டிசம்பர்
2015 சென்னை வெள்ளத்தில் தவித்த மக்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது. இப்பெரிய இடரிலும்
தன் சுகம் கருதாது வரிந்து கட்டி தொண்டு செய்த மக்களும், வெகு முக்கியமாக இளைய சமுதாயமும்
வாட்ச் அப்பை நிறைத்து நின்றனர்; பத்திரிக்கைகளின் தலைப்புச்செய்தியாகி தமிழ் நாட்டை
மகிழ்வித்தனர். இளைய சமுதாயம் உருப்படியில்லாதது என்ற பொதுவான எண்ணத்தைக் களைந்து எரிந்து
எதிர்காலம் இவர்கள் கையில் சிறப்பான ஒன்றாய் உருவாகும் என்ற நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அள்ளி அள்ளியே வழங்கியது!
எதிர்காலம் இவர்கள் கையில் சிறப்பான ஒன்றாய் உருவாகும் என்ற நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அள்ளி அள்ளியே வழங்கியது!
இந்த வெள்ளம்
எங்கள் இருவருக்கும் ஆயிரமாயிரம் மக்கள் பட்ட கஷ்டங்களைத் தரவில்லை..... பெரிய நஷ்டம்
எதையும் ஏற்படுத்தவில்லை. ஆனாலும் அது படுத்திய பாட்டை... எங்களுடைய வீட்டை உபயோகமில்லாத
ஒன்றாய் ஆக்கி வைத்த கூத்தை உங்களோடு பகிர்ந்து
கொள்ள விரும்புகிறேன்.
ஒரு நாள்
காலையில் மழையோடு மழையாய் மாடியிலிருந்து கீழே வருகிறேன். நுழையும் போதே வெராண்டா ரொம்பி
இருந்தது.... உள்ளே தண்ணீர் போயிருக்காது என்ற நப்பாசையுடன் பூட்டைத்திறக்க ஹால் அலை
மோதி நின்றது... கால்மிதிகள் படகோட்டிக் கொண்டிருந்தன....... டீபாயின் அடித்தட்டில்
இருந்த படங்கள் நிறைந்த விலையுயர்ந்த புத்தகங்களும் கால்மிதிகளுக்கு துணை போய்க்கொண்டிருந்தன.
விரு ந்தினர் படுக்கை அறைகளின் ஷெல்புகளில் இருந்த போர்வைகள் துண்டுகள் உப்பிப்போய்
லிப்போ சக்ஷன் பண்ணித்தான் பாருங்களேன் என்றன! நாங்களே கைப்பட கோர்த்த இக்கியா புக்
ஷெல்ஃப் கால் வாங்கிப்போய் தலை குப்புற விழுந்த அதிர்ச்சியில் அதிலிருந்த எனது பிரியமான
பல புத்தகங்கள் ஊறிப்போய் கூழாகியிருந்தன.
எங்கள்
சமைலறையைப்பற்றி கேட்கவே வேண்டியதில்லை. போன மழைக்கே பின்னாலிருந்த கிணறு நிரம்பி நவம்பரில் தீவாளிக் குளியல் குளித்து முடித்திருந்தது.
இப்போதோ குதியாளம் தான். அடி ஷெல்புகள் சகதியில் தத்தளித்து நின்றன; வாங்கி வைக்கப்பட்டிருந்த
மாதாந்திர அரிசி சர்க்கரை பருப்பு வகையரா 'தண்ணியில்’ தள்ளாடின!
அதைத்தவிர
அந்த ஒரே நாளில் ஒரு அதிசயம் ஒன்று எங்கள் வீட்டையும், சுற்றியிருந்த தோட்டத்திலும்
நடந்திருந்தது! ஆயிரக்கணக்கில்....... குட்டித்தவளைகள்....... வீட்டுக்குள், வீட்டைச்
சுற்றி, வீட்டு சுவர்களிள் நீக்கமற நிறைந்திருந்தன!! இது எப்படி.. எப்படி.... சாத்தியமாயிற்று!!
ஆச்சரியப்பட்டு அலண்டுபோய் நின்றேன் நான். அவைகளோ என்னைக்கண்ட சந்தோஷத்தில் பச்சக்
பச்சக்கென குதித்து நடனம் ஆடி தங்கள் மகிழ்வைத் தெரிவித்தன. இந்த அரிய அணிவகுப்பு மரியாதையில்
நான் ஒடுங்கிப் போனேன்!! என்ன செய்வதென்று புரியாமல் கையில் கிடைத்த விளக்கமாற்றால்
அவைகளை அடிக்க முயற்சித்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!! தப்பளாம் போட்ட தண்ணீரால்
உடம்பு முழுவதும் எனக்கு இலவசமாய்!!!
விளக்கமாற்றை
கையிலெடுத்த அவசர புத்தியை நொந்து கொள்கிறேன். அம்மாச்சியின் பயமுறுத்தல் அந்நேரத்துக்கு
ஞாபகம் வந்தது. "தவளயத்தொடாதிங்க........ தவள சொறி வந்து அவதிப்பட்டு பொயிருவிங்க".
எனக்கோ தவளைகளின் அபிஷேகம் மல்லவா நடந்திருக்கிறது!
மின்சாரம்
துண்டிக்கப்பட்டுவிட்டது, இன்வெர்ட்டர் தயவில் ஒரு லைட் மட்டும் உபயோகம்.... ஒரு கட்டத்தில்
அதுவும் பிராணனை விட்டு விட்டது.... வீட்டில் கிடந்த சில டீ மெழுகுவத்திகளை கையிலிருந்த
ஒரே நெருப்புட்டியினால் கொளுத்த எடுத்த முயற்சி அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகியது.
‘எல்லாரும் குளு குளு என்று இருக்கையில் நான்
மட்டும் இளைத்தவளா என்ன?’ நெருப்புட்டியும் பால் மாறிப்போனது!
தண்ணியிலே
மிதந்து வந்து நான் ஆக்கிய ஒருகுக்கர் சோற்றிலேயும் பிரிஜ்ஜின் சுகம் கிடைக்காத தயிரிலும்
ஊறுகாய் துணையிலும் ஒரு நாள் சாப்பாட்டுக் காரியங்கள் நிறைவேறிப்போனதும் ஒரு சுகமாய்த்தான்
இருந்தது.
வீட்டுக்குள்
இந்த நிலை என்றால் ரோட்டு நிலமையைப்பற்றிக்கேட்கவேண்டாம். தெப்பம் தெப்பமாக தெர்மோகோல்களும்
பாலிதின் கவர்களும் முறிந்து விழுந்த மரக்கிளைகளும் பல வீடுகளின் கழிவறைகளில் பொங்கி எழுந்த சகதிகளும்
சங்கமம் கொண்டு ஆடிப்பெருக்காகி எந்ததொற்று நோயும் எந்த நேரத்திலும் இங்கே மையங்கொள்ளலாம்
என்ற நிலையை உருவாக்கியிருந்தது.
இந்த நிலையிலிருந்து
தண்ணீரில் தப்பளம் அடித்துக்கொண்டே தப்பித்து மருமகள் மகன் அடைக்கலத்தில் பத்து நாள்
ராஜாங்கமாக...... புத்தகத்தோடு...... சிறு மழைகளை சுகமாக ஜன்னல் வழியே அனுபவித்து......
பேரன்கள் பேத்திகளோடு... கூடி....ம்ம்ம்ம்..... இந்த கூட்டாஞ்சோற்று சுகத்தில் லிஃப்டெல்லாம்
ரொம்பி வழிந்து இடுப்பளவு தண்ணீரில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வந்த என் சின்ன நாத்தனாரும்சேர்த்தி.
எந்த கெட்டதிலும்
ஒரு நன்மை உண்டல்லவா... அது எதிர்பாராமல் எமக்கும் அது கிடைக்கப்பெற்று மகிழ்ந்தோம்!!
பின் குறிப்பு:
என்னுடைய கம்ப்யூட்டரும் இந்த கோலாகாலத்தில் கலந்து கொண்டு இரண்டு மாத விடுமுறைக்குப்பின்
பிப்ரவரி தொடக்கத்திதான் வேலையில் சேர்ந்தது......
ஆனால் சேர்ந்த கையோடு வி ஆர் எஸ் வாங்கிக்கொண்டது...... ஆகையால் புதியவர் வேலையில்
சேரும் வரை என் ப்ளாகும் காத்துதான் கிடந்தது.....
No comments :
Post a Comment