இன்றைக்கு விமானத்தில் பறப்பது ரொம்ப சாதாரணமாய்
நடக்கிறது. ஆனால் அறுபதுகளில் மத்தியாஸ் மாமா ரோமுக்கு போனப்ப கப்பல்தான்...... வீட்டுக்கு
போன்......?. ரோமிலேயே மாணவனா போன அவுங்களுக்கு அந்த வசதிகள் கிடைக்காது அப்படியே கிடைச்சாலும்
வீட்டில ஒரு போன் இருக்குணுமில்ல!? எழுபதுகளில் மாமா அகில உலக இளம் கிறிஸ்தவ தொழிலாளர்களின்
இயக்கத்திற்குத் தலைவர். இந்த ரீதியில் அவுங்க எம்ஜியாரை ஓரங்கட்டும் உலகம் சுற்றும்
வாலிபனாக ஊர் சுற்றிக்கொண்டிருந்தார்கள்! விமானப்பயணம் ரொம்ப அதிகமில்லாத அந்த நாட்களிலும்
அவுங்க சுத்தலுக்குக் கொறச்சலேஇல்ல.
இண்ணைக்கு பிளேன்ல போனா, ஏறி உக்காந்தமா, குடுக்குறத
திங்கிறமா, நல்ல படம் எதும் இருந்தா பாக்குறமா, இல்ல ஒரு புஸ்தகத்த படிச்சுகிட்டே தூங்கிப்பொயிர்ரமா,
அப்பறம் பாத்ரூம் கட்டாயம் போவ வேண்டிய நெலயில இந்த துக்குணியோண்டு கதவத்தொறந்து எப்புடி
மூச்சு உடப் போறமோண்ணு பயத்தோட க்யூவுல நிக்கிறமாண்ணு முடிஞ்சுபொயிரும். ஆனா நம்ப மாமாவுக்கு
ஒரு ஸ்பெஷல் அனுபவம்! மாமா சொல்றாங்க ‘இந்தசம்பவத்தை நான் ஒங்குளுக்கு சொல்லும் போது
இந்த மனுஷனுக்கு கல்பனா சக்தி ஜாஸ்தியோ,நெறயா கத வுடுறாரோண்ணு நீங்க நெனைக்கலாம். இண்ணைக்கு
அத தமாஷாக சொல்றேன்.... ஆனா அண்ணைக்கு என்னைக்கவ்விகிட்டு கெடந்த பயம்.....யப்பா!!!"
கதய கேளுங்க மாமாவுக்கு மாலிங்கிற ஆப்பிரிக்க நாட்டுத்தொழிலார்களோட ஒரு கருத்தரங்கு.
அங்குள்ள தொழிலாளர்களொடு தொடர்பு கொள்ள, அவர்களது பிரச்சனைகளை உணர உதவும் சந்திப்பு
இது. அதுக்காக அவுங்க அங்க போறத்துக்கு பாரீஸ்லேருந்து கெளம்புறாங்க.
இதே இயக்கத்துல இருக்க இன்னொரு பிரஞ்சு சாமியாருயும்
அவுங்க கூட. ஆப்பிரிக்காவின் வட மேற்கின் அழகான நாடு மாலி. பாமகோ அதன் தலைநகர். ‘எல்லா
விமானங்களிலயும் டிக்கெட் வெல ஜாஸ்தியா இருக்கு ஏர் மாலியிலதான் கொறச்ச, அதுல பண்ணிடட்டுமாண்ணு’
அவங்களோட கூட வர்ர பிரஞ்சு சாமியாருகேட்டப்ப மாமா ஒடனே தலய ஆட்டிடாங்க. தொழிலார்களுக்கு
ஒழைக்கும் போது நமக்குண்ணு இருக்க செலவ கட்டுக்குள்ளதான வச்சுக்கணும். சாமியார் வேறயாச்சா....
? மொத வார்த்தப்பாடு தரித்திர மாச்சே!!!! பாரிஸ்லேருந்து பாமகோ போறத்துக்கு விமானத்துல
ஆறுமணி நேரம். பாரிஸ் ஏர்போர்ட்லேருந்து மத்தியானம் ஒரு மணிக்கி விமானம் கரக்ட்டா கெளம்பிடுச்சு.
அவுங்க போனது 707விமானம் ஒரு பக்கம் 2சீட்டும் இன்னொரு பக்கம் 3 சீட்டும் நடுவுல நட
பாதையும். பெட்ரோல் குடிக்கிறதில கில்லாடி இந்த 707 விமானங்கள்! (சரி அதனால நமக்கென்னா?
வாங்குன காசுக்கு போவ வேண்டிய எடத்துல கொண்டுகிட்டு போய் வுட்டா சரிதான்.) மாமா சன்னல்
பக்கத்துல உக்காந்து வேடிக்க பாத்துகிட்டே வந்தாங்க. எல்லாரும் சீட்பெல்ட்ட மாட்டிகிட்டு
சவகாசமா உக்காந்துருக்காங்க. கொஞ்ச நேரம் ஆச்சு. அப்பறமும் விமானம் ஒ யரத்துக்கே போவக்காணாம்.
என்னுமோ மீன் புடிக்கிற கொளத்த பிராந்து வட்டம் அடிக்கிறமாரி வண்டி சுத்தி சுத்தி வருது.
இது என்னடா இது நம்மதான் கற்பன பண்றமாண்ணு ஜன்னல் வழியா எட்டி பாத்தாக்க. பாரிஸ்ல பிரசித்தியான
ஈஃபல் டவர் தெரியுது.....! அட இதன்னா வம்புண்ணு கூட வந்த பிரஞ்சு பிரண்டு கிட்ட விஷயத்த
சொல்றாங்க. நம்பா தோமையாரு..... அவுரு! எந்திரிச்சு நிண்ணு மாமாவ முட்டியடிச்சிகிட்டு
ஜன்னல்லபாத்துட்டு... "அட நம்ம ஊர்லயதான் இருக்கோம் மத்தியாசு" அப்புடிங்கிறாரு.
‘அதத்தானய்யா நான் மின்னாடி சொன்னேன்.’ மாமா மனசுக்குள்ளயே சொல்லிகிட்டு இருக்கையில
கேப்டன் ஒரு அனவுன்ஸ் மென்ட் பண்றாரு. “ரொம்ப சாரிங்க வண்டியில டெக்னிக்கல் ஃபால்ட்
இருக்குறதினால நாம பாரிஸ் ஏர்போர்ட்டுக்கே திரும்ப போறோம். சரி செஞ்ச ஒடனே கெளம்பிடலாம்.
இப்ப வேஸ்ட் பண்ணுன நேரத்தயெல்லாம் சரிகட்டிடுவொம். ரொம்ப தேங்க்ஸ்ணு” சொல்லிட்டு வண்டிய
கீழ கொண்டாந்திட்டாரு. மத்தி யானம் வண்டியில நல்லா சாப்பாடு கெடைக்கும்னு நெனச்சு ஏறுன
நாங்க ஏர்போர்ட்டுல என்னா கெடச்சுதோ அத வாங்கி வாயில போட்டுகிட்டு ஒக்காந்திருந்தோம்.
(இந்த காலமாட்டம் ஏர்போர்ட் நெறயா ரெஸ்டாரண்ட்ஸ் அப்பல்லாம் கெடையாது.) ரெண்டு ரெண்ர
மணி நேரங்கழிச்சு வண்டிய எடுத்துட்டாங்க. பழுதுண்ணா என்னாப் பண்ணித்தொலயிறது. பொறுத்து
போவ வேண்டியதுதான். அப்பாடாண்ணு சீட் பெல்ட்ட வரிஞ்சுட்டு ஒக்காந்துகிட்டோம். பாமகோ
போறத்துக்கு எப்புடியும் நடுச்சாமம் ஆயிப்பொயிரும். இந்த தடவ வண்டி மேல ஏறுனது நல்லாவே
தெரிஞ்சிச்சு. அப்பாடாண்ணு சீட்பெல்ட்ட அவுத்து வுட்டுட்டு குட்டியா ஒரு தூக்கம் போடுலாம்னு
மனசுக்குள்ள ஒரு நெனப்பு எட்டிப்பாத்தப்ப, என்னுமோ வண்டி கீழ எறங்குறமாரி ஒரு நெனப்பு
மத்தியாசுக்கு. ‘ச்ச்சீ ண்ணு ‘அந்த நெனப்ப எட்டி தள்ளி வுட்டுபுட்டு இருக்கும்போது
வண்டி தரையயே தொட்டுபுடிச்சு!! திரும்ப பாரிஸ் விமான நெலயம். இந்த மொற யாரும் உட்டுக்குடுக்கிறதா
இல்ல. ஆளுக்காளு கச்சா முச்சாசண்ணு சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க. உள்ளூர்காரங்க நெறய
பேரு ‘நீயும் வேண்டாம் ஒன் வண்டியும் வேண்டாம்ணு’ டிக்கெட்டை திருப்பி குடுத்துட்டு
வீட்டபாக்க போய் சேந்துட்டாங்க. மாமாவுக்கு அங்க போவ வேண்டிய கட்டாயம். இனிமே இந்த
டிக்கெட்ட கான்சல் பண்ணி வேற ஃப்ளைட் எண்ணைக்கி போவுதுண்ணு பாக்கறதுக்குள்ள மீட்டிங்
கெடுவே முடிஞ்சு பொயிரும். சரி, இப்ப என்னாத்துக்கு வண்டிய கீழ கொண்டாந்தாங்க...? நம்மள
கீழயும் எறங்க சொல்லுலண்ணு யோஜன பண்ணிகிட்டு இருக்கும் போது பெரிய பைலட் ஒவ்வொருத்தர்
கிட்டயும் வந்து ‘100 டாலர் பணம் குடுங்க,பாமகோ போனவொடன நிச்சயமா திருப்பி தந்துடுறோம்ங்கண்ணார்.’
என்னா கூத்துக்கு பைசா? அது ஒரு பெரிய கத. இந்த ஏர்மாலி ஏர்வேஸ் பாரிஸ் விமான நெலயத்துல
ரொம்ப நாளா கடனுக்கே பெட்ரோல் போட்டுகிட்டு இருந்துருக்காங்க. இதா இண்ணைக்கி தரேன்
நாளைக்கி தரேண்ணு சால்சாப்பு.இண்ணைக்கி வண்டி எடுக்கறப்பயும் அதே கடன்லதான் பெட்ரோல்
போட்டிருக்காங்க. திரும்ப வந்து பெட்ரோல் கேட்டா அவனுக்கு கோவம் வராமயா இருக்கும் சொல்லுங்க.
“விமானத்துல பழுது இருக்கறது தெரிஞ்சா கீழயே பாத்துட்டு வண்டிய எடுக்கணும். வண்டிய
சும்மா பம்மாத்துக்கு நேரத்தோட எடுக்கிறேன் பேர்வழிண்ணி போட்ட பெட்ரோலயெல்லாம் பயணிகளுக்கு
பாரிசை சுத்தி காமிச்சி தீத்துபுட்டு இப்ப திரும்ப வந்து நிக்கிறியே, இப்ப பணத்த நீ
கீழ வக்காட்டி பெட்ரோல நீ மறந்துடுண்ணு திட்டவட்டமா சொல்லிட்டானாம் அவன்”. இப்ப அந்த
பெட்ரோல் காசுக்குத்தான் உண்டியல் குலுக்குறாங்க. என்னத்த பண்றதுண்ணு தெரியாம ஆளாளுக்கு
கையில என்னா இருந்துச்சோ எல்லாத்தையும் குடுத்தோம் எல்லா கணக்கையும் பின்னால வந்த ஏர்
ஹொஸ்டஸ் கரக்டா எழுதி கையெழுத்து வாங்கிட்டாங்க.கையெழுத்து போடுறப்பயும் கட்டாயம் திருப்பி
குடுத்துடுறோங்கண்ணு ஒரு புன்சிரிப்போட சொல்லிட்டுதான் போனாங்க. ஒரு வழியா வசூல் வேட்ட
முடிஞ்சிருச்சு.பெட்ரோலையும் ரொப்பியாச்சு. வண்டி பாமகோவப்பாத்து கெளம்பிடுச்சு.மணி
இதுக்குள்ள ஆறு ஆயிப்போச்சு. எல்லா அம்சயும் அடக்கனப்பறம் சாப்பாடு குடுத்தாங்க நல்லாதான்
இருந்துச்சு. சின்னதா ஒரு தூக்கம் போடலாமாண்ணு யோஜன பண்ணிகிட்டு இருக்கும்போதே காக்பிட்ல
ஒக்காந்துருந்த பெரிய பயலட் அவுரு தொணைக எல்லாம் வெளிய வந்தாங்க. ‘எதுக்கு வெளிய வ
ர்ராங்க இப்ப? என்னா காரியம்ணு தெரியிலியேண்ணு நாங்க சந்தேகமா பாக்குறப்ப’ அவுங்க ஒவ்வொரு
சீட்டா போயி பயணிக ஒவ்வொருத்தருக்கா நன்றி சொல்லிகிட்டே வர்ராங்க. பாவம்....நல்ல மனுசங்கதான்.....
நன்றி உணர்வு இருக்கு பாருங்க!!! காலத்தினால் செஞ்ச ஒதவியில்ல..... அது ஞாலத்தின்(ஒலகத்திலயே)
மாணப்பெருசில்ல!!!! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இப்புடி அவுங்க நன்றி துதியில
ஈடுபட்டு இருக்கப்ப திடீர்ணு ஒரு ஏர் பாக்கெட்ல மாட்டிகிட்ட வண்டி ஒரு நிமிஷம் அப்புடியே
அதல பாதாளத்துக்கு போயி மேல வந்துச்சு. அதது அடிவயிரு கலங்கி போயி.... குய்யோ முறேண்ணு
சத்தம்போடுதுக. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்க்கதையால்ல எங்க பொழப்பு அண்ணைக்கி
இருந்துச்சு. நாங்க கத்துனது ஒரு பக்கம்ணா பெரிய பயலட்டும்எங்களோட சேந்துல்ல குய்யோ
முறேங்கிறாரு! உழுந்த வேகத்தில காக்பிட் கதவு படால்னு சாத்திகிச்சு. ஹை ஜாக் பண்றவங்கள
தடுத்து நிறுத்துற கதவு அது; வெளியேருந்து யாரும் தொறக்க முடியாது உள்ள இருக்கவங்கதான்
தொறக்கமுடியும். இப்ப உள்ளதான் யாருமேஇல்லியே. எங்க மூஞ்சியில ஈ ஆடுல. வண்டி ஓட்டுரவனுக
ஏர்ஹோஸ்டஸ் எல்லாரும் அங்கயும் இங்கயும் ஓடுறாங்க கதவ பலங்கொண்ட வரையிலயும் மொத்தமா
சேந்து இழுக்குறாங்க.... எங்காயாச்சும் கடப்பார எதும் கெடைக்குமாண்ணு கேக்குறாங்க..
அப்பறமா எமர்ஜென்சி டைம்ல தீ அணைக்கிற கருவியத்தொறக்கறத்துக்கு வச்சிருந்த கடப்பபார
மாதிரியான ஒரு வஸ்துவால போடு போடுண்ணு போட்டு ஒரு வழியா ஒடச்சு எடுத்து உள்ள போனவங்கதான்
அப்பறம் அங்கேருந்து மூச்சு பேச்சு ..? ம்ஹூம்.....!! நடுச்சாமம் இருக்கும் . மாமா
வாச்ச திருப்பி பாக்குறாங்க. பாமாகோவுல எறங்க வேண்டிய நேர ந்தான். சரிண்ணு வெளிய எட்டி
பாக்குறாங்க. ஏர்போர்ட் லைட்டு ஒண்ணையும் காணாம் கொறஞ்ச பட்சம் தலைநகரத்து லைட்டுகளாவது
தென் படுணுமே? ஒரே இருட்டால்ல கெடக்கு. ஆனா வண்டிமுட்டும் கீழ வர்ரது தெரியுது. பயலட்
வாயத்தொறந்து எதும் சொல்லப்போறாரா... வண்டி மரத்துல எல்லாம் ஒரசரது காதுல வுழுவுது....
ட்ணாங் டணாங்குண்ணு வண்டி தரையில தட்டி தட்டி எம்புது..... சேசுவே சேசுவேண்ணு மனசு
படக்படக்குண்ணு துடிச்சுகிட்டு கெடக்கு. கடவுள் புண்ணியத்தில டணாங்கெல்லாம் நிண்ணு
போயி வண்டி ஒருவழியா நெல கொண்டுடுச்சு. இப்பயும் பயலட்டும் அவுரு தொணைகளும் வெளிய வந்தாங்க.
வந்த எடத்துலயே பாய விரிச்சிசாங்க. ஒரு அரமணி நேரம் அல்லாவுக்கு நன்றி சொன்னாங்க. அப்பறமா
பயலட் சொன்னாரு, இன்னம் பாமகோ போவருதுக்கு எறநூறு மைல் இருக்காம். வண்டியில பெட்ரோல்
தீந்து போனதுனால இங்க எறங்க வேண்டியதாப் போச்சாம். நல்ல வேள ரெண்டாம் ஒலகப் போர் சமயத்தில
அவுரு சின்னப்பயனா ஏர் போர்ட்ல வேல செஞ்சதுனால இந்த மிலிட்டிரி ஏர்போர்ட் அவுருக்கு
தெரிஞ்ச எடமாப் போனதுனால நம்ம எல்லாத்தையும் பத்திரமா தரை எறக்கிட்டாராம். பாமகோவிலேருந்து
இன்னொரு ‘வண்டி’ வந்து நம்மளயெல்லாம் காலம காட்டியும் கூட்டிகிட்டு போயிடுமாம்.
"இப்பைக்கு எமர்ஜென்சி ச்சூட் வழியா நாம ஒவ்வொருத்தரா கீழ எறங்குவோம்." ண்ணு
சொன்னவரு " தயவு செய்து ஒங்க செருப்பு ஷூ எல்லாத்தையும் அவுத்துருங்க ச்சூட் கிழிஞ்சி
போச்சுண்ணா எறங்கறது கஷ்டமாயிரும்."ண்ணாரு வேதாந்தத்தின் உச்ச கட்டத்தில் இருந்த
பயணிகள் தலைக்கு மேல போனா சாணென்னா மொழமென்னாண்ணு தவ நிலையில் இருந்தார்கள்.ஒரு வழியா
எல்லாரும் கீழ வந்தாச்சு. எறங்கினவங்க தவ நெலய கொலைக்கறத்துக்குண்ணே பலாவிஷயங்கள் அங்க
வரவேற்பா நிண்ணுகிட்டு இருந்துச்சுதுக. சூடான மாலி நாட்டுக்குண்ணு காட்டன் சொக்காயில
வந்திருந்த அந்த விமான லோடும் நடுச்சாமத்து பாலைவனக் குளூர்ல வெட வெடத்துப்போச்சு.
அது பத்தாதுன்னு கட்டெறும்பு சைஸ் கொசு ஆளுகள சுத்தி சுத்தி அடிக்கிது. குளூருக்கு
அடக்கமா ஒக்கார ஒரு எடம் கெடயாது ஒரு பாழடஞ்சு போன பழய ஷெட்டு. அங்க எல்லாரும் நெரிக்கியடிச்சு
ஒக்காந்துருந்தோம். விடியுணுமில்ல.... காலையிலமணி ஒம்போதாச்சு பத்தாச்சி விமானம் வர்ர
அறிகுறியே இல்ல. பசி மயக்கம்... தூக்க மயக்கம் அப்பா.... என்னுமோ வர்ர சத்தம் பெருசா
கேக்குது பட்டாளமும் ஆகாசத்த அண்ணாந்து பாக்குது. ஒண்ணுமே தெரியிலியே? திடீர்னு மண்ணு
கெளப்பிகிட்டு அடிக்கிறத எல்லாரும் பாக்குறோம். ‘மண்ணு பொயல் வேற சேந்துகிச்சா நம்ம
கலியாணத்துலண்ணு’ நெனச்சுகிடே இருக்கும் போது ரெண்டு மிலிட்டரி ட்ரக்குக அங்க வந்து
நிக்கிதுக. ட்ரக்கோட பின்னாடி கதவ தொறந்தவங்க அதே வேகத்துல எங்க ஒவ்வொருத்தரையும் இழுத்து
உள்ள போட்டு கதவ மூடுனாங்க. இன்னொரு ட்ரக்குல எங்க சாமான அள்ளி எறிஞ்சாங்க. “புழுதியோட
புழுதியா எங்க விமானம் (‘வண்டி’!!!!!) பாமகோவுக்குக்கெளம்பிடுச்சு!! கடவுளுக்கு நன்றி!!!!”
பின் குறிப்பு:" எத காப்பாத்துனாங்களோ இல்லியோ,அவுங்க
சொன்ன வார்த்தய காப்பாத்திட்டாங்க. பாமகோ போன ஒடனே ஏர்போர்ட்ல பெட்ரோல் ரொப்புறத்துக்கு
வாங்கின பணத்த திருப்பி குடுத்துட்டாங்க!!!"
Dear Madam,
ReplyDeleteசுவாரஸ்யமான மர்மக்கதையை படிக்கற மாதிரி இருந்துச்சு .ஆனாலும் உங்க மாமா ரொம்ப தைரியசாலிதான் .அந்தக்கால உண்மையான
சாமியார் ஆச்சே, சும்மாவா ?