Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Sunday, 14 October 2018

என்று தணியும் இந்த பாலிதீன் மோகம்


பப்பாளி பழத்துக்கு நான் துணிப்பையை நீட்டுகையில் என்னை அதிசயமாகப்பார்த்தார் பழக்கடைக்காரர். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு சுதாகரித்துக்கொண்ட அவர்   
"அம்மா....... வாங்குறவங்க எல்லாம் ஒங்களாட்டமே இருந்துட்டா ஒரு நாளைக்கி எனக்கு ஐநூறு ரூவா மிச்சம்." கை எடுத்துக் கும்பிட்டார்.
"பப்பாளிக்கி ஒண்ணு கொய்யாவுக்கு ஒண்ணு சப்போட்டாவுக்கு ஒண்ணு வாழைப்பழத்துக்கு  ஒண்ணு இது பத்தாதுண்ணு இதெல்லாத்தையும்  உள்ள போட்டுக்க இன்னொரு பையி .......இப்படித்தான் தாயி இன்னைய கத ஓடுது .....
 ஆனாலும்  அம்மா..... இந்த பாலிதின்னு பையி முட்டும் இல்லண்ணு வச்சிகிங்க என் வியாரம் முட்டும் இல்ல........ காய் கட அரிசி மளிகக்கட சொச்ச மிச்ச வியாவாரமும் படுத்துதான் போயிரும்." யதார்த்தத்தை விளம்பினார் அவர்.
அவர் சொல்லுவதும் சரிதான். பாலிதீன்பையில் ஒரு முடிச்சு போட்டு வைத்து விட்டால் சிப்ஸோ வற்றலோ எப்போதும் மொற மொறதான். மாளிகையும் அதற்குள் இருக்கும்போது எப்பவும் புதுசுதான்!
ஆனால் வைர ஊசி என்றால்  கண்ணைக் குத்திகொள்ள முடியுமா என்ன?
சுற்றுப்புற சூழ்நிலையை,பூமியை சமுத்திரங்களை  நீர்நிலைகளை மாசு படுத்திக்கொண்டே இருக்கும் இந்த வஸ்துவை நாம் தவிர்க்க வேண்டாமா என்ன?  
சூப்பர்மார்கட்டுகளை முடிந்த வரையில் தவிர்த்து  துணிப்பைகளை தூக்கிக்கொண்டு சாதாரண மளிகைக்கடைக்குப்  போகும் நான்  அங்கு மளிகை வாங்க வரும் மக்களுக்கு ஒரு விநோதப்பொருளே! "கடைக்காரர்தான் வேண்டிய பை குடுக்க தயாரா இருக்காரே..... நீங்க எதுக்கு வேல மெனக்கெட்டு வீட்லேருந்து பைய தூக்கிகிட்டுவர்ரிங்க?" பக்கத்தில் நின்று கொண்டு என் பை விளையாட்டை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு அம்மா வினாவினார்கள்.  பேச்சுப்போக்கில் அவர்கள் சென்னை புற நகர் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணி புரிகிறார் எனத்தெரிந்து கொண்டேன். ஆகவே பிளாஸ்டிக் குறித்து என் கருத்துக்கள் அழுத்தமாகவே வெளியே வந்தது."நாம  சாப்புடுற சாப்பாடு ஆறு மணிலேருந்து எட்டு மணி நேரத்துக்குள்ள செரிச்சுப்போயிருது ஆனா நாம தூக்கி  எரியிற பிளாஸ்டிக் பைக பூமியில மக்கிப்போறத்துக்கு 400லேருந்து  1000 வருஷங்கள் ஆவுது. பூ வாங்குனா பையி காய் வாங்கினா
பையிண்ணு ஒரு நாளைக்கி எவ்வளவு பைகள நாம விட்டெறியுறோம்?" என்னுடைய செய்தியின் வேகம் ஓங்க ஓங்க அவர்களின் கிரகிப்பு அதிகமாவதை என்னால் உணர முடிந்தது. என் கையை இறுகப்பிடித்து "மேடம் எங்க இஸ்கூல் பசங்களுக்கு ஒரு நா இதப்பத்தி பேசுவிங்களா?" என்றார்கள்
"கூப்பிடுங்கள் கட்டாயம் வருகிறேன்."
செல் நம்பரை வாங்கிக்கொண்டவர்கள் வேலைப் பளுவில் என்னை மறந்துதான் போயிருக்க வேண்டும். ஆயினும் என் மனசுக்குள் ஒரு நப்பாசை.  பிளாஸ்டிக் தவிர்த்தலைப் பற்றி அவர்கள் மாணவருக்கு எடுத்துக்கூறி அவர்கள் பள்ளி வளாகத்தை பிளாஸ்டிக் இல்லா  பூமியாக மாற்றியிருப்பார்களோ?!!
தடபுடலான வரவேற்பு! சென்னையிலேயே வெகு பிரபலமான மட்டன் பிரியாணி, சிக்கன்65!
சைவ சமயலும் வெகு தடபுடல்!
நெய் ஒழுகும் இனிப்புகள் இரு வகை! ஒசத்தியான ஐஸ்கிரீம்.
அதிருசியான சமையல்தான்!! குறை ஒன்றும் இல்லை!
பச்சைப்பசேலேன்ற இலைதான்! ஆனால் அது வாழை இலை அல்ல! பிளாஸ்டிக் இலை!  வெள்ளை வெளேரென்ற கிண்ணிகளில்தான் சிக்கன்......  ஆனால் அது நிஜக்கோப்பை அல்ல... தெர்மகோல் கிண்ணிகள்! இரு பிளாஸ்டிக் கிண்ணிகளில் நெய்யொழுகும் இனிப்புகள்! இன்னும் பெரிய தெர்மகோல் கிண்ணிகளில் பழத்துண்டுகளோடு  ஐஸ்கிரீம்!! இதோடு கூட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் அணிவகுப்பும்! 
எங்களுக்கு விருந்து படைத்தவர்களின் நிலைப் பாடுதான் விளங்கவில்லை. இந்த விருந்திற்கு லட்சக்கணக்கில் செலவு செய்தவர்களுக்கு நூற்றில்  ஒரு பங்கு இல்லை.... இல்லை...... ஆயிரத்தில் ஒரு பங்கு செலவு செய்து தலை வாழை இலை பாக்குக்  கிண்ணிகள் சகிதம் விருந்தளிக்க முடியாமல் போயிற்றா...? இல்லை பிளாஸ்டிக்கின் பின் விளைவு பற்றிய  அறியாமையா...? இல்லை எதில் கொடுத்தாலென்ன  சாப்பாடு அருமையாக இருந்ததா என்ற ஒருதலைக்  கோட்பாடா.....?
நண்பர்கள்தாம்..... விருந்து உபசரணை செய்து கொண்டே அவர்கள் எங்கள் இலைக்கு வந்தபோது பலமாக தலையாட்டிவிட்டு வந்தோமே தவிர  அந்த குதூகலமான நேரத்தில் இதைப்பற்றி சொல்லும் தைரியம் வரவில்லை.... ஆனால் இன்னொரு கல்யாண பத்திரிக்கையோடு  அவர்கள் வீட்டிற்கு வந்தபோது  அவர்களைத் தெளிவு படுத்தினேன்.
 "ஆகா இந்த நல்ல விஷயம் எங்களுக்கு அன்று விளங்காமல் போயிற்றே...... இந்த கல்யாணத்தில் பாருங்கள்.... கட்டாயம் ஜமாய்த்து விடுகிறோம்... அதுமட்டுமில்ல......  எங்கள் சுற்றங்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த செய்தி போய் சேரத்தான் போகிறது......."
என் காதில் தேன் பாய்ந்தது!!
அந்த திருமண வரவேற்பில் தாம்பூலப்பைக்கு பதிலாக மண்டபத்திற்கு வெளியே மரக்கன்றுகள்!!
 "வேண்டிய கன்றுகளை எடுத்துக்கொள்ளுங்கள்." கைகூப்பி அவர்கள் செடிகளை தூக்கிக்கொடுத்த பாங்கு அந்த கல்யாணத்திற்கே கிரீடம் வைத்தாற்போல் இருந்தது!!   
நண்பர்கள் எங்களை அசத்திதான் விட்டார்கள்!
வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் பாலிதீன் பையில்  அன்போடு எங்களுக்குப் பூவும் பழங்களும்  கொண்டு வருகையில் அவர்கள் பிரியத்தை சுகிர்த்தாலும் மனதுக்குள் கூசிப்போவேன். அந்தபைகள் சேர்த்து வைக்கப்பட்டு  ஒரு முறை இரு முறை  பல முறை  உபயோகித்தில் இருந்து கொண்டேததான் இருக்கும். குப்பை போடும் கூடையில் கறுப்பு பாலிதீன் அணைகட்டி குப்பை வண்டியில் கொண்டு போய் கடாசும் பழக்கமும் என் வீட்டில் இல்லை. காய்கறி மற்ற உணவு சம்மந்தப்பட்ட கழிவுகள் என் சின்னத்தோட்டத்திற்கு எருவாகி விடுகிறது. வீட்டில் வேலை செய்பவர்களும் இந்த கோட்பாட்டுக்கு உட்பட்டு செயல் படுவதுமட்டுமில்லை அவர்கள் வீடுகளிலும் இதைப்பின் பற்றுவது என் மனதிற்கு இதமான விஷயம். சிறு துளி பெரு வெள்ளம்தானே?! 
அமெரிக்காவிலிருந்து வந்த நெருங்கிய சொந்தம் குடும்பம் அனைத்தும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு  மூன்று நாட்களுக்கு ஒரு அழகான இடத்தை ரிசர்வ் செய்திருந்தது. காலை சாப்பாடு அங்கேயே கொடுத்துவிடுவார்களாம். மதியமும் இரவும் வெளியே வாங்கிக்கொள்ளலாம் என்று திட்டம்.  "ஆகா   அக்கு தொக்கு இல்லாமால் கதை பேசிக் கொண்டு  சீட்டுகட்டு விளையாட்டோடு  சினிமா பார்த்து  செல்பி எடுத்து.....மூணு  நாளைக்கி......." யோசனையே சுகமாகத்தான் இருந்தது!!
"குட்மார்னிங்....... ஒங்க பிரேக்பாஸ்ட் ரெடி மேலே அனுப்பிவிடவா.." ரிசப்ஷனின் அழகிய குரல் கூப்பிட்டது. அவசரமாக பல்லை விளக்கிய கூட்டம் டைனிங் டேபிளை சுற்றிக் கூடித்தான் போயிற்று!!
தேவதை ஒத்த வெண் ட்ரேக்களில் அதே வெண்ணிற மூடியோடு பதினைந்திற்கு மேற்பட்ட தெர்மகோல் தட்டுகள் சீர்வரிசைபோல் வந்தபோது எனக்கு தலை சுற்றியது. கேசரி வடை இட்லிக்கு  தோதாக சாம்பார் தேங்காய் சட்னி காரச்சட்னி கூடவே பொடி எண்ணெய்....... இத்யாதிகளைக் கண்ட கூட்டம்  புகுந்து விளையாட ஆரம்பித்தது. நானும் தான் கூட்டத்தோடு கூட்டமாக!! ஆனால் சின்ன ஒரு அழுத்தத்தோடு........
 அந்த சர்வீஸ் அப்பார்ட்மெண்டின் சின்ன குப்பைத்தொட்டி ரொம்பி வழிந்தது. சுத்தம் செய்யும்  ஆளைக்கூப்பிட்டால் சாயங்காலமாகத்தான் சுத்தம் செய்வார்களாம். அந்த சாயங்காலமும் கழிய  அடுத்த நாள் காலை தெர்மகோல் தட்டுகளும் சேர்ந்து கொள்ள அங்கு பழைய வாடையோடு கூடிய ஒரு தெர்மாகோல் மலை எங்கள் உபயத்தால் உருவாகி இருந்தது!
என்னுடைய தம்பி பையன் ஒரு ஐ.டி. நிபுணன். இன்றைய மதிய உணவு அவனது என்றான். 
"இந்த மாதிரி சுடான ருசியான வீட்டு சாப்பாடு .... ஆபீஸ விட்டு வெளிய வந்தோம்ணா எங்குளுக்கு தெனமும் கெடைக்கிது அத்த....." என்றான்! கூடியிருந்த குழுவின் நாவுகளில் ஊற்றுகள் கிளம்பி வழிந்தது உண்மையே!
தூக்க முடியாமல் பை நிறைய சாப்பாடு வந்தது  ஒரு சாப்பாட்டை மூன்று பேர் பகிர்ந்துகொள்ள முடிவுபண்ணி அளவாகத்தான்வாங்கிக்கொண்டோம். டைனிங் டேபிளில் பிரித்து வைக்கையில் எனக்கு ஏதோ ஒன்று சுர்ரென்று உள்ளிறங்கி குடைசல் பண்ண ஆரம்பித்தது. சாதத்துக்கு சாம்பாருக்கு வத்தல் குழம்புக்கு ரசத்திற்கு தயிருக்கு அப்பளத்திற்கு ஊறுகாய்க்கு என  பல சைஸ் பாலிதீன் பைகள்  டேபிளை அடைத்து நின்றன!! கையேந்தி பவன் சாப்பாடாம்! சுவை என்னமோ நிறைவுதான். ஆனாலும் மனசு நிறைய  குற்ற உணர்வு...?
எல்லோரும் உட்கார்ந்தபோது பாலிதீன் பற்றிய கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம்.... அதைத்தவிர்க்க வேண்டும் என்ற கருத்தில் அங்கு யாருக்கும் வேறுபாடு இல்லை.... ஆனால் இந்த மூன்று  சாப்பாட்டை சுகானுபவமாய் மாற்றுவது எப்படி என்பதுதான் கேள்வி!  மூன்று வேளையும் வெளியே சாப்பிட்டுக்கொள்ளலாம் என்ற கருத்து மூன்று வேளையும் டிரஸ் செய்து சின்னதுகளையும் கிளப்பி... ம்ஹும்.........
சாப்பிடுவதற்காக மட்டுந்தான் இங்கு கூடியிருக்கிறோமா  ......??!!!
கேள்வி எழுந்து நிற்க ஐடியா உடனடியாகக் கிடப்பில் போடப்பட்டது. 
 கடைசியில் அமெரிக்க மருமகளின் ஐடியாதான் நிலைத்தது. அப்பாவின் நண்பர் ஒருவர் கேட்டரிங் சர்வீஸ் பண்ணுகிறாராம். போன் செய்து பார்ப்போம் என்ற முயற்சியில் வெற்றி கிடைக்க பாலிதீன் கோட்டை ஒன்றை உருவாக்காமல் பெரிய தூக்குகளில் அறுசுவை உணவும் பாக்குத்தட்டுக்களும் எங்கள் கூடலை  இனிதாக்கியது!!
மாலையில் சென்னை மக்கள் வீடு திரும்பும் வேளையில் ரயில்வே ஸ்டேஷன்களில் பஸ் ஸ்டாண்டுகளில் நாம் அனைவரும் இந்த காட்சியை கட்டாயம் பார்த்திருப்போம். சின்ன சின்ன பாலிதீன் பைகளில் தினுசு தினுசான காய்கறிகள் அடைக்கப்பட்டு ஒரு பை பத்து ரூபாய் என நம்மைக் கூவிக் கூவி அழைக்கும்.." காய்கறியே பிள்ளைக திங்கமாட்டங்குதுக" என்ற கலாச்சார சிக்கலில்  பெற்றோர்கள் மாட்டிக்கொண்டிருக்கும் இன்றைய கட்டுப்பாடான குடும்பங்களுக்கு இந்த அளவு போதுமான ஒன்றே!
அன்றன்றைக்கு தேவைப்படுவதை பச்சென்று அன்றன்றைக்கே வாங்கிக்கொள்ளலாம்....பிரிஜ்ல அடைக்க வேண்டிய அவசியமும் இல்லை! புதுசுக்கு புதுசு....... சிக்கனத்திற்கு சிக்கனமும் கூட!!
இந்த சென்னை மாநகரின் பத்து கோடி மக்களில் ஐம்பது சதம் இந்த கண்ணோட்டத்தில் பதிந்து போயிருந்தால் பூமித்தாயின் கையறு நிலையில்   நாம்தான்  பேரழிவு பாதைக்கு சென்று கொண்டிருக்கிறோம்.
நமது சிறிய நிறுவனத்தில் அனைத்து வருடக் கொண்டாட்டங்களும் 'குழுவின் வெற்றியே நமது' என்ற எண்ணத்தில் செயல்படும். பெற்றோர்களும் குடும்பங்களும் ஒன்று சேரும் அந்த ஒரு நாள் எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்த ஒன்று.
ஐநூறிலிருந்து எழுநூறு வரையான மக்களின்
கூட்டம். விழாவிற்கான திட்டம் மிக நுணுக்கமாக பாலிதீன் பொருட்களை தவிர்க்கும் பணியில் ஈடுபட்டு வெற்றியும் காணும் அந்த நேரம் ஒரு சுகானுபவமே!
பரிசுப்பொருட்கள், அவைகள் கொடுக்கப்படும்  பைகள். விருந்து உபசாரம்  எல்லாமே பாலிதீன் உறவைத் தவிர்த்தே நிற்கும்! நாடகங்களும் இயற்கைமேல்  ஈடுபாடு கொள்ள வைக்கும் சீரிய  கருத்துக்களே! 
தமிழ் நாடு அரசு 2019 ஜனவரியிலிருந்து பாலிதீன் உபயோகத்தை வெகுவாகக் குறைக்க அரசாணை பிறப்பித்துள்ளது ஒரு அருமையான விஷயம். செயல் படுத்துகையில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும் அரசு திட்டமிடல் மிக அவசியம்.
நம் நண்பர்களில் அநேகர் பாலிதீனை தவிர்த்து வாழ முயற்சிக்கின்றனர். அவர்கள் தங்கள் வழிமுறைகளை இப்பதிவில் பகிர்ந்து கொண்டால் மற்றவர்களுக்கு அது ஒரு முன்னோடியாக இருக்கும். பகிர்ந்துதான் பாருங்களேன்.

2 comments :

  1. அருமையான கருத்தும், நடையும் இக்கட்டுரைக்கு வலு சேர்கிறது. MTLல் தாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இதை செயல் படுத்தியதை நினைவு கூறுவதில் பெருமை படுகிறேன்.KVK

    ReplyDelete
  2. அருமை மேடம்.இங்கேயும் பாலித்தீன் பைகளை தவிர்க்க முடியாவிட்டாலும் ரீசைக்கிள் பண்ணிவிடுகிறோம்.இந்த விழிப்புணர்வு மிக மிக அவசியம் .

    ReplyDelete