Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Thursday, 26 April 2018

என் கல்லூரிக் கதை

 ரோட்டு மேல நடந்துதான் சின்ன பள்ளிக்கூடத்திற்குப்போயிருக்கிறேன்.
வேற ஒரு ரோட்டு மேல நடந்துதான் பெரிய பள்ளிக்கூடத்திற்கும் போயிருக்கிறேன்.
கல்லூரிக்கும் ரோட்டு மேலதான் நடக்கணும்...... ஆனால்   காலேஜுக்குள்ள நொழயணுமுண்ணா தண்ணி மேலே நடந்தேதான் ஆகணும்  ரெண்டே நிமிட அந்த நடை இருக்கிறதே அது அந்த நாளையே ஒரு சுகானுபவமாய் ஆக்கிவிடும் ஜல நடை ! நாலு பேர்  மட்டுமே நடக்ககூடிய அந்தப் காவேரிப் பாலம்  காலேஜ் மக்களாகிய எங்களுக்கு மட்டுமே சொந்தமானது!
"பொம்பள பிள்ளக நீங்க....... தல நிமிராம நடக்கணும் "
காலையில் அவதியாக கிளம்பிக்கொண்டிருக்கிற அந்த நேரத்தில்  கோஎடுகேஷனில் படிக்கும் பெண்கள் எங்களுக்கு வீட்டில் வழங்கப்படும் இந்த தினசரி  ஞானபதேசம் எரிச்சலைமூட்டிவிடுகையில் "என்னைப் பார்...... என் அழகைப் பார்  .....  தலையை நிமிர்த்தாமல் பார்" என்று பாலத்திற்குக்கீழே ஓடும்   சிலு சிலு காவேரித்தண்ணீரின்  ஞானபதேசமோ  மனசைக் கனிய வைத்துவிடும்!
தண்ணியைத்தொட்டுக்கொண்டு விளையாடும் அந்தக் கரையின்  மரங்கள் மனசைக் குளிர்விச்சாலும்  அதையெல்லாம் அனுபவிக்க முடியாத ஏக்கந்தான் மனசு பூராவும்.
"எதுக்காக ஏக்கப்படணும்? போய் உக்காந்து  அனுபவிக்க வேண்டியதுதானே?" 
"ம்ம்ம்ம் ........ சுலபமா நீங்க சொல்லிட்டிங்க........1959 கதய நான் இன்னைக்கி சொன்னா ஒங்களுக்கெல்லாம் பித்து புடிச்சி போயிரும்!"
"அதென்னா சினிமாக்காரியாட்டம் ஒட்ட தாவணி? தாவணிய சோத்துக்கை பக்கம் இழுத்து ரெண்டு கொசவத்த வச்சு கட்டு. ஒன்  அண்ணன் படிச்சிருக்கானே தவிர ஞானம் ரொம்பகொரச்சல். சல்லாத்   துணியில பொம்பள பிள்ளைக்கி தாவணி  வாங்கிகிட்டு வருவானா என்னா? இந்த தையக்காரன் வேற இன்னொரு  பக்கம்........ துணிய கெஜம் கெஜமா  வாங்கிக்குடுத்து  சுருக்கம் நெறையா வச்சி பாவாடை தையுடாண்ணு அவன் பாதித்துணிய தின்னுபுட்டு கெவுனு மாதிரி தச்சு குடுத்துருக்கான் பாரு ...... முந்தாணிய இழுத்து சொருவு.
எவன் என்னா கேட்டாலும் வாயத்தொறக்கப்புடாது. காலேஜுக்கு போனமா வந்தமாண்ணு இருக்கணும். மாகி கூடயே பொயிட்டு அது கூடவே திரும்ப வந்துருணும்....." என் தெருத்தோழி அம்மாவுடைய  தினப்படி அறிவுரை ! 
அந்த வாத்தியார் பெண் தப்பு தண்டாவுக்குப்போகாது என்ற பெரும் நம்பிக்கையின் காரணமாக காவேரிப்பாலம் வரை அந்தப் பெண்ணிற்கு நான்தான்  காவல் தெய்வம்! இதற்கு மேலே அவள் வேறே நான் வேறே. அவள் வேறு படிப்பு,எனது வேறு. சாயங்காலம் என்னோடு
வீட்டிற்குத்திரும்பாவிட்டால் அவள் அம்மா  தவித்துப்போய்விடுவார்கள்
"அது வேற கிளாஸ் அத்த........ இன்னும் முடிஞ்சிருக்காது..... இப்ப வந்துரும் பாருங்க." நடந்து கொண்டே என்னிடமிருந்து வரும் அந்த ஆறுதல் வார்த்தையை அவர்கள் எதிர்பார்த்து வச்ச கண் வாங்காம  தெருவையே பார்த்துக்கொண்டிருந்தாலும்  " என்னத்த கெளாசா போ....... சட்டு புட்டுண்ணு பொம்பள பிள்ளைங்கள ...... ஊட்டுக்கு அனுப்ப மாட்டானுவளா?" என்ற ஆயாசந்தான் பெருமூச்சாக  வெளியே வரும்.
அண்ணனும் தங்கையுமான அந்த வீட்டில் தங்கையும் தன்னைப்போல் படிக்க வேண்டும் என்ற அண்ணன் உயர் நோக்கு கொண்டிருந்தாலும்   கும்பகோணத்தின் ஒத்தை கோஎடுகேஷன் காலேஜிற்கு பெண்ணை அனுப்பிவிட்டு நெஞ்சு வலியால் அவஸ்தைப்படும் அம்மாவின்  நிலமையைக்கருதி  அந்த அண்ணன் என் தோழி பிழியப்பிழிய அழுததையும் பொருட்படுத்தாது  நன்கு படித்த மாப்பிள்ளையைப்பார்த்து உடனடியாக கல்யாணத்தை முடித்து வைத்து பொறுப்பை கை மாற்றி விட்டு விட்டார்!
அந்த மாதிரியான கவலை புரட்சிக்காரியான என் அம்மா இருக்கையில் எனக்கு எள்ளளவும் கிடையாது. என் பையன்களைப்போலவே என் பெண் பிள்ளைகளும் படித்தே ஆக வேண்டும் என்று சூளுரைத்த சீமாட்டி அல்லவா அவள் !!
நிறைய வருடங்களுக்கு முன்னே நான் எழுதிய ஒரு பதிவில்  கேம்பிரிட்ஜ் ஆஃப் சவுத் இந்தியா எனப்படும் எனது கல்லூரியைப்பற்றி சொல்லியிருக்கிறேன்  இரண்டு காரணங்களுக்காக என் கல்லூரி கேம்பிரிட்ஜ் ஆஃப் சவுத் இந்தியா என்ற  பெயரால் பிரசித்தி பெற்றிருக்கிறது.
ஒன்று இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் கல்லூரி 'கேம்' நதிக்கரையில் குடி கொண்டிருப்பது  போல எங்கள் கல்லூரி காவேரிக்கரையின் மடியில் தவழ்ந்து கிடந்தது! அங்கு நடக்கும் படகுப்போட்டிகளைப்போல எங்கள் கல்லூரியிலும் பொங்கி ஓடும் காவேரியில் போட்டிகள் தூள் பறக்கும்,  
இரண்டாவதாக  கேம்பிரிட்ஜ் எப்படி வல்லுனர்களைக்கொண்டிருக்கிறதோ அது போலவே பிரசித்தி பெற்ற அறிஞர்கள்  இங்கு மாணவராகவும் சொல்லித்தரும் ஆசிரிய பெருமக்களாகவும் இருந்திருக்கின்றனர். உதாரணத்திற்கு  உலகப்பிரசித்தி பெற்ற கணித மேதை ராமானுஜம் இங்கத்தைய மாணவரே, தமிழ்த்  தாத்தா உ.வே. சாமிநாத ஐயர்  இங்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசான்!
1864ல் தொடங்கப்பட்ட எங்கள் கல்லூரிக்கட்டிடம் தாராளமாக பெரிய பெரிய வெராண்டாக்களோடு காற்றோட்டமாய் அரண்மனை போல் இருக்கும். இதோடு கூட காவேரிக் காற்றும் சேர்ந்து கொண்டு காலேஜ்  நுழைவை சுகானுபவமாக ஆக்கிவிடும். எப்படி விமானப்பயணத்தில் முதல் வகுப்பு பயணிகளிக்கு அதிக அளவு ஆக்சிஜன் அளிக்கப்படுகிறதோ அது போலவே கற்பவர்க்கு இவ்வளவு காற்றும் பற்றாது நம் மாணவர் செறிவாகக் கற்க வேண்டிய வசதிகளை நாம் செய்துகொடுக்கவேண்டும் என எண்ணிய நிர்வாகம் வகுப்புக்கு வகுப்பு பங்க்கா எனப்படும் பெரும் துணி  விசிறியை பொருத்தி இருந்தது. வகுப்பின் ஒரு மணி நேரமும் பங்க்கா வாலா விடாமல்  கயிற்றை இழுத்து இழுத்து விசிறிக்கொண்டே இருப்பாராம். வாத்தியார்கள் தூக்கத்தை வர வழைக்கும் கட்டங்களில் தூங்கி விழுந்து கொண்டே கயிரிழுக்கும் பங்க்கா வாலா அருளும் காமடியை வேடிக்கைப் பார்த்து சுகமடையலாமாம்! 
இதெல்லாம் எங்களது  முன்னவர் விட்டுச்சென்ற  தொன்று தொட்ட கதை! ஏனெனில்  நான்  கல்லூரிக்கு சென்ற சமயம் வகுப்புகளில் அழுக்கேறிய பங்கக்காக்களை மட்டுமே கண்டேன். அப்ரேய்சலில் பங்க்க்கா வாலாக்கள் அடிபட்டுப்போய் விட்டார்களோ?!
ஐம்பது கடைசிகளில் இந்த கேம்பிரிட்ஜ் ஆஃப் சவுத் இந்தியா என்ற கோ எடுகேஷன் கல்லூரியில்  பெண்களாகிய எங்கள் நிலமையைப்பற்றி  முன்னொரு பதிவிலும் சொல்லியிருக்கிறேன்
முதலில் படகுப்போட்டியை எடுத்துக்கொள்ளுவோம். பெண் மக்கள் நாங்கள் அந்தப் போட்டியின் அன்றுதான் "ஆஹா நம் கல்லூரியில் படகுகளும் இருக்கிறது." என்பதை உணர்ந்திருப்போம். போனால் போகிறதென்று அந்த ஒரு நாள் மட்டும் காவேரிக்கரையின் நீரைத் தொட்டு ஓடும் மரங்களுக்குக் கீழே  நாங்கள் கூடி நின்று வேடிக்கைப் பார்க்க நிர்வாகம் அனுமதி தரும்..
மற்ற 364 நாட்களும்  மாணவர்கள் அட்டா அடிக்க, அரசியல் பேச, மற்றும் கருமமமே கண்ணாகக் கொண்டு நொட்ரு அடிக்கும்அறிவு ஜீவிகள் படிக்க  இத்யாதிகளுக்கே  அந்தக்கரையோரக் கவிதைகள் காத்துக் கிடக்கும் !

பிரின்சிபால் ரூமுக்கு அடுத்து பூட்டியே கிடக்கும் ஒரு அறை. தட்டுகெட்டுப்போய் ஆடிக்கொருதரம் அமாவாசைக்கு ஒரு தரம் ட்ரான்ஸ்பரில் வரும் ஒன்றிரண்டு பெண் விரிவுரையாளர்களின் சொத்து. அப்படியே அவர்கள் வந்தாலும் ஆட்டைத்த தூக்கி மாட்டிலேபோட்டு மாட்டைத்தூக்கி மனுஷனில் போட்டாவது இரண்டு மாசத்திற்குள்ளேயே கழன்று கொள்வதையே நோக்காகக்கொண்டே நாட்களைக்கடத்துவார்கள் ! அதற்கு அடுத்த இரண்டு அறைகளும் மாணவிகள் எங்களுக்கே சொந்தமானது. ஏக்கரா ஏக்கராவாகக் கிடக்கும் அவ்வளவு இடத்தில்  நாங்கள் 'இரு ரூம் கைதிகள்'!! கொடி ஏற்றுகையில் ரூமுக்கு முன்னிருக்கும் அந்த   வெராண்டாவில் இருந்துதான் பாரதத்தாய்க்கு எங்கள் வணக்கங்கள் மிதந்து செல்லும்!! 
"கேம்ஸ் வகையறாக்கள் ஏதும் வசப்படவில்லையோ ?"
"நீங்கவேற ஆத்திரத்தை மூட்டாதிங்க." 
பெரிய குளத்தில் நடக்கும் தினசரி படகுப்பயிற்சியும், ஆசிரியர்களும் மாணவர்களும் விளையாடும் லான் டென்னிசும் புட் பால் பாஸ்கட் பால் வகையராவும்  மைதானங்களை மறைக்க, பெண்கள் நாங்கள் காவேரிப்பாலம் நோக்கி நடை போட வேண்டியதுதான்!
 இது ஒரு பக்கம் என்றால் வகுப்பிலும் எங்களுக்குக் க்வாரண்டைன்தான்!! அப்போதெல்லாம் ஒரே வகுப்பில் அமர்ந்து பாடம் கேட்கும்  பழக்கம் கிடையாது.  ஒரு வகுப்பு முடிந்தவுடன் அடுத்த பாடத்திற்கு வேறே ஒரு வகுப்பிற்குச்செல்ல வேண்டும். கை காலை முறித்து அடுத்த வகுப்பிற்கு ஃபிரஷாக செல்ல வைக்கும்  ஒரு அழகான முறைதான் இது . ஆனால் மாணவர்கள் மட்டும் புது வகுப்பில் இஷ்டமான இடத்தில் போய் அமர்ந்துகொண்டு   இஷ்டத்துக்கு  கதையடிக்கையில்  நாங்கள் மட்டும்  லெக்சரர் வரும் மட்டும் கதவுக்கு வெளியே நின்று தவம் புரிய வேண்டும். வகுப்பின் முதல் இரண்டு பெஞ்ச் 'கைதிகள்' எங்களுக்கு ரிசர்வேஷன் செய்யப்பட்ட ஒன்று!!
எங்களுக்கு அரசியல் எடுத்த விரிவுரையாளர் அவருக்குரிய மேடையிலிருந்து பாடம் எடுக்கமாட்டார். கீழே இறங்கி வந்து பாடத்திற்குள் லயித்துப் போய்தான் வகுப்பு எடுப்பார். பையன்கள் உஷாராக 'துஷ்டனைக்கண்டால் தூர விலகு' என்ற சொலவடையைப் புரிந்தவர்களாய் முன்  இரண்டு வரிசையை அவருக்கு குத்தகைக்கு விட்டு விட்டு பின்னாலே போய் இடித்து பிடித்துக்கொண்டு அமர்ந்து கொள்வார்கள். எங்களுக்கோ பின்னே செல்லும் வாய்ப்பே கிடையாது எங்களுக்கும் பையன்களுக்கும் இரண்டு பெஞ்சு இடைவெளி இருக்க வேண்டும் என்ற ஒரு பொது நியதி இருக்கிறதே!
அப்பைக்கப்போது உணர்ச்சி வசப்பட்டு  பேசும் அந்த மனிதர் கல்யாண வரவேற்பில் பூதாகாரமான உருவங்கள் பன்னீர் தெளிப்பது போல வாயிலிருந்து வரும் அரசியல் நிர்ணய சட்டங்களுக்கிடையில் தூவானம் போட்டுக்கொண்டேதான் எங்களுக்குபாடங்களை  அளிப்பார். 'ரெயின் மேன்' என்று நாங்கள் புனைப்பெயரிட்டிருக்கும் அவரது  மழையில்   நனைந்து போகாதிருக்க புத்தகங்களை குடையாக்கி நெட்டுக்கு நிறுத்திவைத்துகொள்வோம்.   
இப்படியாக எங்கள் கல்லூரி நிர்வாகம் கல்லூரிப் பெண்கள் எங்களது  மானத்தையும் மரியாதையையும் செவ்வனே காப்பாற்றி மகிழ்ந்தது!!
பக்தபுரி அக்ரகாரத்தைத் தாண்டிதான் கல்லூரிக்குள்  போகமுடியும் என்பதால் அக்ரஹாரத்தில் வசிக்கும்  வகுப்புத்தோழிகள் காந்தி நகர் மோதிலால் தெரு வாசிகள் நாங்கள் வரும் வரை எங்களுக்காக காத்து நிற்பார்கள்  அவர்களோடு சேர்ந்து ஒரே கூட்டமாய்த்தான்  கல்லூரிப்  பாலத்தைக் கடப்போம்.ஒரே ஒரு மாணவன் மட்டும் பாலத்தில் போனாலும் சரி  இல்லை தலை போகிற வேலை காலேஜில் காத்துக்கிடந்தாலும் சரி  அவன் அக்கரையை அடையும் மட்டும் பாலத்தைத் தொடமாட்டோம். எதுக்கு வீணா வம்பு?        
வருடத்தொடக்கத்தில் கல்லூரி பிரசிடென்ட்  தேர்தலுக்கு பெரிய அளவில் நடக்கும் போட்டிகள் அடிதடி வரை போய்கூட நிற்க வல்லது. மூக்கில் வேர்த்த பெண்களின் அப்பாக்கள் அந்த நேரங்களில் எல்.கேஜி யூ.கேஜி பசங்களை ஸ்கூலில் கொண்டு போய்விடுவது போல  கை பிடிக்காத குறையாய் பாலம் கடந்து பெண்களைக்கொண்டு போய் விடுவார்கள்! பாலத்தின் தொடக்க முகனையில் போட்டியிடும் மாணவரின் கும்பல்  தாம்பாளம் நிறைய  பன்னீர் ரோஸ்களை மணக்க மணக்க கொட்டி வைத்துக்கொண்டு நோட்டிசோடு ஓட்டு கேட்பார்கள். வாசனை மட்டுமே எங்களுக்கு உரியது..... பூக்கள் மற்றும் நோட்டீஸ் ஓரக்கண்களுக்கு மட்டுமே சொந்தம்!!
பள்ளியில் எனக்கு ஒன்றிரண்டு முஸ்லிம் தோழிகள் உண்டு. பர்தா போட்டுக்கொண்டு அவர்கள் வெளியே வந்தாலும் வீட்டின் முன்னறையை அவர்கள் தாண்டிவிட்டால் அது பொண்டுகள் சாம்ராஜ்ஜியந்தான்! கூத்தும் கும்மாளமாக  அவர்கள் பொழுது ரொம்ப ஜாலியாகப் போகும். சமயத்தில் எங்கள் காலேஜ் வாழ்க்கையும் ஒரு பர்தா வாழ்க்கைதானோ தானோ என என்னை எண்ண வைக்கும். இண்ணைக்கி ஸ்பெஷல் கிளாஸ் கொஞ்சம் லேட்டாகும் என்று வீட்டில் சொல்லி விட்டு கொலு சமயங்களில் தோழிகள் வீடுகளில் ஸ்பெஷல் நெய் புட்டு  போளி வகையறாக்களை ஒரு கை பார்ப்பதும் ஸ்பெஷலாய் ரெண்டாவது டிபன் பாக்ஸ் போட்டு தோழிகளுடன் பகிர்ந்து உண்ணுவதும் தினுசு தினுசான மல்லிகையையும் டிசம்பர் பூக்களையும் பார்த்துப்பார்த்து சூடிக்கொள்வதும் அந்த சிறைக்கூடத்திலும்  கிசு கிசு கதை அடிப்பதும் ஒரு தனி அனுபவமே!
 'ரெயின் மேன்' எங்களுக்கு எழுதப்படாத ஆங்கில அரசியல் நிர்ணயசட்டத்தை சொல்லிக்கொடுத்த்துக்கொண்டிருந்த கால கட்டத்தில்  இரண்டாம் எலிசபெத் அரசி சென்னை வருவதாவும்  அந்த உயர்ந்த மனுஷியைப்பார்க்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என அந்த அரசியின் விசிறி  எங்களை உசுப்பேத்திவிட்டதில் பெண்களாகிய நாங்கள்  ஆண்களே இல்லாத ஒரு கூட்டமாய் திட்டம் வகுத்து(அப்பா அம்மாவின் பெருந் திட்டுகளுக்கிடையில்) ட்ரெயின்  ஏறி சென்னை வந்து ஊர் சுற்றி, ராணி பார்த்து வகுப்புப்பையன்களை பொறாமைப் பட வைத்துப் பார்த்தது எங்களது குழுவின்  ஒரு பெரும் வெற்றி என்றே கருதினோம்!! 
இப்படியாக அன்னியோன்னியமாக வளர்ந்து கொண்டிருந்த எங்கள் தோழமை  ஒரு கட்டத்தில் மனசை நோக வைத்தது உண்மை.
அந்தத் தோழியின் வீடு கல்லூரிக்கு அருகாமையில்தான். அவள் அக்காவின்   குழந்தைக்கு புண்ணியாதானம் செய்த அன்று மதிய விருந்திற்கு எங்களை அழைத்திருந்தாள், நான்கு பெண்கள் இருக்கும் அந்த வீட்டில் ஆண் பிள்ளை  பிறந்திருப்பதில் பெரும்மகிழ்ச்சி. லஞ்ச் இடைவெளியில் சாப்பிட்டடு விட்டு திரும்ப வகுப்பிற்கு வந்துவிடலாம் என்றும் சொன்னாள்.. எங்கள் கலக்ஷன் தொகையில் பையனுக்கு ஒரு பரிசு வாங்கிக்கொண்டு வீட்டிற்குப் போனோம். பழைய காலத்து சுத்துக்கட்டு வீடு.வெயிலில் இருந்து திண்ணை தாண்டி போனால் இருளாய் இருந்தது அப்போது திடீரென ஐயோ மடி....... மடி....... எட்டப்போ...... எட்டப்போ  என்ற குரலில் பயமெடுக்க திண்ணையை நோக்கி ஓட ஆரம்பித்தோம். சத்தம் கேட்ட தோழி ஓடிவந்து "சாரிப்பா பாட்டி அவ துணிய ஓலத்தியிருக்கா. அவ அப்படித்தான்  வாங்க வாங்க நாம ரூமுக்குள்ள பொயிரலாம்."
"பிள்ளைக்கி  ஒரு கிஃப்ட் வாங்கிகிட்டு வந்திருக்கோம். எப்ப குடுக்கறது?
" ஒங்குளுக்கு கிளாசுக்கு நாழியாயிரும்....... நாம ரூமுக்குள்ள பொயிரலாம்....எங்கிட்டேகுடுத்துடுங்கோ.... கொழந்த தூங்கறான்  "
வீடே மடி மயமோ.......? ரூமுக்குள்ள போறதுக்கு ஏன் இவ்வளவு குறியாக இருக்கிறாளே தோழி என லேசாக புரிய ஆரம்பிக்க  அலங்கமலங்காத ஆடுகளைப்போல அவள் பின்னே போனோம். கொல்லைப்பக்கமாக கைகால் 'அலம்பி' விட்டு அறைக்குள் நுழைந்தோம் . சித்திரான்னம் தயாராக இருந்தது. தோழி மட்டுமே பரிமாறினாள். அருமையான சாப்பாடு.
ஆனால் சிக்கல் சிந்தனையில் அல்லவா குடிகொண்டிருந்தது?
இதுவே என் வீடாயிருந்தால்......
அம்மா அங்கு ஒரு கோலாகலத்தையே உருவாக்கி இருப்பார்கள்.வந்தவரின்  உள்ளமும் உடலும் அந்த விருந்தோம்பலில் பூரித்துதான் போய்விடும்.....!!
"சரிப்பா நல்ல சாப்பாடு போட்ட .... அம்மா அப்பா அக்கா  எல்லாருக்கும் தேங்ஸ்  சொல்லிடு... நேரமாச்சு கெளம்புறோம்." 
இந்த விடைபெறுதலை நாங்கள் சொல்லிக்கூட  முடிக்கவில்லை.
"சாணம் தயாரா இருக்காடி ...? ஒடனே தெளி...... தீட்டு ...... தீட்டு.." உள்ளிருந்து ஒரு குரல்
"உள்ளே போன அருஞ்சுவை எல்லாம்  வெளியே வந்து அக்ரகார ரோட்டை நிரப்பிவிடுமோ? "
தீண்டாமையை எங்கள் வாழ்வில் நேரடியாகவே சந்தித்து மனசளவில் மடிந்து போனது கல்லூரி  நாட்களின் மறக்க முடியாத வாழ்க்கை அனுபவம்!!
கொஞ்ச நாட்களுக்கு முன் கும்பகோணம் செல்லும் வாய்ப்பு.. காலேஜ்வழியே வண்டி செல்கிறது. இந்தக்கரை பூராவும் செம்புழுதி படிந்த ஓணான் பூச்செடிகள். காவேரி பூரா பிளாஸ்டிக்கின் குடியிருப்பு. அவற்றின் ஊடே சிறு  சிறு சாக்கடைகளின் சங்கமம்வேறு! 
சின்னத்தேரும் கட்டுசோறுமாய்  காவேரித்துறைகளை அலங்கரிக்கும் மக்கள் கூட்டத்திற்கு, பொங்கி பூத்து வரும் நீரில் தம்பட்டம் அடித்து விளையாடி மகிழும் அந்த ஆடிப்பெருக்கு தினத்தன்று  காவேரி மணலின்  குழி பறித்த நீர் நிலைகளில்  சாங்கியக்குளியல் மட்டுமே அந்த வருடக்கொடுப்பினை ஆகிப்போனதாம். கும்பகோண நண்பர் வருத்தமான விவரம் சொன்னார்.
அக்ரகாரமே மாறிப்போய்க் கிடந்தது. சுத்துக்கட்டு வீடுகளில் கடைகளும் ஆபீஸ் வகையறாக்களும் குடியேறிவிட்டன. ஆனாலும் துள்ளலான ஒரு சின்ன சந்தோஷம் எனக்குள்!!
'மடி.....மடி.... எட்டப்போ.......'  என்ற அன்றைய பயமுறுத்தல் இன்றி திறந்து விடப்பட்ட அக்ரகார வீடுகளில் சுதந்திரமாக சுற்றி வரலாமே?!!  

No comments :

Post a Comment