எங்கள் சின்னோண்டு தெருவின்
சின்னோண்டு கோயிலில் ராத்திரி ஜெபம் சொல்லி முடித்தவுடன் கல்கத்தாவின் 'அட்டா' மாதிரி கோயில்
மாப்பிலே கூட்டமாய் உட்கார்ந்து சிறுகதை அடிப்போம் "போய்தான் தோச சுடுணும்னு' யாராவது எந்திரிச்சி நிண்ணு நெட்டி முறிச்சு கிளம்பும்
வரை கூட்டம் கலையாமல் கதை கேட்கும். அன்றைக்கும் அப்படித்தான் எமிலி ஒருகதையை
ஆரம்பித்தது.
"ரத்தினத்து மாமாவுக்கு சின்னாச்சி மேல எரிச்ச வந்தா நம்ம சந்தனதமாதாவத்தான் வைவாங்க"
அவுங்க என்னா பாவம்
பண்ணுனாங்க?"
"எவன் இந்த கோயிலுக்கு சந்தனமாதாண்ணு (அன்னம்மாள்) பேர வச்சானோ
தெரியிலண்ணு" ஆரம்பிச்சாங்கண்ணா அவுங்க பிரார்த்தன அனுமார் வாலாட்டந்தான்
போவும்,
"அந்தோணியாரு செவுத்தியாருண்ணு ஆயிரம் அர்ச்சிஷ்டவங்க பேரு இருக்கையில
சந்தனமாதாண்ணு பேருதான் கெடச்சுதா இவனுகளுக்குண்ணு. பூர்வீகத்தையும் திட்டி
தீப்பாங்க.......... அந்த கெழவி(சந்தனமாதா) தயவுல
இந்த ஊர்ல பொண்டுக பவுசு மாறாம ராஜாங்கம் பண்ணுதுக... ஆம்பள ஆளுக
பொசுக்குண்ணு பொயிடுறானுக.... ஒரு வீடு
இல்ல ரெண்டு வீடு இல்லதெருவே அந்த கதையாத்தான் இருக்கு..."
சின்னாச்சி வாயே தொறக்காது
அந்த மாமாவுக்கு சின்னாச்சிய
எண்ணைக்குமே ஆவாது...
"கலியாணம் ஆனதிலிருந்தே இப்பிடித்தான் கத ஓடிச்சு." சின்னாச்சியே
சொல்லுவாங்க
"அவுகளுக்கு
பாத்த பொண்ணே வேற........... அந்த சேதி
தெரியுமா?" கத சூடு பிடித்தது"
அந்த பொண்ண இவுகளும் போயி
பாத்து அவ அழகுல மயங்கிப் போயி அங்கனயே கலியாணத்துக்கு சம்மதம் சொல்லி தேதியும்
குறிச்சாச்சு. நடு மத்தியில என்னுமோ சோசியம் பாத்த பொண்ணூட்டுகாரங்க இது
சரிப்படாதுண்ணு சேதி அனுப்பிச்சிட்டாங்க......அப்பாகாரருக்கு கோவம் பொத்துகிட்டு
வந்துடுச்சு....... கெவுர்மெண்ட் வேலையில இருக்க நம்ம பையன போயி பொண்ணூட்டுகாரனுக வேணாமுண்ணு
சொல்லப்போச்சா...... அந்த முகூர்த்ததிலய எம்பையன் கலியாணத்த ஜாம் ஜாம்ணு நடத்துல
நான் எடங்கண்ணியான் இல்லடாண்ணு...... சவால் உட்டவரு 'ஒன் பொண்ண குடுடாண்ணு' உரிமையா
கேக்குற வெடத்துலருந்து பொண்ணை
முடிச்சிகிட்டு வந்துட்டாரு.
ஆனா பையந்தான்
முடுக்கிக்கிட்டான்.... கலியாணத்து அண்ணைக்கி காலையில் அடமான அடம்...... பாய உட்டு
எந்திரிப்பனாங்கிறான். சாம தான பேத தண்டத்துல பாப்பா கொளத்துக்கு இழுத்துகிட்டு
போயி ஒரு முழுக்கு போடவச்சி பட்டு
வேட்டியக்கட்டி சட்டய மாட்டிவுட்டு அங்கவஸ்திரத்த போட்டு மோள தாளத்தோட கோயிலுக்கு
கூட்டிகிட்டு வர்ரதுக்குள்ள தாவு தீந்து போச்சாம். பொண்ணுக்கு ஒண்ணும்
கொறயில்ல..... வீட்டு வேலையும் நரூசா செய்யக்கூடியது. வாய் திறந்து அதிர்ந்து
பேசாதது.
ஆனாலும் அ ந்த மொத நா
எரிச்சல் கடசிமுட்டும் மாமாவுக்கு தக்கி போச்சு.
"
யேய் நான் போனப்புறம் இந்த சந்தனமாதா முந்தாணைக்குள்ள
ஒளிஞ்சிகிட்டு ரொம்ப நாளைக்கி என் பென்ஷன வாங்கி தின்னுகிட்டு குஷால் பண்ணுலாமுண்ணு நெனைக்காதே. நான் மேல
போனவொடனே என் பின்னாடியே வர்ரதுக்கு ஒனக்கு ரிசர்வேஷன் பண்ணிட்டுதான் அங்கன மறுவேல.....பாப்பேன் ஜாக்கிரத......"
" பிரச்ன என்னாண்ணு
தெரியில இருவது வருசம் ஆயிப்போச்சு ...
மோச்சத்திலேருந்து டிக்கிட்டு இன்னம் வந்தபாடில்ல....... ரிசர்வேசன்ல கோளாரா இல்ல
குரியர்காரன் டிக்கிட்ட தொலச்சுட்டானா.......?"
கை தட்டலோடு ஒரே சிரிப்பு!!
".இல்ல வந்த குரியர்காரன நம்ம
சந்தனமாதா வழியில மடக்கி டிக்கிட்ட கிழிச்சி பாப்பா கொளத்துல உட்டெறிஞ்சிட்டாகளோ
என்னுமோ?!"என இன்னொரு தமாஷ் பேர்வழி எடுத்துவிட
சின்னாச்சியும் சேர்ந்து
எங்கள் கோயில் மாப்பு அன்று ஒரிஜினல் சிரிப்பொலி!!!.
"மாமா எரிச்சபட்டு சொன்னாலும் அவுக சொன்னதுல ஒரு உண்ம இருக்கு..." சொல்லிக்கொண்டே
கோயில் மாப்பு கூட்டம் கலைந்தது.
அடுத்த நாள் போனில்
அக்காவோடு இன்னொரு பாட்டம் சிரிப்பு!!
தோழிகளோடு மற்றும்
ஒருமுறை!!
"பேசாம நாம எல்லோரும் எடங்கண்ணிக்கி போயி செட்டில் ஆயிரலாம்ப்பா!"ஏக்கமாய்
ஒரு தோழி.
வையகத்திற்கும் பகிர வேண்டி
தங்கையை கூப்பிடுகிறேன்
உலகத்தில் ஒரு ஜாதி உண்டு..
அந்த ஜாதி. பெண்களைப்பற்றிய எந்த விஷயத்தையும் ஒரு ஜோக்கையும் கூட அலசி ஆராய்ந்து
அக்கு வேறு ஆணி வேறாய் கழற்றிவிடும் பெண்ணியக்க ஜாதி அது!
"
செத்துப்போன அந்த மாமாதான் சந்தனமாதாவ சாக்கு வச்சு
ஒளறுராருண்ணா நீங்க யாரும் யோஜன பண்ணாம சிரிப்பிங்களா......? அப்பல்லாம்
பொண்ணுக்கும் மாப்பிள்ளை என்னா வயசு வித்தியாசம் நெனச்சு பாத்திங்களா?
வயசுக்கு வந்தவொடன.........
சமயத்தில வராததுக்கு முன்னாடியே கலியாணம் ஆயிப்போவும்... நம்ம அம்மா அப்பாவயே
பாரேன்..
ஆம்பளக கெழவனானாலும் வயசு
ஆவமாட்டாங்களாம் பொம்பள பிள்ளைகளுக்கு பிள்ள பொறந்தவொடனேயே வயசு ஆயிருமாம்...
என்னா கூத்துடா இது...? ஆம்பளக்கி வயசான காலத்தில சின்ன வயசாயிருக்கிற பொண்டாட்டி சவரட்சண பண்றது
தோதாயிருக்குமாம். ரெண்டு பேரும் வயசாயி சீக்கா கெடந்தா யாரு யாரைப்பாக்குறது? அருமையானஆணாதிக்கவாதம்!!
பழய சிங்கப்பூரு பிரதமர் லீ
குவான் யூ அவுங்களவிட வயசான பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிகிட்டாரு. அழகான வாழ்க்கை
கஸ்தூரிபாய் காந்திஜியவிட
பெரியவங்க... இலட்சிய வாழ்க்கைய அவுங்களதா ஆக்கிகிட்டாங்க. இவுங்க ரெண்டு பேரும்
கணவர்களுக்கு முன்னாடி எறந்துட்டாங்க. அது வயசு காரணமாவும் இருக்கலாம்.
சும்மனாச்சுக்கும் அன்னம்மாள நடுவில இழுக்கறதும்
நீ கூட அந்த ஜோக்குக்கு சிரிக்கிறதும்..............."
"அம்மா... ஆள வுடு தாயி... எடங்கண்ணி கணக்கு வழக்கு ஒங்கிட்ட எடுபடாது..
போ"
போன் பண்ணின என்
புத்தியை நானே நொந்து கொண்டேன்.
nice athai
ReplyDeleteThank you for your appreciation.
ReplyDelete