முகப் புத்தகத்தில் (Facebook) ஒரு படம் அத்துடன்
ஒரு சின்ன வேண்டுதலும் கோரியிருந்தாள் தம்பிப்பெண் ஆக்ஸி.
இரண்டு ஆப்பிரிக்க சின்னஞ்சிறுபெண் குழந்தைகள்;
அழுக்கு சட்டை ; ஒரு பழைய பிளாஸ்டிக் கேனில்
இருந்த தண்ணீர்த்துளிகளை சின்னவளுக்கு பெரிய பெண் ஊற்றுகிறாள்.அவ்வளவுதான் படம்.
வார்த்தைகளோ பளீரென்று ஒரு அறை விடுகிறது
"இறைவா நன்றிகெட்டு நான் நின்ற நேரங்களை மன்னித்துவிடும்" வார்த்தைகள் மனதில்
போய் சப்பென்று ஒட்டிக்கொண்டது.
எவ்வளவுதான் நிறைகள் சூழ்ந்திருந்தாலும் மனசுக்குள்
ஏதோ ஒன்று ஆசை உட்காரகூட முடியாமால் நின்றுகொண்டே
சத்தம் போடுகிறது
ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளினும்கடல்மீது ஆணை செலவே
நினைத்து நினைத்து நமக்கு
பூர்த்தி செய்ய.........
ஏங்கிப்போக.........
மனசுக்குள் ஒரு பெரும் வரிசை அல்லும் பகலுமாக நீண்டுகொண்டே
போகிறது.
“இன்னம் கொஞ்சம் அழகாய் பிறந்திருக்கக் கூடாதா?”
“ம்ம்.. அழகாய் இருந்து என்னபிரயோசம், இன்னும்
கொஞ்சம் செவப்பா உயரமா இருந்திருக்கக்கூடாதா..... “மனம் ஏங்குகிறது.
“ எல்லாரும் நல்லா இருக்காங்க எனக்கு மட்டும் ஒண்ணுகெடக்க
ஒண்ணு வந்துகிட்டே கெடக்கு சனியன்.”
“அதே படிப்புதான் அவன் எங்க இருக்கான்...... நான்
எங்க நிக்கிறேன்..... தலை எழுத்துதான்”
நம் எல்லோர் மனசும் இப்படித்தான், ஏதோ ஒன்றுக்கு
ஏங்கிக்கொண்டே
ஏங்கிக்கொண்டே...................
முகப்புத்தக தகவல் நல்லமனுஷி ஒருத்தியை என்னில்
ஞாபகப்படுத்திவிட்டது
பீச் பக்கம் வாக்கிங் போய் வீடு திரும்புகிறேன்.
வீட்டு மொகனையில் இருக்கும் ஒரு சின்ன பள்ளிக்கூடத்தின் வாசலில் அழகான ஒரு ரங்கோலி
கண்ணை நிறைத்தது. ரோஸ்கலர் தாமரைப்பூக்கள் அங்கங்கே சிதறி ஓடும் வண்டுகள் சிறு பறவைகள்....
நின்று ரசித்தேன்
"என்னம்மா பாக்குறிங்க.....?”
"பாரு என்னா அழகா இருக்கு........ இந்த ரங்கோலிய
நீ போட்டியா? “
“ஆமாம்மா ரங்கோலி வரையரது கோலம் போடுறதுல ரொம்ப
ஆசம்மா. பேப்பர்ல வர்ரத எல்லாம் என் நோட்ல வரஞ்சு வச்சுக்குவேன்! இண்ணைக்கி எங்க ஸ்கூல்ல
பெற்றோர் தினம் அதுக்குத்தான் பெசலா.....” நாணிச்சிரித்தாள்
கையக்குடு என்று கைநீட்டினேன். கைகொடுக்கும் கலைக்கு
அவள் இன்னும் பழகவில்லை. சத்தில்லாத ஒரு கைகுலுக்கல் அவளிடமிருந்து!
அன்று ஒரு நாள் முன் வாசலைக்கூட்டிக்கொண்டிருந்தேன்.காய்ந்துபோன
வில்வ இலைகளும் பழுத்துப்போன வேப்ப இலைகளும் கோலம் போட்டிருந்தன. தூக்க முடியாமல் ஒரு
பையைத்தூக்கிக்கொண்டு ரோட்டில் போய்க்கொண்டிருந்த அதே பெண் நான் கூட்டிகொண்டிருப்பதைப்பார்த்து
"அம்மா நாண்ணா பெருக்கட்டுமா? எங்க அந்த அம்மா இண்ணைக்கி வருலியா?"
என்றாள்
“ஆமாம்மா
ஒரு நாளைக்கி லீவு வேணுண்ணுச்சு”
“அப்ப குடுங்கம்மா தொடப்பத்த”
“வேணாம்பா
இதுவும் ஒரு எக்சர்ஸைஸ் தானே” என்று சொல்லி சிரித்தேன்.
கொஞ்ச
நேரம் நின்று கொண்டிருந்த அவள் “தூக்கிகிட்டு வந்தது கையெல்லாம் நோவுதும்மா” என்றாள்.
“கைய மாத்தி எடுத்துகிட்டு போம்மா” என்றேன்.
அப்போது அவள் செய்த ஒரு காரியம் என்னை அதிர வைத்தது.
சோத்து கையால் தன் புடவையை உயர்த்திய அவள் “பாருங்கம்மா” என்று துண்டு பட்ட அரைக் இடக்கையை
என் முன் நீட்டினாள்.
“கிராமத்துல வெட பிள்ளயா இருந்தப்ப இந்த ஆளு (ஸ்கூல்
வாட்ச் மேன்) மேல பிரியமாயிட்டேன். சேதி அப்பா காது வரைக்கும் போயிருச்சு. அவுருக்கு
அவமானம் தாங்குல. என்னா ஏதுண்ணு தெரியரதுக்குள்ள வெட்டருவாளால ஒண்ணு போட்டாரு பாருங்க,
துண்டிச்சு உழுந்து போச்சு பாதி கையி!”
கதை சொல்லுவது போல இன்று அவளால் இந்த சம்பவத்தை
சொல்ல முடிந்தது!
அதிலிருந்து ஸ்கூல் பக்கம் செல்லும் போதெல்லாம்
அவள் எனக்கு வணக்கம் சொல்லுவாள். எனக்கு மட்டுமல்ல பிள்ளைகளை அழைத்துச் செல்ல வரும்
பெற்றோர்களுக்கும் அதே மலர்ச்சிதான் பெரும்பாலான பெற்றோர் அதிகம் படிக்காதவர்கள். ஆனால்
பள்ளிப்பொறுப்பில் இருக்கும் ஒருவர் அவர்களிடம் அன்பாக அரவணைத்துப்பேசுகையில் பூரித்துப்
போய்விடுகிறார்கள். இவள் பள்ளிப்படிப்பை கூட முடித்திருப்பாளா என்பது சந்தேகம்தான்.
மனித வளத்துறை படிப்பையெல்லாம் அறிந்திருக்கமாட்டாள். ஆனால் அவள் அந்த சிறு பள்ளிக்குச்
செய்யும் சேவை மகத்தானது. பெரிய சொத்து ஒன்றை நான் இவர்களுக்கு நான் கொடுக்கிறேன் என்ற
உணர்வு மனதிற்குள் இல்லாமலேயே அநாவசியமாக கொடுக்கிறாள். பெருங்குறை ஒண்று அவள் வாழ்வில்
இருக்கிறது என்ற நினைவைக் கடந்து அவள் உயர்ந்து நிற்கிறாள். தன்னை நாடுபவர்களின் உணர்வுகளைப்
புரிந்து கொள்ளும் பெருந் திறன் அவள் வசம்!!
நிதானமாய் சிந்திப்போமா?!
No comments :
Post a Comment