Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Tuesday, 25 November 2014

புதுப் பாட்டு ஒண்ணு கேட்டோமே!

கல்லேரியில் அம்மா நாநா மக்கள் நலனில் எவ்வளவு ஈடுபாடு கொண்டு உழைத்தார்கள்,ஒவ்வொருவர் வாழ்விலும் எவ்வளவு மாற்றங்களையும், நல் எண்ணங்களையும் உருவாக்கினார்கள் என்று வெகு அருமையாக எங்கள் (பாப்பாத்தி அக்கா), ஸிஸ்டர் கொன்ராத் மேரி, ஜெசி அக்கா_அமல்ராஜ் அத்தான் 50வது திருமண பொன் விழா மலரில் விரிவாக அழகாக எழுதியிருந்தார்கள். சென்ற மாதத்தில் அம்மலரைப் புரட்டுகையில் எனக்கு சிலிர்த்து விட்டது.பெரிய படிப்பு ஒன்றும் இல்லாத எங்கள் அம்மா இவ்வளவு செய்திருக்கிறார்களே என அசந்து போய்விட்டேன்!

கல்லேரியைவிட்டு நாங்கள் கூண்டு வண்டியில் ஏறி வந்தது சின்னப்பிள்ளையாய் இருந்தாலும் எனக்குத்தெளிவாய் ஞாபகம் இருக்கிறது. ஜெசி அக்கா ஜோஸ்பின் அக்கா இவர்கள் தோழிகள் எல்லோரும் தேம்பித்தேம்பி அழுதார்கள். அய்யோரோட (அப்படித்தான் கல்லேரியில் நாநாவைக்கூப்பிடுவார்கள்.) வண்டியைத் தடுத்து நிறுத்திவிடும் உத்வேகத்தில் பலர்….. “என்ன வேணும அய்யோருக்கு ......? எல்லாத்தையும் நம்ம அய்யோருக்கு பண்ணி குடுப்போம்..”. என ஊரே கூடி நின்று சூளுரைத்தனர். “வண்டிமாட்ட அவுருங்கடா” என்று வேறே கூச்சல்……. நாநா வண்டியை விட்டு இறங்கி எல்லோருக்கும் நடுவில் வந்து கையெடுத்துக் கும்பிட்டு “பிள்ளைகள் படிப்புக்காகத்தான் இந்த முடிவு எடுத்தோம் என்று உங்களுக்குத்தெரியும். இந்த அன்பும் பாசமும் வேறெங்கேபோனாலும் எங்களுக்குக் கிடைக்காது” என கண்ணீரோடுசொல்லிக்கொண்டே “தயவு செய்து எங்களைப்போகவிடுங்கள் நான் டவுணுக்குப்போவது உங்கள் பிள்ளைகளின் எதிர் காலத்திற்கு கட்டாயம் உதவும் இன்னம் சொல்லப்போனால் இப்போது ட‌வுணில உங்களுக்கென்றே ஒரு வீடு இருக்கிறதே. அது உங்களுக்கென்று எப்போதும் தொறந்தே இருக்கும்” என்று கும்பிட்ட கை மாறாமல் அவர் சொன்னது மக்களைத் தொட்டிருக்க வேண்டும். வண்டி கிளம்பியது. மாடுகள் கும்பகோணம் டவுணை நோக்கி நடயப்போட்டன.
கல்லேரியில் பள்ளிக்கூடமே நாநாவுதுதான். நாநாதான் ஹெட்மாஸ்டர். பிள்ளைகள் பள்ளிகூடத்துக்கு வருணும்கிறத்துக்காக விடியக்காலம் எழுந்திருச்சு சைக்கிள எடுத்துகிட்டு சுத்தியிருக்க கிராமங்களுக் கெல்லாம் போயி பையங்களயும் பொம்பள பிள்ளைகளையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறதுக்கு அம்மா அப்பாகிட்ட வேண்டி கேட்டுக்குவாங்க‌. படிப்பு எப்படி அவுங்களுக்கு அவசியம்னு எடுத்துச் சொல்லுவாங்க.

இந்த சூழ்நிலையில வளந்த எங்களுக்கு ஜெசி அக்காவுக்கும் ஜொஸ்பின் அக்காவுக்கும் கும்பகோணம் அம்மாங்க ஸ்கூலில எடங்கிடக்கிலண்ணு நாநா திரும்பி வந்ததுதில ஒரே ஆச்சரியம். ஸ்கூல் தொடங்கனதுக்கப்பறம் சேக்க மாட்டாகளாம்.
எப்ப வந்தாலும் சேத்துக்குற பள்ளிகூடக்காரங்களுக்கு இத புரிஞ்சிக்கவே முடியில.

"அடுத்த வருஷம் நேரத்தோடு வந்தா சேத்துக்குவாங்களாம்."
"அப்ப இந்த வருஷம் பூரா என்னத்த பண்றது....?" வீட்டிலே பெரிய கேள்விக்குறி....
ஊரெயெல்லாம் உட்டு இவ்வளவு தூரம் பள்ளிக்கூடத்துக்காக அடிச்சி புடிச்சு வந்து..........பிள்ளகை ரெண்டும் ஒரு வருஷத்த வீணாக்குறதா என்ன...?

வேற ஸ்கூல்ல மொயற்சி பண்ணினப்ப சீத்தாலட்சுமி பாடாசாலாங்கிற பள்ளிகூடத்தில ரெண்டு அக்காவையும் சேத்துக்கறதா சொன்னாங்களாம்... ஆனா ஒண்ணு……. அது இந்து பள்ளிக்கூடம்...... அம்மாவும் நாநாவும் ரொம்ப யோசன பண்ணுனாங்க.
அம்மா சொன்னாங்க “கொஞ்ச நாளைக்கு கஷ்டமாத்தான் இருக்கும்.இந்த ஒரு வருஷத்துக்கு பல்ல கடிச்சுகிட்டு இந்த பள்ளி கூடத்துக்கு பொயிட்டு வந்திருங்க. அடுத்த வருஷம் அம்மாங்க பள்ளி கூடத்துக்கு பொயிடலாம். “என்னா...... அவுங்க ஜெபம் சொல்றப்ப சேசுவயும் மாதாவையும் நெனச்சுக்குங்க;அவுங்க சாமி பாட்டுப்பாடும் போது நம்ம சாமிய மனசுக்குள்ள நெனச்சுக்குஙக.... எல்லாம் சரியாயிடும்.”

நாநாவுக்கு எப்பயும் எதையாவது பாடிக்கிட்டே இருக்கணும். வாய் சும்மாவேஇருக்காது. அம்மாவுக்கும் பாட்டு மேல பிரியம். வாய்க்குள்ளயே தேம்பாவணி சொல்லிக்குவாங்க. சமயத்தில நேரங்கெடைக்கும் போது அம்மாவ ஒக்காரவச்சு எடங்கண்ணி ஞான சவுந்தரி டிராமா பாட்டெல்லாம் பாடச் சொல்லிக்கேட்போம். அம்மா ஆக்ஷனோட "அடி எங்கே ...என்னரும் புதல்வி.. ஞான சுந்தரி இருக்குமிடம்எங்கெ....?"ண்ணு பாடுனாங்கண்ணா டிராமா பாக்குற மாரியே இருக்கும்.

இப்படி இருக்கும்போது அக்கா ரெண்டு பேருக்கும் சீத்தாலட்சுமி பாடாசாலா பாட்டுக்கள் வாய் நெறயா ரொம்பி வழிஞ்சு அது எங்க எல்லார் வாயிலயும் நொழஞ்சுகிட்டதில ஆச்சரியம் ஒண்ணுமே இல்லண்ணுதான் சொல்லணும். இதுல இன்னொரு காரியமும் வேற இருக்கு. பொறந்ததிலேர்ந்து அண்ணய முட்டும் நாங்க கல்லேரிங்கிற தெலுங்கு ஊர்ல இருந்தாலும் தமிழ் பாட்டுகள் மட்டுந்தான் கேட்டிருக்கோம். அதுவும் அம்மா பாட்ட நெறையவே கேட்டிருக்கோம். (அம்மா ஊர்ல இருக்க சின்ன பிளளைக‌ளுக்கெல்லாம் சொல்லி குடுக்கிற மொத‌ பாட்டக் கேளுங்க.. "சிரிக்கும் ரோஜா.. சின்ன சேசு பார சிலுவையத் தோளில் சுமந்து முன்னே சென்றார். பாலர் நாமும் பாடசாலைக்குப் போகும் நம் சிலுவையைத் தோளில் சுமந்து பின்னே செல்வோம்.... கல கலா கல கலா கல கலா")
கல்லேரித் தாக்கம் எங்கள் ஆஞாவை நாநா என்று மாற்றியது மட்டுந்தான்.. சொல்லப் போனா கல்லேரித் தெலுங்குல பாட்டே கிடையாது அக்காக்கள் இப்ப பாடுவதோ நம்ம முன்ன பின்ன கேக்காத ஒரு மொழி!!!
எல்லோருக்கும் பேர் வைக்கும் இருதய அண்ணனுக்கு இந்த பாட்டுகள் வெறும் வாய மெல்றவனுக்கு அவுல்கெடச்ச‌மாதிரி ஆயிடுச்சு. (அழகான மார்கரீத் ரொசாரியோ என்ற என்பெயர் மாடுகடித்த டொடா புடா என்று உரு மாறி நிற்கும் எங்கள் அண்ணனிடம்!!!) அண்ணன் இந்த புதுமொழிப்பாட்டை ஓயாமல் கலாட்டாவுக்காக அழுத்தமாய் ‘கத்தம் கத்தம்’ என்று பாடிக் கொண்டேயிருந்தது சின்னதுகள் எங்கள் மனசில் நன்றாகவே பதிந்து போயிற்று. இந்த பாட்டுகளை இன்றைய தினம் ஞாபகப்படுத்தி எல்லோரையும் மகிழ்விக்கலாம் என எண்ணிய நான்
ஜெசி அக்கா ஜொஸ்பின் அக்கா இவற்றை முழுசாக ஞாபகம் வைத்திருக்கிறார்களா என முய‌ற்சி பண்ணினேன். ஆனால் எனக்கு ஞாபகம் இருப்பதுதான் மெஜாரிட்டியாய் தெரிந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்குப் பெரும் மகிழ்வே.

கதம‌ கதம் படாயதா
குஷி அதி உடாயதா
ஜிந்தகி கி சொமுகி
யே சவும‌ பயிலுடாயதா
அந்நேசெபார்புடாயதா (கதம் கதம்)

மனதில் நிற்கும் இன்னொரு சீத்தாலக்ஷ்மி பாடசாலா கொஞ்சம் பாட்டு

ஜெயத்தி ஜெயத்தி ஜெயத்தி பாரத மாதா
புதகீதா நிகிலமதா
வனநிறதா
நதஜன சுகிர்தா (ஜெயத்தி)

அகளிதகுணசீலா
அதிதயாளவாலா
ப்ரகடித்தசுபலோலா
பரமானந்த சமுதித்தா. (ஜெயத்தி)

அம்மா நாநா இருக்கும் போது அப்பாட்டுகள் அவ்வளவு சத்தமாய் வெளியேவராது.ஏற்கனவேதான் அம்மா சொல்லியிருக்கிறார்களே.....
அந்த சாமி பாட்ட பாடுவதாவது……. என ஏதாவது சொல்லிவிட்டார்கள் என்றால்...

ஹிந்தியெல்லாம் படித்தபிறகுதான் எங்களுக்குத்தெரிய வந்தது இதெல்லாம் சாமி பாட்டு அல்ல. மாறாக பாரத மாதா வணக்கம் என்று! இதே மெட்டில் இப்பாட்டுக்கள் தமிழில் வந்திருப்பதைப் பற்றி தம்பி பனி சொன்னது.


இந்த பாரத மாதா பாட்டுக்களையே இவ்விளம் தம்பதியரின் 50வது திருமண‌பொன்னாள் விழாவிற்கு என் எளிய பரிசாக சமர்ப்பிக்கிறேன்!

No comments :

Post a Comment