வீட்டில் பெரியவர்களுக்கு உதவியாக வந்த தினுசு தினுசான நர்ஸ்கள் உதவியாளர்கள் மற்றும் வீட்டு வேலை செய்பவர்களோடு கிடைத்த அனுபவங்கள் போதாதென்று புதுசாக ஒரு பெண் எங்கள் வீட்டில் சேர்ந்து கொண்டது. அப்போதெல்லாம் வீட்டிற்கு நிறைய குரியர்களும் ஸ்பீட் போஸ்டுகளும் கண்ட கண்ட நேரங்களில் வரும் இதுகளை வாங்கவும் கையெழுத்துப்போடவும் பெரியவர்களைப்பார்க்க வருகிறவர்களும் போகிறவர்களும் கேட்டை திறந்து மூடவும் மாமாவுக்கு முழு நேர வேலையாகி ரொம்பவும் அசந்துதான் போனார்கள். ஒரு தடவை வீட்டிற்கு வந்திருந்த என் நாத்தனார் (காட்பாடியில் மதர் சுப்பீரியர்) ஆஞா படும் அவதியைக்கண்டு ஒரு பெண்ணை அனுப்பி வைப்பதாக சொல்லிவிட்டுப் போனார்கள். அந்தப்பெண்தான் இந்த வானவில் குழுவில் இன்று சேர்ந்து கொண்டது. காலையில் எழுந்து தோட்டம் கூட்டி தெருவுக்கு தண்ணீர் தெளித்து கோலம் போட்டு மாமா சொல்லும் வேலைகளை செய்ய மற்றபடி அடுப்பாங்கரையில் உதவி செய்ய வருகிறவர்களுக்கு தண்ணீர் மற்றும் காபி டீ கூல் ட்ரிங்க்ஸ் கொண்டு வந்து கொடுக்க இப்படியாக இந்த சுகாரம்பம் தொடங்கியது.
ஒல்லி குச்சியான சுறு சுறுப்பான பெண்தான். ஆனால் சாப்பாட்டு விஷயங்களில் பிரயோஜனமில்லை. இன்னொரு விஷயங்க்கூட இருக்கு எவனோ ஒரு ஹீரோவாமில்ல அவன் படத்தைப்போட்டா அவளுக்கு சோறு தண்ணி கூட வேண்டாமாம். மாமா என்னிடம் இதைச்சொல்லி வருத்தப்பட்டார்கள். நான் சமையல் அக்காவை தனியாகக்கூப்பிட்டு விவரம் கேட்டேன்.
"யம்மா அவ அவ காஞ்ச மாடு கம்புல புகு ந்தாப்புல சோத்த வாரி வளைச்சி திங்கையில இந்த புள்ளமுட்டும் வேடிக்கை பாத்துகிணு குந்தி கெடக்கு. நல்லது பொல்லாத்தத தட்டுல வெச்சம்ணாக்க குந்துனாப்புல அடுத்தவங்க தட்டுல போடுதும்மா. யக்கா எனக்கு துளியோண்டு ரசம் முட்டும் நெதமும் வெச்சிகுடுத்துடுக்காங்குது. நானே ஒங்ககிட்ட இத்த சொல்லுணுமுண்ணு இரு ந்தேன். இது இப்டி இருந்தா நொம்ப நாளக்கி இவ்விடம் தாக்கு புடிக்காது. அப்பப்ப வவுத்த நோவுதுண்ணி புடிச்சுகிணு அவதிப்படுது. அம்மாதான் அத கண்டிசன் பண்ணி வழிக்கி கொண்டாருணும்.
ஆறு வருஷம் ஆர்ஃபனேஜ் போர்டிங்கில் இருந்து படித்த அவளுக்கு அங்குள்ள சாப்பாடு பிடிக்காதாம் சொத்த கத்திரிக்கா காஞ்சு போன சோறு புழு மிதக்கும் கஞ்சி.....
"ம்மாங்க பாக்காத நேரத்துல செவுத்துக்கு அப்பால வீசிடுவங்க்கா.. பாத்தாங்கண்ணா அண்ணைக்கே வீட்டுக்கு அனுப்பிச்சிருவாங்க"
"என்னத்ததான் சாப்புட்ட..."
"ஊட்லேருந்து அம்மா பொரியரிசிமாவு,
புளிக்காச்சல் வர கறி இதெல்லாம் குடுத்து உடும். பக்கத்திலய ஒரு புரோட்டா கட இருந்துச்சு. அமயா சமயத்துல அந்த அண்ணங்கிட்ட கடன் சொல்லிட்டுகூட நானு என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் வாங்கித்திம்போம். ஆருக்காச்சும் ஒடம்பு சரியில்லண்ணாக்க நானு அம்மாங்ககிட்ட போயி பவ்வியமா "சிஸ்டர் நானு கெவுர்மெண்டு ஆஸ்பத்திரிக்கி இவள கூட்டிக்கிணு பொயிட்டு வருட்டா சிஸ்டர்?ணு கேப்பேன். சிஸ்டருக்கு ஆயிரம் வேல கெடக்கும். சரி ஒரு தொந்தரவு உட்டுதுண்ணு "பத்தரமா கூட்டிகிட்டு பொயிட்டு நேரா வந்துருணும் ஊரு கீரு சுத்தக்கூடாது சரியா?"
ம்பாங்க. நானு தலய பலமா ஆட்டிபிட்டு ஓட்டமா கலக்சனுக்கு பொயிருவேன். ஃபிரண்ட்ஸ்கிட்டல்லாம் காசு கலக்ட் பண்ணி தீனியாயான தீனி வாங்கிக்கிட்டு வந்துருவேன்" வெற்றி வாகை வீரன் போல பொழிந்தாள்.
சரியான ருசி கண்ட தீனிப்பையாய் இருந்திருக்கிறாள். அது இங்கு செல்லுபடாதே... கொஞ்ச கொஞ்சமாய்தான் வழிக்கு கொண்டு வரணும்.
"சரி ஆறு வருஷம் படிச்சிருக்கியே. எது வரைக்கும் படிச்சிருக்க?"
எஸ்எஸ்எல்சி க்கா
பாஸ் பண்ணிட்டியா?
இல்லக்கா..... ஒரு ஸப்ஜெக்ட்ல பெயிலு......
என்னா சப்ஜெக்ட்?
கொஞ்சம் தலை சொறியல் கொஞ்சம் யோஜனை
"தெரியிலங்கக்கா"
நான் என் அம்மாவின் பெரிய விசிறி. அஞ்சாவது படிப்போடு பெண்பிள்ளைகளை வீட்டு வேலைக்கு நிறுத்திவிட்ட அந்த கால கட்டத்தில் 'நான் படிக்காத படிப்பை என் பெண் பிள்ளைகள் ஆறும் படிக்க வேண்டும்'
என வரிந்து கட்டிய புரட்சிக்காரி!
அந்த வெறி கொஞ்சமாகிலும் என்னிடம் இருக்க வேண்டுமல்லவா?
"இந்தபெண்ணை எஸ்எஸ்எல்சி முடிக்க வைக்க வேண்டும்."
அவள் வீட்டிலிருந்து போஸ்டில் வந்த எஸ்எஸ்எல்சி சர்ட்டிஃபிகேட்டை பார்த்த எங்களுக்கு ஒரே ஆச்சரியம்! கைவசம் நான்கு சர்ட்டிஃபிகேட்டுகள்!! ஒவ்வொரு
சர்ட்டிஃபிகேட்டிலும் ஒவ்வொரு பாடத்தையும் 35 சதத்திலிருந்து 38 சதத்திற்கு மீறாமல் சிக்கனமாக பாஸ் பண்ணியிருந்தாள்!! என் மனசுக்குள் சொர்ரென்று எதுவோ இறங்கியது. இதை நான் கரை சேர்க்க முடியுமா?
இதையும் தவிர இந்த போஸ்ட் வரும் முன் மனசுக்குள் ஒரு நப்பாசை. இவள் சமூகவியலில் ஃபெயிலாகி இருக்க வேண்டும் கணக்கிலோ இல்லை சயின்சிலோ ஃபெயிலாகி இருக்ககூடாது என்ற வேண்டுதலும் இருந்தது. கணக்கு எனக்கு பரம எதிரி என்றால் சயின்ஸ் 'துஷ்டனைக்கண்டால்
தூர விலகு'
என்ற அடிப்படையிலேதான் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. கடைசியில் லாட்டரியோ சயின்ஸிற்குத்தான் அடித்திருந்தது. என்னுடைய 'சொர்ரிப்பு' அல்சராய் உருக்கொண்டுவிடுமோ?
என் முகத்தைப்பார்த்த இவர் "ரொம்ப கவலைப்படாதே... சயின்ஸ்தானே நான் பாத்துக்கிறேன்..." அபயஹஸ்தம் அளித்தார்!
அடுத்த கட்டமாக ஊரிலிருந்து சயின்ஸ் புத்தகம் வந்து சேர்ந்தது. எடுத்துக்கொண்டு இவரிடம் ஓடினேன்.
புத்தகத்தைத் திறந்தவர் ஷாக்காகிப்போனார்!
"இதென்னா எல்லாம் தமிழில் இருக்கு?"
"பின்ன என்னா.... தமிழ் நாட்டின் உட்பகுதியில் ஆர்ஃபனேஜில் படித்த பெண் ஒங்களுக்கு இங்கிலீஷ் மீடியத்திலேயா படித்துவிட்டு வந்திருப்பாள்?"
"இவர் படித்த தமிழ் வெகு சொற்பம். சின்ன வயசிலேயே சாமியாராகப்போக ஆசைபட்டு செமினெரியில் சேர்ந்ததனால் லத்தீன் படிக்க வேண்டிய சூழ்நிலை!
இந்த வேண்டாத திருப்பம் இப்போது எங்கள் வசம்!
சில நாள் யோஜனைக்குப்பின் நான் சொன்னேன் " பயாலஜியை என்னால் கற்றுக்கொடுக்க முடியும் கெமிஸ்ட்டிரியையும் சமாளித்துவிடுவேன் நீங்கள் சனி ஞாயிறுஃபிஸிக்சை எனக்கு கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள்..... அவளை பாஸ் பண்ண வைத்து விடலாம்." என்றேன்
இருவரும் கடுமையாக உழைத்த காலமது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாடங்கள். விளக்கங்கள்....... என்று போய்க்கொண்டிருக்க இந்தப்பெண்ணோ கில்லாடியாய் புஸ்தகத்திலிருந்து எப்படி என்னை வெளியே கொண்டு வருவது என்பதையே குறி வைத்திருந்தாள்.
"எங்க ஊர்ல யாராவது செத்துபோய் துக்க நிவர்த்தி வெச்சாங்கண்ணாக்கா தெடல்ல சாய்ங்காலமா சினிமா போடுவாங்கக்கா. பஞ்சாயத்து பிரசிண்டு பொறந்த நாளு,
கலியாணம் காச்சி எல்லாத்துக்கும் சினிமா போட்டுடுவாங்க.... அதுவும் எங்க ஊர்ல அந்த ஒரே ஹீரோவத்தான் எல்லாத்துக்கும் புடிக்கும். அவுருண்ணா எனக்கு உசுருக்கா.."
சரி சரி நீ இப்ப சொல்லு " ஒரு திடப்பொருள் திரவத்திற்குள் மூழ்கி இருக்கையில்......"
"அக்கா அக்கா இத முட்டும் கேளுங்கக்கா.... ஒரு நா சினிமா பாத்து கிட்டு இருக்கையில அந்த பக்கம் வந்த அப்பாரு என்னிய பாத்து தொலஞ்சிட்டாரு.
சரியான சாமி பித்து புடிச்சவரு.... நாங்க கோயிலத் தவுத்து வேறெங்கயும் போவக்கூடாது அவுருக்கு."
"அப்பறம் என்னாச்சு......"
"பூ வெளக்கமாறு பிஞ்சு தூள் தூளா ஆயிருச்சு... தெடல்லேருந்து அடிச்சி இழுத்துகிட்டு போயி ராத்திரி பூரா முட்டி போட வச்சிட்டாரு......."
"நீ இப்டி சினிமா பித்தா இருந்ததாலத்தான் படிப்புல கவனமில்லாம
இருந்துருக்க....."
நான் சொன்னது அவள் காதில் ஏறவேயில்லை.....
"அதுலேர்ந்து துப்புட்டிய கையில எடுத்துகிட்டு பொயிருவேன்.."
இப்படியாக அவளுடைய பிரதாபங்கள் தொடர்கதையாகப்போய்கொண்டே இருக்கும் நான் என் சத்தத்தை உயர்த்தவிடில்!
சனி ஞாயிறு சினிமா அவள் ஹீரோ படமானால் என்னைக் கெஞ்சி கூத்தாடி பாடங்களுக்கு சாயங்கால லீவ் விட்டு விடுவாள்!
ஒரு வழியாய் பரிட்சையும் முடிந்தது.
நெட்டில் ரிசல்ட் பார்த்த இவர் 53 மார்க் வாங்கி பாஸ் பண்ணியிருக்கம்மா என்றார்.
தாங்க முடியாத அழுகை " இது என் மார்க் இல்லண்ண...." அழுகை தொடர்கிறது
"தெரியுது தெரியுது.......உக்காந்து படிச்சதனாலதான் இவ்வளவு மார்க்க வாங்கியிருக்க இந்த புத்தி மொதல்லயே வந்திருந்தா 35 மார்க்கெல்லாம் வாங்கி பாஸ் பண்ணியிருக்க மாட்ட.." ஆறுதலாக மாமா
திரும்பவும் "இது என் மார்க் இல்லண்ண...." அவளிடமிருந்து அழுகை
சஸ்பென்சை உடைத்த இவர் " சரி சரி 53 இல்ல...... 83 மார்க் வாங்கி பாஸ் பண்ணியிருக்க..." என்றார்
வீடே ஆச்சரியத்தில் மூழ்கிப்போனது.
"பெரிய முயற்சிதான் பண்ணியிருக்க......இப்ப ஒனக்கு என்னா வேணும் கேளு....."
"மாயாஜால்ல என் ஹீரோவோட லேட்டஸ்ட் படம் ஓடுது....... அதுக்கு கூட்டிகிட்டு போவிங்களாண்ணே..?"
கணக்கை நேராக்கி விட்டாள் அவள்!
மண்ணைக்கூட மணக்க மணக்க மனுவாய் உருவாக்கத்தெரிந்த நீங்கள் இரண்டு பேரும் பிரம்மாக்கள்தான். என்னையும் அந்த நாளில் உருவாக்கியது நினைத்து இப்போதும் நெகிழ்கிறேன் .
ReplyDelete