Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Friday, 24 November 2017

என்றும் மனதில் நிறை ஆசான்

1950 களின்கடைசி.அந்த சின்ன நகரத்தைச்சுற்றியுள்ள கிராமங்களுக்கு அதுதான் கல்விஸ்தலம். கிராமத்தில் அஞ்சாம்ப்பு முடித்து விட்டால்  புத்தகத்தின் மஞ்சப்பையோடு பித்தளைத்தூக்கு பழைய சோறு ஊறுகாய் சோத்து மூட்டையை சுமந்து கொண்டு நடராஜா பஸ்ஸில் அந்த நகரத்தை  நோக்கி  பொடி நடை போட வேண்டியதுதான்.
ஐயா.......  இந்த பய சரியா படிக்கில கொள்ளுலண்ணா கண்ணை முட்டும் வச்சிட்டு தோலு சாடா உரிச்சிருங்க........ நாங்கதான் தற்குறிகளா கெடந்து அல்லாடுறோம்.... எங்க புள்ள குட்டிகளாவது கெவுர்மேன்ட்டு வேலையில உக்காந்து நாலு காச கையில் பாக்குட்டும்.” இந்த மாதிரி அப்பாக்கள்கட்சி ஒரு புறமென்றால்ஏட்டுசொரக்கா கரிக்கி ஒதவாதுங்க..... எழுத படிக்க தெரிஞ்சா பத்தாதா? ஒழைக்குணுங்க...... அதுதான் மனுசன மேல தூக்கிவுடும் என்கிற அப்பாக்கள் இன்னொரு கட்சி! இதுல என்னா விஷயம்ணா இந்த ரெண்டு ரூலும் பொம்பள பிள்ளைகளுக்கு கெடையாது.”அடுப்பு ஊதுற பொண்டுகளுக்கு படிப்பு என்னாத்துக்கு?“ அடுக்கு மொழி ஒண்ணிலயேகதையை முடிச்சிருவாங்க!
இதுல மேஜால்ட்டி மொத வகைய சேந்தவங்களா இருந்ததனால பள்ளிக்கூடங்களுக்கும்  வாத்தியார்களுக்கும் மதிப்பு ஜாஸ்தி. எல்லா வாத்தியார் கிட்டயும் வகுப்பு புஸ்தகம் இருக்கோ இல்லியோ  சரி பெரம்பு ஒண்ணு கட்டாயமா கைவசம் இருக்கும்!
அண்ணைக்கி தமிழ் கிளாசு. பசங்க நடுங்கிகிட்டு உக்காந்திருந்தாங்க.ரொம்ப கண்டிஷனான மனுஷன் அவுரு.எள்ளுங் கொள்ளும்  வெடிக்கிற மூஞ்சி. தமிழல லானா லாவண்ணா தப்பு பண்ணினா படு கோவம் வந்துரும்."ஏன் தமிழைக்  கொலை பண்ணுகிறிர்கள்? "வாலப் பல தோளுல பில்ல வலுக்கி உலுந்து வாலு  வாலுண்ணு அலுவுதுங்கிறதுதமிழா?....... கொச்சத்தமிழும் ஆவாது அவுருக்கு. இப்படி தமிழை ஒட்டியே
எவனாச்சும் ஒருத்தனுக்கு தினப்படிக்கி மண்டாபுடி நடத்திடுவாரு. இண்ணைக்கி எந்த பய அவுருகிட்ட மாட்டிகிட்டு பெரப்பம் பழம் திங்கப்போரானோ? பையனுக விதிர்த்துப் போய் கெடந்தானுக. யேய் கடைசிப்  பலகை எழுந்து நில்...  நான் முன்பு சொன்னதை பிழையில்லாமல்  சொல் பார்க்கலாம்." செம்மொழித்தமிழில்ஆசிரியர் கேள்வி கேட்க  "வாலப் பலத்  தோல" சொல்லடையை  அந்தப் பையன் தலையை சொரிந்து கொண்டே தப்பும் தவறுமாக கொட்டித்தீர்த்தான்
"நேற்று  இதை  எப்படி சரியாகச் சொல்ல  வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தேன் அல்லவா?
 "சார் நானு  நேத்து பள்யூடத்துக்கு லீவு சார்" என்றான். சார்ணு  யாராவது கூப்புட்டுட்டா  கோவம் பொத்துகிட்டு வந்துரும் அவுருக்கு.  "ஐயா" என்று தமிழில் விளிக்க வேண்டும் என்பார். தமிழை இவன் கொலை பண்ணிய எரிச்சலும்  கொச்சைத் தமிழ் உபயோகமும் பள்ளிக்கு லீவு போட்ட மூன்று அயிட்டங்களும்  சேர்ந்து  அவரது  மூன்றாவது கண்ணை திறந்து விட்டு விட்டது. வெளுத்து அள்ளிவிட்டார் அந்தப்பயலை. அடித்தஅடியில் காலிலிருந்து ரத்தம் ஊற்றுகிறது. சார்.... அடிக்காதிங்க.... சார் என்று நொண்டி வேறே
அடித்துக் கொண்டே  ஓடியவன் ஒரு கட்டத்தில்  அப்படியே அவர் கையை அழுத்திப்பிடித்துக்கொண்டு " டேய்  நான் யாரு பையண்ணு தெரியுமா ஒனக்கு? ராஜபுரம் பக்கிரி கேள்வி பட்டிருக்கியா அவுரு
வீச்சருவா..... எம்மேல ஒழுவுதே..... அந்த ரெத்தத்தவிட நெறயா ரத்தத்த பாத்திருக்குடா....... வா வா என்  அப்பாருகிட்ட சொல்லி ஒன்ன ஒரு வழியாக்கிடுல நான் என் அப்பனுக்கு பொறந்த பில்ல இல்லடா" எகிறிக்கொண்டு வகுப்பைவிட்டு ஓட ஆரம்பித்தான்.
இந்தப்பையன் அம்மா பிடிவாதத்தின் மேல்தான் பள்ளிக்கூடம் வருகிறான்.. " ஏண்டி தடிஎடுத்தவன் தண்டல்காரன்னு ஒனக்குத்தெரியாதா என்னா? எம்புள்ளைக்கி எதுக்குடி படிப்பு?"
" ஆமா  ஒன்னாட்டமே ஒன பிள்ளைய வளத்தா நாடு உருப்புட்டுதான் போவும்... ஒனக்கு எவ்வளவோ நானு உட்டு குடுத்து போறேன் இந்த படிப்பு வெசயத்துல முட்டும் தலைய உடாத...... எம்பிள்ள பெரிய படிப்புபடிக்கிணும், பெரிய உத்தியோகத்துக்கு போவணும்."
இந்த தர்க்கத்தில் மனைவியின் கை ஓங்கவே பையன் பள்ளிக்ககூடத்தில்  ஆஜர் ஆகியிருக்கிறான்            
ராஜபுரத்திலிருந்து வரும் பையன்கள் இந்த ஆளைப்பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறார்கள்.
இவன் கிருபையால் ஒத்த கையோட திரியிரவங்க ஊர்ல இருக்காங்களாம். பரலோகத்திலயும் ஒண்ணு ரெண்டு பேர் இருக்கறதா கேள்வி. ஊரு ஜனங்கதுஷ்டனைக்கண்டா தூர விலகுஎன்ற கோட்பாட்டில் வாழ்க்கையை நடத்துகிறார்களாம்.
பையனுடைய வசவால் அதிர்ந்து  போய்  உட்கார்ந்திருந்த தமிழ் ஐயாவின் காதில் பையன்கள் இந்த தகவல்களை விளாவாரியாக போட்டு விட்டார்கள். மறு நாள் வகுப்பு முடிந்தவுடனும் இந்த  காது கடிப்பு தொடர்ந்தது. பக்கிரி இவரை கன்னா பின்னா என்று வைது கொண்டு கத்தியை தீட்டிக்கொண்டு இருக்கிறானாம்.......
 இதற்கு மேல் ஆசிரியரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.ஹெட்மாஸ்டரிடம் புலம்பித் தள்ளிவிட்டார்.அவரை ஆசுவாசப்படுத்தியவர் பையன்கள் சொன்ன விஷயங்களை எல்லாம் ஊர்ஜிதபடுத்தியபின் அவசர மீட்டிங் ஒன்று கூட்டி   வாத்தியார்களிடம் விஷயங்களை எடுத்து வைத்தார் பிரம்பை உபயோகிப்பதில் நாம் கொஞ்சம் நிதானமாகவே இருக்க வேண்டும் என்ற உபதேசத்திற்குப்பிறகு  இந்த சிக்கலை எப்படி தீர்ப்பது என்று எல்லோரும் சேர்ந்து  ஆலோசனைசெய்து சுமுகமாக முடிக்க வேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டார்.
சாம தான பேத தண்ட முறைகளை எல்லாம் அலசி ஆராய்ந்தபின் காந்தி வழிதான் சிறந்த வழி என்று முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடத்திவிடலாம் என்றனர்.
பேச்சு வார்த்தைக்கு யார் போவது? பூனைக்கு யார் மணி கட்டுவது?!
"தமிழாசிரியர்தான் போக வேண்டும் அப்போதுதான் அந்த மனிதனின் வேகம் குறையும்"என்ற கருத்து முன் வைக்கப்பட்ட அந்த நொடியில் குதித்து எழுந்த அவர்  "கொலைகாரன் கையில என்ன புடிச்சு குடுக்குறதுல அவ்வளவு சந்தோஷமா ஒங்குளுக்கு? அதெல்லாம் நமக்கு சரி வராது... வேலைய வேணுண்ணா கூட உட்டுடுறேன் ஆளஉடுங்கப்பா நீங்க." செம்மைத் தமிழெல்லாம் ஓட்டமெடுக்க தமிழ்  ஆசிரியர் நம் பாணியில் விளாசித்தள்ளி விட்டார்
அப்போது "நான் வேணுண்ணா முயற்சி பண்ணி பாக்குட்டுமா?"
சின்ன வயசு மனுஷன்...... குஞ்சும் குளுவானுமா சின்ன சின்ன பிள்ளைகள்  இவுருக்கு என்னா தலையெழுத்தா மொரடன் கிட்ட போய்  மாட்டிகிறத்துக்கு? "இல்ல இதை சமாளிச்சா  பேரு ஏதும் கெடைக்குதாண்ணு பாக்குறானோ?" பலா சிந்தனைகளா எல்லோரும் உட்கார்ந்திருக்க  ஹெட்மாஸ்டர் தயங்கித் தயங்கி  ஒத்துக்கொள்ள  கூட்டம் அரை மனசாகத்தான் கலைந்தது.
ஹெர்குலிஸ் சைக்கிள்  அந்தக்  கால அதிசயங்களில் ஒன்று. சாமியைக்கும்பிட்டு விட்டு  அந்த கிராமத்தில் போய் இறங்கி விட்டார் வாத்தியார். அந்த வீட்டுச் சுவரல்லாம் காவிஅடித்திருந்தது அடிவயிற்றைக்கலக்கிற்று. தடியைத் தொட்டவுடன் உன் தலை காலி என சூசகமா சொல்கிறானோ அப்பங்காரன்?
 நம்ம பய  காலிலே மூலிகை கட்டு போட்டு வீட்டுக்குள்ள கிடக்கிறானோ இல்லை டவுன் ஆஸ்பத்திரியில் கிடக்கிறானோ என்ற கிலேசத்தொடு போனவருக்கு  தெருவில் விளையாடிக்கொண்டிருந்த பையனைப் பார்க்கவும் ஒரு தனித்தெம்பு வந்துவிட்டது. " இவரைப்பார்த்தவுடன் ஓட்டமாக ஓடி வந்தவன் சார் சார் என்று சொல்லிக்கொண்டே அவர் கையைப்பிடித்துக்கொண்டான். அதோடு நிற்காமல் "யம்மா... யம்மா...இங்க பாரு..... சாரு வந்திருக்காரு பாரு... அம்மாவுக்குக் குரல் கொடுத்தான். முந்தானையில் கைத்துடைத்துகொண்டே வெளியே வந்த அம்மா ஆஜானுபாகுவான ஆறடி உயரத்தில்  நிக்கிற  இந்த மனுசன்  எம் புள்ளைய என்னா அடி அடிச்சிருப்பான் என மனசுக்குள்ள கருவிக்கொண்டே  "யோவ் ....வாத்தி  ஒனக்கு உசுரு மேல ஆச இருந்துச்சுன்னா வந்த சொவடு தெரியாம அவுரு வர்றத்துக்குள்ள ஓடிப்போயிரு, இங்கன என் ஊட்டுக்கு மின்னாடி ஒரு கொலை உளுவக்கூடாது பிரியுதா? ஓடு ஓடிப்போ....
" யம்மா நானு  சொல்றத  கொஞ்சம் கேளும்மா இவுரு அந்த வாத்தியார் இல்ல இவுரு நல்ல வாத்தியாரு...." அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே  ஊர் பசங்கள்ளாம் சார சுத்திகிட்டு கொண்டாடுரானுக. வாத்தியார் பாண்ட் ஒரு பாக்கெட்டில் எப்பயும் ஆரஞ்சு முட்டாய் இருக்கும். இன்னொரு பாக்கெட்ல சாக்பீசு.
பையிலிருந்து முட்டாயிய எடுத்து சுத்தி நின்னவங்களுக்கெல்லாம்  குடுத்தவருகிட்ட " சார் சார் எங்குளுக்கு ஓலகப்படம் வரைய கத்துகுடுங்க சார்"ணு கையப்புடிச்சிகிட்டு கெஞ்சுரானுக. நம் பையனும் ஆமா சார் எங்க உட்டு சொவுத்துல வரைஞ்சா பளிச்சுண்ணு இருக்கும் சார் அதப்பாத்து நாங்க ஊரு பூரா வரஞ்சிடுவோம் சார் " ஒரே கோரஸ்.
இந்த சம்பாஷணையை கேட்டுக்கொண்டிருந்த அம்மாக்காரி "ஐய்யா திண்ணையில வந்து குந்துங்க..... கொஞ்சம் மோரு கொண்டாறேன்"ணுஉள்ளே போனது. அதற்குள் சாக்பீசை எடுத்த வாத்தியார் அமெரிக்காவிலிருந்து தொடங்கி வரைய ஆரம்பிக்க பையன்கள் நாடுகளையும் நதிகளையும் தலை நகரங்களையும் கடல்களையும் சொல்லிக்கொண்டே வந்தார்கள். வாத்தியார் பயந்து போய் நின்ற காவி நிறச்சுவர் இப்போது குதுகலச்சுவராக மாறிப்போனது. இந்த அதிசயத்தைப்பார்க்க கூடி நின்ற ஊர் கத்தி கப்படா சகிதம் வந்து கொண்டிருந்த வீட்டு சொந்தக்காரரைக்கண்டதும் கொஞ்சம் பின் வாங்கிப்போனது. ஓட்டமாக ஓடி தன்  புருஷனை வழிமறித்த அம்மாக்காரிஎன்ன பேசினாள் என்று கூடி யிருந்தவர்களுக்கு தெளிவாக இல்லாவிட்டாலும் அவள் கையாட்டலும்  விரல் சுழிப்புகளும் சாம தான பேத தண்ட முறையில் வாத்தியாரைப்பற்றி நல் அபிப்பிராயம் கொடுப்பதை உணர்த்தியது உண்மை.
கைகட்டி அவர் முன் நின்ற அவனிடம் நம் வாத்தியார் தமிழ் வாத்தியாரின் கல்வி  ஈடுபாடு பற்றி எடுத்துரைத்து இனி அவர் பிள்ளையை அடிக்காமல் பார்த்துக் கொள்வதாக வாக்களித்தார். ஒரு போனசாக காலையில் கிளம்பி பள்ளிக்கூடத்திற்குப் போகுமுன் தன் வீட்டிற்கு  வரும்படியும் அங்கே அவனுக்கு பாடங்களை தெளிவாக சொல்லிக் கொடுத்து விடுவதாகவும் கூறினார்.
."ராஜா ஒன்பையன் பெரிய படிப்பு படிச்சு பெரிய உத்தியோகத்துக்கு வரப்போறத நீ பாக்கத்தான் போற." இந்த கற்பனையில் அந்த ஆள் நம் வாத்தியார் முன் கைகட்டி வாய் பொத்தி நின்றது உண்மை!   
 ஆண்டு பல கடந்து விட்டது. அந்த ஆசிரியர் இறந்தும் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
2017 ம்  ஆண்டு அமெரிக்காவில் படித்து பட்டம் பல பெற்று ஒரு துடிப்புள்ள இளைஞனும் அதே படிப்பும் ஆற்றலும் உடைய அவன் மனைவியும் சொந்த மண்ணுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கோடேதிரும்புகின்றனர். ஆங்கங்கே மரம் நட வேண்டும் என்ற ஆவல் மனதை நிறைக்க ஆர்வலர் ஒருவரை சந்திக்கச் செல்கின்றனர். அவர்களைப்போலவே அவரை சந்திக்க வயதான ஒருவரும் காத்திருக்கிறார். முகமன் கூறிய பேச்சு குடும்பத்தின் பக்கம் திசை திரும்புகிறதுஅப்பாவின் பெயரை அவன் சொன்ன அந்த நொடியில் அவர் அந்த இளைஞனை கட்டிப்பிடித்துக்கொண்டு நீ  இன்னாருடைய பேரனா என்று கேட்க அவன் தலையாட்டலில் அகமகிழ்ந்த அவர் " தம்பி நான் பெரிய வாத்தியாரின் மாணவன், என்னுடைய மகன் உன் அப்பாவின் மாணவன். எங்கள் ஊருக்கு நீங்கள் கட்டாயம் வரவேண்டும். இன்னும் உன் தாத்தாவின் பெயரை எங்கள் ஊர் சொல்லும். இண்ணைக்கி எங்கள் ஊரில் நல்ல வேலையில் இருந்து ரிட்டையர்டு ஆனவர்கள் இன்றும்  அவரைப்பற்றி பேசுகிறார்கள்ஜாதி மத பேதம் இல்லாத உயர்ந்த மனுஷர். ரோட்டில் எவனாவது சிகரட்பிடித்தால் " ஒம்பொண்டாட்டி பிள்ளைகளுக்காக விட்டுடு ராஜா"ண்ணு  உரிமையுடன் பிடுங்கி எறிந்துவிடுவார். அவருக்கு எல்லோரும் ராஜாதான்  எந்த வீட்டில் எந்த பிரச்சனையானாலும் ராஜாசார் வந்தால் சரிப்படுத்திவிடுவார் என்பது இந்த சுத்து வட்டார கிராமங்களின் அசைக்க முடியாத                  நம்பிக்கை. அவரு பேரு என்னாண்ணுகூட எங்குளுக்கு சரியாத்தெரியாது ஆனா எங்க எல்லோருக்கும் அவுரு ராஜா சார்தான் " மூச்சு விடாமல் பேசியவர் அவர்கள் இங்கு  வந்திருக்கும் காரணத்தைக்கேட்க அவர்கள் தங்கள் லட்சியத்தைச் சொல்ல அவர் உடனடியாக " நாளைக்கி நீங்கள் எங்கள் ஊருக்கு வர்ரிங்க  உங்களுக்கு  மரம் வைக்க இடம் முட்டும் இல்ல ராஜா சார் பேரனுக்கு என்னா ஓதவி தேவையோ  எல்லாத்தையும்  நாங்கசெய்வோம் நாளைக்கி காலையில நம்ம ஊட்ல நீங்க கட்டாயம் டிபன் பண்ணணும்.
திக்கு முக்காடிப்போனான் அந்தப்பையன். அவர் முன்னாளைய எம் எல் வாம்... இவ்வளவு சக்தி தாத்தாவுக்கு எப்படி? இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஒரு சாதாரண மனிதனுக்கு இவ்வளவு ஆற்றல் இருக்க முடியுமா என்ன? உண்மைக்கும் நேர்மைக்கும் நிபந்தனையற்ற புகழ் நாடா கொடைகளுக்குள் எத்துணை வலிமை? அவன்  மனதை நிறைத்து நின்ற  தாத்தா இன்னமும் பிடிபடாத ஒரு சக்தியாகவே வீற்றிருக்கிறார்!
இந்த சம்பவத்தை  என்னிடம் சொல்லி மகிழ்ந்து போனவன் என் தம்பி பையன்
ராஜா சார் எங்கள் பதின்மரின் தந்தை என்பதில் பெருமை கொள்கிறோம்!!    

1 comment :

  1. என்ன ஒரு உருக்கமான வரலாறு .ஆஹா விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும் என்பார்கள் .இங்கே தங்கம் விதைத்து தங்கமே முளைத்த கதை கேட்டு புல்லரித்துப்போனது என் மனசும் .

    ReplyDelete