"மூலை முடுக்கெல்லாம் பளிச்சிண்ணு கெடக்கும் தரையில
மூஞ்சி பாக்குலாம் சந்தோஷமா நிம்மதியா சோஃபாவுல உக்காந்து டிவி பாத்த அந்தக் காலம்
எங்கன மலையேறிப்போச்சோ தெரியிலியே? அம்பது பேருக்கு சமச்சாலும் அடுப்பாங்கரயில ஒரு தூசி தும்பு இருக்காது.
முருங்கக் கீரய ஆஞ்செடுத்தா ஒத்த ஒத்தையா மரகத பந்தல் போடும். இப்ப எலும்பு தேஞ்சு
ஒடம்பில சத்தத்து போயி நானா இப்புடி வக்கத்து போய் உக்காந்திருக்கேன்? ஆளுக பண்ணுற அரகொற வேலயப்பாத்துகிட்டு
சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம........ ப்ரஷர்தான் ஏறிப்போவுது..... காலத்தூக்கி மேல வச்சு
உக்காந்தா பாதம் பூரா கன்னங்கரேல்ண்ணு கெடக்கு...... .தொடைக்கற லட்சணம் அப்புடி.
வெள்ள வெளேர்ண்ணு மின்னுர வாஷ் பேசின் காவித்துணியா கெடக்கு. பாத்ரூம்ல காலு வைக்க
கூசுது தொவச்ச துணி வடை வடையா தொங்குது.
மாசம் மொதல்ல முழுசா சம்பளம் வாங்குனாலும் பலா காரணத்தச்சொல்லி நடு நடுவுல பணம்
வாங்குறது வழக்கமாவே ஆயிப்போவுது மாசம் பொறந்தவுடன குடிகார புருஷன் ஆஸ்பத்திரி
செலவுங்குற பொலம்பல்ல வாங்குன முன் பணம் முழுசும் மறந்து பொயிருது!"
ஆத்திரமும் தன்னிரக்கமும் ஒண்ணாக்கூடி அந்த வீட்டுக்கார அம்மாவைக் கவ்விக்கொள்ள கண்ணில் தண்ணீர் தளும்பிப் போனது.
"பூதக்கண்ணாடி வச்சு பாக்குற வயசா ஒனக்கு?...... இப்பல்லாம் கொஞ்சம் பரவால்லம்மா.....
பாத்ரூம் நல்லாதான் இருக்கு. தரையும் சுத்தமாத்தான் இருக்கு. துணி தொவைக்க
வாஷிங்மெஷின் பிரயோஜனம் இல்லைங்கிற. ஒன் லெவலுக்கு எல்லாத்தையும்
எதிர்பாக்காதே." என்று ஐயா சொல்ல "ஆமா கிளி பிள்ளைக்கி சொல்றமாரி பொழுது
விடிஞ்சதிலேர்ந்து தொண்ட தண்ணி போவ கத்தினாதான் வேல நடக்குது." சுத்த
பத்ததில் டிகிரி வாங்குன அம்மாவின் கொரலில் சூட்டுக்கு கொறைவேயில்லை!
பேசாம
வயசானவங்க அப்பார்ட்மெண்ட் ஒண்ணை வாங்கிக்கிட்டு
பொயிருலாமா? கொஞ்ச நாளா
தூங்குற நேரம் தவுத்து அம்மாவுக்கு நெனப்பு பூரா இதுலதான் ஓடிகிட்டு கெடக்கு.
"இந்த தெனசரி பொலம்பல் இல்லாம நிம்மதியாதான்
இருப்பமேண்ணு" வீட்டுக்கார ஐயா மனசிலயும்
அந்த நெனப்பு தொத்திகிச்சு!
"ஏங்க இப்பிடி பண்ணுனா என்னா? ஒங்க ஃபிரண்டு வயசானவங்களுக்குண்ணே
கட்டுன அப்பார்ட்மெண்ட் வாங்கியிருக்காருல்ல.... போன தீவாளிக்கு ஃபோன் பண்ணுனப்ப
சொர்க்கம்ப்பா இந்த எடம்ண்ணு சொன்னாரே ஞாபகம் இருக்கா? திருட்டு பயமே இல்ல இருவத்தி நாலு மணி
நேரமும் செக்யூரிட்டி....நிண்ணு போவாத தண்ணி கரண்ட்டு நல்ல சாப்பாடு.... கூப்புட்ட கொரலுக்கு தயாரா
தினுசுக்கொண்ணா டாக்டருங்க..... பக்கத்திலேயே ஒண்ணாம் நம்பர் ஆஸ்பத்திரி ஸ்விம்மிங் பூலு...... காலையிலயும் சாய்ங்காலமும் காலாற நடக்க மனுஷன
மல்லாக்க தள்ளாத நல்ல பாத...... சிலு சிலுண்ணு காத்து....... சுத்தம் பண்ணுறதுக்கு
ஆளுங்க.......... வீட்டுக்கவலையே இல்லாம ஒத்த வயசுக்காரங்களோட உக்காந்து கத பேச
அங்கங்க பெஞ்ச்சுக....... உள்ளேயே ஜிம்மு
வெத வெதமான வெளயாட்டு..........
எவ்வளவு கொள்ள அந்த மனுசன் சொன்னாரு!
அவங்களுக்குள்ள ஏதோ அருமையான ஒண்ண எழந்துட்டு நிக்கிற உணர்வு தலை தூக்கி
நிற்க அதுவே "ஏங்க ஒங்க ஃ பிரண்டு அப்பார்ட்மெண்ட்ல ஒரு எடம் இருக்காண்ணு
அவுர கூப்புட்டுத்தான் பாக்கறது......." வார்த்தைகளா வெளியே வந்துச்சு.
"நான் டவுணுக்குத்தான் வந்துகிட்டு இருக்கம்பா ........
வழியில வீட்டுக்கு வந்து எட்டி பாத்துட்டு போறேன்."
அவர்
கூப்பிட்ட ஃ போனுக்கு உடனடியாக பதிலளித்தார் நண்பர்.
"சொகவாசிப்பா நீயும் அண்ணியும்! சொந்த வீட்ல கால
ஆட்டிக்கிட்டு ஒக்காந்திருக்கிங்க." என்றார் உள்ளே நுழைந்தவர்.
"நீ வேற போ... அண்ணி என்னாண்ணா இவ்வளோ பெரிய வீட்ட
கட்டிகிட்டு மாரடிக்கிறது பதிலா இத வித்துத் தொலைச்சிட்டு ஒன்னுது மாதிரி
அப்பார்ட்மெண்டுக்கு போயிரலாமுண்ணு ஒரே புடியா நிக்குது......"
இக்கரைக்கி
அக்கர பச்சதான்........ நான் இப்ப டவுணுக்கு ஏன் வந்திருக்கேண்ணு சொன்னா நீயி
அசந்து போவ.......
ஒன்னத்
தெரியாதா எனக்கு? சின்ன
வெஷயத்தெல்லாம் தலையில தூக்கி வச்சிக்கிட்டு ஈரப் பேனாக்கி பேன பெருமாள் ஆக்குற
ஜாதில்ல நீ !! இங்க பாரு நாங்க அங்க வந்துட்டோமுண்ணு வச்சிக்க நாம ரெண்டு பெரும்
காலேஜ்ல அடிச்ச லூட்டியெல்லாம் பத்தி கத கதையா பேசலாம். ஊட்டிக்கி குறுக்கு வழியில
மூணு நாள் நடந்து போனமே ஞாபகம் இருக்கா? வழியில குடுக்குற குளுக்கோசையும் ஜுசையும்
குடிக்கிறதுக்குண்ணே குரூப்பா நவுந்து நவுந்து தமாஷா ஓடுனோமே?! அப்பறம் கேரம் வெளயாடலாம்... காலேஜ் சாம்ப்பியனு
நீயி...... அப்பப்ப என்ன தோக்கடிச்சி நொட்டு காட்டலாம்... ஜாலியா பொழுது போவும்
என்னா சொல்ற... ஒரு எடம் பாக்குறியா எங்குளுக்கு?
நீ
வேறடா........ காவடியோட பாரம் சொமக்கிறவனுக்குத்தான தெரியும்........
"ஏண்டா..........
இதுதாண்டா சொர்க்கமுண்ணு அண்ணைக்கி எங்கிட்ட மார் தட்டுன?"
"சொன்னந்தான்.... அனுபவிச்சந்தான் ஆனா குடிகாரன் பேச்சு
விடிஞ்சாலே போச்சுங்குற மாதிரி இந்த பில்டரோட
பம்மாத்து பேச்சுல இவ்வளவு நாளு மயங்கில்ல கெடந்திருக்கோம் ..... இண்ணைக்கி
அந்த வீட்ல தண்ணி கெடையாது கரண்ட் கெடையாது
குப்ப அள்ள ஆளு கெடையாது...
"சும்மானாச்சுக்கும் டுமீல் உடாதடா எவ்ளோ காசு போட்டு
வாங்குன அந்த எடத்த."
"எரியுற நெருப்புல ஏண்டா எண்ணய ஊத்துற.... பேராச புடிச்சவனுக....... பேராச
புடிச்சவனுக........"
புலம்பித்
தள்ளிய நண்பன ஆசுவாசப்படுத்துவதற்குள்ள அவருக்குப் போதும் போதும்ணு ஆயிரிச்சு.
கதை
இப்படித்தான் ஆரம்பிச்சுதாம்...........
"ஒரு நா காலையில எந்திரிக்கையிலேயே டொம்டொம்முண்ணு ஒரே
சத்தம். ஜன்னல தொறந்து பாத்தா அப்பார்ட்மெண்ட்
காம்ப்பவுண்டு சொவுர ஆளுக இடிச்சிக்கிட்டு இருக்கானுகளாம். போயி கேட்டா
பெரியா ஐயாதான் சொன்னாரு அவுரு கிட்ட
கேட்டுக்குங்கங்கிறாங்க. பெரிய ஐயா ஃபோனையே எடுக்க மாட்டங்கிறாரு...... உடாம
ஆளுக்கு மேல ஆளு ஃபோன் போட "ரெண்டு பக்கமும் அப்பார்ட்மெண்ட் கட்டப்போறோங்க
எல்லாம் ஒங்க சேஃப்டிக்காகத்தான்...... அப்பறமா காம்ப்பவுண்டு சொவுர
கட்டிப்புடுவோம்முண்ணு" பவ்யமா சொன்னாரு.
காம்ப்பவுண்ட
கட்டுனார இல்லியா?
கட்டுனாரு.........
கட்டுனாரு ........ ரெண்டு பக்கமும் அப்பார்ட்மெண்டுகள கட்டி முடிச்சிட்டு
மூணுக்குமா சேத்து காம்ப்பவுண்டு சொவுர
எழுப்பிட்டாரு.......
கட்டிட்டார்ல? அதுக்கு ஏன் இவ்வளவு
சலிச்சிக்கிற......?
நீ
படிச்சிருக்கியே தவிர ஞானம் பத்தாது...... அவனோட வக்கிர புத்தி ஒனக்கு எங்க
புரியப் போவுது?
நான்
மக்காவே இருந்துட்டுப் போறேன்.... ஞானி நீதான் தெளிவாச் சொல்லு.......
நம்ம
அப்பார்ட்மெண்ட்ட கட்டினப்ப வீட்டுக்குள்ள இருக்க வசதிகளத் தவுத்து வெளி வசதிகள்
எல்லாம் எங்களுக்கு முட்டுமே சொந்தமா இருந்துது அந்த வசதிக்கெல்லாம் நாங்க பணம்
கொள்ளையா கொட்டிக்குடுத்துருக்கோம். இப்ப புதுசா ரெண்டு சைடும் இருக்க
அப்பார்ட்மெண்டுகளுக்கும் அதே மாதிரி ஜிம் ஸ்விம்மிங்பூல் மத்த எல்லாமே
குடுக்கிறதாத்தான் பணம் வாங்கியிருக்கான் அந்த ஆளு. நடந்த கதை என்னாண்ணு கேக்குறியா? . அண்டவூட்டு நெய்யே என் பொண்டாட்டி
கையேண்ணு எங்க வசதிகள அவுங்க ரெண்டு சைடுக்கும் பொதுவாக்கி புட்டான்.
இதபுரிஞ்சிகிட்டு நாங்க
எங்கஅப்பார்ட்மெண்டுக்குண்ணு ஒரு அசோசியேஷன் கொண்டாந்து பில்டருக்கு ஒரு நோட்டீஸ்
அனுப்பிச்சோம். பதில் ஒண்ணையும் காணோம் அடுத்த நோட்டீஸ் கோர்ட்டுக்கு
போவோம்முண்ணு.அனுப்புனோம். அவனுக பாத்தானுக...... இங்க கெடக்குறதெல்லாம்
வயசான கெழங் கட்டைங்க...... பிள்ளக
வெளியூர்ல...... இல்ல வெளி நாட்டுல இருக்கானுக வந்து இருந்து பண்றதுக்கு மனுசாளுக
ஒதவி சுத்தற கெடையாது. இவனுகள மெரட்டுனா சரியாப்போவும்முண்ணு அசோசியேஷன் தலைமைப்
பதவியில இருக்கவங்க ஃப்ளாட்டுக்கெல்லாம் தண்ணிய கரண்ட்ட கட் பண்ணிபுட்டான்.
மத்த ஃ ப்ளாட்டுகாரங்களையெல்லாம் அனாவசிய
தகராறு பண்றானுகண்ணு எங்குளுக்கு எதிரா கையெழுத்து போடச்சொல்றானுக. எங்க ஃ ப்ளாட்ட
எல்லாம் அடி மாட்டு வெலைக்கி விக்கச்சொல்லி பலா வழியிலும் பிரஷர் குடுக்குறானுக.
என்னா பண்றதுண்ணு தெரியில கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலையிற வயசாடா இது? நம்ம கிளாஸ் மேட் லோகுவோட பையன் இபியில
பெரிய பொசிஷன்ல இருக்கான் . அவன்தான் வாங்க அங்க்கிள் நான் இப்பைக்கி இந்த பிரச்சனையெல்லாம் சரி
பண்ணிக் குடுத்துடுறேன் கையோட கையா ஒரு ஃபர்ஸ்ட் கிளாஸ் வக்கீல் கிட்டயும்
கூட்டிகிட்டு போறேன் ஒங்கள ரொம்ப அலைய வுட மாட்டாரு அப்டிண்ணிருக்கான். அப்ப நான்
கெளம்புட்டா?" சொர்க்கத்து
சொந்தக்காரன் அன்று நரக வேதனையோடுதான்
கெளம்பினான்.
வீட்டுக்கார
அம்மா ஐயா ரெண்டு பேருக்கும் புடிச்சு உட்ட
மாதிரியா இருந்துச்சு. ஃ பிரண்டு
அனுபவிக்கிற பிரச்சனை ஒரு பக்கம்ண்ணா கொச்சியில மருது அப்பார்ட்மெண்ட் பில்டர்
பண்ணுன ஊழல்ல காசெல்லாம் கொட்டி
குடுத்துட்டு இந்த திருட்டு தருதாயன்கள்
கிட்ட மாட்டிகிட்டு பொட்டி படுக்கை பிள்ளகுட்டிகளோட
நடுத்தெருவுல நிக்கிறத படத்த பேப்பர்ல பாக்குறதுல நம்ம மனசு வெந்து போறது இன்னொரு
பக்கம். இதெல்லாம் பத்தாதுண்ணு சென்ன மவுலிவாக்கத்துல ஒடஞ்சு உழுந்த பதினோரு
மாடிக்கட்டிடத்தில வயித்தக்கட்டி வாயக்கட்டி சேத்த பணத்தையெல்லாம் அள்ளிக்
கொட்டிபுட்டு ஒத்த காசு கையில இல்லாம பரிதாபமா ஏமாந்து போய் நிக்கிற நடுத்தர
வர்க்கத்து மக்களின் நெலமையும் தொணைக்கி
வந்து நிண்ணுச்சு. கொண்டயப் பிரிச்சாத்தானே உள்ள மண்டி கெடக்குற ஈரும் பேனும்
தெரிய வருது!
இதையெல்லாம்
பாக்கும்போது நம்ம வீட்டுல இருக்குறது
சமாளிக்கக்கூடிய சின்னச் சின்ன பிரச்னைகளாத்தான். முருங்கக்கீர காம்புகள்ளதான்
நெறையா கால்சியம் இருக்காம் பேப்பர்ல போட்டிருக்கான். அத ஒத்த ஒத்தையா பிச்சி நாம
எதுக்கு சிங்கநாத வேல பண்ணி அத சத்தத்ததா ஆக்கணும் ?
துணி
தொவைக்க ஒரு வாஷிங் மெஷின வாங்கிப்போட்டுக்குவோம். அதுவும் சுத்தமாத்தான்
தொவைக்குமுண்ணு நம்புவோமே.கூட்டறத்துக்கும்இப்ப நல்ல மெஷின்க இண்ணைக்கி ஊர் பூரா
கெடக்கு.ஒண்ணு வாங்கிக்குவோம்
வீட்டுக்குள்ள இருக்கறது நம்ம ரெண்டு பேருதானே ஒத்த பாத்ரூம மட்டும் உபயோகிச்சுக்குவோம்.
விருந்தாளிக வந்தா மத்ததுகள தொறந்து வுட்டுக்குவோம் எண்ணைக்கி சமையல் பண்ண
முடியிலியோ அண்ணைக்கி சாப்பாட்ட கையில கொண்டாந்து குடுக்க ஜோமொட்டோ
ஸ்விகிண்ணுதான் க்யூவுல
நிக்கிறானுக......வாங்கி சாப்புட்டுக்குவோம்........ எப்பாயாச்சும் ஹோட்டல் சாப்பாடு சாப்புடறதால
வயிறு ஒண்ணும் கெட்டுப்போவாது...... காசு செலவாவுதேண்ணும் அவதிப்பட
வேணாம்.........கடவுள் புண்ணியத்துல பிள்ளக யாருக்கும் நாம பைசா சேக்க வேண்டிய
அவசியம் இல்ல. இருக்கமுட்டும் சந்தோஷமா இருங்க........ முடியாட்டி எங்ககிட்ட
வந்துருங்கண்ணுதானே அதுகளும் சொல்லுதுக.
இத
உட்டுபுட்டு உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணாண்ணு கண்டவன் கையில மாட்டிகிட்டு
முழிப்பானேன்? வழியில
கெடக்க கோடாலிய காலுல தூக்கி போட்டுகிட்டு
குத்துதே கொடையுதேண்ணு அலறுவானேன்?
சின்ன சின்னதா ரெண்டு பேரும் செஞ்ச யோஜனைகள் அவுங்க
மனச ராஜாங்கமா ஆக்கினது உண்மதான்!
இப்பல்லாம்
"ஏங்க கொஞ்சம் கடைக்கி போயி பழம் வாங்கிகிட்டு
வர்ரிங்களா? வர்ற வழியில
இந்த லிஸ்ட மளிகை கடையில குடுத்துடுங்க"ங்கிறதெல்லாம் ஐயாவுக்கு ஒரு
புடுங்கலாத் தெரியறது இல்ல!
"அம்மா ரேசன் கடைக்கிப்போவணும்மா...... ஊட்ல பொட்டு
அரிசியில்ல..... பிள்ளைங்க ராப்பூராபட்டினி" வேலைக்காரம்மா தலையை
சொறிஞ்சிகிட்டு மாச நடுவுல நிக்கிறது அம்மாவுக்கு எரிச்சல மூட்டுறதில்ல .....
பாவம் ஏழ பாழைங்க பொழச்சி போவுட்டும் என்னத்த அள்ளிகிட்டு போப்போறோம்...."
வீட்டுக்கார அம்மா ஐயா ரெண்டு பேர்
மனசுக்குள்ளையும் அழகானதொரு வேதாந்தம் குடி கொண்டு சுகமான மாற்றங்களை தென்றலாய்ப்
பரப்பியது!!