Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Saturday, 11 February 2017

தேடலும் அதின் பெரிய சங்கல்பமும்

கல்கத்தாவிலிருந்து சென்னை வந்த எங்களுக்குக் காத்திருந்த ஆச்சரியமான விஷயங்களில் வீடு தேடிய படலம் ஒன்று என்றால் வீட்டு வேலை செய்யும் ஆளும் மற்றொன்று. சென்ற நாட்களிலிலிருந்து சுகவாசியாக சொன்ன வேலையை கேள்வி ஏதுமின்றி முகம் கோணாமல் வீட்டை காலை மாலை என இரு வேளையும் துடைத்து பாதம் கருப்பு கொள்ளாமல் பார்த்துக் கொண்டு கடைசி நாள் வரை துணையிருந்த  பெங்காலி ஆரத்தியை மனதில் பதித்துக் கொண்டு இங்கு ஆள் பார்க்க ஆரம்பித்தது எவ்வளவு  பெரிய தவறு என்று அதிகமே உணர்ந்தேன்.
"நாஷ்டா மொள்ள குடு.... ஆனா டீத்தண்ணி உள்ள போங்காட்டி என்க்கு பொய்தே விடியத்தாவுல...... பயசு பட்டெல்லாம் நான் துண்ண மாட்டேன். கைப்புடி சோறு குத்தாலும் கொதிக்க கொதிக்க குத்துடு...... செவ்வா வெள்ளி ஊடு தொச்சுருவேன்ஒரு வேள பாத்ரம் பண்டம் தொலக்குறதுதான் என் வேல.... ஏரக்கட்டுறது ஒம்பாடு...... ஊட்டுக்கு விருந்தாளி வந்தா நீயி பாத்து போட்டு குடுக்காமலா பொயிருவ....... துணி மணி தொவைக்கிறது நம்மளால ஆவாது இன்னா சரியா.....?"
என்ன ஒரு சுதந்திரமான நாடு தமிழ் நாடு என அன்றுதான் உணர்ந்தேன்நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டியதையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு தான் என்ன செய்யப்போகிறேன், நீ எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நிபந்தனை இட்டுக்கூறும் உரிமை என் பத்து வருட அனுபவத்தில் வங்காளத்தில்  கிடையாது நான் அறுதி இட்டுச் சொல்ல முடியும். வேலைக்காரர்கள் என்றால் அடிமைகளே  என்ற மனப்பான்மை அங்கு..... !! சுதந்திர சுவாசக்காற்று ஓரிரு வீடுகளில்தான்!
கடைசியில் ஓரளவு நம் தேவைக்கு ஒத்து வரும் ஆள் அமைந்தது. வாய் பேசாமல் வேலை.....  ஒரு தலைக்காதல் போல நான் மட்டும் பேச அந்தப் பக்கம் தலையாட்டல் மட்டுமே பதிலாக!! வெற்றிலை பாக்கு போயிலை சந்தோஷமாக வாயில்  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக  சம்பாஷித்துக்கொண்டிருக்க மற்றவர்கள் பேச்சுக்கு அங்கு இடமேது?!!
கௌபாய் படங்களில் இடுப்பில் தொங்கும் துப்பாக்கி உறையிலிருந்து  நினையாத நேரத்தில்  கௌபாய் துப்பாக்கியை எடுத்து சுடுவது போல் இந்த  அம்மாவின் இடுப்பில் பாவாடையோடு கட்டிப்போடப்பட்டிருக்கும் சுருக்குப்பையிலிருந்து கௌபாய் வேகத்திலேயே சடக்கென்று வெற்றிலை செல்லம்  துப்பாக்கிக்கு சமமான சின்ன உரல் உலக்கை சுண்ணாம்பு கரண்டவம் சமேதராய் வெளியே வரும். சம்மணம் போட்டு  உடனிருக்கும்  சின்ன  உரலில் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு மடித்துவைத்திருக்கும் போயிலை கட்டையை கொஞ்சம் கிள்ளிப்போட்டு கலவையை இடித்து வாயில் திணித்துவிட்டார்கள் என்றால் கௌபாய் சுறுசுறுப்பு  அவர்களைத் தொற்றிக்கொள்ளும்!
ஆனால் எங்கள் வீடு சர்வமும் சதாகாலமும் போயிலை மணத்தால் நீக்கமற நிறைந்து விட இன்னொரு  நேர்காணலுக்கு நான் தயாரானேன்.
"இன்னா.... சமையல் பண்ணுற... நீயி உப்புமில்ல சப்புமில்ல" இப்படியும் சாப்பாட்டு ராமி ஒன்று தட்டிப்போனது
பிரஞ்சு கதை 'லெ மிஸ்ராபில்ஸ்ஸை' நிறைய பேர் படித்திருப்பீர்கள் அதில் பிஷப்புடைய அறைக்கு ஒரு நாள் திருடன் ஒருவன் பசியோடு வருவான். பிஷப் அவனுக்கு சாப்பாடெல்லாம் போட்டு இன்று இரவு இங்கேயே தங்கிக்கொள்' என்றுசொல்வார். காலையில் அறையிலிருந்த நிறைய சாமான்கள்  காணாமல் போயிருக்கும். சற்று நேரத்தில் கையும் களவுமாக அவனைப்பிடித்த போலீஸ் பிஷப்பிடம் அவனைக்கூட்டி வருகிறார்கள். பிஷப்போ 'நான்தானே அவனை எடுத்துப்போகச்சொன்னேன்' என்று சொல்லி அவனை சாமான்களோடு விடுவித்து விடுகிறார்.
அவரைப் போலவே நானும் சமயலறையில் அவ்வப்போது காணாமல் போகும் சிறு அயிட்டங்களை மன்னித்துக்கொண்டு இருந்தேன்... ஆனால் மாமியார் எனக்குப்பரிசாக அளித்த வெள்ளி ஜெபமாலை ஒரு நாள் அந்தர் தியானம் ஆனபோது பிஷப்பின் பெரிய மனசு என்னிடமிருந்து காணாமல்தான் போய்விட்டது.
மற்றும் பலப்பல நேர்காணல்கள் புழுதி அடைந்த வீடு குமிந்து கிடக்கும் அழுக்குத்துணிகள் யூனிபார்ம்கள்!!! (துணிகள் அடி வாங்கி அழுது துவைத்து எடுக்கப்பட்ட வாஷிங் மெஷின் இல்லாத காலமது!)
மதர் சுப்பீரியராய் இருந்த என்  நாத்தனாரிடம் மனசைக்கொட்டினேன்.
"வேண்டிக்குவோம் மாகி... நல்ல ஆளா கெடைப்பாங்க.." ஆறுதலான வார்த்தைகள்!!
பவர்புஃல்லான வேண்டுதலோடு அவர்கள் ஒரு யோஜனையையும் கொடுத்தார்கள். அவர்களுக்குத்தெரிந்த ஒரு குடும்பத்தில் ஒரு பெண் இருக்கிறாள். அப்பாவுக்கு கான்சர் காரணமாக ஒரு கால் எடுக்கப்பட்டுவிட்டது. அம்மா கூலி வேலை... அண்ணன் ஐடிஐ பண்ணுகிறான். தம்பி சின்னப் பையன்.ஏதாவது நல்ல குடும்பமாக சிஸ்டர் சொன்னா அங்க ஒத்தாசை பண்ணிக்கிட்டே அவள் கலியாணம் காச்சிக்கு ஏதாவது சேமிப்பு பண்ணலாம். பொம்பளபிள்ளையாவது பசி பட்டினி இல்லாம மூணு வேள சோறு திங்கும்...... அம்மா அப்பாவின் கணிப்பு இதுதானாம்.
மதில் மேல் பூனைமாதிரி நான் ரெண்டுங்கெட்டானாய் அவதிப்பட்டேன். வீட்டோடு ஆள் எனக்கு புதிதான ஒன்று...... எப்படி அதை பராமரிப்பது....? பிள்ளைகள் இரண்டும் சின்னதுகள்.... வெளியேயிருந்து வருகிற பெண்ணின் தாக்கம் அவர்கள் மேல் எப்படி இருக்கப்போகிறது என்று எனக்கு பிடிபடவேயில்லை.
"ட்ரை பண்ணிதான் பார்க்கலாமே.... சரிப்பட்டு வரலண்ணா திரும்ப அனுப்பிச்சிடலாம்...... என்னா...... கொஞ்ச செலவு ஆவும்... ஆள் மெனக்கேடும் இருக்கும்." இவர்
இரு மனசாகத்தான் முடிவு எடுத்தோம்...
"குழந்தைத் தொழிலாளி......" அவளைப்பார்த்தவுடன் மனசு குறு குறுத்துப்போயிற்று! என் பையனுக்கும் சின்னவளாய் இருப்பாளோ? மூஞ்சி பூராவும் பயந்து போன சிரிப்பு..... தடவிக்கொடுத்து சாப்பாடு போட்டேன். சாப்பாட்டு பாத்திரங்களை மட மடவென்று ஒழித்துப்போட்டாள். சமையல் அறையை நரூசாகத் துடைத்தாள். "வேற எதுனாச்சும் வேல இப்ப இருக்காக்கா..." மனசு இளகிப்போயிற்று. " எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நானென்றான்" என்ற கவிதை போல காலையில் எனக்கு முன்னால் எழுந்து தன் குளியல் வகையறாக்களை முடித்துக்கொண்டு பாலைக்காய்ச்சி என் வருகைக்குத்தயாராக அவள் சமையல் அறையில்!
 "சாங்காலம் புதுசா டிப்பன் பண்ணலாங்க்கா......."
சாய்ங்கால நேரமும் பிஸ்கட்டை விடுத்து  'ரோஸ் கொக்கி' 'சுய்யம்'ஸ் போன்ற சுவையான ஒரு ரசாயன மாற்றத்தை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டது!
தமிழ் புது வருஷ  கோலத்தின் மத்தியில் எலச்சாப்பாடும் த்தீவாளியும்  பொங்கல் கிறிஸ்மஸோடு கூட்டு சேர்ந்து கொஞ்சி விளையாடின!
"இந்த குழந்தைக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும்..."
வேலைப்பளு இறங்கிப்போக நிறைய நேரம் என் கைவசம்
"படிச்சிருக்கியாம்மா..."
"அர்ச்சுவடி தெரியுங்க்கா ஒண்ணாம்ப்பு பொயிருக்கேன்"
நம்ம ரெண்டு பேரும் தெனமும் கொஞ்ச நேரம் படிக்கலாமா...?
சரிங்கக்கா...
அருமையான முன்னேற்றம்...... பிள்ளை கற்பூரம் மாதிரி...... சடக்கென பிடித்துக்கொள்கிறாள். ரெண்டு வருஷத்தில பத்தாவது எழுத வச்சுரணும்.....
பாரதியார் கவிதை படிப்பதில் அவ்வளவு ஈடுபாடு.... ரெண்டு பேரும் சத்தமாக
சந்தோஷமாக பாரதியின் பெண் புரட்சிப் பாடல்களை ஒரு வழியாக்கிவிடுவோம்!!
"ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா.. உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா...."
ரொம்பவும்.... எதிலும்..... அது எவ்வளவு நல்ல விஷயமாயிருந்தாலும்....... அளவுக்கு மீறி ஆசை வைக்கக்கூடாது என்று அந்தப்பெண்ணின் அப்பாவும் அம்மாவும் என் வீட்டுக்கதவைத் தட்டுகையில் புரிந்து கொண்டேன்.
ஏழைப்பெண் பிள்ளைகள் கலியாணத்திற்கு  அரசாங்கத்தில் பெரிய தொகை உதவியாகக் கொடுக்கிறார்களாம்..... அதனால் தங்கள் பெண்பிள்ளைக்கு கலியாணம் முடித்துவிடலாம் என்று இருக்கிறார்களாம்.
"இவளுக்கு இன்னும் வயசே ஆவுலியே கல்யாணாத்துக்கு 18 வயசு ஆவ வேணாமா..?"
"அதெல்லாம் கணக்கப்பிள்ள 'சரிட்பிரிட்' குடுத்துருவாரும்மா..."
 "அவள பத்தாவதாச்சும் படிக்க வச்சி சொந்தக்காலுல நிக்க வக்கிணுமுண்ணு நான் யோஜன பண்ணிகிட்டிருக்கேன்......"
"அவ பத்தாவது படிச்சிட்டா நான் எங்கன போயி மாப்புள பாத்து எங்கிட்டேருந்து சீரு செனத்தி பண்ணுறது......? பத்தாவது பெயிலாப்போன பயலுவ காலர தூக்கி வுட்டுகிட்டு மோட்டாரு பைக்கை கொண்டா மைனரு செயின் போடுண்ணு  நிக்கிறானுவ...... எம்மா........ நானு உசிரோட இருக்கப்பயே இந்த பொண்ண ஆரு கையிலயாச்சும் ஒப்படைச்சிட்டாதான் இந்த கட்டை வேவும்....."
அம்மா குனிஞ்ச தல நிமிருல... இவ மூலயில நிண்ணுகிட்டு அழுவுற அழுவையையும் நிறுத்த முடியில. அப்பாவுடைய வாதத்திற்கு எதிர் வாதம் பண்ணுவதற்கேற்ற கருத்துகளும் என்னிடம் இல்ல........
தொடர்பு விட்டுப்போனது..... போட்ட சில கடிதங்களுக்கு பதில் இல்லை.ஆனாலும் நினைவுகள் மட்டும் தொடர்கதையாய் மனதிற்குள்
ஒரு விசேஷத்தில் அவளை சந்தித்தபோது மனசு நிறைந்து போனது.
மெலிந்து போயிருந்தாள்.
"அக்கா......... என்ன ஞாவகம் இருக்கா..?"
அவள்தான் என்னைக்கண்டுபிடித்தாள்.
தழுவிக்கொண்டேன்.
ஒரு பையனும் பெண்ணுமாம்........ குசலம் எல்லாம் ஆயிற்று.
பொண்ணு பேர் என்ன....? சம்பாஷணையை நீடிக்க நான் கேட்ட கேள்விக்கு அவள் கொடுத்த பதில் என்னை அதிரத்தான் வைத்தது
சக்தி பாரதிக்கா ... அழுத்தம் திருத்தமான பதில்
அதில் பொதிந்து கிடந்த பல உணர்வுகள் எனக்கும் அவளுக்கும் வெளிச்சமான ஒன்று
"'இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும்' நான் என் பெண்குழந்தைக்கு கல்வி அளித்தே நிற்பேன்...... எனக்கு நேர்ந்தது அவளுக்கு இல்லவே இல்லை.... இது நான் பாடிய பாரதியின் பாட்டுகளின் மேல் சத்தியம்" என அவள் சொல்லாமற் சொல்லி நின்ற விதம் என் உணர்வுகளை அழகாகவே தொட்டுச்சென்றது!

1 comment :

  1. மிக மென்மையான அனுபவம் .பாரதி கண்ட ஒரு புதுமைப்பெண் இன்னொருவளை உருவாக்க முயன்று அதில் வெற்றியும் பெறுவது என்பது மிக நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வு .இப்படி நான் உட்பட எத்தனை பேர் வாழ்க்கையில் நீங்கள் தடம் பதித்திருக்கிறீர்கள் ?

    ReplyDelete