Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Thursday, 17 September 2020

கலை நிறை சிறு தொழிலாளர்கள்

 

என்னுடைய பெண் முகப்புத்தகத்தில் அழகானதொரு பதிப்பை வெளியிட்டிருந்தாள். இது ஒரு கொரோனா காலத்திய பதிப்பு. வேலை பார்க்காமலே கவலை இன்றி வரும் வருமானம் பலரது என அவள் வசிக்கும் நாட்டின்  சூழலில் அவளது  நினைப்பு தனக்கும் தனது நாட்டிய ப்ரியா குழுவிற்கும் நடன உடை தைக்கும் அவளது ஆஸ்தான தையற்காரர் அலெக்ஸ் பக்கம் திரும்புகிறது.

இதோ அவள் வார்த்தைகள் வழியாகவே!!

வேலைக்குப்போக இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கிறது. இந்த சமயத்தில் வேலைக்குப்போக மனமிருந்தும் உற்சாகம் இருந்தும் தன் கடையைத்திறக்க முடியாமல் நிற்கும் என் அலெக்ஸ்  நினைப்பு என் முன்னே.

டிசம்பர் மாதத்து அதி வேகமான வேலைகள் முடிந்து கொஞ்சம் அசந்து போய் உட்கார்ந்திருந்த நேரம் அது! ஆனால் இப்படி அசந்து போய் உட்கார்ந்தே இருக்கப்போகிறோம் என்று அலெக்ஸ் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். வருடம் முழுவதும் நடக்கும் அரங்கேற்றங்களும் பலா வண்ண சிறப்பு நிகழ்வுகளுக்கும் ஆடைகள் போய்க்கொண்டே இருப்பதால் குறையில்லா வருமானம் அவரையும் அவரை சார்ந்திருப்பவர்களையும் அருமையாக பார்த்துக் கொண்டது ஒரு சாதாரண நிகழ்வாகவே இருந்தது. நாலு தலைமுறைத்தொழில் அவரைக் கைவிட்டு விடுமா என்ன?! ஆனால் இன்றோ அவர் கையறு நிலையில் நிற்கிறார்! கும்பகோணத்து சலங்கை மணிகள் தன் தனி ஒலியால் நடனங்களுக்கு அழகு சேர்க்கும் உலகப்பிரசித்தி பெற்றவை. அவற்றைச் செய்யும் விற்பன்னர்களும் தலை முறை தலை முறையாக இதைத்தானே செய்து கொண்டிருப்பார்கள்?! கலையே வாழ்வாகக் கொண்ட அவர்கள் வேறென்ன மாதிரி தொழில் செய்ய முடியும்?! தங்க நகைகளுக்கு ஈடான நடன நகைகள் செய்பவர்களின் கையும் ஓய்ந்து போய்தானே கிடக்கிறது?

இப்படி கவலைகள் கரு மேகங்களாய் என்னைச் சுற்றி நிற்கையில் தோழி இசபெல்லிடம் இருந்து ஒரு ஃபோன். விநாயக சதுர்த்திக்கு ஒரு புது நடன விடியோ கேட்டிருந்தாள்.  சீக்கிரம் அனுப்பி வைத்தால் அவர்கள் நடனக் குழு ப்ராக்டீஸ் பண்ண கொஞ்சம் நேரம் கிடைக்கும் என்று சொன்னாள். அவளுடைய சின்னக்குழுவிற்கு நான் குரு மாதிரி. அவ்வப்போது சனி ஞாயிறு களில் ஸ்காட்லாந்து போய் அவர்களோடு நடனமாடுவது ஒரு சுகமான விஷயம். உடனடியாக டிரஸ் ஒன்றைத்தேடுகிறேன். அலமாரியில் ஏதொ ஒன்று புதுசாக கண்ணில் படுகிறது. க்ரீம் கலரில் பச்சையும் அரக்கும் கட்டம் போட்ட பார்டர். இது டிரஸ் அரதப் பழசாச்சேண்ணு என்ற யோசனையோடு எடுத்துப்பார்க்கிறேன். ஜரிகையெல்லாம் இல்லாமல் பளிச்சென்று என் கண் முன் அது நிற்க அந்த டிரஸ்ஸை ஒட்டிய ஒரு சம்பவமும் மனதிற்கு வந்தது.

மைலாப்பூர் ராசியில் எனக்கும் அம்மாவுக்கும் ரெண்டு அழகான பட்டுப்பாவாடைத்துண்டு கண்ணில் படுகிறது. இதில் டிரஸ் தச்சா அழகா இருக்கும் என்று ரெண்டு பேரும் நினைக்கிறொம். ஆனால் ஒரு டான்ஸ் டிரஸ் தைக்க ஒரு முழுப்புடவை வேணுமே? இத உடுறதுக்கும் மனசில்ல. செல் ஃபோன் அவ்வளவு பிரசித்தமாக இல்லாத அந்த நேரங்களில் ராசிக்குப்பக்கத்தில் பிச்சை பிள்ளைத்தெருவில் இருக்கும் அலெக்ஸ் கடைக்கு ஓடிப்போய் அவரைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்.  பாவாடைத்துண்டுகளோடு  கொஞ்ச நேரம் யோசனை செய்த அவர்   தக்கெலாம் ஆன். ஆனா நடுவுல பெரிய விசிறி வராது. ஆனா இந்த டிரசுக்கு சின்னதா வச்சாதான் அழகா இருக்கும். கடையில கெடக்கிற துணிகள்ள அட்ஜஸ்ட் பண்ணி தச்சுடுவோம்.” ண்ணு எங்கள் பாவாடையில் டிரஸ் என்ற ஆசையை அழகாக நிறைவேற்றிக்காட்டினார்.  பதினேழு வருஷங்களுக்கு பிறகும் அந்த டிரஸ் என் உடம்பை சிக்கென பற்றிக் கொண்டதில் எனக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி!! விலைக்காக அந்த டிரஸ்ஸை அவர் தைக்கவில்லை. “முடியாது ஒரு புடவைதான் வேணும்என்று அலெக்ஸ் ஒரே வார்த்தையில் கஷ்டமில்லாமல் காரியத்தை முடித்திருக்கலாம். ஆனால் கலையோடு ஒன்றிப்போன அந்தக் கலைஞன் தன் வித்தையையல்லாவா எனக்குக் கொடுத்திருக்கிறான்?

சென்னைக்கி வந்துட்டா மொத சந்திப்பு ஒனக்கு அலெக்ஸ்தானேஎன்று என் கணவர் கலாட்டா பண்ணுவார்! ஆடைகளைப்பற்றி  ன் நானும் அலெக்சும் நிறைய ஆலோசனை செய்வோம். அமைதியாக என்னைக்கேட்டுக்கொண்டு முடித்தபின்ஆன் நீங்க சொல்ற மற்றதெல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா இதுக்கு சைட் விசிறி நல்லாயிருக்குமுண்ணு  நான் நெனைக்கிறேன். பஃப் கை எல்லாருக்கும் அவ்வளவு நல்லாருக்காது ஆன்.” கடைசியில் அவரது  சைட் விசிறியும் நீட்டு கையும்தான் கெலித்து நிற்கும்!

எல்லாம் சரிதான் என் அலெக்ஸிடம்! ஆனால் ராத்திரி ஒரு மணி பயணத்தின் கடைசி நேரத்தில் அரக்க பரக்க வேர்க்க விறு விறுக்க அவர் பெரிய உடம்பைத் தூக்கிக்கொண்டு ஆடைகளை அள்ளிக் கொண்டு ஆட்டோவில் வந்து இறங்கும் அவரைத் திட்டவா முடியும்? திறந்து வச்சிருக்க பெட்டியில ஒரு திணிப்பு திணிப்பதற்கு மட்டுந்தான் எனக்கு நேரமிருக்கும்!

என்னுடைய 16 பல் நாட்டு பெண்மணிகளுக்கும் தன் கலையைக்கொடுக்கும் என் அலெக்ஸிற்கு நிறைந்த மனசுடன் எனக்கு வரும் கமிஷன்களையெல்லாம் அளிக்க முடிவு செய்கிறேன். இந்த கொரோனா சூழ்நிலையில் என் நண்பர்களும் தங்களைத் தொட்ட பலப்பல விற்பன்னர்களையும் எண்ணி செயல்பட வேண்டுகிறேன்.

இதைப்படித்து முடிக்கிறேன். அவள் முகப்புத்தகத்தில் வரும் எல்லோருக்கும்.இது ஒரு அருமையான வேண்டுகோளே!

இப்போது என் கதை ஒன்றைக் கேளுங்கள்

கேட்டை யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது. .கிரகப்பிரவேசம் கல்யாணம் குழந்தை பிறப்பு காதுகுத்தல் முதலாண்டு விழாண்ணு வெகு சுறு சுறுப்பாய் இருந்த என் கேட் தன் சத்தத்தை தானே மறந்து போன இந்த காலகட்டத்தில் யாராக இருக்கும் என்று எட்டிப்பார்க்கிறேன்.எல்லாவற்றிற்கும் எங்கள் ஆசீர்வாதம் வேண்டும் என்று நினைக்கிற எங்கள் ஆஃபிஸ் பைண்டர். கார் ஷெட்டில் ஜாகை போட்டுக்கொண்டு எங்கள் நிறுவனத்தின் எந்தெந்த துறைகள் கூப்பிடுகிறதோ மனசு கோணாமல் அவர்கள் சொல்லுகிற வகையில் பைண்ட்பண்ணிக்கொடுப்பார்.

ஆனால் இந்த உச்ச கட்ட கொரோனா காலத்தில் என்னமாதிரி ஃபங்ஷன் வைத்திருக்கிறார் என்ற யோஜனையில் சாவிகளோடு சாவியாக மாட்டி வைத்திருக்கும் முகமூடியைப்போட்டுக்கொண்டுஎன்னப்பா நல்லாருக்கியா? கேட்ட கூட தொறக்கமுடியாத ஒரு நெலம பாத்தியா நம்முளுக்கு?” என்கிறேன்

ஐயாவும் அம்மாவும் நல்லாருக்கிங்களாம்மா? இந்த பக்கம் வந்தன்அம்மாவ பாத்துட்டு போவலாமுண்ணு……”

சந்தோஷம்ப்பா……. ஜாக்கிறதையா இருங்க……… என்னா வேல வந்துகிட்டு இருக்கா ஒனக்கு?”

கம்பனியெல்லாம் இழுத்து மூடியிருக்காங்கம்மா. நெறயா கம்பனியில பாதியாளுக வேல செய்யிறாங்க.. இதுல நம்மள மாதிரி ஆளுகளுக்கு வேல குடுக்குறதுக்கு யாருக்கு நேரம் இருக்கு.

அடுத்து என்ன பேச்சை வளர்த்துவது என்று திருச்சியில் இருக்கும் பெண்ணை மாப்பிள்ளை பேத்தியைப்பற்றி விசாரிக்கிறேன். அவர் பெண்ணுக்கு கட்டிக்கொடுத்த வீட்டின் சௌகரியத்தையும் விசாரிக்கிறேன்.

சரிம்மா அப்ப வருட்டா? ஐயாவத்தான் பாக்க முடியில கேட்டதா சொல்லுங்க

சொல்றம்ப்பா அவுரு மேல ஆஃபிஸ் ரூமுக்கு பொயிட்டாரு இனிமே சாப்பிடறதுக்குத்தான் வருவாரு.” அவருக்கு விடை கொடுத்தேன்.

பைண்டர் வந்ததைப்பற்றி பேச்சு வாக்கில் இவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.

கேஷ் எதுவும் குடுத்தியா?” என்றார் இவர்

திக்கென்றது எனக்கு. என் மனசுக்குள்ளே இந்த மாதிரி நெனைப்பே வரவில்லை. அவர் பேத்தியின் பிறந்த நாள் பத்திரிக்கை, பெண்ணுக்குத் தான் கட்டிக்கொடுத்த வீட்டின் கிரகப்பிரவேசம் மாதிரியான சந்தோஷமான விஷயங்களுக்காகவே என் வீட்டிலே அவரை வரவேற்றதாலேயோ என்னவோ இந்த ஒரு சூழ் நிலையில் அவருக்கும் தட்டுப்பாடு இருக்கும் என்று எனக்குத் தோன்றவேயில்லை.

ஃபோனில் அவர் நம்பரைத் தேடிப்பார்க்கிறேன். வருத்தமான ஏமாற்றம். மனசுக்குள். யோஜனை செய்கிறேன் அவர் ஊருக்குப் பக்கத்தில் ஒரு நண்பர் இருப்பது ஞாபகத்திற்கு வர அவருக்கு அவருக்கு  ஒரு கால் கொடுக்கிறேன். அவுங்க ஊரையே அடைத்து வைத்திருக்கும் சேதியை  சொன்ன அவர் பைண்டர் ஊரிலேயே இருக்கும் தெரிந்தவருக்கு விஷயத்தை சொல்லுவதாக உறுதி அளித்தார்.

சல்லி காசு அண்ணைக்கி என் கையில இல்லம்மா ஒடனடியா ஐயா அம்மா நெனப்புதான் எனக்கு வந்துச்சு. ஒங்க  கையால எதாவது வாங்கிகிட்டு போனா  எங்கயாச்சும் ஒரு வேல தட்டுபடுமுங்கிற நம்பிக்கையிலதான் அண்ணைக்கி வந்தம்மா…… அம்மா  என்னமோ நெனப்பில இருந்திட்டிங்க. ஆனா இண்ணிக்கி என்ன தேடிப்புடுச்சு கையில குடுக்குணும்ங்கிற ஒங்க மனசு எனக்குப்போதும்மா.” உருகிப்போனார் வீட்டிற்கு வந்த அந்த மனிதர்

கொரோனா மட்டும் இல்லாவிட்டால் என் காலைத்தொட்டிருப்பார் என் பைண்டர்!

நீங்களும் உங்கள்  சூழ்நிலைகளில் பல் வேறு வகைகளில் பல பேருக்கும் உதவி பல செய்திருப்பீர்கள்.  வீட்டு வேலைக்கு வராத வர முடியாத பெண்களுக்கு முழுச்சம்பளம் கொடுத்திருப்பீர்கள். காய்கறி வண்டிக்காரரிடம் சில்லற வேணாம் வச்சுக்குங்க என்று சொல்லியிருப்பீர்கள். வெயில் நேரத்தில் தெருக்கூட்டுபர்களுக்கு தண்ணீர் கொண்டு போய் கேட்டில் வைத்திருப்பீர்கள். வழக்காமாக உங்களுக்கு ஆட்டோ ஓட்டுபவரை நினைவு கூறுவீர்கள். இதெல்லாம் வீட்டுக்குள்ளிருந்தே செய்யக்கூடிய காரியங்கள். வெளியே சென்று தன்னார்வத்துடன் உழைக்கும் அன்பு உள்ளங்களுக்கு இந்த கட்டத்தில்  மனம் நிறைந்த நன்றி கூறுவோம். அவர்கள் உடல் நலனுக்கு வேண்டுவோம்.