Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Tuesday, 25 November 2014

முன்னோடி

நான் ஓல்ட் எஸ்.எஸ்.எல்.சி யாக்கும்" என பெருமை பேசும் பெருசுகள் வாழ்ந்த காலத்திய கதை இது.
ஒரு சின்னப்பெண்ணின் உண்மைக்கதை!
1957ம் வருடம். அந்தப்பெண் எஸ்.எஸ்.எல்.சி அதாவது பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தது. (சிருசுகளுக்கு ஒரு சேதி: அன்றைய பதினோராம் வகுப்பு இன்றைய +ஒன்னுக்கு சமமல்ல.இந்த பதினோராம் வகுப்போடு பள்ளிப்படிப்பு முடிந்துவிடும்.அதற்கு மேலே படிக்கவேண்டுமென்றால் காலேஜில் போய் ப்ரீயுனிவர்சிட்டி எனப்படும் ஒருவருடப்படிப்பை முடிக்கவேண்டும்.அதை முடித்த பிறகுதான் எந்த பட்டப்படிப்புக்கும் செல்ல முடியும்.)

செலக்சன் இல்லாமலேயே கவர்ன்மென்ட பரிட்சைக்குப் போகும் இந்தக் காலமிலை அது. அதுவும் அம்மாங்க பள்ளிக்கூடத்தில படிக்கும் பொம்பள பிள்ளைக வயித்தில நெருப்பக்கட்டிகிட்டுதான் இருக்கணும். ஒட்ட வடிகட்டி நெறய மார்க் வாங்கும் பிள்ளைகளைமட்டும் அனுப்பி பள்ளிக்கூடத்தோட‌ நல்லபேர தக்க வச்சுக்கறது அவுங்களுக்கு கை வந்த கலை.அரை வருடபரிட்சையில் வாங்கும் மார்க்கை வைத்துதான் இந்த செலக்சன் கிடைக்கும்.
15வயதுப்பெண் ஜாலியானது. படிப்புக்காக அலட்டாத அப்பா அம்மா. "என்னாம்மா எல்லாத்திலயும் பாஸ் பண்ணிட்டியா?"
"பண்ணிட்டன் நாநா ஆனா கணக்கில மட்டுந்தான் 48 மார்க்."
"மத்ததெல்லாம் நல்ல மார்க்கா?"
"ஊம்….. நல்ல மார்க் நாநா."
"சரி சரி கணக்கில முட்டும் 35 வாங்கி பாஸ் பண்ணிடு. மத்ததெல்லாம் நல்லாப் பண்ணனும் சரியா?" இவ்வளவுதான் படிப்புகான அறிவுரை! இன்றைய தார் குச்சிகளையெல்லாம் அக்காலத்துப்பெற்றோர் அறிந்திருக்கவில்லை!! (கணக்குக்கு பயந்தே காலேஜுக்குப்போகாத அப்பா.... கணக்கில்லாமலும் காலேஜ் படிப்பு படிக்கலாம் என்றுசொல்லத்தெரியாத‌ சந்தோஷமான மக்கள்!)
அரைப் பரிட்சை எழுதி முடித்து கன ஜோராய் கிறிஸ்மஸ் கொண்டாடியாயிற்று. எடங்கண்ணியில் போய் ஜனவரி காப்பரிசியெல்லாம் தின்று தீர்த்தாகிவிட்டது.
லீவு முடிந்து பள்ளி திறந்த முதல்நாள் பதினோராம் வகுப்பு A செக்சன் விதுக் ... விதுக் கென்று ஒரேகும்பலாய் உட்கார்ந்திருந்தது. கீழே ஹெட்மிஸட்ரஸ் ரூமுக்கு போய்வரும் சந்தோஷ முகங்கள், கண்ணைக் கசக்கிக்கொண்டு வரும் முகங்கள் என‌ கலப்படியாக ஒரு அரங்கேறறம் அங்கு நடந்துகொண்டிருந்தது. லலிதாம்பிகை சிரித்த முத்தோடு வந்தாயிற்று. அகர வரிசைப்படி அடுத்தது அவள் டர்ன். அந்தோணியார் அண்ணனைத் துணைக்குக் கெட்டியாகப்பிடித்துக்கொண்டாள். மாடிப்படியில் எப்படி இறங்கி வந்தாள் என அவளுக்கே தெரியாது.
"குட்மார்னிங் ஸிஸ்டர்..." என்றைய விடவும் இன்று கொஞ்சம் கூடுதல் அழுத்தம்
ம்.. ம்... என்ற இரண்டு எழுத்தில் குட்மார்னிங் திரும்ப வந்ததில் அவள் கால்கள் பாதாளத்தை நோக்கி சர்ரென்று பாய்ந்தது... கைகள் இரண்டும் வெடவெடத்துப் போய்விட்டது.. நிச்சயமாக கணக்கில அவுட்டு என அவளுக்குத் தெரிந்து போயிற்று.
“என்ன மேத்ட்ஸ் பேப்பர் எப்படி பண்ணின?"
"நல்லா பண்ணியிருக்கேன் ஸிஸ்டர்" வார்த்தைகளின் தெம்பு மனசில் கடுகளவு கூட இல்லை. அவர்கள் முகத்தை லேசாக நிமிர்ந்து பார்க்கிறாள்..............ஒரு ஏளனச் சிரிப்போ?
ஏதோ யோசனையில் கொஞ்ச நேரம் இருந்த அவ்ர்கள்
"முடிச்சிட்டு என்னா பண்றதா உத்தேசம்..?" என்றார்கள்
தயக்கம் எதுவுமில்லாமல் கன கச்சிதமாக சொன்னாள் "டீச்சர்ஸ் ட்ரெயினிங் பண்ணப்போறேன் ஸிஸ்டர்".
"என்னா டீச்சர்ஸ் ட்ரெயினிங்கா …………..? ஒனக்கு அறிவிருக்கா என்ன..? மேல படிக்கமாட்டியா?"
"இல்ல ஸிஸ்டர் ட்ரெயினிங்தான் போவப்போறேன்.”

அந்த அம்மாவுக்கு சீத்பூத் என்று வாங்கியது. பெரிய கோபம் வருவதற்கு அது அறிகுறி என்று எல்லோருக்கும் தெரியும்.

“நான எதும் தப்பா சொல்லிட்டனா... ஒண்ணும் சொல்லிலியே... ட்ரெயினிங் போறேண்ணு தான சொன்னேன். டீச்சரா போனா நெறய பேருக்கு பாடம் சொல்லிகுடுக்குலாமுல்ல....” அவள் மனசுக்குள்சொல்லிக்கொண்டாள்
.. “ Unambitious ……. unambitious … these catholic girls are unambitious….”ஸிஸ்டர் இங்கிலீஷுக்கு மாறிவிட்டார்களானால் அவர்கள் கோபம் உச்சஸ்தாயியை அடைந்துவிட்டதாகப் பொருள். ஆனால் டீச்சர்ஸ் ட்ரெயினிஙகைப்பற்றி அவ‌ள் ரொம்பவே தெளிவாய் இருந்தாள்.
1. டீச்சர்ஸ் ட்ரெயினிங. ஸ்கூல்...... அப்போது திருச்சியில்தான் இருந்தது. அப்பைக்கப்போது கும்பகோணத்தில் இருந்து ஜாலியா திருச்சிக்குப் போகலாம். வ‌ருடத்தில் ஒரு தடவை கும்பகோணத்திலிருந்து நாலாவது ஸ்டேஷனான பாவனாசம் செபஸ்தியார் திருநாளுக்குப் போகும் போது " அடடா இன்னும் ஒரு ஸ்டேஷ‌ன் தள்ளி செபஸ்தியார் கோயில் இருக்கக்கூடாதா என்று மனம் ஏங்கும்..திருச்சி போவதற்கு கொறஞ்சது பத்து பதினாறு ஸ்டேஷன்கள் இருக்கும். என்னா ஜாலி....!
2.அவள் அக்கா அங்குதான் டீச்சர்ஸ் ட்ரெயினிங படித்தார்கள். தோழிகளோடு மலைக்கோட்டை சுற்றுலா, கல்லணை சுற்றுலா... இன்னும் பல அவுட்டிங்களைப்பற்றி அவர்கள் சொல்லும் கதை இவள் மனசுக்குள் ‘இது நமக்கும் வேண்டும்’ என்ற உறுதியை ஏற்படுத்தி விட்டிருந்தது.
3. மாமா வீடு திருச்சியில்…… மாமா பெண்கள் சுச்சி, பிபி இருவரும் ட்ரெயினிங் ஸ்கூலை ஒட்டிய பள்ளியிதான் படித்துக் கொண்டிருந்தார்கள். வெள்ளிக்கிழமை சாயங்காலமானால் ரெண்டு பேரும் ட்ரெயினிங. ஸ்கூல் கேட்டருகில் இவர்களை வீட்டிற்குக் கூட்டிப்போவதற்கு காத்துகிட்டு நிப்பாங்களாம். சனிக்கிழமை அக்கா தலை முழுகினவுடன் அத்தை பேன் பார்த்து தலை சீவி விடுவார்களாம். சொந்தகாரர்கள் வீட்டில் கலியாணம் என்றால் அத்தைதான் கலியாணப் பெண்களுக்கு அழ காக கை மேக் அப், கொண்டை எல்லாம் போட்டுவிடுவார்கள். பொண்ணறைக்குப் போய் அத்தை செய்யும் அந்த‌ வித்தையை வாயைப்பிளந்து கொண்டுபார்க்கும் கூட்டத்தில் இவளும் சேர்த்தி. அப்ப அக்காவுக்கு என்னா அழகா தல சீவி உடுவாங்க அவுங்க‌! ராத்திரியில் அக்கா பக்கத்தில் படுத்துக்கொள்ள மாமா பெண்களுக்கு நடுவில் (ரெண்டுமட்டுமல்ல, சின்னதுகளும் நெறய வீட்ல இருந்துச்சு) போட்டா போட்டியாய் இருக்குமாம். ஆ….. எவ்வளவு ஜாலி... ட்ரெயினிங்குக்கு ட்ரெயினிங்கும் ஆச்சு…… ஜாலியா ரெண்டு வருடம்.... இதவிட என்னா வேணும்...... இந்த சந்தடியிலும் அவள் மனசு இப்படி பட்டியல்போடுவதை நிறுத்தவில்லை.........
“ Go call your sister at once” “ ஒன் அக்காவப்போய் ஒடனே‌ கூட்டிகிட்டு வா”...... என்ற அதட்டல் கேட்டு ஒரே தாவில் அக்கா வகுப்பில் போய் நின்றாள் அவள். வெளியேயிருந்து சமிக்சையில
அவர்களைக் கூப்பிட்டாள். க்ளாஸ் பீப்பிள் லீடரிடம் வகுப்பை ஒப்படைத்து விட்டு வந்த அவர்களிடம் ஹெட்மிஸ்ட்ரஸ் அவர்களைக் கூப்பிட்ட விஷயத்தை எடுத்துச்சொன்னாள். "கணக்கில எதுவும் பெயில் ஆயிட்டியா?" கோபம் கலந்த வருத்தம்.
அக்கா கணக்கில் சூரப்புலி.
“பெயில் ஆவுற அளவுக்கு மோசமா நான்? “ அவள் ஒன்றும் பேசவில்லை
"குட்மார்னிங் ஸிஸ்டர்”
"குட்மார்னிங் …….ஒன் தங்கச்சிய அடுத்த வருஷம் என்னா படிக்க வைக்கறதா இருக்க‌?”
."இன்னம் ஒண்ணும் யோசன பண்ணுல ஸிஸ்டர் .....”
"ஆனா ஒன் தங்கச்சிக்கு ப்ளானெல்லாம் ரெடியா இருக்கே. ட்ரெயினிங் பண்ணப்போவுதாமே ட்ரெயினிங்…… ம்….. நீ என்னா பண்ற.. அவள காலேஜில சேக்கிற…...மேல படிக்க வைக்கிற..அவ நல்ல கெட்டிக்காரி என்னா... நம்ம கிறிஸ்துவ பிள்ளைகளெலாம் படிச்சு மேல வர வேண்டாமா...?”
“ கட்டாயம் ஸிஸ்டர் .. அப்பாவோட பேசிட்டு ஒங்க கிட்ட வந்து சொல்றேன் ஸிஸ்டர் “
நாநா அம்மா சொன்னர்கள் “ஸிஸ்டரே படிக்கவைக்க சொல்லிட்டாங்க இத காலேஜிலேயே சேத்துடலாம்.” அம்மாவுக்கும் இதில் ஏகமான சந்தோஷம், தான் படிக்காத படிப்பையெல்லாம் தன் பெண் பிள்ளைகள் படிக்கிறதே என்று.
இப்படியாக ஒரு சாதரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் கல்லூரிப்படிப்பு இருவரின் உந்துதலால் ஆரம்பமானது.
அந்த சின்னப்பெண் அடியேன்தான்! (மாகி) அந்த கட்டத்தில் சென்ட் ஜோசப்ஸ் பள்ளியில் வேலை பார்த்தது அக்கா அக்கா ஜொஸ்பின் தான்!

அந்த சந்தர்ப்பத்தில இறைவன் அவர்களை அங்கு வைத்து வீட்டின், இடங்கண்ணியின் முதல் பெண் பட்டாதாரியை உருக்கொள்ளவைத்தார். இளநிலை பட்டம் மட்டும் அன்று, பல கஷ்டங்களுக்கிடையே என்னை முதுநிலைப்பட்டம்வரை இட்டுச்சென்ற அருமை அம்மாவை,நாநாவை அன்போடு நினைத்துப்பார்க்கிறேன்.

என் பிரிய முன்னோடி அக்கா ஜொஸ்பின் தன் 50ம்தாவது கல்யாண நாளைக் கொண்டாடும் இவ்வருடத்தில் அவர்களுக்க்கு இதை பிரியமுடனும் நன்றியுடனும் உரித்தாக்குகிறேன். எங்கள் வீட்டுச்செல்வி மனக்கவலையெல்லாம் நீங்கி மகிழ்ச்சியில் திளைக்க எங்கள் உளமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியோடு வேண்டுதல்களும்!

No comments :

Post a Comment