புதுசா கல்யாணம் ஆகி
வந்த வீடும் கிட்டத்தட்ட அவள் வீடு மாதிரியேதான் இருந்தது. வீடு நிறைய குழந்தைகள் தனி வீடு…… என்ன நம்ம வீடு போல
அவ்வளவு பெருசு இல்லை, மரங்களும் ரொம்ப கம்மிதான். அவள் வீட்டு பின் தோட்டத்தை ஆக்கிரமித்துக்கொண்டு
நிற்கும் பலா மரம் அவள் நினைவுக்கு வந்தது. பலாப்பழ சீசன் வந்து விட்டால் போதும் உடம்பு
நிறைய முட்டிக்கொண்டு கிடக்கும் பலாப்பழங்களை பழுத்துருச்சாண்ணு மோந்து மோந்து பாக்கறதுதான் பிள்ளைகளுக்குப் பொழுது போக்கு. தினமும் ஒரு பழமாவது
அறுத்தாக வேண்டுமே! மே மாசத்தில் வீடு நிறைய கூட்டமாகக் கிடக்கையில் இந்த ‘மோறல்’ நாள்
பூரா நடந்துகிட்டே இருக்கும்! அதெல்லாம் இந்த வீட்டில் இல்லை! தோட்டத்திலே நாலே நாலு
தென்னை மரந்தான் நிற்கிறது!
“மே மாசம் என்னை வீட்டுக்கேவது
அனுப்புவார்களோ?”
எல்லாமே அனுசரிச்சுகிட்டு
போகவேண்டியதுதான்..... ஆனாலும் இங்க அவளுக்கு ஒரு சின்ன உறுத்தல், சின்னோண்டு சிலாம்பு
ஒண்ணு நகக்கணுவுல குத்திகிட்டுன நிக்கிற மாதிரி....... இருந்தது .இந்த வீட்டின் மாத்திரை
மோகம்! சத்தியமாக அவளால் இந்த மோகத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
காலையில் ஸ்கூலுக்கோ
காலேஜுக்கோ இல்லை வேலைக்கோ வெளியே கிளம்பு முன் பிள்ளைகள் வரிசையாக நின்று கை நீட்டி
கோயில் பிரசாதம் போல வாங்கி வைட்டமின் மாத்திரைகளை
பவ்யமாக முழுங்குவது இவளுக்கு தினசரி வேடிக்கை. சத்து மாத்திரைகளின் ஆற்றல் இவர்கள்
எல்லோருக்கும் அத்துப்படி. வாய்ப்பாடு ஒப்பிப்பது போல கன வேகமாகவும் பெருமையாகவும் சொல்லித்தான் நிறுத்துவார்கள்!
இவர்கள் ரூமிலும் கணவர்
அவருக்கென்று ஒரு மாத்திரை டப்பா வைத்திருக்கிறார். காலை சாப்பாடு முடிந்து ரூமுக்கு
வருபவர் இன்னொரு சாப்பாட்டுக்கு ரெடியாகி விடுவார். கலர் கல..... ரா தினுசு வாரியான
மாத்திரைகளை டப்பாவின் மூடியில் எடுத்து வைத்துக்
கொண்டு தஞ்சாவூர் சிவப்பு கொய்யாப்பழத்தை சாப்பிடுவது போல ருசித்து சாப்பிடுவார். உடம்பு ஏதும் சரியில்லாதவரோ? செல்
இல்லாத அந்தக்காலத்தில் எப்போதாவது அம்மாவுக்குப்பண்ணும் போனில் இந்த விஷயத்தையும்
அவர்கள் காதில் போட்டு வைத்தாள். “நீ ஒண்ணும் கவலைப்படாதே அப்பா அங்க வரும் போது எல்லா விவரமும் தெரிஞ்சிக்குவோம்.”
ஒரு நாள் வெளியே போய்
வந்த அவளுக்கு லேசாக சளி பிடித்துக்கொண்டது.
“டிசம்பர் மாசத்துல சாய்ங்காலம்
இங்க நல்லா சில்லிப்பாதான் இருக்கு. காலையில குடிக்கிற தண்ணிய ஒரு லிட்டருக்கு பதிலா
ஒண்ரை லிட்டரா குடிச்சிட்டா எல்லாம் சரியாப்போகும்!”
வீட்டுக்காரருக்கோ தாங்க
முடியவில்லை. “ஒரே ஒரு மாத்திர போட்டுக்கிறியா? காலையில சளி இருக்க எடமே தெரியாம போயிடும்.”
“சளிக்கா...? மாத்திரையா....?
சரியான கூத்துதான் போங்க...... காலையில எந்திரிச்சு தண்ணி கொஞ்சம் ஜாஸ்தி குடிச்சண்ணா
சளி பறந்து போயிடும்..... கவலப்படாம தூங்குங்க..”
திரும்பிப்படுத்துக்கொண்டாள்
அவள்...
புது பொண்டாட்டிக்காரனாச்சே..........என்னத்த
பண்ணுவான்......? இந்தப்பக்கம் திரும்பி படுத்துக்கொள்ள மட்டுந்தான் முடிந்தது!
காலையில் மூக்கை உறிஞ்சிக்கொண்டே
சமையலறையில் நுழைந்த அவளை மாமியார் “நீ தண்ணியில இண்ணைக்கி கையே வைக்காதே, எல்லாத்தையும்
நான் பாத்துக்கிறேன்....... இண்ணைக்கி குளிக்காம இரு” என்று அவுங்க சொன்னதைகேட்டதும்
அவளால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
“அத்தை எங்க வீட்ல யாருக்காச்சும்
சளி புடிச்சிதுண்ணு வச்சிகுங்க..... ஒடனே பின்னால ஓடுற ஆத்துல போயி தலையோடு ஒரு முக்கு
முக்கிட்டு வந்துடுவோம். சளி கிட்ட நாடாது பாருங்க.” என்றாள்
“முருகா முருகா” என்றவர்
அவளுடைய வீட்டைப்பற்றியும் அங்கத்தைய தடாலடி வைத்தியதைப்பற்றியும் என்னென்னவோ சொல்லுவதற்கு
விரும்பினாலும் ஒரு ‘பண்பாட்டின்’ நிமித்தம்
வாயை மூடிக்கொண்டார்!
இந்த சளி இந்த வீட்டின்
ஒரு முகப்பட்ட மனசளவு தாக்குதலைத் தாங்கமுடியாமல் ஒரு சின்ன இருமலை துணைக்குக்கூட்டிக்கொண்டது!
“அம்மா நீ படிச்ச பொண்ணு......
இப்ப இருமலும்கூட சேந்துகிச்சு. இப்புடியே உட்டோம்னா சளி கட்டி கட்டியா போயி நுரையீரலுக்குள்ளே
உக்காந்துக்கும். அப்பறம் டி.பி தான். அதுக்கு வைத்தியம் பண்றது எவ்வளவு கஷ்டம்ணு ஒனக்கு
நல்லாவே தெரியும். ஒன் புருஷன் சொல்றதுல ஒனக்கு நம்பிக்கை இல்லாட்டி மாமனாருக்கு நெறயா
அனுபவம் இருக்கு. ஒரு வார்த்த சொன்னீண்ணா போதும் அவுரு சந்தோஷமா ஒன்ன சரி பண்ணிடுவாரு”
ரொம்ப பதமாகத்தான் மாமியார் சொன்னார்கள். பிள்ளைகள் அண்ணியை ஒரு பாவப்பட்ட ஜந்துவாக
நினைப்பதோடு நிறுத்திகொண்டார்கள். அம்மாச்சியின் சளி காய்ச்சல் நிவாரணியான ஆடாதோடா
கஷாயம் இவளுக்கு நினைவில் வந்தது. அதைக்கொதிக்க வைத்தால் இங்கே என்னென்ன வினை வருமென்று
அவளுக்குப்பிடிபடவில்லை.ஏதாவது வழி.......?
பொத்தாம் பொதுவில் “
நான் டாக்டரிடம் போவுட்டுமா.....? என்றாள்
“ஏதோ இந்த அளவுக்கு வேதாளம்
கட்டுப்பட்டு வருகிறதே” என்ற சந்தோஷத்தில் “ அப்பா, தம்பி ஒடனே சாரியிடம் கூட்டிக்கொண்டுபோ” பையனுக்கு கட்டளை
போட்டார்கள்
“நான் வெளியேயே உக்காந்திருக்கேன்.
அந்த ஆளு ஒரு மாதிரி….. நீ முட்டும் உள்ள போயி விவரமாச்சொல்லு.”
“என்னா புதுப்பொண்ணா.......
ஒன் கலியாணத்துக்கு வந்திருந்தேனே....... நல்ல பையன்.... சரி ஒடம்புக்கு என்னா பண்றது...?”
“லேசா சளியும் இருமலும்
இருக்குங்க...”
“அப்பனும் மகனும் மாத்தி
மாத்தி ஒனக்கு மாத்திர குடுத்துருப்பானுகளே...?
இவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது........ குடும்ப மாத்திரை மோகம் இவருக்கு எப்படி...?! ஃபேம்லி டாக்டர் ஆச்சே!!!!
“எதிர்பாராத இடத்தில்
என்ன மாதிரியான நம்பிக்கை நட்சத்திரம்.......
எனக்கு...... எனக்கென்றே கிடைத்திருக்கிறது.......”
இந்த மாத்திரை மோகத்தின் நடுவே மனசை விட்டு பேச என்ன
மாதிரியான பொக்கிஷம் இவர்!!
இருமல் சளியை ஒரு பொருட்டாகவே
எடுத்துக்கொள்ளாத தன் வீட்டைபற்றி, இருமலுக்கு அதி மதுரத்துண்டு ஒன்றை வாயிலே அடக்கிக்கொள்ளச்சொல்லும்
வைத்தியம் பற்றி ஆற்றிலே முங்கி முங்கி எழும் சளி ஒழிப்பானைப்பற்றி மூச்சு விடாமல்
அவரிடம் தைரியமாக சொல்லி முடித்தாள்.
“அட இதச்சொல்றியம்மா...
நான் கொஞ்ச நாளு கல்கத்தாவுல ப்ராக்டீஸ் பண்ணியிருக்கம்மா........ சளி காய்ச்சல்ணு
எவன் வந்தாலும் பாத் ரூமுக்குள்ள கூட்டிகிட்டு போயி ரெண்டு பக்கெட் பச்ச தண்ணிய தலயோட
ஊத்தினப்புறந்தான் மத்த வைத்தியம் எல்லாம்
தொடங்குவானுக..... ஒங்க வீட்டு வைத்தியம்..... எவ்வளவு...... தூரத்துக்கு போயிருக்கு......
பாரு”
அடக்க முடியாமல் அவருக்கு
சிரிப்பு.
“சரி சரி நீ வீட்டுக்குப்போயி
கொஞ்சம் சுக்கு மொளகு கொதிக்க வச்சு பனங்கல்கண்டு போட்டு மூணு வேள குடி..... நான் பொடி
பண்ணுன மாத்திர பொட்டணம் கொஞ்சம் குடுக்கிறேன்.
இல்லாட்டி ஒன் மாமனாரும் புருஷணும் அது என்னா ஏதுண்ணு ஆராய்வானுக...... இது
சும்மா ஒன் வீட்டோட ஆறுதலுக்குத்தான்..... சரியா.....?
அதற்குப்பிறகு எந்தபிரச்சினையானாலும் “நான் டாக்டர்
கிட்ட பொயிட்டு வந்திடுறேன்” என்பதில் வீட்டில் எல்லோருக்கும் டாக்டர் மருந்துக்காவது இந்தப் பெண் கட்டுப்படுகிறதே என்ற சந்தோஷம். இந்தக் கூட்டுக்களவாணிகளுக்கோ........?
சந்தோஷம் இரு மடங்கு....! பரிட்சை பேப்பர் திருத்தப்போகும் தன் ப்ரொபசர் கணவர் களைப்பில்லாமல்
இருக்க பெக்கோசுல்ஸ் ஒன்று அதிகமாக போட்டுக்கொள்வது பற்றியும், மாமானார் அவரது கிளப்பில்
செஸ் போட்டிக்கு இரண்டு நாளுக்கு முன்னாலிருந்தே ஞாபக சக்தியை அதிகரிக்கும் லேகியத்தை
ஒரு ஸ்பூன் எக்ஸ்ட்ரா சாப்பிடுவது பற்றியும்....... கதை போய்க்கொண்டே...... இருக்கும்!
“படித்த முட்டாள்கள்........இப்படி
கண்ட மேனிக்கு மாத்திரை போடுறதால ஒஸ்த்தியான
சிறு நீரைக் கழிக்கிறதுதான் மிச்சம் ஹா ஹா
ஹா......!!”
இந்த கதையெல்லாம் சரித்திரமாகி
பல வருடங்கள் ஆகின்றன. அந்த புதுப்பொண் இப்போது பேரன் பேத்திகளோடு அம்மம்மா அப்பத்தா
ஆகிவிட்டாள்! பிள்ளைகளெல்லாம் எங்கெங்கோ.....
புருஷனோடு தனிக்குடித்தனம்..... அவரது மாத்திரை மோகம்.........? அது இப்போது
வேறே ஒரு லெவெலில் போய்க்கொண்டுதான் இருக்கிறது. இதய நோய் மற்றும் ரத்த அழுத்தம் சர்க்கரை
என்று தினுசு தினுசாநவைகள் உடம்பில் குடித்தனம் கொள்ள மாத்திரைகள் தினுசு தினுசாகத்தான் இருக்கின்றன.ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்... இப்போதெல்லாம் டாக்டர்கள்
பார்த்துக்கொடுக்கும் மாத்திரைகள் மட்டுந்தான்..... அவராக ஆராய்ச்சி செய்து போடும்
பேச்சே கிடையாது! பெண்சாதிக்கு கால்சியம் மாத்திரை கொடுப்பதும் அவர் உபயமே!
அன்று அப்படித்தான்......
மாத்திரை போடு போடு என்று சொல்லி சொல்லி அலுத்துப்போய்விட்டது அவருக்கு. இன்னுமொரு
கத்தலுக்குப்பின் “போட்டுட்டேங்க” என்ற குரல்
சலிப்போடு அவரை வந்தடைந்தது.
இரவு சாப்பிட்டு முடித்த
பின் “ ராத்திரி மாத்திரையும் போட்டுட்டேங்க” என்ற உறுதிக் குரல் அவரை சாந்தப்படுத்தியது.
ரிமோட்டைத் திருப்பி
திருப்பி விளையாடுவதில் அவர் ஈடுபட்டிருக்கையில் அவள் பிசிறு ஒன்றும் இல்லாமல் ரொம்ப
நிதானமாகச் சொன்னாள் “ இண்ணைக்கி காலையிலயும்
ராத்திரியும் ஒங்க பிரஷர் மாத்திரைய போட்டுகிட்டேங்க”
தூக்கிவாரிப்போட்டது
கணவருக்கு! ”பிரஷர் மாத்திரையா......? ரெண்டா......பைத்தியா ஒனக்கு......” அவருக்குக்
கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. உடனடியாக பக்கத்திலிருக்கும் பெண்ணுக்கு ஒரு கால்
கொடுத்து வீட்டிற்கு வரச்சொல்லியாயிற்று. பெண்ணின் தோழி ஒரு டாக்டர். நிலவரத்தை சொல்லுவதற்கு
அவளை செல்லில் கூப்பிட்டாள். ”குசலம் விசாரிக்கும் நேரமா இது” என்றவர் அவள் கையிலிருந்த
செல்லைப்பிடுங்கி “ டாக்டர்... ப்ரஷர் மாத்திரை அதுவும் ரெண்டு மாத்திரைய தின்னுத்தொலச்சிடுச்சு
இதோட வேல்யூவையும் பிராண்டையும் குறிச்சுகிங்க டாக்டர்...”
“என் கண்ணாடிய ஒடனே எடுத்துகிட்டு வாம்மா அதுல என்னான்னா
இருக்குண்ணு பொடி எழுத்துல போட்டிருக்கான்... கொண்டா கொண்டா கண்ணாடிய இப்டி கொண்டா........”.
இந்த எல்லா களேபாரத்துக்கு
நடுவில அந்த அம்மாவோ சாந்த சொரூபியாய் இதெல்லாம் யாருக்கு வந்த விருந்தோ என்று உட்கார்ந்திருந்தது!
“அங்க்கிள் கொஞ்சம் ஆண்ட்டிகிட போன குடுங்களேன்.”
என்றாள் டாக்டர் தோழி
“என்னம்மா எப்புடி இருக்க?”
“ஆண்ட்டி ஒங்களத்தான்
நான் கேக்குணும்.... எப்டி இருக்கிங்க? தல எதும் சுத்துதா?”
“அப்டி ஒண்ணும் இல்லம்மா
நல்லா இருக்கேன்”
“ராத்திரியில மயக்கம்
எதும் வர மாதிரி இருந்துதுண்ணு வச்சிகுங்க. கொஞ்சம் உப்பும் சக்கரையும் தண்ணியில போட்டு
கலக்கி குடுச்சுடுங்க. நீங்க இன்னொரு விஷயம் எனக்கு சத்தியம் பண்ணிக்குடுக்குணும்,
“தப்பான மாத்திரைய இனிமே போடவே மாட்டேன், என் மாத்திரைய தனியாகவே வச்சுக்குவேன்.” பண்ணுவிங்களா?
“கட்டாயம்மா”
“அநாவசியமா அங்கிளோட பிரஷர ஏத்திபிடாதிங்க”
“ச்சேச்சே.. அதெல்லாம் பண்ணமாட்டேம்மா..”
“சரி இப்பைக்கி அங்க்கிள
சமாதானப்படுத்த ஒங்கள ஒரு டெஸ்ட் பண்ணணும்,
நாளக்கி காலையில என் கிளினிக்குக்கு அனுப்பிவைங்கண்ணு சொல்லிடுறேன். காலையில அவ்வளவு
கூட்டம் இருக்காது. கொஞ்ச நேரம் கதை அடிப்போம்..... என்னா? ஒங்களப்பாத்தும் ரொம்ப நாளாச்சு.”
அவள் சாரியை நினத்துக்கொண்டாள்
“ டாக்டர் லிஸ்டில் எனக்கு இன்னொரு கூட்டுக்களவாணி!!” மனசுக்குள் மகிழ்ந்து போனாள்!
No comments :
Post a Comment