Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Sunday, 4 March 2018

கிளைத்த சில வேர்கள்


எவ்வளவுக்கு எவ்வளவு சுதந்திரமாக தொடக்கப்பள்ளியை வலம் வந்தேனோ அவ்வளக்கவ்வளவு ஆறாவதில் சேர்ந்த புதிய பெண்கள் பள்ளி புயல் போல என்னைத் தாக்கியது நிஜம்!
நிறமும் அழகும் இவ்வளவு முக்கியமானதா  என்னைத்திகைக்க வைத்தது இப்பள்ளிதான்! ஒரே வகுப்பில் இரண்டு பெண்கள் ஆளுமையோடும் புத்திசாலியாகவும் இருக்கும் பட்சத்தில் சிவப்பான அழகான பெண்ணே வகுப்பு லீடராக ஆயிருப்பாள். வகுப்புக்குள்ளேயே இருக்கும் நான்கு
ஸ்குவாடுகள் நான்கு இந்திய வீராங்கனைகள் சாந்த்பீபீ பத்மினி தமயந்தி ரசியா பெயர் கொண்டது. இதில் போனால் போகிறதென்று ஒன்றிரண்டு கருப்பினம் இருக்கும்.
இதுவே இப்படி என்றால் கொண்டாட்டங்களைப்பற்றி கேட்கவே வேண்டாம். சிவப்புத்தோலும் அம்மாங்கள் சொல்லுகிற தினுசில்  பட்டும் பகட்டுமாய் டிரஸ் தைக்கக்கூடிய பவுசு உள்ளவர்களும் கூட்டமாய் கிடக்கிற அந்தப்பள்ளியில் இரண்டு கோணத்திலும் அடிபடும் நாங்கள் எம்மாத்திரம்?! அமையா சமயத்தில்  கிரிக்கெட் விளையாட்டில இருக்கும்  ஸப்ஸ்ட்டிடுட்டுகள் மாதிரி யாராவது காச்சல் கீச்சலா படுத்துட்டா என்ன பண்றதுங்குற கவலையில் அம்மாங்க   எங்களையும் பழக்கி வப்பாங்க..... கடைசி நாள் முட்டும் நாங்க திரிசங்கு சொர்க்கத்துலதான்!
பழைய பள்ளிக்கூடத்துல இந்த வேலையே கெடையாது.
"அம்மாவோட பழைய பட்டுப்பொடவையில தச்ச பாவாட இருக்கு சார்...."
"அப்ப சரி அதையே கட்டிகிட்டு வா."
இத்தோட முடிஞ்சிது கத!
ஒரு ஜன்னல் மூடப்பட்டா ஒரு கதவு கட்டாயம் தொறக்கும்ண்ணு நம்பிக்கையூட்டும் ஒரு உலகப் பழமொழி இருக்கு. செவப்பு நெறங்களால ஏமாந்து போய் நிண்ண எனக்கும் ஒரு அழகான கதவு காத்துகிட்டுதான் இருந்துச்சு.....  
1950அக்டோபர் 24ந்தேதி உலக சமாதானத்துக்காக இந்தியாவும் பல் வேறு நாடுகளும் சேர்ந்து  ஐக்கிய நாடுகள் சபை என்ற ஒரு அமைப்பை உருவாக்கின. 1951-52 களில் இது எங்கும் பிரபலமாற்று. எங்கள் பள்ளி நிர்வாகமும் மாணவியர் இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் உற்சாகம் காட்டினர்.
இந்த நோக்கோடு ஒரு பெருந்திட்டம் தீட்டப்பட்டது. உலகப்படத்தை பெரிய அளவில் வரைந்து  அதில் ஐநா நாடுகளையெல்லாம் குறிக்க வேண்டும் என முடிவெடுத்தனர்.
"இதிலென்ன பெரிய திட்டம் வேண்டிகிடக்கிறது? கூகுளில்  போய் நமக்கு வேண்டிய மேப்பை செலக்ட் பண்ண வேண்டியது அத ஃப்ளக்ஸ் போர்டு பண்றவங்கள்கிட்ட குடுத்தா ஒண்ணு என்ன ஆயிரம் பண்ணிடுவாங்களே!"
"அது இந்தக்காலம்....!! அப்பல்லாம் அசெம்ளி ஹால் நீட்டத்துக்கு பெரிசா ஒரு மேப் பண்ணணும்னா  நிறைய நுட்பமான கணக்கு எடுக்கணும் சின்ன மேப்ப பெருசாக்க ட்ரேஸ் பண்ணணும் ஸ்கேல வச்சு அளவெடுத்து  கட்டம் போடணும்....... அச்சு பிழறாம வரையணும் ரொம்ப ரொம்ப நுணுக்கமான வேல!!"
முழு முனைப்புடன் அம்மாங்கள் இதில் ஈடுபட்டனர். அழுத்தமான வெள்ளைத்துணியில் மேப் உருக்கொண்டவுடன் ஐம்பது சொச்சம்  ஐ.நா.நாடுகளும் வரையப்பட்டது. அடுத்து இந்த நாடுகளையும் தனிப்படுத்திக்காட்டும் வேலை.....  கலர் கலரான எம்பிராய்டரி  நூல்கள். ஒவ்வொரு நாடாக அம்மாங்கள் நாடுகளுக்கு தகுந்த மாதிரி சின்ன ஃப்ரேம் தொடங்கி சைஸ் வாரியான ஃ பிரேம் களில் வைத்து  டைட் பண்ணி கை எம்பிராய்டரி போடும் வேகத்திற்கு ஊசி நூலை அவர்கள் கேட்கும் அளவிற்கு கோத்து கோத்துக் கொடுப்பது ராமருக்கு அணில்உதவி செஞ்சமாதிரி எங்கள் வேலை! அம்மாங்களுடைய கைவேலையில் நான் பிரமித்துதான் போய்விட்டேன். அது வரை உலகத்திலேயே நான் பார்த்த ஒரே தையல் கிழிந்த துணிகளைத் தைக்க அம்மா போடும் மூட்டுத்தையல் மட்டுமே. இந்த அம்மாங்களோ ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு தினுசான தையல் இல்ல  கைவசம் வச்சிருந்தாங்க!! சங்கிலித்தையல்,குறுக்குத்தையல்,மீன்முள்தையல்,
கம்பளித்தையல், அம்புத்தையல், இறகுத்தையல் பிரஞ்சு முடிச்சு டானிஷ் முடிச்சு, பட்டன் ஹோல் முடிச்சு இப்படி அவர்கள் கைவண்ணம் அனுமார் வாலாக நீண்டுகொண்டேதான் போயிற்று!!
மரச் சுவரில் பொருத்தப்பட்ட அந்த மேப் பெரும் சித்திரம் போல் கண்ணைக்கவர்ந்தது!! ஐநா உயர் அதிகாரிகள் மட்டும் இந்த அழகைப்பார்த்திருந்தால் பெரியதொரு பரிசை  வருடா வருடம் எங்கள் பள்ளிக்குக்  கொடுக்கத் தவற மாட்டார்கள்!!
அந்த அக்டோபர் மாதம் ஐநா கொண்டாட்டம்  பெரிய அளவில் பள்ளியில் நடைபெற்றது! பாட்டு டீச்சர் இந்த நாளுக்காக கீழே தொடங்கும் வகையில் ஒரு பாட்டு கட்டினார்கள்
"ஐ.நா. சங்கம் வாழ்கவே உலகில்
அமைதி எங்கும் நிலவவும்
இன்பம் எங்குமே தழைக்கவும்
உலக மக்கள் யாவருமே அன்பு கொள்ளவும்"
அழகான வார்த்தைகளைக்கொண்ட இந்த பாட்டை பள்ளியே சேர்ந்து கூவிப் பாடியது. நிறைய போட்டிகளும் நடந்தன 
1.எல்லா ஐநா நாடுகளையும்  பிழையில்லாமல் குறைந்த நேரத்தில் மேப்பில் குறியிட்டுக் காட்டுதல்,
(அந்த மேப்பை அழுக்காகாமல் இருக்க நாடுகளை ஒரு குச்சியால்தான் காட்டினோம்.)  
2. ஐநா உறுப்பினர் நாட்டுக் கொடிகளை வரைதல்
3.அந்த கொடிகளை டீச்சர்  காட்ட அது எந்த நாட்டுக்குரியது என சொல்லுதல்.
4.அந்த நாடுகளைப்பற்றிய விவரங்களை சிறு நாடகங்களாக  நடித்தல்.
சிகப்பு நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத அழகான போட்டிகள் !!
பள்ளியின் சந்தோஷமான கொண்டாட்டம்!!
ஒன்றிரண்டு பரிசுகள் எனக்கும் கிடைத்ததில்  என் சந்தோஷம்  ரெட்டிப்பாகியது!!
அம்மாங்கள் பள்ளியில் கத்தோலிக்க கிறிஸ்துவ பெண்ணாய் இருப்பது ஒரு கஷ்டமான விஷயந்தான்.  அவர்கள் எங்களை அர்ச்சிஷ்டவர்கள் ஆக்கியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டி உழைத்தார்கள். வெள்ளி சாயங்காலம் பள்ளி முடிந்தபின் பக்கத்திலிருக்கும் பெரிய கோயிலுக்கு பாவசங்கீர்த்தனத்திற்கு பட்டிக்குசெல்லும் கால்நடைகள் போல ஓட்டிச்சென்று விடுவார்கள். ஒரு நாள் வீட்டிற்கு சீக்கிரமாக போகும் நப்பாசையில் நான் அம்மாங்களிடம் "சிஸ்டர் இந்த வாரம் எனக்குப் பாவமேயில்ல" என்று ஒரு கரடி விட்டேன்.என்னுடைய வார்த்தையில்  சிஸ்டர் அதிர்ந்துதான்  போய் விட்டார்கள். ஒரு நிமிஷம் என்னையே உற்றுப்பார்த்தவர்கள் அவர்கள் பக்கத்தில் என்னைக்கூப்பிட்டார்கள். கோயில் மேல்  படியில் நாங்கள் இருவரும் நிற்க மற்ற கூட்டம் எங்கள் இருவரையும் சுற்றி கட்டியம் கூற
"மாகி இந்த வாரம் முழுவதும் பாவமே பண்ணுலயாம்"
 சிஸ்டர் பக்தியாய் கை கும்பிட்டு  என்னைப்பார்த்தார்கள்
கூட்டத்தின் சங்கேதமும் சிஸ்டருக்கு சாதகமாக இருந்தது!
"அதனால இவளுக்கு இண்ணைக்கி என்ன ப்ரைஸ் குடுக்கலாம் சொல்லுங்க?" 
"இந்த அம்மாகிட்ட மாட்டிக்காம சும்மாயிருப்பதே சுகம்ணு" கூட்டம் அமைதி காத்தது
"சரி நாம எல்லாரும் சேர்ந்தே ஒரு ப்ரைஸ் குடுக்கலாமா?"
ஆட்டுமந்தை  வெகுவாக தலையை ஆட்டியது.
இப்ப நம்ம எல்லாரும் கோயிலுக்குள்ள போறோம்  அங்குட்டு இருக்க சூசையப்பர் சுருவத்த கீழ எறக்கிட்டு இந்த பிள்ளைய உக்கார வச்சிரலாமா?"
சிஸ்டர் தன் ஜோக்குக்கு தானே கைகொட்டி சிரிக்க மந்தையும் அதையே பின் பற்ற மனசுக்குள் எனக்கு ஏக  எரிச்சல்.
அண்ணையிலிருந்து ஒரு முடிவு........
ஓர் ரெண்டு ரெண்டு ரெண்டிரெண்டு நாலு மூவிரண்டு ஆறுண்ணு வாய்ப்பாடு ஒப்பிக்கிற மாதிரி  ரெண்டு செட் பாவங்கள் தயார் பண்ணி வச்சுகிட்டேன். வார வாரம்  மாத்தி மாத்தி என் பாவசங்கீரத்தனம் தங்கு தடையில்லாமல்  ஜோரா போச்சு!!
அப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தின் ஒவ்வொரு வகுப்பிலும் நல்லா படிக்காதவர்களைப் ஃபெயில் ஆக்குவது ரொம்ப சாதாரண விஷயம். இப்ப போல ஆட்டமேட்டிக்கா பாஸ் அப்ப கெடையாது. 
 அந்த வருஷம் எனக்குக் கடைசி வருஷம்... அதை ஆறாம் படிவம் அல்லது எஸ்எஸ்எல்சிணு சொல்லுவோம். அப்பதான் அரசாங்கத்தேர்வு. சும்மாவே எல்லா கிளாசுலையும் வடிகட்டும் அம்மாங்க பள்ளிக்கூடத்துக்கு நல்லபேர் வருணும்ங்கிறத்துக்காக அரை வருஷப்பரிட்சைய செலெக்ட்ஷனா வச்சு ஒரு மார்க் கொறஞ்சா கூட   கண்ண மூடிகிட்டு சுத்தற வழிச்சு தள்ளிடுவாங்க!   
சந்தோஷமா கிறிஸ்மஸ், ஜனவரி காப்பரிசித்திருநா எல்லாத்தையும் உண்டு களிச்சு முடிச்சு  பள்ளிகூடத்துக்குள்ள நொழஞ்ச மொத நாளே கண்ணுக்கு முன்னால இந்த செலெக்ஷன் பூதம் மாதிரி நிக்குது.
பேர் வரிசைப்படி ஒத்தைக்கி ஒத்தையா ஹெட்மிஸ்ட்ரஸ் அம்மாங்கள அவுங்க ரூம்ல போய் பாக்கணும்.
"நான் ஜெயிச்சிட்டேன்"  கர்வத்தோட  செலது கிளாசுக்குத் திரும்ப செலது  கண்ணீரும் கம்பலையுமா டெஸ்க்ல வந்து குப்புத்தடிச்சி படுத்துக்கொள்ள அந்த ரூமே கொந்தளிச்சு  கெடந்தது.
என் மொறயும் வந்திடுச்சு ......
கணக்குப்பாடம் எனக்கு வராதது என்னுடைய தப்பே இல்ல...... அது என் அப்பன் எனக்களித்த சொத்து...... கணக்குக்கு  பயந்தே  காலேஜ் போகாத பேர்வழி அவுங்க..... கணக்கில்லாமலும் காலேஜில் படிக்கலாம் என்று எடுத்துச்சொல்ல ஆளில்லாத காலத்தவங்க!
காலெல்லாம் வெட வெடக்க ரூமுக்குள்  நுழைந்து  நடுக்கத்தை உள்அடக்க வல்ல  சத்தமான  "குட்மார்னிங் சிஸ்டர் " சொல்கிறேன்
"கணக்குப்பரிட்ச எப்டி பண்ணின ?"
"சரியா மாட்டிகிட்டேன்."
"நல்லா பண்ணி இருக்கேன் சிஸ்டர்." வாய்தான் பேசினதே தவிர " அழிந்தாய் நீ மாகி " என்று மனசு டமாரம் கொட்டியது.
"ம்ம்ம் .... அடுத்தாப்ல  என்ன பண்றதா உத்தேசம்?"
"சிஸ்டர் டீச்சர் ட்ரெயினிங் முடிச்சிட்டு........ நம்ம
ஸ்கூலுக்கு சேவசெய்ய.......
நான் சொல்லி முடிக்கவில்லை
"கெட்டு குட்டிச் சொவுரா  போ....... போயி  ஒன் அக்காவ கையோட கூட்டி கிட்டு வா.."
அக்கா அங்கதான் டீச்சர்.... கணக்கில புலி ...... அம்மா வழி ஜீனாகத்தான் இருக்கணும்! தாத்தா பொம்பள பிள்ளக படிக்கக் கூடாதுண்ணு புடியா நிண்ணதுனால அவங்கள எல்லாம் காலேஜுக்குப் அனுப்ப முடியில. வகுப்புக்கு வெளியே நிண்ணு அக்காவுக்கு  சைகை காட்டுகிறேன். வெளியே வந்தவர்கள்  யார் காதிலும் விழாதபடி மெல்ல கேட்டகிறார்கள்
" என்னா கணக்கில ஃபெயிலா....?"
என்னால் வாயே திறக்க முடியவில்லை. கண்ல மட்டும் தண்ணி தளும்புது.
அக்கா கையை இறுக்கி பிடித்துகொண்டேன்.
""குட்மார்னிங் சிஸ்டர்..... கணக்கில மார்க் கொறஞ்சிருக்கா சிஸ்டர்? இந்த மூணுமாசத்தில நான் அத சரி பண்ணிடுறேன்......" அக்கா என்னன்னுமோ எனக்கு சப்பை கட்டிக்கொண்டிருக்க
"ஜோஸ்பின்......மொதல்ல நான் சொல்றதகொஞ்சம்  கேளு ..."
"சொல்லுங்க சிஸ்டர்....."
" ஒன் தங்கச்சிக்கு நெறையாபடிச்சு முன்னுக்கு வருணும்கிற ஒரு ஆசையே இல்ல..... அடுத்து என்னா பண்ண போறேண்ணா டீச்சர் ட்ரெயினிங் போப்போறேங்குது..... நீயாச்சும் அவள காலேஜுக்கு அனுப்புற வழியப்பாரு."
"சரிங்க சிஸ்டர்... அம்மா அப்பாவ கேட்டுட்டு முடிவு பண்றோங்க சிஸ்டர்."
 எனக்கு தலைய சுத்துச்சு...... ஒரு பக்கம் செலக்ஷன் கெடச்ச சந்தோஷம் இருந்தாலும்  கும்பகோணத்திலேர்ந்து திருச்சி போய் ட்ரெயினிங் படிக்கிணுகிற என் ஆசையில சிஸ்டர் மண்ண அள்ளி போட்டுட்டாங்களேண்ணு ஒரே வருத்தம் !
ட்ரெயினிங் போனா கும்பகோணத்திலேர்ந்து திருச்சிக்கு நெறையா நேரம் ட்ரெயின்ல உக்காந்துகிட்டு போவலாம்!
அப்பறம் திருச்சியில  ட்ரெயினிங் படிச்ச அக்கா மலக்கோட்டயப்பத்தியும்,அங்கிருந்த மாமா வீட்டுப்பிள்ளைகளோட வாரக்கடைசியில ஜாலியா இருந்ததபத்தியும்  சொல்லும் போதெல்லாம் மனசுக்குள்ள இதெல்லாம் நம்மளுக்கும் உண்டுண்ணுல்ல கோட்டை கட்டியிருந்தேன்!
காலேஜ் பாத்திங்கண்ணா உள்ளூராகிய  கும்பகோணத்திலேயே தப்படி தூரத்துலேயே காவேரிக்கரையிலேயே "கேம்பிரிட்ஜ் ஆஃப் சவுத் இந்தியா"ண்ணு பேர் வேற வச்சுகிட்டுல்ல ரெடியா   உக்காந்திருக்கு!! பழைய கும்பகோணத்தில்தான் பழையபடிக்கி வாசம்!
புடிச்சோ புடிக்காமலோ நான் எங்க கிராமத்துக்கு மொத பெண் பட்டாதாரி ஆயிட்டேன்..... அதோட நிக்கில  அப்பா அம்மாவின் உந்துதலாலும் தியாகத்தாலும் பட்ட மேற்படிப்பும் எனக்கு வரமாகக் கிடைத்தது!
என் குழந்தைத்தனமான திட்டங்களை விட்டெறிந்துவிட  வழிப்படுத்திய சிஸ்டர் எமரன்ஸ்சையும் ஜோஸ்பின்அக்காவையும் அவ்வப்போது அன்புடனே எண்ணிப்பார்த்துக் கொள்ளுகிறேன்!

No comments :

Post a Comment