கல்கத்தாவை விட்டு… ஒரு வழியாய் வந்தாயிற்று….
வீடு தேடும் படலம்…’ சொந்தமும் சுற்றமும் தங்கள் அனுபவபூர்வமான அறிவுறைகளைக் கொடுத்து
எங்களை அலங்க மலங்க அடித்துக்கொண்டிருந்தார்கள்.
“மெட்ராஸ் வீட்டு சொந்தக்காரர்கள்…. அவுங்க ஒரு
தனி ஜாதி…. வெண்ணை ஒழுக பேசுவார்கள்…ஆனால் கேட்ட சாத்த,லைட்ட நிறுத்த…. பாட்டு போட….டைம்
டேபிள்……போட்டுவிடுவார்கள்.தண்ணி மோட்டார்… அவங்க கை வசம்… கொஞ்சம் மோட்டர் போடுறீங்களாண்ணு
அப்பப்ப நீங்க குரல் குடுத்தே ஆவணும் எலக்ட்ரிசிட்டி மீட்டரும் அவங்க புடியிலதான்…மீட்டருக்கு
மேல எப்டியும் ஒரு ரூபாயாச்சும் ….வச்சிதான் கணக்கு போடுவாங்க……வீட்டு சொந்தக்காரர்
பக்கத்திலேயே இருந்துட்டா… வேற வெனயே வேணாம்…பொழுதன்னைக்கும் ஒங்களுக்கு நொச்சுதான்….விருந்தாளிகள்
வந்து விட்டாலும் பிரச்னைதான்….. அவங்க போறமுட்டும் எப்ப என்னா சொல்லுவாங்களோண்ணு
நீங்க நெருப்பு மேலதான் நிக்கிணும்….
“முதலிலேயே எல்லாவற்றையும் தெளிவாகப் பேசிவிடுங்கள்.
அக்ரிமென்ட் போடும்போது எல்லா கண்டிஷன்களும் உங்களுக்குப் புரிகிறதா,அந்தக் கண்டிஷன்கள்
எல்லாம் உங்களுக்குச் சரிதானா என பார்த்துக்கொண்டு பிறகு கையெழுத்திடுங்கள்.கண்ணை
மூடிகொண்டு கையெழுத்து போட்டுவிட்டு பிறகு சண்டை சச்சரவுகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.”என்பதில்
அவர்கள் தெளிவாக இருந்தார்கள்.
கல்கத்தாவில் எங்கள் வீட்டு ஓனர் கொஞ்சம் கச்சுக்கு
பிச்சுக்கு என்றிருந்தாலும் வீட்டுக்காரம்மா பிரியமாகவே இருப்பார்கள்.”"உன் பெண்
என்ன அழகாக பெங்காலி பேசுகிறாள்…..என் பையனுக்கு அவளைத்தான் கல்யாணம் பண்ணி வைக்கப்
போகிறேன்…… நீ வேணுண்ணாப் பாரு…. என் மருமகளை ஒரு வேலை செய்ய விடமாட்டேன்…. சோபாவில்
உக்கார வைத்து நாள் பூராவும் அவள் பெங்காலி பேசும் அழகை கேட்டுக்கொண்டே இருப்பேன்…….”
எனச்சொல்லி தனது 20 வயது பையனுக்கும் எங்கள் மூன்று வயதுப்பெண்ணுக்கும்(!!!) முடிச்சுப்போட்டுமகிழ்ந்த
அந்த சுகானுபவத்தில்,சரஸ்வதி பூஜை சமயத்தில் மேலேயிருந்த அவர்கள் வீட்டின் முதல் விருந்தினராக
வரவேற்கப்பட்ட அன்பில் எங்கள் ஒன்பது வருட கல்கத்தா வாசம் 200 ஆர்,எஸ்பி முகர்ஜி ரோடு
என்ற அந்த ஒரே வீட்டிலேயே…… கழிந்ததை நான் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டபோது “அந்தக்கனாவெல்லாம்
இங்கு காணாதீர்கள்; 11 மாத அக்ரிமெண்ட் எபோது முடியும் என்று காத்துக்கிடந்து 12 மாதம்
ஒன்று உங்களைக் காலி பண்ணச்சொல்லுவார்கள் இல்லை வாடகையைக் கூட்டி விடுவார்கள்.” என்று
ஒரு வாய்ப்பட எல்லோரும் அழுத்தம் திருத்தமாகச்சொன்னார்கள்.
அற்புதம் என்ற அந்த புரோக்கர் சந்து பொந்து என
எங்களை இழுத்துக்கொண்டு சென்றதுதான் நாள் முடிவில் மிச்சமாயிற்று.
” நல்ல லொகால்ட்டி சார்… இண்ணிக்கு…. அம்மா மன்ஸுக்கும்
புட்ச்சா மாரி …. ப்ர்ஸ்ட் க்ளாஸ்… எடம்…
பள்ளியில் தினசரி பாடப்படும் கடவுள் வாழ்த்து போல…..
மே மாத மாதா பிரார்த்தனை போல….. இது தினசரி அற்புத வாழ்த்தாயிற்று…. வீடு காட்டும்
அன்றெல்லாம் தலையை சொறிந்து கொண்டு “நாளைக்கு பஸ்ட்க்ளாஸ் எடம் ஒண்ணு வர்து சார்”
என எங்களை சரிக்கட்டி தினப்படி தண்ணி செலவுக்கு தட்டிக் கொண்டு போய்விடும் இந்த கில்லாடியை
புரிந்து கொள்ள கல்கத்தா வாசிகளான எங்களுக்கு கொஞ்சம் சென்னை வாசமும் சென்னை ஸ்டைல்
ஆஃப் திங்க்கிங்கும் அவசியமாயிற்று. “இனிமே வீடு முடித்துக்குடுத்தப்பறம் மொத்தமாக
நாங்கள் கொடுத்து விடுகிறோம்… நடுவில் தயவு செய்து எதுவும் கேட்காதீர்கள்.” என அவரையும்
வைத்துக்கொண்டே தெளிவாக்கினேன் நான்.” துட்டு இன்னாம்மா துட்டு…. அம்மாவுக்கும் அய்யாவுக்கும்
நல்ல ஊட்ட் நான் புட்ச்சு குட்குணும்மா… துட்டு இண்ணிக்கு வரும்… நாள்க்கு போவும்…இன்னாம்மா..
நான் ஸொல்றது… உங்ள மாரி நல்ல மன்சங்க கெட்பாங்களா….இன்னா….?” எங்கேயோ சரியான இடத்தில்
மனிதன் நாங்கள் மேலே பேசாதபடிக்கு தொட்டுவிட்டார்….!
அடுக்கு மாடி ரொம்பவும் அறியாத 1979 அது… தனி
வீடு தேடித்தேடி திரிந்ததுதான் மிச்சமாயிற்று. பிராமின்ஸா, நான் பிராமின்ஸா ….. என்ற
தொக்கில் வேறு சில வீடுகள் கழிந்து போயின…ஸ்கூல் தொடங்குமுன் ஒரு வீட்டில் செட்டில்
ஆகியே தீர வேண்டும்….
அன்றைக்குப் பார்த்தது புது வீடுதான்….. வீட்டு
ஓனர் வேலையிலிருந்து ரிட்டயர் ஆகி விட்டார்… உபரி வருமானத்திற்கு மேலே வீடு கட்டியிருக்கிறார்கள்….
கீழே அவர்கள் மேலே நாங்கள்….11 மாத அக்ரிமென்ட்தான் அவர் போட முடியும் என்று சொன்னார்.
நண்பர் சுற்றத்தின் ஹேஷ்யம் சரியாகவே இருந்தது… எதுவாயிருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்
என்ற முடிவுடன் உள்ளே நுழைந்து விட்டோம்….. சாமான்களை வீட்டில் ரொப்பி விட்டு படுக்கையில்
மணி பன்னிரெண்டு…பெல் எங்கேயோ அடிப்பது அறை குறையாக எனக்குக் காதில் விழுகிறது….
பெல்லே எங்களுக்குப்புதிது…. ஆக இது எனக்கில்லை என்று இழுத்துப்போர்த்துகையில் விடாமல்
ஒலிக்கிறது.
ஆஹா….நமக்குத்தான் என்ற ப்ரக்ஞை வர எழுந்து
ஓடி ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறேன் வீட்டுக்கார அம்மா தலை தென்படுகிறது….
காலை விஜயத்தின் தாத்பர்யம் புரியாமல் தலையைப் பிராண்டிக்கொண்டே அதோடு கூடவே இருப்பது
இருக்கட்டும் என்று ஒரு குட்மார்னிங் சொல்லிக் கொண்டே கேட்டின் பூட்டைத் திறக்கிறேன்.
” அம்மா மாகி, ஆப்பம் சுட்டிருக்கேன்…. தேங்காப்பாலும்
இருக்கு…. நீ அலுப்பா இருப்பண்ணு தெரியும்…. என்று சொல்லிக்கொண்டே பாத்திரங்களை
டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்த அந்த அருமை ஆண்ட்டி வயிற்றுக்கு விருந்தும் என்
உள்ளதில் பெரும் விருந்தும் அல்லவா படைத்து விட்டார்….!!!!
இந்த உறவு இன்று பல் வேறு கோணங்களில் தழைத்துப்பெருகி
நிற்பதை இன்னொரு கட்டத்தில் உங்களுக்கு விரிவாகச் சொல்லுகிறேன். இப்போதைக்கு அன்பு
தருவது அதுவும் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடத்திலிருந்து எனக்குக் கிடைத்த
அந்த அன்புக் கரிசனை என்னுள் ஒரு பெரு மாற்றம் கொண்டு வந்தது உண்மை

No comments :
Post a Comment