Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Saturday, 25 June 2016

தளும்பி நிற்கும் தண்ணீர்ப் பயணங்கள்

அந்த கோடை கால விடுமுறை....... கும்பகோணத்தின் அடைசலுக்கு ஒன்றரை மாத சுதந்திர விடுதலை.
முழுவருஷப்பரிட்சை எழுதும்போதே மனம் துள்ளித்துள்ளி கொள்ளிடத்தின் அக்கரையில் போய் நின்றுகொள்ளும்! கும்பகோண கெணத்துல குளிக்கிறது ஒரு குளியலா? மனசு எரிச்சல் படும். எண்ணைக்கோ ஒரு நாள் அப்பா உருளையில் ஓடும் வாளி தளும்பத்தளும்ப மொண்டு மொண்டு அடிக்கும் அருவிக்குளியலை விட்டால் ஏதோ கடமை கழிக்கும் செயல்தான் எங்கள் குளியல்.
ஆனா இந்த எடங்கண்ணியின் ஒண்ற மாசம்.........  கையில புடிக்கமுடியுமா எங்கள?!! கும்பகோணத்திலிருந்து நீலத்தநல்லூர் பஸ் பயணம்....எட்டு மைல் தொலைவுதான். ஆனால் அதற்குள் வண்டியின் வெளிப்புறத்தை  குடும்பத்தின் ஏகோபித்த வாந்தி விளையாட்டால் மெழுகி எடுத்துவிடுவோம்! இந்த விளையாட்டால் களைத்துப்போய் கீழே இறங்கினால் வைக்கோலால் நிரப்பி மேலே பழைய ஜமக்காளம் சகிதம் ரெட்டை மாட்டு கூண்டு வண்டி வைத்தியோடு கொள்ளிடத்தின் இக்கரையில் காத்துக்கிடக்கும். விட்ட குறை தொட்ட குறையாக உள்ளே பதுங்கிக்கிடக்கும் சொச்ச மிச்ச வாந்தியை வெளிக்கொணர வல்லது இந்த  வாடை நிறை வாகனம்! இதில் என்ன ஒரு சவுகரியம் என்றால் வாந்தி வருகையில் ஜனங்கள் கீழே இறங்கி வண்டியோடு ஓடிக்கொண்டே காரியங்களை முடித்துக்கொள்ளலாம்!!
போற வழியில போனஸ் மாதிரி கொள்ளடத்துல ஒரு குளியல்........ பரிசு(ஓடம்?) ஓடாத காலம் இந்த கோடை காலம்......பிள்ளைகளை அங்க போவாத இங்க போவாத சுழல் பக்கம் அம்புட்டுக்காத  என்று மிரட்டாமல் முழங்காலுக்குக் கீழே ஒடும் தண்ணீரில் குதியாளம் போட ஃப்ரீயாக விடும் அருமையான காலம் இந்த கோடைதான்!! அம்மாவின் புளி சோறு தயிர் சோறு மற்றும் தோலோடு வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கை கை கொள்ளாது நிரப்பிக்கொண்டு கொள்ளிடத்துத் தண்ணியில் லேசாக இழுபட்டுக்கொண்டே வாய்க்கு நேரடியாக சாப்பாட்டைத்தள்ளுவது...... ம்..ம்ம்...
மக்கள் பாரமில்லாமல் கொள்ளிடத்தில் நடை போடுவது இரண்டு மொட்டைமாடுகளுக்கும் சுகமான நேரந்தான்!
  உறு மீன் வரும் அளவும் காத்து நிற்கும் கொக்கு போல காய்ந்து கிடக்கும் பொன்னாற்றங்கரையில் எங்கள் பட்டாளம் மொட்டைமாடுகள் பூட்டிய கூண்டு வண்டிக்காக  வழி மேல் விழி வைத்து காத்துக்கிடக்கும் காட்சியை நினைத்தாலே மகிழ்ச்சி தாங்கமுடிவதில்லை! வண்டியிலிருந்து குதித்து பட்டாளத்தின் ஜோதியில் கலக்கும் அந்த நொடி......!!!
வீடு வந்து சேர்ந்தவுடன் அடுத்த நிகழ்ச்சிக்குத் தயாராகி விடுவோம்!
பாப்பாகுளக் குளியல்தான்......
கிளம்பும் போது ஆஞ்சிம்மாவின் படு பயங்கர எச்சரிக்கை. "பிள்ளைகளா கொளத்தில குளிக்கையில ஒண்ணுக்குப்போவப்புடாது என்னா பிரியுதா? அப்புடி ஆராச்சும் செஞ்சிங்கண்ணு வச்சுகுங்க...... நடுத்தீர்வ அண்ணைக்கி சாமி தண்ணியையும் ஒண்ணுக்கையும் ஒங்கள பிரிச்சி எடுக்கச் சொல்லுவாரு எடுக்க முடியுமா....? ரோசன பண்ணுங்க...... பிரிக்க முடியாத பிள்ளைவளயெல்லாம் அடி நரவத்துக்கு புடிச்சிகிட்டு போறத்துக்கு அங்கன லூசி பிசாசு எச்சி ஒளுவ தயாரா நிண்ணுகிட்டு கெடக்கும். நாஞ்சொல்றது பிரியுதா?
சாமிக்கி பயப்புட்டோமோ இல்லியோ லூசிப்பிசாசுக்கு பயந்தே சந்துக்கு பொயிட்டு வந்துருவோம் வயல்களும் சந்துகளுமே அத்தியாவசியத் தேவைகளுக்கு பயன்பட்ட காலமது!
கோடையில் தண்ணீர் கஷ்டம்......  மருதங்குட்டையின் தண்ணீர் குடிப்பதற்கு மட்டுமே. லேசான காப்பித்தண்ணி கலர்தான்......... இருந்தாலும் குடிப்பதற்கு கொளத்து வாசனையுடன்  அது ஒரு மாதிரி ருசியாக இருக்கும். அதற்குத் தனிக் காவல். பாப்பாகொளம் தண்ணி குளிப்பதற்கும் மற்றும் பொழங்குவதற்கும்....... இதற்கும் ஒரு வெட்டியான் உண்டு. வெள்ளையன் நமக்குத் தெரிந்த பார்ட்டிதான். கொளத்தில் எங்கள் தலையைகண்டவுடன்" எப்ப வந்திங்க சின்னாச்சி? சின்ன பிள்ள வளந்து போயில்ல கெடக்காரு"என்று குசல விசாரணையுடன் தொடங்கிய சம்பாஷணை " சரி பிள்ளிவளா தண்ணிய அலம்பாம வெள்ளன கரையேறுங்க." என்ற அறிவுறையில் போய் நிற்கும்.
பூம் பூம் மாடாட்டம் அவருக்கு தலயாட்டிவிட்டு அவர் ஒரு எட்டு போவதற்குள் பித்தளை கொடமெல்லாம் தலை கீழே தண்ணீருக்குள் கவிழ்க்கப்பட்டு  நீச்சல் கருவிகளாக மாறிவிடும். ஒடம்பை அதில் ஒதஞ்சிகிட்டு ரெண்டு காலாலயும் தம்பட்டம் போட ஆரம்பிச்சா ஊரே அதிந்து போவும். இந்த சின்ன பொம்பள பிள்ளக குளிக்க கட்டியிருக்க பாவாடையில யாரு பெரிய பலூன் பண்ணுராங்கங்கிற போட்டியில கெடக்குங்க..... கோரையில கெடக்குற குஞ்சு குளுவான் மீனெல்லாம் இதுகளோட சேந்துகிட்டு சுருக்குசுருக்குண்ணு ஆளுகள கடிச்சிகிட்டு நீந்தும்!
அம்மாச்சி தொறையில பெரிய மாமா சமயத்துல வித்த காட்டுவாங்க. ரெண்டு கையையும் கும்புட்ட மேனிக்கி வச்சுகிட்டு அப்புடியே அந்த கரைக்கி மெதந்து கிட்டயே போவாங்க. திரும்பி வர்ரப்ப அங்க கெடக்க அல்லிப்பூ ஒண்ண பறிச்சி கும்புட்ட கைகளுக்கு நடுவுல வச்சுகுவாங்க. தொறைக்கி வந்துட்டாங்கண்ணா இங்கேருந்து கைத்தட்டல்தான்.... பிகிலுதான்.... சத்தம் தாங்க முடியாத வெட்டியான்  " இப்ப கரையேறப்போறிங்களா இல்ல பெரிய பிள்ளைக்கிட்ட சொல்லுட்டுமா..... நானும் பாத்துகிட்டுதான் இருக்கேன் இந்த தெக்குத்தெரு புள்ளிவள அம்ச அடக்கவே பிள்ள(முடியில)...... எதுக்கும் கட்டுப்பட மாட்டேங்குதுவ..... ரொம்ப சத்தமா பக்கத்துத் தொறைக்கெல்லாம்  கேக்குறமாதிரி கத்துவாரு. "நான் பாரபட்சம் இல்லாம வேல பாக்குறேண்ணு" மத்த தொறைக்கெல்லாம் தெரியருத்துக்குத்தான் இந்த சத்தம்போடுறாருண்ணு எங்குளுக்குத்தெரியும்!! ராத்திரி சாப்பாடு வாங்க வரும் போது அவுருக்கு பதனமா பண்டங்ககள எடுத்து எடுத்து வைக்கறது  நாங்கள்ள?!
கொள்ளிடம் ஊர்லருந்து கொஞ்ச தூரத்துல இரு ந்தாலும் பெரிய ஆளுக போவாட்டி எங்கள அனுப்பமாட்டாங்க. ஆனா அவுங்களோட போறதுக்கு சும்மா கெடக்கலாம். ரொம்ப கண்டிஷன் பண்ணுவாங்க. தண்ணியில் ஒக்காரரத்துக்குள்ளே கறையேறு கரையேறுண்ணு சத்தம் போடுவாங்க... இந்த தொல்லைக்கு ஜாலியா பாப்பா கொளத்துலயே மணிக்கணக்கா ஆட்டம் போடலாம்!
இந்த வயசிலயும் பாப்பா கொளத்த பாத்தா எறங்குணுமுண்ணு ஆசையாத்தான் இருக்கு.... ஆனா பணம் பண்ண ஆசைப்பட்ட பஞ்சாயத்து பாப்பா கொளத்த பாப்பாவெல்லாம் குளிக்காத  கொளமா மாத்திட்டாங்க! அழுவிப்போன காய்கறி இன்ன பிற மீனுக்குகந்த மிதப்புகள் அதை மீன் குளமாய் மாற்றி விட்டிருக்கிறது! இந்த நம்ம கொளத்த பழைய அழகுக்கு எதாவது ஒரு நல்ல உள்ளம் செய்யாமயா போப்போவுது!
"கும்பலோடு குதியாளம் ரொம்பதான் போட்டிருக்கிறாய் இதோ பிடி சாபம்!" என எந்த கடவுள்  விட்டதென்று எனக்குத் தெரியவில்லை. அந்த அப்பார்மெண்டின் நான்கு வீடுகளின்  நீச்சல் குளம் என்னுடைய ஏகாதிபத்தியமாய் இருந்தது! சேறு இல்லை சகதி இல்லை. குஞ்சு குளுவான் மீன்களின் கடி இல்லை. தினப்படிக்கு சுத்தம் செய்யப்பட்டு குளோரின் போடப்பட்டு மகாராணி குளியலுக்கு   அது எக்கணமும் தயார் நிலையில் இருந்தது.  அந்த சிங்கப்பூரின் நான்கு வீடுகளில் வேலையில்லாமல் வெட்டியாய் இருந்தது நான் ஒருத்தி மட்டுமே! மாமாவைப்போல கை கும்பிட்டு தண்ணீரில் மிதக்கிறேன். தட்டவும் ஆளில்லை, அங்கே திட்டவும் யாருமில்லை!
பழைய மாணவர் சங்கம் பொதுவாக எல்லாக்கல்லூரிகளிலும் செயல்படும் ஒன்றுதான். ஆனால் ஒரு வருடத்தை சார்ந்த பழையமாணவர்கள் வருடா வருடம் கூடுவதென்பது கொஞ்சம் வருடங்களுக்கு நடக்கக்கூடும்.. பின் இந்தக் கூடல் அப்படியே விட்டுப்போய் பொது மாணவர் சங்க சந்திப்புகளில் சங்கமாகிவிடும்.ஆனால் இந்த 1965ஐச் சேர்ந்த எஞ்சினியர் மாணவர்களோ நாங்களா கொக்கா  என ஒரு சவால் விட்டுக்கொண்டு எழுபதைத்தாண்டிய இளைஞர்களாக வருடா வருடம் இரண்டு நாட்களுக்கு குடும்பத்துடன் கூடித்தான் மகிழ்கின்றனர்! இந்த வருட சந்திப்பு மைசுரு. அங்கே வசிக்கும்  நம் பழைய மாணவரும் அவர் குடும்பத்தின் மொத்த பேரும் வரிந்து கட்டிக்கொண்டு அந்த இரண்டு நாளை எங்களுக்கு சுகப்பொழுதாக ஆக்கித்
தந்தனர். முதல் நாள் தலைக்காடு செல்வதாகத்திட்டம். காவேரியில் குளிக்கலாம் எனச் சொல்லியிருந்தார்கள். அகண்டு போய் சிலு சிலுவென்று நின்ற காவேரிக்கரையை அடைந்த அந்த நொடியில் செருப்பையும் துண்டையும் கரையில் விட்டெறிந்து விட்டு நான் உள்ளே புகுந்துவிட்டேன். சிறிது நேர ஆசுவாசத்துக்குப்பின்னால் கரையைப் பார்க்கிறேன். அத்தனை பெண்களும் காவேரியையே வேடிக்கைப்பர்த்துக் கொண்டிருந்தனர் . சுற்று முற்றும் தண்ணீருக்குள் பார்க்கிறேன்
ஐந்தாறு ஆண்களே பிரதிநிதிகளாய் தண்ணீருக்குள் இறங்கியிருந்தனர்.

ஒரே ஒரு ஒற்றைப்பெண்..... என்கூட இறங்கிருந்தால் நான் காட்சிப்பொருளாய் மாறியிருக்க மாட்டேனோ? அதற்கு மேல் இந்த சிலு சிலு தண்ணியில் நின்று கொண்டு பச்சாதாபப்பட்டுக்கொண்டிருக்க  நேரமில்லாமல் "தலைக்கு மேலே போனபின் சாண் போனாலென்ன மொழம் போனாலென்ன?" என என் காரியங்களில் கண்ணானேன். இந்த வயசுல "தண்ணிக்குள்ள நீந்துறது  நரம்புகள தளத்தி வுட்டுடும்" என்ற  யாரோ ஒருவரின் தத்துவ சத்தம்  இந்த பாப்பா கொளத்துக்காரியின் காதில் விழவேயில்லை!

Saturday, 18 June 2016

துளி கற்கள் காவலுக்கு மதில் நீண்ட அரணோ

பஞ்ச தந்திரம் என்ற ஒரு படத்தில் ஒரு கிரனைட் வியாபாரி தன்னுடைய கிரனைட் கற்களை வைரத்தோடு ஒப்பிட்டு பேசுகையில் " பெத்த கல்லு சின்ன லாபம் சின்ன கல்லு பெத்த லாபம்" என்று வருத்தமாகச் சொல்லுவார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முழுவதும்  நம் இந்தியர் ஒவ்வொருவர் வாயிலும் நுழைந்து வந்த ஒரே வார்த்தை கோஹினூர் வைரமாகத்தான் இரு ந்திருக்க வேண்டும். அரசு தரப்பில் அது ஆங்கிலேயருக்கு பஞ்சாப் மன்னன் துலீப் சிங் சீக்கிய சண்டையில் ஆங்கிலேயர் அவருக்கு உதவி செய்ததற்காக அளிக்கப்பட்டது என்று வாதம் செய்ய பல தரபட்டவரும் இல்லை இல்லை  இது இந்தியாவிலிருந்து திருடப்பட்டது என்று கூற நடுவில் பாகிஸ்தானும் ஆப்கனிஸ்தானும் புகுந்து கோஹினூர் வைரம் எங்களது அல்லவா என்று வாதிட  ஆசிரியருக்கு கடிதங்கள் தூள் பறக்க பத்திரிக்கை வாசிப்பே கோலாகலமாகத்தான் இருந்தது!
இந்த வைரம் ஒருபுறம் கிடக்கட்டும்...... ஆங்கிலேயர்கள் இதைவிட பொடிசான பெரிய மதிப்பு ஒன்றும் இல்லாத கற்களை தம் வசம் ஆக்கி இந்த ஒத்தை வைரத்தின் மதிப்பை தூக்கி எறியக்கூட அளவுக்கு பணம் பண்ணிய கில்லாடிகள் என்ற விஷயம் இந்தியராகிய நமக்குத் தெரியுமா?
இந்த நெடிது நீண்டு செல்லும் கதையை உங்களோடு நான் பகிர்ந்தே ஆகவேண்டும்!
பழங்கால ரோம அரசு தன்னுடைய வீரர்களுக்கு உப்பைத்தான் சம்பளமாகக் கொடுத்தது என நம்பப்படுகிறது. சேலரி என்ற ஆங்கில வார்த்தையே சால்ட் என்ற வார்த்தையிலிருந்துதான் வந்ததாகவும் கூறப்படுகிறது. "நீங்கள் உலகின் உப்பாயிருக்கிறீர்கள்." என்கிறார் யேசு. மனிதனுக்கு உப்பு அவ்வளவு அத்தியாவசியமான ஒன்று. "உப்பில்லாப்பண்டம் குப்பையிலே" என்கிறது நம் சொந்த மொழி. அதே மொழி "உப்பிட்டவரை உள்ளளவும் நினை." எனவும் வலியுறுத்துகிறது.
ஏதோ கதை சொல்லப்போய் உப்பு கதை சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
நான் சொல்லப்போகும் சின்ன கற்களின் கதைக்கு இது ஒரு சின்ன முகவுரையாகக் கொள்வோம்! 
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வியாபாரம் நிமித்தமே இந்தியாவிற்குள் நுழைந்தது. ஆனால் இந்தியாவின் பல்வேறு சிற்றறசுகளின் பூசல் அதற்கு சாதகமாயிருக்க சிறிது காலத்திலேயே ஒரு அரசை நிறுவும் அளவிற்கு பலம் பெற்றது. வட இந்தியாவின் பல பகுதிகளை அது கைப்பற்ற அங்கிருந்த இயற்கை வளங்களும் அதனுடையதாயிற்று. குஜராத்தின்உப்புப்படுகைகளுக்கும் வங்காளம் மற்றும் ஒரிசாவின் உப்பு வயல்களுக்கும் அவர்கள் ஏக போக சொந்தக்காரராய் உருக்கொண்டனர். ஆஹா அருமையான வருமானம் தரக்கூடிய ஒரு வளம் நம் கைவசம், ஏனென்றால் இந்தியாவில் பணக்காரனது சாப்பாட்டில் உப்பு அவசியம். ஏழை சாப்பாட்டிலோ அது மிக மிக அவசியம்.பழைய சாதத்தில ஒரு கல்லு உப்பப்போட்டு ஒரு மொளவாயையும் சின்ன வெங்காயத்தையும் கடிச்சிக்கிட்டு சாப்பாட்ட முடிக்கிற நாடு இது! உப்பில்லாத சமாச்சாரமே இங்கு இல்லை என உணர்ந்தறிந்த  அவர்கள் உப்பின் மேல்வரி போட ஆரம்பித்தார்கள். அது வரையிலும் குடும்ப பட்ஜெட்டை உதைக்காமல் வெகு சாதுவாய் அரவம் தெறியாது வாழ்ந்த உப்பு ஆங்கிலேயர் கையில் விஸ்வ ரூபம் எடுத்து ஒரு சாதாரண தொழிலாளியின் இரண்டு மாத சம்பளத்தை விழுங்கி ஏப்பம் விடுமளவுக்கு திமிரெடுத்து நின்றது! வரியைத்தாங்க முடியாத மக்கள்  சுங்க வரி இல்லாத பகுதிகள் வழியே உப்பை பதுக்கி எடுத்து செல்ல ஆரம்பித்தனர். ஆங்கில கில்லாடிகள் இதற்கும் ஒரு வழியை  கண்டே பிடித்தார்கள்!
பொதுவாக சுவர்கள் எழுப்பபடுவது  ஒரு நாட்டின் பாதுகாப்புக்காகத்தான்.
உலக அதிசயங்களின் ஒன்றான 8850 கிலோ மீட்டர் நீளமுள்ள சீனச் சுவர் மங்கோலியர் தாக்குதலிருந்து சீனாவைப் பாதுகாத்துக்கொள்ள சீன அரசர்களால் எழுப்பப்பட்டது. அதே போல இங்கிலாந்து ரோமையர்கள் வசம் இருந்த போது அட்ரியன் சுவர் எனப்படும் 117 கிலோ மீட்டர் சுவர்வட ஸ்காட்லாந்தில் வாழ்ந்த பிக்ட் எனப்படும் இனத்தாரின் கொடூர தாக்குதலினின்று பாதுகாத்துக்கொள்ள வேண்டி வடகடலுக்கும் ஐரிஷ் கடலுக்கும்   இடையே எழுப்பப்பட்டது.. 140 கிலோமீட்டர் நீள பெர்லின் சுவரைப்பற்றி நாம் அறிவோம். கம்யூனிஸ்டு கிழக்கு ஜெர்மனியில் வாழும் மக்கள் மேற்கு ஜெர்மனிக்கு வராதிருக்க அது எழுப்பப்பட்டது.1989ல் அது இடிக்கப்பட்டது.
ஆனால் பாமர மக்களது உணவின் ஜீவாதாரமான உப்பின் ஒரு கல் கூட வரி கட்டாமல் வெளியே செல்ல முடியாது செல்லவும்கூடாது என்ற ஒரே நோக்குடன் நம் இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 4000 கிலோ மீட்டர் நீளமுள்ள சுவர் ஒன்றை எழுப்பியதை நாம் அறிவோமா?! முதலில் முள்வேலியாய் இருந்த அந்த தடுப்பு நாளடைவில் நெருங்கிய மரங்கள் நடப்பட்டு யாரும் நுழைந்து செல்ல முடியாத அளவுக்கு ஒரு மர அரணாக 12அடி உயர்ந்து உப்பை காவல் காத்தது!
இந்த அரக்கத்தனமான வரி மக்களின் பொருளாதாரத்தை எந்த அளவிற்குப்பாதித்தது என்பதற்கு இங்கு ஒரு சிறிய உதாரணம். செல்வம் செழித்த நாடான  இங்கிலாந்தில் ஒரு மணங்கு(37.5 கிலோ) உப்பு 1.5 பவுண்டுக்கு  விற்றபோது இந்தியாவில் ஒரு மணங்கு 200 பவுண்டுக்கு விற்கப்பட்டது!!
உப்பினால் கிழக்கிந்திய கம்பெனிக்கு அதன் வருமானத்தில் 10%மாய் உப்பித்தான் நின்றது. சாப்பாட்டில் உப்பு இல்லாத்தால் உடம்பில் அயோடின் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாய் 15 மில்லியன் மக்கள் இறந்து போயினர். அதைத்தொடர்ந்து வந்த காலரா நோய்க்கு பலியானவர் எண்ணிக்கை 23 மில்லியனைத்தாண்டியது.
தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்  ஆக்கிரமிப்பிற்கு முன்னமே உப்பின் மேல் சுங்க முறை வரி நிறுத்தப்பட்டதே தவிர உற்பத்தி இடத்திலேயே அதன் மேல் வரி விதிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாகிரகம்,
தண்டியிலிருந்து தொடங்கிய பாத யாத்திரை இந்த வரி விலக்கல் வேண்டியே நடந்தது.
உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் இந்த உப்பு சுவற்றின் சில பகுதிகள் இன்னமும் காணப்படுகின்றன.
பலவேறு நாடுகள் உலகின் பல பலகீனமான நாடுகளை ஆக்கிரமித்திருக்கின்றனர். ஆயினும் இப்படிப்பட்ட கொடூரமான வரியை மக்கள் இரத்தத்தை  உறிஞ்சும் ஒரு வரியை உயர்ந்த கொள்கைகளை உடையதாக தன்னை எடை போட்டுக்கொள்ளும்  ஒரு நாடு எப்படி செய்தது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது!
  கோஹினூர் வைரத்திற்காக வரிந்து கட்டி சண்டைக்கு நிற்கும் இந்தியர் நாம் நமது சொந்த உப்புக்கற்களுக்கு 4000 கிலோ மீட்டருக்கு உயிர் வேலி எழுப்பி அரக்க வரி விதித்து லட்சக்கணக்கான இந்தியரின் உயிரை உறிஞ்சிய  அந்த நாட்டிடம் என்ன நியாயம் கோருவோம்? என்ன நஷ்ட ஈடு கேட்போம்?!

Saturday, 11 June 2016

குடித்தனக்காரரும் எழுதப்படாத சட்டங்களும்

1970களின் கடை வருடங்கள்.......... சரி...... நீச்சல் போட்டுத்தான் பார்ப்போமே என்ற துணிச்சலுடன்  கல்கத்தாவின் நல்ல வேலையை விட்டு விட்டு மெட்ராசுக்கு ஒரு வழியாய் வந்து சேர்ந்தாயிற்று. வீடு பார்க்கும் படலம்.
"கல்கத்தாவுல எப்டிண்ணு எங்களுக்குத்தெரியாது. ஆனா மெட்ராஸ் வீட்டுக்காரங்க கில்லாடிங்க....... எழுதி வாங்கறது கொஞ்சம் ஆனா எழுதாத சட்டங்கள் கை நிறையா வச்சிருப்பாங்க. ஈபி காரன் மீட்டருக்கு ஒண்ணு போட்டாண்ணா இவுங்க ரெண்டாக்கிதான் ஒனக்குக்கணக்கு சொல்லுவாங்க. பொது லைட்டால்லாம் ஒம்மீட்டர்லதான் ஜாயின் பண்ணியிருப்பாங்க. அப்படி அவுங்க கை வசம் இருந்தா ஒம்பது மணிக்கெலாம் நிறுத்திபுடுவோங்கண்ணு கண்டஷனா சொல்லிருவாங்க. பொது கேட்டும் அந்த கணக்குலதான். பத்து மணிக்கி மேல வந்தா தெருவுலதான் நிக்கிணும். எண்னைக்காவது லேட்டா வருவிங்கண்ணு தெரிஞ்சா அவுங்கள தாஜா பண்ணி முன்னாடியே சொல்லி வச்சிரணும். விருந்தாளிக எண்ணைக்கி போவாங்கண்ணு கண்ணு கொத்தி பாம்பா கணக்கு வச்சிருப்பாங்க. அவுங்க போன ஓடனே விருந்தாளிக எத்தன பேரு வரலாம் எத்தன நாளு தங்கலாம்ணு வரையறுத்து சொல்லிருவாங்க.......அதனால எழுதின பேப்பரு முட்டும் போதும்ணு கணக்கு பண்ணிடாதே. எழுதாத சட்டங்கள் அவுங்க கைவசம்... நெறயா அட்ஜஸ்ட்
பண்ண வேண்டியிருக்கும் ஜாக்கிறத....... ஜாக்கிறத......" மெட்ராஸ் நண்பர்கள் ஒரு முகமாய் மொழிந்தனர்!
பெரிய அக்கா பம்மலில் சொந்த வீடு கட்டும் வரை இந்த மெட்ராஸ் குடியிருப்புகளில் 12 வீடுகள் மாறி பழம் தின்று கொட்டை போட்ட கில்லாடி!  "அம்மா நேர்மையாத்தான் நான் எல்லாம் செய்யிறேன் ஆனா ஒண்ணுமில்லாததுக்கெலாம் வம்புக்கு வர்ராங்களேண்ணு  ஆத்திரப்படாதே. மெட்ராஸ் பாஷையில சொல்லுணுமுண்ணா நாம அவுங்களோட 'அட்ஜீஸ்ட் பண்ணிகிணுத்தான்' போகுணும்!
அடுக்கு மாடி கட்டிடங்கள் அறியாத அந்த எழுபதுகளில் கீழே வீட்டுக்காரர் மேலே குடித்தனக்காரர் என்பதுதான் முறையாய் இருந்தது. "அம்மாவுக்கு 'அரிமையான' வூடு ஒண்ணு பாத்துகுடுக்குறது என் 'பொர்ப்பு' சார்" எனப் 'பொர்ப்'பேற்றார் ஒரு ப்ரோக்கர்! காலையில் இட்டிலியை முழுங்கிவிட்டு சாந்தோம் ஏரியாவின்(பிள்ளைகள் இருவரின் பள்ளி இந்த ஏரியாதான்) சந்து பொந்தெல்லாம் நுழைந்து வேர்த்து விறுவிறுத்துப்போய் அம்மா தாயே என்று வீட்டுக்கதவுகளைத் தட்டி "ப்ராஃமின்ஸ்க்குதான் வீடு" என்ற அகராதியான பதில் "கெவிர்மெண்ட்டு வேலயா?"  வாடகையை உறுதிப்படுத்தும் கேள்வி "சைவமா இருந்தா குடுக்க ரெடியா இருக்கோம்மா" பவ்யமான சம்பாஷணை இன்ன பல பதில்களை எதிர்கொண்டு அன்றைய பொழுதில் இளைத்துபோனபின்  தலையை சொறிந்து நின்ற ப்ரோக்கர்  நோக்கம் அறியாமல் திகைத்து நின்ற கல்கத்தா வாசியான நான் பின்னர் புரிந்து அவருடைய தினப்படி கோட்டாவை கையில் திணித்தவுடன் " நாளிக்கி வெடிக்காலம்பரையே பூட்டு வந்துடலாம்மா.... ஒரு ஷோக்கான எட்த்துக்கு அம்மாவ இட்டுகிணு போப்போறேன்." வெகு குஷியோடு அவர் அன்றைய  பாட்டிலுக்கு உற்சாகமாகிவிடுவார்! இப்படி இவர் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது அலுத்துப்போய் "வேற ஒரு ப்ரோக்கர் வர்ரண்ணு இருக்காருப்பா." சும்மா ஒரு போடு போட்டேன்
"......வேற ஆள மாத்றது அம்மாவோட சவுரியம்....... ஆனா நான் விசுவாசிம்மா .. பால் மாறமாட்டன்....... வாய்க்கையில துட்டாம்மா பெர்சு.....? மனுசனுக்கு வார்த்தான் பெர்சு.....  நாளிக்கி புச்சா கட்ன வூட்டுக்கு ஒன்னிய இட்டுகிணு போலாம்ணு ப்ளான் பண்ணிரிக்கேன்..... நீ இன்னாண்ணா...... அந்த வூட்டபாத்தண்ணு வச்சிக்க... அசந்து பூடுவ நீயி..........!
புது வீடுதான்.. பெரிய பதவியிலிருந்து ரிட்டையர் ஆனதை ஈடு கட்டவே மேலே கட்டியிருந்தார்கள். 11 மாதத்திற்கு ஒப்பந்தம் 10 மாத அட்வான்ஸ். மாதம் பிறந்ததும் 5ம் தேதிக்குள் வாடகைப்பணத்தை செலுத்திவிட வேண்டும்கையெழுத்துப்போட்டுவிட்டு சாமான்களை  ஓரளவு சரிப்படுத்திய அன்றைய இரவு  அசந்த தூக்கம்! தூக்கத்தின் நடுவில் எங்கோ மணியடிக்கும் சத்தம்... நமக்கில்லை என்று பிரண்டு குப்புற படுத்தாலும் அது நின்ற பாடாகத்தெரியவில்லை.வாரி சுருட்டி எழுந்து எட்டிப்பார்க்கிறேன்... வீட்டுக்காரம்மா... ஆகா எங்கே என்ன தப்பாகிவிட்டது எனப்புரியாமல் இரு ந்தது இருக்கட்டும் என்று ப்ரைட்டாக ஒரு குட்மார்னிங் வைத்தேன்.
" அம்மா ரொம்ப அசதியா இருப்பிங்க.. காலைக்கு ஒண்ணும் செய்யாதேசட்னி சாம்பார் துணை நிற்க சூடான இட்லிகளின் தூக்க முடியாத பாத்திரத்தோடு அவர்கள் புன்சிரிப்பு! உருகிப்போனது மனசு!
அசந்து போன வாடகை வீட்டாருக்கு காலை சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பது இந்த வீட்டின் எழுதப்படாத ஒரு சட்டமோ?!
இந்த மாதிரியான எழுதப்படாத சட்டங்கள்  நிறைய..! நிறையவே!!
வீட்டை சுற்றியுள்ள மரங்களில் தேங்காய் பறிக்கையில் முதல் பங்கு எனதானது! கீழே ஆப்பம் சுட்டால் தேங்காய்ப்பால் சகிதம் அது மேலே வந்தது!
அப்போதெல்லாம் எல்லா வீடுகளிலும் டிவி இருப்பது அரிது...தூர் தர்ஷன் ஞாயிறு  மாலை காட்டும் ஒத்தை படத்திற்கு தமிழ் நாடே ஏங்கிப் போய் இன்று யார் வீட்டிற்குப்போய் ஓசியில் படம் பார்க்கலாம் என்ற யோசனையில் இருந்த நாட்கள் அது. ஞாயிறு பிறக்குமுன்னரே "கீழே வந்து விடுங்கள் சேர்ந்து படம் பார்க்கலாம்." என்ற அழைப்பு வந்து விட்டது எங்களுக்கு!
 சேர்ந்து படம் பார்த்த பல நாட்கள் சேர்ந்த கூட்டான் சோறாய் ஆகிப்போனது இன்னொரு சுகமான கிளைக்கதை!
இப்படி ஆரம்பித்த இரு வீட்டு பிள்ளைகளின் அந்நியோன்யம் இன்றும் பல்கிப்பெருகி நிற்பதுவும் இன்னொரு சுகானுபவந்தான்!
சொந்தமாய் டிவி வாங்கியவுடன் சேர்ந்து பார்த்த அந்த ஞாயிறுகளுக்காக ரெண்டு பக்க மனசுகளும் ஏங்கி நின்றது உண்மையிலும் உண்மை!
ஏழு பெண்களையும் ஒரு பையனையும் கொண்ட அங்கிள் குடும்பத்தின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நான் எட்டாவது பெண்ணாகவே அறிமுகப்படுத்தப்பட்டேன்!
ஞாயிறு மதிய தூக்கத்திற்குப்பிறகு எங்கள் வீடே யேசு பாடல்களால் ரொம்பிப்போய் ததும்பி நிற்கும்! அதுவும் கறுப்பின பாடகர்களின் உத்வேகமான படைப்புகளை ஒரு வாரத்திற்கு உடைந்த ரெக்கார்டு போல ஒருத்தர் மாற்றி ஒருவர் முதல் இரண்டு வரிகளை மனப்பாடமாக பாடிக்கொண்டு கிடப்போம்.
அங்கிள் ஹெ எச் எம் வியில்(( His Masters Voice the gramophone record company) பெரிய பதவியில் இருந்தார்கள். அந்த நாட்களில் தமிழ் கிறிஸ்துவ பாடல்களை
முதன் முதலாக ரெக்கார்டில் பதிவு செய்ய அவர்கள் எடுத்த முயற்சி மிகப்பெரியது! அவர்கள் உயிர் நாடி பாட்டு.... பாட்டு.... பாட்டு மட்டுமே!!
டானி கே என்ற பெரிய ஒரு அமெரிக்க சிரிப்பு நடிகர் குழந்தைகளுக்கு கதை சொல்லும் ஒரு ரெக்கார்ட் அங்கிளிடம் இருந்தது. அதை அவர்கள் போட்ட நாளிலிருந்து ஆன் அவர்களுக்குப்பெரும் விசிறி! வருடங்கள் பலப்பல கடந்தும் அந்தக் கதைகளை அதே டானி கேயின் பாவத்தொடு சொல்ல வல்லது அந்தப்பெண்!
ஆகமன கால முதல் ஞாயிறு மாலையே எங்கள் வீட்டில் கிறிஸ்மஸ் தொடங்கிவிடும்! கிறிஸ்மஸ் பாடல்களில் தனிப்பாடகர்கள் மற்றும் குழுப்பாடகர்களின் அரிய குரல்களும் வாத்திய இசைகளும் ஆகா நாம் இப்படிப்பாடமாட்டோமா என ஏங்கவைக்கும்!
கிறிஸ்மஸ் அன்று இரவு அங்கிளும் அவர்களது மகன் மருமகன்களும் கோட் சூட் போட்டுக்கொண்டு  கோயிலுக்குக் கிளம்பும் பாணியை நாங்கள் நின்று ரசித்துள்ளோம்!
கிறிஸ்மஸ்- இரு குடும்பமும் சேரும் பெருவிழா! எங்கள் பெரிய குடும்பத்தின் திறமைகளும் அங்கிள் குடும்பத்தின் அபரிமித ஆற்றல்களும் சேர்ந்து பாட்டுகளாக நாடகங்களாக விளையாட்டுப்போட்டிகளாக உருக்கொண்டு அந்த மூன்று மணிப்பொழுதை வெகு சுகமான நேரமாய் ஆக்கிவிடும்!அருமையான இரவு உணவும் இந்த மகிழ்வில் தொற்றிக்கொள்ளும்!
தற்பெருமை பேசாத ஒரு மாமனிதர் தங்கையா அங்கிள். இவர்கள் போட்டோ ஆல்பத்தில் இருப்பவர்களைப்பார்த்தால் நாம் அசந்து போய்விடுவோம்! காமராஜ் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் எம்ஜியார் ஜெயலலிதா சரோஜா தேவி டி.எம் சவுந்தரராஜன் பி. சுசீலா சித்தார் மேதை பண்டிட் ரவி சங்கர் கிரிக்கெட் வீரர் பரூக் எஞ்சினியர் என பட்டியல் அனுமார் வாலாகத்தான் நீண்டு கிடக்கிறது!!
பெரிய பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஆகும் பலர் "ஆகா எவ்வளவு அதிகாரம் நம் கையில்கிடந்தது,எவ்வளவு பேர் என் கண்ணசைவுக்குக்காத்துக்கிடந்தனர் என சரித்திரம் பேசிபேசி ஏங்குபவர்களாக வலி கொண்டு நிற்கையில் அங்கிள் அதை அழகான ஒரு அனுபவமாய் ஆக்கிக் கொண்டார்கள். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வெளி நாட்டிலிருந்தும் அவர்களுக்கு அழைப்புகள்
வந்தாலும் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என உணர்ந்த அவர்கள் கோயில் உண்டு அங்குள்ள ஆர்கனை இசைக்கும் திறன் உண்டு அருகிலே மதி மிக்க துணை உண்டு மக்களின் அன்பு உண்டு என வாழ்வை சுலமாக்கிக்கொண்ட தத்துவர் அவர்கள்மதிய சாப்பாடு முடிந்ததும் அங்கிளும் ஆண்ட்டி ஸ்டெல்லாவும் தினப்படி தள்ளு வண்டியில் வேர்க்கடலை கொண்டு வரும் பையனின் வரவுக்கு காத்து நிற்கும் அழகாகட்டும்  கடலை போட்டபின் வெற்றிலை மெல்லும் நேரமாகட்டும் அவர்கள் சாதாரண வாழ்வையும் வெற்றி கண்ட வாழ்வையும் ஒரே தராசிலேயே நிற்க வைத்து மகிழ்வு கண்ட உயரிய மனித இனத்தை சார்ந்தவர்கள் என நமக்கு அறுதியிட்டுக் கூறுகிறது!
2008ல் அங்கிளுக்கு 92 வயது. முதுமை நோய்.. உடம்பு படுத்துவிட்டது. நினைவு தப்புகிறது, பேசும் மொழியில் தெளிவில்லை. ஆயினும் அவர்கள் விரல்கள் மட்டும் ஏன் தப்பாமல் தாளமிடுகின்றன? "எது போனாலும் கவலைப்படாதே நான் உன் உள்ளிருந்து இசைத்துக்கொண்டேதான் இருப்பேன் நீ உள்ளளவும் நானும் உன்னோடே" என அந்த தேவ இசை அவர்களில் இணைந்து பிணைந்து ஒலித்துக்கொண்டே இருந்த ஒரே காரணந்தான்.
அவர்கள் எங்களுக்குத்தந்த மகிழ்வு வலுப்பெற வேண்டும் பலப்பட வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடே அந்த வீட்டின் ஒரு பெண்ணை எங்களோடு  இணைத்துக்கொண்டோம். எதிர்கால சந்ததியினர் இந்த மதிப்பீடுகளை முன் வைத்தே வாழ அவர்கள் என்றும் வழிகாட்டிக்கொண்டே இருப்பார்கள் என்பது  எங்கள் உறுதி!

ஜூன் 5ம் நாள் தங்கையாஅங்கிளின் நூறாவது பிறந்த நாளை ஒட்டி இந்து நாளிழதில் ஸ்டெல்லா ஆண்ட்டி தங்கையாஅங்கிளின் போட்டோவை பார்த்த அந்த கணத்தில் மடை திறந்த வெள்ளமாய் பாய்ந்த நினைவுகளின் சங்கமமே இத்தொகுப்பு!