Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Monday, 29 February 2016

தேடி வந்த அதிசயம்

முந்தின நாள் இரவு பெய்த மழை எங்கள் தெருவில் ஆடிப்பெருக்கு அழுக்காய் ஓடிக்கொண்டிருந்தது. நம்ம ஊரில் நடைபாதை எப்போதுமே நடப்பவர்க்கு  இல்லாத ஒன்றுதான்.  ஆனால் அதை விட்டாலும் அன்று நடப்பதற்கு ஏதுக்கள் வேறு எதுவும் இல்லை. நடைபாதையை சொந்த இடமாக்கி வண்டி ஏற்றுவதற்கு சவுகரியமாக சரிவு செய்து வைத்திருப்பவர் சிலர்.  அந்த நடைபாதையிலேயே சென்னை மெட்ரோவின்  மேன்ஹோல்கள்;  நம் அதிர்ஷ்டத்தைப்பொறுத்து மூடியோ திறந்தோ இருக்கலாம். அப்பார்ட்மெண்ட் கட்டுபவர்கள் தங்கள் சிறு சிறு குப்பைகளைக்கொட்ட அதே நடைபாதையை குத்தகைக்கு எடுத்திருப்பார்கள்! அன்றும் அப்படித்தான் சில்லு சில்லாக உடைக்கப்பட்ட டைல்களின் குவியல் நடைபாதையின் முக்கால் பாகத்தை அடைத்துக்கொண்டு நிற்க ஒரு பக்கமிருந்த இருந்த துக்குளி இடத்தில் பொது ஜனங்கள்  நடை பழகல் ஆகிக்கொண்டிருந்தது. வாக்கிங்கிலிருந்து நான் திரும்ப வந்து கொண்டிருந்தேன். எனக்கு எதிர்த்தாற்போல் வயதான ஒரு பெண்மணி வந்து கொண்டிருந்தார்கள். சரி அவர்கள் குவியலைக்கடந்து மெதுவாக இந்தப்பக்கம் வந்தவுடன் போகலாம் என்று எண்ணி  நான் காத்து நின்றேன்.
“பழைய கலாச்சாரம் மரியாதை எல்லாம் நம்மளோடு பொயிடுச்சுங்க.” நூல் புடவை பெரிய குங்குமப்பொட்டு, காதிலே மூக்கிலே பளிச் தோடு மூக்குத்தி, முகம் மலர்ந்த சிரிப்பு...... “ பாருங்க பஸ்ல ஏறினாக்கூட இந்த பொம்பள பிள்ளக நம்மள காணாத மாதிரி அந்தப்பக்கம் திரும்பி உக்காந்துகிதுக.......... பசங்கள கூட ஒரு பக்கம் சேத்துகிலாம்....... வயசானவங்களப் பாத்தா எந்திரிச்சி எடம் கொடுக்குறானுக. இப்ப பாருங்க நீங்க   எனக்குண்ணு வெயிட் பண்ணி கிட்டு இருக்கிங்க.”
“இதென்னங்க பெரிய விஷயம்..... ஒருத்தருக்கொருத்தர் இத கூட செய்யக்கூடாதா?”
“நீங்க கிறிஸ்டியனா?”
“ஊம்.......”
“நாங்கூட கிறிஸ்டியன் ஸ்கூல்லதாங்க படிச்சேன்....... சாமி பாட்டெல்லாம் தெரியுங்க.....”
“அப்புடிங்களா...? அத்தோடு  கிளம்பிவிடலாமென்று நான் எத்தனித்தபோது
“ஹார்ட் ஆப்பரேஷன் ஆகி கொஞ்ச நாள்தான் ஆவுதுங்க.” என்று சொல்லிக்கொண்டே புடவையை சற்றே விலக்கி ப்ளவுஸ் ஹூக்கை அவிழ்த்து ஆறிப்போயிருந்த தையல்களை ஏதோ கிட்ட சொந்தத்திடம் காட்டுவது போல என்னிடம் காட்ட...... சிலிர்த்துவிட்டுவிட்டது எனக்கு!
“ஆப்பரேஷனுக்கு முன்னாடி சுகர் 400க்கு மேல பொயிருச்சு.
ஊம்
"பொட்டாசியமும் ரொம்ப கீழ எறங்கி கிட்னியும் அடி வாங்கிடுச்சு. ஹஸ்பெண்ட் கிட்ட கையெழுத்து வாங்கிகிட்டுதான் ஆப்பரேஷன் பண்ணுனாங்க........15 நாளு ஐசியூவிலதான் கெடந்தேனாம்.
ஊம்ம்......
வீட்டுக்கு வந்தும் மயக்கமும் களப்புமாத்தான் கெடந்தேன். கொஞ்ச நா கழிச்சு செக் அப்புக்கு போயிருந்தேன். அங்கயும் என்னால் உக்காந்திருக்க முடியில...... எனக்கு முன்னாடி நெறயா பேரு வெயிட்டிங்கில இருந்தாங்க. அங்க கெடந்த நாலு சேர்ல அப்புடியே நீட்டி படுத்துக்கிட்டேன்.
யாரோ தொட்ட மாதிரி இருந்துச்சு....... காபி சாப்பிடப்போன இவுருதான் வந்துட்டார்னு கண்ணை முழிக்கிறேன்..... பக்கத்தில சீஃப் டாக்டர் நிண்ணுகிட்டு கையை நீட்டினாரு.. அவுரு கையப்புடுச்சிகிட்டு எந்திரிச்சேன்  அப்புடியே தோள்ள கையப்போட்டு அவுரு ரூமுக்கு கூட்டிகிடு பொயிட்டாரு. வெளிய ஜனங்கள்ளாம் காத்துகிட்டு கெடக்காங்க...... நம்மள முட்டும் ஏன்?..... என்னா சங்கதிண்ணு தெரியிலியே... ..? மனசு கெடந்து தவிக்கிது..... சேர்ல மொள்ள என்ன உக்கார வச்சுட்டு அவுரு போய் எதுத்தமாரி அவுரு சேர்ல போய் உக்காந்தவரு
‘அம்மா ஒங்குளுக்கு ஒரு நல்ல சேதி... எல்லா டெஸ்ட்டும் நார்மலா இருக்குறதா வந்திருக்கு........ சந்தோஷமா..?
“ஐயா புண்ணியத்திலதான் எனக்கு... இது கெடச்சிருக்குங்க..”
“சரி சரி இப்ப இன்னொரு முக்கியமான விஷயத்துக்கு வருவோம்...” ண்ணு சொன்னவரு ரெத்தின கால்  போட்டுகிட்டு “ஆமா...;.... ஐசியூவில 15 நாள் கெடந்திங்கள்ள........ பொதுவா அங்க இருக்கவங்க சில பேரு சுய நெனவில்லாம எதையாவது பொலம்பிகிட்டே இருப்பாங்க....... நீங்களும் பொலம்பல் கேஸ்தான்..... ஆனா என்ன......... நான் அங்க வர்ரப்பெல்லாம் ஒரே பாட்டு புலம்பல்.........  அப்புடி என்னாதான் பாடிகிட்டே இருந்திங்கண்ணு இப்ப எனக்குத் தெரிஞ்சாவுணும்......”
“அப்புடிங்களா ஐயா........ நான் ஸ்கூல் படிக்கும் போது எனக்கு சொல்லிக் குடுத்த பாட்டுகள வீட்ல சும்மா இருக்க நேரத்தில பாடிகிட்டே கெடப்பேன்.....  அங்கயும் வந்தா இப்புடி பண்ணுனேன்? ”
“இப்ப எனக்கு கொஞ்சம் சத்தமா தெளிவா பாடுறிங்களா?
“........என்னா அதிசயம் நடக்குது .......! எனக்கு ஒண்ணுமே புரியில  ஒண்ணுமில்லாத எங் கொரல  கேக்க இத்தே பெரிய மனுசனா? திருவாசகத்து  ஒரு வரி  ஞாபகத்து வந்துடுச்சு  "நாயினுக்கே தவிசிட்டு காணதவையெல்லாம் காண்பித்து மற்றும் கேளானதனவையெல்லாம் கேட்பித்து" கண்ணுல தண்ணி பொங்கி பொங்கி வழியுது   ஒவ்வொரு பாட்டா பாடிகிட்டே இருக்கேன் அவுரும் கால் தாளத்தோட கேட்டுகிட்டே இருக்காரு....... அங்க பாடுன பாட்டு ரெண்ட ஒங்குளுக்கு பாடி காமிக்கிட்டுமா......?”
என் ஞாபகத்திற்கு பாடகர் கிருஷ்ணா வந்தார். “மார்கழி சீசனில் சபாக்களில் பாடமாட்டேன்... அதற்கு பதிலாக சென்னையின் குடிசைப்பகுதியில்தான் கச்சேரி பண்ணப்போகிறேன்.” என்று அவர் முடிவு போல இன்று எனக்கு நடு ரோட்டுக் கச்சேரி கொடுப்பினை என எண்ணிக்கொண்டே சரியென்று தலையசைத்தேன்.அவ்வளவும் சாமி பாட்டுகள்..... கணீரென்று இல்லாவிட்டாலும் ....... என் கையைப்பிடித்துக்கொண்டார்கள்.. என் நெஞ்சிலே தாளம் போட்டர்கள்....... அன்னையின் ஆலயம் அருகி வந்து சுகம் தருகிறதோ......?.
நிதானத்துக்கு வந்தபோது எனக்கு பயம் வந்துவிட்டது.... எங்கே நிற்கிறேன்? ஏன் இது  நடக்கிறது? எதற்காக..?
ஆப்பரேஷன் ஆகி இருக்கிறவர்களை எவ்வளவு நேரம் நிறக வைத்திருக்கிறோம்?  ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகிவிட்டால்........
“போதுங்க.. அழகாப்பாடுறீங்க..”.
”இன்னம் ஒண்ணே ஒண்ணுங்க.....”
“அப்ப சரி இங்கயாச்சும் உக்காந்துகுங்க.” கையைப்பிடித்து அப்பார்ட்மெண்டின் கட்டை சுவற்றில் உட்கார வைக்கிறேன்...
துணைக்கு அந்தபக்கமிருந்து அப்பர்ட்மெண்ட் வாச்மேனும் ஒரு  ரசிகனாக.....
முடிவில்லா பாட்டுக்கச்சேரியில் திரும்பவும் மூழ்கிப்போனேன்.........
“கடசியா ஒரு இங்கிலீஷ் பாட்டு பாடுட்டாங்க...?”
“ஊம்...”
விடை பெறுகையில் “ ஒங்க கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டங்க... டாக்டர் ரூம்ல பாட்டெல்லாம் பாடி முடிச்சதும் அவுரு தன்னோட ரெண்டு கையையும் எங்கிட்ட நீட்டி  “அம்மா இந்த கையால ஒங்குளுக்கு நான் என்னா செய்யுணும்” ண்ணு கேட்டார்
“ஐயா இந்த ரெண்டு கையுந்தான் எனக்கு உயிர் பிச்ச குடுத்துது......ஆனா இந்த ஆப்பரேஷன் பண்ணுறதுக்கு வேண்டிய  பணத்த  நாங்க கஷ்டப்பட்டுத்தான் பெரட்டினோம்......... என்னவிட நெறயா ஏழைங்க  நம்ம ஊர்ல இருக்காங்கய்யா... அவுங்களுக்கு இந்த கையால  தாராள மனசோட அற்புதங்கள் செஞ்சுகிட்டே இருக்குணுங்கய்யா”
சொல்லிகிட்டே  அவுரு கைய கண்ணுல ஒத்திகிட்டேன்
என் கையை அழுத்திப்புடிச்சவரு “ கட்டாயம்மா....  கட்டாயம் ஒங்குளுக்காகவே”ண்ணு சொன்னவரு என் கைய எடுத்து அவுரு கண்ணுல ஒத்திகிட்டாரு.
பாரும்மா..........ஓம்பதாம் கிளாசே படிச்ச இந்த வயசான கெழவியையும் மதிச்சு மெத்த படிச்ச அந்த அவுரு.........
 சோர்ந்து போன கண்களில்  நீர் முட்ட ததும்பி நின்ற அந்த வேளையில்
வாச்மேன் கல்வாழைப்பூ ஒன்றைப்பறித்து தன் பாசத்தைக்காட்ட என் உணர்ச்சிகளை வெளிக்காட்ட திணறிய நான் 'ஒடம்ப பாத்துக்குங்க' என்ற வார்த்தையுடன் என் வழி நடந்தேன்.
"நம்ப முடியாத ஒண்ணுப்பா இது' என இவரிடம் எல்லாவற்றையும் 
பகிர்ந்து கொண்டேன்,.
அவுங்க அட்ரஸ் கேட்டியா?
இது அத்தி பூத்தற் போல ஒரு அதிசயம்..... அந்த சுகம் தினமும் வேண்டியதில்லைதானே.....?

இருவரும் ஆமோதித்துக்கொண்டோம்!

Tuesday, 16 February 2016

நடனம் ஆடினர்......வெகு நாகரிகமாகவே

டிசம்பர் 2015 சென்னை வெள்ளத்தில் தவித்த மக்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது. இப்பெரிய இடரிலும் தன் சுகம் கருதாது வரிந்து கட்டி தொண்டு செய்த மக்களும், வெகு முக்கியமாக இளைய சமுதாயமும் வாட்ச் அப்பை நிறைத்து நின்றனர்; பத்திரிக்கைகளின் தலைப்புச்செய்தியாகி தமிழ் நாட்டை மகிழ்வித்தனர். இளைய சமுதாயம் உருப்படியில்லாதது என்ற பொதுவான எண்ணத்தைக் களைந்து எரிந்து 
எதிர்காலம் இவர்கள் கையில் சிறப்பான ஒன்றாய் உருவாகும் என்ற நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அள்ளி அள்ளியே வழங்கியது!
இந்த வெள்ளம் எங்கள் இருவருக்கும் ஆயிரமாயிரம் மக்கள் பட்ட கஷ்டங்களைத் தரவில்லை..... பெரிய நஷ்டம் எதையும் ஏற்படுத்தவில்லை. ஆனாலும் அது படுத்திய பாட்டை... எங்களுடைய வீட்டை உபயோகமில்லாத ஒன்றாய் ஆக்கி வைத்த  கூத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஒரு நாள் காலையில் மழையோடு மழையாய் மாடியிலிருந்து கீழே வருகிறேன். நுழையும் போதே வெராண்டா ரொம்பி இருந்தது.... உள்ளே தண்ணீர் போயிருக்காது என்ற நப்பாசையுடன் பூட்டைத்திறக்க ஹால் அலை மோதி நின்றது... கால்மிதிகள் படகோட்டிக் கொண்டிருந்தன....... டீபாயின் அடித்தட்டில் இருந்த படங்கள் நிறைந்த விலையுயர்ந்த புத்தகங்களும் கால்மிதிகளுக்கு துணை போய்க்கொண்டிருந்தன. விரு ந்தினர் படுக்கை அறைகளின் ஷெல்புகளில் இருந்த போர்வைகள் துண்டுகள் உப்பிப்போய் லிப்போ சக்ஷன் பண்ணித்தான் பாருங்களேன் என்றன! நாங்களே கைப்பட கோர்த்த இக்கியா புக் ஷெல்ஃப் கால் வாங்கிப்போய் தலை குப்புற விழுந்த அதிர்ச்சியில் அதிலிருந்த எனது பிரியமான பல புத்தகங்கள் ஊறிப்போய் கூழாகியிருந்தன.
எங்கள் சமைலறையைப்பற்றி கேட்கவே வேண்டியதில்லை. போன மழைக்கே பின்னாலிருந்த கிணறு  நிரம்பி நவம்பரில் தீவாளிக் குளியல் குளித்து முடித்திருந்தது. இப்போதோ குதியாளம் தான். அடி ஷெல்புகள் சகதியில் தத்தளித்து நின்றன; வாங்கி வைக்கப்பட்டிருந்த மாதாந்திர அரிசி சர்க்கரை பருப்பு வகையரா 'தண்ணியில்’ தள்ளாடின!
அதைத்தவிர அந்த ஒரே நாளில் ஒரு அதிசயம் ஒன்று எங்கள் வீட்டையும், சுற்றியிருந்த தோட்டத்திலும் நடந்திருந்தது! ஆயிரக்கணக்கில்....... குட்டித்தவளைகள்....... வீட்டுக்குள், வீட்டைச் சுற்றி, வீட்டு சுவர்களிள் நீக்கமற நிறைந்திருந்தன!! இது எப்படி.. எப்படி.... சாத்தியமாயிற்று!! ஆச்சரியப்பட்டு அலண்டுபோய் நின்றேன் நான். அவைகளோ என்னைக்கண்ட சந்தோஷத்தில் பச்சக் பச்சக்கென குதித்து நடனம் ஆடி தங்கள் மகிழ்வைத் தெரிவித்தன. இந்த அரிய அணிவகுப்பு மரியாதையில் நான் ஒடுங்கிப் போனேன்!! என்ன செய்வதென்று புரியாமல் கையில் கிடைத்த விளக்கமாற்றால் அவைகளை அடிக்க முயற்சித்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!! தப்பளாம் போட்ட தண்ணீரால் உடம்பு முழுவதும் எனக்கு இலவசமாய்!!!
விளக்கமாற்றை கையிலெடுத்த அவசர புத்தியை நொந்து கொள்கிறேன். அம்மாச்சியின் பயமுறுத்தல் அந்நேரத்துக்கு ஞாபகம் வந்தது. "தவளயத்தொடாதிங்க........ தவள சொறி வந்து அவதிப்பட்டு பொயிருவிங்க". எனக்கோ தவளைகளின் அபிஷேகம் மல்லவா நடந்திருக்கிறது!
ஆங்கிலத்தில் "The Piped Piper of Hamelin" என்ற கதையில் ஒருவனது குழல் ஊதலில் மயங்கிப்போய் அந்த ஊரில் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான எலிகள் அவன் பின்னாலேயே குதித்துக் கொண்டும் நடனம் ஆடிக்கொண்டும் செல்லுமாம். ஆனால் நிராயுதபாணியாக செய்வதறியாது நின்ற என்னை தவளைகள் முற்றுகை இட்டது ஏன்?
மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது, இன்வெர்ட்டர் தயவில் ஒரு லைட் மட்டும் உபயோகம்.... ஒரு கட்டத்தில் அதுவும் பிராணனை விட்டு விட்டது.... வீட்டில் கிடந்த சில டீ மெழுகுவத்திகளை கையிலிருந்த ஒரே நெருப்புட்டியினால் கொளுத்த எடுத்த முயற்சி அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகியது. ‘எல்லாரும் குளு குளு என்று இருக்கையில் நான்  மட்டும் இளைத்தவளா என்ன?’ நெருப்புட்டியும் பால் மாறிப்போனது!
தண்ணியிலே மிதந்து வந்து நான் ஆக்கிய ஒருகுக்கர் சோற்றிலேயும் பிரிஜ்ஜின் சுகம் கிடைக்காத தயிரிலும் ஊறுகாய் துணையிலும் ஒரு நாள் சாப்பாட்டுக் காரியங்கள் நிறைவேறிப்போனதும் ஒரு சுகமாய்த்தான் இருந்தது.
வீட்டுக்குள் இந்த நிலை என்றால் ரோட்டு நிலமையைப்பற்றிக்கேட்கவேண்டாம். தெப்பம் தெப்பமாக தெர்மோகோல்களும் பாலிதின் கவர்களும் முறிந்து விழுந்த மரக்கிளைகளும்   பல வீடுகளின் கழிவறைகளில் பொங்கி எழுந்த சகதிகளும் சங்கமம் கொண்டு ஆடிப்பெருக்காகி எந்ததொற்று நோயும் எந்த நேரத்திலும் இங்கே மையங்கொள்ளலாம் என்ற நிலையை உருவாக்கியிருந்தது.
இந்த நிலையிலிருந்து தண்ணீரில் தப்பளம் அடித்துக்கொண்டே தப்பித்து மருமகள் மகன் அடைக்கலத்தில் பத்து நாள் ராஜாங்கமாக...... புத்தகத்தோடு...... சிறு மழைகளை சுகமாக ஜன்னல் வழியே அனுபவித்து...... பேரன்கள் பேத்திகளோடு... கூடி....ம்ம்ம்ம்..... இந்த கூட்டாஞ்சோற்று சுகத்தில் லிஃப்டெல்லாம் ரொம்பி வழிந்து இடுப்பளவு தண்ணீரில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வந்த என் சின்ன நாத்தனாரும்சேர்த்தி.
எந்த கெட்டதிலும் ஒரு நன்மை உண்டல்லவா... அது எதிர்பாராமல் எமக்கும் அது கிடைக்கப்பெற்று மகிழ்ந்தோம்!!
பின் குறிப்பு: என்னுடைய கம்ப்யூட்டரும் இந்த கோலாகாலத்தில் கலந்து கொண்டு இரண்டு மாத விடுமுறைக்குப்பின் பிப்ரவரி தொடக்கத்திதான்  வேலையில் சேர்ந்தது...... ஆனால் சேர்ந்த கையோடு வி ஆர் எஸ் வாங்கிக்கொண்டது...... ஆகையால் புதியவர் வேலையில் சேரும் வரை என் ப்ளாகும் காத்துதான் கிடந்தது.....