"குட் மார்னிங் மேடம் உள்ள வரலாங்களா....."
"குட் மார்னிங்...... வாம்மா....." எதிர்த்தாற் போல் இருந்த சேரைக்காட்டினேன்.தட்ட வேண்டிய அவசியம் இல்லாத திறந்தே இருக்கும் வாயில் முறை.
"ஒங்களோட ஒரு விஷயம் ஷேர் பண்ணணும் மாதிரி இருந்துச்சு......"
"சொல்லும்மா..."
"அம்மா ரொம்ப நாளா முட்டிவலி முட்டிவலிண்ணு அவதிப் படுறாங்க.... எனக்கோ பிள்ளைகளோடயே நேரம் சரியாப்போவுது..... கெடந்ததெல்லாம் கெடக்குட்டுமுண்ணு போன சனிக்கிழம அவங்கள டாக்டர்கிட்ட கூட்டிகிட்டு போனேன்..."
"இப்ப பரவாயில்லியா......"
அதப்பத்திதான் ஒங்ககிட்ட பேசணும் மேடம்........ அது பெரிய ஆஸ்பத்திரி... ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ரூமுக்கு வெளிய வரிசையில ஒக்காந்திருந்தோம். அம்மா பேர கூப்புட்ட ஒடனே உள்ள போறோம்........... எனக்குத்
திக்குண்ணு ஆயிருச்சு..... டாக்டர் ஒக்காருர எடத்துல ஒரு மனுஷன் வீல் சேர்ல ஒக்காந்திருக்காரு!! இது என்னடா கூத்து... கோயிலுக்கு கும்புடப்போனா தெய்வம் வழியில விரிச்சிபோட்டுகிட்டு ஆடுனமாரி முட்டிவலிக்கி உள்ள வந்தா டாக்டரே இப்புடி ஒக்காந்திருக்காரே..... மனசு ஒதச்சுகிது. சரி உள்ள வந்துட்டோம் ஒடனே வெளிய போறது அசிங்கமால்ல இருக்குமுண்ணு தயங்கி நிக்கிறோம். பக்கத்தில நிண்ணுகிட்ட இருந்த நர்ஸ் வாங்க வாங்க உக்காருங்கண்ணு அம்மாவ டாக்டர் பக்கம் உக்கார வச்சாங்க.... என்னா பண்ணுது அம்மாவுக்கு என்று நர்சே கேட்க "சுத்தம்...... வாயும் அவுட்டா.........?
ச்சே....... இதுக்காகவா இத்தே பெரிய ஆஸ்பத்திரிக்கி வந்தோம்?"என் மனசு சத்தமாய் சலிச்சுகிச்சு கேட்ட கேள்விக்கெல்லாம் அம்மா பாதியும் நான் பாதியுமாக விவரங்களைத் தெரிவித்தோம். சொன்னதையெல்லாம்டாக்டர் உற்று கவனிக்க என் பிரஷர் மட்டும் எகிறிக்கொண்டிருந்தது! டாக்டர் தன் கையை அம்மாவின் முட்டிக்கு கொண்டு போகச்சொல்லி நர்சுக்கு சைகை காட்ட கிராமத்தில எப்பயோ பாத்த பொம்மலாடம்தான் என் நினைப்புக்கு வந்தது. முட்டி அதைச்சுற்றியுள்ள இடங்களுக்கு அவர் கை நகர்ந்து போகையில் அவர் அம்மாவின் முகத்தையே பார்க்கிறார். இது நெடு நேரம் செல்கிறது... நான் சிரத்தையில்லாமல் உட்கார்ந்திருக்கிறேன். இந்த கூத்து நிறைவேறியபின்..... மருந்துகளின் பட்டியல் அவரிடம் வருகிறது. அவர் தலையாட்டும் மருந்தை நர்ஸ் டிக் அடித்து டாக்டரின் குறிப்புத்தாளில் அவர் சமிக்சை வழியாக எத்தனை வேளை சாப்பிட வேண்டும் என்பதையும் சொல்லி முடித்தபின் அந்தத் தாளை டாக்டரிடம் கொடுக்கிறார். எல்லாம் சரியாக இருக்கிறதா என்று தெளிவான பின் கஷ்டப்பட்டு அவரது கையெழுத்தைப் போட்டார். மேலும் நமக்கு வேண்டிய விளக்கங்களை நர்ஸ் நமக்கு சொல்லிவிட்டு திரும்ப எப்போது வர வேண்டும் என்றும் கூறினார். மனசுக்குள்ள அது ஒண்ணுதான் கொறச்சல் என்று முணு முணுத்துக்கொண்டே வெளியே வந்தேன்.ஒரு எக்ஸ் ரே இல்ல ஸ்கேன் இல்ல ஒரு மண்ணாங்கட்டியுமில்ல....... இ ந்த மரு ந்தெயெல்லாம் வாங்கறதா வேணாமா..... குழப்பத்தில் நான்........
அட நீ எங்க இங்க....... ? அம்மா
நல்லாரிக்கிங்களா....? எங்களுக்குத்தெரிந்த
பெண். டாக்டராக இங்கே..... கொட்டித்தீர்த்துவிட
வேண்டும் என் நினைப்புக்கு சரியான ஆள்........ "என்னாப்பா
ஆஸ்பத்திரி இது
... என்ற புலம்பலில் ஆரம்பித்து வீல் சேரில் பேசா மடந்தையாக வைத்தியம் பார்க்கும் டாக்டரையும் அவரை வேலைக்கு வைத்திருக்கும் நிர்வாகத்தின் லட்சணத்தையும்..... தெளிவு படுத்தினேன்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அவள் "இந்த பெஞ்சில் கொஞ்சம் உக்காந்து பேசுவோமே.. ரொம்ப நேரம் நிண்ணா அம்மாவுக்கும் கால் வலிக்கும்"
"நீ இன்னே நேரம் மட்டும் பேசினியே இந்த டாக்டர்
இந்தத் துறையில் மிகப்பெரிய படிப்பு படித்து இங்கிலாந்திலேயே பெரிய பதவியில் இருந்தவர். ஒரு கார் விபத்தில் அகப்பட்டு சில வருடங்கள் கோமாவில் இருந்த அவர் தன் கடும் முயற்சியினால் இந்த அளவுக்கு வந்திருக்கிறார் தெரியுமா?
ஒம்மூஞ்சியப்பாத்தாலே ஒன்னோட அடுத்த கேள்வி என்னாண்ணு எனக்குத்தெரியுது. "சரி அதுக்குண்ணு இவரக்கொண்டாந்து இங்க உக்கார வைக்கிறது எப்படி நியாயம்?"
அதுதானே உன் கேள்வி........? தோழி.....இதே துறையில் இருக்கும் நிபுணர்கள் பல டெஸ்டுகள் செய்து கண்டுபிடிக்கும் ஒரு விஷயத்தை தன் கைவிரல்களாலேயே கண்டுபிடிக்கக்கூடிய மேஜிஷியன் இவர்! இவரிடம் அப்பாயிண்ட் கிடைத்தது அம்மாவின் அதிர்ஷ்டம்தான்"என்று சொல்லி "இன்னொரு விஷயத்தையும் கேட்டுக்க இவுரு செய்யுற வேலைக்கி சம்பளம் எதுவும் வாங்குறதில்ல..... அத வுடு......... இவுரமாதிரி முடியாம இருக்கவங்களுக்கு இந்த ஆஸ்பத்திரியிலேயே ஒரு வார்டு ஒண்ணு கட்டியிருக்காரு தெரியுமா....? ஏழைகளுக்கு
எல்லாமே ஃப்ரீ....." இங்க குடுக்குற சிகிச்ச ஒரு பக்கம் அதோட நம்ம டாக்டர் குடுக்குற தைரியத்தாலயும் நெறயா பேரு சொந்தக்காலுல நிக்கிறாங்கண்ணா பாத்துக்கயேன்." அடுக்கடுக்கான ஆச்சரியங்களை அள்ளி எறிந்தாள் அவள்!!
"என் எடை போடுற திறமையை நினைச்சு எனக்கு வெக்கமாப்போச்சு மேடம்" என்று அவள் சிரித்தாள்.
"நிறைய சமயங்களில் அப்படித்தான் நாம எல்லோரும்....." ஒத்தடம்
கொடுத்தேன்
"இன்னொரு பெரிய விஷயம் மேடம்...... ஆஸ்பத்திரிக்கி பொயிட்டு வந்ததிலேருந்து அம்மா கிட்ட நிறைய மாற்றம்! மருந்து ஒரு பக்கம்ணா "வீட்லயே படுத்துகெடக்க வேண்டிய ஒரு மனுஷன் இம்புட்டு கொள்ள சேவைய செய்யுராரு. நாம்பாரு........ ஒண்ணுமில்லாதத தலையில தூக்கி வச்சிகிட்டு குத்துதே கொடையுதேண்ணு சொல்லிகிட்டுல்ல கெடக்கிறேன்"
அப்டிங்கிறாங்க.இப்பல்லாம் உற்சாகமா வீட்ட சுத்தி வர்ராங்க மேடம்.... செடி கொடிகளுக்கு தண்ணி ஊத்துறாங்க...... அக்கம் பக்கத்துல பிரியமா..... எனக்கு என்னா சொல்றதுண்ணே தெரியில........ சந்தோஷமா இருக்காங்க"
"ஆமாம்மா... நாம கற்றது கைம்மணல் அளவுதான். பாடங்கள் வாழ்க்கையில வந்துகிட்டே இருக்கும்...... கத்துகுணும்ங்கிற உத்வேகமும் தொறந்த மனசும் நம்மகிட்டேருந்து போச்சுண்ணு வச்சுக்க எண்ணைக்கும் சுகம்தான்."
"நானும் மாறித்தான் இருக்கேன் மேடம்... திரும்ப அம்மாவ கூட்டிகிட்டு போனேண்ணா ஆமாம் மேடம்...... கூட்டிகிட்டு போனேண்ணா......... டாக்டருக்கு என் சிரிச்ச மூஞ்சி மட்டுந்தான்"
இருவரின் கை குலுக்கல் பொருள் செரிந்ததாக இருந்தது.

No comments :
Post a Comment