எண்பதுகளில் வெளி நாடு செல்பவர் வெகு குறைவு. நானும் அப்படித்தான். 1980 அக்டோபர் மாதம் முதல் முதல் என் வெளி நாட்டுப்பயணம். தேதி கூட இன்னும் மனதில்... நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை. ஒரு கூட்டு தொழில் முயற்சிக்காக செல்கிறோம். என்னைத்தெரிந்த உங்களுக்கு 'நான் எதற்கு?' என்ற கேள்வி மனதில் வரக்கூடும். அதிர்ஷ்ட தாயத்து மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
விமானத்தில் பறப்பது புதிது அல்ல.... கல்கத்தாவிலிருந்து ஓரிருமுறை சென்னை வந்திருக்கிறேன். வெளி நாடு செல்வது அதுவும் இந்தியருக்கு சொர்க்க பூமியான சிங்கப்பூருக்கு...?
ம்ம்ம் கொடுத்து வச்சவள்.... பவுனையும் பொடவைகளையும் அள்ளிகிட்டுத்தான் வரப்போறா...... மக்கள் மனதில் உலா வரும் பொதுக்கருத்துக்கணிப்பு
இந்த பொதுக்கருத்துக்கணிப்புக்கு அப்பாற்பட்ட ஒரு ஜந்து நான் என அவர்களுக்குத் தெரியாமல் போனதில் தவறு ஒன்றுமில்லை.
விமான நிலையத்தின் சுங்க இலாக்கா சமாச்சாரமெல்லாம் எனக்குப் புதியது பாஸ்போர்ட் பார்வையிட்டபிறகு நான் கழுத்தில் போட்டிருக்கும் சங்கிலி உத்தேசமாக எத்தனை பவுன் கைவளயல் காது தோடு எவ்வளவு என கணக்குப்பார்த்து குறித்துக்கொண்டு என்னை கையெழுத்து இடச்சொன்னார்கள். பயம் கவ்விக்கொண்டது. வெளியே வந்தவுடன் என் பதட்டத்தை இவரிடம் வெளிப்படுத்தினேன்.
"கவலைப்படாதே, சிங்கப்பூரில் இங்கத்தியைவிட பவுன் விலை குறைச்சல்.... நீ பாட்டுக்கு பவுன் வாங்குறேன் பேர்வழிண்ணு ஒன் மெலிசு செயினுக்கு பதிலா சிவகங்கை தாலி செயின் மாதிரி 10 இல்ல 12 பவுன்ல செயின மாத்திகிட்டு வந்துட்டா அரசாங்கத்தின் வரி வருமானம் நஷ்டக்கணக்குக்கில்ல பொயிரும்..."
பரிகாசமாகத்தான் சொன்னார். எங்களது அப்போதைய நிதி நிலமை இதெற்கெல்லாம் இடம் அளிக்காத ஒன்று என்று இருவரும் அறிவோம்!!
சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பியாகி விட்டது. விமான நிலையத்தில் என் ஆபரணங்கள் சரிபார்க்கப்பட்டாகிவிட்டது.
"எதாவது தங்கம் வாங்கியிருக்கிங்களா மேடம்?"
"இல்லிங்க..."
" பொடவ எக்கச்சக்கமா வாங்கியிருப்பிங்களே...?
"இல்லிங்க...."
" என்னாங்க சொல்றிங்க நீங்க...? சிங்கப்பூர் பொயிட்டு புடவ வாங்காம வர்ரதா....? நாங்க ஒண்ணும் ஒங்க பொடவகள எடுத்துக்கமாட்டோம்... தாராளமா சொல்லுங்க......"
"இல்லிங்க......."
"ஒண்ணு கூட வாங்குலிங்களா..." மனுஷனின் ஆச்சரியக்குறி ரொம்ப பெரிசாத்தான் இருந்தது.
ஜப்பான் ஜார்ஜெட் என பிரியமுடன் அழைக்கப்படும் சிங்கப்பூர் புடவைகளுக்கு நம் நாட்டில் அப்போது பெரும் மதிப்பு உண்டு. அழகான வண்ணங்களில் ரசனையான டிசைன்களில் உடம்போடு ஒட்டிக்கொள்ளும் நளினமான மிருதுவான வஸ்து அது. அசந்து மறந்து யாராவது சிங்கப்பூர் புடவையை பரிசாக அளித்தால் பூரித்துப் போய்விடுவோம்.
அந்த மாதிரியான சிங்கப்பூர் புடவைகளை வாங்க எனக்கு மட்டும் ஆசை இல்லாமலில்லை. ஆனால் ஏர்கண்டிஷன் அறையில் இவரும் இன்னொரு அமெரிக்கரும் தொழில் நுட்ப ரீதியாக நடத்திய பேச்சு வார்த்தையில் உப்புக்குச் சப்பாணியாக உட்கார்ந்திருந்த எனக்கு சிங்கப்பூர் புடவை சாத்தியமா என்ன? சொச்ச நேரங்களில் சிங்கப்பூரை சுற்றிக்காட்டினார். பத்தாவது மாடியில் இருந்த சுழலும் ஹோட்டலுக்கு சாப்பிடக்கூட்டிக்கொண்டு போனார்.என் சிங்கப்பூர் கதை அத்தோடு முடிந்து போனது!
ஆசையாய் என் வரவை எதிர்பாத்திருந்த சொந்த பந்தங்களுக்கு சுழலும் ஹோட்டலின் கதையை விட்டு என் கைவசம் வேறொன்றுமில்லை!
ஒரு நாள் வீட்டிற்கு வந்த நண்பரோடு இதைப்பகிர்ந்து கொண்டிருக்கையில் அவருடைய தூரத்து சொந்தக்கார அம்மா ஒருவர் சிங்கப்பூர்காரர் தங்கத்தையும் புடவைகளையும் கொண்டு வரும் யுக்தியை தமாஷாக பகிர்ந்து கொண்டார்.
ஜப்பான் ஜார்ஜெட் புடவைகளை நாம் மீட்டர் கணக்கில் வாங்கலாம். இந்தியாவுக்கு வரும் முன் அந்த அம்மா மூன்று புடவைகளுக்கு வேண்டிய துணியை வாங்கி ஒரே புடவையாக கட்டிக்கொள்வார்களாம். சொந்தங்கள் நிறைந்து இருக்கும் இந்தியாவில் பெட்டிகள் பிதுங்கப்பிதுங்க இருந்தாலும் அதற்கு மேலே எடுத்துவர இதுவும் ஒரு வழியாம்.
சிங்கப்பூர்காரர்களுக்கும் இவ்வளவுதான் பவுன் கொண்டு வரலாம் என்ற நியதி உண்டாம். கிளம்பும் நேரத்தில்அவர்கள் முழு நீள ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு சில தங்க வளையல்களை முட்டிக்கு மேல் கை வங்கி மாதிரி ஏற்றி வைத்து கொள்வார்களாம். சென்னை சுங்கப்பகுதியில் மூன்று புடவைகளை ஒரு சேரக்கட்டிக்கொண்டு தள்ளாடித்தள்ளாடி நடந்து வரும் வயதான ஒருவரை பார்க்கையிலேயே சுங்கத்துறை இளகிவிடுமாம். அதோடுகூட அவர்கள் பவ்யமும் சிரிப்பும் அங்கு ஓர் அருமையான சூழ் நிலையை உருவாக்கித்தர இரண்டு மூன்று சிங்கப்பூர் புடவைகள் கைமாற சுகமே வெளி வாயிலுக்கு வந்து விடுவார்களாம்!
ம்ம்ம்ம்ம்ம் சிங்கப்பூர்காரர்கள், கை வங்கிகளாய் பவுன்கள் ஒசத்தி புடவைகள் கைமாற்றம்....அவர்களுக்கு எல்லாமே சாத்தியமாய் இருக்கிறது
நாமோ நமது நகைக்கே கையெழுத்து போட வேண்டிய தலையெழுத்து!
இந்த வேண்டாத உளைச்சலெல்லாம் போய் பழைய வாழ்வுக்கு
வந்த பின்னும் உன்னை விட்டேனா பார் என்று சொன்னது என் தங்கத் தலையெழுத்து!!
எண்பதுகள் பழங்காலமாகிவிட்ட இருபது ஆண்டுகளில் நிறையவே மாற்றங்கள். சிங்கப்பூர் புடவைகளைத் தோற்கடிக்கும் சிறந்த புடவைகள் நம் கடைகளை நிறைத்தன. தங்கத்தின் விலை உலக அளவில் ஏறத்தாழ ஒன்றாக போட்டுக்கொண்டு போகும் தங்க நகைகளுக்கு கணக்கெழுதி கையெழுத்துப்போடும் காலமும் மலையேறிப்போனது. கள்ளக்கடத்தல் தங்கத்தை சூட்சமமாய் கண்டுபிடிக்கும் கருவிகள் தங்கள் வேலையைச் செவ்வனே செய்கின்றன! நாடும் நல்ல சுகமே!
இந்தக்கட்டத்தில் எம்டிஎல் கூட்டு முயற்சி இனிதே சென்றுகொண்டிருக்கிறது சிங்கப்பூர் ஆசியாவின் நடு மையமாக ஆகிவிட நாங்கள் சிங்கப்பூருக்கு இடம் பெயர்ந்தோம். அங்கிருந்து முதல் முறையாக சென்னைக்கு வருகையில் எம்டிஎல் குழுமத்திற்கு சிறிய பரிசுகள் வாங்குகிறேன்.
அண்ணா பல் நாட்டு விமான நிலையத்தில் சாமான்களை எதிர்பார்த்து நிற்கிறோம். எங்கள் பெட்டி ஒன்று பெரிய பெருக்கல் கோடோடு வருகிறது. தனியாக்கப்பட்ட அந்த பெட்டியுடன் இவரும் அழைக்கப்படுகிறார். ஏதோ பேச்சு வார்த்தை...... கவலை தோய்ந்த முகத்தோடு என்னிடம் வருகிறார்.
"தங்கம் எதுவும் வாங்கினியா?"
"இல்லியேப்பா"
"பெட்டியில தங்கம் இருக்காம்..."
"யாராவது நொழத்தியிருப்பாங்களோ?"
"பூட்டெல்லாம் சரியாத்தானே இருக்கு.."
அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. 150 சாவிக்கொத்துகள்...... சிங்கப்பூரின் சின்னம் பொறித்த தங்கக்காசுகள் போல வட்ட வடிவமாய்....... சதுரமாய்..... நமது சென்னை குழுவிற்காக வாங்கியது. அதுதான் தங்கக்காசு போல தெரிகிறதோ? என் சந்தேகத்தைப் பகிர்ந்து கொண்டேன்.
கொடுக்கப்பட்ட விளக்கம் ஏற்கப்பட பெட்டி திறக்கப்படாமலேயே எங்களிடம் வந்து சேர்ந்தது.
என்னருமை எம்டிஎல் குழுவினரே இந்த தங்கப் பரிசு உங்களிடம் இன்னும் இருந்தது என்றால் அல்லது இந்த மாதிரி தங்கப்பரிசை பெற்றுக்கொண்டது உங்கள் நினைவில் இருந்தாலோ இந்தக் தங்கமான கதை உங்களுக்கே அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது என மகிழ்ச்சி கொள்ளுங்கள்!

No comments :
Post a Comment