பஞ்ச தந்திரம் என்ற ஒரு படத்தில் ஒரு கிரனைட் வியாபாரி தன்னுடைய கிரனைட்
கற்களை வைரத்தோடு ஒப்பிட்டு பேசுகையில் " பெத்த கல்லு சின்ன லாபம் சின்ன கல்லு
பெத்த லாபம்" என்று வருத்தமாகச் சொல்லுவார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முழுவதும் நம் இந்தியர் ஒவ்வொருவர் வாயிலும் நுழைந்து வந்த
ஒரே வார்த்தை கோஹினூர் வைரமாகத்தான் இரு ந்திருக்க வேண்டும். அரசு தரப்பில் அது ஆங்கிலேயருக்கு
பஞ்சாப் மன்னன் துலீப் சிங் சீக்கிய சண்டையில் ஆங்கிலேயர் அவருக்கு உதவி செய்ததற்காக
அளிக்கப்பட்டது என்று வாதம் செய்ய பல தரபட்டவரும் இல்லை இல்லை இது இந்தியாவிலிருந்து திருடப்பட்டது என்று கூற
நடுவில் பாகிஸ்தானும் ஆப்கனிஸ்தானும் புகுந்து கோஹினூர் வைரம் எங்களது அல்லவா என்று
வாதிட ஆசிரியருக்கு கடிதங்கள் தூள் பறக்க பத்திரிக்கை
வாசிப்பே கோலாகலமாகத்தான் இருந்தது!
இந்த வைரம் ஒருபுறம் கிடக்கட்டும்...... ஆங்கிலேயர்கள் இதைவிட பொடிசான
பெரிய மதிப்பு ஒன்றும் இல்லாத கற்களை தம் வசம் ஆக்கி இந்த ஒத்தை வைரத்தின் மதிப்பை
தூக்கி எறியக்கூட அளவுக்கு பணம் பண்ணிய கில்லாடிகள் என்ற விஷயம் இந்தியராகிய நமக்குத்
தெரியுமா?
இந்த நெடிது நீண்டு செல்லும் கதையை உங்களோடு நான் பகிர்ந்தே ஆகவேண்டும்!
பழங்கால ரோம அரசு தன்னுடைய வீரர்களுக்கு உப்பைத்தான் சம்பளமாகக் கொடுத்தது
என நம்பப்படுகிறது. சேலரி என்ற ஆங்கில வார்த்தையே சால்ட் என்ற வார்த்தையிலிருந்துதான்
வந்ததாகவும் கூறப்படுகிறது. "நீங்கள் உலகின் உப்பாயிருக்கிறீர்கள்." என்கிறார்
யேசு. மனிதனுக்கு உப்பு அவ்வளவு அத்தியாவசியமான ஒன்று. "உப்பில்லாப்பண்டம் குப்பையிலே"
என்கிறது நம் சொந்த மொழி. அதே மொழி "உப்பிட்டவரை உள்ளளவும் நினை." எனவும்
வலியுறுத்துகிறது.
ஏதோ கதை சொல்லப்போய் உப்பு கதை சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
நான் சொல்லப்போகும் சின்ன கற்களின் கதைக்கு இது ஒரு சின்ன முகவுரையாகக்
கொள்வோம்!
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வியாபாரம் நிமித்தமே இந்தியாவிற்குள் நுழைந்தது.
ஆனால் இந்தியாவின் பல்வேறு சிற்றறசுகளின் பூசல் அதற்கு சாதகமாயிருக்க சிறிது காலத்திலேயே
ஒரு அரசை நிறுவும் அளவிற்கு பலம் பெற்றது. வட இந்தியாவின் பல பகுதிகளை அது கைப்பற்ற
அங்கிருந்த இயற்கை வளங்களும் அதனுடையதாயிற்று. குஜராத்தின்உப்புப்படுகைகளுக்கும் வங்காளம்
மற்றும் ஒரிசாவின் உப்பு வயல்களுக்கும் அவர்கள் ஏக போக சொந்தக்காரராய் உருக்கொண்டனர்.
ஆஹா அருமையான வருமானம் தரக்கூடிய ஒரு வளம் நம் கைவசம்,
ஏனென்றால் இந்தியாவில் பணக்காரனது சாப்பாட்டில் உப்பு அவசியம். ஏழை சாப்பாட்டிலோ
அது மிக மிக அவசியம்.பழைய சாதத்தில ஒரு கல்லு உப்பப்போட்டு ஒரு மொளவாயையும் சின்ன வெங்காயத்தையும்
கடிச்சிக்கிட்டு சாப்பாட்ட முடிக்கிற நாடு இது! உப்பில்லாத சமாச்சாரமே இங்கு இல்லை
என உணர்ந்தறிந்த அவர்கள் உப்பின் மேல்வரி போட
ஆரம்பித்தார்கள். அது வரையிலும் குடும்ப பட்ஜெட்டை உதைக்காமல் வெகு சாதுவாய் அரவம்
தெறியாது வாழ்ந்த உப்பு ஆங்கிலேயர் கையில் விஸ்வ ரூபம் எடுத்து ஒரு சாதாரண தொழிலாளியின்
இரண்டு மாத சம்பளத்தை விழுங்கி ஏப்பம் விடுமளவுக்கு திமிரெடுத்து நின்றது! வரியைத்தாங்க
முடியாத மக்கள் சுங்க வரி இல்லாத பகுதிகள்
வழியே உப்பை பதுக்கி எடுத்து செல்ல ஆரம்பித்தனர். ஆங்கில கில்லாடிகள் இதற்கும் ஒரு
வழியை கண்டே பிடித்தார்கள்!
பொதுவாக சுவர்கள் எழுப்பபடுவது
ஒரு நாட்டின் பாதுகாப்புக்காகத்தான்.
உலக அதிசயங்களின் ஒன்றான 8850
கிலோ மீட்டர் நீளமுள்ள சீனச் சுவர் மங்கோலியர் தாக்குதலிருந்து சீனாவைப் பாதுகாத்துக்கொள்ள
சீன அரசர்களால் எழுப்பப்பட்டது. அதே போல இங்கிலாந்து ரோமையர்கள் வசம் இருந்த போது அட்ரியன்
சுவர் எனப்படும் 117 கிலோ மீட்டர் சுவர்வட ஸ்காட்லாந்தில்
வாழ்ந்த பிக்ட் எனப்படும் இனத்தாரின் கொடூர தாக்குதலினின்று பாதுகாத்துக்கொள்ள வேண்டி
வடகடலுக்கும் ஐரிஷ் கடலுக்கும் இடையே எழுப்பப்பட்டது..
140 கிலோமீட்டர் நீள பெர்லின் சுவரைப்பற்றி நாம் அறிவோம்.
கம்யூனிஸ்டு கிழக்கு ஜெர்மனியில் வாழும் மக்கள் மேற்கு ஜெர்மனிக்கு வராதிருக்க அது
எழுப்பப்பட்டது.1989ல் அது இடிக்கப்பட்டது.
ஆனால் பாமர மக்களது உணவின் ஜீவாதாரமான உப்பின் ஒரு கல் கூட வரி கட்டாமல்
வெளியே செல்ல முடியாது செல்லவும்கூடாது என்ற ஒரே நோக்குடன் நம் இந்தியாவில் ஆங்கில
கிழக்கிந்திய கம்பெனி 4000 கிலோ
மீட்டர் நீளமுள்ள சுவர் ஒன்றை எழுப்பியதை நாம் அறிவோமா?!
முதலில் முள்வேலியாய் இருந்த அந்த தடுப்பு நாளடைவில் நெருங்கிய மரங்கள்
நடப்பட்டு யாரும் நுழைந்து செல்ல முடியாத அளவுக்கு ஒரு மர அரணாக 12அடி
உயர்ந்து உப்பை காவல் காத்தது!
இந்த அரக்கத்தனமான வரி மக்களின் பொருளாதாரத்தை எந்த அளவிற்குப்பாதித்தது
என்பதற்கு இங்கு ஒரு சிறிய உதாரணம். செல்வம் செழித்த நாடான இங்கிலாந்தில் ஒரு மணங்கு(37.5
கிலோ) உப்பு 1.5 பவுண்டுக்கு விற்றபோது இந்தியாவில் ஒரு மணங்கு 200
பவுண்டுக்கு விற்கப்பட்டது!!
உப்பினால் கிழக்கிந்திய கம்பெனிக்கு அதன் வருமானத்தில் 10%மாய்
உப்பித்தான் நின்றது. சாப்பாட்டில் உப்பு இல்லாத்தால் உடம்பில் அயோடின் குறைவு ஏற்பட்டது.
இதன் காரணமாய் 15 மில்லியன் மக்கள் இறந்து போயினர்.
அதைத்தொடர்ந்து வந்த காலரா நோய்க்கு பலியானவர் எண்ணிக்கை 23
மில்லியனைத்தாண்டியது.
தென்னிந்தியாவில் ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பிற்கு
முன்னமே உப்பின் மேல் சுங்க முறை வரி நிறுத்தப்பட்டதே தவிர உற்பத்தி இடத்திலேயே அதன்
மேல் வரி விதிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாகிரகம்,
தண்டியிலிருந்து தொடங்கிய பாத யாத்திரை இந்த வரி விலக்கல் வேண்டியே நடந்தது.
உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் இந்த உப்பு சுவற்றின் சில பகுதிகள்
இன்னமும் காணப்படுகின்றன.
பலவேறு நாடுகள் உலகின் பல பலகீனமான நாடுகளை ஆக்கிரமித்திருக்கின்றனர்.
ஆயினும் இப்படிப்பட்ட கொடூரமான வரியை மக்கள் இரத்தத்தை உறிஞ்சும் ஒரு வரியை உயர்ந்த கொள்கைகளை உடையதாக
தன்னை எடை போட்டுக்கொள்ளும் ஒரு நாடு எப்படி
செய்தது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது!
கோஹினூர் வைரத்திற்காக வரிந்து
கட்டி சண்டைக்கு நிற்கும் இந்தியர் நாம் நமது சொந்த உப்புக்கற்களுக்கு 4000
கிலோ மீட்டருக்கு உயிர் வேலி எழுப்பி அரக்க வரி விதித்து லட்சக்கணக்கான
இந்தியரின் உயிரை உறிஞ்சிய அந்த நாட்டிடம்
என்ன நியாயம் கோருவோம்? என்ன நஷ்ட ஈடு கேட்போம்?!
No comments :
Post a Comment