Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Monday, 10 August 2020

எங்கிருந்தோ வந்தான்

ஷண்முகம் ஒரு அஞ்சு நிமிஷம் வீட்டுக்கு வந்துட்டு போமுடியுமாப்பா?

இன்னாம்மா  இன்னா பிரச்னம்மா?

ஒண்ணும் இல்லப்பா நாலு நாளா மழ பேஞ்சிகிட்டு இருக்கா? பாத்ரூம் கதவு அழுத்தி மூடிக்குது தொறக்கறதுக்குள்ள ப்ராணன் பொயிருது.

அது ஒண்……..ணிம் இல்லம்மாஒரு எழ எழச்சிவுட்டோமுண்ணு வெச்சிக்க  கரக்டா பூடும். கெவர்மெண்ட் ஆபீசுல ஒரு வேல குட்துருக்கானுக.அத்த முடிச்சிட்டு சாங்காலம் வர்ர்ட்டாம்மா? இல்ல நாளைக்கிகாலமற காட்டியும் வர்ட்டா? அது “ஒண்……..ணிம் இல்லம்மா” எங்கள் ஷண்முகத்தின் ‘கோட்  வொர்ட் (code word)!!

எப்டி வேணுண்ணா பண்ணுங்க. ஐயாதான் தொறக்கறதுக்கு அவதிப்படுறாரு.”

செரிதாம்மா இன்னிக்கே வரப்பாக்குறேன். கொஞ்சம் நாழி கழிச்சு வந்தா தாவுலியாம்மா?

எப்ப வேணுண்ணா வாங்க ஷண்முகம்.

யம்மா இப்ப போயி கதவப் பாரு

சரியா இருக்கும் ஷண்முகம்

எதுக்கும் ஒரு தள்ளு தள்ளிப்பாத்துடேன்

சர்யா இருக்காம்மா? மூஞ்சி நெறயா சிரிப்பு

தேங்க்ஸ்ப்பா சரியா இருக்கு கையில காசு குடுக்குறேன்.

யம்மா ஒன்க்கே இது நாயமா இருக்காம்மா? இதுக்கு போயி துட்டு குடுக்குறியே

.ஃப்ளஷ் டேங்க்ல தண்ணி நிக்கமாட்டங்குதுண்ணு வந்த பக்கத்து தெரு பிளம்மர் அஞ்சு நிமிஷம் கைய வச்சிட்டு டூஃபிஃப்ட்டி குடுங்க மேடம்ணு ……….வாய் கூசாம டாக்டர் ஃபீஸ் மாதிரி வாங்கிகிட்டு போறாரு. இவுங்க மத்தியில எங்க ஷண்முகம்!

மேல் ரூமுக்கு ரெண்டு கட்டில் பண்ணுணும் ஷண்முகம்.

அம்மாவுக்கு பண்ணிட்லாம்மா நல்லா படாக்கு மரத்த்ல சேஞ்சி தேக்கு மரத்ல ப்ரேம் குட்ட்த்து பெரமாதமா பண்ணிடுவோம். நீ இன்னாம்மா சொல்ற

ஒரு பட்ஜெட்ட குடுங்க

உன்க்கு இன்னாம்மா பட்ஜெட்டுபோயி வேல்ய…..பாரும்மா

கட்டிலுக்கு அட்வான்ஸ் குடுக்குறதுக்குள்ள ஒன்னப்புடி என்னப்புடிண்ணு ஆயிருச்சு.

சட்ட பாக்கெட்ட தொட்டுக்காட்டி தோ துட்டு இர்க்கு….மா நான் வோணுண்ணா அம்மாகிட்ட வாங்கிக்கிறேன். பையில இருக்க நோட்டுகள எங்கிட்ட காட்டுறது அவருடைய மேனரிசம்!

 பணக்காரங்கெடையாது நெறஞ்ச மனசு முட்டும் கைவசம் .

ஆனா இந்த மனுஷனும் தட்டு கெட்டுப்போயி காசுக்கு நிண்ண நேரமும் ஒண்ணு இருந்துச்சு. வீட்ல என்னமோ ஒரு சின்ன வேலை .வேலய முடிச்சவர் எப்பயும் சொல்றபோயி வேல்யப்பாரும்மாவார்த்த இல்லாம அண்ணைக்கி நிண்ணார். அப்ப வர்ர்டாம்மாங்கறது முட்டும் தயங்கித் தயங்கி வெளிய  வந்துச்சு.

யம்மா கொஞ்சம் துட்டு இர்ந்தா குடேன்

ஒரு நிமிஷம்  நான் அசந்து பொயிட்டேன்! என்னா ஷண்முகம்? என்னா ஆச்சுப்பா? எதும் அவசரமா? செக் வேணுண்ணா தருட்டா.

நீ வேற போம்மா……  தா பாரு  செக்கு……… சட்டப்பையில கையவுட்டார். இந்த மோடி ஆளுபண்ணுன வேலையில எல்லாமே  பேஜாரா பூட்ச்சும்மா. பேங்க்கி பூரா ஜனம் நிக்குது. ஏட்டிஎம்ல  பிச்சாத்து ரூவா  எடுக்கறதுக்கு ஜன்ங்க அல மோதுது. படா பேஜாரும்மா. இது பத்தாதுண்ணு வெளி நாட்டு டூரிஸ்ட்டு ஆளுவளும் கூட சேந்து நிக்கிறாங்க. சில்ற செலவுக்கு அவுங்களுக்கும் துட்டு வேணாமா? எனக்கு ஒரே தமாசா ஆயிருச்சு போ”

இப்ப எங்கையி….. செலவுக்குஎதாச்சும் இருந்தா குடு.

டிமானிட்டைசேஷனப் பண்ணி என்னுடைய பெரும் பணக்காரனை பிச்சைக்காரனாய் ஆக்கி வேடிக்கை பார்த்த அந்த பெரிய மனுஷன் நீடூழித்தான் வாழணும்!

 நானும் கிட்டத்தட்ட அதே நிலைதான்  வீட்டிலே வெளி நாட்டு விருந்தாளிகள். பெரிய திருநாள் நெருங்கி வருகிறது. காய்கறிக்கும் மீனுக்கும் நான் செக்கா கொடுக்கமுடியும்!?

பேங்குக்கு கேஷ் எடுக்கப்போனவர் இன்னும் வரல. அங்க கேஷ் வரவே இன்னும் ரெண்டு மணி நேரம் ஆவுமாம்கேக்காத இந்த மனுஷன் வாயத்தொறந்து கேக்கிற இந்த சமயத்துல நம்ம கையையும் சாமி கட்டிப்போட்டுருக்காரே?. உள்ள போயி ஹேண்ட் பேகை கொட்டிப்பாக்குறேன் முன்னூறு ரூபாய் இருந்துச்சு. அதை எடுத்துட்டு வெளிய வரும்போதுதான் என் சில்லறை டப்பா ஞாபகத்துக்கு வந்துச்சு. ஹேண்பேக்ல சில்றய சேத்து சேத்து வக்கிறதில பையி கனத்துப்போயி தோள்…. வலி கண்டு போவுது அதனால கொஞ்ச சில்றயமுட்டும் அதுல வச்சிகிட்டு மத்ததெல்லாத்தையும் ஒரு டப்பாக்குள்ள அள்ளிப்போடுற ஒரு பழக்கத்த கொண்டாந்தேன்.

பை எதும் வச்சிருக்கிங்களா ஷண்முகம்?

இல்லியேம்மா……. இன்னாத்துக்கும்மா பையி…..?

அஞ்சும் பத்தும் ரெட்டையும் ஒத்தையுமாய் வழிந்து கொண்டிருந்த டப்பாவை அவர்கிட்ட குடுத்து இதல்லாத்தையும் பேண்ட் பாக்கெட்ல அள்ளிப்போட்டுக்குங்க என்று சொல்லிக்கொண்டே முன்னூறையும் சேத்து கையில குடுக்குறேன். ரெண்டு பாக்கெட்டுகளும் ரொம்பி வழிந்து சில்லறை கீழே உருண்டது! பொறுக்கி அவுரு கை நெறயா குடுக்கிறேன்

யம்மா………. என்று கூப்பிட்டவர் கண்ணில் தண்ணீர். ஷண்முகம் எங்கிட்ட காசு கேட்டு வாங்குன ஒரே நாள் அதுதான்!

யார் வழியாக வந்தவருண்ணு எனக்குத்தெரியாது. நான் வேலை பாத்த எடத்தில  வேண்டிய சமயங்கள்ள அவர வேலைக்கி கூப்பிடுவாங்க. அப்டி ஆரம்பிச்சதுதான் எங்க ஒறவு! நான் ரிட்டையர் ஆனபிறகும் அவர் அங்கு போய்க்கொண்டிருந்தார்.

யம்மா…. இப்பல்லாம் நான் அங்க போறதில்லம்மா….”

ஏன் ஷண்முகம்நீங்க பாட்டுக்கு பொயிட்டு குடுக்குற வேலைய பாத்துட்டு வரவேண்டியதுதானே. பைசாவல்லாம் கரெக்டா குடுத்துருவாங்க

ஸெக்யூரிட்டிரூம்பாண்ட ஒரு புங்கமரம் வச்சிருந்தியே ஞாவகம்இர்க்கா ஒன்க்கு? தழ்ச்சி வளந்து நிண்ண அத்தயெல்லாம் வெட்டி தள்ளிட்டாங்கம்மா. உள்ள நொழயும் போதே அந்த காத்துலயும் நிழல்லயும் மனசு குளுந்துடும். இப்ப மரமும் இல்ல மனுசங்க மனசும் செரியில்ல. மொகங்க்குட்த்து பேச நாதியில்ல எங்கயும் வெக்கதான்….கட்டு கறாருதான்…..

அதுவும் ஒரு குவாலிட்டி ஸிஸ்டம்ப்பா. அதுக்கு தக்கன நம்மள மாத்திக்கிணும்.

அதெல்லாம் என்க்கு வோணாம்மா  நமக்கு மனுஷாள்தான் வோணும்இன்னா சொல்ற நீயி?

நான் என்னத்தைச்சொல்ல……?

பிள்ளக்குட்டிகாரர் ஷண்முகம் மூணு பொம்பளப்பிள்ளக. ஒரு பையன்

சந்தோஷம்ப்பா………எல்லாம் ஸ்கூல்ல இருக்குங்களா? பிள்கள

பெரிய பொண்ணு இந்த வர்ஷம் எம்சி முட்ச்சிட்டு வேலயில ஜேய்ன் பண்ணிட்சும்மா….. நடுவுல பொண்ணு பிஎஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்குது பையன எஞ்சினிரிங்க்ல சேத்துருக்கேன். சின்னது இஸ்கூல்ல ப்ளஸ்2 படிக்கிது…..

எனக்குத்தூக்கி வாரிப்போட்டது. சாதாரண ஒரு மனுஷருக்குள்ள இப்டி ஒரு படிப்பு வெறியா? எப்டி மேனேஜ் பண்ணுகிறார்? அம்மா ஞாபகம் வந்தது. பொண்டுகளுக்கு எழுதப்படிக்க தெரிஞ்சா போதும். நக நட்டப் போட்டு நேரா நேரத்துல ஒருத்தன் கையில புடிச்சிக்குக் குடுத்துருணும்ங்கிற ஊரின் பொது நியதிக்கு நடுவே என் ஆறு பொம்பள பிள்ளைகளையும்  நாலு பையங்கமாதிரி படிக்க வச்சே தீருவேன் என்ற அந்த புரட்சிக்காரியின் சிஷ்யனா இருப்பாரோ இந்த ஷண்முகம்? மனசு மகிழ்ந்து போகிறது.

நம்பி கடங்குடுக்குற பெர்ய மன்ஷன் ஒர்த்தர் கீறார்ம்மாஎப்பப்ப கையில துட்டு கெடெய்க்குதோ அப்ப்ப்ப ஐயா கிட்ட பைசல் பண்ணிடுவன்.

 யம்மா இத சொல்லிலியே ஒங்கையில….? என்  ஊட்டுக்காரம்மா இல்லாத போனாக்க நான் சல்லிக்காசுக்கு ப்ரயோஜனம் இல்லம்மா….. இன்னா சம்பாரிச்சாலும் அல்லா துட்டும் அவ்ங்க கைக்கி பொயிரணம். அவுங்களா பாத்து இது இதுக்குண்ணு பைசல் பண்ணுவாங்க. பெட்ரோல் செலவுக்குகூட ய்ம்மா அவுங்ககையிலதான் வாங்கிக்கணும். வாரம் ஒரு நாளைக்கி கோயம்பேட்டுக்கு இஸ்துகிணு பொயிருவாங்க. பழங்கள்ளாம் அங்க சீப்பும்மா ஒரு தாரு பூவம் பழம்  மாதுளம் பழம் ஒரு டப்பா  கறி கா அல்லாத்தையும் தலயிலயும் இடுப்புலயும் சொமந்துகிணு பஸ்சு புடுச்சுருவாங்க. எதுக்கு பெட்ரோல் செலவு? வண்டிய வக்க துட்டுவேற  பஸ்ஸுல சவுரியமா குந்திகிணு போரத உட்டுட்டு……… ஊட்டாண்ட தான் பஸ்ஸ நெறுத்துறான் இப்டி அல்லா காசையும் கணக்கு பண்ணிடுவாங்க

யம்மா மாதுளம் பழம் ஒரு பேக்ஸ் இர்நூறுக்கு கெடைக்குதும்மா…. ஃப்ர்ஸ்ட் கிளாஸ் பழம் ஒரு தபா அம்மாவுக்கு வாங்கியாருட்டா?

வேணாம் ஷண்முகம்எங்கேர்ந்து எங்க தூக்கிகிட்டு வருவிங்க?

இன்னம்மாது வண்டில பின்னால கட்டிவுட்டா அதுபாட்டுக்கு வரப்போவுது நானா சொமக்கப்போறேன்?

பாக்கலாம்பா……. வேணுங்கும்போது சொல்றேன்

காத்தால அல்லாருக்கும் மாதுளம் பழம் ஜூஸ் போட்டு குடுத்ட்வாங்கம்மா ரேஷன் அர்சியிலதான் சாப்பாடு ஆனா யம்மா….. சாப்பாடு……… வக்கணயா இருக்கும். காத்தாலயே சமச்சு  நாலு பேருக்கும் பாக்ஸ் ரெடியாக்கிருவாங்க. வாங்கித்துண்றதுக்கு கொள்றதுக்கு கொழ்ந்தகளுக்கு  துட்டு தர்ர வேல்யே ஊட்ட்ல கெட்யாதும்மா. இஸ்கூலுக்கு காலேஜுக்கு போய் வர்ரதுக்கு பஸ் பாஸ் இர்க்கு சாப்பாடும் கைய்ல ரெடியா இர்க்கு. சாங்காலம் ஊட்டுக்கு வந்துட்டா டிபன் பழம் ரெடி. துண்ணுட்டு அவுங்க குட்குற வேல்ய முட்ச்சிட்டு படிக்க ஒக்கார வேண்டியத்தான். ஆனா யம்மா…… ரொம்ப காராரும்மா அந்தம்மா…. வேலய சரியா பண்ணாத போனா யாரு எவுருண்ணு பாக்காமாட்டாங்க. அடிதான்...... பையனும் அடி வாங்குவாம்மா. ஆனா கொய்ந்தைக வாயத்தொறக்காதுங்கம்மா. இண்ணக்கி பெருசுக்கு பதினஞ்சு பவுனு சேத்துட்டாங்க. அது இப்ப சாம்பாரிக்க ஆர்ம்பிடுச்சுல்ல…… பண்டு போட்டு அத்தப்போட்டு இத்தப்போட்டு இது செட்டில் ஆவறத்துக்குள்ள அடுத்ததுக்கும் ரெடி பண்ணிடுவாங்க…… சாமர்த்தியசாலிம்மா அவுங்க…  நால்லாம் இன்னாத்துக்கு புண்ணியங்கிற………?. சம்பாரிச்சிக்கிணு போய் குடுக்கறதோட ஜோலி முடிஞ்சிரும்.

யம்மா   ஒரு நல்ல சேதிம்மா வர்ர நாயித்துக்கெழம சின்னவளுக்கு மாப்ள ஊட்ல வளகாப்பு செய்றாங்க..  நம்ம ஊட்ல சீர் பலகாரம் சேஞ்சாங்கஅம்மாவுக்கு கொஞ்சம் எடுத்தாந்துருக்கன். முறுக்கு சசோமாசு அதிரப்பை கைமாறுகிறது. கட்யில வாங்குற வேலையே கெட்யாதும்மா ஊட்லயே  நூறு எரனூறுண்ணு அல்லாத்தையும் பண்ணிடுவாங்க. துண்ணு பாரு……. எனக்கு  தீவாளி தவுத்து இது வளைகாப்பின் மூணாவது பலகாரப்பை……..!!

பய்யனுக்குத்தான் வயசு ஏறிக்கிணே போவுதும்மா……. அவனுக்கு  ஒண்ண  முடிச்சிட்டண்ணு வச்சிக்க அப்பறம் ஃபிரீதாம்மா நானு

கவலப்படாதிங்க ஷண்முகம் எல்லாம் நல்லா முடிஞ்சிரும்.

அம்மா வாய் முகூர்த்தம்…….ஆவுட்டும்மா

வெராண்டாவுல கெடக்குற ராக்கிங் சேர்  வாங்கி இருவது வருஷத்துக்கு மேல ஆவுது. பாலிஷ் பண்ணிடுவோமாகொஞ்சம் லாக் டவுணை இப்ப கொஞ்சம் தளர்த்தி இருக்காங்கநாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கோம்

ஷண்முகத்து போன் போடுகிறேன்

பெண் குரல் கேட்கிறது

குளிச்சிகிட்டு கொண்டுகிட்டு இருக்கும்போது அவர்கள் பெண்களில் யாராவது பதில் சொல்லுவார்கள்.

இண்ணைக்கி கொஞ்சம் வயசான குரல்.

நான் மேடம் பேசுறம்மா ஷண்முகம் இருக்காரா?

அவுர ஓமாந்தூரார்ல அட்மிட் பண்ணியிருக்கோங்க. கொரோனா வந்துருச்சு நாலு நாளாச்சி என்னுமோ ஆக்சிஜன் கெடக்கிலண்ணு சொல்லிகிட்டு இருந்தாங்க.

மருமகளுக்கு போன் போட்டு விவரம் சொல்லுகிறேன். அவுங்க ஜிஹெச்ஸ்ல இருக்காங்க.ஓமந்தூரார்ல ஃப்ரண்ட்ஸ்க இருக்காங்க

ஆண்ட்டி. ஒடனே ரெடி பண்றேன்.என்ற பதில்அங்கிருந்து.

அவுங்க வீட்டுக்கும் ஷண்முகந்தானே ஆஸ்தான கார்பெண்டர்!

ஷண்முகம் பையன் அதிர்ந்தும் பேசமாட்டான் அதிகமும் பேசமாட்டான். எங்கிட்ட பேசினா அது தல குனிஞ்சுதான் நடக்கும். அதனாலஅவனுடைய கம்யூனிகேஷன் பூரா என் பையனோடுமட்டுந்தான்.

இப்ப கொஞ்சம் பரவாயில்லயாம்டெய்லி ரிப்போர்ட் 

நாலு நாள் கழித்துஷண்முகத்த இன்ட்டென்சிவ் கேருக்கு கூட்டிகிட்டு பொயிருக்காங்களாம்

ஓரு புதன் காலைஅம்மா…. ஷண்முகம் பொயிட்டாரும்மா….”பையனின் குரல் போனில் தழு தழுத்துப்போய்.

அவன் வீட்டின் மர வேலை பூராவும் அவர் கைவண்ணம்!.

மனசுக்குள் ஒரு பாறாங்கல். துக்கம் விசாரித்தல் போனில் முடிந்து போனது. ஒரு புத்தம் புது வாசனை சம்பங்கிப்பூ மாலை போட்டு என் அருமை நண்பனுக்கு விடைகொடுக்கக்கூட எனக்கு கொடுப்பினை இல்லையே.எம்பயனுக்கு கலியாணம் பண்ணிட்டா நானு ஃப்ரீதான்  என்றாயே என் நண்பா என்னதான் அவதி ஒனக்கு?

வீட்டிலிருக்கும் தேக்கு மர ஆப்பக்கூடு முதல் ரெட்டைகட்டில்வரை எதைத்தொட்டாலும் நீயேதானே…… என்னால் முடிந்தது  மனசு கொள்ளா மறக்கமுடியாத  நெகிழ்வான நினைவோட்டங்கள் உன்னை மையமிட்டு  என்றும் எப்போதும்!