Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Tuesday, 30 October 2018

பணி ஓய்வும் பக்க விளைவுகளளும்


ஜாலியாத்தான் இருக்கு, மொள்ள எந்திரிச்சு மொள்ள டிக்காக்ஷன் காப்பிய உறிஞ்சி  எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா  பகவான எழுப்புற விடியக்காலத்துல கொறட்ட வுட்டுட்டு  நேரங்கெட்ட நேரத்துல சுப்ரபாதம் கேக்குறது...என்னா இருந்தாலும் சமஸ்கிருதத்துல இருக்க கொழவு தமிழ்ல பாடும்போது இல்லண்ணு நொட்டசொல்லிகிட்டு  நம்ம கிட்ட ராகம் இல்லியா மெட்டு இல்லியா இந்த இளையராஜா மேற்கித்தி மெட்டுல திருவாசகத்த ஏன் பாடித்தொலச்சிருக்காருண்ணு பொலம்பினாலும் அதயும் விடாம கேக்குறது இப்பிடியா...... ரிட்டையர் ஆகி இருக்குறதும்  சுகானுபவந்தான்... 'இதுற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.' அவர்  மனசு துள்ளிக்குதித்தது.
"ஐயா பேன நிறுத்துறங்க,.ஊடு பெருக்கோணும்" பதிலொண்ணுக்கும் காத்து கெடக்காம  டொக்குண்ணு ஒரு சத்தம் மட்டுந்தான்! பொத்துக்கொண்டு வந்தது அவருக்கு !!
"என் ஆபீஸ்ல முட்டும் இது நடந்திருந்துச்சுண்ணா அவன் சீட்டு அண்ணைக்கே கிழிபட்டுருக்கும்.
என்ன மரியாத எனக்கு, என்ன பவ்யம்!  எத்தன கொள்ள சலாம் காலமற காட்டியும்!! என்னா பணிவா டிரைவர் கார் கதவ தொறந்து வச்சிகிட்டு நிப்பான்!!  அட்டாச்சி கேச தூக்குற பவுசு என்ன? லிப்ட்ல நான் நொழஞ்சா  ஒரு பய ஏற மாட்டான் அவ்வளவு மரியாத  எவ்வளவு பெரிய எடத்துக்கும் நான்  ஒரு வார்த்த போட்டா  போதும்,. காரியம் முடிஞ்ச மாதிரிதான்.   இண்ணைக்கி?  வேல செய்யுற பொம்பள அநாவசியமா என்னத் தூக்கில்ல  எறியுது? இவருக்கு புசு புசுண்ணு வந்துச்சு எல்லாம் இந்த வீட்டம்மா  குடுக்குற எடம், அததுகள வைக்க வேண்டிய  எடத்துல வைக்கணும்.. 
"அந்த பொம்பளைக்கி மத்தியான சாப்பாடு குடுக்குறத நிறுத்து... ரெண்டு பேரும் ரிட்டையர் ஆயிட்டோம்.. இனிமே வரவு செலவ பாத்து பண்ணணும்"
"ம்ம்ம்ம்" பொதுவான ஒரு பதில் அந்த பக்கமிருந்தது!! இப்ப போயி இவரு கிட்ட "நம்பிக்கையான ஆளு  கெடைக்கிறது எவ்வளவு கஷ்டமான விஷயம்ப்பாண்ணு கேக்க முடியுமா என்ன? நேரம் வரும்போது மொள்ளதான்அவுத்து வைக்கணும்” சாணக்கியத்தனம் சாதாரண விஷயத்துக்கூட தேவையாத்தான் இருக்கு!! 
இப்படி சின்ன சின்ன விஷயங்களெல்லாம் அவரை மட்டம் தட்டுவதாகவே  மனசுநிறைய  கூத்தாட அவருக்கு எல்லாமே சப்பிட்டுப்போயிற்று எம்.எஸ். சுப்புலஷ்மியும் இளையராஜாவும் கூட அலுத்துப்போனார்கள்.
தாத்தா காலத்து கடிகாரங்களுக்கு தினப்படி சாவி கொடுக்காவிட்டால் ஸ்பிரிங்தொளதொளத்துப்போவது போல.... 
காத்துபோன டயர் தார் ரோட்டோடு ஒன்றித்து போவதைப்போல அவர் மனசுக்குள் உளச்சல்!
"அம்மா ஒங்கிட்ட தனியா பேசணும்மா." தெருவின் சலவைக்காரர் ஜனா
"ஐயா குளிக்கிறாருப்பா வேல செய்யுறவங்களும் இன்னம் வருல."
"அம்மா ஐயாவ மார்கெட்டுக்கு அனுப்பாதம்மா."
"ஏம்ப்பா ஐயா ரிடையர் ஆயிட்டாங்க... மார்கெட்டுக்கு நடந்து போறதெல்லாம் ஒரு எக்சர்சைஸ்தானே?
"அம்மா கூடத்தான் ரிட்டையர் ஆயிட்ட  இன்னா  நான் சொல்றது.கரிட்டா? நீ போயம்மா மார்கெட்டுக்கு"
"ஜனா அண்ணைக்கி பாரு. ஐயா மொளக்கீர கட்டு எட்டு ரூவாய்க்கு வாங்கிகிட்டு வர்றாரு... நான்  போனா கட்டு பத்து ரூவாய்க்கு கொறைய மாட்டங்குறாங்க."
 சிக்கலே அங்கதாயம்மா யம்மா இந்த ரெண்டு ரூவாகாசு  இன்னா பொறும். நீயி சொல்லு பாக்கலாம்... பிச்சக்காரங்கூட நம்மள மதிக்கமாட்டான்...  இத்த வாங்கற்த்துக்கு ஐயா இன்னான்னா சொல்றாரு தெரியுமா உன்க்கு?
இவுரு பதவி பவுஷல்லாம் பேசுறாரு யம்மா .... நான் ஒரு போன் போட்டா இந்த எட்த்துல உங்கடையே காணாப்பூடும்ங்கிராரு யம்மா! ஏற்கனவே போலிசு கெடுபுடி அத்தோட இது வேறையாண்ணு மனசு காஞ்சி போயித்தான்  கறிகாய குடுக்குதுக. பேசாம ஐயாவ பெசன்ட் நகர் பீச்சுக்கு அனுப்பி வுட்டுடு யம்மா  ஐயா மாதிரி பெரிய மனுசாளுக வர்ற எடம் அவுருக்கு தோதா இருக்கும்." 
"அவுரு வீரப்பிரதாபங்கள கேட்டு கேட்டு அலுத்துப்போன  அந்த பீச் குருப்பு அவுர  ஓரங்கட்டிடுச்சு"ண்ணா ஜனா கிட்ட சொல்ல முடியும்?!      
"சரிப்பா... நான் பாத்துக்கிறேன்" பொதுவில் சொல்லிவிட்டு அந்த அம்மா உள்ளே போய்விட்டார்கள்.
"சார் நல்லாருக்கிங்களா? பொண்ணுக்கு கலியாணம் கூடி வந்திருக்கு.... சாரும் அம்மாவும் வந்து கொழந்தகள ஆசிர்வதிக்கணும்." ஆபிசில் வேலை பார்க்கும் சக ஊழியர்
"வாப்பா வாப்பா. நல்லாருக்கியா? வாங்கம்மா" ஆபிசில் அவருக்குக்கீழே வேலை பார்த்தவர். தம்பதி சமேதரராய் பத்திரிக்கை வக்க வந்திருக்கிறார்கள்....
"என்னப்பா ஆபீசெல்லாம் நல்லபடியா போவுதா?"
"என்னமோ போவுது சார்.... ஆனாலும் நீங்க இருந்தமாதிரி இல்ல சார்"
ரிட்டையர் ஆனவருக்கு ஆறுதலாக ஏதாவது சொல்ல வேண்டுமே!!
மனசு குளிர்ந்து போய் பத்திரிக்கையைப் பிரித்தவருக்கு
"ஆஹா இவன் எப்படி டவரி குடுக்கப்போகிறான்.?" என்ற உதைப்பு
பொண்ணு மாப்பிள்ளை பின்னாடி ஒரு டிகிரியையுங்காணாம். இவனுக்கும் பெரிய சம்பளம் இல்ல  ஓய்பும் வீட்டோட இருக் கவங்கதான். நாங்க ரெண்டு பேர் சம்பாரிச்சே பொண்ணு கல்யாணத்துக்கு முழி பிதுங்கிப்போனோம்
என்னப்பா பொண்ண படிக்க வச்சிரிக்கியா..?
ஆமா சார் அமெரிக்கன் கம்பனியில வேல பாக்குறா
நான் கூட அமெரிக்காவுக்கு டெபுடேஷன்ல போனனே ஞாபகம் இருக்கா..? 
என்ன சார் அப்புடி கேட்டுட்டிங்க? நாங்கள்ளாம் உங்கள வழி அனுப்ப ஏர்போர்ட்டுக்கு வந்தமே..?
"யப்பப்பா அமெரிக்காவுல என்னா உபசரணஎன்னா கவனிப்பு  5 ஸ்டார் ஹோட்டல்ல தங்க வச்சு... நம்ம இங்கிலிஷ்ல அவனுக அசந்துதான் போயிட்டானுக.... "
"ஒங்க கெட்டிக்காரத்தனம் யாருக்கு வரும் சார்?"
"பொண்ணை நல்லா படிக்க வச்சிருக்கலாமேப்பா பத்திரிக்கையில பேருக்கு பின்னாடி டிகிரி     ஒண்ணையும் காணாமே... ம்ம்?"
"அந்த கூத்த ஏன் சார் கேக்குறிங்க சார்? அப்பா அம்மா கஷ்டப்பட்டு  கடன ஒடன வாங்கிபடிக்க வச்சா  இந்த காலத்து பசங்க " படிப்பெல்லாம் பின்னாடி போட்டுகிட்டா அசிங்கம்பாங்குதுக... அதப்போட்டா அம்மா அப்பாவுக்கு பெரும இல்லியா சார்?"
சரி சரி வுடு பொண்ணு அமெரிக்கன் கம்பெனியில என்னா வேல பாக்குறா..?
"டெக்னிக்கல் கோஆர்டினேட்டரா இருக்கா சார். மாசம் ஒரு தடவ அமெரிக்காவுக்கு பறந்தே ஆகணும்... ஹில்டன் ஹோட்டல்ல  ஒரு ரூம் அவளுக்கு எப்பயுமே ரிசர்வ்டாம்."
சார் மூஞ்சியில் ஈ ஆடவில்லை. தாத்தா காலத்து சாவி தீர்ந்த கடிகாரமாக பங்கச்சர் ஆன கார் டயராக அமுங்கித்தான் போய்விட்டார்! காபி குடுத்து  உடல்நலம் விசாரித்து கல்யாண கதை கேட்டு சூழ்நிலையை சுமுகமாக்கினது  வீட்டுக்கார அம்மாவின் பொறுப்பாகிப்போனது உண்மை ! 
அவ்வப்போது  அவருக்கு  அழைப்பிதழ்கள் வருகையில் கோட்சூட் டை சகிதம் ஜம்மென்றுதான் கிளம்புவார். அன்றும் அப்படித்தான் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடக்க இருந்த விழாவிற்கு லிப்டிற்கு காத்திருக்கையில் அரைக்கால் டிரவுசரோடு பசங்க அவனுகளோடு கூட   பொம்பள பிள்ளைகள் ஏகத்துக்கும் சத்தம் போட்டுகிட்டு கூத்தும் கும்மாளமுமா பெரிய கூட்டம். முட்டியடிச்சி என்னோட லிப்ட்ல ஏறுதுக....நாசூக்கான ஹோட்டல்ண்ணு ஒரு விவஸ்தயே இல்லாம .... இது தெருவோர டீக்கடையா என்ன.?
எல்லாம் இந்த ஐடி கம்பெனிகாரனுக குடுக்கிற எடம் வேலையில சேந்த ஒடனே அஞ்சு லக்கத்துல  சம்பளம். அதெல்லாம் நான் பாக்கறதுக்கு ஜென்மமாச்சு ... ம்ம்....   பெருமூச்சுமட்டுந்தான்   அவருக்கு மிச்சமாச்சு.
"குட் மார்னிங் சார்..? சௌக்கியமா.. வாங்க வாங்க உள்ள வாங்க." நம் ஹீரோதான் அவர்
வீட்டு கேட்டில்.
"குட் மார்னிங் சார் ...நல்லா இருக்கிங்களா?  அவசரமா பேங்க் முட்டும் போகணும்."
"சார் பேங்க்காரன் நமக்காகத்தான் சார்  இருக்கான் அவனுக்காக நாம இல்ல. அப்படித்தான் ஒரு தடவ பாருங்க." 
வந்தவருக்கு என்னடா இது காலமகாட்டியும் இவர் கிட்ட வசமா மாட்டிகிட்டமேண்ணு ஒதப்பு. இவர் வெற்றி சரித்திரங்களை கேட்டு முடிக்க கொறஞ்சது அர மணி நேரமாவது ஆவும். அடுத்த தடவையிலிருந்து பக்கத்து தெரு வழியா போயிரணும்... கொஞ்சம் சுத்தானாகூட  பரவாயில்ல
ஒரு நாள் கோவிலுக்கு போயிட்டு வேப்பமரத்து காத்து வாங்கிக்கொண்டு ரெண்டு பேரும் திரும்ப வருகையில் "சார் சௌக்கியமா இருக்கிங்களா... நான் ஏர்போர்ட் ராஜதுரை. அப்பல்லாம் ஐயாவ ஸூட் கோட்டோட பாக்கும்போது இங்கிலீஷ் தொரமாதிரி கம்பீரமா நடையில  போவிங்க. நாங்க பவ்யமா ஒதுங்கி நிப்போம். எப்பிடியாச்சும் ஒரு தரம் ஐயா கைய  குலுக்குமுண்ணு பெரிய ஆச.... ஒரு நா மனச தெடப்படுத்திகிட்டு ஒங்குளுக்கு குட் மார்னிங் சொல்லி   கை குடுத்தேன்... சிரிச்சுகிட்டே ஐயா எனக்கு கை குடுத்தது என்னோட பெரிய பாக்கியம் சார்...
"சந்தோஷம் ராஜதொர... ஒங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம் வாங்க வீட்டுக்கு வாங்க .... நிதானமா பேசலாம்." பர்சிலிருந்த 500 ரூபா நோட்டு  ராஜதுரைக்கு  அன்பளிப்பாய் ஆகிப்போனது
"தேங்க்ஸ் சார்.. கட்டாயம் வர்றேன் சார்"  சொல்லிக்கொண்டே ராஜதுரை ஸ்டார்ட்டிங்கிலிருந்த  பஸ்ஸைப்  பிடித்தார்!
"திருடன் சார்.. சரியான திருடன் சார். அந்த ஆளு.  கத உடுறதில கில்லாடி.  கொழயடிதான் .... கொஞ்சம் மின்னாடி வந்திருந்தா அந்த ஆள நாலு கேள்வி கேட்டிருப்பேன்...  ரூபா கை மாறினப்பதான் அவன அடையாளம் கண்டுகிட்டேன்.  
நானும் ஒருதடவ இவன்கிட்ட வசமா மாட்டிகிட்டேன் சார்சாமி புண்ணியத்துல எம் பர்சிலஅண்ணைக்கி இருந்தது பத்தே ரூபாதான்... தப்பிச்சேன் போங்க...
பேச்சில மயங்கின அவமானம் ஒரு பக்கம். பொண்டாட்டிக்கு முன்னாடி 500 ரூபாய கோட்டவுட்டது அத விடப்  பெரிய மூக்குடைப்பு!!
மனசுல பாரம் ஏற ஏற ஒடம்புக்குள்ள ஆயிரம் நோவுகள் ஒரு கட்டத்தில் அவர் நடையும் குறைந்து போய் வீல் சேர் அவர் ஆசனமாகியது வீடே நிரந்தரமாகிப் போயிற்று..
அவரது வங்கி கணக்கில் ஏதோ தகராறாம்... அவர் நேரடியாக வந்தால்தான் ஒழுங்கு பண்ண முடியுமாம். பேங்க் மேனேஜர்  பணம் எடுக்கப்போன வீட்டுக்கார அம்மாவிடம் சொல்லி அனுப்பி இருந்தார்.
"மரியாத தெரியாத மடப்பசங்க சீனியர் சிட்டிசன எவ்வளவு நேரம் காக்க வப்பானுக... உள்ள போன அவளும் காணாப் பொயிட்டா... எல்லா பாமும்தான்அப்பயே பில் அப் பண்ணி குடுத்தாச்சே " எரிச்சலோடு வீல் சேரில் உட்கார்ந்திருந்தார் அவர்!
"இல்ல நீங்க வந்து சொல்லுங்க.... நான் சொன்னா கோவிச்சுக்குவாரு ." வீட்டுக்காரம்மா பேங்க் மேனேஜரோட தர்க்கம் பண்ணிக்கொண்டே இவரிடம்  வந்தார்.
"வணக்கம் சார்சார் தப்பா எடுத்துக்கக் கூடாது.... சார் கையெழுத்து மாறிப்போயிருக்கு ...
சார் கைநாட்டுவச்சிட்டிங்கண்ணா எங்குளுக்கு ரொம்ப சௌரியமா இருக்கும்”
என்னத்த சொல்றான் இவன். ஒண்ணும் புரியிலையே....
"திரும்பச்சொல்லு.”      
மேனேஜர் கிளிப்பிள்ளையான அந்த நொடியில் அவர் துர்வாசமுனியானார்.
"எவண்டா நீ....  என் கையெழுத்த சரிபார்க்கிறவன்.? நான் என்னா படிச்சிருக்கேண்ணு தெரியுமாடா?   பழைய எஸ். எஸ்.எல்.சி யாக்கும்
நாண்ணு ஜனங்க காலர தூக்கிவுட்டுகிட்டு திரிஞ்ச அந்த காலத்துலேயே நான் எம்.ஏ. படிச்சவண்டா  ஆயிரமாயிரம் கையெழுத்த போட்டவண்டா நானு.... என்னப்போயி கைநாட்டு வைக்க சொல்றியா நீ? ஒன்ன கோர்ட்டுக்கு இழுத்து கிட்டு போய் சீப்பட வைக்கில.. 
இப்படியாக ரிட்டயர்டு வாழ்க்கையை சிக்குக்கோலமாய் ஆக்கித் தடுமாறுபவர்களை உங்கள் வாழ்க்கையிலும் பார்த்திருக்கலாம் 
"என் கடன் பணி செய்து கிடப்பதே." என் பணியில் இன்று  ஒரு மாற்றம் என் நோக்கில் மாற்றம் எதுவும் இல்லை.வாழ்க்கையிலேயே கிடைத்தற்கரிய போனஸ் இன்று என் கைவசம்! அணுஅணுவாய் இதை சுகிக்க வேண்டும்." என் எண்ணும் சுகவாசிகள் அதிர்ஷ்ட்டக்காரர்களே!           

4 comments :

  1. சமீப காலத்தில் படித்த எல்லாவற்றிலும் மனதைத்தொட்டு நெகிழவைத்த பதிவு மேடம் . பணி ஓய்வை எப்படி பராமரிப்பது என்ற பாடம் இது மேடம் .மிக்க நன்றி .

    ReplyDelete
    Replies
    1. அன்பு ஆல்பிரட் உன் கருத்துக்களுக்கு எப்போதும் ஆவலாய் காத்திருப்பு என்னுள்!!
      அன்புடன் மாகி

      Delete
  2. சொந்தமா தொழில் ஆரம்பிச்சா இந்த கவலை இல்லை . எவ்வளவு நாள் என்றாலும் நாம் தான் ராஜா .

    ReplyDelete
    Replies
    1. ராசா கபி ஆண்டாண்டு காலம் சொந்தத்தொழிலோடு அன்புப் பேத்தியோடு சுகவாசியாய் சீவிப்பாயாக!!

      Delete