமையான சம்பவம்
என் காதுகளுக்கு வந்தபோது நானும் உருகித்தான்
போனேன். தந்தையும் தனயனும் நாம் கண் கூடாகக் தரிசிக்கும், அதியசய அபூர்வப்பிறவிகளோ!
அதே
குடும்பத்தில் நடந்த இன்னொரு அதிசயமும் என்னை மூக்கில் விரல் வைக்கச்செய்தது உண்மையிலும்
உண்மை.
தமிழ்
நாட்டுக்கல்யாணங்களில் நேரடி அழைப்பு என்பது ஒரு முக்கியமான ஒரு பங்கு வகிப்பது நாம்
அனைவரும் அறிந்ததே. மற்றவர்களுக்கு எப்படியோ இன்னும் சம்பந்தி முறைக்காரர்களுக்கு நிச்சயமாக
மஞ்சள் குங்குமம் பணம் பாக்கு வைத்துதான் பத்திரிகை கொடுக்க வேண்டும்.. தபாலில் அனுப்பும்
பத்திரிக்கைகளுக்கு பொதுவாக அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படாது. “வீடு தேடிவந்து
கூப்புட்டுட்டு போயிருக்காங்க நாம போவாட்டிண்ணா மரியாத இல்ல.” என்பதே நம் வழக்கு.
அவரது
அந்த ஒரே பையனுக்கு கல்யாணம். தேடித்தேடி பத்திரிகை வைத்தார்கள். இது என்ன பெரிய விஷயம்?
நாம் எல்லோரும் செய்வதுதானே? ஆனால் அவ்வீட்டு
சிந்தனையிலேயோ ஒரு சிறு மாற்றம்! பத்திரிகை வந்த அன்று முதல் பத்திரிக்கைகளாக அவர்கள் தெருவின் வேலை செய்யும் துப்பரவாளர்கள் அனைவரையும் குடும்பமாக சென்று சந்தித்து தாம்பாளத்தில் பணம் ஆயிரம் ரூபாய் பாக்கும் வைத்து அழைப்பு விடுத்து நீங்கள் எங்கள்
வெகு முக்கிய விருந்தாளிகள் என சொல்லாமற் சொல்லி விளம்பரம் ஏதுமின்றி ஒரு அதிசயத்தை
நிகழ்த்திக்காட்டியது என் மனதை நிறைத்தது!
சின்ன
சின்ன அதிசயங்கள் இன்னமும் செய்து கொண்டே இருக்கும் அக்குடும்பத்தில் என்றுமே மகிழ்ச்சி கூத்தாடிக்கொண்டேதான்
இருக்கும்! ! வாழ்வை மாற்றிப்போட்டு சுகமாக்கும் நிறைவுதரும் அதிசயங்கள் எல்லா வளைவுகளிலும் நமக்காக் காத்து நிற்கின்றது. சிந்தனையில் சிறு
மாற்றம்? செய்ததுதான் பார்ப்போமே? நம்மாலும் முடியும்!