Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Sunday, 23 November 2014

எங்க வனத்து சின்னப்பரின் முந்திரித்தோப்பு திருவிழா

அண்ணைக்குகாலமற காட்டியும் ஆஞிம்மா தோட்டத்துப் பக்கத்தில சடுகுடு ஆடிக்கொண்டிருந்தார்கள்.
பொதுவாக அவர்கள் சடுகுடு மத்தியான நேரத்தில்தான்...
பாப்பா கொளத்தில் குளுச்சு முளுவி வேட்டிய தப்பி தோளுல போட்டுகிட்டு வர்ர தாத்தா ஆஞிம்மா டயலாக் பொதுவா இப்பிடித்தான் போவும் தாத்தாவின் ரொட்டீனான கேள்வி இதுதான் "என்னா பண்ணிகிட்டு இருக்க?"
"ம்க்கூம் எலி வால புடிச்சுகிட்டு தொங்குறேன்." ஆஞிம்மாவின்ரொட்டீனாக பதில் இதுதான்
"என்னா கொளம்பு வச்சிருக்க?"
பருப்புக்கொளம்பு, இல்ல வர மொளா கிள்ளிபோட்ட சாம்பார்ணா தப்பிச்சாங்க.. இல்லண்ணா ஒரேகளேபாரந்தான்.......
"போயி ஒரு கோளிய புடிச்சிகிட்டு வர்ரியா இல்ல.... " உச்சஸ்தாயில தாத்தா
இதற்குள் ஆஞிம்மா தோட்டத்து பக்கத்தில் கோழியோடு சடுகுடு ஆடப்போயிருப்பார்கள்!
லீவுக்கு ஆஞிம்மா வீட்டுக்குவரும் எங்களுக்கு இந்த கோழி சடுகுடுவை வேடிக்கை பார்ப்பதில்ரொம்ப பிரியம்
பதினைந்து நிமிஷத்தில் கோழிக்கொழம்பு வெந்ததும் வேவததுமா காரசாரமா சட்டியில் வந்துவிடும். கிண்ணத்துல வெளக்கெண்ண…….. ..... வெந்து கெடக்கும் வாயில் எண்ணய தடவிகிட்டு தாத்தா அஸ்ஸு உஸ்ஸுண்ணு அள்ளி அடுச்சிடுவாங்க...!

ஆமா இண்ணைக்கு காலையிலேயே தாத்தா உச்சஸ்தாயிதாயிக்கி போயிட்டாரா என்னா?
இல்ல இல்ல வனத்து சின்னப்பர் சாமிக்கிண்ணு ஆஞிம்மா கோழி கொடாப்பில மூடி வச்சிருந்த ரெண்டு சேவல எந்த............ பயலோ தொறந்து உட்டுருக்கான். கொத்தமல்லியும் மொளவாயும் வச்சு மாங்கு மாங்குண்ணு அரச்சதில‌ கை வேற எரிச்ச. வீட்டுக்கா இருந்தா காமா சோமாண்ணு உட்டுப்பிடலாம். இங்குட்டு ஒருத்த உருண்டய ஒருத்தி பாத்து என்னுதுதான் நேவா இருக்குண்ணு பீத்திகுங்க.அதுக்காகவே இன்னம் ரெண்டு வீச்சு இளுத்து அரைக்க வேண்டியதாப்போச்சு ........ முள் வேலி மேல ரெண்டுகோழியும் ஆட்டங்காட்டுதுக... இந்த எரிச்சலோட வேலி முள்ளு வேற கய பதம் பாத்திருச்சு. எல்லாக் கோவமும் சேந்து மாட்டுக்காரன்கிட்ட‌ போய் நிண்ணுச்சு எலேய்
பூரான் பயலே அதுக ரெண்டயும் செத்த புடுச்சு வண்டியில கட்டுடாண்ணு மாட்டுக்காரன சூ புடிச்சிட்டு செப்பு தவலய கடகாரபிள்ள வீட்டு மொட்ட வண்டியில குடுத்தாச்சு..... கொண்டாங்க ஆயா இன்னம் ரெண்டு பெரிசா கொண்டாங்க ...... தவலைகளையெல்லாம் கழுத்தில் சுருக்கு போட்டு வண்டியோடு பிணைத்துக்கொண்டிருந்த அமுலுப் பிள்ளை பொதுவாக குரல் கொடுத்தார். "அந்த முந்திரி காட்டுக்குள்ள பிள்ளைவ தண்ணிக்கு தவிச்சுப் பொயித்திரும்."

ஒவ்வொரு வீட்லருந்தும் அரிசி கொத்தமல்லி மொளவாசாந்து எண்ண, உப்பு சப்பு சவுருஎல்லாம் மூட்ட கட்டியாவுது. மேல மெக்கேல்புட்டியில நாப்பதாந் திருநா முடிஞ்ச ரெண்டு நாள்ல‌ வனத்து சின்னப்பர் திருநா.வருசம் பூராவுக்கும் மாடு கண்ணுகளுக்கு ஒண்ணும் வராம பாத்துக்கிறது அவுருதானே? போன வருசம் எல்லா வண்டி மாடுகளும் தட்டம்ம போட்டுக்கெடந்தப்ப மொந்தம் பழத்தில வெளக்கண்ணய வச்சு மாட்டுகளுக்கு ஊட்டிகிட்டே "அய்யா என் மாடுகள தேத்தி குடுத்துரு அய்யா... உழவுக்கு மாடு எரவல் வாங்கப்புடாஒளவு மாடு எரவல் வாங்குனா ஊட்டுக்கு நல்லதில்லயா.... விடைசேவல் ரெண்டு ஒனக்கு நேந்து உட்டிருக்கேன். வேண்டுதல் நீ கேட்டுடய்யா நேந்துகிட்டபடி ரேண்டு சேவல் ஒனக்கு எடுத்துக்கிட்டு வரன்யா சாமிக்கண்ணு ஊட்ல மரி ஊட்ல பொஸ்பத்து ஊட்ல கடகாரப்பிள்ள‌ ஊட்ல மெத்த ஊட்ல பொண்டுக மொளவா கொத்தமல்லிய மாங்கு மாங்குண்ணு அரச்சுகிட்டு கெடக்குங்க.
இங்குட்டு நம்மதான‌ அரச்சாவுணும்

வனத்து சின்னப்பர் திருநா அன்று காலையில் அஞிம்மா வீடு இப்படித்தான் களேபாரமாய் இருக்கும்..
ஆஞிம்மா பேச்சும் இந்த ரீதியில்தான் தனக்குத்தானே நடந்துகொண்டிருகும்
“போற வழியில சந்தப்பேட்ட கெணத்திலெ போய் தண்ணி புடிக்குணுமுல்ல அது தண்ணியா அது....?!! எளனி கெட்டுப்போயிடும். பளிங்கு மாதிரி நெகு நெகு குண்ணு ........பாத்தாவே தாவம் அடங்கி பொயித்திரும்....இங்குட்டு நமக்கு மருதங்கொட்ட தண்ணிதான்... காப்பி தண்ணி கலருல‌

தெருவில இருக்கிற கூண்டு வண்டி நம்முளுது ஒண்ணுதான். மெத்த ஊட்ல ஒரு வில்லு வண்டி இருக்கு. தண்ணி வண்டியத்தவுத்து இன்னம் ரெண்டு மொட்டவண்டியாவது கட்டுனாத்தான் சரிப்புடும். மொள கழி கடயாணி எல்லாம் எங்குட்டு கெடக்குதுண்ணு பாக்குணும்......... இல்லாட்டி கடசி நேரத்துல தலய சொறிஞ்சுகிட்டு அந்த வைத்தி பய நிப்பான்.
பிள்ளைவ ஊட்டு வாரியா ஏறுல.அதது சிநேகிதக்காரங்களோட மொட்ட வண்டியிலயும் ஏறிக்கிச்சுக. வெயிலாவது ஒண்ணவது.... வாயல வந்தத பாடிக்கிட்டு குசாலாக்கெளப்பிடுச்சுக‌
கொஞ்ச தூரத்துக் கொஞ்ச தூரத்துல இந்த சாமி எப்புடி இந்த மண்ண மாத்தி வச்சுப்புடாருண்ணு தெரியில இந்த வனத்து சின்னப்பரு கோயிலு மண்ணு செக்கச்சேவேலுண்ணு
கெடக்கு ம் எடங்கண்ணிநெல்லு வெளையிற மண்ணப்பாத்து கடவுளுக்கு போர் அடிச்சிறிக்ககுணும்.. நடுவுல கொஞ்சம் செவப்பு கலர வுட்டு வனத்து சின்னப்பர் கோயில ஒரு முந்திரி தோப்பாக்கிட்டாருபோலருக்கு.”

சந்தப்பேட்டையில தண்ணி மொண்டுகிட்டு .கூண்டு.வண்டி மொட்ட வண்டிக எல்லாம் போட்டா போட்டி போட்டுகிட்டு ஒண்ணுக்கு ஒண்ண மிஞ்சிகிட்டு நாலுகால் பாச்சல்ல வனத்து சின்னப்பரு கோயிலப்பாத்து ஓட்டம் புடிக்குதுக.

வண்டிகள‌ அவுத்து பெரிய முந்திரி மரத்துக்கு வெளிய உட்டுபிட்டு சனங்க உக்கார்றத்துகு மெத்தையா போட்டிருந்த வைக்கலப்புடுங்கி மாட்டுக்கு தீனி போட்டு அதுக அம்ச அடக்கியாச்சு. முந்திரி கெளய ஒடச்சு மிலாராக்கி கூட்டல்….. முந்திரி வெறவு வாங்க ஆரோக்கிய சாமி….. சின்னாஞா ...மத்த ஆம்பிள ஆளுக கொண்டாந்த மம்புட்டியால நீட்டு அடுப்பு வெட்ட ஆரம்பிச்சுட்டாங்க. சின்னாச்சிகளும் அத்தைகளும் கொண்டாந்த சாமான்கள பதமா எறக்கி வக்கிறாங்க.. காலு கட்ன கோழியெல்லாம் அதுக நெலம் புரியாம கொக்கர வுட்டுகிட்டு இருக்குக. ஊட்டுக்கு ஊடு வந்த அருவாமணையெல்லாம் கீழ எறங்கிடுச்சு. இப்பதான் சிறுசுகளாகிய எங்களுக்கு பெரிய ஷோ..... ஆளுக்கு ஒரு கோழியாய புடிச்சு அருவாமணையில அத அறுக்க ஆரம்பிப்பாங்க.... தலை அறுபட்ட இந்த பதினைந்து இருவது கோழிகளும் அப்பதான் நடக்க கத்துகிட்ட பிள்ளைகளாட்டம் சந்தோஷமாய் நடை பழகுவதைப் பார்ப்பது எந்களுக்குப் பெரிய அதிசயம் செத்துப்போன கோழி நடக்குமாஎன்ன.. ஆனா அஞ்சு நமிஷத்தில எல்லாம் பொத்து பொத்துண்ணு கீழ உழுந்துடும். இதெல்லாம் குரூரம் என்று புரியாத அந்த நாள் சூழ்நிலை……… கோழி கொழம்பு என்றால் அம்மாச்சி ஆஞிம்மா அத்தை சின்னாச்சிகள் எல்லார் வீட்டிலும் இந்த முறையைத்தான் பின்பற்றுவார்கள். இது அம்மாச்சி தயிர் கடைவது போல், ஆஞிம்மா தோசை சுடுவது போல் ஒரு சாதாதரண விஷயமாகத்தான் எங்களுக்கு இருந்திருக்க வேண்டும் மொததமாய் அவை நடை பழகுவதுதான் எங்களுக்கு அதிசயம். இன்றைக்கு நினைத்தால் மனசுக்குள்ளேருந்து ஒரு ச்சே தான்வெளிப்படுது ஆனால் வீட்டில் ஒரு கோழிதான் அறுப்பார்கள் என்பதால் நடை பழக அதுகளுக்கு நேரம் இருந்திருக்காது.. உடனே மஞ்சள் தடவி சட சடவென்று முளைக்கும் மயிரை பிடுங்குவார்கள் எது எப்ப்டியாயிருந்தாலும் இந்த ஷோவ கண்டு களிச்சஒடனே எங்க வேலயப்பாக்க கெளம்பிடுவோம்.

பக்கத்தில இருக்க முந்திரி மரங்கள்ளாம் அண்ணைக்குப் பாவந்தான். அதுக கெளைகள்ள ஊஞ்சலாட்டத்த……. இண்ணைக்கு நெனச்சா கூட சந்தோஷமா இருக்கு. சுள்ளெறும்மபு கடி ஒருபக்கமிருந்தாலும் இந்த ஆட்டதிலயோ, இல்ல முந்திரிப்பழங்கள மானாவாரிக்கு உறிஞ்சி உறிஞ்சி திங்கிறதிலயோ இல்ல பச்ச முந்திரிக்கொட்டகள பறிச்சி குமிக்கிறதிலயொ ஒரு சொடக்கும் இருக்காது.
“முந்திரிகாய்வள ஆரும் பறிக்கப்புடாது. முந்திரிப்பழங்கள தின்னுபுட்டு கொட்டய தோப்புலய போட்டுடணும். இது பெரிய சாமியாரு உத்தரவு இது பெரிய சாமியாரு உத்தரவு” ண்ணு வெட்டியான் ஒருத்தன் அங்க கத்திக் கிட்டே வருவான்
இத காதுல வாங்குனது யாரு? இந்த பச்ச முந்திரிகள ஒரு ஆளு கொண்டு போயி ந்ம்ம சமயல் முந்திரி மரத்தில கொண்டு போய் சேர்த்துடும். அங்க அந்த முந்திரிய அருவாமணையால வகுந்து உள்ள இருக்க‌ எளம்பருப்ப்‍ கோழிப் பொரியலுல போட்டுவாங்க பாருங்க ... ருசி நாக்க அறுத்துடும்!
நம்ம ஆட்டம் முடியறத்துக்கும் சமயல் முடியவும் நேரம் சரியா இருக்கும். சாதம் கோழிக்கொழம்பு கோழிஎளம் முந்திரி பொரியல் ரசம் அவ்ளோதான் அயிட்டங்கள். சமயல் முடிஞ்சிட்டா சாப்புடுட வேண்டியதுதானே?

ம்ஹூம் சாமியார் வந்து சாப்பாட்ட மந்திரிச்சாதானே பந்தி போடுவாங்க.ஆனா அவுரு வர்ரத்துக்குள்ள‌ கவாங் கவாங்ணு பசி கெண்டாவி உட்டுப் போயிடும். அவுரு வந்தாரோ என்னுமோ நாங்க‌bஒடனே பக்தியா கய கும்புட்டுக்குவோம். பெரியவங்க யாருகிட்டயும் பே சி கீசி அவுரு நேரத்த வளத்திடக்கூடாது பாருங்க‌…… கய கும்புட்டு நேராநேரத்துக்கு ஆமேன் ஆமேன் சொல்லிட்டு தீர்த்தத்ம் தெளிச்ச‌துக்கு பிதாவுக்கும் சுதனுக்கும் போட்டுட்டு எப்படா சாமியாரு அடுத்த மரத்துக்கு நவுருவாருண்ணு பாத்துகிடுருந்து சடால்னு பந்தியில உக்காந்து துருவோம் …..நல்ல காரசாரமான சாப்பாட்ட அள்ளி அடிச்ச்டுவோம் !!(அண்ணைக்கு கொழம்புல தேங்கா இருக்காது காலயில அரச்ச தேங்கா ஊசிப்போயிடும்)

ந்ம்ம தமிழ் சினமாவுல தலப்ப படத்தில எப்பயாவது ஒரு கட்டத்தில நியாயப்படுத்துவாங்க பாருங்க அது மாதிரி வனத்து சின்னப்பர் திருநாவுக்குண்ணு வந்துட்டு கோயிலுக்கு போவாம இருக்கலாமா என்ன? ஒரு மெழுகுவத்தி வனத்து சின்னப்பருக்குண்ணு கொளுத்தி சுருவத்த முத்தம் குடுத்துட்டா போதும் அவுருக்கு. ‌நமம ஆடு மாடுகளைய்ல்லாம் ஒரு வருஷத்துக்கு சந்தோஷமா வச்சுக்குவாரு. நல்ல அர்ச்சிஷ்டரு அவுரு கோயிலருந்து வெளிய வந்தா பொரி உருண்ட இன்னம் மஞ்சநாரி மாம்பழம் கூடயில‌ விக்கும். யாராவது அண்ணைக்கு சுருக்குப்பைய அவுத்தா நம்ம அதிர்ஷ்ட்டம். இல்லனண்ண பேசாம வண்டியில ஏற வேண்டியதுதான்
வரும் போது இருந்த கும்மாளமும் ஆட்டமும் இப்ப இல்ல.


ஓண்ணு அசதி…. இண்ணொணு தின்ன முந்திரிப்பழமெல்லாம் தொண்டயிலலில உக்காந்து தொண்டய கப்புண்ணு புடிச்சுகிச்சு! வீட்டுக்குப் போனா இருக்கு மண்டாபுடி…….. அத அப்ப சமாளிச்சுக்கிலாம் ஆனா இப்பைக்கு வனத்து சின்னப்பர் திருநா எங்குளுக்கு நல்லாவே முடிஞ்சுருச்சு

No comments :

Post a Comment