Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Saturday, 14 October 2017

திரைக்குப்பின்னால் சிறுவர்கள்

பேப்பரில் படித்த ஒரு செய்தி ஓட்ஸ் கஞ்சியில் நான் விட்டெறிந்த இரண்டு மூன்று பாதாம் பருப்புகள் என்னையே உற்று நோக்குவது போல இருந்தது. பார்த்துக் கொண்டே  இருக்கிறேன் ........ முக்கண் திறந்த சிவபிரானைப்போல பிஞ்சுக்கால்கள் ஆறு ஜோடி  என்னை சுட்டெரித்தது செய்தியின்  அந்தப் படம் .........
பெருங்குமியல் ஒன்று அந்த கூடத்தை அடைத்துக்கிடந்தது. அதன் மேல் மூன்று அல்லது நான்கே வயதுப்பிள்ளைகள் அங்கேயும் இங்கேயுமாக நடை பழகிக்கொண்டிருந்தன. பாதாம் கொட்டைகளின்  உட்புறத் தோலை நீக்கும் பணி இந்தக் குழந்தைளின் அன்றாடப் பணி.
எட்டு வயது பத்து வயது  பையன்களை மெக்கானிக் கடைகளில் கண்டிருப்போம்..... அவர்கள்  டீ பறிமாற்றத்திற்காக ஆறு குவளை தாங்கியோடு ரோடு தாண்டி ஓடுவதைக் கண்டிருப்போம்........ கண்ணாடி  பாதுகாப்புகள் இல்லாமல் தீப்பொரிகளை ரசித்துக்கொண்டே ரோட்டோரக்கடைகளில் வெல்டிங் செய்வதை பார்த்திருக்கிறோம்...... சைக்கிள் கடைகளில் காற்றடிக்கவும் பஞ்சர் ஒட்டவும் ஓடு பிள்ளைகளாக இவர்களைக்கண்டிருப்போம். இதைத்தவிர பேன் அற்ற  பொந்து அறைகளில்     எவர்சில்வர் பாத்திரங்களை பாலிஷ் போடும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் நம் கண்ணில் படாத உழைப்பாளிகள்..... வறுமையில் தன்  புடவையை பாதிக்கிழித்து சிறுமிக்கு சுற்றி விட்டு  அவளை பெரியவளாகக்காட்டி  பட்டாசு தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படும் தொழிலாளிகளும் இது போன்ற ஆயிரமாயிரம்  தினுசானவர்களும் நம் கண்ணில் படாதவர்களே!   
ஆனாலும் இந்த பச்சிளம் பாலகர்களுக்கு என்ன மாதிரியான கொடுமை இது? வேலை செய்யும் பருவமா இது?! பெரியவர்கள் பாதாம் கொட்டைகளை  மிதித்தால் ஆகாதோ? ஆமாம் போங்க ...........  அதேதான் காரணம்! பாதாம் பருப்பு உடைந்து போய்விடாமல் பளபளவென்று முழித்து நிற்க சந்தையில் நல்ல விலை போக  இங்கு  பிஞ்சுக் கால்கள் கொத்தடிமைகளாய் வேலை பார்க்கின்றன
"ஏம்மா எங்க ஊருக்கு வந்து வேலை மெனக்கெட்டு இந்த பாதாம் பருப்ப வாங்குறிங்க...... ஒங்க ஊர்ல இல்லாத பருப்பா..? வீட்டுக்கு அலங்கார சாமான்க  வாங்குங்க..... சென்ட் வாங்குங்க பொதுவா வெளிநாட்டுக்கு வர்றவங்க பர்ச்சேஸ் இதுதான்....... " என் பெண்
ஏதோ என்னால் முடிந்த ஒரு சின்ன எதிர்ப்பு ...... அவளுக்கு விளக்கம் அளித்தேன்.
 டிவியின் பல சானல்களில் சின்னப்  பிள்ளைகள் (ஜுனியர் சூப்பர் சிங்கர்பாட்டு பாடுவதைக்கேட்டு ரசிப்பதில் எனக்கு ஒரு தனி சுகம். மாசு அற்ற அந்த முகங்கள் இன்னொரு அழகான சங்கீதத்தையும் இணைத்து  இசைத்துக்கொண்டிருக்கும. ஆனால் சங்கீத நீதிபதிகள் அதுகளை கழித்து கட்டும் அந்த நேரம் அந்த பட்டு முகங்களின் வாட்டம்  தாங்கமுடியாத ஒன்று.........ஒரு சின்னப்பரிசாவது கொடுத்து அந்த பிஞ்சுகளை வாடாமல் பார்த்துகொள்ளலாமோ? மனசுக்குள் ஒரு ஆதங்கம். இந்தக்  குழந்தைகளின் வாட்டம் ஒரு பக்கம் என்றால்  கையைப்பிசைந்து கொண்டு மாபெரும் எதிர்பார்ப்போடு வெளியே நின்று அல்லாடும் பெற்றோர்களின் இதயத்துடிப்பு எகிறிப்போய் நிற்கும் அவலமும் தேர்வு பெறாத தங்கள் குழந்தைகளை அவர்கள் படுத்தும் பாடும் காணத்தகாத ஒரு காட்சிஇவர்களும் ஒரு வகை குழந்தைத்  தொழிலாளர்கள்தானோ? நான் சொன்ன முந்தைய குழந்தைகளுக்கு உடல் வகையில் பாதிப்பு அதிகமாகத்தோன்ற இந்த பிரிவினரக்கோ உடலளவிலும் மனத்தளவிலும்  பலமடங்கான பாதிப்பு என்பது என் எண்ணம்.
சகலகலா வல்லவர்களாய் தங்கள் பிள்ளைகள் இருக்க வேண்டும் எல்லாவகையிலும் உச்சாணிக் கொம்பை அவர்கள்  அடைந்தே தீரவேண்டும் என வெறி பிடித்து உலவும் பெற்றோர்களின் பிடியில் இவர்கள் சாதாரண குழந்தை தொழிலாளர்களை விட ஒரு கேவலமாக  நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
"எனக்கு தெண்டு டூசண் ஆச்சி......... ஸ்கூலுல  ஒண்ணு அப்பதம் ஆண்ட்டி மிஸ் வீத்ல  ஒண்ணு" மழலையே மாறாத குட்டிப்பையன் கண்களையும் கைகளையும் விரித்துபெருமூச்சோடு  தனக்குப் பிடிக்காத கதை ஒன்றை என் முன் வைத்தான் "ABCயையும் 1 2 3 ஹ்ண்ரட் வரைக்கும் என் பையன் நிமிஷத்துல எழுதித்  தள்ளிடுவான்."  அல்ப விஷயத்தில் பூரித்துப்போய்  "ஆச்சிக்கு ba ba blacksheep சொல்லு பாக்கலாம்" என மலர்ந்து போன பின்தான் பையனின் திறமைக்கும்   அவர்கள் பெருமைக்கும்  முற்றுப்புள்ளி வைப்பார்கள்.
என் பிள்ளை டிவியில் பாட வேண்டும் அறுபது லட்ச வீட்டை முதல் பரிசாக பெற்றுவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பிள்ளைகளை  சித்திரவதை செய்யும் பெற்றோர்களை நாங்கள் நேரிடையாகக் கண்டு அசந்துதான் போனோம்.
அந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்தால் மரங்களுக்கிடையே  போடப்பட்டிருக்கும் வாக்கர்ஸ் வே  எங்கள் சொர்க்கம். அந்த காலையும்  மகிழ்ச்சியோடுதான்  சுறு சுறுப்பாக  அறையை விட்டு வெளியே வந்தோம்.
 ஐந்தரை மணி காலையில் எப்போதும் வெளியே வரும் கேட்டருகே வரும் போதே அந்த இடம் இன்று ஏதோ வித்தியாசமாய்  இருக்கிறது என்பதை உணர்ந்தோம். பவ்வியமாக எங்களை நோக்கி வந்த செக்யூரிட்டி  " சார் அந்த கேட்டு வழியாப்போங்க  இந்த கேட்டை இண்ணைக்கி பூட்டிபுட்டோம்.." கேட்டுக்கு வெளியே ஜனங்கள் கூட்டம் அலை  மோதி நின்றது! வெளியே வருகிறோம் ராவண தர்பாரின் அனுமார் வால் போல  வரிசை நீண்டு நின்றது. இன்று ஏதோ ஒரு டிவி சானலில் ஜூனியர் சூப்பர் சிங்கர் செலக்ஷனாம். காலையில் இடம் பிடித்தால்தான் பாடுவதற்கு சான்ஸ் கிடைக்குமாம்
அப்பா அம்மா  குழந்தை ஜோடிகள்அம்மா குழந்தை ஜோடிகள்அப்பா குழந்தை ஜோடிகள்தாத்தா பாட்டி குழந்தை ஜோடிகள், தாத்தா குழந்தை ஜோடிகள், பாட்டி குழந்தை ஜோடிகள்........ மந்தை மந்தையாக நின்ற அக்கூட்டம்  "Pied piper of Hamlin" னுக்குப்  பின்னால் அவன் இசையில் மயங்கி  ஓடிய எலிக்கூட்டத்தை எனக்கு ஞாபகப்படுததியது! இன்று  வாக்கர்ஸ் வே உங்களுக்கு சொந்தமில்லை என கூட வந்த சொந்தங்களும் பந்தங்களும், அமோக லாபந்தான் இன்றைய  வியாபாரம் என  அந்த நேரத்திலியே சூடு பறக்க  காபியும் டீயும் இன்ன பிற வஸ்துக்களையும் விற்கும் கடைகளுமாக அங்கு ஒரு திருநாள் களை  கட்டியிருந்தது....... விடுவோமா நாங்கள் ......? கருமமே கண்ணாயினராக வளைந்து நெளிந்து அந்த கூட்டத்திற்கிடையே நடைப்  பயிற்சியை தொடர்ந்தோம்.
கேமரா சகிதமாக  கேள்வி கேட்பவர் நடுவில் ஒரு காட்சி
" பாட்டி ஒங்கள ஒரு பேட்டி எடுக்குட்டுமா......?"
இந்த பேட்டியும் பேரன்  செலக்சனுக்கு உபயோகமாக இருக்கும் என பாட்டி எண்ணியிருக்கக் கூடும்
ஒரே நிமிசம்ப்பா  என பையைத் திறந்தவர் "பேரனுக்குகொஞ்சம்  பகுடர் எடுத்துகிட்டு வந்திருக்கன்...... சிறுசா நானும் கொஞ்சம் " பேரன்  செலக்சனுக்கு மெருகூட்டத் தயாரானார் அந்த மூதாட்டி!நல்ல வேளை முந்தைய சந்ததித்
தமிழர்களின் ஒரே  மேக்கப் சாமான் பவுடர் மட்டுமே !!
"அம்மா...... அம்மா..... எனக்கு பயமாயிருக்கும்மா.......... அம்மாவின் துப்பட்டாவை இறுகக் கட்டிப்பிடித்திருந்தான் அந்த சிறுவன்
" ஏண்டா தம்பி...என்னாச்சு ?"
"மெழுகு பொம்ம நம்மள பாத்து வருதும்மா."   
சின்னக் கவுன் அணிந்து குதிங்கால் செருப்பணிந்து  ஏகத்துக்கும் மேக்கப் போட்டுஅங்கங்கே  கேள்வி கேட்க வந்திருந்த  அந்தப்பெண் அந்த சூழ்நிலைக்கு ஒவ்வாத ஒரு பொருளாகவே காட்சியளித்தாள்
" மெழுகு பொம்ம மெழுகு பொம்ம......." அவன் அழுகையை அம்மாவால் அடக்கத்தான் முடியவில்லை!
 ஹோட்டலுக்குள்  வருகிறோம்
" ஏன்னா இண்ணைக்கி நீங்கள்ளாம் ஒரே பிசியா ..?" கும்பலாய் வரவேற்பில் நின்று கூட்டத்தை சமாளிக்கும் வழி முறை பேசிக்கொண்டிருந்த  பணியாளர்களைக்  கேட்டேன்
"அம்மா இது ஒரு கண்ராவிம்மா....... எனக்கும் இந்த வயசில ரெண்டு பொம்பள பிள்ளைக இருக்கும்மா. நானோ என் மனைவியோ எம் பிள்ளைகள இந்த அழிசசாட்டியத்திக்கெல்லாம் இட்டுகிட்டு போமாட்டோம்..... நேத்து நடுச்சாமத்துல பாருங்க ஒரு பாட்டி தான் பேத்திய கூட்டிகிட்டு நம்ம  கேட்டு கிட்ட பரிதாம நிக்கிது.காலையில நடக்கப்போற சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொள்ள பேத்தியை நாகப்பட்டினத்துக்கு அந்தாண்ட கிராமத்துலேர்ந்து பஸ்ஏத்தி  நாகப்பட்டினத்துல பஸ்ஸுக்கு காத்துகெடந்து  இங்குட்டு நடுச்சாமத்துல எறங்கி ஆட்டோ புடிச்சி தன்னந்தனியா வந்து பேத்திய கொண்டாந்து சேக்க வேண்டிய எடத்துல சேந்துருச்சு. ஆட்டோகாரங்க நல்லவனும் இருக்காய்ங்க...... இதுக ரெண்டையும் எங்குட்டும் தள்ளிகிட்டு போய் சீரழிக்கிறவனும் இருக்காய்ங்க...... . பாத்தா பாவமா கெடக்கு......  என்னாபண்றதுன்னு தெரியாம அந்த நேரத்துல மேனேஜர எழுப்பிவுட்டு  கேட்ட  தொறந்து விட்டோம்வரவேற்புல சோபா கிடுக்குல ரெண்டும்  படுத்துகிச்சுக........அங்கிட்டு சோபா எல்லாத்துலயும்  நாளைக்கி வேல பாக்கப்போற சேனல் ஆம்ள ஆளுக......... ஒண்ணு கெடக்க ஒண்ணு  ஆயிருச்சுன்னா இந்தக்கெழவி நெஞ்சுலயும் மார்லையும்  அடிச்சிகிறதுதான் மிச்சமாவும்......  ஏம்மா நம்ம ஆளுக இப்டி புத்தி கெட்டுபோயி டிவி டிவிண்னு  அலையுதுக? ஊர்ல விடியக்காலம் கஞ்சி  குடிச்சிட்டு கெளம்புனதுதாம்......."
"அந்த ராவுல எங்க கிட்டேருந்து பாட்டிக்கு  நல்ல வசவுதான் டூட்டியில இருக்க நாங்க கேட்ட தாண்டி  வெளிய போக்கூடாதும்மா...... யோசனை பண்ணினோம் . " இந்தா பாட்டி புள்ளைய நாங்க பாத்துக்கிறோம் இந்த மொகன திலும்புனா பாயி கட தொறந்துருக்கும் என்னாச்சும் திங்கிறத்துக்கு வாங்கிகிட்டு வெள்ளன வாண்ணு." அனுப்பிச்சு வச்சோம்.
" நல்ல காரியந்தான் பண்ணுனிங்க........... இப்பயாச்சும் அதுக்கு புத்தி வந்திருக்குணும்......"
"எங்கத்தம்மா  ......... சனமே பேராச  புடுச்சுபோயில்ல கெடக்குவ...... வந்துருக்க ஆயிரம் புள்ளைவள்ள ஒம்பதத்தான்  பொறுக்கி எடுக்கப்போராகளாம்........ இதுக்கு எம்புட்டு மெனக்கேடு .........? விடியக்காலம் புள்ளைகள எழுப்பி உட்டு அதுகளுக்கு சோடன  அலங்காரம் பண்ணி  வரிசையில நிக்க வச்சு நம்பர குத்தி  உள்ள பாடுறதுக்ககுப்போனா  அவங்களுக்கு வேண்டிய அஞ்சார ஏற்கனவே பொறுக்கி வச்சிட்டாங்கண்னு பேச்சு அடிபடுது...... கள்ளமில்லாத இந்த புள்ள குட்டிக நாய் படாத பாடு படுதுக."
ஒருத்தர் மாத்தி ஒருத்தர் என்னிடம் கொட்டி தீர்த்துவிட்டார்கள்......
செடிகளை செடிகளாக வளர விடும் பக்குவம் நம்மில் என்று வரப்போகிறது? . அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே...... மதிப்பீட்டு உரம் மட்டும் வலுவாகக் கொடுத்து  ரசாயன உரங்கள் வேண்டாத  ஊக்குவிக்கிகளைத் தவிர்த்து பிஞ்சில் பழுக்கா பழங்களாக நம் குழந்தைகள்  வளம் காணும் நாளும் என் நாளோ!

பி.கு ......சூப்பர் சிங்கர் தவிர்க்க வேண்டிய எனது  லிஸ்டில் சேர்ந்து   வெகு நாளாகிறது   

2 comments :

  1. சூப்பர்சிங்கர்ஸ் நிகழ்ச்சியை ரசித்துப்பார்க்கும்போது இவ்வளவு ஆழமாக அதை நினைத்துப்பார்க்கவில்லை .நீங்கள் சொல்வது போல அவர்களும் குழந்தை தொழிலாளர்கள்தான்.இந்த வாரம் நியூயார்க் தமிழ்ச்சங்கத்தில் சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சி இருக்கிறது .இதை படித்து விட்டதால் அதனை ரசிக்கமுடியாது என்று நினைக்கிறன் .

    ReplyDelete
  2. எல்கேஜி யிலிருந்து வேண்டாத மன அழுத்தத்தையே அள்ளிக்கொடுத்த பெற்றோர் தோளுக்கு மேல் அவர்கள் வளர்ந்தபின் செல்லையே நோண்டிகிட்டு இருக்குக சொன்ன பேச்ச காதுல வாங்க மாட்டங்குதுத என்று அங்கலாய்ப்பது பிஞ்சிலே பழுக்க வைத்ததின்தண்டனையே என்பது என் கணிப்பு ... கருத்துக்கு நன்றி

    ReplyDelete