Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Thursday, 31 March 2016

இடங்கண்ணியின் கணக்கும் வழக்கும்

எங்கள் சின்னோண்டு தெருவின் சின்னோண்டு கோயிலில் ராத்திரி ஜெபம் சொல்லி முடித்தவுடன் கல்கத்தாவின் 'அட்டா' மாதிரி கோயில் மாப்பிலே கூட்டமாய் உட்கார்ந்து சிறுகதை அடிப்போம் "போய்தான் தோச சுடுணும்னு' யாராவது  எந்திரிச்சி நிண்ணு நெட்டி முறிச்சு கிளம்பும் வரை கூட்டம் கலையாமல் கதை கேட்கும். அன்றைக்கும் அப்படித்தான் எமிலி ஒருகதையை ஆரம்பித்தது.

"ரத்தினத்து மாமாவுக்கு சின்னாச்சி மேல எரிச்ச வந்தா  நம்ம சந்தனதமாதாவத்தான் வைவாங்க"

அவுங்க என்னா பாவம் பண்ணுனாங்க?"

"எவன் இந்த கோயிலுக்கு சந்தனமாதாண்ணு (அன்னம்மாள்) பேர வச்சானோ தெரியிலண்ணு" ஆரம்பிச்சாங்கண்ணா அவுங்க பிரார்த்தன அனுமார் வாலாட்டந்தான் போவும்,
"அந்தோணியாரு செவுத்தியாருண்ணு ஆயிரம் அர்ச்சிஷ்டவங்க பேரு இருக்கையில சந்தனமாதாண்ணு பேருதான் கெடச்சுதா இவனுகளுக்குண்ணு. பூர்வீகத்தையும் திட்டி தீப்பாங்க.......... அந்த கெழவி(சந்தனமாதா) தயவுல  இந்த ஊர்ல பொண்டுக பவுசு மாறாம ராஜாங்கம் பண்ணுதுக... ஆம்பள ஆளுக பொசுக்குண்ணு பொயிடுறானுக....  ஒரு வீடு இல்ல ரெண்டு வீடு இல்லதெருவே அந்த கதையாத்தான் இருக்கு..."  

சின்னாச்சி வாயே தொறக்காது

அந்த மாமாவுக்கு  சின்னாச்சிய  எண்ணைக்குமே ஆவாது...

"கலியாணம் ஆனதிலிருந்தே இப்பிடித்தான் கத ஓடிச்சு." சின்னாச்சியே சொல்லுவாங்க
 "அவுகளுக்கு பாத்த பொண்ணே வேற...........  அந்த சேதி தெரியுமா?" கத சூடு பிடித்தது"
அந்த பொண்ண இவுகளும் போயி பாத்து அவ அழகுல மயங்கிப் போயி அங்கனயே கலியாணத்துக்கு சம்மதம் சொல்லி தேதியும் குறிச்சாச்சு. நடு மத்தியில என்னுமோ சோசியம் பாத்த பொண்ணூட்டுகாரங்க இது சரிப்படாதுண்ணு சேதி அனுப்பிச்சிட்டாங்க......அப்பாகாரருக்கு கோவம் பொத்துகிட்டு வந்துடுச்சு....... கெவுர்மெண்ட் வேலையில இருக்க நம்ம பையன போயி  பொண்ணூட்டுகாரனுக வேணாமுண்ணு சொல்லப்போச்சா...... அந்த முகூர்த்ததிலய எம்பையன் கலியாணத்த ஜாம் ஜாம்ணு நடத்துல நான் எடங்கண்ணியான் இல்லடாண்ணு...... சவால் உட்டவரு  'ஒன் பொண்ண குடுடாண்ணு' உரிமையா கேக்குற வெடத்துலருந்து  பொண்ணை முடிச்சிகிட்டு வந்துட்டாரு.

ஆனா பையந்தான் முடுக்கிக்கிட்டான்.... கலியாணத்து அண்ணைக்கி காலையில் அடமான அடம்...... பாய உட்டு எந்திரிப்பனாங்கிறான். சாம தான பேத தண்டத்துல பாப்பா கொளத்துக்கு இழுத்துகிட்டு போயி ஒரு முழுக்கு போடவச்சி  பட்டு வேட்டியக்கட்டி சட்டய மாட்டிவுட்டு அங்கவஸ்திரத்த போட்டு மோள தாளத்தோட கோயிலுக்கு கூட்டிகிட்டு வர்ரதுக்குள்ள தாவு தீந்து போச்சாம். பொண்ணுக்கு ஒண்ணும் கொறயில்ல..... வீட்டு வேலையும் நரூசா செய்யக்கூடியது. வாய் திறந்து அதிர்ந்து பேசாதது.
ஆனாலும் அ ந்த மொத நா எரிச்சல் கடசிமுட்டும் மாமாவுக்கு தக்கி போச்சு.

" யேய் நான் போனப்புறம் இந்த சந்தனமாதா முந்தாணைக்குள்ள ஒளிஞ்சிகிட்டு ரொம்ப நாளைக்கி என் பென்ஷன வாங்கி தின்னுகிட்டு  குஷால் பண்ணுலாமுண்ணு நெனைக்காதே. நான் மேல போனவொடனே என் பின்னாடியே வர்ரதுக்கு ஒனக்கு ரிசர்வேஷன் பண்ணிட்டுதான்  அங்கன மறுவேல.....பாப்பேன்  ஜாக்கிரத......"
பிரச்ன என்னாண்ணு தெரியில  இருவது வருசம் ஆயிப்போச்சு ... மோச்சத்திலேருந்து டிக்கிட்டு இன்னம் வந்தபாடில்ல....... ரிசர்வேசன்ல கோளாரா இல்ல குரியர்காரன் டிக்கிட்ட தொலச்சுட்டானா.......?"

கை தட்டலோடு ஒரே சிரிப்பு!!

".இல்ல வந்த குரியர்காரன   நம்ம சந்தனமாதா வழியில மடக்கி டிக்கிட்ட கிழிச்சி பாப்பா கொளத்துல உட்டெறிஞ்சிட்டாகளோ என்னுமோ?!"என இன்னொரு தமாஷ் பேர்வழி எடுத்துவிட

சின்னாச்சியும் சேர்ந்து எங்கள் கோயில் மாப்பு அன்று ஒரிஜினல் சிரிப்பொலி!!!.

"மாமா எரிச்சபட்டு சொன்னாலும் அவுக சொன்னதுல ஒரு உண்ம இருக்கு..." சொல்லிக்கொண்டே கோயில் மாப்பு கூட்டம் கலைந்தது.

அடுத்த நாள் போனில் அக்காவோடு இன்னொரு பாட்டம் சிரிப்பு!!
தோழிகளோடு மற்றும் ஒருமுறை!!
"பேசாம நாம எல்லோரும் எடங்கண்ணிக்கி போயி செட்டில் ஆயிரலாம்ப்பா!"ஏக்கமாய் ஒரு தோழி.

வையகத்திற்கும் பகிர வேண்டி தங்கையை கூப்பிடுகிறேன்

உலகத்தில் ஒரு ஜாதி உண்டு.. அந்த ஜாதி. பெண்களைப்பற்றிய எந்த விஷயத்தையும் ஒரு ஜோக்கையும் கூட அலசி ஆராய்ந்து அக்கு வேறு ஆணி வேறாய் கழற்றிவிடும் பெண்ணியக்க ஜாதி அது!
" செத்துப்போன அந்த மாமாதான் சந்தனமாதாவ சாக்கு வச்சு ஒளறுராருண்ணா நீங்க யாரும் யோஜன பண்ணாம சிரிப்பிங்களா......? அப்பல்லாம் பொண்ணுக்கும் மாப்பிள்ளை என்னா வயசு வித்தியாசம் நெனச்சு பாத்திங்களா?
வயசுக்கு வந்தவொடன......... சமயத்தில வராததுக்கு முன்னாடியே கலியாணம் ஆயிப்போவும்... நம்ம அம்மா அப்பாவயே பாரேன்..

ஆம்பளக கெழவனானாலும் வயசு ஆவமாட்டாங்களாம் பொம்பள பிள்ளைகளுக்கு பிள்ள பொறந்தவொடனேயே வயசு ஆயிருமாம்... என்னா கூத்துடா இது...? ஆம்பளக்கி வயசான காலத்தில சின்ன வயசாயிருக்கிற பொண்டாட்டி சவரட்சண பண்றது தோதாயிருக்குமாம். ரெண்டு பேரும் வயசாயி சீக்கா கெடந்தா யாரு யாரைப்பாக்குறது? அருமையானஆணாதிக்கவாதம்!!
பழய சிங்கப்பூரு பிரதமர் லீ குவான் யூ அவுங்களவிட வயசான பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிகிட்டாரு. அழகான வாழ்க்கை
கஸ்தூரிபாய் காந்திஜியவிட பெரியவங்க... இலட்சிய வாழ்க்கைய அவுங்களதா ஆக்கிகிட்டாங்க. இவுங்க ரெண்டு பேரும் கணவர்களுக்கு முன்னாடி எறந்துட்டாங்க. அது வயசு காரணமாவும் இருக்கலாம்.
 சும்மனாச்சுக்கும் அன்னம்மாள நடுவில இழுக்கறதும் நீ கூட அந்த ஜோக்குக்கு சிரிக்கிறதும்..............." 
"அம்மா... ஆள வுடு தாயி... எடங்கண்ணி கணக்கு வழக்கு ஒங்கிட்ட எடுபடாது.. போ"

போன் பண்ணின என் புத்தியை  நானே நொந்து கொண்டேன்.

Tuesday, 15 March 2016

பாஸ்கா திருநாள்

சில வருடங்களுக்கு முன் ஏற்காடு சென்றிருந்தோம் பிரியமானவர்கள் அங்கு அழகான வீடு கட்டியிருந்தார்கள். 56 ஏக்கர் நிலம். ஒரு செம்மையான கிண்ணி போல்..இருந்த அந்த இடத்தில் ஒவ்வொருவருக்கும் 4 கிரவுண்டு நிலமாக விற்கப்பட்டது. விற்றவர் ஒப்பந்தத்தில் ஒரு வினோதமான ஷரத்து ஒன்று.......  வாங்கப்பட்ட நான்கு கிரவுண்டில் ஒரு கிரவுண்டில்தான் வீடு கட்டப்பட வேண்டும் மீதி இடமெல்லாம் பசுமைக்குத்தான் சொந்தம் என்றது

சிலு சிலுவென்ற சிறு குளிர் காற்றின் சுகத்தில் நால்வரும் நடந்து கொண்டிருந்தோம். வழியில் தோட்டக்காரர் வணக்கம் சொன்னார். இந்த தோட்டக்காரரைப்பற்றி நண்பர்கள் நிறையவே சொல்லியிருந்தார்கள். தொட்டு வச்சா புட்டுகிட்டு விளையும் கையாம். நாங்கள் போனபோது அவர் கூட நின்ற இன்னொருவரும் நண்பர்களுக்கு வணக்கம் சொல்லி " பையன் பொறந்திருக்கான் ஐயா... அத மரியண்ணன் கிட்ட நேரடியா சொல்லிட்டு போவணும்முண்ணு ஓடியாந்தேன்"
ரொம்ப சந்தோஷம்ப்பா... மரியண்ணன உழுந்து கும்புட்டுக்கோ
அவுரு எனக்கு தெய்வம் மாதிரிங்க.... 14 வருசமா ஒரு புள்ள இல்லாம நாங்க தவிச்ச தவிப்பு....!! அண்ணன் குடுத்த பச்சல மருந்துதால.........  எங்க குடும்பத்துக்கு பெரிய பாக்கியம்ல கெடச்சுருக்கு......
மண்ணின் மைந்தனாய் கருந்தேக்கு சிற்பமாய் கொடுக்கு மீசையுமாய் நின்ற மரியண்ணனுக்குள்ள இவ்வளவு இருக்கிறதா?
"மரியண்ணன்........ இவுங்களும் ஒங்களாட்டம் கிறிஸ்டியன்ஸ்தான்" "அப்புடிங்களா ஐயா........  அப்ப ஐயாவும் அம்மாவும் பாஸ்கால்லாம் பாத்திருப்பிங்களே"

"பாத்துருக்கோம்ப்பா..... சின்ன வயசுல பாத்ததுதான்"
"அப்ப நம்ம ஊரு பாஸ்காவுக்கு இந்த வருசம் வந்துருங்க"
"ஏற்காட்டுல பாஸ்கா நடக்குதா?"
"என்னம்மா அப்புடி சொல்லிட்டிங்க... அது அப்பன் பாட்டங்காலத்திலருந்துல்ல போய்கிட்டு இருக்கு.... ஏசு பொறப்புலேருந்து சிலுவையில அவுர அறையிற முட்டும் வசனம் பேசி அருமோனிய புட்டி வச்சு பாட்டெல்லாம் பாடி  நொம்ப  நல்லாருக்குங்க ஐயா....அதுல நாங்கூட ஸ்நாபக அருளப்பர் வேசங்கட்டுறேங்க.(ஏசுவுக்கு முன்னோடியா வந்தவர் ஸ்நாபக அருளப்பர்)
அந்த சிறுக்கி மொவ ஏரோதியா அதானுங்க ஏரோது ராசாவோட பொண்டாட்டி அவனோட  பொறந்த நாளிக்கி தான் பொண்ண வுட்டு அருளப்பரு தலய பரிசா கேக்குறா......... அந்த மானங்கெட்டவனும்  அருளப்பர் தலய கொய்ய சொல்லி தட்டுல வச்சு அவளுக்கு பருசா குடுக்குறாங்க....  நான் ஆடுற ஆட்டத்தையும் பேசுற பேச்சையும் கேக்குறதுக்கே சனங்க குமிஞ்சி போவாங்க.. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிபுடுவாங்க........ ஏரோத கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி திட்டி தீத்துடுவாங்க. என்னோட ஆக்டு முடிஞ்சவொடன நெறயா சனங்க கலஞ்சி போயிருவாங்க சாமிய சிலுவையில அடிக்கிறதக்கூட இருந்து பாக்கமாட்டாங்க........ என்னோட ஆக்டிங்க  நானே சொல்லிக்கப்புடாது ஐயா நீங்க ஒருவிச வந்து நம்ம பாஸ்காவப் பாருங்க......
'கட்டாயம் மரியண்ணன்......' நடை தொடர்ந்தது பாஸ்கா பேச்சும் துணைக்கு

எட்டு வயசில நான் அத்தை வீட்டுக்கு பாஸ்கா பாக்க பொயிருக்கேன். மெக்கேல்பட்டிங்கிற அந்த ஊர்ல ஊரே நமக்கு சொந்தம் தெருவுல காலவச்சா
"மெக்கேல்சாமி அத்தான் மவளா?"ண்ணு குசலம் விசாரிப்பு  சின்னாச்சி சின்னாஞ்சா பெரியஞ்சா அத்தாச்சிண்ணு எனக்கு காதே ரொம்பி போச்சு... ஆம்பள ஆளுக பூரா தாடியும் மீசையுமா....... இருந்தாங்க.
"அத்தை  பயமா இருக்கு" கையை இறுக்கி புடிச்சிகிட்டேன்
"அடி நீ வேற இந்த நாப்பது நாளு தவசு காலந்தான் இந்த ஊர்ல  சண்ட சச்சரவு இல்லாத நேரம் பாப்பா.. இவுங்க எல்லாரும் பாஸ்காவுக்கு வேஷம் கட்டுறவங்க.........  இந்த நாப்பது நாளும். ரொம்ப சுத்த பத்தமா இருப்பாங்க..... நாப்பது நாளும் ஒரு
சந்திதான் கவுச்ச, தண்ணி அறவே கெடையாது கவுளி கவுளியா கொடிக்கா வெத்தலய சீவலோட சவுஞ்சுகிட்டே கெடக்குறவனெல்லாம் வெறும் வாய பொத்திகிட்டுல்ல கெடக்கானுவ."

போற வர்ர சொந்தங்கள்ளாம் குடுத்த அரையணா ஒரணாவுல அத்த குடுத்த சின்ன சுருக்குபை கனமாத்தான் இருந்தது. பெரிய வியாழக்கெழமையே ஊரு கள கட்ட ஆரம்புடிச்சு. கோட்ட மாதிரி முட்டாய்கள கட்டி வச்சிருந்த முட்டாய் கடைக வளவி கடைக சொப்பு சாமானுக  சட்டி பான ஆப்ப சட்டு சாமானுக  இதோட பலூன் காரனுக,
நீட்டு தடியில வான வில்லு கலர்ல ஜவ்வு முட்டாய சுத்தி வச்சுகிட்டு கையில திங்கிற காப்பு, திங்கிற கடிகாரம் கட்டி வுடுறவுனுக இப்புடியா பெரிய வெள்ளிக்கெழம அண்ணைக்கி ஊரே ஜெகஜோதியா கெடக்கு. இப்பிடிதான் இருக்கப்போவுதுண்ணு தெரிஞ்சிருந்தா ஒரு வேள எங்க அம்மா என்ன மெக்கேல்பட்டிக்கு அனுப்பிச்சே இருக்கமாட்டாங்க. பெரிய வெள்ளி கெழம காலையில எந்திரிச்சா வீடே வருத்தமா இருக்கும். அடுப்பு அமிஞ்சிபோய் கெடக்கும்   காலையில உபவாசம்,.....

காலையிலேர்ந்து கோயில் சந்திப்பு  ஒவ்வொரு கோயில்லயும் பத்து நிமிஷமாவது மொழங்கால்ல இருந்து ஜெபம் சொல்லுவோம்வயிறு கிண்டாவி வுட்டு மத்தியானம் வீட்டுக்கு வந்தா பாவக்கா பருப்பு கொழம்புதான் இருக்கும். அத அள்ளி போட்டுகிட்டு திரும்ப மூணு மணிக்கெல்லாம் பெரிய சிலுவப்பாதைக்கி ஓடுணும்... ராத்திரி தண்ணி சோறுதான்....... ஆனா இங்க பாத்தீங்கண்ணா என் அத்த பிள்ளைக என் சுருக்குபை காசோடு என்ன கட கடையா இழுத்துகிட்டு ஓடுதுக  எனக்கும் வாங்கிகிட்டு அதுகளுக்கும் வாங்கிககுடுத்து ......  நடு நடுவுல கோயிலுக்குள்ள நொழஞ்சி ஜெபம் சொல்லிட்டு...... இது வேற மாதிரியான....... ஜாலியான ஆன்மீகமோ......
சாய்ங்காலம் கொடத்துல தண்ணி எடுத்துகிட்டு போய் கோயில் மைதானத்துலதண்ணிய தெளிச்சுவுட்டு  பாய்கள போட்டு எடம் ரிசர்வ் பண்ணிட்டோம். நல்லா ராத்திரியானப்பறந்தான்  பாஸ்கா நாடகம் தொடங்குது... தொடங்கி  அஞ்சு நிமிஷம் ஆயிருக்காது...... நாள் பூரா ஓடுன ஓட்டத்துலயும் நடையிலயும் தின்ன தீனியிலயும் காவேரி காத்த வாங்கிக்கிட்டு சின்ன பட்டாளம் பூரா டொர்ர்..... டொர்ர்..!!!
ஜாலியான கதையில்  நடையின் வேகம் குறைபடாமல் சென்றது.

ஒலகத்திலயே பெரிய பாஸ்கா ஜெர்மனியில ஒபரேமார்குங்குற ஊர்லதான் நடக்குது
பதினேழாம் நூற்றாண்டுல ஊரெல்லாம் பிளேகு நோய். ஆளுக பொத்துபொத்துண்ணு உழுந்து செத்து போறாங்க.....ஜனங்க கூடி யோஜன பண்ணுனாங்க... சாமிகிட்ட ஒரு ஒப்பந்தம் போட்டாங்க. சாமி இந்த வியாதிய எங்க ஊர உட்டு தொரத்திட்டீண்ணா  நாங்க வருஷா வருஷம் ஒன்னோட பொறப்புலேர்ந்து சிலுவையில அறைஞ்ச வாழ்க்க வரைக்கும் நாங்க டிராமாவா போடுறோம் அப்டிண்ணாங்களாம். அற்புதமா அந்த நோய் ஊர வுட்டு ஓடிப்போகவும் ஜனங்க அவுங்க செஞ்சுகிட்ட ஒப்பந்தப்படி  அண்ணையிலேர்ந்து  வேஷம் கட்ட ஆரம்பிச்சிட்டாங்க
இண்ணைக்கி பாத்திங்கண்ணா அத பிரம்மாண்டமா அஞ்சு மாசத்துக்கு போடுறாங்களாம். ஆனா இப்ப அது பத்து வருஷத்துக்கு ஒருக்கதான் நடக்குது. 2020லதான் அடுத்த ஷோ.
அப்ப  நாலு பேரும் சேந்து போலாமா? 'இன்ஷா அல்லா'
'ஆமாமா.... பொழச்சு கெடந்தா பாக்கலாம்' 'இப்பைக்கி மரியண்ணனுதுதான் நமக்கு ரெடியா இருக்கே!!'

"ஏம்ப்பா நீங்க பாத்த பாஸ்காவுல ஒரு தமாஷ் நடந்துச்சும்பிங்களே..... அத சொல்லுங்க ப்ளீஸ் அதுவா என்று சிரித்தவர் இது திண்டுக்கல்லுக்கு பக்கத்தில  ஒரு ஊர்ல நடந்தது. பாஸ்கா மும்மரமா போய்கிட்டு இருக்கு..... சாமிய சிலுவையில் அறையிற காட்சி. நொந்து நூலாகிக்  கெடந்த அவர சிலுவையில புடிச்சு தள்ளி படுக்க வைக்குறாங்க....... உள்ளேருந்து ஒரு வீரன் ஜனங்க பாக்குற மாரியா பெரிய பெரிய ஆணிகள எடுத்துகிட்டு அட்டகாசமா  நொழயிறான்..... ஜனங்க வெதும்பி போய் நிக்கிறாங்க. ஆணிகள வாங்கிகிட்ட வீரன் உக்காந்து சாமி கைய விரிச்சிவச்சு சுத்திய ஓங்கி மடேர்னு ஒரு போடுபோடுறான்.... போட்ட அந்த நொடியில சிலுவையில படுத்துகெடந்த சாமி குதிச்சு எந்திரிச்சி ரத்தம் ஒழுவுற கைய நீட்டி அடிச்சவன பாத்து  ஒரு கெட்ட வார்த்த சொல்லிபுட்டு  "எடேய் கைக்கு பக்கத்தில அடிடா கையி மேலாயா அடிப்ப குருட்டு கந்தாயா"ண்ணு திட்டிபுட்டு தொணைக்கி இன்னொரு கெட்ட வார்த்தை சொல்லிட்டு சிலுவையில் திரும்ப படுத்துககிட்டாரு.
கண்ணீரும் கம்பலையுமா நிண்ண ஜனங்க மத்தியில ஒரே சிரிப்பு.....

இதுல இன்னொரு வேடிக்க என்னாண்ணா சாமி கையில ஆணி அடிச்ச  அந்த போர் வீரன் சாமியோட சொந்த மகனாம்!! அவன் தூக்க கலக்கத்துல அப்புடி அடிச்சானா இல்ல வேணுக்கிண்ணே பண்ணுனானாங்கிறத சம்சயம் ஊர் ஜனங்க மத்தியில ஒரு ரொம்ப நாளைக்கி ஒரு தர்க்கமாவே கெடந்துச்சாம்.


தாங்க முடியாத சிரிப்போடு எங்கள் நடையும் தொடர்ந்தது.........