இன்றைக்கும் 'மணமகள் தேவை' விளம்பரத்தை
செய்தித்தாள்களிலோ அல்லது வலையிலோ பார்த்தால் சிகப்பான அழகான உயரமான அந்தஸ்துக்குத்
தகுந்த பெண்ணைத்தான்
இந்திய ஜனக்கூட்டமே
தேடி அலைந்து கொண்டிருக்கிறது. ஒரு பெண்ணின் மதிப்பீடுகளும்
லட்சியங்களும் உயர் சமுதாய கண்ணோட்டங்களும்
அகத்தின் அழகும் தொலை தூரத்தில் தீண்டப்படாத
சாதியாய் நின்று போகிறது.
"அவளுக்கென்னா
கிளியாட்டம் இருக்கா, வர்ரவக கொத்திகிட்டு பொயித்துரமாட்டாக"
என சிவப்பான பெண்ணைப்பற்றி பெருமையாகவும்
"இந்த கருப்பிய எவன் கையில புடிச்சிகுடுப்பேண்ணு நான் வேண்டாத சாமி இல்ல. நல்ல படிப்பு நல்ல வேலை என்னா இருந்து என்னா பண்ண...? எவனாவது கூட கொறச்சலா பவுனு கேட்டாக் கூட குடுத்துட்டு இவள எப்பிடியாச்சும் கரை சேத்துரணும்" என்ற புலம்பல்கள் நம் காதுகளில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் விழாமல் இருந்திருக்க
முடியாது. அக்கா தங்கச்சிகளுக்குள் நிறத்தை வைத்து பல வீடுகளில் உரசல்கள். கூடப் பிறந்தவர்களின் பெண் பிள்ளைகளை ஒப்பிட்டு ஒப்பிட்டுப்பார்த்து ஏற்படும் பொறாமைகள் பகைமையில்கூட முடிந்து போகிறது.
அறுபதுகளில் எங்கள் அப்பாவின் நண்பர் வீட்டில் நடந்த ஒரு சம்பவம். கலியாணத்திற்குப் பெண் பார்க்கையில் பத்தாவது படித்திருந்தாலே யதேஷ்டம் என்பது போய் பெண் ஒரு பட்டாதாரியாய் இருக்க வேண்டும் என்ற நியதி அந்த காலகட்டத்தில்
நடுத்தர தட்டு மக்களிடையே நிலவியது. நமது நண்பர் வீட்டுப்பெண்ணும்
அந்த தகுதியை எட்டிப் பிடித்த கையோடு மாப்பிள்ளை
தேடல் ஜரூராக ஆரம்பித்துவிட்டது.
" ஒரு கலியாணத்துல அந்த அம்மாவப் பாத்தன் அத்தாச்சி.... நல்ல செவலயா இருக்காக.....
அவுக கட்டிக்கிட்டு வந்திருக்கிற
பொண்டுகளும் கிளியாட்டம்
இருக்காளுவ... நம்ம பொண்ண பாக்கறத்துக்கு வரேண்ணு இருக்காக. நல்ல எடம்.... பையனுக்கும் நல்ல வேல. நம்ம பொண்ண கலர பாத்துட்டு என்னா சொல்லப்போறாகளோ?" சொந்தத்திடம் பெண்ணின் அம்மா புலம்பித் தள்ளிவிட்டார்.
அத்தாச்சி எங்கிற அந்த சொந்தக்காரர் அவர்கள் பக்கத்தில் ரொம்ப பிரபலமானவர். ப்யூட்டி பார்லர் கண்டறியாத அந்த நாட்களில் கலியாணம் காச்சிக்கெல்லாம் அத்தாச்சிதான்
மேக்கப் லேடியாக செயல் பட்டார். " எதுக்கு பிள்ள நீயி கவலப்படுற..? நம்ம பொண்ணு அரும பெருமயோட அவுக வூட்டுக்கு போயி ஆளுறது எங்கடம.."அறுதியிட்ட அணைப்பு அத்தாச்சியிடமிருந்து!
மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு
சுவையான சூடான தீனி வகைகள்... பெண் காபி தட்டோடு வந்து எல்லோருக்கும் வணக்கம் கூறி சந்தடி சாக்கில் பையனையும் நோட்டம் விட்டு முடித்துவிட்டது.
இனி லவுகீங்கள்
பேசி கல்யாணத்தேதி
குறிக்கும் கட்டந்தான்.
ஆனால் மாப்பிள்ளை
வீட்டாரோ கலந்து பேசும் கட்டத்திற்கு
வராமல் அவர்களுக்குள்ளேயே
குசுகுசுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஏதோ ஒரு முடிவுக்கு வந்தது போல பையனின் அம்மா எழுந்து "பெண்ணின் அம்மாவிடம்
கொஞ்சம் தனியா பேசலாமா?" என்கவும்
'தாரளமா' என்ற அப்பா ரூமுக்கு வழி காட்டினார். ரூம் கதவு சாத்தப்பட்டது.
" நல்ல குடும்பம்ணு கேள்விபட்டுதான்
ஒங்க வீட்டுக்கு
வந்தோம்... ஆனா பொண்ணுக்கு தோல் வியாதி இருக்க விஷயம் தெரிஞ்சிருந்தா
ஒங்கள செரமத்துக்கு
ஆளாக்கியிருக்க மாட்டோம் ரொம்பவே ஏற்பாடு செஞ்சிருக்கிங்க" பெரிய சண்டையை எதிர்பார்த்த
அந்தம்மா அடக்கியேதான்
வாசித்தார்கள். பெண்ணின் அம்மா என் பொண்ண எப்புடி வியாதிக்காரிண்ணு
சொல்லப்போச்சுண்ணு சண்டைக்கி வருமோங்கிற பயமும் அவுங்களுக்கு உள்ளூர இருந்தது. ஆனால் பெண்ணின் அம்மாவோ அப்படியே அந்த அம்மா காலைக்கெட்டியாகப்பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டார்கள்.
"என்னாம்மா பண்றிங்க எந்திரிங்கம்மா நீங்க"
என்ற பெண் அம்மாவை அப்படியே தூக்கி அணைத்துக்கொண்டு
"இதுக்குதான் நான் முன்னமேயே சொன்னேன் இந்த வேஷமெல்லாம் எனக்கு வேணாமுண்ணு" என்றாள் அவள் பையனின் அம்மாவுக்கு
ஒண்றும் புரியவில்லை."ஒங்க வீட்லேருந்து பொண்ணு பாக்க வர்ரீங்கண்ண ஒடனேயே எனக்குக் கையும் ஓடுல காலும் ஓடுல. நீங்களும் செவப்பு வந்திருக்கிற மருமகள் எல்லாரும் செவப்பு. நம்ம பொண்ணு கறுப்பா இருக்கேண்ணு கொஞ்சம் பகுடர கூட அடிச்சிவுட்டோம்.."
"கொஞ்சம் பவுடர் இல்ல ஆண்ட்டி...... ஒரு பெரிய பாண்ட்ஸ் பவுடர் டின் என் மூஞ்சியிலயும் கழுத்துலயும்
ப்ளவுசுக்குக் கீழ கையில க்ளவுஸ் போட்டமாதிரி......
இப்பிடியா வெளிய தெரியிற எடத்தில்லெல்லாம்
அடிச்சி தள்ளிட்டாங்க.
நான் என்னா சொன்னாலும் எடுபடுல.....
நீங்க ஒண்ணும் வருத்தப்படாதீங்க...... நீங்க வேற எடத்துல ஒங்க பையனுக்கு செவப்பான பொண்ணா பாத்துகுங்க."
"அம்மா நாங்க செவப்பான பொண்ணுகள தேடிப்போரதில்ல..... நல்ல குடும்பத்ததான் பாக்குறோம்
அதுக செவப்பா அமஞ்சு போச்சுதுக...."
"அப்படிண்ணா
ஒரே நிமிஷம் இருங்க...." பாத்ரூம் போய் மொத்த பவுடரையும் சுத்தற கழுவித் திரும்பிய பளிச் பெண்ணிற்கு தோல் வியாதி ஒன்றுமில்லை
என்று தெளிவாகிப்போனது.
சிரித்துக்கொண்டே ஹாலுக்கு வந்த பையனின் அம்மா
"கல்யாண தேதியை முடிவு பண்ணிடலாங்க."
என்ற நல்ல செய்தியைப் பரப்பினார்கள்!
இந்த கதை இப்படியென்றால் நிச்சயம் ஆன ஒரு பெண்ணே அடித்த கூத்து அதன் விபரீத விளைவுகள் இன்னொரு விளம்பர மோகக் கதை. எங்கள் வீட்டில் நெடுங்காலமாக
வேலை செய்பவர்,எங்களில் ஒருவராய் இருப்பவரின்
கடைசிப் பெண்தான் இச்சம்பவத்தின் கதாநாயகி. களையான அந்தப்பெண்
கலியாணத்தில் சிகப்பாகவும்
இருக்க முடிவு பண்ணி டிவி விளம்பரத்தில்
அமாவசையிலிருந்து பவுர்ணமிக்கு
செல்லும் நிலவுபோல ஒரு கருப்புபெண் ஒரு கிரீமைப் பூசியவுடன்
வளர்பிறையாக வெள்ளையாவதைக்
கண்டு மயங்கிப்போய்
அதே யுக்தியில்
தானும் வெள்ளையாகிவிடலாம்
என்ற எண்ணத்தில்
அந்த விலை உயர்ந்த கிரீமை வாங்கி அன்று இரவே பூசிக்கொள்ள காலையில் கண்ணு மூக்கு தெரியாமல் வீங்கிப்போய் கிடந்த அவள் முகத்தைக் கண்ட அம்மா பயந்து போய் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு
இட்டுச்செல்ல நல்ல வேளக்கு அந்த அலர்ஜி பந்தக்கால்
நடும் நாளன்று அவளை விட்டு ஓட்டம் பிடித்தது!
சொல்லக்கேட்ட இன்னொரு தமாஷான விஷயம்
"நிச்சயத்துல நான் ஒன்னப்பாத்தப்ப நல்லாதான இருந்த..... கலியாணத்தண்ணைக்கி
ஏன் இப்பிடி... வேற மாதிரி....சோவையா? ஒடம்பு ஏது சரியில்லியா? மணப்பெண்ணிடம் மணமகன் கேட்ட முதல் கேள்வி அதுதானாம். மேக் அப் என்ற பேரில் செங்குரங்காய்
அந்த பெண்னை மாற்றிவிடிரு ந் தால் அந்த பையன் தான் என்ன செய்வான்.. பாவம்!!
மாதா கோயிலில் கல்யாணம். கோயில் ரொம்பிவிட்டது. சாமியார் தயார்.மணப்பெண்ணும் தயார் அப்புறம் யாருக்குக்
காத்திருக்கிறோம்? இன்னும் பையன் ப்யூட்டி பார்லரிலிருந்து
வரவில்லையாம்! எங்களுக்கெல்லாம்
ஒரே ஆச்சரியம். கல்யாணத்தன்று ராத்திரி முழுவதும் நண்பர்களோடு
சீட்டுக்கச்சேரியில் சுகமாகிவிட்டு
காலையில் மட மடவென்று ஒருகுளியல்
போட்டுவிட்டு நிமிஷங்களில்
தயாராகும் மாப்பிள்ளைக்கும்
இந்த கதியா?! இன்றைய பெரிய பணம் அவர்களையும்
இந்த ப்யூட்டி பார்லர் வலையில் சிக்க வைத்து முடியைக் கலைத்து கோதிவிடுகிறது!
முகத்தை ப்ளீச் பண்ணி வெள்ளையாக்குகிறது!!
நீயும் கூடவா தம்பி...... ?!!
பி.கு: "திராவிடர்களின் நிறமே கறுப்புதான். நம்மில் சிலர் வெள்ளையாக இருக்கிறார்களே
என்று நாம் நினைக்கலாம்..... அதற்குக் காரணம் நமது அரசர்களே.... அவர்கள் வட இந்தியாவுக்கு படை எடுத்துசென்று வென்று திரும்புகையில் அவருடைய கணக்கப்பிள்ளை போன்ற உயர் அதிகாரிகள் அங்குள்ள அரசர்களின் பெண்களைத் திருமணம் செய்து கொள்வார்களாம், அப்படியாக வடக்கிலிருந்து
இறக்குமதி செய்யப்பட்ட
கலப்படந்தான் இந்த வெள்ளை நிறம். இவர்களை தென்னிந்தியாவில் பட்டி என்று அழைப்பார்களாம்.
கறுப்பு நிற தோழர்களே தோழிகளே நாம் கலப்படமல்லாத அசல் சரக்கென்பதில் அகமகிழ்வோம்
அக்களித்து பெருமைப்படுவோம்!!
கருப்புத்தான் எனக்குப்புடிச்ச
கலருண்ணு சந்தோஷமாய்
சொல்லுவோம்!
------------------------------------------------------------------------------------------------------------
இந்த செய்தியை என்னோடு பகிர்ந்து கொண்டவர் அருமை அங்கிள் தெய்வத்திரு
B.W.X. பொன்னையா. தோட்டக்கலை விஞ்ஞானி என்றாலும் அவர்களுக்கு
தென்னிந்திய சாதிகளைப்பற்றிப்படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. அவர்கள் வசம் இருந்த "Castes and Tribes of South India" by Edgar
Thurston என்ற தலைப்பின் 7 புத்தகங்கள் இன்று எங்கள் வசம்.
அருமை மேடம். என்னோட கல்யாணப்போட்டாவை பார்த்தா எனக்கு இப்பவும் எரிச்சல் வரும். தேவையில்லாம இந்த எபி பய என்னை பியூட்டி பார்லருக்கு கூட்டிட்டுப்போய் கேவலப்படுத்திவிட்டிட்டான்.அன்னையிலிருந்து நான் பவுடர் கூட போடறதில்லை. நான் சுத்தமான திராவிடன் மேடம்.
ReplyDeleteபவுடர ஒரு முறை அப்பியாவது தொடசிட்டாத்தான் நெறயா பேருக்கு மனசுக்குள்ள ஒரு திருப்தி. போடாமயே இருக்குறது நல்ல நெறி. எங்க வீட்ல நெறயெ பேரு உன் வழிதான்... ஜாலியா இருப்போம்!
ReplyDelete