எடங்கண்ணி சனங்களுக்கு இனிப்பு மேல ஒரு தனி ஈடுபாடு!
அதைக்கண்டவுடனேயே நாக்கிலே எச்சில் ஊறிப்போவும்…..
வெந்த சக்கரவள்ளிக்கிழங்கில நாட்டுசக்கரையையும்
தேங்காப்பூவையும் சேத்துப் பெசஞ்சு உருட்டிக்குடுக்கிறது, அவுல ஊற வச்சு தேங்கா சககர
போட்டு … இல்ல முழு பச்ச பயிர வறுத்து வேவ வச்சு வெல்லம் தேங்கா போட்டு இடிச்சு பயருருண்ட
பண்றது.. இப்படியா சாயங்காலத் தீனிக்கு வெல்லத்திலயும் நாட்டு சக்கரயிலயும் பொரளல்.
இதெல்லாம் பண்ண முடியிலண்ணா இருக்கவே இருக்கு வறுத்த கள்ளையும் ஒரு துண்டு நல்ல வெல்லம்
இல்ல பாதி கட்டி அச்சு வெல்லம்!
இந்த இனிப்பு பித்துக்கு ஒரு காரணமா இருக்கிறது
சாமிக்குப்பேர் வக்கிற சனவரித் திருநாளா கூட இருக்கலாம். அச்சிஷ்டவங்க பேரெல்லாம்
போட்டு வரும் புது வருஷ காலண்டர்ல சனவரி ஒண்ணாந் தேதிக்குக் கீழ விருத்தசேதன திருநாள்
என்று எழுதியிருக்கும். இன்னமுங்கூட இதன் உண்மையான அர்த்தம் பிடிபடுவதிலலை.ஆனா காப்பரிசித்
திருநாள் என்றால் எல்லமே விளங்கிப்போகிறது.சாமிக்குப்பேர் வைக்கும் அந்த சனவரித் திருநாளுக்கு
எடங்கண்ணியில பாத்திங்கண்ணா தினுசு தினுசா காப்பரிசி!
வீட்டுக்கு வீடு குண்டான்களில் கோயிலுக்குப் போவது
மட்டுந்தான் சாமிக்கு! மற்றபடி மரக்கால் மரக்காலாய் கிளறப்படும் அரிசி வர்ரவக போறவக,
அப்புறம் பிள்ளைவளுக் குத்தான். பச்சரிசி, பல்லு பல்லா பொரிச்ச தேங்கா, பொரிச்ச எள்ளு,
பொட்டுக்கள்ள ஏலக்கா இதுகள முதிந்த வெல்லப்பாவுல போட்டு அர அண்டாவுல கெளறுறப்ப வர்ர
வாசன இருக்கே… ம்ம்ம்.. இப்பவும் நாக்கில தண்ணி ஊறுது…… இந்த காப்பரிசி கடக்கு மொடக்குண்ணு
தனி ருசியாக இருக்கும். இத ஒரு வாரம் பத்து நா வச்சு கூட திங்கலாம்.. ஆனா அம்புட்டு
நா பிள்ள குட்டி நாம உட்டு வச்சுருப்பமா என்னா?!……. இந்த காப்பரிசிய தூக்கி அடிக்கிற
மாரி அம்மாச்சி பிள்ளைவளுக்குண்ணே ஒரு ஸ்பெஷல் காப்பரிசி பண்ணுவாங்க… புது நெல்லக்
குத்தி அந்த அரிசிய ஊற வச்சு அதுல பல்லு பல்லா தேங்கா வெள்ள சக்கர போட்டு……. அதுல ஒரு
வாய் அள்ளிப்போடு ஜிவ்வுண்ணு இழுத்தா.. தேங்கா பால் குடிச்ச மாரி அந்த வெள்ள சக்கர,
புது பச்சரிசி ருசி….அடடாடா…!!!.
இப்டி வருஷ மொத நாளே வெல்லத்துல முழுவி எழுந்திருச்சோம்ணா
வருஷம் முழுவதையும் பத்தி என்னத்த சொல்றது….. வருஷ கடசில வரும் கிறிஸ்மஸ்ஸப்பத்தி கேக்கவே
வேணாம்…. இப்பைக்கு கிறிஸ்மஸ்ஸிற்கும் பேர் வக்கற திருநாளுக்கும் எடயில வர்ர பாயாசப்
பாயாசப் பண்டிகையைப்பத்தி சொல்றேன் கேளுங்க
ஒங்களுக்கு கொஞ்சம் பைபிள் தெரிஞ்சிருந்ததுண்ணா
இந்தக்கதயும் கட்டாயம் தெரிஞ்சிருக்கும். மூன்று ராசாக்கள் ஏரொது ராசா கிட்ட போயி சாமி
பொறந்திருக்க வெஷயத்த சொல்லிட்டு சாமியப்பாக்க கெளம்பி பொயிடுறாங்க. ஏரோது அரசனுக்கு
ஒரே பொறாம. எனக்கு மேல ஒரு அரசன் பொறக்கிறதா………… ம்ஹூம் கூடவே கூடாது… இத மொளையிலயே
கிள்ளி எறிஞ்சிரணும்ணு முடிவு பண்ணி தன் படை வீரர்களுக்கு ஒரு உத்தரவு போடுறான். நாடு
பூராவும் இருக்கிற மூணுவயசுக்கு உட்பட்ட எல்லா ஆண் கொழந்தைகளையும் கொண்ணு போடணும்ணு
சொல்லிப் புட்டான் அந்த………இதுக்குள்ள சாமிக்கு சம்மனசு சேதி சொல்லி மாதா சூசையப்பரு
சேசு எல்லாரும் தப்பி ஓடிப்பொயிடுறாங்க. இந்த கொழந்தைக… ஞாபகமா கொண்டாடுற திருநா தான்
மாசில்லா கொழந்தைக திருநா.
சென்னையிலெல்லாம் அண்ணைக்கு கோயில்ல கொழந்தைகளுக்குண்ணு
பூசையெல்லாம் வக்கிறாங்க மந்திரிக்கிறாங்க.. போட்டியெல்லம் வச்சு ப்ரைசெல்லாம் குடுக்கிறாங்க..
ஆனா எடங்கண்ணி ஸ்டைலே தனிதான். அதுலயும் இத கொண்டாடுரது அம்மாச்சி வீட்லமட்டுந்தான்.
டிசம்பர் 28ந் தேதி சாயங்காலம் அம்மாச்சி வீடு களை கட்டிவிடும். கூடத்தில போடுர சாம்பிராணிப்
பொக வீட்டையே ரொப்பியிருக்கும்.திரு இருதய படத்துக்கு பாப்பாத்தி அத்தை, வீட்ல பூத்திருக்க
அரளிப்பூவ கட்டிப் போட்டிருப்பாங்க. அம்மாச்சி பக்தியா மெழுகுவத்திய கொளுத்தி வச்சுட்டு
திரு இருதய ஜெபம் சொல்லி முடிச்சுட்டு மாசில்லா கொழந்தைக பிரார்த்தன சொல்லும் போது
கண்ணில தண்ணி வந்துடும்… … அம்மாச்சி அவ்வளவு உருக்கமா ஜெபம் சொல்லுவாங்க. ஜெபத்தின்
ஏற்ற இறக்கம் என்னை மயக்கிடும்.”சகல….ஜாதி….. ஜனங்களுக்கும்… தேவரீர்………. ராஜாவாய்……..
இருப்பீராக” ண்ணு அவங்க சொல்லும் போது அப்புடியே அம்மாச்சிய கட்டிப்புடிச்சுகிட்டு
கண்ண மூடிக்கிணும் மாதிரி இருக்கும்… ஜெபம் முடிஞ்ச ஒடன பீடத்துக்கு கீழ இருக்கும்
பாயாசப்பானய அம்மாச்சி தொறப்பாங்க. சுண்ணாம்பால பான வெளிய பூரா சிலுவையும் ரோஜாப்பூவும்
மாத்தி மாத்தி போட்டிருப்பாங்க. அடுப்பில வெந்து போன சிலுவ இளங்கருப்பா சூடா கெட்டியா
இருக்கும். பக்கத்தில போய் நிண்ணு யாரும் பாக்காத மாதிரி தொட்டுப்பாப்பது ஒரு சுகமாத்தான்
இருக்கும். நம்ம அம்மாச்சி செஞ்ச அரிசிப்பாயசத்த ஊர்ல இருக்க எல்லாரும் குடிக்கப்போறாங்க
என்பதிலும் ஒரு சின்ன பெருமை கலந்த சுகம்தான்!!. தெருவில இருக்கறவங்க கொண்டார பித்தள
தூக்கு பறங்கி லோட்டா, ஈயச், சொம்பு. சட்டி எல்லாத்திலயும் அம்மாச்சி பாயாசத்த சரியா
பங்கிடு பண்ணுவாங்க.
பச்சரிசிய திருவையில ரவா பதத்தில ஒடச்சு அண்டாவுல
தண்ணிய கொதிக்கவுட்டு அதில இந்த அரிசி ரவாவ போட்டுக்கிண்டி வெந்தவொடன வெல்லத்தயும்
போட்டு அப்பறம் பல்லு தேங்கா ஏலக்கா தட்டிப்போட்டு எறக்கி வப்பாங்க. சின்ன பிள்ளைக
கூட இத சந்தோஷமா குடிக்கலாம். மாசில்லாக் கொழந்தக பாயாசந்தான்இது ! சட்டுணு செரிமானம்
ஆயிடும்.
ஆஞிம்மா வீட்டிலும் சக்கர வெல்லத்துக்கு கொற கெடயாது.
ஆஞிம்மா வீடும் அம்மாச்சி விடும் ரெண்டு தப்படி தூரந்தான்.அதனால ரெண்டு வீட்டு தீனியும்
எங்களுக்கு அத்துப்படி!! ஆஞிம்மா வீட்ல பெசலா பிள்ளைவளுக்கு தீனியென்றால் புழுங்கலரிசியைத்
தேங்காயோடு சேர்த்து மைய ஆட்டி, ஒண்ணுக்கு நாலு தண்ணிய கொதிக்க வச்சு மாவ அதில கொட்டிக்
கெளரி வெந்தவொடனே வெல்லத்த போட்டுக் கிண்டி கெட்டியா வரும்போது தட்டுல ஊத்தி வச்சிட்டு
செத்த நேரங் கழிச்சு தோசைத்திருப்பி காம்பாலா கோடு போட்டு பாளம் பாளமா பேத்து எடுத்து
திங்க குடுப்பாங்க. வெண்ணெய்புட்டு என்று நாங்கள் சொல்லும் இந்த தீனியை எங்கள் மெக்கேல்பட்டி
சொந்தங்கள் கொஞ்சங்கூட கூச்ச நாச்சமில்லாமல் “அரிசி அளுவா” என்று அழகான இந்த அயிட்டத்தை
கொலை செய்துவிடும்!!! “வாலப்பலத்தோல்ல வலுக்கிவிட்டு உலுந்து பில்ல வாலு வாலுன்னு கத்துதுண்ணு”சந்தோசமா
சொல்றவங்க அவுங்க! லானா ளாணாவைக் கொலை செய்யும் அவுங்க கோடையில எடங்ஙண்ணிக்கி வரும்போது
உண்டு இல்லண்ணு ஆக்கிடுவோம்… மொழித்திமிரு.அதுக வாய் தொறக்கும் போதெல்லாம் நக்கலா எங்க
கிட்ட இருந்து கர பொறளும்!!!அதுகளும் எடங்கண்ணியில கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கும்.
ஆனா சும்மா சொல்லக்கூடாது ….. மெக்கேல்பட்டி ஆளுக வேலயில சூரிக…! நாங்கள்ளாம் சாமான்
வெளக்கறது கொள்ரதுண்ணா டிமிக்கி எப்டிடா குடுக்கலாம்ணு யோஜன பண்ணுவோம். மட்டியூராயிய
தாஜா பண்ணி அது தலயில கட்டி விடலாமாண்ணு புத்தி குறுக்கு வழியில போவும். ஆனா சிந்தாத்திரி
அத்த பொண்ணு டில்லி அத்தாச்சி இருக்கே ஒரே சுரு சுருதான்!!!! அழகான லில்லிங்கிற பேர
யார் கொல பண்ணுனதுண்ணு தெரியில… நிச்சயமா நாங்க எடங்கண்ணி காரங்க பண்ணுல!!! அது கெடக்குட்டும்
பேர்ல என்னா இருக்கு.. ?! டில்லி அத்தாச்சி எல்லாரயும் விட எங்க மேல ரொம்ப பாசமா இருக்கும்.
சாமான்கள அள்ளிப்போட்டு. நிமிஷத்தில பள பளண்ணு தேச்சிடும். அப்ப எல்லாமே பித்தள பாத்திரந்தான்.
அதுல ஈயம் பூசித்தான் பொழங்குவாங்க..( கொழம்பெலாம் மண்ணு சட்டியில) நாம அந்த குண்டான்கள
ஏனோதானோ யாருக்கு வந்த விருந்தோண்ணு அரச பொரசலா தேச்சு வச்சுட்டு எப்படா சமயம் கெடக்குமுண்ணு
சொங்கு ஆட, பல்லாங்குழி ஆட, பாண்டி ஆட, இல்ல கொறஞ்ச பட்சம் கொளத்தில கும்மாளம் போட
கெளம்பிடுவோம். ஆனா அத்தாச்சி செய்யிற வேலயெல்லம் நரூசா இருக்கும். யாரையும் எதிர்பார்க்காது.
பித்தள பாத்திரமெல்லாம் பவுனுமாதிரி பள பளண்ணு மின்னும்..எப்பயும் ஒரு சிரிச்ச மூஞ்சி…..கொழைவுப்பேச்சு..
எங்களுக்கெல்லாம் அது பெரிய பிரண்டு…..
அந்த அன்புக்காத்தான் ஜொஸ்பின் அக்கா சேவியர் அத்தான்
தங்கள் பெண் ரீத்தாவை டில்லி அத்தாச்சி பையன் பெனடிக்கு கல்யாணம் செய்து வைத்தார்களோ!
பெனடிக்கும் அச்சாய் அம்மாவின் சிரிப்பு.அருமை அம்ரீஷும் ஸ்டெஃபியும் வழிவாரிசாக அந்த
அருமையான பண்பை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள்!! வாழ்க வளர்க!!!.
லீவு முடிஞ்சு ஊருக்கு கெளம்பறப்ப ஆஞிம்மா பொருவிளாங்காய்
உருண்டை புடிப்பார்கள்.அரிசிய வறுத்து பொரியரிசியாக்கி அத திருவையில அரைச்சு, வெல்லம்
முதிர் பாவுபதம் வரும்போது அந்த மாவைக்கொட்டி கெளரி உருண்டை பிடிப்பார்கள். இந்த உருண்டையில
பொதுவா பொட்டுக்கள்ள இல்ல வறுத்த தேங்காப்பல்லு போட்டு உருட்டுவாங்க.ஆனா கடல மண்டிகெடக்கும்
எடங்கண்ணியில மணலப்போட்டு கடலய முந்திரி பருப்பு பதத்தில வறுத்து தோலு, மொள போவ (மொள
அம்புட்டும் பித்தம்!) அடிச்சி பொடச்சி பிடிக்கும் இந்த உருண்டையின் ருசி… இப்பகூட
நாக்கில எச்சிதான் ஒழுவுது…! ஆனா இந்த பொருவிளாங்கா உருண்ட நம்ம பல்லுக்கு மிலிட்டரி
ட்ரெயினிங் மாதிரி………..! இத ஒரே கடியில யாராச்சும் ரெண்டா ஆக்கிட்டா பல்லுக்குண்ணு
ஒரு ஒலிம்பிக் இருந்துதுண்ணு வச்சுகுங்க அவுங்களுக்கு தங்க மெடல் தான். மொள்ள நாக்கில
ஊற வச்சு சின்ன சின்ன சில்லா கடிச்சு சொவச்சு சாப்பிடறதுதான் மொற. இதுக்கே வாயில கொரக்கு
வலி கண்டு போயிடும் ஆனா இந்த பொரிவிளாங்காய் உருண்ட மோகினிப் பிசாசு மாதிரி… ருசி கண்டவங்கள
லேசில உட்டுடாது…!!
மொசப்பந்துண்ணு ஒரு பலகாரம். இதுல எங்க சின்னம்மாவ
யாரும் அடிச்சிக்க முடியாது.உளுந்த ஊற வச்சு கொஞ்சம் உப்பு போட்டு பூக்க பூக்க ஆட்டி
அத எண்ணையில கிள்ளி போட்டு பொரிச்சு எடுத்து வச்சுகிட்டு ஆட்டுக்கலில தேங்காப்பூவைபோட்டு
ஆட்டி பாலப்புழுஞ்சு, வெள்ள சக்கரய போட்டு அரிச்சு வச்சுருக்க கிள்ளுகள அதில அள்ளிப்போட்டு
ஊற வச்சா வெள்ளவெளேர்னு மொசலாட்டம் கெளம்பி நிக்கும். இந்த பலகாரத்தோட இயற்பெயர் சுழியம்.
அது யாரோட கற்பனையிலோ உருக்கொண்டு எடக்கண்ணி வீடுகளில அழகான மொசப்பந்தாகி நிக்குது.
அம்மா அருமையா தோப்பம் சுடுவார்கள். தோப்பத்துக்குள்ள
இருக்கும் கடலப்பருப்பு பிசின் மாதிரி ஆவாம கரெக்டா வெந்திருக்கும். வெல்லம் கொறயாவும்
இருக்காது கூடவும் போவாது. இதோட தேங்காப்பூவையும் சேத்து பெசஞ்சு, மைதா மாவைத் தண்ணியா
கரச்சுகிட்டு இந்த உருண்டய நனச்சுப் போட்டா தோப்பம் தட்டு நெறயா செத்த நேரத்துல குமிஞ்சிடும்.
அரிசி உளுத்தம்பருப்பு கொஞ்சம் துவரம் பருப்பு
இதுகள ஊற வச்சு வெல்லம் தேங்கா பெரிய ஆட்டுக்கல்ல போட்டு ராமசாமி (அம்மாச்சி வீட்டு
ஆஸ்தான சமயல் அசிஸ்டெண்ட்!) வேர்வையும் விருவிருப்புமா ஆட்டுவாரு.என்னா பலகாரம்ணு பாக்கிறிகளா.
எடங்கண்ணியில எல்லார் வீட்லயும் சுடுற குழி பணியாரத்துக்குத்தான்.
‘என்னா மாகி நல்லாருக்கியாண்ணு ‘சிரிச்சுகிட்டே
கேப்பாரு… ‘ம்..நல்லாருக்கேன் ராமசாமிண்ணண்ணு’ சொல்லிக்கிட்டே ஆட்டுகல்லுல கெடக்கிற
மாவ லேசுபாசா நக்குறது, போவ வர உப்பு பாக்கிறது (வெல்லத்தில என்னா உப்பு பாக்கிறது!!!)
கண்டுகாணாம இப்டி மாவ அபேஸ் பண்ணுவோம். அம்மாச்சி வீட்ல பாப்பாத்தி அத்தை இதெல்லாம்
கண்டுகவே மாட்டாங்க. மாவாத்தின்னாலும் பிள்ளைகதான்….. பணியாரமா தின்னாலும் அதுகதான்.
பிள்ளக தின்னு மீதிய சுட்டா போதும். அம்மாவுக்கு அதெல்லாம் ஆவாது. எதுலயும் ஒழுங்கு
வேணும் அவுங்களுக்கு. எல்லாத்தயும் சுட்டு எல்லாருக்கும் சமமா பங்கு வைக்கிறதில அம்மா
கில்லாடி! அதுலயும் நாங்க கீழ்க்கண்ணால பாத்துக்குவோம் யார் யாருக்கு பெரிசா போயிருக்குண்ணு…..
வெல்லம் போடாம ஒரு அயிட்டத்த சுட்டு குழிப்பணியாரம்
சாப்பிடுங்கண்ணு சென்னையில ஒருவிருந்தில குடுத்தாங்க; எனக்கு ரொம்ப ஏமாத்தமா போச்சு.
வெல்லம் போட்டு சுடுறதுதான் குழிப்பணியாரம். வேற பேச்சே கெடயாது.(இது எடங்கண்ணி ஜனங்களின்
மாற்ற முடியாத தீர்ப்பாக்கும் !)
வீட்ல ஜெசி அக்காவுக்கும் ஜொஸ்பின் அக்காவுக்கும்
பாபபாத்தி அத்தண்ணா உயிரு. ஏண்ணா பிள்ளைக மேல அவுங்களுக்குப் பித்து. அக்கா ரெண்டு
பேரும் சமயல் கட்டுக்கு வந்துட்டா போதுமாம்.. வாய் நெறயா ஓவல் அள்ளி கொட்டிடுவாங்களாம்.
எடங்கண்ணியில அந்த காலத்தில ஓவல்டின்னாண்ணு நீங்க ஆச்சரியப்படலாம். அம்மாச்சி வீட்ல
மாமாக்களுக்காக எப்பயும் அது இருக்குமாம். ஜெசி அக்காவும் ஜொஸ்பின அக்காவும் தான் அம்மாச்சி
வீட்டுச் செல்லப்பிள்ளைகள். பின்னால வந்த இருதய அண்ணனும் நானுங்கூடத்தான். ஜனவரி அண்ணைக்கு
அம்மாச்சி வீட்டு சட்ட பாவாடதான் எங்களுக்கெல்லாம். டெய்லர் பால கிருஷ்ணனுக்கு எங்க
அளவெல்லாம் அத்துப்படி. ஜனவரி அண்ணைக்கு முந்தின நாள் வளயக்காரர் அம்மாச்சி வீட்டுத்
திண்ணையில வந்து உக்காந்துக்குவார்.
தாத்தா எங்களையெல்லாம் வரச்சொன்னதா ஆஞிம்மா வீட்டுக்கு
ஆள் வரும். அம்மா, வீட்லேர்ந்து போம்போதே, ‘ரொம்பல்லாம் போட்டுக்காதிங்கண்ணு’ ஒரு எச்சரிகை
பண்ணித்தான் அனுப்புவாங்க.
‘பிள்ளக அனாவசியமா எதுக்கும் அவலாதியா பறக்கக்கூடாது’
எதுலயும் நிதானம் வேணும் (அம்மாவின் பாலிசி நம்பர்1)
ஆனா தாத்தா அம்மாச்சி செல்லத்தில அம்மாவின் வார்த்தைகள்
செல்லுபடியாகமப்போயிடும்! தாத்தா அந்த சின்ன திண்ணையில உக்காந்துகிட்டு “என்னா வளயல்
புடிக்குதோ அத எல்லாத்தயும் போட்டுக்குங்கண்ணு” சொல்லுவாங்க. அப்பறம் எங்கள யார் புடிக்க
முடியும் சொல்லுங்க?!
இன்னம் நெறய பலகாரங்கள் இருக்கு. எங்களப்பத்தி
ஒரு வார்த்த கூட சொல்லுலியேண்ணு அதுக சொல்றது காதில கேக்குது. இன்னொரு சமயம் இன்னும்
நெறய பலகாரங்களோட இன்னும் சுவாரசியமான நெறய கதைகளோட சந்திப்போமே.
ஜொஸ்பின் அக்கா அத்தான் அவர்களது 50வது ஆண்டு விழாவில்
இந்த அருமையான சந்தோஷமான விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி!
வாழ்க தம்பதியர்..!வளர்க அவர் தம் மக்களும் சுற்றமும்!!!!
Super Athachi. Nostalgic. Still have the taste of some of those dishes in my mouth. I remember when we used to go to Edanganni for holidays during our school days. The main attraction was the food we used to get from all the houses. Especially the snacks after the evening prayers. Those are the days still green in my memory. Thanks for post.
ReplyDeleteநேர்ல வந்து கூட இருந்து ரசிச்சமாதிரி இருந்துச்சு, அத்த. இன்னும் நெறய எழுதுங்க, please .
ReplyDelete