Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Monday, 21 October 2019

விருந்துகள் பல விதம்

காரில் நெடுந்தூர பயணமென்றால் எங்கள் டிரைவர் எஃஎம்  ரேடியோவை திருவி விட்டு விடுவார். பழைய மாவை அரைக்கும் கதையைத்தான் டி ஜேக்கள் புதுசுபோல அள்ளி விடுவார்கள் என்றாலும்   அமையா சமயத்தில்  ஜன ரஞ்சகமான சில விஷயங்களும் அதில் அகப்படும். அன்றும் அப்படித்தான். கல்யாண மகால்களில் அழையா விருந்தாளியாக சென்று சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிட்டு   வெற்றிலை பாக்கு பை சகிதம் வெளியே வரும் ஒருவர் டி ஜேயுடன் பேசிக்கொண்டிருந்தார்.
"அழைப்பு இல்லாத ஒரு  விருந்தாளியாய் கல்யாண ஹாலுக்குள் நுழைவதில் மனசுக்குள்ள ஒரு பயம் இருக்காதா?
"என்னங்க நீங்க.....? சட்ட வேட்டி வெள்ளையும் சொள்ளையுமா இருக்கையில ஒரு பய வாயில பல்லபோட்டு ஒரு வார்த்த சொல்ல முடியுமா என்னா? பயம் என்னாங்க வேண்டியிருக்கு. எல்லாம் நாம போற தோரணையிலில்ல இருக்கு....
உள்ள நொழஞ்ச ஒடனே சந்தனத்த நெத்தியில வச்சிட்டேன்னா அது வேட்டி சட்டைக்கி கச்சிதமா அமஞ்சு போயிரும்.அப்பறம் என்னா அங்கங்க கைய கும்புட்டு வாங்க வாங்கண்ணு கூப்புடுறவங்களுக்கு பிரியமா வணக்கம் வச்சுட்டு மேடையில் ஏறி மாப்பிள்ளைக்கி கை குலுக்கி பொண்ணுக்கு பிரியமா வணக்கம் போட்டு கீழ எறங்கும்போது  கைய புடுச்சுல்ல  டைனிங் ஹாலுக்கு கூட்டிகிட்டு போய் கவனிச்சிக்குவாங்க! திருப்தியா சாப்புட்டுட்டு வெத்தல பாக்கு இல்ல பீடாவ மெண்ணுட்டு தேங்கா பையி இல்ல இண்ணைய   ஃபேஷன்ல நல்ல செடியா ஒண்ண  பொறுக்கி எடுத்துகிட்டு  நீட்டா வெளிய  வர வேண்டியதுதான்.
என்னோட டேஸ்ட் அண்ணைக்கி எப்புடி இருக்கோ அதுக்கு தக்கன ஹால ச்சூஸ் பண்ணிக்குவேன். இண்ணைக்கி சுத்தமான சைவ சாப்பாடா இல்ல மொகலாய் பிரியாணியா இல்ல வடக்கித்திய சாப்பாடாண்ணு மனசுக்குள்ள ஒரு கணக்கு ஓடிகிட்டு இருக்கும்.
என்ன இருந்தாலும் ஓசியில சாப்புடுறோமேண்ணு ஒரு உறுத்தல்?
ஆயிரம் பேர் சாப்புடுறாங்க ஐயா..... நான் என்ன திருடுறேனா என்னா இல்ல யாரையும் கண்ணடிக்கிறேனா? சின்ன வயசிலேர்ந்தே இந்த வாழ எலையில சாப்புடுறதுக்கு மனசுக்குள்ள எப்பவும் ஒரு ஏக்கம். எங்க வீட்டுல ஆளுக்கொரு கோப்பை தட்டுதான். சின்ன பிள்ளையா இருக்கப்ப அம்மா அப்பா அவுங்க போற கலியாண வீட்டுக்கெல்லாம் என்ன கூட்டிகிட்டு போமாட்டாங்களான்னு ஏங்கிப்போயி நிப்பேன். பத்து பிள்ளக இருக்க எங்க வீட்ல ஜனங்க கண்ணு போட்டுடுவாங்களேண்ணு மொற வச்சுதான் பிள்ளைகள கலியாணம் காச்சிக்கி கூட்டிகிட்டு போவாங்க......
 இப்ப எனக்கு ரொம்ப நெறைவா இருக்குங்க. சந்தோஷமா இருக்கேன்.
டி ஜே யின் சம்பாஷணை  இப்படி ஜாலியாக முடிகிற போது இங்கிலாந்தில் நடந்த எங்கள் நண்பர் ஒருவரின் கல்யாணம் மனசுக்குள் எட்டிப்பார்த்தது!
கோயிலில் கல்யாணம் முடிந்து வெளியே வந்தவுடன் பொங்கி பூத்து நின்ற ஷாம்பெயினோடு பொண்ணு மாப்பிள்ளையின்  வாழ்வு  பொங்கி வளர வேண்டும் என்ற வாழ்த்துக்களோடு  கிறிஸ்டல் கிளாசை தூக்கிப்பிடித்து எல்லோரும் அருந்திய பின்  பொண்ணு மாப்பிள்ளை அலங்கார காரில் ஒரு ரவுண்டுக்குக் கிளம்பிவிட மற்றவர்களை  சாப்பாட்டிற்கு செல்லும்படி அழைப்பு விடுத்தனர். பொதுவாக நம்மூர் கிறிஸ்தவ கல்யாணங்களில் கோயிலுக்குள் நெருங்கிய சொந்த பந்தந்தான் குழுமியிருக்கும். ரிசப்ஷன் கூட்டந்தான் சொல்லி மாளாது! இங்கேயும் அதே பழக்கந்தான் இருக்கும் என்று மனசுக்குள்ளே நினைத்துக் கொண்டேன். ஹாலுக்கு எவ்வளவு தூரம் தெரியவில்லையே என்ற யோசனையில் இருக்கையில் கலியாணத்துக்கு வந்த ஜனங்கள் பேசி சிரித்துக்கொண்டே பக்கத்திலிருந்த வெள்ளை ஷாமியான   கூடாரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். கிடையாடு  போல நாங்களும் அவர்கள் பின்னாலே நடந்து போனோம். அழகு சிந்த அலங்ககரிக்கப்பட்ட அந்த வெள்ளைக்  கூடாரத்தில் நுழைந்த உடன்  ஒரு வெண் பலகை.  மக்கள் அதை நின்று படிக்க  நாங்களும் பொண்ணு  மாப்பிள்ளைக்கி  வாழ்த்துதலாய் இருக்குமோ  என்ற எண்ணத்தோடு  அவர்கள் பின் சென்றோம். ஆனால் அந்த வெண் பலகையில் எழுதியிருந்ததை ஜீரணிக்க முடியாமல் நான் திணறிப்போனது உண்மை!! பலகையில்  மேஜை வாரியாய் விருந்தினர் பெயர்களை எழுதியிருந்தார்கள்!! முதல் மேஜையில் பொண்ணு மாப்பிள்ளை அவர்கள் அப்பா அம்மாவோடு எங்கள் பெயரும் இருந்தது. அது போலவே வந்திருந்த விருந்தாளிகளுக்கெல்லாம் மேஜை ஒதுக்கப்பட்டிருந்தது. இதிலும் ஒரு சூட்சமம் இருப்பதை நண்பர் சொல்லி நான் தெரிந்து கொண்டேன்.அதாவது விருந்துக்கு வந்திருக்கிற ஒவ்வொருவரும் சந்தோஷமாக பேசி சிரித்து கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குடன்  நண்பர்களாக உறவுகளாக பார்த்தே மேஜைகளை ஒதுக்குவார்களாம்.எங்களுக்கு நண்பர் மட்டுமே தெரிந்தவர் ஆகையால் அவர் மேஜையில் எங்களுக்கு இடம்!!  
கூடாரத்துக்குள்ளேயே அடங்கிப்போன விருந்துகளில் நான் திகைத்துப்போனேன். அவ்வளவுதானா?!!  அவ்வளவுதானா?!!  இல்லை இது போல நிறைய கூடாரங்கள் இருக்குமோ?! வந்திருக்கும் விருந்துகளே அவ்வளவுதான் என மாப்பிள்ளை வந்தவர்களை வரவேற்றுப் பேசுகையில் உணர்ந்துகொண்டேன்!
பந்தி போய்க்கொண்டிருக்கும் போதே நாற்காலியின் பின்னே நின்று கொண்டு அடுத்த பந்திக்கு நாங்கள் ரெடி நீங்கள் மட மட வென்று வேலையை முடியுங்கள் என சொல்லாமல் சொல்லி நிற்கும் நம் இந்திய பெருங் கூட்டம் எங்கே? ஒவ்வொருவரும் மகிழ வேண்டும் என்ற நோக்கில் இட ஒதுக்கம் செய்யப்படும் முறைப்பாடு எங்கே?
இந்த ஒரு சூழ்நிலையில் நம் வெள்ளை வேட்டிக்காரர் அழையா விருந்தாளியாய் நுழையத்தான் முடியுமா என்ன?!!   
குட்டி கூட்டத்திற்கு விருந்தளிக்கும் இங்கிலாந்து முறை ஒரு பக்கமென்றால் ஆயிரம் பேருக்கு விருந்தளிக்கும் நம் இந்தியாவிலும் அந்த மாதிரியான ஒரு சூழல் ஏற்படும் என்று நாம் கனவில் கூட நினைத்திருக்கமாட்டோம்! அது 1976ம் ஆண்டு. இந்திரா காந்தி எமர்ஜென்சியை நாட்டில்  அமுலுக்குக் கொண்டு வந்த சமயத்தில் விருந்தினர் கட்டுப்பாடு என்ற ஒரு சட்டத்தையும் கூட சேர்த்துவிட்டிருந்தார். லட்சக்கணக்கான ஏழை மக்கள் பசியால் வாடுகையில்  கலியாணம் என்ற பெயரில் படோபடமான செலவுகள் வீணாக்கப்படும் உணவு வகைகளை தடுக்கும் நோக்கத்தோடேயே கொண்டு வரப்பட்ட சட்டந்தான் என்றாலும்  தொன்றுதொட்டு வரும் பழக்கங்களின் அடிமடியில் அரசாங்கம்  கையை வைக்க அசந்துதான் போய் நின்றது  இந்திய கலாச்சாரம்! கலியாணம் காச்சிகளுக்கு 150 பேரைத்தான் கூப்பிபிட வேண்டும் அவர்களுக்கு 150 அரிசி கோதுமை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்பது சட்டமாகிப்போயிற்று!  
150 பேரைக் கூப்பிட்டு என்ன  கலியாணத்தைப் எப்படி பண்ணுவது  என்ற ஒரு பெரிய கேள்விக்குறி அந்த வருடம் எங்கள் வீட்டின் வாசற்கதவைத் தட்டியது.என் சின்ன தங்கைக்கு நிச்சயமாயிருந்தது.  சொந்த பந்தங்கள் நிறைந்த உறவுகள் எங்களது.
150ல் யாரை அடக்குவது?
அம்மா யோசனை பண்ணினார்கள். " இந்த கலியாணத்தில் ரெண்டு மண்டப செலவை நாம் பார்க்கக்கூடாது. அரிசி கோதுமையைத்தானே 150 கிராம் உபயோகிக்க வேண்டும்? அரிசி கோதுமையைத் தொடாத அயிட்டங்களுக்கு நாம் எவ்வளவு பேரை வேண்டுமானாலும் அழைக்கலாமில்லையா? சாயங்கால கலியாணம் முடிந்தவுடன் மெதுவடை சாம்பார்  மசால் வடை பஜ்ஜி தேங்காய் சட்னி  அசோகா அல்வா பால் கோவா ஜவ்வரிசி பாயாசம்  காபி டீ என்று கொடுத்தோமானால் நிறைய பேர் சாப்பாட்டைவிட இதைத்தான்  விரும்புவார்கள். நம்ம  கிராமத்திலிருந்து வரும் ஜனங்களுக்கு இந்த  விருந்து சரிப்படாது . கலியாணம்னா வட பாயாசத்தோடு எலச்சாப்பாடு கட்டாயம் வேணும். அதனால கிராமத்துக்கும்  நெருங்கிய சொந்த பந்தத்திற்கும்  பத்திரிக்கை வைக்கும் போதே இன்னொரு மண்டபத்தின் விலாசத்தைக்கொடுத்து விடுவோம். டிபன் வகையாரவ சாப்புட்டுட்டு  அவுங்க மொள்ள எலச்சாப்பாட்டுக்கு வருட்டும். ஆபீசர்கள் வந்தா 150 பேருக்கு கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாக்கூட சமாளிச்சிக்கிலாம். அவுங்களும் நம்ம மனுஷங்கதானே?
அம்மா எப்போதுமே சாமர்த்தியசாலி! சட்டத்தின் ஒரு ஓட்டையை கண்டுபிடித்த கெட்டிக்காரி!! இந்த ஓட்டையை உபயோகப்படுத்தி நிறைய கலியாணங்கள் வேண்டிய விருந்துகளைக் கூப்பிட்டு  புதுசு புதுசான தினுசு  தினுசான உணவுகளைக் கொடுத்து அவர்களை மகிழ்வித்தது உண்மை!
நாங்கள் சின்னப்பிள்ளைகளாய் மே மாசத்தில்  கிராமத்து வீட்டை நதம் பண்ணுகையில்  நிலாச்சாப்பாடு என்ற விருந்து அதில் முக்கிய பங்கு வகிக்கும்!
பெரியவர்களாய் எங்கள் குழந்தை குட்டிகளோடு போகையிலும் இந்த நிலாச்சாப்பாட்டு விருந்துக்கு நாக்கை தட்டிக்கொண்டுதான் போவோம்!
இந்த விருந்தில் பிரமாதமான அயிட்டங்கள் எல்லாம் கிடையாது. மத்தியானம் வைக்கும் சாம்பார் இந்த விருந்தின் பொருட்டு ரெட்டை மடங்காகும். அது போலவே உரைக்கு ஊற்றும் தயிரும் அதிகமாகவே இருக்கும். பெரிய பெரிய குண்டான்களில் சாம்பார் சாதத்தையும் தயிர் சாதத்தையும் அடுப்பாங்கரையில் பிசைந்து தூக்க முடியாமல் தூக்கி வரும் அத்தை சின்னம்மாக்கள்  வாசலில் நடுவில் உட்கார்ந்து கொள்வார்கள். நொறுக்கின அப்பளம் ஊறுகாய் ஜாடி குண்டான்களோடு துணைக்கு வந்துவிடும்.  சுத்தி உட்கார்ந்திருக்கும் சிறுசுகள் கூட்டம்  இந்த செட் அப்பை பார்க்கையிலேயே ஜொள்ளு விட ஆரம்பித்துவிடும்.
சாம்பார் சோற்று உருண்டைகளும் தூவப்படும் அப்பளமும் நீட்டிய கைகளை நிரப்புகையில் மனசு துள்ளாட்டந்தான் போடும்!! எங்கள் சிரிப்புகளோடுஅந்த  சோறும் அமுதமாய்! அது முடிந்தவுடன் தயிர்சாதமும் அதன் தலையில் ரத்தினமாய்  வீற்றிருக்கும் ஊறுகாயும்!! எல்லாவற்றையும் ஒரு கை பார்த்தவுடன்  பின்னாலே கிடக்கும் பாப்பா கொளத்திலே கை கழுவும் சாக்கில் தண்ணியை ஒரு அலம்பல் பண்ணி விட்டு வரும் அந்த நிலாச்சாப்பாட்டு சுகம் இன்றைக்கும் பசுமைதான்!!   
பிகு: இந்த நிலாச்சாப்பட்டுக்கு நாங்கள் நிலாவை எதிர்பார்ப்பதில்லை! எங்கள் நச்சரிப்பு தாங்க முடியாமல் பெரியவர்கள் எடுக்கும் முடிவிலேயே எங்கள் நிலாச்சாப்பட்டு விருந்து தொக்கி இருந்தது!
ஒண்ணுமில்லாத சாம்பார் சோற்றையும் தயிர் சாதத்தையும் விருந்தாக்கி மகிழ்ந்தது ஒரு பக்கமென்றால் ஏண்டா போனோம் என்று சொல்ல வைத்த ஒரு விருந்து அனுபவம் எங்கள் இருவருக்கும்!!
முந்தின நாள் ஒரு பிசினெஸ் மீட்டிங். நெருங்கிய நண்பரும் அதில் சேர்த்தி. மீட்டிங் முடிந்த பின் நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் அவர் எங்களை அடுத்த நாள் மதியம் அவர் வீட்டிற்கு சாப்பிட அழைத்தார். எங்களோடு கூட இன்னும் மூன்று நண்பர்களுக்கும் அழைப்பு.
அழகான புராதன வீடு. கேட்டிற்கு வந்து வரவேற்றார் நண்பர். அந்த பழைய வீட்டிற்கு அதன்  சிவப்பு நிறத் தரை ரொம்பவும் பாந்தமாய் இருந்தது! புத்தகங்கள் நிறைந்திருந்த அவரது அறை அவரது படிப்பாற்றாலுக்கு கட்டியம் சொன்னது!
" வாங்க சாப்பிடப்போகலாம் " என்றவரை பின்  தொடர்ந்து சாப்பாட்டு அறைக்குச் சென்றோம். செட்டி நாட்டு ஸ்டைலில் தலை வாழை இலை எங்கள் வருகையை எதிர்பார்த்திருந்தது. வணக்கம் சொன்ன அவரது மனைவி நாங்கள் உட்கார்ந்த உடன் இலைகளுக்கு தண்ணீர் தெளித்தார். அவர் பரிமாறுகையிலே நண்பர் கிளம்பி வெளியே போய்விட்டார். இலைகள் நிரம்பி வழிந்தன. பரிமாறல் முடிந்த உடன் அவர்கள் சமையல் அறைக்குள்  நுழைந்து கொண்டார்கள்.எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நண்பர் எங்களோடு இருந்தால் பேசிக்கொண்டே சாப்பிடலாமே. அவர் சாப்பிடாவிட்டாலும் நம்மோடு பேசிக்கொண்டிருக்கலாமே. இல்லை அவரது மனைவியாவது நம்மோடு பேச்சு கொடுக்கலாமே மனசுக்குள் ஒரு ஆதங்கம். கட்டியக்கார சோறு போல நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் அவ்வப்போது சமையல் அறையிலிருந்து எட்டிப்பார்த்த அவர் மனைவி எங்கள் இலையில் காலியான இடத்தை பூர்த்தி செய்துவிட்டு மறுபடியும் உள்ளே போய் ஒளிந்து கொண்டார்! என்ன ஒரு தர்ம சங்கடம்? மறுபடியும் அவர்கள் எட்டிப்பார்ப்பதற்குள் நாங்கள் உஷாராய் கை கழுவ தயாராகிவிட்டோம். எப்படாப்பா வெளியே போவோம் என்ற அவதியோடு நன்றி சொல்லி  விடை பெற்றுக் கொண்டோம்! அமுதமே ஆனாலும் அதில் கனிவு சேராவிட்டால்....? எங்கள் வாழ்க்கைக்கு இது ஒரு பாடமோ?!
இது  போன்றே தனியாகச்சாப்பிடும் இன்னொரு சூழ்நிலை எங்களுக்கு. பிள்ளைகளையும் கட்டாயம் கூட்டிக்கொண்டு வரவேண்டும் என ஆங்கிலோ இந்தியன் நண்பர்கள் தங்கள் பையனின் புது நன்மை விருந்துக்கு அழைக்க வீடு வரை  வந்திருந்தனர். அந்த அன்பான அழைப்பை தட்டமுடியாமல் அங்கு சென்றிருந்தோம். தெருவில் போட்டிருந்த ஷாமியானா நாற்காலிகள் நிரம்பி இருந்தன. எங்கே சாப்பாடு போடப்போகிறார்கள் தெரியவில்லையே என நினைத்துக் கொண்டிருக்கையில் தம்பதியர் பையனை ஆசீர்வதிக்க எங்களை உள்ளே அழைத்தனர். சாமி மாடம் அழகாக ஜோடிக்கப்பட்டு பையனுக்கு  சிங்காரிக்கப்பட்ட  நாற்காலி அதன் முன் போடப்பட்டிருந்தது.
 பையனுக்கு சிலுவை போட்டுவிட்டு  கொண்டு வந்த பரிசைக்கொடுகிறோம். தம்பதியர் எங்களை ஒரு அறைக்கு அழைத்து செல்கிறார்கள். " எங்கள் மனசு போல வீடு பெரிசு இல்லை. ஹால் எடுத்துப்பண்ண பட்ஜெட் இடம் கொடுக்கவில்லை.. ஆனாலும் உங்களையெல்லாம் வரவேற்று விருந்து கொடுக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் எங்கள் இருவர் மனசு நிறைய. அதனால எங்கமூன்று அறைகளையும் இண்ணைக்கி டைனிங் ஹாலா  ஆக்கிட்டோம். உங்களுடைய அறை இங்கே. எல்லா உணவுவகைகளையும் மேஜையில் வைத்திருக்கிறோம். பிள்ளைகளோடு பிரியமாக திருப்தியாக சாப்பிடுங்கள் அப்பைக்கப்போது நாங்கள் வந்து  பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லி கதவில்லாத அந்த அறையின் திரைச்சீலையை ஒரு புன் முறுவலோடு  இழுத்து விட்டார்கள். தனியாகத்தான் அந்த விருந்தை சாப்பிட்டோம். ஆனாலும் அன்று வயிறும் மனசும்  நிறைந்துபோய் நின்றதென்னவோ உண்மை! 

வெள்ளை வேட்டிக்காரரோடு தொடங்கிய விருந்துத்  தொடர்கதையில்   அன்பான ஆங்கிலோ இந்திய தம்பதியருடன் முடிந்த சுகத்தில் அந்த ஒத்தை நெருடலை மட்டும் பெரிசு படுத்தாமல் இருக்கக் கற்றுக்கொள் என்றது என்மனசு!!