Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Thursday, 27 October 2016

அப்புடி என்னங்க இருக்கும் ஒரு ரோட்டுல?

தேசிய நெடுஞ்சாலை45 (தேநெ45) எங்களது நெருங்கிய சொந்தம்! சென்னையில் தொடங்கும் அச்சாலை தேனி வரையும் நீண்டு சென்றாலும் திருச்சியோடு எங்கள் உறவு முற்றுப்புள்ளி பெற்றுவிடும்.
எழுபதுளில் ஏன் எண்பதுகளிலும் கூட தேநெ45  ஒரு ஒற்றைப்பாதைதான். செங்கல்பட்டிற்கு அருகாமையில் உள்ள அம்மன் கோயிலில் தேங்காய் உடைத்து சூடம் காட்டினால்தான் அன்றைய பயணம் சுமுகமாக இருக்கும் என்ற ஐதீகத்தால் எங்களது அன்றைய டிரைவர் சாமி விஷயத்தில் வெகு உஷாராக இருப்பார். பெட்ரோல் டாங்க்கை நிரப்புவதும் கேனில் பெட்ரோல் பிடித்து வைத்துக்கொள்வதும் (பெட்ரோல் கிடைப்பது ரொம்ப கஷ்டமான காலம் அதுஇரண்டாம் பட்சந்தான்! வரிசையாக பலதரப்பட்ட வண்டிகள் கோயிலுக்கு முன்னால் அணி வகுத்திருந்தாலும் அவதியில்லாமல் மன திருப்தியோடு பூஜையை செய்தால் தான் டிரைவர்கள் வெளியே வருவார்கள். இப்படி பக்தி சிரத்தையோடு பூஜை புனஸ்காரம் பண்ணினாலே போதுமான ஒரு விஷயம் அதற்கு மேல் நம்மதான் ராஜா என போட்டா போட்டியில் ஓட்டப்பட்ட வண்டிகள் தலைகுப்புற விழுந்துகிடப்பது தேநெ45ன் நியதியாகவே இருந்தது.  "மொள்ளப் போனாலும் வெகுவாப்போனாலும் தலயெழுத்து என்னாவோ அது மட்டுந்தான் நடக்கும்...சாமி உட்ட வழி...." என்ற ஆழ்ந்த வேதாந்தம் இந்தியர் நமது மனதில் ஊறிப்போன விஷயமாச்சே!
என்னதான் ரோடு சின்னதாக இருந்தாலும் சில சுகங்கள் அங்கேயும் இருக்கத்தான் செய்தன. ஆங்கிலேயர் நட்டு வளர்த்த அந்தகாலத்து புளிய மரங்கள் அழகான மரக் குகைக்குள் நம்மை இட்டுச்செல்லும்.
ஏர்கண்டிஷன் போடாமல் ஜன்னலைத் திறந்து வைக்கக்கூடிய சுகானுபவக்காலம் அது! குப்பலாக நிற்கும் புளியாமர நிழல்களில் இட்லி கேசரியை ஒரு கை பார்க்க முடிந்த நிழற்காலம்!
வெகு நிதானமாக ஓட்டக்கூடிய திறமைசாலி எங்கள் டிரைவர். ஆனால் அந்த நிதானம் ஒரு நாள் கேனிலிருந்த பெட்ரோலை வண்டியில் ரொப்புகையில் தவறிப் போயிற்று. சின்னகுழாய் வழியாக ஊதி காற்றை வெளியேற்ற மனுஷன் சர்ரென்று ஒரு இழுப்பு இழுக்க பெட்ரோல் எக்குதப்பாய் அவர் வயிற்றை நிரப்பிவிட்டது!! ஊர் பேர் தெரியாத இடத்தில் கிளினிக்கைத்தேடி  உபயோகமில்லாத அந்த பெட்ரோலை வெளிக்கொண்டு வந்த பின்தான் எங்களுக்கு மூச்சே வந்தது!
மாதம் ஒரு முறை திருச்சி பயணம் என்றும் போல்தான் அன்றும் ஆரம்பித்தது. ஆனால் தாம்பரத்தைத் தாண்டியபின் இவ்வளவு பெரிய அதிர்ச்சி எங்களுக்குக் காத்திருக்கும் என்று நாங்கள் கனவில்கூட நினைக்கவில்லை. ரோட்டில் பெரிய பெரிய இயந்திரங்கள் புளிய மரங்களைக் கூறு போட்டுக் கொண்டிருந்தன. என்ன நடக்கிறது என்ன நடக்கிறது என நெஞ்சம் பதை பதைக்கிறது. கண்ணில் தண்ணீர் முட்டுகிறது.... திடீரென்று டிவியில் ஆஃப்கனிஸ்தானின் பாமியானில் 115 அடி உயர புத்த சிலைகள் மத வெறியர்களால் தகர்த்து எறியப்பட்டது ஞாபகத்துக்கு வர என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் சாவிகள் காணாமல்தான்போயின!
"வளர்ச்சி முன்னேற்றம் நமக்கு வேண்டும்தானே?" அருகில் இருந்த கை என்னதைப் பிடித்துகொண்டது.
"கொஞ்ச தூரத்தில் பார்…… அருமையான வேலிகள் போட்டு செடி நடுகின்றனர். அவையெல்லாம் வளர்ந்து தழைத்து நிற்கப்போவதை சீக்கிரமே பார்க்கத்தானே போகிறோம்!"
 இரு வழிச்சாலைகள்..... உருவாகப்போகின்றன... நம் சுகமான பயணத்திற்கு..........
தாரை கையால் தட்டி போட்டு நான்கே நாட்களில் பிய்த்துக்கொண்டு போகும்  ரோடுகள் அல்ல அவை. ஆழமாக கொத்தி எடுக்கப்பட்டு கர்ம சிரத்தையாக உருவான தரமான சாலைகள். எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டல்லவா? ஒவ்வொரு டோல் கேட்டிலும்  பணம் கட்டுகையில் "எப்பா இவ்வளவா?!" மலைத்துப்போனோம்! முன்னேபின்னே ரோட்டுல போறதுக்கு  வரி கட்டியிருக்கமா என்ன?
கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆசண்ணா நடக்குற காரியமா அது? ரோடுகள பராமரிக்க வேணாமா?
நடப்பட்ட கன்றுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. மரங்களின் கர்ண வள்ளலான புங்கஞ்செடிகளை வைத்திருப்பது மனசை இதமாக்குகிறது. சிவப்பு ரோஸ் வெள்ளை அரளிகள் மஞ்சள் நிற ஸ்வர்ண புஷ்பங்களோடு சாலையின் மத்தியத்தை அலங்கரிக்கின்றன. புளியமரக்குகைகள் அற்றுப்போனதால் சுற்றியிருக்கும் பல விஷயங்கள் என்னை ஈர்க்கின்றன. சங்கீதாக்கள் வசந்தபவன்கள் ஆரியபவன்கள் பெருகிக்கொண்டே நிற்கும் அடையார் ஆனந்த பவன்களுக்கிடையே   சாப்பிட வாங்க, ஓட்டல் பட்டிக்காடு மாப்பிள்ளை ஓட்டல், மாமியார் விருந்து, மூன்று இட்லி கடை ஓட்டல் ஹரிதம் கெடாக்கறி விருந்து, நாட்டுக்கோழி சமையல் இவைகளோடு தேநெ45ல் நீக்கமற
நிறை ந்திருக்கும் பலாவகையான கும்பகோணம் டிகிரி  காப்பிக்கடைகள் பயணத்தை  சுவாரசியப்படுத்துகின்றன! இன்னும் சுவாரசியத்தைக் கூட்டிக்கொடுப்பது வள்ளலார் (பெயரில்) திருமண மண்டபம், அன்னை தெரேசா (பெயரில் இயங்கும்) திருமண நிலயம்!
பெரம்பலூர் அருகே உள்ள 'ராணி தங்குமிடம்' ராஜாவுக்கு எங்கே? என்ற கேள்வியை மனசுக்குள் எழுப்புகிறது!
கோயில்களுக்குக் குறை வைக்காததும் எங்கள் தேநெ45 தான்,
மேலமருவத்தூர் ஆதி பராசக்தி பீடம் சிவப்புப் புடவைகளாலும் சிவப்பு வேட்டிகளாலும் மூடப்பட்டு கம்யூனிஸ்டு கட்சிகளின் மாநாடுகளை தோற்கடிக்க  வல்லதாக காட்சியளிக்கிறது. சாதாரண சமயங்களிலேயே அங்கு கூட்டம் பொங்கி வழியும் அசந்து மறந்து தைப்பூசம் சமயத்தில் பயணித்தால் இரு மருங்கும் பல கிலோ மீட்டர்களுக்கு அணி வகுத்து நிற்கும் வேப்பிலை அலங்கார பஸ்கள்..... குறுக்கும் முறுக்கும் நடமாடும் ஜனக்கூட்டம்  நம் பொறுமையை கட்டாயம் சோதித்துவிடும்.
அடுத்து அச்சரபாக்கத்தின் 'மழைமலைமாதா கோயில்.' சாலையை எதிர்கொண்டு இருக்கும் நிற்கும் மலையில் எழுதப்பட்டிருக்கும் 'மரியேவாழ்க,' வளைந்து வளைந்து மேலே செல்லும் கோயிலின் வழி மனசை நிறைக்கிறது. திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் போலவே இங்கும்  ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் நடக்கிறதாம்! பக்தி- எல்லாவற்றையும் ஆட்டி வைப்பது  அந்த ஒரே சக்திதானோ?!
சின்னதாக ஃபிலடெல்ஃபியா சமாதான சபையைப்பார்க்கிறோம். அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா......... தேநெ45ல் என்ன மாதிரி சமாதானம் செய்யும்!?
அடுத்து அலங்கார பூஷனாக சிவபெருமான் பெரிய ரூபத்தில் காட்சியளிக்க அவருக்கு சளைக்காமல் அதே அளவில் ஆஞ்சனேயரும் அருள் புரிகிறார். விழுப்புரம் தாண்டி கரடிப்பாக்கத்தில் ஓடும் தென் பண்ணையாற்றின் நடுவே தியான குருவாய் அமர்ந்து அருள் பாலிப்பவர் புத்த தேவர்! திருவாச்சூர் காளியம்மன் அவர்  கொடூர குணத்திற்கு
எதிர் மறையாக மதுர காளியம்மனாக சாந்த சொரூபியாய்  குழந்தை இல்லாதோருக்கு தன் அருளைப் பொழிந்து கொண்டிருக்கிறார!.  திருச்சியை எட்டுகையில்
மேலமருவத்தூரின் சிவப்பிற்குப்போட்டியாக மஞ்சள் நிற புடவை வேட்டியுடன் மாரியம்மனுக்கு நேர்ந்து கொண்ட பக்தர்கள் சமயபுரத்திற்கு பாத யாத்திரையாகச் செல்லும் செல்லுவதைப் பார்க்கிறோம். பாத யாத்திரைப் பக்தர்களை ஆண்டு முழுவதும் தேநெ45ல் பார்க்கலாம்.
காவியில் வேளாங்கண்ணி நேர்த்தி, பச்சை அணிந்து பழனி  முருகனுக்கு நேர்த்தி கருப்பில் ஐயப்பன் நேர்த்தி.... இவர்களின் நல்ல எண்ண அலைகள் தேநெ45ல் செல்லும் அனைவரையும் சென்று அடையும் என்பது என் கணிப்பு!
தேநெ45ல் இரண்டு கோட்டைகள். ஒன்று உளுந்தூர் பேட்டை தாண்டியவுடன் பலகையில் எழுதப்பட்டிருக்கும் எலவனாசூர் கோட்டை. இது வரையில் அது என் கண்ணில் தென்பட்டதேயில்லை. அடுத்து மங்களமேடு சாலையிலிருந்து பார்த்தால் இடிபாடுகளுடன் நிற்கும் 'ரஞ்சன் குடிக்கோட்டை'.  ஒரு நாளைக்கி இதை இறங்கிப்பார்க்க வேண்டும் அதன் சரித்திரதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் திருச்சியை விரைவாக அடையும் வேகத்தில் அடிபட்டுத்தான் போகிறது!
பெரம்பலூர் அருகே இருக்கும் கல்மரப்பூங்கா ஒரு காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் கடல் கொண்டிருந்ததை நமக்குவிளக்குகிறது. கடலின் கால்சியம் முழுவதும் இங்கேயே தங்கிப்போக இந்த பெரம்பலூர் மாவட்டம் தமிழ் நாட்டின் சிமெண்ட்ஒண்ணாம் நம்பர் உற்பத்தியாளராக கொடி கட்டிப்பறக்கிறது.
தேநெ45ல் செல்கையில் நடந்த ஒரு சின்ன சம்பவம் எனக்குப்பெரும் பாடம். விக்கிரவாண்டி தாண்டியவுடன் கும்பகோணம் தஞ்சாவூருக்கு ஒரு பாதை பிரியும். ஒருசமயம்   ஒரு நிகழ்ச்சிக்காக அந்தப்பாதையில் செல்லவேண்டியிருந்தது. பண்ருட்டியை அடைகையில் அந்தப்பாதையின் இருமருங்கிலும் முந்திரிப்பருப்பு விற்கும் கடைகள்.(முந்திரி உற்பத்திக்கு பண்ருட்டியும் அதன் சுற்று வட்டாரங்களும் பிரசித்தம்.) முந்திரிப்பருப்பின் பெரிய ரசிகை நான். நாக்கில் எச்சில் ஊற வண்டியை விட்டு இறங்கினேன். முழு முழு பருப்புகள் வெள்ளை வெளேரென்று...... விலை கேட்டேன் சென்னையைவிட குறைவுதான்.. இருந்தாலும் விடாப்பிடியாக விலையைக் குறைத்ததில் பரம திருப்தி......  மாணிக்க வாசகர் கூறுவது போல 'மூவேழ் சுற்றத்திற்கும்' வாங்கும் ஆசை மனசுக்குள்.....  அடக்கி வாசித்து ஓரளவுக்கு வாங்கினேன்.
முதல் போணி டிரைவருக்கும் வீட்டில் வேலைசெய்பவருக்கும் ஆகியது.
"அம்மா மிந்திரிப்பருப்ப பிரிச்சிங்களா.......?" இரண்டு நாள் கழித்து உள்ளே நுழைந்த வீட்டு வேலை செய்யும் பெண்ணின் முதற் கேள்வி.
"நேரமேயில்லம்மா இனிமேத்தான் பண்ணணும்...."
"பருப்பு நல்லாவேயில்ல........"
இந்தப்பெண் எப்பயும் இப்படித்தான்....... கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ஸின் ஒசந்த மைசூர்பா வாங்கிக்குடுத்தாலும் ஒரு நொட்ட சொல்லக்கூடிய ஜாதி.
ஒரு பாக்கெட்டை ஷெல்ஃபிலிருந்து எடுத்தேன். "என்னா அழகா இருக்குல்ல.......?"
கொஞ்சம் நல்லதுகளையும் இந்தப்பெண்கற்றுக்கொள்ளட்டுமே! நினைத்துக்கொண்டிருக்கும்போதே  சமையலறைக் கத்திரிக்கோலை என்னிடம் நீட்டியது.
"ஒரு முடிவோடுதான் வந்திருக்காப்ல......"
பாக்கெட்டைப் பிரிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. முட்ட முட்ட அடைத்து வைத்திருந்தார்கள். ஒரு தட்டில் கொட்டினேன். சிலிர்த்துவிட்டது எனக்கு. "இப்படிக்கூட முடியுமா?! அசந்து போனேன்!! சுற்றியிருந்த முழு பருப்புகளைத்தவிர உள்ளேயிருந்த எல்லாமும் சொத்தையும் சொள்ளையும்! ஆயகலைகள் அறுபத்து நான்கில் பண்ருட்டி ரோட்டுக்கடைகளின் முழுமுதற் கலை இந்த அழகான அடுக்குதல் கலையாக இருக்க வேண்டும்!
இதைக் கொள்ளைக் காசு கொடுத்து அல்லவா நான் உணர்ந்திருக்கிறேன்!
என்னாம்மா இது இப்பிடி இருக்கு..?   ஒனக்குக் குடுத்ததும் இப்பிடித்தானா...?
"இதைவிட மோசம்மா..." எக்களிப்போடு  அவள் மனசுக்கு இதம் தரும் பதில் வந்தது!

 இனி ஒரு உறுதி செய்தேன். "தேநெ45ல் எக்காரணம் கொண்டும் வாங்குதல் கிடையாது... அதிலும் பாக்கெட்டுகள் அறவே கிடையாது." ("உளுந்தூர் பேட்டை டோல் கேட்டில் விற்கும் ருசியான உதிரிக்கொய்யாப்பழங்களை மட்டும் என் உறுதியிலிருந்து தவிர்த்து வைத்திருக்கிறேன்!) 

No comments :

Post a Comment