வரும் வருட குடியரசுதின உற்சவத்தில் கலந்து கொள்ளப்
போவது ஒபாமா என்றசெய்தி இந்தியன் என்னை பெருமிதம்
கொள்ளச்செய்தாலும் அதைவிட பெருமகிழ்ச்சி தந்த ஒரு தகவல் குஜராத்காரர் மோடி அளிக்கும்
விருந்தில் அவர் ஊரின் ஸ்பெஷாலிட்டியான டோக்ளா இடம் பெறாது, அது ஒபாமாவுக்குஒத்துக்கொள்ளாது
என்ற செய்தியேதான்!
ஒபாமாவுக்கு
மட்டுமல்ல சுத்த இந்தியனாகிய என் நிலமையும் அவ்வாறேதான் என இந்த தருணத்தில் கூறி அந்த
மாயாஜாலி டோக்ளாவால் நான் பெற்ற அனுபவத்தை இவ்வையகம் பெற வேண்டாம் என்ற உயர் நோக்கோடு
இச்சம்பவத்தை உங்கள் முன் வைக்கிறேன்!!!
---------------------------------------------------------------------------------------------------------
சில வருடங்களுக்குமுன் அஹமதாபாத்தில் தங்கக் கிடைத்த சில நாட்கள் ஒரு வேறுபட்ட
ஒரு அனுபவம்!
இரவில்
ஒன்பது மணிக்குமேல் நள்ளிரவுமுடிய ஒளிக் கொள்ளும் லா மார்க்கட்டை சுற்றிய சுகானுபவங்கள்,
அந்த நேரத்திலும் பயமில்லாமல் உலா வரும் பெண்கள்,
பகல் போல்
இரவுத் தெருவில் பேரம் பேசிய திருப்தி,
கண் கவரும்
கண்ணாடிப் பாவாடைகள், விரிப்புகள், குஜராத்தின்
பாந்தினிகள் (சுங்கடிகள்) இன்ன பிற கை வினைஞர்களின்
சிறப்பு பொருட்களை வாங்கிக் குவித்த கொண்டாட்டம்,
ஒன்பது
மணிக்கெல்லாம் மூடிவிடப்படும் அல்லது மூட எத்தனிக்கும் கடைகள் வாழும் சென்னை வாசியான
எனக்கும் என் நண்பர்களுக்கும் ஒரு இனிய புதிய அனுபவமாகவே இருந்தது !!!!!
இவைகளையெல்லாம் தூக்கி அடித்த ஒரு விஷயம்…… ஒரு
சாப்பாட்டு விஷயம்…….. குஜராத்தில் எனக்கென்றே காத்து நின்றது !!!!!
டோக்ளா………. அந்த அருமையான உணவுப்பொருள் பார்ப்பதற்கும்
உண்பதற்கும் திருப்தி தரும் தின்பண்டம் ..
மஞ்சள் பச்சை வெள்ளை என கலர் கலராய், தாளித்த குட்டி குட்டி செவ்வக இட்லி போல்
ஆவியில் வெந்து வெகு மிருதுவாக இருந்த அந்த அழகு டோக்ளாக்கள் என்னையும் என் நண்பர்களையும்
கவர்ந்து இழுத்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை!வகைக்கு எட்டு எட்டாக தினுசு தினுசான பச்சை,கருப்பு,
இன்ன பிற வானவில் நிற சட்னிகளோடு டோக்ளா எங்கள்
முன் அமர்ந்து வசப்படுத்தியது எச்சி ஊறலை குற்றால
அருவியாக்கியது . தட்டு தட்டாக வரிசை பிடித்து
வந்த அழகின் சுகமான போதையில் நாங்கள் இரண்டுமணி நேரம்!!!!!
ஹோட்டலுக்குத்திரும்பி வந்து ஊர்செல்ல மூட்டைகட்ட
ஆரம்பித்த அந்த நேரம் ………….. அந்த வினோத நேரம்
இப்படித்தான் ஆரம்பித்தது.
மெரினா பீச்சில் விற்கும் சின்ன கிலுகிலுப்பை பலூனை நீங்கள் வாங்கியிருப்பீர்கள் அல்லது பார்த்தாவது
இருப்பீர்கள். அந்த பலூன் வயிற்றுக்குள் நுழைந்ததைபோல என் வயிறு கொஞ்ச உப்புசத்தோடு
கடாமுடா என்று கிலுகிலுப்பை ஆட்ட ஆரம்பித்தது. ஆரம்பமான கொஞ்ச நேரத்திலேயே அது ஆகாசத்தில்
பறக்கும் அட்வர்டைஸ்மென்ட் பலூன் ஆகி வங்காள
விரிகுடாவின் காற்றழுத்தப்பகுதி போல் வயிற்றில் மையம் கொண்டு மூச்சு விட முடியா அழுத்தமாய்
ஆகிப்போனது........ குப்புறப் படுத்து பலூனை
முயன்றமட்டும் அமுக்கி அமுக்கி எடுக்கமுயல்கிறேன் . கீழே படுத்து உருண்டு பிரண்டு
அங்கப் பிரதட்சிணம் பண்ணிப்பார்ர்க்கிறேன்........
என்ன ஆகிப்போனது எனக்கு..?! யோஜனை செய்ததில் முன்னே வந்து நின்றது வண்ண வண்ண டோக்ளாக்களே!
அட ..... மல்லிகைப்பூ இட்லியைவிட சாந்த சொரூபியாய் இட்டிலியைப்போலவே ஆவியில் வெந்துபோன
வஸ்துவாய் சட்டினி சாம்பார் துணையின்றியே நாக்கில் கரைந்து போகும் இந்த அயிட்டத்தை நான் இட்லி என்ற எண்ணத்திலேயே
ஒரு வெட்டு வெட்டி விட்டேனோ. இது குஜராத்தின் மாயையோ?! டோக்ளா மங்கையவள் உள்ளொன்று
வைத்துப்புறமொன்று காட்டும் குஜராத்தின் மாயா ஜாலியோ?
அவஸ்தையின் நடுவேயும் எண்ணங்கள் சிதறின
என்னுடைய இயலாமையில் தவிப்புற்ற நண்பர்கள் தம்
நாற்கரங்களின் பலமான உலக்கை குத்தலால் என்
முதுகில் நர்த்தனம் பண்ணிப்பார்த்தார்கள். மூடிமூடியாய் ஜெலுசை என்னுள் செலுத்திப்பார்தார்கள்;
வெது வெது தண்ணீர் வைத்தியம் என ஒன்று மாற்றி ஒன்று சிசுரக்ஷை செய்து பார்த்தார்கள் என்னை நிமிடத்திற்கு ஒருதரம் டாய்லட்டில் அட்டடென்டன்ஸ்
கொடுக்க வைத்ததுதான் கண்ட பலனாயிற்று. தலை வெடிக்கும்வலி, பலமிழந்து நிற்கும் தசைகள் ………… நான்…….. நானாகவே இல்லை…… அவளோ அசைந்து கொடுப்பதாய்
இல்லை!!!
மணிக்கணக்கின் அவஸ்தையோடு ரயில் நிலையத்திற்கு
ஆட்டோவில் மூட்டை முடிச்சுகள் நடுவில் இடுக்கி முடிக்கி உட்கார்ந்துகொண்டு செல்கிறோம்.
எலும்புகளை உடைக்கும் ஆச்சல் கொண்ட ரோடு……….. அதில் ரேஸ் கார் மாதிரிப் பறந்த ஆட்டோ……..
இந்த முக்கூட்டு
சங்கமம்:முட்டும் மூட்டைகள், முதுகு பிளக்கும் ரோடுகள் அ எங்கள் ஆட்டோக்காரரின் சாகசங்கள், என் நண்பர்கள் அன்போடு செய்த அத்தனையையும் விட எனக்கு
ஆச்சரியமான அருமருந்தானது!!
ஆட்டோவிலிருந்து வெளியே தலையை நீட்டி ஓ ஓ வென்று
பெருங்குரலெடுதது அந்த மாயாஜாலியைக் கக்கிக் கக்கி........கக்கிக் கக்கி........ நிமிடங்கள்
யுகமான உணர்வோடு வெளித்தள்ளுகிறேன்.
அவள் குஜராத்தின் மங்கை...!
அவள் குஜராத்தின் மாயாஜாலி.!!
அவள் இங்கெயே
இருப்பதுதான் சரியானது என என் உடம்பு அமைதி
கொள்ள அதோடு சேர்ந்து என் மனமும் எக்காளமிட்டு தெற்கு நோக்கி செல்லும் ரயிலை நோக்கி
ஓட்டமெடுத்தது!!!!
Super! Modi(!) Masthaan vithai andha auto seiydhu vittadhu!!
ReplyDeletePrabha Ram
Thank u Prabha! Enjoyed your play with the words!!
ReplyDelete