Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Tuesday, 25 November 2014

மாப்பிள்ளை

மொத மொத சாமியாரா அம்மாங்களா போனது எடங்கண்ணியில எந்த வீட்லண்ணு கேட்டா அறியாத பிள்ள கூட மெத்த ஊட்லதான்னு டக்குண்ணு பதில் சொல்லும். தார்ச்சீசு, மத்தியாசு, சுசான்னா, சபினா, ரோஸ் இப்டிண்ணு வரிசையா அடுக்கிகிட்டே போவாக அந்த கதயே கெடயாது நான் கேட்ட கேள்வி இதான்..
மொதம் மொத……….
மொதம் மொத அம்மாங்களா போனது எங்க ஆஞிம்மா வீட்லதான். எங்க பெரிய அத்த, கொழந்தசாமி பிள்ளையோட தலச்சன் பொண்ணு, எங்க நாநாவோட பெரிய அக்கா. பிரகாசிதான் நம்ம ஊர் தேவ அழைத்தலுக்கு அஸ்திவாரம். இது நடந்த காலம் 1920 கள்ள இருக்கலாம்ணு என்னுடைய யூகம். ஏண்ணா அந்த சமயத்தில நாநாவே வெடப்பையந்தானாம்.
பிரகாசி அத்தை ரொம்ப சாதுவான ரொம்பரொம்ப பக்தியான பொண்ணாம். சின்ன வயசிலருந்தே அச்சிட்டவங்க சரித்திரத்தையெல்லாம் படிச்சு எல்லாருக்கும் சொல்லுவாங்களாம். அவுங்க செவம் படிச்சா இண்ணைக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாமாம். அந்த மாதிரியான அத்தை அம்மாங்களா போவுணும்முண்ணு ஆசப்பட்டதுல தப்பு ஒண்ணும் இல்ல. அந்த ஆச அவுக ஆஞா காதுல உழுந்தப்பதான் வெடிச்சது பூகம்பம். வடிவேல் ஸ்டைலில " எவ அவ அம்மாங்களாப்போறது? என்னா இது நம்ம சாதி சனத்தில இல்லாத புதுப்பளக்கம்? இங்க என்னா சோத்துக்குக்கொறச்சலா, தண்ணிக்குக் கொறச்சலா ஊரான் ஊட்டு சோத்துக்கு எதுக்கு போய் கை கட்டி ஊளியம் பண்றது? சோத்துக்கும் தண்ணிக்கும் வக்கில்லாதவகளத்தான்(இது தாத்தாவோட சொந்த தாத்பர்யம்) இந்த வெள்ளக்கார கன்னியாஸ்திரிங்க இளுத்து உள்ள போட்டுக்கிறாளுக. ஊருக்கு ஊரு மடம் கட்டுறாளுக. இந்த வெறுமனத்தாகளுக்குத்தான் பொளப்பு இல்லண்ணா மத்த சாதி சனங்களும் எதுக்கு புத்தி கெட்டு அலையுதுக? இனி.... இந்த ஊட்ல........ இந்த பேச்சு....... வரப்புடாது. இண்ணைக்கு சொல்றதுதான் கணக்கு….. கித்தேரி…. இத எல்லார்கிட்டயும் சொல்லி வை.
இந்த கத்தலோட தாத்தா வயலுக்குக் கெளம்பிப் பொயிட்டாரு.
தாத்தா நேரிடையாக எந்த விஷயத்தையும் சொல்லமாட்டார் எல்லாமே கித்தேரி வழியாகத்தான்.
அத்த மீரா பாயி டைப்பு. சொந்தம் சொகம் எல்லாத்தையும் தொறக்க அவுங்க அஞ்சல. ஆஞாவின் மெரட்டல் எல்லாம் செவிடன் காதுல ஊதுன சங்குமாரி ஆயிப்போச்சு அவுங்களுக்கு.
கொஞ்ச நா கழிச்சு திரும்பவும் ஆஞிம்மா "என்னாங்க"ண்ணு தாத்தா முன்னாடி ஆஜர் ஆனார்கள்.
விஷயத்த கேட்டஒடன வீட்ல ஒரே களேபாரம். கச்சா முச்சாண்ணு தாத்தா போட்ட எர‌ச்சலில மாமன் மச்சான் பங்காளிங்க எல்லாம் தாத்தா ஊட்டுத்திண்ணையில:
எல்லாருமா சேந்து தாத்தாவ அம்ச அடக்கி பிள்ளய உள் ஊட்லேருந்து வெளிய வரச்சொல்லி ஆளாளுக்கு புத்திமதி சொன்னாக “பெரவாசி நம்மெள்ளாம் சம்சாரிவம்மா; நம்ம பிள்ளைவளெல்லாம் குடியுங் குடித்த‌னமுமா பிள்ளகுட்டிவளோட வாழணும்; அப்பதான ஊடு நெறையும் வாசல் நெறையும்? நீயி சாமி பொஸ்தவம் எல்லாம் படிக்கிறல்ல, எங்குட்டாச்சும் சாமி நீ அம்மாங்களா போண்ணு சொல்லியிருக்காரா சொல்லு. அவுரு சொன்ன ஒரு வார்த்தய கேளு; மானத்தில இருக்க நச்சத்திரங்களப்போல பெருகுங்க, சமுத்திரத்து மணலப்போலபெருகுங்கண்ணுதான சொன்னாரு நீயி மடத்துக்கு போயி என்னாத்த கிளிக்கப்போற? அங்க சொல்ற செவங்கள இங்குட்டு, நீயி போற ஊட்ல சொல்லு. அப்ப ஒன் பிள்ளவ நல்ல பிள்ளைவளா வளரும். ஊருக்கு நாட்டாமையா வரும் அத விட பெரும எங்குளுக்கு என்னாஇருக்கு?"
“ஆமாம்மா, நம்மெள்ளாம்வெவசாயக் குடும்பம்; ஒன்னால ஒரு ஊடு வெளங்கணும். சாதி சனங்க சந்தோசப்படணும் ஒன்ன கட்டி குடுத்த ஊருக்கு வந்தமா பிள‌ள குட்டிவளோடஒரு வேள பேசி சிரிச்சுப்புட்டு ஒரு வா சோத்த‌ சந்தோசமா தின்னுபுட்டு வந்தமாண்ணுதான் நம்ம பொண்ணு வாளணும். இத உட்டுபுட்டு மடத்தில போயி நிண்ணுகிட்டு கண்டவளுகிட்டல்லாம் நம்ம பொண்ணப்பாக்க உத்தரவு வாங்கிகிட்டு நீ கறுப்பும் வெள்ளையுமா சவ பொட்டியாட்டம் காது மூக்கெல்லாம் மூளியா வார கோலத்த பாத்துட்டு நாங்க வவுறு எரிஞ்சு போயி ஊடு வார தக்கனயும் பொலம்பிகிட்டேவருணுமா? பிள்ள எப்டி இருக்குதுண்ணு ஒன் ஆயி கேட்டா எந்த கோலத்த நான் எடுத்துச் சொல்லுவேண்ணு நீயி சொல்லு பாக்கலாம்?”
“ஆயா பிரகாசி மனத்த போட்டு ஒளப்பிக்காத….. நாங்க பெரியவங்க ஒனக்கு தீது நெனப்பமா... அத்தான் இத நம்ம தள்ளிப்போடப்புடாது..... வெரசலா காரியத்த முடிப்போம்.”
ரத்தினசாமி பிள்ள முடிவாச்சொல்லிட்டாரு. அவுரு பேச்சில எப்பயும் கண்ணியம் இருக்கும். பஞ்சாயத்துல அவுரு தீர்ப்பு சொன்னாக்க ஊரு கட்டுப்பட்டு நிக்கும்.
அத்தையோட கண்ணீருங்கம்பலையும் எங்குட்டும் எடுபடுல. மொனஞ்சு மாப்ள தேடியாச்சு. மாப்ள நாகப்பட்டினம் பக்கம்; நெலம் நீச்சு ஊடு எதுக்கும் கொறைவில்ல; எடங்கண்ணி வந்து பொண்ணப்பாத்தவொடனயே கைய நனச்சிட்டாங்க... ஊரே பேசிக்கிச்சு "பெரவாசி அதட்டக்காரி தான்"
மாப்ள ஊட்டு சனங்க பொண்ணு ஊட்டுகாரகளை அவுங்க ஊருக்கு ஒரு எட்டு வந்து கைய நனச்சுடுணுமுண்ணு ஒரே புடியா இருந்தாக. ஒரு எட்டா அது....? அம்புட்டு தொலவு…..! வேளாங்கண்ணிக்கும் நாவப்பட்ணத்துக்கும் நடுவுல இருக்காமில்ல, எம்புட்டுகொள்ள செலவாவப்போவுதோ ஊட்டுக்கு ஊடு ஒரு ஆள் கூப்புட்டாக்கூட அள்ளிகிட்டு பொயித்திருமே? தாத்தா மனசுல பெரிய கணக்கு ஓடிக்கொண்டிருந்தது. ஆனா இந்த பெரிய பிள்ள வெசயத்துல கணக்கு பாக்கறது பெரயொசனம் இல்ல;மடமடண்ணு காரியத்துல எறங்கிட்டாரு தாத்தா. ஊட்டுக்கு ஒரு ஆம்ள ஆளு மட்டுந்தான். பொண்டுவ கண்ணாலத்தோட மாப்ள ஊடு பாத்துக்கலாம். அடுத்த பொதன் நாளு நல்லாருக்கு.எல்லாரும் இதுக்கு ஒத்துக்கொள்ள‌ மாப்ள ஊட்டு சனங்களும் சந்தோசமா தாத்தா ஊட்டு கூட்டு வண்டியில ஏறி கெளம்பிப்போயிட்டாக‌.

பொதன் கெழம கரிச்சான் கத்துற நேரத்துக்கெல்லாம் எல்லாரும் கோயில் மாப்புல கூடிட்டாக‌.எடங்கண்ணியிலேர்ந்து மதனத்தூருக்கு கூட்டு வண்டி.ஆச்சல்ல வண்டி உளுந்து எந்திரிக்கையில வண்டி பிளாச்சி மண்டயப்பதம் பாத்துடும். அங்குட்டு எறங்கி மதனத்தூரு எலந்தக்காட்டத் தாண்டி கொள்ளடக்கரைக்குப்போவணும்.பரிசுல ஏறிப்போனா அந்தக் கரையில நீலத்தநல்லூரு. அங்கேருந்து பொடி நடையா உட்டா கும்மாணம் டேசனு வந்துரும். வழிக்கு பலமா கட்டுசோறு. வர மொளவா கிள்ளிப் போட்டு நல்லெண்ணயில தாளிச்ச புளி சோறு. நாலு நாளு கெடந்தாலும் கெட்டுப்போவாது. அந்த சோத்துக்கு தனியா கடுச்சுக்க‌ வேண்டியதில்ல. புளியில ஊறிக்கெடக்குற அந்த மொளவாயே அமுர்தமா இருக்கும். டேசன்ல குந்தியிருக்கையில செல பேரு மனசுக்குள்ள பயம். ஏதோ வெளிய போவலாம்ங்கிற ஆசையில கெளம்பிட்டாலும் பொக கக்கிகிட்டு வார அந்த கறுப்பு பூதத்தோட கிலி அவுங்க எல்லாரையும் தொத்திகிட்டுக் கெடந்துச்சு. ரத்தின சாமி பிள்ள நாலுந்தெரிஞ்சவரு. ரயிலுல‌ அவுரு பக்கத்தில குந்திக்கிலாம்ணு முடிவு செஞ்சவங்க நெறய... ஆச்சு நாவப்பட்டினம் டேசன்ல எறங்கி ஊரு போயி சேந்தாச்சு. நல்ல மனுசருங்க. டேசனுக்கு வண்டி அனுப்பிச்சிருந்தாக‌. பெரிய ஊடு, மெத்த ஊடு வேற, பொண்ணூட்டாளுக வருதுண்ணு சுண்ணாம்பல்லாம் அடிச்சிருந்தாக. திண்ணையில குந்தி கொசலம் எல்லாம் சாரிச்சசு. ரெண்டுநாளா கட்டு சோத்தயே திண்ண நாக்கு சுடு சோத்துக்கு ஏங்கிகிட்டு இருந்துச்சு. மூஞ்சிகைகால களுவிபிட்டு பந்தியில குந்தியாச்சு. நல்ல தாட்டு எலதான் போட்டிருக்காக... பந்தியில மொதஆளா ஒக்காந்திருந்தவரு கடகாரபிள்ள.
கடகாரபிள்ள வயலுக்கு பொயிட்டு, மதியம் கொளத்தில உளுந்து எந்திரிச்சு, சிண்ட ஒரு ஒதரு ஒதறி உச்சந்தலயில கொண்டயப் போட்டுகிட்டு ஊட்டுக்குள்ள நொளஞ்சாரோ இல்லியோ கோப்பயில சுடச்சுட சோறு உளுந்தாவுணும்; கிண்ணத்தில கொளம்பும் கடுச்சுக்க தட்ல கடுச்சுக்கையும் தயாரா இருக்கணும்; செத்த நேரம் ஆயிப்போச்சுண்ணாக் கூட அவுரு வாயில என்னா வருதுண்ணு அவுருக்கே தெரியாது. அதனால கடகார ஊட்டுப்பொண்டுக எந்த வேல எக்கேடு கெட்டுப்போனாலும் சோறாக்கிறதுல மட்டும் தாமசமே பண்ணமாட்டாங்க. எலயில சோறு போட்டாச்சு. பின்னாடி ஒரு ஆளு கொளம்பு குண்டானோட.தொபக்குண்ணு கொளம்போட காய் ஒண்ணு பெருசா உளுவுது. கத்திரிகாய அப்புடியே முளுசாப்போட்டு கொளம்பு வச்சிருப்பாகளோ. ஆனா கத்திரிக்காய்க்கு கால் மொளசசது எப்டி? கடகாரப்பிள்ள சுத்த சைவம். அவுங்க வீட்ல மீன் கொளம்புக்கு தனியாவே ஒரு சட்டி கெடக்கும். ஒரு நாத்தம் அண்டப்புடாது அவுருக்கு. அவுரு எலய உத்துப்பாக்குறாரு.. இது என்னா எளவு இது? கொளம்புல கெடக்குது தவுக்காள. சுத்து முத்தி பாக்கிறாரு. பந்தியில பக்கத்துல கொழந்தசாமிப்பிள்ளதான்; "அண்ண அவசரமா கொல்லைக்கு வருது, தப்புடியில வந்திர்ரேன்" சொன்னவரு பதிலுக்குக்கூட பாக்காம தோட்டத்துக்கதவு வழியா ஒரே பாச்சலு......"இவனுக்கு அறிவு வாணாம், நம்ம ஊர்ல முன்ன பின்ன கெடக்கலாம். மாப்ள ஊடு பாக்க வந்தவெடத்துல இப்பிடியா பந்திய உட்டு எந்திரிச்சு அசிங்கம் பண்ணுவான்? மருவாதியில்லாத களுதப்பய?” இப்பிடி அவர மனசுக்குள்ள வஞ்சுகிட்டிருந்த கொழந்தசாமிப்பிள்ள தான் எலயையே கவனிக்கில.அவுருக்கு இந்தப்பக்கம் ஒக்காந்திருந்தது அவுரு சொந்தத்தம்பி “அண்ண தா போயி கடகாரப்பிள்ளய கூட்டிகிட்டு வந்திர்ரேன் அவுரும் பாச்சல்லதான் கெளம்பிட்டாரு. அவுருக்குப்பின்னால ஆரும் அவுருகிட்ட‌ சொல்லிக்கிறதா இல்ல எல்லாம் நாலுகால் பாச்சல்தான். கொழந்தசாமி பிளளைக்கு என்னாண்ணே பிரியில. "அடே நில்லுங்கடா கூறு கெட்டகுந்தாணிகளா” ண்ணு மொத்தத்தில எல்லாரையும் வஞ்சுகிட்டே அவுரும் ஓடுறாரு. என்னா ஏதுண்ணு புரியாத மாப்ல ஊட்டாளுக அவுர தொரத்திகிட்டே ஓடுறாங்க. மாரத்தான் கடசி நிமிசங்கள் மாரி ஒரே ஸ்பீடுதான். "நில்லுங்க நில்லுங்க வந்து சாப்பிடுங்க என்னாவாருந்தாலும் பேசித் தீத்துக்குவோம்.” குதிங்கால் பொடரியில பட எடங்கண்ணியானுக ஓடுன ஓட்டத்துக்கு ஈடு குடுக்கமுடியாம மாப்ள ஊட்டாளுக பின் தங்கிப்போயாச்சு. ஓடினவங்க நாவப்பட்டினம் டேசன்ல ரயில்ல ஏறி குந்தினப்பறந்தான் வாயத் தொறந்தாகளாம். தவுக்காளக்கதைய எல்லாம் விளாவாரியா கொழந்தசாமிப்பிள்ளைக்கு அவர்கள் எடுத்து சொன்னாங்க‌.
எடங்கண்ணி ஆளுக ஆட்டுத்தல,ஆட்டுக்காலு ஆட்டுக்கொடலுண்ணு எல்லாத்த‌யும்ஒரு கை பாக்கிறவங்கதான். ஆனா கடல் மீன கண்ணாலகூட பாக்கமாட்டாக. கொள்ளடத்து வெராலு ஆரா கொரவ இல்ல வருசத்துக்கு ஒரு தடவ பாப்பா கொளம் வத்தயில புடிக்கிற கொளுப்புக் கெண்ட இம்புட்டுதான் அவுக மீனுங்க‌ தவுக்காளயக்கூட மனுசன் திம்பானாண்ணு கேக்குற சாதி இது. அப்புடியாப்பட்ட ஆளுகளுக்கு கை நனைக்க வந்த வெடத்தில என்னா கூத்து பண்ணிபுட்டானுக சாமி!!
“நம்ம பொண்ண இந்த வெடத்துல கட்டி வச்சிருந்தா சாமிக்குத்தம் ஆயிருக்குமுண்ணெ ஏதோ அவுராப்பாத்து பொண்ண என் ஊளியத்துக்கு குடுங்கடாண்ணு சொன்ன மாரி இருக்கு எனக்கு" தம்பிக்காரர் ஒருத்தர் சொன்னார். “என்னாமித்தானுகளோ அவனுக பிரியில. நம்ம மிக்கேல்புட்டி, மோளத்தூரு, திருப்பந்துருத்தி ண்ணு மாப்ள பாக்காம இங்குட்டு வந்து ஊரு கெட்ட ஊர்ல நம்ம‌ பிள்ளைக்கு எட‌ம் பாத்தமே, நம்ம புத்திய சோட்டால அடிக்கணும்; கைநனைக்க வந்தவகளுக்கு கவுச்சி சோறு போடப் புடாதுண்ணு தெரியாத‌ வெவஸ்த கெட்டவனுக.” தன் வயித்துப்பசியையும் ஒரு வழியாச் சொல்லி ஆத்திகொண்டார் கட‌கார‌புள்ள.
“தலைக்கு வந்தது தலப்‍பாயோட போச்சுண்ணு நெனச்சுக்குவோம் அத்தான், நம்ம பொண்ணு தப்பிச்சது இந்த வேளாங்கண்ணி மாதா புண்ணியந்தான்.” தன் பங்குக்கு ரத்தினசாமி பிள்ளை.
“எடங்கண்ணி ஆளுகள அம்மா கைவுடவே மாட்டா இந்த எடத்த சொன்னவன் என் கையில ஆம்புட்டாண்ணா தொலஞ்சான் அவன்……….. துப்பாக்கி பாலீஸ் எல்லாம் ஏறி தயாராத்தான் இருக்கு" தாத்தாவின் தம்பி சின்னப்பா பிள்ளை எடங்கண்ணியிலேயே துப்பாக்கி வைத்திருக்கும் வேட்டை துரை!
ஊரு வந்து சேந்தாச்சு.
பொண்டுவ எல்லாம் என்னா சேதி கொண்டு வரப் போறாகண்ணு ஆவலா காத்துகெடக்குக; அப்பசியிலய கண்ணால தேதி குறிச்சிடுவாகளா இல்ல தைக்குத் தள்ளிப்போவுமாண்ணு பட்டி மன்றம் கோயில் மாப்புல.
‘அவுக கைநனச்ச வேகத்தப்பாத்தா அப்பசியிலயே எல்லாம் முடிஞ்சிரும்.
கண்ணாலத்துக்குப்போவையில வேளாங்கண்ணிக்கும் ஒரு நட பொயித்து வந்துரணும்’ இப்டியா அங்குட்டு பலா பேச்சுகளா இருந்துச்சு.
கொழந்தசாமிப்பிள்ள நேரா பாப்பா கொளத்துல தலய முளுவிட்டுத்தான் ஊட்டுக்குள்ள நொழஞ்சாரு. இண்ணைக்கு அவரு நடுஆளா நிக்கிறதுக்கு கித்தேரியக் கூப்புடுல.


"ஆயா பிரவாசி அடுத்தவாரம் கும்மாணம் மடத்து முட்டும் பொயித்து வந்திருவோம்" தன் மகளிடம் நேரடி சேதி சொன்னார் கொழந்தசாமிப்பிள்ள.

No comments :

Post a Comment