Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Friday, 29 November 2019

வேண்டாத மோகம் வேண்டாமே


வருடாந்திர திருயாத்திரையைப்போல  ஆகஸ்ட் செப்டம்பரில் இங்கிலாந்துக்குப் போவது எங்கள் வழக்கமாகிவிட்டது. புதுசு புதுசாக இந்திய இதிகாசக் கதைகளை நாட்டிய நாடகமாக்கி  நார்விச்சின் இந்தியக்கலை ரசிகர்களுக்கு ஒவ்வொரு செப்டம்பரிலும் அர்ப்பணமாக்குவது எங்கள் பெண்ணின்  பிரியமான பொழுதுபோக்கு! 'ப்ளே ஹவுஸ்' என்ற அந்த அரங்கம் ரசிகர் கூட்டத்தால் நிரம்பி வழிகையிலே பொங்கி வரும் ஆனந்தக் கண்ணீர் எங்கள் பெருஞ்சொத்து !
இதைத் தவிர இந்த வருடம் இன்னொரு ஜோலியும் இருந்தது. லண்டனில் இருக்கும் இவர் தங்கை பெண்ணிற்கு குழந்தை பிறந்து எட்டு மாதம் ஆகியிருந்தது. ஊருக்குக் கிளம்புமுன்  பிள்ளையைப் பார்க்க வேண்டும் கொஞ்சி விளையாட வேண்டும் என  திட்டமிட்டு அவள் வீட்டிற்குப் போனோம். கதவைத்திறந்த அவள் எங்களைக் கட்டிப்பிடித்தபோது கையிலிருந்த சின்னப்பெண்  மலைத்துப்போய் அம்மாவிடம் ஒட்டிக்கொண்டது. "பாப்பா ஆச்சியும் தாத்தாவும் நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க கைதட்டு பாக்கலாம்" என்று தமிழில் சொல்ல  சிரித்த முகத்தோடு வந்த அவளது பலமான கைதட்டு எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது! எட்டுமாசத்துக்குழந்தை....... இதில் என்ன ஆச்சரியம்? என நமக்குத் தோன்றலாம்.
ஆங்கிலேயரை மணந்தவள் அந்தப்பெண். அவரது பிரியமான பெரிய குடும்பம் அந்த ஊரிலேயே சுற்றி இருக்க அவ்வப்போது  அந்த சின்ன பாப்பாவை  வளைய வளைய  வந்து ஆங்கிலத்தில் அவர்கள் கொஞ்சிக் குலாவ தமிழுக்கு அங்கு என்னதான் அவசியம்?! ஆனால் அந்தக் குடும்பம் வினோதமான ஒன்று! "நீ கட்டாயம் பாப்பாவோடு தமிழில் நிறைய பேசு  இன்னொரு மொழி இருந்தால்தான் அவள் வளர்ச்சி வளமானதாக இருக்கும்." என்ற கோட்பாட்டில் மகிழ்ந்து போனோம்!
உள்ளூரை சற்றே யோசிக்கிறேன். தமிழன் தமிழனோடு பேசுகையில் கூட  தனது ஆங்கிலப்புலமையைக் காட்டிக்கொள்ள ஆங்கிலத்தில் பிளந்து தள்ளுகிறான். சுற்றிக் கொஞ்சம் கும்பல் இருந்தால் கேட்கவே வேண்டியதில்லை. விருந்தாளிகள் வீட்டிற்கு வருகையில் 'ஆண்டிக்கி ஒரு ரைம் சொல்லு பாக்கலாம்.' என நம் பிள்ளைகளைக் கழைக் கூத்தாடியாக மாற்றிப்  பெருமைப்படுகிறோம்!
இந்த ஆங்கில மோகம் தொன்று தொட்டு நமக்குள் தொத்திக்கொண்டே நிற்கிறதா? எங்கள் அப்பா தமாஷாக எங்களுக்குச் சொன்ன ஒரு சம்பவம்  இதற்கு ஒரு அருமையான உதாரணம்!
எங்கள் கிராமத்து பள்ளிக் கூடத்தில் ஐந்தாம் வகுப்பிற்கு மேல் படிப்பு கிடையாது. முதல் ஆம்பிளப்பிள்ளை ஆங்கிலத்தோடு நல்ல படிப்பு படிக்க வேண்டும் என முடிவு செய்த தாத்தா பெண்ணைக் கட்டிக்கொடுத்த ஊரின் டவுண் பள்ளிக்கூடத்திற்கு அப்பாவை அனுப்புகிறார். அக்கா அத்தானின் கவனிப்பில் சுகமாகவே பள்ளி சென்று வந்தார் அவர். அக்காக்காரி பொறந்த வீட்டிலிருந்து அள்ளிக்கொண்டு வருவதில் கில்லாடி! தம்பி வந்த சாக்கில்  ஒரு கறவை மாட்டை தன்  வீட்டிற்குக் கொண்டு வந்துவிட  மனசுக்குள் ஒரு திட்டம். நச்சியமாக தம்பியிடம் பேச்சு கொடுத்தது அக்கா.
"தம்பி நல்ல பாலு குடிச்சா ஒனக்கு நல்ல படிப்பு வரும்ப்பா.... அங்கனதான் மாடு நெறையா நிக்கிதே. ஆஞாருக்கு ஒரு கடுதாசி போடேன்."
அக்கா சொல்லைத்தட்டாமல் தம்பி போஸ்ட் கார்டில் அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். விநோதமான அந்த கடிதத்தில் ஒத்தை வாக்கியம்தான். அந்த வாக்கியத்திலும் ஒரு விநோதம் இருந்தது!
தபால்காரர் கடுதாசியைத் தாத்தாவிடம் குடுக்கையில் தாத்தா மலைத்துப்போய் அதை திருப்பித் திருப்பிபார்த்தாராம். "வெலாசம் சரியாத்தான் இருக்கு. ஆனா என்னா கருமாந்திரத்த எழுதி இருக்காண்ணு பிரியிலியே."
கடுதாசியை தபால்காரரிடமே கொடுத்த தாத்தா கடுதாசியில் இருப்பது அவருக்குப் புரிகிறதா என்று கேட்டார். அதைப்படித்த  அவர் "ஆஞா டவுணுலேருந்து நம்ம தம்பிதான் கடுதாசி போட்ருக்காப்பில.... பிள்ள இங்கிலீஷ்லல்ல எழுதியிருக்கு."
 தாத்தாவுக்கு தலையும் புரியில காலும் புரியில ! இங்கிலிபூஸுலியா!! இங்கிலிபூஸுலியா!!! ஆச்சரியத்தால் தவித்துப்போய்விட்டார்.
"பராசரம்..... இங்குட்டு திண்ணையில ஏறி குந்து. பிள்ள கடுதாசிய வெவரமா படி பாக்கலாம்." என்றுமில்லாத அனுசரணையான உபசரிப்பு தபால்காரருக்கு! படிக்க ஆரம்பித்தார் பராசரம்
" I want a  cow."  Your obedient son Michealsamy.  "அதாவது ஆஞா... தம்பிக்கி  ஒரு பசுமாடு வேணுமாம். கீழ்ப்படிதலுள்ள உங்கள் மகன் மிக்கேல்சாமி."ண்ணு எழுதியிருக்கு.
" அம்புட்டையும் இங்கிலிபூஸுல எழுதியிருக்குதா எம்பையன்?" பூரித்துப்போய்விட்டார் தாத்தா. இம்புட்டு இங்கிலிபூஸு தெரிஞ்சும் எம்புள்ளைக்கி எத்த மட்டிக்கி பணிவு இருந்தா எனக்கு கீள்ப்படிஞ்சு இருக்குறதா எழுதி இருக்கும்?!!
தபால்காரருக்கு அந்த இங்கிலிபூஸு கடுதாசியை திரும்பத்திரும்ப படித்து வாயே வலி கண்டு போய்விட்டது. இருந்தாலும் ஒரு மாகாணி நெல்லு அவர் துண்டில் வந்து விழுந்ததில் வந்த வலியெல்லாம் பஞ்சாப்பறந்து போயிருச்சு!
ஒடனடியா ஒருகாராம் பசுவும் கண்ணுகுட்டியும் ரெண்டு ஆளுக வழியா டவுணுக்கு அனுப்பப்பட்டது!
இந்த ஆங்கில மோகம் பரம்பரையாகத்தான் நம்மை ஆட்டிப்படைக்கிறது!
அம்மா அப்பாவை மம்மி டாடியாக்கி பாட்டி தாத்தாவை கிராண்ட்மா கிராண்ட்பாவாக மாற்றி சுகம் காண்கிறோம். இந்த வேண்டாத வேலையில் நானும்தான் சேர்த்தி. இன்று இந்த காரியத்தால் மனசுக்குள் ஒரு வருத்தம் இருந்தாலும் கூட மம்மி டாடியோடு மட்டும் நிறுத்திக்கொண்டேனே என்ற சின்ன ஒரு ஆறுதல்!
"மூணு வயசுதான் ஆவுது அதுக்குள்ள ஏ பி சி டி சின்ன எழுத்து பெரிய எழுத்து எல்லாத்தையும் முத்து மாதிரி எழுதித் தள்ளுது பாருங்க அந்த ஸ்கூல்ல அப்டி ஒரு ட்ரெயினிங்!!" பூரித்துப் போகும் பெற்றோர்
ஆமா...... ஆனா ஆவன்னா........ ஒங்க கணக்கில இருக்கா.....?
 அனாவசிய கேள்வி கேட்டு அவங்க மனச நோகடிப்பானேன்?!
மனித வள மேம்பாட்டுத்துறையில் நான் இருக்கையில் சின்ன பிரச்சனைகளை  பாரமாக சுமந்து வரும் மக்களுக்கு நான் வடிகால்.
" மேம்  பையன் ரொம்ப பிரச்ன பண்றாங்க. எனக்கு என்னா செய்யுறதுண்ணு புரியில...."
" சுட்டியான  வாண்டாம்மா..? நான் சிரித்துக்கொண்டேகேட்டேன்.
" அதெல்லாம் இல்ல மேம்.... எழுதவே மாட்டங்கிறாங்க..... வீட்ல  ஹோம் ஒர்க் எழுத வக்கிறதுக்ககுள்ள ஒன்னப்புடி என்னப்புடிண்ணு ஆயிப்போவுது... பேசாம எதுத்த வீட்டு பையனாட்டம் ட்யூஷனுக்கு அனுப்பிச்சி வச்சிடலாமாண்ணு பாக்குறேன்.
" பச்சப்பாலகனுக்கு ட்யூஷனா...? என்ன சொல்றம்மா நீ? விதிர்த்துபோனேன்!
" ஆமா மேம்..... ஸ்கூல்லருந்து வந்த ஒடனே என் ப்ரண்டு டிபனக்குடுத்து ட்யூஷனுக்கு அனுப்பிச்சிடும். அங்கேருந்து வந்த ஒடனே ட்யூஷன்ல என்னா சொல்லிக்குத்தாங்கண்ணு  ஒரு இன்ஸ்பெக்ஷனும் பண்ணிடும்"
"அதெல்லாம் கெடக்கட்டும் அந்த பையன் சந்தோஷமா இருக்கானா?"
"கண்ணீரும் கம்பலையுந்தான்...மேம்  ஆனா பிள்ள முன்னுக்கு வரணுமுண்ணா......."இடை மறித்தேன் நான்  "ஒம்பையனும் அதே மாதிரி இருக்கணுமா...."
"இல்ல மேம் அவன் சந்தோஷமா இருக்கணும்... அதே சமயம் எழுதணும்."
" இதுக்கு ஒரு வழி இருக்கு..... செய்வியா?"
"சொல்லுங்க மேம்."
ஓன் கை எழுத்து எப்படி இருக்கும்...?
" நல்லா இருக்கும் ப்ரைஸ் கூட வாங்கியிருக்கேன்."
" அப்ப அத கொஞ்சம் கோணலாக்கு...... பிள்ள கையப்புடிச்சிகிட்டு நீ ஹோம் ஒர்க்க எழுது...."
" மேம் நீங்களா சொல்றிங்க?!"
"ஆமாம்மா நானேதான்...... ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா? சின்னக் கொழந்தைகளின் வெரல்கள் ஒழுங்கு முறையாக எழுதுவதற்கு இன்னும் நெறைய......... நெறைய... நாட்கள் இருக்கு....... இத நான் சொல்லுலம்மா...... குழந்தை நிபுணர்கள் சொல்லுறாங்க. இப்பக்கி அவனுக்கு வேண்டியது அம்மா அப்பாவோட சுகமான நேரம் மட்டுந்தான். நீங்க ரெண்டு பெரும் அய்யோ எம்புள்ள எழுத மாட்டங்கிறானேண்ணு ஆதங்கப்பட்டு ஒங்களுக்குத் தெரியாமலேயே அந்த ஆதங்கத்தை  அவனுக்குள்ளயும் திணிக்கிறிங்க. இன்னொரு  விஷயத்த நீ கேள்வி பட்டுருக்கியா........... ஒலகத்திலேயே ஃபின்லாண்டு நாட்டுலதான் பிரமாதமான கல்வி. அங்க பிள்ளைய ஸ்கூல்ல சேக்கிறது எப்ப தெரியுமா? ஏழு வயசுலதான்! பித்து புடிச்ச நாம என்னா பண்றோம்? ரெண்டர வயசு  பச்ச பிள்ளைய விஜய தசமி அண்ணைக்கே கொண்டு போய் ஸ்கூல்ல தள்ளிவிட்டுட்டு வந்துடுறோம்....... அடுத்த வருஷ எல்கேஜி க்கி அத இப்பயே பழக்குறோமாம்!! அருமையான ஒரு சாக்கும் நம்  கைவசம் ... என்ன கொடுமடா இது!! 
இங்கிலாந்துக்கு  நான் போயிருந்த ஒரு சமயம்  என் பெண்ணிற்கு இந்திய கலாச்சாரத்தைப் பற்றிப் பேச ஒரு தொடக்கப்பள்ளியிலிருந்து அழைப்பு வந்திருந்தது. நானும் கூடவே சேர்ந்து கொண்டேன். கூடியிருந்த அறைக்கு முன்னால் நாங்கள் அலங்கரித்த பூக்கோலத்தில் மயங்கி நின்றது அந்த சிறு வயசுக் குழுமம்! உள்ளே சென்று அவர்கள் உதவியோடேயே அறையைச்சுற்றி தோரணம் கட்டினோம்.இந்தியாவைப் பற்றிய போஸ்டர்களை ஏற்றினோம். மைக்கோடு இருந்த மேடையில் ஏறிப்போய் இந்தியாவைப்பற்றி இப்போது பேசப்போகிறார்கள் என  கூட்டம் நினைத்துக்கொண்டிருக்கையில் வட்டம் போட்டு அவர்கள் நடுவே அவள் அமர்கையில் ஆஹா இந்தியாவை அனுபவிக்கவல்லவா போகிறோம் என்ற  மகிழ்ச்சியால் அரங்கம்  நிரம்பிப்போனது! பிரபஞ்ச வேண்டுதலோடு தொடங்கி சுலபமான யோகபயிற்சிக்குள் நுழைந்து பாரத நாட்டிய தொடக்க அடிகளில் கால் பதித்து  இதிகாச கதைக்குள் கண் விரித்து அவர்களோடு வெளியே வந்த அவள் ராஜஸ்தானின் ஒட்டுப்போட்ட ஒரு அழகான விரிப்பை நான்கு பிள்ளைகளை விரித்துப்பிடிக்கச்செய்து   வட்டத்தைச் சுற்றி காட்ட வைத்தபின் ராஜஸ்தானைப் பற்றியும்  இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களைப்பற்றியும்  போஸ்டர்களை சுற்றிகாட்டி விவரிக்க கடைசியாக வந்த சரமாரி கேள்விகளும் சற்றே நேரத்தில் கலர் கலரான துண்டு பேப்பர்களில் அவர்கள் மனதுக்கு உகந்த டிசைன்களை வரைந்து துண்டுகளை சேர்த்து ஒட்டி எங்கள் ராஜஸ்தான் விரிப்பைப்பார்த்தீர்களா என அவர்கள் கண்விரித்த போது மனசுக்குள் பெரியதொரு திருப்தி எங்களுக்கு!   இதைஎல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவள் "எனக்கு இப்ப புரிஞ்சிடுச்சு மேம்." என சிரித்த முகத்துடன் எனக்குக்  கை கொடுத்தாள்
ஆயுள் பூராவுக்கும் எழுதப் போகும் அந்த சின்ன வாண்டு இப்போதைக்கு சுதந்திரப்பறவையாக வலம் வருவான்.  அம்மா அப்பாவோடு  பீச் பார்க் ஜு பிளானட்டேரியம் சுற்றி வந்து சுகம் பெறுவான் அவன் படைப்பாற்றல் விரிந்து பறந்து செழிக்கும் என்ற நம்பிக்கை அந்த கை குலுக்கல் வழியே எனக்குக் வந்து சேர்ந்தது உண்மை!
எங்கள் நண்பர் ஒருவர் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர். திருச்சியில் வீட்டுக்கு வந்திருந்த போது நம் பள்ளியைப்பற்றியும் அவ்வப்போது அவதியாக கை உடைந்து கால் முறிந்து அவரிடம் தூக்கிக்கொண்டு ஓடும் மாணவர்களிப்பற்றியும் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தோம்.
" இதையும் நீங்க கேட்டாகணுங்க" என்ற மருத்துவர் " ஒரு நாள் ஒரு அப்பா அம்மா அவுங்களோட மூணு  வயசுப்பொண்ண தூக்கிகிட்டு வந்தாங்க. கொஞ்ச நாளா அவளோட வலது கை மொடங்கிப் போயே இருக்காம். சாப்பிட முடியில நாலு பேரோட சேந்து வெளையாட முடியில.....ஸ்கூல்ல எழுத முடியில..... பொட்ட பிள்ளைங்க... நாளைக்கி அவளுக்கும்  ஒரு நல்லது நடக்குணுமுல்லங்கண்ணு  பொலம்பித் தீத்துட்டாங்க. டெஸ்ட் பண்ணி பாத்தத்தில் எலும்புல எந்தக்கோளாரும் இல்லண்ணு தெளிவாத்தெரிஞ்சிது.
அவங்களோட இன்னுங்கொஞ்சம் விளாவாரியாப்பேசினேன். தூங்கும் போது கை சாதாரணமா இருக்குங்கிற விவரத்த அப்பத்தான் சொன்னாங்க. எனக்கு பொறி தட்டுன மாதிரி இருந்துச்சு. மக எந்த ஸ்கூல்ல படிக்கிறாங்கண்ணு கேட்டேன்.அவங்க ஸ்கூல்பேர சொன்னப்ப எனக்கு விதுக்குண்ணு இருந்துச்சு. அந்த ஸ்கூல் நம்முளுது மாதிரியில்லாம் இல்லாம ஒரு மாதிரியானதுண்ணு கேள்விப்பட்டுருக்கேன்.  'மனப்பாடம் பண்ணு கக்கு மார்க்க வாங்கு' ங்கிற ப்ராய்லர் ஸ்கூலாம் அது! அங்க பிள்ளையோட வேறெந்த தெறமைக்கும்  பொட்டு எடம் கூட கெடையாதாம். அதனால அட்ட கிளாசிலேர்ந்தே எழுது எழுதுண்ணு பிள்ள பிராணன எடுத்துருவாங்களாம்...... சின்னவளின் கை மொடக்கு உடம்பளவில் கிடையாது மனத்தளவில் என்ற தெளிவு இப்போது எனக்குக் கிடைத்தது.
நான் இந்த விவரங்கள அவங்ககிட்ட சொல்லாம பள்ளிக்கூடத்த ஒடனடியா மாத்துங்க. பிள்ளைய எழுதுரத்துக்கு கட்டாயப்படுத்தாதிங்க...... சாய்ங்காலத்தில ஓடி வெளையாட உடுங்க..... இதுக்கு மேல கையில எதாவது பிரச்சன இருந்தா முட்டும் எங்கிட்ட வாங்க..... நல்லாயிட்டா ஒரு போன் பண்ணி சொல்லுங்கண்ணேன்.
'நல்ல சேதிங்க ஐயா நீங்க சொன்ன மாதிரியே பள்ளிகூடத்த மாத்திப்புட்டோம்....மக சந்தோஷமா ஓடியாடி வெளையாடுது கையாலஅள்ளி சாப்புடுது ஐயாவ நாங்க ரெண்டு பேரும் கையெடுத்து கும்புடுறோங்க."ண்ணு' அவங்க ஒரு நா போன் பண்ணுனப்ப  ஏதோ நம்மளால முடிஞ்ச நல்ல காரியத்த செஞ்சிருக்கோம்ங்கிற திருப்தி எனக்கு'"
"அருமையான விஷயங்க நீங்க பண்ணினது" என்றோம் நாங்கள் ஒரே குரலாய்!
இனி சின்ன குழந்தையின் சின்ன படிப்பு பிரச்னையை பாரமாக சுமந்து என்னிடம் வரும் பெற்றோருக்கு எங்கள் நண்பரின் அநுபவமும் என் பகிர்தலின் ஒரு மையக்கருத்தாக இருக்கும் என்பது உறுதி!

Thursday, 7 November 2019

மதிப்பீடுகளும் வினோத சந்திப்புகளும்



இந்த பதிப்பு என் தம்பியின் வார்த்தைகள் வழியே உங்களுக்கு வருகிறது. மதிப்பீடுகள் மிக்க இந்த ஆசிரியர் கும்பகோணத்தில் வசிக்கிறார். ஒரு மாதம் கழித்து ஊரிலிருந்து வந்த எங்களுக்கு அவரது போன் வழிப் பகிர்வு ஒரு வித்தியாசமான முற்றிலும் எதிர்பாராத அனுபவம் ஒன்றை அளித்தது உண்மையிலும் உண்மை!! 
"கும்பகோணத்தில் நடக்கும் கல்யாணங்களுக்குப் போகையில் நான்கைந்து நண்பர்கள் சந்திப்பு கட்டாயம் இருக்கும். சமயங்களில்  பழைய மாணவர்களை அவர்கள் குடும்பத்தோடு சந்திக்கும் வாய்ப்பும் உண்டு. அவர்கள் வளர்ச்சியை உரிமையோடு பகிர்ந்து கொள்கையில் என் மகிழ்வு இரட்டித்துப்போய்விடும்!
அன்றும் அப்படித்தான். என் மாணவரின் திருமணம். அப்பாவும் எனது நெருங்கிய நண்பர். நண்பர்களின் கூட்டம் அன்று பெரிதாக இருக்க பேச்சும் சிரிப்பும் களைகட்டி இருந்தது அங்கு. அப்போது ஜம்மென்று டிரஸ் பண்ணியிருந்த ஒருவர் என்னை நோக்கி வந்தார்.. " சார் ஓங்கள எங்கயோ பாத்தமாதிரி இருக்கு...... எங்கண்ணுதான் பட்டுண்ணு புடிபட மாட்டங்குது" மனசுக்குள் தேடிப்பார்ப்பது அவரது தோரணையில் எனக்குப்புரிந்தது. " நானும் ஒங்கள எங்கேயோ பார்த்திருக்க மாதிரிதான் தோணுது." என்றேன் நானும்.
"சந்தோஷம் சார்..... வயசாக ஆக ஞாபக மறதிதான் போங்க..." கைகுலுக்கிய அவர் கலியாணத்தில் கலந்து போக எங்களது நண்பர் குழு திரும்பவும் களைகட்டியது.
அருமையான சாப்பாட்டை முடித்துவிட்டு வெளியே வருகிறேன். திரும்பவும் அவர்!
"சாருக்கு ஒங்க சொந்த ஊர் எதுங்க?" என்றார்     
" பக்கத்துல எடங்கண்ணிதாங்க " என்றேன் நான்.
"என் ஊரும் அதுதாங்க......".  கையை கெட்டியாகப்  பிடித்துக்கொண்டார் அவர்
" ஓங்களயெல்லாம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. என்னோட அப்பா பெரியப்பா சித்தப்பா ஒங்க அம்மா அப்பாவுக்கு நெலத்துக்கு நீராணிக்கம் பாத்தவங்க. அவுங்க பேரச்சொன்னா நீங்க பட்டுண்ணு புடுச்சிருவிங்க. பொன்னன் மருதன் குட்டாரு. மருதன்தான் எங்கப்பா."
"என் மனதுக்குள் உடனடியாக வந்தது பொன்னன்தான். லீவு தொடங்கிய உடன் இடங்கண்ணி வருவதற்கு ரெட்டை மாட்டு வண்டியோடு கும்பகோணம் வீட்டிற்கு முன் பொன்னன் ஆஜர் கொடுத்து கண் மண் தெரியாமல் எங்களைக்  துள்ளிக்குதிக்க வைக்கும் பொன்னன், லீவு முடிந்த துக்கத்தில் தோய்ந்து போய் கிடக்கும் எங்களை கும்பகோணம் வீட்டில் கொண்டு வந்து சேர்க்கும்   பொன்னன் சந்தோஷத்தையும் வருத்தத்தையும் கலவையாக கொடுக்கும் ஒரு கில்லாடி. இப்ப ஞாபகம் வருதுங்க" என்றேன் நான்
"அந்த காலத்திலேயே உங்கம்மா அதான் பெரிய ஆச்சி புரட்சிகாரங்களாம் சார். ஆம்பளைகதான் நில புலன பாக்க முடியுமுண்ணு வீராப்பா நிண்ணப்ப பொம்பளைகளாலயும் தெறமையா செய்ய முடியுமுண்ணு செஞ்சு காட்டினது ஆச்சிதாண்ணு பெரியப்பா சித்தப்பா அப்பா சொல்லி கேட்டிருக்கேன். நெல்லை ஆச்சி அளந்து போட்டா ஒரு மாகாணி கூடதான் உழுவுமே தவிர கொறையாவே இருக்காதாம்! இதைத்தவிர ஆச்சிக்கு மனசுக்குள்ள இன்னொரு ஆச தங்கிட்ட வேலை செய்யிறவங்க பட்டறிவு மட்டுமில்லாம படிப்பறிவோடும் இருக்குணும்முண்ணு. இத அண்ணன் தம்பிகள் கிட்ட சொன்னாங்களாம். "படிக்கிற வயசா இது!!!!" அவுங்க மூணு பேரும் பரிகாசமா சிரிச்சாங்களாம். ஆச்சிக்கி வருத்தமா இருந்தாலும்  இன்னொண்ணு சொன்னாங்களாம்  "படிக்கதான் ஒடம்பு வளையாதுங்கிறிங்க ஒங்க கையெழுத்தயாவது  போட நீங்க கட்டாயம் கத்துக்குணும். கைநாட்டு வைக்கும் தற்குறியா இனிமே இருக்கக் கூடாதுண்ணு மூணு பேருக்கும் அவுங்க பேர எழுத கத்துக்குடுத்தாங்களாம்.
வீட்டுக்கு வந்த அவுங்க ஆச்சி குடுத்த துண்டு பேப்பர்ல தங்க பேர எழுதிக்காட்டினப்ப வீடே பிரமிச்சு போயிடுச்சாம்!
பிள்ளைகள எல்லாம் நீங்க நல்லா படிக்க வைக்கணும் படிப்புதான் ஒங்கள தூக்கிவுடும்ணு ஆச்சி திரும்பத் திரும்ப சொல்லிகிட்டே இருப்பாங்களாம். நான் இண்ணைக்கி கவர்மெண்ட்ட்ல பெரிய வேலையில இருந்து ரிட்டையர் ஆயிருக்கேன் நல்ல எடத்துல கல்யாணம் முடிச்சேன். எம் பிள்ளக நெறையா படிச்சிருக்குக. இத்தினிக்கும் மூல காரணம்  உங்கம்மாதான் சார்."
என் இரண்டு கையையும் உருகிப்பிடித்த அவர் ஒரு தேங்க்யூ  வோடு காரை நோக்கி நடக்க டிரைவர் பணிவாகக் கதவைத் திறந்து நின்றார்.
"இன்னொரு கல்யாணம். பையனின் கல்யாணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க நண்பர்  ஒருவர்  வீட்டிற்கு வந்தபோது நான் வீட்டில் இல்லை. என் மனைவியிடம் அவர் "அருமையான பெரிய வாத்தியாரை எனக்குத்தெரியும்மா..... அவுரு பையன் ஒங்க வீட்டுக்கார ரையும் நல்லாத் தெரியும்.தங்கமான மனுஷன். ஒங்க பிள்ளைகளையும் எனக்குத்தெரியும். ஆக இந்த கலியாணப்பத்திரிக்கை மூணு தலமுறைக்கும் சேத்துக்குடுக்குறேன் எல்லாரும் வந்திருந்து எம்பையன ஆசீர்வாதம் பண்ணணும்."முண்ணு சொல்லி பழம் பாக்கோடு பத்திரிக்கை வைத்திருக்கிறார்.
பல் வேறு காரணங்களால் கல்யாணத்திற்கு அன்று நான் மட்டும்தான் போகிறேன். வரிசை வரிசையாய் நின்ற  கார்களுக்கிடையே ஸ்கூட்டருக்கு இடம் பிடிக்கிறேன். படியேறுகையில் ஓடி வந்து என் கையைப்பிடித்த நண்பர் நேராக என்னை மணவறைக்கு இட்டுச் செல்கிறார்.
கூடியிருந்த சுற்றம் உறவு காத்திருக்க பெண் மாப்பிள்ளையை  என் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளுமாறு சொன்னார் நண்பர். என்னைப்பற்றிய விவரங்களை நான் எடுத்துச்சொல்ல ஆரம்பித்தபோது அவரது பையன் " நீங்க ஒண்ணுமே சொல்ல வேண்டாம் அங்கிள். ஒங்கள பத்தியும் ஒங்க அப்பா பத்தியும் தெனமும்  ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல எங்க அப்பாவால பேசாம  இருக்க முடியாது . ஒங்கள இண்ணைக்கி நேர்ல பாத்தது  சந்தோஷமா இருக்கு." என்றான்.
" முதல் ஆசிர்வாதம் உங்களுடையதாய் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அது போலவே ஆனதில் மனசு திருப்தியாக இருக்கிறது" என்றவர் "விலை மதிக்க முடியாத ஒண்ண ஒங்குளுக்கு இண்ணைக்கி காட்டியே ஆவணும்." சொல்லிக்கொண்டே சில்க் சட்டையின் பைக்குள் கையை விட்டு என்னிடம் காட்டிய  அந்த பொருளைக் கண்டவுடன் நான் அதிர்ந்து போய்த்தான் நின்றேன்!! லேமினேட் பண்ணிய என் அப்பாவின் சின்ன போட்டோ!! கண்கள் இரண்டும் முட்டிக்கொண்டு நின்றன!!
" இண்ணக்கி பட்டு வேட்டியும் சட்டையும் போட்ட கையோட ஐயாவோட போட்டோவைத்தான் மொத காரியமா பைக்குள்ள வச்சேன். ஐயா ஆசீர்வாதத்தோடதான் சடங்குகள் எல்லாம் ஆரம்பிச்சுது. இண்ணைக்கி மட்டுமில்ல தெனமும் குளிச்சிட்டு சட்ட மாத்தும்போது ஐயா என் இருதயத்துக்கு பக்கத்தில ஒக்காந்துருவாரு. அவுரு என் பக்கத்துல  இருந்தாத்தாங்க எனக்குத்  தெம்பு."
உணர்ச்சி மேலிட்டு நின்ற அவர்  என் கைகளை கண்களில் ஒத்திக்கொண்டார்!"
தம்பியின் போன் வழிப் பகிர்வு ஒரு வித்தியாசமான முற்றிலும் எதிர்பாராத அனுபவம் ஒன்றை அளித்தது உண்மையிலும் உண்மை!!
 ஐம்பது அறுபது வருடம் கழித்து  தன் அப்பாவுக்கு கையெழுத்துப்போட சொல்லிக்கொடுத்த அந்த மங்கையின் நினைப்பு மகனிடம்  இன்னும் பசுமையாக இருப்பானேன்?!
 அப்பா பள்ளியின் தலைமையில் இருந்தபோது தாயமும் பல்லாங்குழியுமே வாழ்க்கை என்றிருந்த அந்த ஊருக்கு  படிப்பறிவு கொடுத்த அம்மாவின் மதிப்பீடுகள் இன்றும் பசுமையாக உலா வருதல் எவ்வண்ணம்?!! அப்பப்பா......!! 
சாதாரண ஒரு ஆசிரியர் எந்த வகையில் நண்பரைத் தொட்டிருக்க வேண்டும்?! அவரைத் தன் கூடவே தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கு என்ன மந்திரம் செய்தார் அந்த மனிதர்?!
அவர் திண்ணை வகுப்பின் இலவசக் கல்வி மாணாக்கரில் அவர் ஒருவரோ?
வயிறு நிறைந்திருந்தால்தான் பாடம் மனசுக்குள் நிற்கும் என்பதைக் குறிப்பறிந்த அம்மாவின் உணவைப்பகிர்ந்து கொண்டவராய் இருப்பாரோ?!
ரயில்வே ஆபிசர்களோடு பேட்மிண்ட்டன் விளையாடிவிட்டு ஸ்டேஷனுக்கு வருகையில் அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்து வரும் பையன்கள் ரயிலுக்குக்காத்து நிற்கும் அந்த வேளையிலும் கடினமான கணக்கு முறைகளை பாட்டாகப் பாடி சுலமாக்கிக் ஸ்டேஷனில் நின்றவாறே  மனசில் ஏற்றிக்கொண்ட மாணவர்களில் ஒருவராக இருந்திருப்பாரோ?!
அப்பா அம்மா பிணக்குகளை சுமுகமாக்கி அமைதி கொடுத்த பல் வேறு வீடுகளில் இவரதும் ஒன்றாக இருந்திருக்குமோ?!
அப்பாவின் பரிந்துரையால் இவருக்கு நல்ல வேலை கிடைத்திருக்குமோ?
அப்பாவின் மதிப்பீடுகள் நிறைந்த வாழ்வு அவருக்கு ஒரு எடுத்தக்காட்டாக இருந்திருக்குமோ?
இப்படியாக என் நினைவுகள் நோக்கி ஓடியது.
நினைவுகள் ஒரு பக்கம் இருக்க இந்த இரண்டு திருமணங்கள் வழியாக இவ்வளவு வருடங்கள் கழிந்து எங்களுக்கு விநோதமான ஒரு அனுபத்தையல்லவா முன் வைத்திருக்கிறார்கள் பெற்றோர்! என்ன விதமான  சங்கேதங்களை பிள்ளைகள் எங்களுக்கு  அவர்கள் கொடுக்க விரும்புகிறார்கள்? நாங்கள் மக்களுக்குக் கொடுப்பது இன்னும் அதிகமாகலாம் என்பதைச் சொல்லுகிறார்களோ? செய்வதை உங்களால் இன்னும் சிறக்கச்செய்ய முடியும் முயன்று பாருங்களேன் என சவால் விடுகிறார்களோ?!
இந்த அனுபவத்தை எங்கள் சந்ததிகளோடு கட்டாயம் பகிர்ந்து கொள்ளுவோம். அவர்கள் மதிப்பீடுகள் என்றுமே சிறந்து உயர அவர்கள் நல்ல எண்ண அலைகள் விரிந்து பறந்து சமுதாயத்தைத் தொட்டுக்கொண்டே இருக்க எங்களால் ஆனது என்றுமே எப்போதுமே!