இந்த பதிப்பு என் தம்பியின் வார்த்தைகள்
வழியே உங்களுக்கு வருகிறது. மதிப்பீடுகள் மிக்க இந்த ஆசிரியர் கும்பகோணத்தில்
வசிக்கிறார். ஒரு மாதம் கழித்து ஊரிலிருந்து வந்த எங்களுக்கு அவரது போன் வழிப்
பகிர்வு ஒரு வித்தியாசமான முற்றிலும் எதிர்பாராத அனுபவம் ஒன்றை அளித்தது
உண்மையிலும் உண்மை!!
"கும்பகோணத்தில் நடக்கும்
கல்யாணங்களுக்குப் போகையில் நான்கைந்து நண்பர்கள் சந்திப்பு கட்டாயம் இருக்கும்.
சமயங்களில் பழைய மாணவர்களை அவர்கள்
குடும்பத்தோடு சந்திக்கும் வாய்ப்பும் உண்டு. அவர்கள் வளர்ச்சியை உரிமையோடு
பகிர்ந்து கொள்கையில் என் மகிழ்வு இரட்டித்துப்போய்விடும்!
அன்றும் அப்படித்தான். என் மாணவரின்
திருமணம். அப்பாவும் எனது நெருங்கிய நண்பர். நண்பர்களின் கூட்டம் அன்று பெரிதாக
இருக்க பேச்சும் சிரிப்பும் களைகட்டி இருந்தது அங்கு. அப்போது ஜம்மென்று டிரஸ்
பண்ணியிருந்த ஒருவர் என்னை நோக்கி வந்தார்.. " சார் ஓங்கள எங்கயோ பாத்தமாதிரி
இருக்கு...... எங்கண்ணுதான் பட்டுண்ணு புடிபட மாட்டங்குது" மனசுக்குள்
தேடிப்பார்ப்பது அவரது தோரணையில் எனக்குப்புரிந்தது. " நானும் ஒங்கள எங்கேயோ
பார்த்திருக்க மாதிரிதான் தோணுது." என்றேன் நானும்.
"சந்தோஷம் சார்..... வயசாக ஆக ஞாபக
மறதிதான் போங்க..." கைகுலுக்கிய அவர் கலியாணத்தில் கலந்து போக எங்களது நண்பர்
குழு திரும்பவும் களைகட்டியது.
அருமையான சாப்பாட்டை முடித்துவிட்டு வெளியே
வருகிறேன். திரும்பவும் அவர்!
"சாருக்கு ஒங்க சொந்த ஊர் எதுங்க?"
என்றார்
" பக்கத்துல எடங்கண்ணிதாங்க "
என்றேன் நான்.
"என் ஊரும்
அதுதாங்க......". கையை
கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் அவர்
" ஓங்களயெல்லாம் எனக்கு நல்லா ஞாபகம்
இருக்கு. என்னோட அப்பா பெரியப்பா சித்தப்பா ஒங்க அம்மா அப்பாவுக்கு நெலத்துக்கு
நீராணிக்கம் பாத்தவங்க. அவுங்க பேரச்சொன்னா நீங்க பட்டுண்ணு புடுச்சிருவிங்க.
பொன்னன் மருதன் குட்டாரு. மருதன்தான் எங்கப்பா."
"என் மனதுக்குள் உடனடியாக வந்தது
பொன்னன்தான். லீவு தொடங்கிய உடன் இடங்கண்ணி வருவதற்கு ரெட்டை மாட்டு வண்டியோடு
கும்பகோணம் வீட்டிற்கு முன் பொன்னன் ஆஜர் கொடுத்து கண் மண் தெரியாமல்
எங்களைக் துள்ளிக்குதிக்க வைக்கும்
பொன்னன், லீவு முடிந்த துக்கத்தில் தோய்ந்து போய் கிடக்கும்
எங்களை கும்பகோணம் வீட்டில் கொண்டு வந்து சேர்க்கும் பொன்னன் சந்தோஷத்தையும் வருத்தத்தையும்
கலவையாக கொடுக்கும் ஒரு கில்லாடி. இப்ப ஞாபகம் வருதுங்க" என்றேன் நான்
"அந்த காலத்திலேயே உங்கம்மா அதான்
பெரிய ஆச்சி புரட்சிகாரங்களாம் சார். ஆம்பளைகதான் நில புலன பாக்க முடியுமுண்ணு
வீராப்பா நிண்ணப்ப பொம்பளைகளாலயும் தெறமையா செய்ய முடியுமுண்ணு செஞ்சு காட்டினது
ஆச்சிதாண்ணு பெரியப்பா சித்தப்பா அப்பா சொல்லி கேட்டிருக்கேன். நெல்லை ஆச்சி
அளந்து போட்டா ஒரு மாகாணி கூடதான் உழுவுமே தவிர கொறையாவே இருக்காதாம்! இதைத்தவிர
ஆச்சிக்கு மனசுக்குள்ள இன்னொரு ஆச தங்கிட்ட வேலை செய்யிறவங்க பட்டறிவு
மட்டுமில்லாம படிப்பறிவோடும் இருக்குணும்முண்ணு. இத அண்ணன் தம்பிகள் கிட்ட
சொன்னாங்களாம். "படிக்கிற வயசா இது!!!!" அவுங்க மூணு பேரும் பரிகாசமா
சிரிச்சாங்களாம். ஆச்சிக்கி வருத்தமா இருந்தாலும்
இன்னொண்ணு சொன்னாங்களாம் "படிக்கதான்
ஒடம்பு வளையாதுங்கிறிங்க ஒங்க கையெழுத்தயாவது
போட நீங்க கட்டாயம் கத்துக்குணும். கைநாட்டு வைக்கும் தற்குறியா இனிமே
இருக்கக் கூடாதுண்ணு மூணு பேருக்கும் அவுங்க பேர எழுத கத்துக்குடுத்தாங்களாம்.
வீட்டுக்கு வந்த அவுங்க ஆச்சி குடுத்த
துண்டு பேப்பர்ல தங்க பேர எழுதிக்காட்டினப்ப வீடே பிரமிச்சு போயிடுச்சாம்!
பிள்ளைகள எல்லாம் நீங்க நல்லா படிக்க
வைக்கணும் படிப்புதான் ஒங்கள தூக்கிவுடும்ணு ஆச்சி திரும்பத் திரும்ப சொல்லிகிட்டே
இருப்பாங்களாம். நான் இண்ணைக்கி கவர்மெண்ட்ட்ல பெரிய வேலையில இருந்து ரிட்டையர்
ஆயிருக்கேன் நல்ல எடத்துல கல்யாணம் முடிச்சேன். எம் பிள்ளக நெறையா படிச்சிருக்குக.
இத்தினிக்கும் மூல காரணம் உங்கம்மாதான்
சார்."
என் இரண்டு கையையும் உருகிப்பிடித்த அவர்
ஒரு தேங்க்யூ வோடு காரை நோக்கி நடக்க
டிரைவர் பணிவாகக் கதவைத் திறந்து நின்றார்.
"இன்னொரு கல்யாணம். பையனின்
கல்யாணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க நண்பர்
ஒருவர் வீட்டிற்கு வந்தபோது நான்
வீட்டில் இல்லை. என் மனைவியிடம் அவர் "அருமையான பெரிய வாத்தியாரை
எனக்குத்தெரியும்மா..... அவுரு பையன் ஒங்க வீட்டுக்கார ரையும் நல்லாத்
தெரியும்.தங்கமான மனுஷன். ஒங்க பிள்ளைகளையும் எனக்குத்தெரியும். ஆக இந்த
கலியாணப்பத்திரிக்கை மூணு தலமுறைக்கும் சேத்துக்குடுக்குறேன் எல்லாரும்
வந்திருந்து எம்பையன ஆசீர்வாதம் பண்ணணும்."முண்ணு சொல்லி பழம் பாக்கோடு
பத்திரிக்கை வைத்திருக்கிறார்.
பல் வேறு காரணங்களால் கல்யாணத்திற்கு அன்று
நான் மட்டும்தான் போகிறேன். வரிசை வரிசையாய் நின்ற கார்களுக்கிடையே ஸ்கூட்டருக்கு இடம்
பிடிக்கிறேன். படியேறுகையில் ஓடி வந்து என் கையைப்பிடித்த நண்பர் நேராக என்னை
மணவறைக்கு இட்டுச் செல்கிறார்.
கூடியிருந்த சுற்றம் உறவு காத்திருக்க பெண்
மாப்பிள்ளையை என் காலில் விழுந்து
ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளுமாறு சொன்னார் நண்பர். என்னைப்பற்றிய விவரங்களை நான்
எடுத்துச்சொல்ல ஆரம்பித்தபோது அவரது பையன் " நீங்க ஒண்ணுமே சொல்ல வேண்டாம்
அங்கிள். ஒங்கள பத்தியும் ஒங்க அப்பா பத்தியும் தெனமும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல எங்க அப்பாவால
பேசாம இருக்க முடியாது . ஒங்கள இண்ணைக்கி
நேர்ல பாத்தது சந்தோஷமா இருக்கு."
என்றான்.
" முதல் ஆசிர்வாதம் உங்களுடையதாய்
இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அது போலவே ஆனதில் மனசு திருப்தியாக
இருக்கிறது" என்றவர் "விலை மதிக்க முடியாத ஒண்ண ஒங்குளுக்கு இண்ணைக்கி
காட்டியே ஆவணும்." சொல்லிக்கொண்டே சில்க் சட்டையின் பைக்குள் கையை விட்டு
என்னிடம் காட்டிய அந்த பொருளைக் கண்டவுடன்
நான் அதிர்ந்து போய்த்தான் நின்றேன்!! லேமினேட் பண்ணிய என் அப்பாவின் சின்ன
போட்டோ!! கண்கள் இரண்டும் முட்டிக்கொண்டு நின்றன!!
" இண்ணக்கி பட்டு வேட்டியும்
சட்டையும் போட்ட கையோட ஐயாவோட போட்டோவைத்தான் மொத காரியமா பைக்குள்ள வச்சேன். ஐயா
ஆசீர்வாதத்தோடதான் சடங்குகள் எல்லாம் ஆரம்பிச்சுது. இண்ணைக்கி மட்டுமில்ல தெனமும்
குளிச்சிட்டு சட்ட மாத்தும்போது ஐயா என் இருதயத்துக்கு பக்கத்தில ஒக்காந்துருவாரு.
அவுரு என் பக்கத்துல இருந்தாத்தாங்க
எனக்குத் தெம்பு."
உணர்ச்சி மேலிட்டு நின்ற அவர் என் கைகளை கண்களில் ஒத்திக்கொண்டார்!"
தம்பியின் போன் வழிப் பகிர்வு ஒரு
வித்தியாசமான முற்றிலும் எதிர்பாராத அனுபவம் ஒன்றை அளித்தது உண்மையிலும் உண்மை!!
ஐம்பது அறுபது வருடம் கழித்து தன் அப்பாவுக்கு கையெழுத்துப்போட
சொல்லிக்கொடுத்த அந்த மங்கையின் நினைப்பு மகனிடம்
இன்னும் பசுமையாக இருப்பானேன்?!
அப்பா பள்ளியின் தலைமையில் இருந்தபோது தாயமும்
பல்லாங்குழியுமே வாழ்க்கை என்றிருந்த அந்த ஊருக்கு படிப்பறிவு கொடுத்த அம்மாவின் மதிப்பீடுகள்
இன்றும் பசுமையாக உலா வருதல் எவ்வண்ணம்?!! அப்பப்பா......!!
சாதாரண ஒரு ஆசிரியர் எந்த வகையில் நண்பரைத்
தொட்டிருக்க வேண்டும்?!
அவரைத் தன் கூடவே தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கு என்ன மந்திரம்
செய்தார் அந்த மனிதர்?!
அவர் திண்ணை வகுப்பின் இலவசக் கல்வி
மாணாக்கரில் அவர் ஒருவரோ?
வயிறு நிறைந்திருந்தால்தான் பாடம்
மனசுக்குள் நிற்கும் என்பதைக் குறிப்பறிந்த அம்மாவின் உணவைப்பகிர்ந்து கொண்டவராய்
இருப்பாரோ?!
ரயில்வே ஆபிசர்களோடு பேட்மிண்ட்டன்
விளையாடிவிட்டு ஸ்டேஷனுக்கு வருகையில் அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்து வரும்
பையன்கள் ரயிலுக்குக்காத்து நிற்கும் அந்த வேளையிலும் கடினமான கணக்கு முறைகளை
பாட்டாகப் பாடி சுலமாக்கிக் ஸ்டேஷனில் நின்றவாறே
மனசில் ஏற்றிக்கொண்ட மாணவர்களில் ஒருவராக இருந்திருப்பாரோ?!
அப்பா அம்மா பிணக்குகளை சுமுகமாக்கி அமைதி
கொடுத்த பல் வேறு வீடுகளில் இவரதும் ஒன்றாக இருந்திருக்குமோ?!
அப்பாவின் பரிந்துரையால் இவருக்கு நல்ல வேலை
கிடைத்திருக்குமோ?
அப்பாவின் மதிப்பீடுகள் நிறைந்த வாழ்வு
அவருக்கு ஒரு எடுத்தக்காட்டாக இருந்திருக்குமோ?
இப்படியாக என் நினைவுகள் நோக்கி ஓடியது.
நினைவுகள் ஒரு பக்கம் இருக்க இந்த இரண்டு
திருமணங்கள் வழியாக இவ்வளவு வருடங்கள் கழிந்து எங்களுக்கு விநோதமான ஒரு
அனுபத்தையல்லவா முன் வைத்திருக்கிறார்கள் பெற்றோர்! என்ன விதமான சங்கேதங்களை பிள்ளைகள் எங்களுக்கு அவர்கள் கொடுக்க விரும்புகிறார்கள்? நாங்கள்
மக்களுக்குக் கொடுப்பது இன்னும் அதிகமாகலாம் என்பதைச் சொல்லுகிறார்களோ? செய்வதை உங்களால் இன்னும் சிறக்கச்செய்ய முடியும் முயன்று பாருங்களேன் என
சவால் விடுகிறார்களோ?!
இந்த அனுபவத்தை எங்கள் சந்ததிகளோடு கட்டாயம்
பகிர்ந்து கொள்ளுவோம். அவர்கள் மதிப்பீடுகள் என்றுமே சிறந்து உயர அவர்கள் நல்ல
எண்ண அலைகள் விரிந்து பறந்து சமுதாயத்தைத் தொட்டுக்கொண்டே இருக்க எங்களால் ஆனது
என்றுமே எப்போதுமே!
No comments :
Post a Comment