Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Tuesday, 30 January 2018

படிக்க சென்ற தங்கம்

ஆசைக்கோர் அளவில்லை அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்தவர்க்கும்
"பொம்பள பிள்ள பொறந்திருக்கு மேடம்."
"சந்தோஷந்தானேப்பா?"
"சந்தோஷந்தாங்க...... ஆனாலும் ஒரு விஷயம் முட்டும் எனக்கு புடிபடுல. எங்கப்பா என்ன படிக்க வச்ச மாதிரிதான் என் தங்கச்சிகளையும் படிக்க வச்சாங்க. ஆனா பொறந்த நொடியிலேர்ந்து  அவுங்களுக்கு பவுனு சேக்கறத மட்டும் அவுங்க நெறுத்தவேயில்ல. பேருவக்கிற விழா ஏழெட்டு வயசுல வெளக்கு பூஜை விழா வயசுக்கு வந்ததுக்கு  ஒரு விழா இப்படியா பவுனு சேக்கறத்துக்குண்ணே வீட்ல எப்பயும் கொண்டாட்டந்தான்.
தங்கச்சி பேருக தங்கம் காஞ்சனா.......ட்டி பேரகேட்டிங்கண்ணா சிரிப்பிங்க பவுனுத்தாயி!
சின்ன பிள்ளைகள கொஞ்சறது கூட எந்தங்கம் என்பவுனுண்ணு தானே நாம  கொஞ்சுறோம்? பாரதியார் சொன்னத கொஞ்சம் மாத்தி போட்டு  'என்று மடியும்  இந்த தங்கத்தின்  மோகம்'ணு ஒண்ணு ரெண்டு பேர் புரட்சி பண்ண ஆரம்பிக்கணும் மேடம்.ஆணும் பொண்ணும் சமம்ணு சும்மனாச்சுக்கும் சொன்னா சரியாப்போச்சா?என் பொண்ணுக்கு இதெல்லாம் பண்ணக்குடாதுண்ணு சொன்னேண்ணு  வச்சிக்குங்க, வீட்ல பெரிய களேபாரந்தான் ஆவும்.
என்னாத்த படிச்சாலும் பவுனு சேக்கரதுமுட்டும் நிக்கவேயில்ல. கேரளாவ எடுத்துக்குங்க இந்தியாவுலேயே படிச்ச பொண்ணுக இருக்க எடம் இதுதான். ஆனா நாட்டோட பாதி பவுனு இங்கல்ல வாசம் பண்ணுது!
என்னோடு பகிர்ந்து கொண்டவர் சொன்னது உண்மைதான்.நம் இந்திய கலாச்சாரத்தில் தங்கம் நீக்கமற நிறைந்து போன ஒரு உயரிய வஸ்து. உலகத்தின் 11% தங்கம் நம் வீடுகளில்தாம் குடியிருக்கின்றன. கொஞ்சம் நஞ்சமல்ல  1.6 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 24000 டன் தங்கத்தை இந்தியர்கள் நாம் பதுக்கி வைத்துள்ளோம்!
ஆமாம் சும்மா 'வைத்திருக்கிறோம்' என்று சொன்னால் பத்தாதா?  அது என்ன 'பதுக்கி' வைத்திருக்கிறோம் என்ற அடை மொழி? அது அவசியந்தானா?!
ரொம்பவே அவசியமான அடைமொழிங்க அது!
ஏண்ணா இவ்வளவு மதிப்புள்ள இந்த சொத்தை  நம் வீட்டுஅலமாரிகளில் வங்கி காப்பிடங்களில்
ஆழ் உறக்கத்தில்அல்லவா வைத்திருக்கிறோம்!!  இவைகள் வெளியே தலை காட்டுவதே இல்லை! நம்மிடம்  பெருஞ்சொத்து இருக்கிறது என்ற மனத்தளவு சந்தோஷம் மட்டுமே நமக்கு உரியதாய் இருக்கிறது.
புதிதாக கலியாணம் ஆன தம்பதி... தங்கள் எதிர்காலம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.கணவன் சொல்கிறான் " நமக்கு தெரிஞ்ச பார்ட்டி வழியா ஒரு நல்ல எடம் வெலைக்கி வருது வாங்கிப்போட்டோம்ணா லோன் போட்டு  வீடு கட்டிறலாம். நான் கொஞ்சம் பணம் சேத்து வச்சிருக்கேன். ஒன்னோட நக கொஞ்சத்த குடுத்திண்ணா ரெண்டையும் சேத்துபோட்டு அந்த எடத்த வாங்கி ஓம் பேர்லயே ரெஜிஸ்டர் பண்ணிடலாம்.. நான் மொள்ள மொள்ள புது ஃ பேஷன் நகைகளா வாங்கிக்குடுக்கிறேன்... நீ என்னா சொல்ற?"
பொண்ணு வீட்டு கலாச்சாரத்தை  கிஞ்சித்தும் அறியாத அந்த பாவப்பட்ட பையன் இவ்வளவு பெரிய சுனாமி தன்னைத்தாக்கப்போவதை அறியாதவனாய்   வீட்டுக்கு வந்த மாமனார் மாமியார் மற்றும் கிட்டத்து சொந்த பந்தங்களை வாய் நிறைய வரவேற்கிறான். அவங்க பக்கத்தில் யாருக்கும் கலியாணம் கூடியிருக்கிறதோ? முறைப்படி கூப்பிட வந்திருக்கிறார்களோ?
மரியாதைக்கூட உட்காரத அவர்கள் " நீ உள்ள போ" என்று பொண்ணுக்கு கட்டளை இட்டு விட்டு " ஏண்டா கலியாணம் ஆன ஒடனேயே எங்க பொண்ணு நக மேல கைய வக்கிறியா? ஒன்தங்கச்சிகளுக்கு சீர் செனத்தி தட்டுப்படுதாக்கும்? இதுல எடம் வாங்கப் போறண்ணு எங்க பிள்ளைகிட்ட  பசப்பு வார்த்த வேற... எங்க பிள்ள கலியாணம் காச்சிக்கு  கோயில் கொளத்துக்கு போவுணுமுண்ணு நெனைக்கிறியா இல்ல அத மூளியா நாலு பேரு காறித் துப்புணுமுண்ணு நெனைக்கிறியா?  நாங்க யாருண்ணு இன்னம் நீ சரியா புரிஞ்சிக்கில....... வெல்ல மண்டி வகையறா ஊட்டுப்பொண்ணு....... ஒரு குந்துமணி கொறையாம அறுவது பவுனு நகையும் கழுத்துல போட்டுகிட்டு  வெளிய போனாத்தான்  நாங்க நாலு பேரு முன்னாடி தல நிமிந்து நிக்கமுடியும்...... இத புரிஞ்சுகிட்டு குடுத்தனம் நடத்தப்பாரு." வந்த கையோடு திரும்பிப்போனார்கள் அந்தத்  தங்க மனிதர்கள்! அன்றிலிருந்து அந்தப்பையன் தங்கம் என்கிற வார்த்தையை அவன் அகராதியிலிருந்து அறவே நீக்கிவிட்டான்! இன்று அந்த இடத்தில் மூன்றடுக்கில் அழகான வீடு! ம்..ம்ம்.....என்ற  தனது  ஆதங்கத்தைக்கூட அவன் மனைவியோடு பகிர்ந்து கொள்ளவில்லை!
இன்னொருகதை கிட்டத்தட்ட அதே பாணியில்! பேத்தி மேல் அம்மாச்சிக்கு கொள்ளை பிரியம்.
" பாப்பா அம்மாச்சிக்கி வயசாச்சு...... நான் செத்துப்போயிட்டண்ணா நீ என்னா பண்ணுவ?"
"நீங்க செத்துபோமாட்டிங்க............ செத்துபோமாட்டிங்க .....நீங்க எனக்கு வேணும் " என்று கத்தி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி தன்  பிரியத்தை செல்லப்பேத்தி வெளிப்படுத்தும் என்று எதிர் பார்த்தவர் " அம்மம்மா ஒங்க தங்க நெக்லேச எனக்குக் குடுத்துடுவிங்களா?" என்ற பதிலில் அதிர்ந்துதான் போனார்!
எங்கள் அம்மாவின் சுவாரசியமான இந்தக்  கதை வேறு வித்தியாசமான பிரிவைச்சார்ந்த தங்கக்கதையாக்கும்!
 பதினைந்து வயசுப் புதுப் பெண்ணாக அப்பா ஹெட்மாஸ்டராக ஊருக்குப் புதுக்குடித்தனம் போகிறார்கள்.  அந்த கிராமத்தில் பெண்கள் தங்க வளையல் அணியும் பழக்கமே கிடையாதாம். பணக்கார பெண்கள் கையிலும் கண்ணாடி வளையல்கள்தானாம். கைகள் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு உறுப்பாக இருப்பதனால்  கைவளையின் பவுன் தேய்ந்து போய்விடுமாம். இது காலம் காலம் தொட்டு இருக்கும் வழக்கமாம். ஆனால் புதிதாக கலியாணம் பண்ணிக்கபோற பெண்களுக்கு அம்மா கையில் கிடக்கும் பவுன் வளையல்கள் பெரும் மோகமாகிப்போய்விட்டது. தயங்கித்  தயங்கி ஒரு பெண் தன் கலியாணத்திற்கு தங்க வளையல்களை கொடுக்கமுடியுமா என்று அம்மாவிடம்  கேட்க அம்மா தாராளமாக கொடுக்க அதிலிருந்து அம்மாவின் தங்க வளையல்கள் சுற்றுப்புற கிராம கல்யாணங்களில் பிரசன்னமாகி புதுப் பெண்களை மகிழ்விப்பது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிப்போய் விட்டதாம்!
 அறுபதுகளின் கடைசியில் வேலை நிமித்தம் கிடைத்த கல்கத்தா வாசம்  என்னுள் பெரிய தாக்கத்தை  ஏற்படுத்தியது உண்மை. அங்கு சின்னப்பெண்கள் காது எதுவும் குத்தாமல் சுதந்திரப்பறவைகளாக ஓடியாடிக் கொண்டிருந்தார்கள். நாங்கள்  சின்னப்பிள்ளைகளாக இருக்கையில் சாயங்காலத்தில் விளையாடப்போகும் ஒவ்வொரு நாளும் அம்மாவின் இந்த எச்சரிக் கைக்குரல் என் காதுகளில்  இன்றும் ரீங்காரமிடும். "திருவாணிய நல்லா திருவி உட்டுக்க..... ஸ்டெட்ட தொலச்சிராத......" அம்மாவுக்கு ஊம்..... ஊம் கொட்டிவிட்டு திருவாணியையோ ஸ்டெட்டையோ  தொலைத்துவிட்டு திட்டு வாங்கிய நாட்கள் கல்கத்தாவின் இந்த சுதந்திரமான சின்னப் பெண்களைப் பார்க்கையில்  என்னைப் பொறாமைப் பட வைத்தது.
இந்த அழகான "சிறு பெண் சுதந்திரத்தை" என் பெண்ணும் சுகிக்க வேண்டும் என்ற இலட்சிய நோக்கில் ஒரு வயதிற்குள் சம்பிரதாயமாக நடக்கும் தமிழ் பண்பாட்டின் காது குத்தல் வைபவத்தைப்பற்றி நான் அலட்டிக் கொள்ளவில்லை.
காது குத்தாத எங்கள் ஏழு வயதுப்பெண்ணுடன் நாங்கள் தமிழ் நாட்டைத் திரும்பவும் தொட்டபோதுதான்  குற்றவாளிக் கூண்டில் நான் நிற்பது எனக்குத் தெள்ளத் தெளிவாயிற்று. என் பெண்ணின் காதுகளில் தங்கம் குடியேற்றம் செய்யப்பட்டது!!
ஆறு பெண்களும் நான்கு பையன்களும் அடங்கிய எங்கள் பெரிய வீட்டில் அம்மாவின் நகைகள் அவ்வப்போது அந்தர் தியானமாகிவிடும்! முதலில் ஆச்சரியத்தோடு நாங்கள் அதைப்பற்றி கேட்கையில்  "பள்ளிக்கூடத்துக்கு படிக்க போயிருக்கு" என்று தமாஷாக சொல்லுவார்கள். "அதுக்குக்கூட பள்ளிக்கூடம் உண்டா என்ன? அது
எங்கிருக்கும் ?" என்று சின்ன வயதில் ஆச்சரியப்படுத்திய அந்த பதில் எங்கள் பலாதேவைகளுக்காக நகைகள் வங்கியில் அடகு வைக்கப்பட்டிருக்கிறன  என்பதை வாலிபம்  புரிய வைத்தது!
சென்னையில் புகழ் பெற்ற கல்லூரி. ஹாஸ்டல் வாசம்.... PG பண்ணிக் கொண்டிருக்கிறேன். மாதாந்திர மெஸ் பில் எப்போதும் ஃபைனோடுதான்.
அந்த மாதம் ஃபைனோடு கட்டும் கெடுவும் முடிந்து போய் வார்டனிடமிருந்து மெமோ வந்துவிட்டது.எனக்கு
மாசம் முடிந்தும் பணம் வரவில்லையே என்று கோபம் ஒரு பக்கம்....  மற்றொரு பக்கம்  ஊரில் யாருக்கும் உடம்பு சரியில்லையோ என்ற சஞ்சலம்.நான் போட்ட கடிதத்திற்குக்கூட பதில்வரவில்லை.
ஆடி அசைந்து ஒருவழியாக பணம் வந்து சேர்ந்தது.
லீவிற்கு ஊருக்குப்போகிறேன். அம்மா கட்டிப்பிடித்துக்கொள்கிறார்கள். என் அணைத்தலில் ஒரு சின்ன விரிசல் ஃ பீஸ் நேரத்தோடு வரவில்லையே?
 தம்பி தங்கைகள் என்னிடம் கிசு கிசுப்பு... "அம்மா கிட்ட ஒங்க மெஸ் பில் ஏன் லேட்டா வந்துதுண்ணு கேக்காதிங்கக்கா.அவுங்க தாலிக்  கயித்துல போட்டிருப்பாங்கள்ள குண்டு காசு கொழா இதல்லாம் அவுத்து வித்துதான் ஃ பீஸ் கட்ட பணம் பொரட்டுனாங்க.இந்த விஷயத்த அக்கா கிட்ட சொல்லக்கூடாதுண்ணு எங்ககிட்ட சொல்லியிருக்காங்க.

சரிந்து போனேன்…...தியாகங்களை  எண்ணங்களை எடை போடத்தெரியாத படித்த அறிவிலியாய்.......எப்படி நான்...? என் தங்கத் தாயை.....இறுக அணைத்து.... எந்நிலையிலும் மகிழ்வாக வாழும் கலையையே இன்றும் என் தாரக மந்திரமாய் எனதன்னையின் பெரிய விசிறியாய்....!! 

5 comments :

  1. அருமையான பதிவு மேடம் , என் மனைவியும் இதேதான் சொல்கிறாள் , ஆத்திரத்திற்கும் அவசரத்திற்கும் உதவுவது தங்கம்தான் என்று .அதைச்சொல்லிக்கொண்டே தங்கம் சேர்ப்பதை இன்னும் அவள் நிறுத்தவில்லை .கேட்டால் "சும்மா இருங்க ரெண்டு பொண்ணுக இருக்கு: என்கிறாள் .என் இரண்டு பெண்களும் தங்கத்தை சீண்டுவதும் இல்லை தீண்டுவதும் இல்லை .பெண்கள் பெயரைச்சொல்லிக்கொண்டு இவள்தான் தன ஆசைக்காக நகைகளை சேர்க்கிறாளோ என்று ஒரு சந்தேகம் எனக்கு இருக்கிறது .

    ReplyDelete
  2. ஒட்டுவாரொட்டியாக இந்த பவுன் ஆசை!! அடுத்த தலை முறை கட்டாயம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும்.
    வேர்களை பிரியமுடன் படிக்கிறேன்.இயல்பான அழகு!! அன்புடன்

    ReplyDelete
  3. சிந்தனைக்குரிய படைப்பு. அந்த மஞ்சள் நிற உலோகத்திற்கு மனிதன் அதிக ஒப்பற்ற தன்மையை கொடுத்ததினால், சுயநலமாய் அது என்னுடனேயே இருக்கட்டும் என்று நினைக்க வைத்தது ஒரு கலாசாரம். இதுமாறிட அறிவுக்கண் திறந்திட வேண்டும்.
    சிந்தனை தூண்டியமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. அருமையான பகிர்விற்கு வாழ்த்துக்கள் ராம்
      அன்புடன்

      Delete